கீடம் எனுமொரு சொல் நமது புழங்கு மொழியில் உண்டா? நாம் அர்த்தப்படுத்துவது கிரீடம் அல்ல, கீடம். கிரீடம் எனில் மணிமுடி. அன்று மன்னர் – வேந்தர் – அரசர் – கோன் தரித்திருந்தனர். இன்று மக்களால் மக்களுக்காக மக்களே தேர்ந்து எடுக்கப்பட்ட தலைவர்களும் அவர்தம் மக்களும் தரித்திருக்கிறார்கள். மக்களாட்சியை நிர்மாணித்த மாமேதைகள் தியாகிகள் போராளிகள் தோற்கடிக்கப்பட்ட நிலை அது.
பத்திருபது ஆண்டுகள் அறிவேன் கீடம் எனுமிந்தச் சொல்லை. ஆனால் எனது ஐம்பதுக்கு மேற்பட்ட நூல்களில், தோராயமாக இருபதினாயிரத்துக்கும் குறைவில்லாத பக்கங்களில் எவ்விடத்தும் கீடம் எனும் சொல்லை ஆண்டதில்லை. அதுபோன்றே ஓர்மையில் இருந்து எழுதினால், பொருள் தெரிந்த சொற்களாக இருந்தாலும், அமர்க்களம், அசூசை, அசடு, அமோகம், அலப்பறை, அட்டகாசம், கண்றாவி., காத்திரம். தகிடுதத்தம் முதலிய சொற்களையும் யாண்டும் ஆண்டதில்லை. ஆனால் பலரும் அறிந்திராத சட்டம்பி, தெம்மாடி, கசவாளி, கோமரத்தாடி, வைப்புக்காரர் போன்ற பல சொற்களைக் கையாண்டிருக்கிறேன். கயமை, கயவன் போன்ற சொற்களின் பிறப்பு கயவாளி. வழக்கில் அது கசவாளி ஆயிற்று. ஆறு குறள்களில் திருவள்ளுவர் கயவர் எனும் சொல் கையாள்கிறார். ‘மக்களே போல்வர் கயவர்’ என்கிறார். ‘நன்றறி வாரிற் கயவர் திருவுடையர்’ என்பார். ‘தேவர் அனையர் கயவர்’ என்றார். ‘அறை பறை அன்னவர் கயவர்’ என்பார். ‘ஈர்ங்கை விதிரார் கயவர்’ என்பார். ‘எற்றிற் குரியர் கயவர்’ என்கிறார். யாவுமே கயமை அதிகாரத்துக் குறட்பாக்கள். பாக்களின் எண்கள் முறையே 1071, 1072, 1073, 1076, 1077, 1080 தேடிக் கண்டடையுங்கள் பொருளை.
ஆசான் எனும் சொல் எம் பகுதியில் ஆயான் என வழங்கப்படுகிறது. அது மலையாளம் என உரைப்பவர் மூலத்தைத் தேடிப் பயணமாகுங்கள். நான் பேசுவது உள்மூலம் வெளிமூலம் நோய்களை அல்ல. கந்தமூலம் எனும் வேர் மூலத்தை. பரிபாடலில் திருமாலைப் பாடும் கீரந்தையார் பாடல், ‘கேள்வியுள் கிளந்த ஆசான் உ ரையும்’ என்று நீள்கிறது.
ஆசானைத் தொடர்ந்து சங்க இலக்கியம் பயன்படுத்தும் சொற்கள் ஆசிரியர், ஆசினி, ஆசு, ஆசை என்பன.
ஆசான் எனும் சொல்லின் பொருள் உபாத்தியாயன், புரோகிதன், மூத்தோன், வியாழன் (பிங்கல நிகண்டு), அருகன் (சூடாமணி நிகண்டு), முருகக் கடவுள் (பிங்கல நிகண்டு), பாலை யாழியின் திறன் வகை (பிங்கல நிகண்டு).
ஆசானைத் தேடி அகராதிகளுக்குள் அலைந்தபோது அறிந்த விடயம், ஆசானின் பெண்பாற் சொல் ஆசாள் என்பது, ஆசாள் எனில் குருபத்தினி, தலைவி என்றும் திவாகர நிகண்டு பொருள் தருகிறது.
