பொன்னின் பெருந்தக்க யாவுள !

தங்கம் என்னும் சொல்லுக்குத் தமிழில் தனித்தகுதி உண்டு போலும். தங்கம் செய்யாத காரியம் ஏதுமில்லை ஈங்கு. ‘தங்கம் செய்யாததை சங்கம் செய்யும்’ எனும் மந்திரத்தைத் தொழிலாளருக்குத் தந்தவர் என்.ஜி.ஆர். கோவையின் தொழிற்சங்க போராளி. சோசலிச வீரர், இளம் வயதில் கொல்லப்பட்டு இறந்தவர். நாம் MGR அறிவோம். NGR அறிய மாட்டோம். கோவையில் திருச்சி சாலையில் சுங்கம் சதுக்கத்திலும் சிங்காநல்லூர் சந்திப்பிலும் அவருக்கு சிலைகள் உண்டு. தீப்பேறு, இன்று சங்கம் செய்யாததையும் தங்கம் செய்து கொண்டிருக்கிறது.

தாலிக்குத் தங்கம் என்று அரசின் திட்டம் ஒன்றுண்டு, தாலிக்குத் தங்கம் வாங்க போக்கற்றவனுக்கு, தாலி கட்டப் பெண் எப்படிக் கிடைப்பாளோ! தாலிக்கு என்று இல்லை; அரசியல் அதிகாரத்திற்கும் தங்கம் தான் பண்டமாற்று.

தங்கம் என்பதோர் அன்பு மொழி, பரிவு மொழி,செல்ல மொழி, கொஞ்சும் மொழி. பாரதி, ‘கண்ணன் மனநிலையைத் தங்கமே தங்கம், நீ கண்டுவர வேண்டுமடி தங்கமே தங்கம்!’ தோழியைத் தூதுவிடும் தலைவியின் கூற்றாக, செல்லமாகப் பாடுகிறார்.

‘என் தங்கம், என் தங்கக் கொடம், என் தங்கக்கட்டி’ என்றெல்லாம் மக்களை, காதலியை மனைவியை கொஞ்சக் கேட்கலாம். ஒருவனுக்கு நற்சான்றாக “அவன் தங்கக் கம்பில்லா, தங்கமான குணம்லா, பத்தரை மாத்து தங்கம்லா” என்றார்கள். கணவனால் மதிப்பாக நடத்தப்படும் மனைவியை “அவளுக்கென்ன? தங்கத் தாம்பாளத்திலேல்லா வச்சுத் தாங்குதான்!” என்பார்கள்.

அழகான பெண்ணைத் ‘தங்கச் சிலை போல இருக்கா’ என்றும், உபதொழிலாக பரத்தமை செய்வோரை ‘தங்கத் தாரகை’ என்றும் சொன்னார்கள். அன்றைய புகழ் பெற்ற சினிமா நடிகர் எம்.கே.தியாகராஜ பாகவதர், தங்கத் தட்டில் தான் சாப்பிட்டார் என்று சொல்லக் கேட்டிருக்கிறேன். அன்று இலட்சக்கணக்கான குழந்தைகள் மண்சட்டியில் சாப்பிடக்கூடச் சோறின்றி கிடந்திருக்கின்றனர். ஊடகங்களுக்கு என்றுமே பகட்டும் வியாபாரம்,நோயும் பசியும் சாவுமே வியாபாரம் தான். தங்கத் தாம்பாளம், தங்கக் கிண்ணம் என்று எதையுமே பார்த்திராத கூட்டம் இன்று நாட்டில் நூறு கோடிப்பேர் இருப்பார்கள்.

ஆண்மை விருத்திக்குத் தங்க பஸ்பம் சாப்பிடுவார்களாம். பல காலம் கதாநாயக நடிகனாக இருந்த, முதலமைச்சர் ஆன, பாரத ரத்னா பட்டம் பெற்ற, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் இன்று தரித்திருக்கும் பெயர் கூடியவர், தங்க பஸ்பம் சாப்பிட்டதாக அன்று செய்தி பரவலாக நடமாடியது. தங்க பஸ்பம் செய்த நல்ல வேலையினாலோ என்னவோ, வாரிசு அரசியல் எனும் பெருந்தீமையை அவர் நாட்டில் விதைக்கவில்லை.

இன்று தங்க பஸ்பத்துக்கான விளம்பரங்கள் கண்ணில் படுவதில்லை. மாறாக அனைத்து அரசுடைமை ஆக்கப்பெற்ற மூத்திரப் புரைகளிலும் ஆண்குறி தடிக்க, நீள, நீண்ட நேரம் விறைப்புத் தன்மை இருக்க, அமோகமாக சம்போகம் செய்வதற்கான ஆற்றல் பெருக, துண்டுச் சுவரொட்டிகள் கண்ணில் படுகின்றன, வெவ்வேறு தொடர்பு எண்களுடன். அனைத்து அரசியல் கட்சித் தலைவர்கள் நடத்தும் தொலைக்காட்சிச் சேனல்களிலும், இரவு பத்தரை மணிக்கு மேல், மேற்சொன்ன பயன்களுக்கான மாத்திரைகள் விற்கப்படுகின்றன. அவர்களைத் தான் ‘சுத்தத் தங்கம்லா’ என்று மக்கள் பொருட்படுத்திப் பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

தங்கத்தால் எத்தனையெத்தனை உபயோகங்கள். ‘அவனா, என்ன கொடுத்தாலும் தங்கமாட்டு வாங்கிக்கிடுவானே!’ என்று பாராட்டினார்கள். தேவத் தானத்துக்குப் பெருநிதி கொடுத்து தங்கத் தேர் இழுத்தார்கள். இன்றைய ஊடகச்செய்தி, தந்தை பெரியாரின் தவப் புதல்வர்களில் ஒருவர், பாராளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட காரணத்தினால் தங்கத்தேர் இழுத்தார் என்று புகைப்படத்துடன். கம்பரின் மகன் அம்பிகாபதியின் தனிப்பாடல் ஒன்று ‘பொற்றேர் ஒன்று புறப்பட்டதே!’ என்று முடியும். எதுவானாலும், கொள்கைக்குத் தந்தை பெரியார், கும்பிக்குக் குலசாமி. குலசாமிகளுக்குத் தங்கக் கவசம் அணிவித்தார்கள். தங்க அங்கி சாத்தினார்கள்.தங்கக் கோபுரங்கள், விதானங்கள், கொடிமரங்கள், கலசங்கள், தங்கவேல், தங்கக்கிரீடம், எதிர்காலத்தில் கொள்ளையடிக்கப்படும் என்றறியாமல் செய்து அணிவிக்கப்பட்டு தங்க ஆபரணங்கள் – கடகம், ஆரம், குண்டலம், வளை, கொலுசு, மணிமாலைகள்..

‘தங்கம் வெல ஏறிப்போச்சு!’, ‘தங்கக் கசவு வெச்ச பட்டு’, ‘தங்கப் பல்லுல்லா கெட்டீருக்காரு’, ‘தங்க ஊசின்னு எடுத்து கண்ணுல குத்த முடியுமா?’, ‘தங்க உருப்படிண்ணு நினச்சேன்..அது சவம் பித்தளை மாதிரி இளிக்கி’ என்பன தினசரி உரையாடல்களில் காணலாம்.

மக்களுக்குத் தங்கையா, தங்கம், தங்கப்பன், தங்கசாமி, தங்கமணி,தங்கராசு, தங்காட்சன்,தங்கக்கனி, தங்கப்பழம், தங்கக்குடம் என்று பெயர் சூட்டினார்கள். கோலாரில் இருப்பது தங்கச்சுரங்கம், தங்கச்சிலை என்றால் Mint, தங்கப் பூச்சு என்றால் தங்கமுலாம் பூசுதல், Gold Plating, தங்கக் கவரிங், ‘தங்கமலை ரகசியம்’ என்றொரு தமிழ் சினிமாவும் வந்தது.

தங்கப்பாரை என்றொரு மீன்வகை உண்டு. பாரை மீன் இனம் – நாஞ்சில் நாட்டார் மஞ்சப் பாரை என்பார்கள். அதன் ஆங்கிலப் பேர் Horse Mackerel. சம்பா நெல்வகையில் தங்கச் சம்பா என்றொரு வகை இருந்தது.

