தசம்

பதினெண் கீழ்க் கணக்கு நூல்களில் ஒன்று முதுமொழிக்காரர் கூடலூர்க்கிழார் இயற்றியது. பத்து அதிகாரங்கள். ஒவ்வொரு அதிகாரத்திலும் பத்து குறள் தாழிசைச் செய்யுள்கள். அதிகாரத் தலைப்புகள் சிறந்த பத்து, அறிவுப் பத்து, பழியாப் பத்து, துவ்வாப் பத்து, அல்ல பத்து, இல்லைப் பத்து, பொய்ப் பத்து, எளிய பத்து, நல் கூர்ந்த பத்து, தண்டப் பத்து என்பன.

எளிய பத்தில் ஒரு பாடல்- ‘உண்டி வெய்யோர்க்கு உறுபிணி எளிது!’

மிக்க உணவை விரும்புகிறவருக்கு மிகுந்த நோய் எளிதில் உண்டாகும் என்பதாம் பொருள். கொங்கு நாட்டில் ஒரு கல்யாண விருந்தில் உட்கார்ந்தால் நிறையப் பேர் நோயாளிகள் என்பது தெரியும். நல்கூர்ந்த அதிகாரப் பத்தில் ஒரு பாடல், ‘சொல் செல்லா வழிச் சொலவு நல்கூர்ந்தற்று’ என்கிறது.

தன் சொல் மதிக்கப்படாத இடத்தில் ஒன்றைச் சொல்லுதல் வறுமையுறும் என்பது பொருள். இந்தப் பாடலில் ‘சொலவு’ என்றொரு பழைய ஆனால் இன்று நமக்கு நூதனமாகத் தெரியும் புதிய சொல்லை அறிமுகம் ஆகிறோம். சொலவு என்றால் சொல்லுதல் என்று அறிந்து கொள்கிறோம். சொலவு எனும் சொல்லின் உடன் பிறப்புகளே சொலவம், சொலவடை என்று உணர முடியும்.