காணி நிலம் கேட்டான் பாரதி அன்று, அன்னை பராசக்தியிடம். தூணில் அழகியதாய், நல் மாடங்கள் துய்ய நிறத்தினதாய், அந்தக் காணி நிலத்திடையே ஓர் மாளிகை கட்டித் தரவேண்டும் என்றான். அங்கு கேணி அருகினிலே தென்னைமரம் கீற்றும் இளநீரும் வேண்டினான். பத்துப் பன்னிரண்டு தென்னைமரம் பக்கத்திலே வேணும் என்றான். நல்ல முத்துச் சுடர் போலே நிலா ஒளி முன்பு வரவேண்டும் என விரும்பினான். அங்கு கத்தும் குயிலோசை சற்றே வந்து காதில் படவேண்டும் என்றான். அவன் தன் சித்தம் மகிழ்ந்திடவே நன்றாய் இளம் தென்றல் வரவேண்டும் என்று கோரினான்.

ஆசைப்படுவதற்கும் கனவு காண்பதற்கும் யாவர்க்கும் உரிமை உண்டு. இ.பி.கோ.வின் எந்தச் சட்டப்பிரிவும் அதைத் தடைசெய்யவில்லை. இருபதுக்கும் குறைவில்லாத சினிமா நடிகர், நடிகையர், இயக்குநர் எனப் பலரும் முதலமைச்சர் கனவில் மிதப்பதை எவர் தடைசெய்ய இயலும்? அவர்தம் மனைவியரும் மக்களும் அந்தக் கனவைத் தொடர்வதில் எவருக்கு மூலக்கடுப்பு இருக்க இயலும்?
ஆனால் உருகி இறைஞ்சி இரந்து நின்ற ஒரு மகாகவிக்கு, அவன் கேட்ட எதுவும் தரவில்லை பராசக்தி. அஃதோர் வரலாற்றுச் சோகம். குறைந்தபட்சம் மேலும் சில பத்தாண்டுகள் ஆயுள் தந்திருக்கலாம் பராசக்தி. துஷ்ட நிக்ரகம், இஷ்ட பரிபாலனம் என்பர் பண்டு. இன்று இஷ்ட நிக்ரகம், துஷ்ட பரிபாலனம் ஆகிப்போயிற்று. அல்லது பாஞ்சாலி சபதத்தில் வீட்டுமன் மொழியாக பாரதி கூறியதைப்போல ‘தீங்கு தடுக்கும் திறன் இலேன்’ என்றும் ஆகலாம்.
பாஞ்சாலி சபதம் பாடிய பாரதி, இரண்டு பாகங்களாக ஐந்து சருக்கங்களே பாடினான். சருக்கம் என்பது பருவத்தின் உட்பிரிவு. காண்டம், படலம் போல. ஆக அவன் பாடியது 413 பாடல்களே, பாரதத்தின் பகுதியாக.
காணிநிலம் இல்லாவிட்டால் போகட்டும், வியாச பாரதம் முழுக்க, பதினெட்டுப் பருவங்களையும் தமிழாக்கம் செய்யப் போதுமான ஆயுளைத் தந்திருக்கலாம். ‘ஆயுஷ்மான் பவ’ என அருள பராசக்திக்கு ஒரு கணம் போதாதா?
பராசக்தி என்றல்ல. இன்று எந்தத் தெய்வத்தின் அருள் வேண்டப் போனாலும் இரசீது இல்லாமல் இரண்டாயிரம் பணம் நுழைவுச்சீட்டு வாங்கவேண்டும். அங்கி, ஒட்டியாணம், மணிமகுடம், தங்கத்தேர், ஒரு லட்சத்து எட்டு வடைகளால் ஆன மாலை, நவமணி மாலை, பொற்சிலம்பு, கைவளை, குண்டலம், கனகமணிப் பூண்கள் என எத்தனையோ மார்க்கம் உண்டு. படி பூசைக்கு, சிறப்பு அலங்காரங்களுக்கு, அபிடேகம் ஆராதனைகளுக்கு, நிர்மால்ய தரிசனத்துக்கு ஏழு நாட்கள் முதல் இரண்டு ஆண்டுகள் வரை முன்பதிவுகள் உண்டு.
அவை ஏதுமே அவனால் சாத்தியமில்லாத காலத்து, காணி நிலம் கேட்டான். காலந்தோறும், மேடைதோறும், சொற்பொழிவுக் கவர்ச்சிக்காக இப்பாடலைச் சொல்பவர்கள் காணி நிலம் காணி நிலம் என்று ‘அம்மாடி தாயரே!’ அடிப்பார்களே அன்றி, காணி என்பதன் பரப்பளவு – விஸ்தீரணம் – நீள அகலம் – ஏரியா என்ன என்று சொல்லத் துணியமாட்டார்கள். தெரிந்தால் சொல்ல மாட்டார்களா என்று நீங்கள் முணுமுணுப்பது என் காதிலும் விழுகிறது.
இன்று யாவர்க்கும் தெரிந்த விடயம், ஒரு ஏக்கர் என்பது 100 சென்ட் என்பதும், ஐந்தரை சென்ட் என்பது ஒரு கிரௌண்ட் என்பதும். ஒரு கிரௌண்ட் என்பது அறுபதடி நீளமும், நாற்பதடி அகலமும் கொண்ட நிலமாகும். இந்த நவீன பரப்பு அளவைகள் வருமுன் இருந்த அளவைகளே குழி, மா, காணி, வேலி என்பன.