எளிமையாகச் சொல்லிவிடலாம், தங்கம் என்பது துருப்பிடிக்காத மஞ்சள் நிற உலோகம் என்றும் ஆபரணங்கள் செய்ய உகந்தது என்றும். நான் சிறுவனாக இருந்தபோது, அரசாங்கத்தில் பியூன் வேலை பார்த்தவர் மணப்பெண்ணுக்கு நூறுபவுன் நகை போடச்சொன்னார். இன்று வட்டாட்சியர் எவ்வளவு கேட்பார் என்று கற்பனை செய்ய இயலவில்லை.அரசு அலுவல் என்பது தங்க சாலை.

தங்கத்தின் அளவாக பவுன் அல்லது சவரன் என்றார்கள். Pound அல்லது Sovereign என்ற பிரிட்டிஷ் நாணயங்களின் பிறப்பு. முத்திரைத் தங்கம் என்றார்கள். முத்திரைப் பவுன் என்றார்கள். மலையாளிகள் குதிரைப் பவுன் என்றார்கள், தங்க நாணயத்தின் ஒரு பக்கம் இருந்த குதிரைச் சின்னம் குறித்து. ஒரு காலத்தில் நாம் தங்கத்தின் எடை அளவு குறிக்கக் கழஞ்சு என்ற சொல்லைப் பயன்படுத்தினோம். ஆயிரம் கழஞ்சுப் பொன், நூறு கழஞ்சுப் பொன் என்றார்கள். ஒரு சவரன் அல்லது ஒரு பவுன் இன்றைய கணக்கில் எட்டு கிராம் என்றால், கழஞ்சு என்பது ஐந்து கிராம் எனக்கொள்க. தோலா கணக்கில் எனக்குப் பயிற்சி இல்லை. கழஞ்சு என்னும் சொல்லுக்கு, A weight in modern times to 1/6 ounce என்கிறது Lexicon. ஆனால் கழஞ்சு மிகப் பழைய தமிழ்ச்சொல். பத்துப்பாட்டு, எட்டுத்தொகை என்னும் பதினெட்டு சங்க நூல்களில் புறநானூற்றில் மட்டும் கழஞ்சு என்னும் சொல் ஆளப்பட்டிருக்கிறது. அந்தச் சொல்லை பாதுகாத்துத் தந்த பேய்மகள் இளவெயினிக்கு தெண்டனிட்டு வணங்கலாம். சேரமான் பாலை பாடிய பெருங்கடுங்கோவைப் பாடிய பாடல் அது.

‘மறம் பாடிய பாடினியும்மே
ஏர் உடைய விழுக் கழஞ்சின்
சீர் உடைய இழை பெற்றிசினே’

என்பன பாடல்வரிகள்.

2019 மே மாதம் கவிதா பப்ளிகேஷன் வெளியீடாக பாடல்களின் புதிய வரிசை எண்களுடன், பேராசிரியர் சாலமன் பாப்பையா பதிப்பித்த புறநானூறு ஒன்று வெளியாகியுள்ளது. மேற்சொன்ன பாடல் வரிகளுக்கு சாலமன் பாப்பையா உரையைத் தருகிறேன் – ‘மன்னனின் வீரத்தைப் பாடினி பாடினாள்; அழகுடன் விளங்கும் சிறந்த பல கழஞ்சுப் பொன்னால் செய்யப்பெற்ற நல்ல அணிகலன்களையும் பெற்றாள்!’

கழஞ்சு என்ற சொல்லே இன்று தமிழனிடம் விடுபட்டு போனது. மாற்றாக செய்கூலி சேதாரம் இல்லாத, பதினான்கு முதல் இருபத்திரண்டு காரட் வரை தரமுடைய தங்கத்தைக் கிராம் கணக்கு சொல்லி வாங்குகிறோம்.

நிறைய நகை போட்டுப் பெண்ணைக் கட்டிக் கொடுத்தால் ‘தங்கத்தாலேயே இழைச்சிருக்கான்’ என்றார்கள். ஆங்கிலத்தில் Mckennas Gold, Gold Rush, Gold Finger எனத் திரைப்படங்கள் வந்தன. மிகு வியப்பு இது வரலாற்றில். வெறும் மஞ்சள் நிறமுடைய துருப்பிடிக்காத கறுக்காத உலோகத்திற்கு வந்து சேர்ந்த அரும்பெரும் சிறப்பை ஓர்ந்தால். காலம் பொறுக்கிகள் பலரையும் தங்கக் கோபுரத்தில் ஏற்றி வைத்து இன்று மக்களை பழி தீர்க்கிறது.

வேதாந்த தேசிகர் என்றொரு வைணவப் பெரியார் உஞ்ச விருத்தி ஜீவிதம். தேவைக்கு மேல் எவரிடமும் எதுவும் கோரவும் மாட்டார். பெறவும் செய்யார். அவருக்கு உதவுவதாக எண்ணிக் கொண்டு ஒரு செல்வந்தர், அவருடைய பிட்சைப் பாத்திரத்தில் கைப்பிடி அரிசிக்குப் பதிலாக, கைப்பிடி தங்க அரிசிகளைப் போட்டுவிட்டார். அடியாருக்கு வேறுபாடு அறியாத பக்குவம். அரிசி களைந்து உலையில் இடும் போது மனையாள் மாதரசி கேட்டார், “இது என்னங்க சில அரிசி மணிகள் மஞ்சள் நிறத்தில் கிடந்து மினுங்குது?” வேதாந்த தேசிகர் சொன்னார் “அதுவா அது ஒரு புழுவின் முட்டை. பொறுக்கி தூர வீசு.எடுத்து வைத்துக் கொண்டால் விரலில் ஏறும் புழு. மணிக்கட்டில் ஏறும். காதில் மூக்கில் ஏறி விடும். கழுத்திலும் ஏறிக்கிடந்து நெரிக்கும்” என்று.

சரியாகவே சொல்லி இருக்கிறார்.

உழவாரப் படை ஏந்தி தான் செல்லும் சிவத்தலங்களின் வளாகத்தை சுத்தம் செய்யும் திருநாவுக்கரசர், தன் முன்னால் கிடக்கும் ஓடும், செம்பொன்னும் ஒக்கவே நோக்கினார்.

இனத்தலைவர்களுக்கும், உயரதிகாரிகளுக்கும், நடிகருக்கும், தரகருக்கும் மணல்-மலை-கனிமம்-மரம்-தந்தம்-சிலைகள் கொள்ளையருக்கும், கல்வித் தந்தையருக்கும், மருத்துவமனை முதலாளிகளுக்கும், கரன்சி நோட்டுகளைக் காத்துப் பராமரிப்பது கடினம். திடீரென செல்லாமல் ஆகலாம். வெள்ளம் புகுந்து விடலாம். கரையான் அரிக்கலாம். மண் தின்னலாம். எரி பற்றலாம். எனவே தங்கக் காசுகளாக, கட்டிகளாக, பாளங்களாக, செங்கல்களாக, மாற்றிக் காக்க தங்கம் தகுதியான பொருள் ஆயிற்று.

தேடிப் பார்த்ததில் திருக்குறளும், நாலடியாரும் தங்கம் என்ற சொல்லையே பயன்படுத்தவில்லை. சங்க இலக்கியங்களான பத்துப் பாட்டு, எட்டுத் தொகை, தொல்காப்பியம் எவற்றிலும் தங்கம் என்ற சொல் இல்லை. திருவாசகம் பயன்படுத்தவில்லை. பத்தாயிரத்து மேல் பாடல்கள் எழுதிய கம்பனின் சொற் பண்டாரத்தில் தங்கம் இல்லை. உடன் தானே தங்கத்தின் பயன்பாடு தமிழன் அறிந்திருக்கவில்லை. அது ஆரியத்தின் சதி என்று அவசரப்பட்டுத் தாவிவிட வேண்டாம்.