ஆசினி எனும் சொல்லைப் புறநானூறு ஆண்டுள்ளது. ஈரப்பலா என்று பொருள் தந்துள்ளனர் உரையாசிரியர்கள். நாஞ்சில் நாட்டிலும் கேரளத்திலும் ஆசினிப்பலாவை ஆயினிப்பலா, ஆயினிச்சக்கை என்போம். மரவைரம், மரவுரி என ஆசினிக்குப் பொருள் தருகிறது சூடாமணி நிகண்டு. ஆகாயம் என்று பொருள் சொல்கிறது பிங்கலம்.
ஆசு எனும் சொல்லுக்குப் பல பொருள்கள். குற்றம் என்பது முதற்பொருள். தெரிந்து தெளிதல் அதிகாரத்துத் திருக்குறள் உரைக்கும்:
‘அரிய கற்று ஆசற்றார் கண்ணும் தெரியுங்கால்
இன்மை அரிதே வெளிறு’
என்று. மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணர் உரை சொல்கிறார் – அரிய கற்று ஆசு அற்றார் கண்ணும் = அரும் பொருள் கூறும் சிறந்த நூல்களைக் கற்று ஐவகையும் அறுவகையுமாகிய குற்றங்கள் நீங்கியவரிடத்தும்;
தெரியுங்கால் வெளிறு இன்மை அரிதே = நுட்பமாக ஆராயுமிடத்து அறியாமை அல்லது குற்றம் அறவுமில்லாமை காண்பது அரிதே.
ஆசு எனும் சொல்லின் அடுத்த பொருள் – ஆணவ மலம். மூன்றாவது பொருள் – அற்பம் (திவாகர நிகண்டு). நான்காவது பொருள் – நுட்பம். சிலப்பதிகாரம் பயன்படுத்தியுள்ளது. இப்பொருளில். ஐயம் என்பதுவும் துன்பம் என்பதுவும் மேலும் இரு பொருள்கள். பற்றுக்கோடு எனும் பொருளில் புறநானூறு ஆள்கிறது. வாளின் கைப்பிடி என்றும் ஒரு பொருள். கவசம் என்று பொருள் தருகிறது திவாகர நிகண்டு. கைக்கவசம், பற்றாசு என்பன மேலும் இரு பொருள்கள். இலக்கண அசைச் சொல்லும் ஆசு எனப்படும். எதுகைக்கு இடையில் வரும் ய், ர், ல், ழ் எனும் ஒற்றுக்கள் ஆசு எனப்படும். நூல் இழைக்கும் கருவிகளில் ஒன்று ஆசு எனப்பட்டது. இலக்கு, விரைவு என்றும் பொருள்கள் உண்டு. ஆசு என்றால் ஆசுகவி என்கிறது பிங்கல நிகண்டு.
ஆசு எனும் புனை பெயரில் எழுதும் ஒரு படைப்பாளியுண்டு. இயற்பெயர் ஆ. சுப்பிரமணியன். 1961-ல் பிறந்தவர். ‘செல்லி’ எனும் தலைப்பில் அவரது 46 சிறுகதைகள் ஐநூறு பக்க அளவில் தொகுப்பாக வந்துள்ளது.
ஆசு எனும் சொல்லுக்கு முதற்பொருள் குற்றம் எனில் மாசு எனும் சொல்லுக்கும் காசு எனும் சொல்லுக்கும் அதுவே பொருள். ‘மாசறு பொன்னே’ என்பார் இளங்கோவடிகள். ‘காசில் கொற்றம்’ என்பார் கம்பன். ‘வெண்கோயில் மாசு ஊட்டும்’ என்கிறது பட்டினப்பாலை. வெண்மையான அரண்மனை அழுக்கேறும் என்பது பொருள்.