குழி எனும் சொல்லுக்கு பள்ளம், நீர்நிலை, கிணறு, வயிறு, பட்டைக் கிடங்கு, பாத்தி, ஒரு எண்ணின் வருக்கம், சதுர அடி, கன அடி, பன்னீரடிச் சதுரம் குழி எனப் பற்பல பொருள் தருகின்றன அகராதிகள். இருப்பினும் நாம் மேற்கொண்ட தேடலின் பின்புலத்தில், குழி எனும் சொல்லுக்கு 144 சதுர அடி முதல் 576 சதுர அடி வரை பற்பல பிரதேசங்களில் வெவ்வேறாக வழங்கும் நில அளவை என்பதாகும் பொருள். அதாவது 144 சதுர அடியும் ஆகலாம் 576 சதுர அடியும் ஆகலாம் குழி எனும் நிலப்பரப்பு.
மா எனப்படும் ஓரெழுத்து ஒரு சொல்லின் முதற்பொருள் விலங்கு அல்லது மிருகம் என்பதாகும். தொல்காப்பியப் பொருட்பால் மரபியல் நூற்பா 587,
‘மாவும் மாக்களும் ஐந்தறிவினவே’ என்று பேசும். விலங்குகள் அனைத்தும் மனிதர்களில் விலங்குகளாய்த் திரிவோரும் ஐயறிவு உடையன என்பது பொருள்.
மா எனில் குதிரையும் ஆகும். தீ நட்பு அதிகாரத்தில் 814-வது திருக்குறள் பேசுகிறது –
‘அமரகத்து ஆற்றலுக்கும் கல்லா மாஅன்னார்
தமரின் தனிமை தலை’
என்று. கவிஞர் சிற்பி – களத்தில் போரிடையே கைவிட்டு ஓடும் பயிற்சி இல்லாத குதிரை போன்றவர்களுடன் பழகுவதை விடத் தனித்தே இருப்பது நன்று – என்று உரை எழுதினார்.
மா எனில் யானை என்று அகராதி நிகண்டும், யானைகளின் ஆண் என சூடாமணி நிகண்டும் பொருள் தந்துள்ளன. குதிரையும் பன்றியும் மா எனப்பட்டன. மா எனில் சிங்க ராசி. இதை இங்கே எடுத்தாள்கிறவன் மகம் நட்சத்திரம், சிம்ம ராசி. மா எனில் வண்டு. ஆதாரம் புறப்பொருள் வெண்பாமாலைப் பாடல். கொணு மா எனில் அன்னம். கலித்தொகையில் மருதக்கலி பாடிய மருதன் இளநாகனார் ‘மட நடை மாயினம்’ என்று குறிக்கிறார். மாயினம் என்பதற்கு வண்டினம் எனப் பொருள் கண்டார் உரையாசிரியர். விலங்கு வடிவமாய்ப் பிறக்கும் மானுடனும் மா எனப்பட்டான். புறநானூற்றில் உறையூர் முதுகண்ணன் சாத்தனார் பாடிய பாடல். சோழன் நலங்கிள்ளியைப் பாடியது. பதினேழு அடிப்பாடல். அதன் முதல் ஆறு அடிகளை மேற்கோளாகத் தருவேன்:
“சிறப்பு இல் சிதடும், உறுப்பு இல் பிண்டமும்,
கூனும், குறளும், ஊமும், செவிடும்,
மாவும், மருளும், உளப்பட வாழ்நர்க்கு
எண்பேர் எச்சம் என்று இவை எல்லாம்
பேதைமை அல்லது ஊதியம் இல்’ என,
முன்னும் அறிந்தோர் கூறினர்”
என்பன பாடல் வரிகள்.
கோவிலூர் மடாலயப் பதிப்பின் உரையாசிரியர், இரா. இளங்குமரன் உரை எழுதினார் – பிறப்பில் சிறப்பு இல்லாத குருடு, வடிவமையாத் தசைத்திரள், கூனல், குட்டை, ஊமை, செவிடு, விலங்கு வடிவு, அறிவு மயக்கம் என்னும் எட்டு வகைக் குறைப் பிறவிகளும் வளர்ச்சிக் குறையால் பெரும் பயன் செய்யாதவை என முன்னே வாழ்ந்த அறிஞர் கூறினர் – என்று.
எல்லோரும் அறிவோம் மா எனில் மாமரம், மாங்காய், மாம்பழம். ஆங்கிலத்தில் மேங்கோ, இந்தியில் ஆம். மா, பலா, வாழை எனும் முக்கனிகள் அறிவோம். மா என்றால் அழைத்தல் – Calling என்கிறது பிங்கல நிகண்டு. மா எனில் சீலை – Cloth, ஆணி – Nail என்கிறது அகராதி நிகண்டு. மா எனில் துன்பம் பொறுத்தல் என்றும் பொருளுண்டு. மா என்பதோர் அசைச் சொல்லுமாம்.