மாறாகப் பொன் என்னும் சொல் ஆளப்பட்டுள்ளது. திருக்குறள் நான்கு குறள்களில் பொன் பேசுகிறது. ‘பொறுத்தாரை பொன் போலப் பொதிந்து வைப்பார்கள்’ என்கிறார். ’சுடச்சுடரும் பொன்போல ஒளி விடும்’ என்கிறார். ‘அரம் பொருத பொன் போலத் தேயும்’ என்கிறார். ‘தூண்டில் பொன் மீனை விழுங்கிற்று’ என்கிறார். பொருள் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் நல்ல உரையாக வாங்கி பாருங்கள். நான் ட்யூஷன் வாத்தியார் வேலை செய்ய முற்படவில்லை.

நாலடியார், பொன், பொன்னன்னாய், பசும்பொன், பொன்பாவாய், பொற்றொடி என்கிறது. திருவாசகம் பொன், பொன் தொடி, பொன்மலர், பொன்மேனி, பொன்னகர், பொன்னடி, பொன்னம்பலம், பொன்னருள், பொன்னானவா, பொன்னுடைப் பூண், பொன்னூசல், பொன்னொளி என்று பற்பல இடங்களில் பொன் பேசுகிறது.

இலக்கியத் தமிழும், பேச்சுத் தமிழும் பல படப் “பொன்” பயன்படுத்துகின்றன. முதலில் எனக்கு நினைவுக்கு வருவது ‘பொன்னார் மேனியனே புலித்தோலை அரைக்கசைத்து, மின்னார் செஞ்சடை மேல் மிளிர் கொன்றை அணிந்தவனே’! எனும் தேவாரம். ஐந்து வயதில் இருந்து எங்களூர் முத்தாரம்மன் கோவில் பூசாரிப் பாட்டா பாடிக் கேட்டது. அதைத் தொடர்ந்து அம்மையே அப்பா ஒப்பில்லா மணியே! பாடுவார். பாடி முடியும் வரை கைகூப்பி நிற்போம். அதன் பிறகு தான் நெல்லுப் பொரி பிரசாதம் தருவார் கை நிறைய.

தங்கத்துக்கும் மூத்த சொல், பொன் என்று அறிகிறோம். என்றாலும் தங்கம் என்ற சொல்லே மக்கள் வழக்கிலும் ஊடகங்களிலும் பேயாட்சி செய்கிறது. ஆனால் மனதில் தங்கக் கவசம் என்பதை பார்க்கிலும் பொற்கவசம் எனும் சொல் சிறப்பாக ஒலிக்கிறது. எதற்கும் பயன்படாத, எண்பது பணம் விலையுள்ள ஜிகினாத் துண்டு போர்த்துவதைப் பொன்னாடை என்று கூசாமல் சொல்கிறார்கள். சினிமாவிற்கு வசனம் எழுதியவர்களை எண்தமிழ்ப் பாவலர் என்பதை போல. ஒருவனின் சேவையைப் பாராட்டி வழங்கும் நிதியை பொற்கிழி என்றனர். திருமணமாகி ஐம்பதாண்டு நிறைவைக் குறிக்க Golden Jubilee of Wedding என்கிறோம். தமிழில் பொற்கல்யாணம் என்றொரு சொல் வழங்கப் பெற்றிருக்கிறது.

பொன் எனும் சொல்லுக்குத் தமிழ்ப் பேரகராதி தரும் பொருள்கள் பல. தங்கம், உலோகம், இரும்பு, செல்வம்,ஆபரணம், திருமாங்கல்யம், Gold coin, பொன்மாலை,பொலிவு, பசலை, பிரகாசம், அழகு, ஏற்றம், இலக்குமி, வியாழன், சூரியன், பெண்குறி. பதினேழாவது பொருள் உங்கள் வதனத்தில் பொன்முறுவல் ஏற்படுத்தக்கூடும்.

பொன்னின் வகை என நான்கு குறிப்பிடப்பெறுகின்றன. சாதரூபம், கிளிச்சிறை, ஆடகம், சாம்பூனதம் என்கின்றன அகராதிகள். ‘ஆடகப்பொற் பாவையடி நீ’ என்ற பாடல் வரி மட்டும் தெரியும் எனக்கு. நம்மில் எவர்க்கேனும் மேற்சொன்ன பொன் வகைகளைப் பிரித்தறிய இயலுமா? பதினான்கு காரட் பொன்னை, இருபத்திரண்டு காரட்டுக்கான விலை கொடுத்து வாங்கி வருபவர் நாம்!

பொன் எனும் சொல்லை ஆதாரமாகக் கொண்டு மக்கட் பெயர்கள் இருக்கின்றன. பொன்னன், பொன்னையா, பொன்னரசன், பொன்னப்பன், பொன்னுசாமி, பொன்னம்பலம், பொன்னுரங்கம், பொன்மணி, பொன்னாத்தா, பொற்கொடி, பொன்மலர், பொன்னுத்தாயி, பொற்கலை என்றெல்லாம், கண்மணி குணசேகரனின் சிறுகதைத் தொகுப்பின் தலைப்பு, ’பூரணி பொற்கலை’, தமிழினி வெளியீடு.

பொன் தொடர்பான பொருள்களுக்கும் விதவிதமாய்ப் பெயர்கள். பொற்கசை என்றால் பொன்கம்பி என்கிறது யாழ் அகராதி. அதாவது பொற்கம்பி, தங்கக்கம்பி. சிலரைப் பற்றிக்குறிப்பிடும்போது, எதற்கும் இசைந்து நடப்பார்கள் என்பதைப் புலப்படுத்த, அவரைத் தகடாகவும் அடிக்கலாம், கம்பியாகவும் நீட்டலாம் என்பார்கள். பொற்கட்டி, பொற்கலன், பொற்காசு, பொற்சரடு, பொற்சரிகை, பொன்மணல், பொன்மயம், பொன்மாலை, பொன்மாளிகை, பொன் முலாம், பொன் வணிகர், பொன்விலை, பொன்விழா, பொன்னாசை, பொன்னாடை, பொற்கரங்கள், பொன்னுலகு, பொன்னெழுத்து என நீளமான பொற்பட்டியல் உண்டு.

கெண்டை மீன் வகையில், பொற்கெண்டை என்றொரு இனம். தொட்டியில் மீன் வளர்ப்போர், Golden fish , என்றொரு இனம் காட்டுவார்கள். பொன்னின் நிறை அல்லது எடை கணிப்பதைப் பொற்கணக்கு என்றனர். பொற்கலன் இருக்கை எனும் சொல்லுக்கு, பொற்பண்டாரம் என்று பொருள் தருகிறது பிங்கல நிகண்டு. அஃதாவது Treasury of Jewels and Gold. கருவூலம், கஜானா நமக்குப் பண்டாரம் எனும் சொல் முதலில் நினைவூட்டும் பொருள் பரதேசி. பாவப் பண்டாரம் எனும் சொல்லைக் கம்பன் பயன்படுத்துகிறான், சொற்பொழிவுத் தொழிற்சாலையினர் அறிக! பாவங்களின் கஜானா என்ற பொருளில். நம்மை வழிகாட்ட, மேம்படுத்த, கடைத்தேற்ற, பொன்னுலகு சமைக்க சொற்பொழிவாற்றும் தலைவர் இனத்தில் யாவருமே பாவப்பண்டாரங்களாக இருக்கிறார்கள். அதாவது பாவங்களின் கருவூலம். பாவம் சேமித்து, பாவம் பாதுகாத்து, பாவம் விநியோகிப்பார்கள்.

பொற்கெண்டை என்றொரு கெண்டை மீன். சொன்னோம். பொற்கெண்டை என்றால் பொற்சரிகை என்கிறது யாழ் அகராதி. பொன்னிறமுடையதாதல் என்பதைப் பொற்கெனல் என்று சொல்லியுள்ளனர். ‘பொக்கென ஓர் கணத்தே, யாவும் போகத் தொலைத்து விட்டான்’ என்பார் பாரதி, பாஞ்சாலி சபதத்தில். அதன் பொருள் வேறு, ஒரு கணத்தில் யாவும் பொக்காகப் போய்விட்டது என்பது. உயர்ந்த சரக்கு எதனையும் பொற்சரக்கு என்கிறோம். தொட்டதெல்லாம் துலங்கும் கைகளைப் பொற்கரங்கள் என்றோம். இன்று தொட்டதெல்லாம் குடும்பத்துக்குக் காசாகும் கைகள் அவை. அரசியல் மேடைகளில் ‘தங்கள் பொற்கரங்கள்’ என்பார்கள், இரத்தக்கறையும், மல நாற்றமும், ஊழல் புண்களும், கொள்ளைத் தழும்புகளும், பெண் சொறியும் கொண்ட கரங்களை.