கயவாளி எனும் சொல் பழையதோர் சம்பவத்தை நினைவுபடுத்துகிறது. ஏற்கனவே எங்கோ குறிப்பிட்டிருப்பேன். கூறியது கூறல் இலக்கியக் குற்றங்களில் ஒன்றெனக் கொள்ளப்படும் என்றாலும் கடந்து சென்று மறுபடியும் பேசுவேன். கால் நூற்றாண்டுக்கு முன்பு மதுரையில் நடந்த ஒரு நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்றேன். விழாத் தலைமை கவிஞர் அபி. எனது உரையில் படைப்பாளி என்றோர் சொல்லைப் பயன்படுத்தினேன். அச்சொல் எனது கண்டுபிடிப்பல்ல. சிறப்புரை பேராசிரியரும், அனைத்துலகப் புகர்பெற்ற பட்டிமன்றத் தொழிலதிபரும் ஆன ஒருவர். படைப்பாளி எனும் சொல்லைப் பயன்படுத்தியதற்காக, அவர் பேச்சில் என்னை நையாண்டி செய்தார். நையாண்டி என்றால் பகடி, இளக்காரம், ஏகடியம், ஏளனம், எள்ளல். மலையாளத்தில் சொன்னால் – களியாக்கி.
விழாத்தலைவரின் பக்கத்து இருக்கை எனக்கு. காதோடு காதாய் அவரிடம் கோரிக்கை ஒன்று வைத்தேன். சிறப்புரை முடிந்தபின் எனக்கு ஒரு நிமிடம் பேச அனுமதி வேண்டும் என. கலவரமாகி விடலாம் எனக்கருதிய அவர், செய்தியைக் கூறும்படியும் தானே அதை நேர்செய்து விடுவதாயும் சொன்னார். நான் சொன்னேன் பட்டிமன்றத் தொழிலதிபர் என்னைக் கிண்டல் செய்கிறார், படைப்பாளி பெண்பாலா என்று! எனில் உழைப்பாளி, இரப்பாளி, செலவாளி, சீக்காளி, கூட்டாளி, வயசாளி, கொலையாளி, கயவாளி யாவுமே பெண்பாற் சொற்களா? கவிஞர் அபி கண்ணியமாகக் கையாண்டார் அதை.
கொங்கு நாட்டில் போக்காளி என்றொரு சொல்லுண்டு. நாஞ்சில் நாட்டில் சேக்காளி, நெசவாளி, கசவாளி… – கல்லுக்கும் மண்ணுக்கும் மூத்த குடி, குலசாமியாகத் திருவள்ளுவனைக் கொண்டாடும் இனம், தமிழைப் பழித்தவனைத் தாய் தடுத்தாலும் விடேன் என வெஞ்சினம் உரைக்கும் குலம், தமிழுக்கு இழுக்கு என்றால் முண்டிதம் செய்யும் தீக்குளிக்கும் மண்சோறு தின்னும் கூட்டம். இதுபோன்ற மொழிச் செம்மல்களுக்குத்தானே கரவொலி எழுப்புகிறார்கள், சிரக்கம்பம் செய்கிறார்கள்?
அப்பம் தின்பதை விலக்கி நிறுத்திவிட்டு நான் குழி எண்ணிக் கொண்டிருக்கிறேன். கீடம் எனும் சொல்லுக்கு மீள்வோம்!
கீடம் எனும் சொல் எமக்கு அறிமுகமானது மாணிக்கவாசகர் மூலம். அவர் என்ன ம, மா. கி.கீ. பெ. பே. ஙெ. ஙே முன்னேற்றக் கழகத் தலைவரா எனக் கேட்க மாட்டீர்கள்தானே! நாம் பேசுவது திருவாசகமும் திருக்கோவையாரும் படைத்தளித்த மாணிக்கவாசகரை! திருவாசகம் நூலில் இருக்கும் 656 பாடல்களில், இரண்டு பாடல்களில் அவர் கீடம் எனும் சொல் பயன்படுத்துகிறார். முதலாவது பாடல் சிவபெருமானின் தூல சூக்குமத்தை வியந்து பாடும் ‘திருவண்டப் பகுதி’யில். திருவண்டப் பகுதி என்பது 182 அடிகள் கொண்ட பாடல். அதில் 18-வது வரியில் கீடம் எனும் சொல் வரும். அடுத்து திருவாசகத்தில் எட்டாவது பகுப்பான ‘திருவம்மானை’ பகுதியில் ஆனந்தக் களிப்பில் பாடும்போது ‘கீடம்’ பெய்யப் பெற்றுள்ளது.