மா எனும் சொல் இலக்குமி எனும் பொருளில் ஆளப்பெற்றுள்ளது புறநானூற்றுப் பாடலில். ஏழாவது பாடலின் ஐந்தாவது அடி. கருங்குழல் ஆதனார், சோழன் கரிகால்பெருவளத்தானைப் பாடிய பாடல். ‘மா மறுத்த மலர் மார்பின்’ என்பது பாடல்வரி. மா என்பதற்குத் திருமகள் எனப் பொருள் உரைத்துள்ளனர்.
மா எனில் செல்வம் என்றும், சரசுவதி என்றும் பொருள் தருகிறது சங்க அகராதி. மா என்றால் பொன்னின் மாற்று என்றும் பொருளுண்டு. மா என்றால் ஒரு நிறை அல்லது எடை. மா எனில் நிலம், வெறுப்பு, கானல் எனவும் பொருள். மா என்றால் வலி – Strength என்கிறது பிங்கல நிகண்டு. மா என்பது பெருமை என்றும் பொருள் தருவது.
‘அங்கண் மா ஞாலம்’ எனும் நாலடியார் பாடலின் தொடரில் வரும் மா எனும் சொல்லின் பொருள் பெருமை.
மா என்றால் அழகு – Beauty என்றொரு பொருள். மேலும் மா என்றால் கருமை என்றும் பொருள். ‘மாயிரும் பீலி’ என்கிறது சிலப்பதிகாரம். மா என்பது நிறம் எனும் பொருளும் தருவது ‘காமரு குவளைக் கழுநீர் மாமலர்’ என்பதுவும் சிலப்பதிகாரம்.
மா என்றால் Paleness caused by love – sickness என்கிறது அகராதி. அதாவது மாமைநிறம். பசலை படர்ந்தவளின் மேனி நிறம். மா என்றால் அரிசி முதலாயவற்றின் மாவு என்றும் பொருள். அரிசிமாப் புட்டு என்பர் எங்களூரில். மா என்றால் துகள் என்றும் நஞ்சுக்கொடி என்றும் பொருள் உடையது.
நாம் இங்கு உத்தேசித்த மா – Land, Track of Land அல்லது நிலம். நில அளவை வகை. மா எனும் நிலப்பரப்பு ஒரு வேலியின் இருபதில் ஒரு பாகம் என்று வரையறுக்கிறது பேரகராதி. ஒரு வேலியின் இருபதில் ஒருபங்கு என்பது 100 குழி என்றும் தகவல். ஆகவே ஒரு வேலி என்பது இருபது மா!
எல்லாம் சரி நாயன்மாரே, பாரதி கேட்ட காணி என்பது என்ன? காணி என்றால் எண்பதில் ஒரு பங்கான பின்னம், அதாவது 1/80 எனக் குறிக்கின்றன அகராதிகள்.
நாலடியாரில் கீழ்மை அதிகாரத்துப் பாடல் பேசும்:
“சக்கரச் செல்வம் பெறினும் விழுமியேன்
எக்காலும் சொல்லார் மிகுதிச்சொல் – எக்காலும்
முந்திரிமேல் காணி மிகுவதேல் கீழ் தன்னை
இந்திரனாய் எண்ணி விடும்”
என்று. உலகெங்கும் அதிகாரம் எனும் சக்கரத்தைச் செலுத்தக்கூடிய அரச செல்வத்தைப் பெறினும் மேலோர் ஒருக்காலும் வரம்பு மீறிய சொற்களைப் பேசமாட்டார். ஆனால் கைவசம் இருக்கும் முந்திரி எனும் சிறு தொகையுடன் காணி எனும் சிறுதொகை சேருமானால், ஒரு கீழ்மகன் தன்னை இந்திரனாகக் கருதி இறுமாந்திருப்பான் – என்பது பொருள். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பான நாலடியாரின் கணிப்பு எவ்வளவு சரி என இன்று நாம் உணர்கிறோம்.
காணியின் இன்னொரு பொருள் 100 குழி அளவுள்ள நிலம் என்கிறது பேரகராதி. எனில் காணியும் மாவும் ஒன்றா? நமக்குக் குழப்பமே மிஞ்சுகிறது. குழி என்பது 144 சதுர அடியா அல்லது அதன் நான்கு மடங்கான 576 சதுர அடியா என்பதிலேயே நமக்குத் தெளிவில்லை.
காணி எனில் நிலம் என்றும் பொருள். நாலாயிரத் திவ்யப் பிரபந்தத்தில் தொண்டரடிப் பொடியாழ்வார் அருளிய திருமாலையில் ஒரு பாடல். பாவினம் அறுசீர்க் கழிநெடில் ஆசிரிய விருத்தம். சகானா இராகம், ரூபக தாளம். பாடல் கீழ்வருமாறு:
“ஊரிலேன் காணி இல்லை
உறவு மற்று ஒருவரில்லை;
பாரில் நின் பாத மூலம்
பற்றிலேன்; பரம மூர்த்தி
காரொளி வண்ணனே! (என்)
கண்ணனே! கதறுகின்றேன்
ஆருளர் களைகண் அம்மா?
அரங்கமாநகர் உளானே!”