‘மாமியார் உடைத்தால் மண்குடம், மருமகள் உடைத்தால் பொன்குடம்’ என்றொரு பழமொழி உண்டு. பொன்+குடம் என்பதையே பொற்குடம் என்றோம். இலக்கணம் என்னிடமும் கேளாதீர், அருள் கூர்ந்து தமிழாசிரியரிடமும் கேளாதீர். தானாகப் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள். பண்டு, பொற்கைப் பாண்டியன் என்றொரு பாண்டிய மன்னனுக்குச் சிறப்புப் பெயர் இருந்தது. பொன் +கை = பொற்கை என்பதால் கொள்+கை = கொற்கை என்று தற்குத்தறம் பறையாதீர்.

மதுரை மீனாட்சியம்மன் கோவிலின் பொற்றாமரைக்குளம் அறிவீர்கள். பொன் + தாமரை = பொற்றாமரை. பிட்டுக்கு மண் சுமந்த மதுரைச் சொக்கேசன் மீது, அரிமர்த்தன பாண்டியன் வீசிய பொற்பிரம்பும் அறிந்திருக்கலாம். பொற்பிரம்பின் வீச்சையும் வலியையும் அனுபவிக்க எமதாசான் புதுமைப்பித்தனின் ‘ அன்று இரவு’ வாசிக்க வேண்டும். வாசிக்க நேர்ந்தவர் நற்பேற்றாளர். புதுமைப்பித்தனிலும் சாதி தேடிய மார்க்சீய, அம்பேத்காரிய, பெரியாரிய ‘அறிஞர்’ கூட்டம் உண்டு. ‘அரிசிப் புழு தின்னாதவனும் இல்லை, அவுசாரி கையில் உண்ணாதவனும் இல்லை’ என்பது சொல்வடை.

‘தீபம்’ இலக்கிய மாத இதழ் நடத்திய, ‘குறிஞ்சி மலர்’ எனும் நாவல் எழுதிய நா.பார்த்தசாரதியின் புகழ் பெற்ற நாவல் ‘பொன் விலங்கு’! பொற் சுண்ணம் இடித்தல், பொன்னூசல் ஆடுதல் போன்ற சொற்றொடர்களைப் பன்னிரு திருமுறைகளில் காணலாம். பொன்னூசல் எனில் பொன் ஊஞ்சல். ஊசிப்போன பொன் எனப் பொருள் கொள்ளல் ஆகா. பொற்சுண்ணம் என்றால் வாசனைப் பொடி. Perfumed powder.

பொற்பூண் எனில் பொன்னாபரணம். தங்கத்தில் பூண்கள் கட்டிய சந்தன மரக்கடைசல் கோல்கள் வைத்திருந்தனர், மன்னர்களும், மந்திரக்கோல் மைனர்களும். அதையும் பூண் என்கிறோம். பொன்னணிகள் செய்யும் ஆசாரியை- Gold Smith- பொன்னாசாரி, தங்காசாரி, பொன் பத்தன், பொற்கொல்லன், தட்டான் என்றார்கள். ‘பொன் செய் கொல்லன் தன் சொல் கேட்ட, யானோ அரசன், யானே கள்வன்,’ என்பது சிலம்பதிகாரத்துப் பாண்டியன் நெடுஞ்செழியனின் நீதிக் கூற்று. இன்றைய மன்னர்கள் யானே அரசன், யானே கள்வன் என்பார்கள்.

ஒரு பொற்கொல்லன் செய்த களவுக்கு ஆயிரம் பொற்கொல்லரைப் பலி செய்தலும் தமிழர் நீதிதான். ஒரு இந்திரா காந்தியைக் கொன்றதற்கு மூவாயிரம் சீக்கியரைக் கொன்றது இந்திய நீதி! கவிஞர் தாணு பிச்சையா தனது ‘உறை மெழுகின் மஞ்சாடிப் பொன்’ எனும் கவிதைத் தொகுப்பில், ஆயிரம் பொற்கொல்லரைக் கொன்றதற்கான நியாயம் இன்று வரை வழங்கப்பட்டதா என்று கேட்கிறார்.

பெரிய நாயகி, வாடா முலையம்மன், அழகிய நாயகி, தையல் நாயகி, நுண் முலையம்மை, கருந்தார் குழலி, முயங்கு பூண் வள்ளியம்மை எனப் பெரும்பட்டியலுண்டு உமையம்மையின் பெயர்களுக்கு. அவற்றுள் ஒன்று அழகிய பொன்னம்மை. பொன்னமராவதி நகரின் அம்மை ஆவுடை நாயகி. பொன்னகர் என்றால் அமராவதி. சிவலோகம் என்றும் பொருள். பொன்னகர் புகுந்தார் என்றால் சிவலோகம் சேர்ந்தார் என்று பொருள். விருப்பமுடையவர் பிரார்த்திக்கலாம்.

‘பொன் ஒழுகு பூவில் உறை பூவை’ என்பார் கம்பர். சூர்ப்பணகையை. பெண்களின் மேனியைப் பொன்மேனி என்றனர். ‘பொன்னொளிர் மேனி சுபத்திரை மாது’ என்பார் பாரதி. பெண்களுக்கு மணச்சடங்கின் போது அணிவிக்கப்பட்ட தாலியைப் பொன் தாலி, பொற்றாலி என்றனர். ‘கழுதைக்கேனோ பொன்னின் தாலி, காட்டுக்கேனோ முள்ளில் வேலி?’ என்றொரு பழம்பாடல் வரியுண்டு. ‘கள்ளிக்கேனோ பொன்னில் தாலி, காற்றுக்கேனோ முள்ளில் வேலி’ என்றொரு பாட பேதமும் உண்டு.

நல்ல நாள், நேரம் பார்த்துத் தாலிக்குப் பொன்னுருக்குவார்கள் நாஞ்சில் நாட்டில். ‘தாலிக்குப் பொன்னுருக்கு’ என்பது அந்தச் சடங்கின் பெயர். ‘தாய்ப் பொன்னிலும் மாப்பொன் எடுத்திடுவான்’ என்று சொலவமும் உண்டு. திருமணம் பேசும்போது, மணப் பெண்ணுக்கு அணிவிக்கும் பொன்னாபரணக் கணக்கு கழஞ்சு அளவில் பேசப்படும். நூறு கழஞ்சுப் பொன், ஐம்பது கழஞ்சுப் பொன் என பெண்ணின் கழஞ்சுக் கணக்கு விரும்பியபடி செய்ய முடியாமற் போனால், “ஏதோ பொன்னு வைக்கிற இடத்தில் பூ வச்சு,” என்று சமரசம் செய்வார்கள். மாப்பிள்ளைப் பையனின் குணநலன் பேசும்போது, ‘நல்ல பொன்னு போலப் பாத்துக்கிடுவான்’ என்றனர்.

மகளை, மனைவியை, காதலியைச் செல்லம் கொஞ்சும்போது மலையாளிகள், ‘என்ற பொன்னே!’ என்பார்கள். பெண்ணுக்குக் கல்யாணம் செய்து வைத்த பழங்கதை பேசும்போது, “பொன்னும், பொருளும், செல்லும் செலவும் கொடுத்துக் கட்டிக் கொடுத்தோம்’ என்றோம்.

