


இசையெனப் படுவது —
கொச்சைக் காமக் குத்துப் பாட்டு
தன் திறம் உரைத்து தலைவனைத்
தாங்கும் தாள வாத்தியம் !
பொழுது போக்கு என்பது —
சினிமா கட்சி மாநாடு புரட்சிப் பேரணி!
விளையாட்டென்றால்—
தொலைக்காட்சியில் பந்தயம் கட்டிக்
கிரிக்கெட் பார்த்தல்!
வாசிப்புக்கு —
வாட்ஸ் ஆப், கூகுள், யூட்யூப் எனப்பல!
உண்டு களிக்க —
பரோட்டா பிரியாணி சுவர்மா நூடுல்ஸ்
பீட்சா பாஸ்தா…
செம்மொழியாவது —
வேற லெவல் நோ சான்ஸ் வெச்சு செஞ்சிங்
காண்ட் ஆவது ப்ரோ மாம்ஸ் மச்சி தல ஸார் ஜாலி!
புற நானூற்றுப் புறங்கொடா வீரம் யாது —
கூலிக்குக் கொலை செய்தல் கூட்டு வன்புணர்வு
தனக்குப் போக சாருக்கு மிச்சம்
ஆள் வைத்துப் போட்டுத் தள்ளுவது
இருட்டில் வெட்டுவது —
மனைவியும் களவுப் பரத்தனும் கூடிக் கலந்து
கணவனைக் கொன்று
543 துண்டுகளாக்கி 543 இடங்களில் வீசுதல்!
கல்வி வேலை பதவி என்பன —
ஏலத்தில் விற்பனை!
ஆட்சி எனப்படுவது –
மதம் இனம் காசு பரத்தமை
பாம்பின் விடமாய்ச் சீறும் தேறல்!
தொழில் எனக் கொள்வதோ –
சினிமா அரசியல் கனிமம் கடத்தல்
கஞ்சா அபின் ரசாயன போதைப் பொருள்கள் விற்பனை
மது உற்பத்தி கலப்படம் தரகு!
இறை எனப் படுவதோ –
பல்லாயிரம் கோடிகள் ஆட்டையப் போட்ட
அற்பர்களின் எடுபிடி நடிக நடிகையர் காவலாளி
அதிகாரக் கால்களைத் தைலம் தடவி தைவரல் செய்பவன்!
எவன் வாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் என்ன
தான் வாழ்ந்தால் போதாதா?
Discover more from சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026
Subscribe to get the latest posts sent to your email.