என்று கசிந்து கண்ணீர் மல்கி, எலும்பு நெக்குருகிப் பாடினார். எனது இருபத்திரண்டாவது கட்டுரைத் தொகுப்பின் தலைப்பு ‘ஊருண்டு காணி இல்லேன்’ என்பதாகும். கட்டுரையை வாசித்துவிட்டு ஜெயமோகன் விளித்துப் பேசினார், “ஊரில் காணி இருக்குல்லா?” என்று. உண்மைதான்! சொந்த ஊர் வீரநாராயணமங்கலம். ஆங்கோர் மனை கிடப்புண்டு எனக்கு இரண்டரை சென்ட் பரப்பில். அது எத்தனை குழி – மா – காணி – வேலி என்பதறியேன்.
காணியின் அடுத்த பொருள் காணியாட்சி. அதாவது . Landed Property. Estate, Possession. பரம்பரை உரிமை என்பதும் ஒரு பொருள். எனக்குப் பதினைந்து பதினாறு வயது இருக்கும்போது, எங்கள் வீட்டுக்குப் பக்கத்தில் இருந்த சுடலைமாடன் கோயிலில் கொடை. பாலமோர் சாலையில் கீழ்ப்புறமாகக் கிளைபிரியும் சாலை, தேரேகால் குறுக்கு வெட்டி, தாழக்குடிக்கும், தேரேகாலுக்கு இணையாகத் திருவெண்பரிசாரம் என்ற திருப்பதிசாரத்துக்குப் பிரியும் சந்திப்பு. கிழக்குப் பார்த்து ஆலமரத்து மூட்டில் சுடலைமாடன், பேச்சியம்மன் கோயில். நள்ளிரவில் பொங்கல் விட்டு, கடா வெட்டி, ஆராசனை வந்த சுடலைமாடன் கோமரத்தடி குதித்துக் குதித்து சாமியாடிக் கொண்டிருந்தார்.
மும்முரமாக வாசித்துக் கொண்டிருந்த பம்பை முரசு ஒலியில் கூட்டத்தில் நின்ற ஒருவருக்கும் ஆராசனை வந்துவிட்டது. அவர் செக்கடி மூட்டுச் சுடலைக்கு ஆராசனக்காரர். மும்முரமாய் ஆடிக்கொண்டிருந்த ஆலமரமூட்டுச் சுடலைக்கு வந்ததே வெறி! “வேய், இது உன் அப்பன் காணியா?’’ என்று கேட்டு மிரட்டினார். புதியதாய் ஆராசனை வந்த சுடலைக்கும் ஆவேசம் அடங்கிப் போயிற்று.
ஆறாவது பொருள், காணி என்றால் ஒரு மஞ்சாடி எடை. துல்லியமாகச் சொன்னால் மஞ்சாடி எடையின் 1/40 அளவுள்ள நிறை.
காணி என்ற சொல் பொன்னாங்காணி எனும் தாவரத்தைக் குறிக்கும் சொல்லுமாகும். ஈர நயப்புள்ள இடத்தில் வளரும் சிறு கீரை வகைத் தாவரம். கொடுப்பை, கையாந்தகரை, வல்லாரை, ஆலங்கீரை, கரிசலாங்கண்ணி போல. எம் சித்தப்பா பாட்டத்துக்குப் பயிர் செய்த பதினெட்டு மரக்கால் விதைப்பாடு வயலின் பெயர் பொன்னாங்காணி வயல்.
காணிக்கடன் என்றால் நிலவரி என்று பொருள். காணிக்காரன் என்று கேள்விப்பட்டிருக்கலாம். முதற்பொருள் பரம்பரையாக வரும் நிலவுடைமைக்காரன். சிறப்புப் பொருள் தென்பாண்டி நாட்டிலுள்ள ஒரு மலைச்சாதி ஆள். அவனைக் காணியாளன் என்றும் வழங்குவர்.
‘ஆற்றிலே ஆயிரம் காணி தானம் பண்ணினாற் போல’ என்பதோர் பழமொழி. மேலும் வசவாகச் சொல்வார்கள், ‘உன்னை அடிச்சுப் போட்டால் பத்து காணிக்கு உரமாகும்’ என. மற்றுமோர் சொலவம், ‘கோணி கோடி கொடுப்பினும் கோணாமல் காணி கொடுப்பது நல்லது’ என்று.
விஞ்ஞானத் தகவல் பெருந்தலைவன் கூகுளாரை உசாவியபோது கிடைத்த செய்திகள் –
- சென்ட் – 40.5 சதுர மீட்டர்
- ஏக்கர் – 100 சென்ட்
- ஹெக்டேர் – 2 ஏக்கர் 47 சென்ட்
- 1 காணி – 1.32 ஏக்கர்
- 1 மனை (கிரௌண்ட்) – 2400 சதுர அடி
இதுவரை நாம் பேசிய சென்ட், ஏக்கர், ஹெக்டேர், குழி, மா, காணி, வேலி இவற்றின் துல்லியம் அதுல்லியம் இவற்றுக்குத் தனிப்பட்ட முறையில் யாம் பொறுப்பல்ல, கணிதத்தில் பட்ட மேற்படிப்பு பயின்றவன் என்றாலும்.
வேலி என்ற சொல்லுக்குப் பன்னிரு பொருள் தருகிறது பேரகராதி.
- Hedge, Fence, முள் கழி முதலியவற்றால் ஆன அரண்.