பொன்வண்டு கேள்விப்பட்டிருப்போம். பொன்னரளி கேட்டதுண்டா? மஞ்சள் நிற அரளி மலர். தங்கரளி என்றும் சொல்வார்கள். சிறுவருக்கு வரும் mums எனும் கழுத்து வீங்கும் நோயைப் ‘பொன்னுக்கு’ வீங்கி என்றார்கள். பொற்கம்பி பொன்னூல் என்றும், பொற்கட்டி பொற்பாளம் என்றும், பொற்பூச்சு பொன்முலாம் என்றும் வழங்கப் பெற்றது. பொற்றகடு என்றால் பொன்னின் தகடு. பொன்னிறம் எனும் தன்மையைக் குறித்துப் பொன்மை என்றொரு சொல் புழக்கம் பெற்றிருக்கிறது. வெண்மை, செம்மை, கருமை போலப் பொன்மை. பொற்பேழையைப் பொன்னறை என்றனர். பொன்னரைஞாண் என்றால் அரையில் கட்டும் பொன் நாண். சிலர், ‘தொட்டதெல்லாம் பொன்னாகும்’ என்றனர். முதல் பருவ மழை பொழிந்து நல்லப்பம்- முதன் முதலில்- ஏர் பூட்டுவதை ‘பொன்னேர்’ பூட்டுதல் என்றனர். நாள், வேளை பார்த்தே ஏர் பூட்டினார்கள். நாஞ்சில் நாட்டில் நல்லப்பம் உழவு என்றனர்.

ஏமகூடம் என்றால் A mountain to the north of Himalayas என்கிறது அகராதி. ஏமகூடத்தை, பொற்கூடம் என்பார் கம்பர், யுத்த காண்டத்தில், மருத்துமலைப் படலத்தின் பாடல் வரியில் பாடல் வேண்டுவோர் காண்க, சென்னை கம்பன் கழகப் பதிப்பு, கம்ப ராமாயணம், பாடல் எண். 24.

கோள் எனில் கிரகம், planet. ‘நாள் என் செயும், நமை நம்பி வந்த கோள் என் செயும்’ என்று பாடல் வரியுண்டு. ‘கோளறு பதிகம்’ உண்டு. பொற்கோள் என்றால் அது வியாழன் கிரகம். அதாவது ஜுபிடர் எனும் planet. பொற்சபை என்றால் அது கனக சபை, சிதம்பரம். வழக்கமாகப் பொற்சிலை எனும் சொல் பொன்னாலாகிய சிலை என்று பொருள் தரும். ஆனால் பொற்சிலை என்பதன் சிறப்புப் பொருள் மகாமேரு. படி எனும் சொல்லுக்குப் பூமி என்ற பொருள் உண்டு. சூர்ப்பணகைப் படலத்தில், கம்பன், சீதையைக் குறித்து, ‘அரவிந்த மலரின் நீங்கி, அடியிணை படியில் தோய’ என்பார். தாமரை மலரில் இருந்து இறங்கி, இணையடி பூமியில் படும்படியாகத் திருமகள் இவண் போந்தாள் என்பதைக் குறிக்க. பொற்படி எனும் சொல், பொன்னாலாகிய படிக்கட்டு என்றும் பொருள் தரும், பொன்னுலகம் என்றும் பொருள் தரும். பொன்னுலகம் எனில் துறக்கம், அதாவது சுவர்க்கம்.

இராமாயணத்தின் யுத்த காண்டத்தில், இரணியன் வதைப் படலத்தில், கம்பர், ‘பொன்னின் பிறிது ஆகிய, பொற்கலனே!’ என்பார். பொற்பாவை என்றால் பொன் பாவை, அழகிய பெண் என்பது பொருள். பொன் பெயரோன் என்றால் Gold coloured என்றும் இரணிய கசிபு என்றும் பொருள் தருகிறார்கள்.

பொற்பாதம் எனில் பொன்னாலாகிய பாதம், பொன் போன்ற பாதம், பொன்னை நிகர்த்த பாதம், பொன்னொயொத்த பாதம். பொற்பாதம் என்றால் திருவடி என்றும் பொருள். திருநாவுக்கரசர், திருவிருத்தம் பாடும்போது, ‘குனித்த புருவமும்’ என்று தொடங்கும் பாடலில், ‘இனித்த முடைய எடுத்த பொற்பாதமும்’ என்கிறார். சொல்லேருழவர் என அறியப்படும் எழுத்தாளர்கள், சொற்கள் தேர்வுக்கு, சமய இலக்கியங்கள் என்பதை மறந்து விட்டு, பன்னிரு திருமுறைகளும், நாலாயிரத் திவ்யப் பிரபந்தமும், கம்பனும் பயில வேண்டும். ‘மனித்தப் பிறவி’ என்ற சொல் அப்பரிடம் அன்றி வேறெங்கே கிடைக்கும். சினிமா வசனங்களிலும் பாட்டுக்களிலுமா? அவர்களே அங்கிருந்துதான் கொய்து வருகிறார்கள்!

பொன்மலை என்றால், பொன்னாலாகிய மலை என்பதறிவோம். திருச்சிராப்பள்ளி தாயுமானவர் மலையைப் பொன்மலை என்பார்கள். மகா மேரு, இமயமலையைப் பொன்மலை எனப் பேசும் இலக்கியங்கள். சிவபெருமான் எரித்த முப்புரங்களில் ஒன்றும் பொன்மலை. பொன் வரை என்றாலும் பொன்மலைதான். பார்வதியின் நாமங்களில் ஒன்று பொன்மலை வல்லி. பொன் வில்லி என்றால் சிவன். மாமேருவை வில்லாக உடையவன். சிவனுடைய வில்லுக்குப் பினாகம் என்று பெயர். பினாகபாணி என்றால் பினாகம் எனும் வில் தரித்தவன். சக்கர பாணி எனில் சக்கரம் தரித்தவன். தண்டபாணி என்றால் தண்டம் தரித்தவன். பினாகம் எனும் சொல்லுக்கும் பொன்னுக்கும் தொடர்புண்டா என்பதறியேன். தேடியும் கண்டிலனே!

பொன்னகர்ச் செல்வன், பொன்னகர்க்கிறைவன் என்பர் இந்திரனை. பொன்னகர் என்றால் பொன்னகரம். புதுமைப் பித்தனின் புகழ் பெற்ற கதைகளில் ஒன்று ‘பொன்னகரம்.’ பொன்னசலம் என்றால் பொன்மலை, மேருமலை. அசலம், வரை, கிரி எனில் மலை. அருணகிரி, அருணாசலம், சோணகிரி, சோணாசலம். அண்ணாமலை எனும் பெயர்களைக் கவனத்தில் கொள்க. பொன்னம்பலம் எனில் கனகசபை, பொற்சபை என்று கண்டோம். நந்தனார் திரைப்படத்தில், இசை முரசு தண்டபாணி தேசிகர் பாடிய, ‘என்னப்பல்லவா, என்னய்யனல்லவா, பொன்னப்பனல்லவா, பொன்னம்பலத்தவா’ எனும் புகழ்பெற்ற பாடலைக் கேட்க வாய்த்தவன் நான்.

பொன்னன் என்பர் அருகக் கடவுளை. பொன்னுலகாளி என்பர் தேவலோகத்தை ஆளும் இந்திரனை. வியாழக்கிழமையைக் குறிக்க குருவார் என்ற சொல்லுண்டு வடபுலத்தில். பொன்னாட்சி என்ற பெயருண்டு தமிழில். பொன்மழை எனில் பொன் மாரி, சுவர்ண மழை. Sulphur என அறியப்படும் கந்தகம் மஞ்சள் நிறத்தது. பொன்வண்ணக் காரிகை என்று குறிக்கப்பட்டுள்ளது.

பொன்போலப் பேணிக் காத்தலைப் பொன்னிற் பொதிதல் என்றனர். பொன்னுடம்பு எனும் சொல்லுக்குத் தேவ சரீரம் என்றும், பெண்குறி என்றும் பொருள். அதாவது பெண்ணுடம்பு என்பது பொன்னுடம்பு. கம்பன், பரத்தையரைக் குறிக்க, ‘பொன் விலைப் பாவையர்’ எனும் சொல் ஆள்கிறார். தாடகை வதைப் படலம். பாடல் எண். 15.

சைவ இலக்கியங்களான பன்னிரு திருமுறைகளில் ஒன்று பதினோராம் திருமுறை. பன்னிருவர் பாடிய நாற்பத்தோரு நூல்கள் கொண்டது. அவற்றுள் ஒன்று பொன் வண்ணத்து அந்தாதி. சேரமான் பெருமாள் நாயனார் பாடியது. பொன் வண்ணம் என்று தொடங்கி, அந்தாதித் தொடையாக, பொன் வண்ணமே என்று முடியும் நூறு பாடல்கள். பாவினம் கட்டளைக் கலித்துறை.