குறுந்தொகையில், குறிஞ்சித்திணையில், கபிலர் பாடல் –
“வேரல் வேலி வேர்க்கோட் பலவின்
சாரல் நாட!”
என்கிறது. சிறு மூங்கில்களை வேலியாக உடைய, வேரில் பழங்கள் தொங்கும் வேர்ப்பலா நிறைந்த மலைச்சாரல் நாடனே! – என்பது பொருள்.
- Wall. மதில் (பிங்கல நிகண்டு)
- Custedy, Watch, Guard, காவல் (பிங்கல நிகண்டு)
- Land, நிலம் (பிங்கல நிகண்டு)
- Field, வயல் (பிங்கல நிகண்டு)
- Land Measure, 6.74 ஏக்கர். ஒரு நில அளவு.
- Cow shed, பசுக்கொட்டில் (பிங்கல நிகண்டு)
- Village, ஊர் (பிங்கல நிகண்டு)
- வேலிப் பருத்தி (மூலிகை அகராதி)
- முள் இலவு
- Sound, ஓசை
- Wind, வளி, காற்று, வாயு
ஆகவே குழி, மா, காணி, வேலி என்பன நில அளவைகளாக இருந்தன முற்காலத்தில் என்று அறிகிறோம். அவற்றிற்கான சரியான இன்றைய மாற்று அளவைகள் என்ன என்பதை அறிந்தவர் பகருங்கள். எதிர்காலத்தில் எம் மயக்கம் ஒழியும்.
எம் பிரதேசத்தில் இவ்வகை நில அளவைகள் என்றும் கணக்கில் இருந்ததில்லை. நிலப்பரப்பைக் குறிக்க, ஒரு கோட்டை விதைப்பாடு என்றனர். அதாவது ஒரு கோட்டை விதைநெல் விதைக்கப்படும் நிலப்பரப்பு. ஒரு கோட்டை என்பது இருபத்தோரு மரக்கால். ஒரு கோட்டை விதைப்பாடு எனில் அது பின்னர் ஒரு ஏக்கர் எனப்பட்டது. சம்மந்தப்பட்ட சில அளவைகள்:
குறுணி – ஒரு மரக்கால்
பதக்கு – இரு மரக்கால்
முக்குறுணி – மூன்று மரக்கால்
மேலும் கால் கோட்டை, அரைக்கோட்டை, முக்கால் கோட்டை எனும் அளவீடுகளும் இருந்தன. குறுக்கம், துண்டம், தளை என்பன சிறு துண்டு நிலங்களைக் குறித்த பொதுச் சொற்கள்.
பாரதி கேட்ட காணி நிலம் கணக்குக்கு மடங்கினால் ஒரு காணி என்பது 1.32 ஏக்கர் / 24 மனை (கிரௌண்ட்) / 1/5 வேலி / 4 மா / 57,499 சதுர அடி எனப் பற்பல தகவல்கள். நன்றே செய்வாய் பிழை செய்வாய் நானே இதற்கு நாயகமே!
பொதுவாகக் காணி என்பதை 1.32 ஏக்கர் என்று கொண்டாலும், அவன் வாழ்ந்த 1882-1921 காலகட்டத்தில் அதன் மதிப்பு என்ன இருந்திருக்கும்? இன்றைய கோவை, சென்னை, திருச்சி, மதுரை மாநகரங்களின் பிளாட் விலையோடு ஒப்பிட்டு அங்காந்து நின்று காரியம் உண்டா?
பராசக்தியிடம் பாரதி கேட்டது காணி நிலம். குழி, மா, காணி, வேலி, ஏக்கர், ஹெக்டேர் கணக்கை எல்லாம் கைமாற்றி வைத்துவிட்டு, சிறு துண்டு நிலம் என்றே பொருள் கொள்ளலாம் நாம். பசிபிக் மகா சமுத்திரத்தில் 543 ஏக்கர் விஸ்தீரணம் உள்ள தீவும், தீவிலிருந்து நிலத்துக்கு வர விசைப்படகும், தனி விமானமும், கூட்டுக்களி கூர்ந்திட, கணிகை/பரத்தை/விலைமகள்/விலைமுலையாட்டி/பொருட்பெண்டிர்/வைப்பாட்டி/கூத்தியார்/சின்னவீடு/ பொதுமகள்/ பாலியல் தொழிலாளி என்போர் கேட்டானா? மலைத்தோட்டமும் மத்தியில் மாளிகையும் கோரினானா? கடற்கரையோரம் காலில் அலையடிக்கும் பங்களா விரும்பினானா? நீச்சல் குளமும் நெய்தல் நிலத் தோட்டமும் கேட்டு விண்ணப்பித்தானா? ஊட்டியில், கொடைக்கானலில், ஏற்காட்டில் அறுபது குளிர்சாதன படுக்கை அறைகளும், வேட்டையாடக் காடும் கொண்ட வனவிடுதி வேண்டினானா? பாண்டிச்சேரியிலோ, கன்னியாகுமரியிலோ, மாமல்லபுரத்திலோ உணவு விடுதியும் மதுக்கூடமும் தங்கும் முறிகளும் கொண்ட நவீன சொகுசு கெஸ்ட் ஹவுஸ் உவந்தானா? சொந்த மதுக்கூடத்தில் ஸ்காட்ச், க்ளென்லெவிட், க்ளென் ஃபிடிஷ், ஜேக் டேனியல் போன்ற சிங்கிள் மால்ட் மதுக்குப்பிகள் டஜன் கணக்கில் நிரப்பித்தர இச்சை உற்றானா?
அற்பமான, எளிமையான காணி நிலம் கேட்டான். பத்துப் பன்னிரண்டு தென்னை மரங்கள் கேட்டான். உடனே தென்னங்கள் இறக்கத் திட்டமிட்டானா என குறுக்குச்சால் அடிக்காதீர்! அதற்கு அரசு அனுமதி எதிர்காலத்தில் இருக்காது என்பதனை ஊகித்து உணர்ந்திருப்பான்.
சரஸ்வதி சன்மான், ஞானபீடம், சாகித்திய அகாடமி போன்ற விருதுகளுக்கு ஒப்பான எதற்கும் விண்ணப்பம் அனுப்பவில்லை. புரஸ்கார், திரஸ்கார், பிரஸ்கார், சுரஸ்கார், பரிஷ்கார் போன்ற விருதுகள் நடைமுறைக்கு வந்திருக்கவில்லை. அதுபோன்றே புண்டரீக ஸ்ரீ, புண்டரீக பூஷண், புண்டரீக விபூஷன், புண்டரீக ரத்னா எனப்படுபவையும்! அவையாவும் சினிமாக்காரர்களுக்கானவை என தெரிந்திருக்கவும் வாய்ப்பில்லை. பாவாணர் விருது, வை.மு.கோ. விருது, பவணந்தியார் விருது, மணிமொழி விருது போன்றவை அன்று நடைமுறையில் இல்லை. இருந்திருந்தாலும் நிரப்பப்பட்ட விண்ணப்பப் படிவத்துடன், ஆளுங்கட்சிப் பிரமுகர்களின் பரிந்துரைக் கடிதம் இணைத்து வரிசையில் கால் கடுக்க நிற்கும் சாமர்த்தியமும் அவனுக்கு இல்லை.
அவனது கோரிக்கை தொழிலதிபர்களிடம், வாணிபச் செம்மல்களிடம், ஏற்றுமதி – இறக்குமதி செல்வரிடம், மணல் – கனிமம் – மரம் கொள்ளையரிடம், மது ஆலை உடைமையாளர்களிடம், அரசு ஒப்பந்தப் புள்ளிக்காரருடன், அரசியல் சமூக ஆன்மீகத் தலைவர்களிடம் இல்லை. இல்லவே இல்லை. அன்னை பராசக்தியிடம் வேண்டினான் – அற்பமான காணிநிலம். கொடுத்தாளா பராசக்தி?
“வஞ்சனை இன்றிப் பகையின்றிச் சூதின்றி
வையக மாந்தரெல்லாம்
தஞ்சம் என்றே உரைப்பீர் சக்திஓம் சக்திஓம்
சக்திஓம் சக்திஓம்”
என்று நம்பித்தானே பாடினான்!
காணி நிலமென்ன, ஒரு கண்டத்தையே வாங்கும் அளவுக்கு புன்செல்வம் சேர்க்கும் பதவிகள் வருங்காலத்தில் வர இருப்பதை அவளே அறிந்திருக்க மாட்டாள்! என்றாலும் அவள் என்ன படத்துக்கு நானூறு கோடிப் பணம் வரிவிதிப்பின்றி ஊதியமாக வாங்கும் சினிமாக் கதாநாயகன் உத்தியோகமா கேட்டான்? அல்லது படத்துக்கு தொண்ணூறு கோடிப் பணம் சம்பளம் வாங்கும் நடிகையை வைப்பாட்டியாக வைத்துக்கொள்ளும் உரிமை கேட்டானா?
சந்தனமர, செம்மரக் கூட்டங்கள் கொண்ட வனமாக, தாதுப்பொருள் திரண்ட மலையாக, மணலாக, மது உற்பத்தி ஆலையாக அவனுக்கு எதுவும் தந்திருக்க வேண்டாம். காணி நிலம் கூட அருளியிருக்க வேண்டாம். முப்பத்தொன்று வயதில் அவன் வாழ்நாளை முடிக்காமல் இருந்திருக்கலாம்!
பொது ஆண்டுக்கு முன் நான்காம் நூற்றாண்டில், வான்மீகி எழுதிய இராமாயணத்தை, இந்திய மொழிகளில் முதன் முறையாகத் தமிழுக்குக் கொணர்ந்து சேர்த்தான் கம்பன், பத்தாம் நூற்றாண்டில். அஃதேபோல் வியாச பாரதமும் தமிழுக்கு வந்திருக்க வேண்டும்.
கடைச்சங்ககாலப் புலவர் பெருந்தேவனார் என்பவர் பாரதம் பாடினார். ஆனால் பழைய உரைகளில் மேற்கோளாகக் காட்டப்பெற்ற சில பாடல்கள் தவிர வேறேதும் இன்று நம் சேமிப்பில் இல்லை.