நூலின் முதற்பாடலில் வண்ணம் எனும் சொல்லைப் பன்னிரு முறை பயன்படுத்துவார். கம்பர் ஒரு பாடலில் எட்டு வண்ணங்கள் பயன்படுத்துவார். அறிந்திருக்க வேண்டிய பாடல் என்பதால், முழுப்பாடலும் தருவேன்:

”பொன் வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் மேனி,
பொலிந்திலங்கும்
மின் வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் வீழ்சடை
வெள்ளிக் குன்றம்
தன் வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் மால் விடை
தன்னைக் கண்ட
என் வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் ஆகிய
ஈசனுக்கே!”

பொன்வண்ண மேனி, மின்னல் வண்ண வீழ் சடை, வெள்ளிக் குன்றின் வண்ணம் இடபம்-ரிஷபம்-எருது- காளை-நந்தி-விடை. இவற்றைக் கண்ட என் வண்ணம் போன்றது ஈசனின் வண்ணம். இது எளியேன் உரை.

தங்கத்தைக் காட்டிலும் தமிழ்த் தொல்லுலகில் பொன் சிறப்பிடம் பெற்று இருந்திருக்கிறது. சங்க இலக்கியங்களில் பாட்டும் தொகையும், பெரும்பாலும் பொன் பயன்படுத்தியுள்ளன. பொன், பொன்னின், பொன்னினும், பொன்னென, பொன்னோடு எனப் பல பிரயோகங்கள்.

கனகம் என்றாலும் பொன்னேதான். கனகன் எனில் பொன்னன் என்று பொருள். கனக சபாபதி, கனக சபேசன், கனகலிங்கம், கனகலெட்சுமி, கனகா, கனக துர்கா யாவுமே பொன் தொடர்புடைய பெயர்கள். கோவையின் இளம் நாவலாசிரியர் ஒருவரின் பெயர் கனக தூரிகா.

கனக என்றால் அது சமஸ்கிருதச் சொல். அதன் பிறப்பே கனகம். கனகசபை, கனக மலை, கனகலிங்கம், கனகாசலம், கனகாபிடேகம் போன்ற சொற்கள் சமஸ்கிருதமும், தமிழுமான சொற்கள். ’நற்கனகக் கிழி தருமிக்கு அருளினன் காண்’ எனும் பாடல் வரி, தருமிக்குப் பொற்கிழி அருளியசெய்தி பேசுகிறது.

கனகம் தொடர்புடைய பல சொற்கள் நம்மிடம் புழங்கி இருந்தன. கனக தப்பட்டை- பொன் தப்பட்டை, கனக புட்பராகம்- மஞ்சள் குருந்தம், கனக மழை- பொற்கட்டி மழை, கனக ரேகை- பொன் வரை, பொன் வரி; கனகலிங்கம்-பொன்னிலங்கன், பொற்குறியன்; கனக வர்ஷம்-பொன் மழை, கனகா- பொன், வெள்ளி, கனகாங்கி- பொன்னுருவம் உடையவள், கனகாசலம்- பொன்மலை, பொன்மலையான்; கனகாபிடேகம்- பொன் முழுக்காட்டு, கனகாம்பரம்- பொன்னாடை, பொன்னாடை மலர்; கன காரியம்- முக்கியமான காரியம், கனகு- பொன், கனகசபை- பொன் அம்பலம், கனக மலை- மேரு மலை, The Golden Mountain என்மனார் புலவர்.

கனகச் சம்பா என்று உயர்ந்த வகை சம்பா நெல்லுண்டு. பொன் வண்டினைக் குறிக்க கனக தும்பி என்ற சொல்லும் இருக்கிறது. கனக தண்டி என்றால் பொற்பல்லக்கு. அல்லது பொற்சிவிகை. ‘வால் நீண்ட கரிக்குருவி வலமிருந்து இடமானால், கால் நடையாய்ப் போனவரும் கனக தண்டி ஏறுவரே!’ என்றொரு பழமொழி இருந்தது. அதாவது நீண்ட வாலையுடைய கரிக்குருவி, நாம் போகும்போது வலப்பக்கம் இருந்து இடப்பக்கமாகப் போனால், கால் நடையாய்ப் போன நாம் பொற்பல்லக்கில் ஏறுவோம் என்று பொருள். எனக்கு இதுவரை வால் நீண்ட கரிக்குருவி வலமிருந்து இடம் போகவில்லை போலும். நடமாடித் திரியும் வரை படுபாவிகளின் லொடக்கு நகரப் பேருந்தே விதி. கனக தண்டியைக் கனக தண்டிகை என்றும் சொல்வதுண்டு.

கனகதம் என்றால் ஒட்டகம் என்கிறது பிங்கல நிகண்டு. கனகதர் எனில் எதிர் நாயகன், villain. பொன்னின் தன்மையைச் சோதித்து அறியும் கலையைக் கனக பரீட்சை என்று வகைப் படுத்தினர். கனக சுற்றம் என்றால் Men-in-charge of Treasury. கனக மாரி பொழிதல் எனில் ‘To shower gold.’ ஈதெல்லாம் மடாதிபதிகளுக்குச் செல்வந்த பக்தர்களால் செய்யப் பெறுவது. முனிகளுக்கும், மாமுனிகளுக்கும் கனக மாரிக்கும் ஒற்றை ரூபாய் நாணய மாரிக்கும் வேறுபாடு தெரியுமா என்ன? கனகாமிர்தம் எனும் சொல்லுக்கு வெள்ளி என்று பொருள்.

நல்ல மிளகு, குரு மிளகு போன்ற இன்னொரு மருத்துவப் பொருள் வால் மிளகு. பொன் விலை கொடுத்தால் மருந்துக் கடைகளில் கிடைக்கும். வால் மிளகுக்கு இன்னொரு பெயர் கனக மிளகு. ஊமத்தைச் செடியில் நீல ஊமத்தை, வெள்ளை ஊமத்தை சாதாரணமாகப் பார்க்கலாம். மஞ்சள் நிறத்திலும் ஊமத்தை இருந்திருக்கிறது அல்லது இருக்கிறது. அதன் பெயர் கனகி.

கனல் எனில் நெருப்பு. கனம் எனில் பொன் எனப் பொருள் தருகின்றன அகராதிகள். பொன் எனும் பொருளில் கனம் எனும் சொல்லைக் காமத்துப் பாலின் முதற்குறளில் பயன்படுத்துகிறார் திருவள்ளுவர். ஆனால் கனகம் பயன்படுத்தவில்லை எங்கும். திருவாசகமும் நாலடியாரும் சங்க இலக்கியமும் கனகம் எனும் சொல் ஆளவில்லை. கனம் தான் பின்பு கனகம் ஆயிற்றா என்பது மொழியியல் அறிஞர் கவலை. திருக்குறள் சொல்கிறது,

‘அணங்கு கொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை
மாதர்கொல் மாலும் என் நெஞ்சு.”
என்று. வனப்பு மிகுந்த இவள் வான் மகளோ, மா மயிலோ, பொற் காதணிகள் அணிந்த அழகு நிறைந்த மாதோ? என் நெஞ்சம் மயங்குகிறதே! என்பது பொருள்.

‘கார் வண்ணன் கனக மலையானும்’ என்கிறது தேவாரம். பன்னிரு திருமுறைகளில் ஒன்பதாம் திருமறை ‘திருவிசைப் பா, திருப்பல்லாண்டு’ எனும் தொகை பாடியவர் ஒன்பது பேர். அவருள் முதல்வர் திருமாளிகைத் தேவர். அவருடைய பாடல் ஒன்று,

‘தனதன் நல் தோழா! சங்கரா! சூல பாணியே!
தாணுவே! சிவனே!
கனக நல் தூணே! கற்பகக் கொழுந்தே! கண்கள்
மூன்றுடையதோர் கரும்பே!’
என்கிறது.

தனதன் – குபேரன், கனகத் தூண்- பொன் தூண்.

இன்னொரு பாடலில்,

‘மடங்கலாய்க் கனகன் மார்பு கீண்டானுக்கு
அருள் புரி வள்ளலே!’
என்கிறார். மடங்கல் எனில் சிங்கம். நரசிங்கமாகத் தூணில் நின்று வெளிப்பட்டு இரணியன் மார்பு கிழித்தவனுக்கு அருள் புரிந்த வள்ளலே! சிவனே! என்பது பொருள்.

ஆக, கனகன் எனில் இரணியன் என்றாகிறது. இரணியம் எனும் சொல் தேடிப் போனபோது. பொன் என்றே பொருள் தருகின்றன அகராதிகள். இரணியன் என்பவனைப் பொன்னன் என்றும் கனகன் என்றும் குறித்தார்கள். ஆகத் தமிழில் பொன், கனகம், கனம், இரணியம் என்றால் தங்கம்.

கம்ப ராமாயணத்தின் ஆறு காண்டங்களில் 118 படலங்கள். ஆறாவது யுத்த காண்டத்தில் மட்டும் 39 படலங்கள். மூன்றாவது படலம் ‘இரணியன் வதைப் படலம்!’ இரணியன் வதைப் படலத்தில் 176 பாடல்கள்.

‘மூன்று அவன் குணங்கள்; செய்கை மூன்று; அவன் உருவம் மூன்று;
மூன்று கண், சுடர் கொள் சோதி மூன்று; அவன் உலகம் மூன்று,”
என்கிறான் பிரகலாதன். அதற்குப் பதிலாக இரணியன் சொல்கிறான்,

“தூணில் நின்றுளன் என்னின், கள்வன்,நிரப்புதி நிலைமை” என்று கேட்கிறான். 124 ஆவது பாடலில் பிரகலாதன் மறு மொழியாக,
“சாணிலும் உளன்; ஓர் தன்மை, அணுவினைச் சத கூறு இட்ட
கோணினும் உளன்; மாமேருக் குன்றிலும் உளன்; இந் நின்ற
தூணிலும் உளன்; நீ சொன்ன சொல்லிலும் உளன்”
என்று சொல்கிறான். அப்போது, “நன்று, எனக் கனகன் சொன்னான்” என்கிறார் கம்பர். 143 ஆவது பாடலில்,
“கனகனும், அவனில் வந்த, வானவர் களை கண் ஆன
அனகனும் ஒழிய”
என்கிறார்.

இரணியன் என்றால் கனகன், பொன்னன் என்று உறுதியாகிறது. இரணியம் என்றால் பொன். இரணிய தானம் என்றால் சுவர்ணக் கொடை. இரணிய சிரார்த்தம் என்றால் பொன் கொடுத்துச் செய்யும் நீத்தார் நினைவு. ஒரு சத்திரியன், பிராமணன் ஆவதற்குச் செய்யப்படும் யாகத்தின் போது, பொன்னால் சமைக்கப்பட்ட பசுவின் உட்புகுந்து வெளி வருதல், இரணிய கர்ப்பம் எனப்பட்டது. திருவிதாங்கூர் மன்னர்கள் அவ்விதமே பிராமணர் ஆயினர் என்று வரலாற்றுப் பதிவு உண்டு. அந்தப் பொற்பசு தானமாக வழங்கப் பெற்றிருக்கிறது. அதாவது பொன்னால் பசு செய்யும் தனம் இருந்தால் போதும், யாகம் செய்து பிராமணன் ஆகி விடலாம்.

இரணியனைக் கனகன் என்று குறித்தது அன்றியும், பொன் பெயரோன் என்றும் சொல்கிறார் கம்பர்.
‘பேரார் நெடு வேலோன் பொன் பெயரோன் ஆகத்தைக்
கூரார்ந்த வள்ளுகிரால் கீண்டு’
என்பது பாடல் வரி.

இரணம் எனும் சொல்லின் பொருள்கள்-கடன், போர், மாணிக்கம், புண், விந்து. சூடாமணி நிகண்டு, இரணம் என்றால் பொன் என்கிறது. இரணியன் என்றால் பொன்னன் என்பதைப் போல வியாழன் எனும் கோள் என்றும் பொருள் தரப்பட்டுள்ளது.

சுவர்ணம், சொர்ணம் எனும் சொற்கள், பொன் என்ற பொருளையுடைய வடமொழிச் சொற்கள். திருக்குறளோ, நாலடியாரோ, சங்க இலக்கியங்களோ, இச்சொற்களைக் கையாளவில்லை. சொர்ணம் எனும் சொல்லைச் சொன்னம் என்று தமிழாக்கினர். சுவர்ண பூமி என்று பர்மாவையும் சுவர்க்கத்தையும் சொல்வார்கள். சுவர்ணகாரன் எனில் பொற்கொல்லன். சுவர்ண கதலி என்றொரு வாழை வகை இருந்திருக்கிறது. இன்றும் இருக்கலாம், பொன் கதலி என்ற நாமத்துடன். இலஞ்சம், bribe என்ற சொல்லைக் குறிக்க சுவர்ண புஷ்பம் என்றொரு சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. குழூஊக் குறியாக இருக்கலாம். இன்று பெட்டி, மால் என்றெல்லாம் சொல்வதைப் போல. பொன்னுக்குக் குழூஊக் குறியாகப் ‘பறி’ என்றொரு சொல்லும் பயன்படுத்தியுள்ளனர் பொற்கொல்லர்.

சோனா என்றாலும் பொன்னே! அது சமஸ்கிருதச் சொல். வங்காளிகள் தம் தேசத்தை ‘சோனார் பங்களா’ என்றனர். தங்க வங்கம் என்ற பொருளில். புன்னாக வராளி ராகத்தில் பாரதியார் இயற்றிய,
‘பொன்னை உயர்வைப் புகழை விரும்பிடும்
என்னைக் கவலைகள் தின்னத் தகாதென்று
நின்னைச் சரணடைந்தேன் – கண்ணம்மா
நின்னைச் சரணடைந்தேன்” என்ற பாடல் நினைவுக்கு வருகிறது.

பொன் எனும் சொல் மீது கம்பனுக்கு எல்லையற்ற காதல் போலும்! கம்ப ராமாயணத்தின் ஆறு காண்டங்களில், 118 படலங்களில், 10, 368 பாடல்களில், பொன் எனத் தொடங்கும் பாடல்கள் நாற்பது. பொன்னகர், பொன்னினின், பொன்னிலும், பொன்னுடை, பொன்னும், பொன்னே, பொன்னை, பொன்னொடு எனத் தொடங்குபவை பத்தொன்பது. ஆக 59 பாடல்களில் முதற்சொல் பொன். பாடல் வரிகளில் உள்ளே பயன்படுத்தப் பட்டிருக்கும் ‘பொன்’ களை எண்ணப் பொழுதில்லை நமக்கு.

பொலம், பொலன் எனும் சொல் தரும் பொருளும் பொன் தான். கம்பன், பொலங்கிரி அனைய, பொலங்குழை மகளிர், பொலங் கொண்டல் அனைய, பொலந்தாரினர் என்று நான்கு பாடல்களைத் தொடங்குவான். பொலங்கிரி- பொன்மாலை, பொலங்குழை – பொன் குழை, பொலங் கொண்டல்- பொன் மேகம், பொலந்தாரினர்- பொன்மாலை அணிந்தவர் எனப் பொருள்.

பொலங்கலம் என்கிறது ஐங்குறு நூறு. பொன்னாபரணம் என்பது பொருள். பாடல் எண். 316. பதிற்றுப் பத்தில், ஏழாம் பத்துப் பாடிய கபிலர்,

‘வயம் படு முரசின் வாய் வாள் கொற்றத்துப்

பொலம் பூண் வேந்தர் பலர் தில்’

என்று பாடுகிறார். வெற்றி முரசும், குறி தப்பாத வாளும், பொன்னணி பூண்ட வெற்றி மார்பும் உடைய மன்னர் பலர் உண்டு உலகில் என்பது பொருள்.