ஒன்பதாம் நூற்றாண்டில், மூன்றாம் நந்திவர்மன் காலத்தில், வேறொரு பெருந்தேவனார் மகாபாரதம் பாடியிருக்கிறார். வெண்பாவில் அமைந்த இதிகாசம் என்பதனால் அது ‘பாரத வெண்பா’ எனக் குறிப்பிடப் பெற்றுள்ளது. அதன் சில பகுதிகளே தற்போது கிடைக்கிறதாம்.
பதின்மூன்றாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், அருணிலை விசாகன் என்பவர் இனிய செந்தமிழில் பாரதத்தைப் படைத்து அளித்தார் என்று ‘திருவாலங்காட்டு சாசனம்’ குறித்துள்ளது என்பார்கள். அந்நூலும் வழக்கொழிந்தது. இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு, நல்லாப்பிள்ளை என்பவர் நல்லாப்பிள்ளை பாரதம் எனும் நூல் படைத்தளித்துள்ளார்.
வில்லிபுத்தூரார் பாரதம் எளிய நடை என்றாலும் வடமொழிக் கலப்பு அதிகம். வியாச பாரதத்தை முதன் நூலாகக் கொண்டது அது. வில்லியின் மதம் – வைணவம், இனம் – அந்தணர். நாடு – நடுநாடு எனப்படும் திருமுனைப்பாடி நாட்டின் சனியூர், காலம் – பதினான்காம் நூற்றாண்டின் இடைப்பகுதி. வியாசன் பாடிய பதினெட்டு பருவங்களில் முதல் பத்து பருவங்களே வில்லி பாடியுள்ளார். 10 பருவங்கள், 49 சருக்கங்கள், 4351 பாடல்கள் என்பது கணக்கு.
பாரதி ‘பாஞ்சாலி சபதம்’ எனும் தலைப்பில், இரண்டு பாகங்களாக ஐந்து சருக்கங்களே எழுதினான். சருக்கம் என்பது பருவம் என்பதன் உட்பிரிவு. காண்டம் – படலம் அல்லது காண்டம் – காதை என்பது போல. பாரதி எழுதியது பாஞ்சாலி சபதத்தில் மொத்தம் 413 பாடல்களே.
ஆயுள் இருந்திருந்தால், கம்பன் ஆறு காண்டங்களும், 118 படலங்களும், 10368 பாடல்களும் கம்ப இராமாயணமாகப் பாடியதைப்போல, பாரதியும் 18 பர்வங்களையும் பாடியிருப்பான்.
சபதச் சருக்கத்தில் வில்லியின் பாடலையும், பாரதியின் பாடலையும் ஒரு ஒப்பீட்டுக்காகக் கீழே தருவேன்.
வில்லிபுத்தூராரின் இரண்டாவது சபா பருவத்தில், சூது போர்ச் சருக்கத்தில், திரௌபதியின் சபதப் பாடல்:
“அரசவையில் எனை ஏற்றி அஞ்சாமல் துகில் தீண்டி
அளகம் தீண்டி
விரைசெய் அளி இளம்படி தார் வேந்தர் எதிர்
தகாதனவே விளம்புவோரைப்
பொரு சமரில் முடி துணித்துப் புலால் நாறு
வெங்குருதி பொழிய வெற்றி
முரசறையும் பொழுதல்லால் விரிந்த குழல்
இனி எடுத்து முடியேன் என்றாள்”
என்று முடியும்.
அதே சந்தர்ப்பத்தில் பாரதியின் பாஞ்சாலி சபதப் பாடல்:
“தேவி திரௌபதி சொல்வாள் – ‘ஓம்
தேவி பராசக்தி ஆணை உரைத்தேன்:
பாவி துச்சாதனன் செந்நீர்; – அந்தப்
பாழ்த் துரியோதனன் ஆக்கை இரத்தம்,
மேவி இரண்டும் கலந்து – குழல்
மீதினில் பூசி நறுநெய் குளித்தே
சீவிக் குழல் முடிப்பேன் யான் – இது
செய்யும் முன்னே முடியேன்’ என்றுரைத்தாள்”
ஒரே சூழலில், சந்தர்ப்பத்தில், முகாந்திரத்தில் அமைந்த இரண்டு பாடல்களையும் கவனியுங்கள். முதற்பாடல் எழுதப்பட்டது 14-ம் நூற்றாண்டின் இடைப்பகுதியில். இரண்டாவது பாடல் 1912-ல், பாரதியின் முப்பதாவது வயதில்.
யாவர்க்கும் மூலம் வேத வியாசனின் பாரதம். அவருடைய காலம் பொது ஆண்டுக்கு முன் 1500 முதல் 1000 வரை என்பர் வரலாற்றறிஞர். வியாசன் எழுதியது 18 பருவங்களும் உதிரியாகச் சில சருக்கங்களும்.
‘பெட்டைப் புலம்பல்’ எனும் சொல்லாட்சியை கையாண்டான் பாரதி, பாஞ்சாலி சபதத்தில். சபதச் சருக்கத்தில் பாடுவான் –
“நெட்டை மரங்கள் என நின்று புலம்பினார்
பெட்டைப் புலம்பல் பிறர்க்குத் துணையாமோ?”
என்று.
‘பேய் அரசு செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள்’ என்ற புகழ்பெற்ற பாடல் வரி அவனது.