எனவே பொலன் என்றாலும் பொன்னே! பொலம் என்றாலும் பொன்னே! பொலங்காசு என்கிறது அகநானூறு. பொலன் எனும் சொல்லை, அகநானூறும், புற நானூறும் ஆண்டுள்ளன. பொலம் எனும் சொல்லை, கலித்தொகை, குறுந்தொகை, திருமுருகாற்றுப் படை, நற்றிணை, நெடுநல்வாடை, பரிபாடல், புற நானூறு, பெரும்பாணாற்றுப் படை, பொருநர் ஆற்றுப் படை, மதுரைக் காஞ்சி, மலை படு கடாம் ஆண்டுள்ளன.

இன்று பொலன் எங்கே, பொலம் எங்கே, பொன் தான் எங்கே? யாவும் தங்கம் அல்லது gold ஆயிற்று.

ஒன்பதாவது அல்லது பத்தாவது நூற்றாண்டைச் சார்ந்த திவாகர நிகண்டு, காஞ்சனம் என்றால் பொன் என்கிறது. திவாகர நிகண்டு தொகுத்த திவாகர முனிவரின் மகன் என்று நம்பப்படுகிற பிங்கல முனிவர் தொகுத்த பிங்கல நிகண்டு, காஞ்சனி எனும் சொல்லொன்று தருகிறது. மஞ்சள் நிறம், பொன் நிறம் என்பதைக் குறிக்க.

‘நிசி அரிசனமே பீதம் காஞ்சனி அரித்திரம்

இன்னவை மஞ்சளாகும்’

என்பது 625 ஆவது நூற்பா.

சந்திர சேகரப் பண்டிதரும், சரவண முத்துப் பிள்ளையும் தொகுத்து 1842 ஆம் ஆண்டு வெளியான யாழ்ப்பாண அகராதி எனும் மானிப்பாய் அகராதி, காஞ்சனம் என்றால் பொன் என்கிறது.

சுன்னாகம் அ. குமாரசாமிப் பிள்ளை (1855-1922) தொகுத்த இலக்கியச் சொல்லகராதி, காஞ்சனம் எனும் சொல்லுக்கு சம்பக மரம், பொன் எனப் பொருள் வழங்குகிறது. காஞ்சனி என்றாலும் பொன் என்கிறது. எனில் காஞ்சனா என்றால் சம்பகா அல்லது பொன்னி எனலாம்.

பேராசிரியர் அருளியின் அயற் சொல்லகராதி, காஞ்சனம், காஞ்சனி, காஞ்சனா எனும் சொற்கள் சமற்கிருதம் என்கிறார். பொன், பொன்னிறம், பொன்னி எனப் பொருளும் தருகிறார்.

யாமறிய, சங்க இலக்கியங்கள், திருக்குறள், நாலடியார், திருவாசகம், கம்ப ராமாயணம் ஆகிய நூல்கள் காஞ்சனம், காஞ்சனி, காஞ்சனா எனும் சொற்களைப் பயன்படுத்தவில்லை.

காஞ்சனர் என்றொரு சொல், லெக்சிகனில் கிடைக்கிறது. சத்துருக்கனரின் புரோகிதர் என்கிறது பதிவு. காஞ்சனன் என்பவன் காய சண்டிகையின் கணவன் என்கிறது ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றான மணிமேகலை. அவன் தான் உதய குமாரனை வாள் வீசிக் கொன்றவன். கதை சொல்ல எனக்கிங்கு நேரம் இல்லை.

காஞ்சனமாலை எனும் பெயர் கேள்விப் பட்டிருப்பீர்கள்! இவள் கர்ணனின் தேவி. மற்றொரு காஞ்சன மாலை மலயத் துவச பாண்டியனின் தேவி. இவளுக்குப் பிறந்தவளே தடாதகைப் பிராட்டியார். தடாதகை பற்றித் தனியாகப் பேச வேண்டும்.

பெருங்கதையின் வாசவ தத்தையின் உயிர்த் தோழி ஒருத்தியின் பெயரும் காஞ்சன மாலை. பந்து விளையாட்டில் தேர்ந்தவள்.

காஞ்சனை எனும் தெய்வ கன்னிகை, பார்வதி தேவியின் தோழியாக வேண்டித் தவமிருந்தாள் என்றும், அவள் மானாக விந்திய மலையில் பிறந்தாள் எனவும், அவளே வள்ளி நாச்சியாரை ஈன்றாள் எனவும் திருச்செந்தூர்ப் புராணம் உரைக்கும்.

சாண்டில்யன் எனும் சரித்திர நாவலாசிரியரின் புகழ் பூத்த புதினங்களில் ஒன்று கடல் புறா. நான் ஐம்பதாண்டுகள் முன்பு வாசித்தது. கடல் புறாவின் நாயகியின் பெயர் காஞ்சனை. இன்னொரு நாயகி மஞ்சள் அழகி. கடாரம் எனும் நாட்டவர் என்பது நினைவு.

யாவும் கிடக்க, சிறுகதை மேதை புதுமைப் பித்தனை வாசித்த எவரும் ‘காஞ்சனை’ எனும் சிறுகதையை மறக்க ஏலாது. காஞ்சனையும், புதுமைப் பித்தனும் இன்னும் வாழ்கிறார்கள். அவரைக் கட்டுடைத்தவர்கள் காணாமற் போயினர்.

ஆக, இங்கும் நாம் வந்து சேரும் இடம், காஞ்சனம் என்றாலும் பொன் என்பது.

சினிமாவின் பின்னால் சாகும் எட்டுக் கோடித் தமிழருக்கும் காஞ்சனா என்றால் ஏதும் நடிகையோ, திரைப்படமோ நினைவுக்கு வரக் கூடும்!

நமக்கென்ன? அப்பம் தின்னவோ, அல்லால் குழி எண்ணவோ?

26/10/2019

5 Replies to “பொன்னின் பெருந்தக்க யாவுள !”

  1. அன்புமிகு நாஞ்சில் நாடன் – ’எந்த ஒரு தலைப்பை எடுத்துக் கொண்டாலும் இப்படி விஸ்தாரமாய், விலாவாரியாய் எப்படி சார் (எனக்கு இந்த ‘அய்யா’ ண்ணு சொல்லுறது பிடிக்கலையா இல்ல, வர மாட்டேங்குதாண்ணு தெரியல. அதனால சார்) ஒங்களுக்குச்சொல்ல முடியுது’ என்று நான் வியக்காத நாளில்லை. அந்த உவேசா தாத்தா மாதிரி எங்கெல்லாமோ போய்தேடிப்பிடித்து நீங்க சொல்லுற அழகில மயங்கிப் போறேன்; ஆனா, அங்கங்க, குமரி, நெல்லை (எனக்கு சொந்த ஊரு தென்காசிப் பக்கம் சுரண்டை; அமெரிக்காவுக்கு வந்து அரை நூற்றாண்டுக்கு மேல ஆயிடுச்சி) மண்ணுக்கே உரிய குசும்புத்தனம் கொஞ்சமும் குறையில்லாம வருகிற அழகில கிறங்கிப் போயிடறேன். நிறைய எழுதுங்க சார். அடுத்த ஜனவரியில ஊருக்கு வர்ரப்போ, எங்க குலதெய்வம் பட்டறையான் கோயிலுக்குப் போயிட்டு நேர கோவையில வந்து ஒங்களப் பார்க்க வர்ரதா எனக்குள்ளே ஒரு வேண்டுதல்.

  2. அருமையான கட்டுரை. அதன் பின்னாலிருப்பது இடையறாத தேடல். தமிழின் சிற்றிலக்கியங்கள் நூலைப் படிக்கும்போதும் அதற்காக நாச்சில்நாடன் அவர்கள்
    எவ்வளவு உழைத்திருக்கவேண்டுமென்று நினைத்துப் பார்த்தேன். பாராட்டுக்கள்
    நாஞ்சில்நாடன் அவர்களே.

  3. இது ஒரு பொன்னான கட்டுரை

    “பொன் என்ன பூ என்ன கண்ணே உன் கண்ணாடி உள்ளத்தின் முன்னே “என்ற திரையிசைப் பாடல் நினைவில் வருகின்றது. பொன்னைவிட நல்ல உள்ளத்தை முதன்மைப்படுத்தும் பாடல்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.