“தருமத்தின் வாழ்வதனைச் சூது கவ்வும்;
தருமம் மறுபடியும் வெல்லும்”
என்பதுவும் அவனது தடுமாற்றம் இல்லாத நம்பிக்கையின் வெளிப்பாடு. அந்த நம்பிக்கையில்தான் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். மேற்சொன்ன எடுத்துக்காட்டுகள் யாவுமே பாஞ்சாலி சபதத்தின் வரிகள்.
இவை யாவும் விரிவாகப் பேச முற்படுவதன் காரணம், பாரதிக்குக் காணிநிலம் அருளப் பெற்றிருந்தால், தாரித்திரியம் களையப்பட்டிருந்தால், நல்ல உடல்நலம் வாய்க்கப் பெற்றிருந்தால், அவன் 39-வது வயதில் வான்வழிச் செலவு மேற்கொண்டிருக்க மாட்டான் அல்லவா?
ஊரான் முதலைக் கொள்ளை அடிக்கிறவன், அடுத்தவன் குடியைக் கெடுக்கிறவன், பிறன் மனைவியை அபகரித்தவன், கொலைக்கும் வன்புணர்வுக்கும் அஞ்சாதவன், சட்டம் நீதி போன்றவை தனது மெய்க்காப்புக்கு என்று நினைப்பவன், மக்களாட்சியைத் தம் மக்களாட்சி எனக் கொள்பவன், உணவில் கலப்படம் செய்து ஆன்மீகத் தேடல் நடத்துகிறவன், 22 காரட் தங்கத்துக்கு செய்கூலியும் சேதாரமும் வாங்கிக்கொண்டு 18 காரட்டாக மாற்றி விற்பவன், கூட்டிக் கொடுப்பவன், காட்டிக் கொடுப்பவன், எழுத்தாளன் உழைப்பைச் சுரண்டிக் கோலாகலமாகக் கொழிப்பவன், அபின் கஞ்சா தங்கம் கடத்துகிறவன், பெண் தரகு – அரசியல் பேரம் – பொதுச்சொத்து கபளீகரம் செய்கிறவன், ஆன்மீகம் பேசி வாயை வாடகைக்கு விடும் அற்பன், கூலிக்குக் கொள்கை விற்கும் கூட்டுக் களவாணி, சுத்தப்படுத்தி பருத்தி நூலாடை என விளம்பரம் செய்து அதில் முப்பது சதமானம் விஸ்கோஸ் கலப்படம் செய்யும் அறநெறிக் காவலன், புதைக்கக் கொடுத்த பிள்ளையில் பாதிப்பிள்ளை அறுத்தெடுப்பவன் முதலாய இழிந்த பிறப்புக்களுக்கு எல்லாம் தொண்ணூறுக்கும் மேல் ஆயுளும், காலாட்டிக் கொண்டு அமர்ந்திருக்கும் ஆரோக்கியமும், செல்லும் செலவுக்குக் காசும், எடுபிடி, ஆள் அம்பு சேனையும், அறுசுவை உண்டியும், இறக்குமதி மதுவினங்களும், ஆடம்பரமான ஆடைகளும் ஆபரணங்களும், உல்லாச ஊர்திகளும் அருளும் பராசக்தி – உலகநாயகி பாரதிக்கு யாவுமே மறுத்த வஞ்சகத்தின் பொருள் என்ன?
அவன் மீது அவளுக்கேன் காழ்ப்பு, ஒவ்வாமை, பகை, அழுக்காறு, அலட்சியம்? காணி நிலம் கேட்டதாலா? ஊரை அடித்து உலையில் போட்டவர்களும்தானே கேட்கிறார்கள்? காணிநிலம் என்பது மூன்று லட்சம் கோடிப்பணமா? ஒருவேளை நல்லவர் அல்லாதவருக்குத்தான் கேட்டதெல்லாம் தருவாளோ?
நலமுடன் வாழ்ந்திருந்தால் ஒருவேளை அவன் வியாச பாரதத்தின் பதினெட்டுப் பருவங்களையும் கவிதையாகத் தமிழுக்குச் செதுக்கித் தந்திருப்பான்.
சொல்லடி சிவசக்தி, அவனைச் சுடர்மிகும் அறிவுடன் ஏன் படைத்தாய்?
Discover more from சொல்வனம் | இதழ் 365 | 26 ஏப். 2026
Subscribe to get the latest posts sent to your email.

நெகிழ்ந்து போனேன். பொழிந்து விட்டீர்கள் சொல்மாரி. இதைவிட என்ன வேண்டும். மகிழ்ச்சி நாஞ்சில் நாடன் அவர்களே.
வெறும் ‘காணி நிலம்’ என்று சொல்லி வைத்து பாரதியின் மொத்த வாழ்க்கையையேஅற்புதமான கட்டுரையாக எழுதித்தந்து விட்டார் நாஞ்சில்நாடன்!
கட்டுரையை முடிக்கும் போது ஒரு கவலை எழாமல் இல்லை: நாஞ்சில் நாடனுக்காவது பராசக்தி காணிநிலம் கொடுத்தாளா?
ஓர் ஆராய்ச்சிக் கட்டுரையை வாசித்தது போல் உணர்ந்தேன். நன்றி ஐயா🙏
I have tears in my eyes after reading this.
Fantabulous Sir