‘திருவம்மானை’யின் 14-வது பாடல், மொத்தத் திருவாசகத்தின் 188-வது பாடல் முழுதினையும் காணலாம்.
“ஆனையாய்க் கீடமாய் மானுடராய்த் தேவராய்
ஏனைய பிறவாய்ப் பிறந்து இறந்து எய்ந்தேனை
ஊனையும் நின்று உருக்கி என் வினையை ஓட்டுகந்து
தேனையும் பாலையும் கன்னலையும் ஏத்து இனிய
கோனவன் போல் வந்து என்னைத் தன்தொழும்பில் கொண்டருளும்
வானவன் பூங்கழலே பாடுதும் காண் அம்மானாய்”
பாடல் பெற்ற தலம் – தலம் என்ற சொல் உவப்பில்லை எனில் ஸ்தலம் – திருவண்ணாமலை. பாவினம் ஆறடித் தரவு கொச்சகக் கலிப்பா. “அப்படீன்னா என்ன?” என்று கேட்பீர்களே ஆனால் அரசின் அங்கீகாரம் பெற்ற அகவை முதிர்ந்த தமிழறிஞர் ஆயிரம் பேரில் எவரிடமாவது ஆற்றுப்படுத்துவேன்.
திருவாசகத்துக்கு என் கைவசம் நான்கைந்து உரைகள் உண்டு. யாவுமே அருமையான உரைகள். கற்றாரைக் கற்றார்தாமே காமுறுவர்! அவற்றுள் ஒன்று கா. சுப்பிரமணிய பிள்ளை உரை. எடசேரி கோவிந்தன் நாயர் எனும் பெயரின் நாயரையும், விஷ்ணு சக்காராம் காண்டேகர் எனும் பெயரின் காண்டேகரையும் தாரா சங்கர் பானர்ஜி எனும் பெயரின் பானர்ஜியையும் களையும்போது நாம் கா. சுப்பிரமணிய பிள்ளை எனும் பெயரின் பிள்ளையையும் களைய முனையலாம்.
முதன் முதலில் எம்.எல். பட்டம் (Master of Law) பெற்றவர் என்பதனால் அவரை எம்.எல். பிள்ளை என்றனர். சுருக்கமாக கா.சு. பிள்ளை என்றும் குறிப்பதுண்டு. 1953-ல் அவர் எழுதிய திருவாசக உரை, சென்னை இரத்தின நாயகர் சன்ஸ் எனும் நிறுவனத்தால் பதிப்பிக்கப் பெற்றது.
மற்றுமோர் சிறப்பான திருவாசக உரை, நீ. கந்தசாமி பிள்ளை எழுதியது. இவர் தஞ்சாவூர் பள்ளி அக்கிரகாரம் ஊரைச் சார்ந்தவர். முதற்பதிப்பு 1964-ல், அண்ணாமலைப் பல்கலைக்கழக வெளியீடு. அந்தப் பதிப்புக்கு முன்னுரை எழுதியவர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத் துணைவேந்தராக இருந்த C.P. ராமஸ்வாமி ஐயர். இவர் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் திவானாக இருந்தவர்.
பல்கலைக்கழகத் துணைவேந்தர் பதவியின் இன்றைய சந்தை மதிப்பு ஐம்பது கோடி என்கின்றன ஊடகங்கள். அன்று தகுதி ஒன்றே அடிப்படை. என் கைவசம் இருக்கும் நீ. கந்தசாமி பிள்ளையின் திருவாசக உரை திருப்பனந்தாள் அறக்கட்டளை வெளியீடு, 1984. அன்று அதன் விலை ரூபாய் முப்பது. அதை நான் விலை கொடுத்து வாங்கவில்லை. எமது நெருங்கிய நண்பர், மதுரை வைத்தியநாத ஐயரின் தம்பியின் கொள்ளுப்பேரன், எஸ். வைத்தியநாதன் அன்பளிப்பாகத் தந்தார். அவர்தான் என்னை அசோகமித்திரன், அம்பை, ஆத்மாநாம், ஞானக்கூத்தன், சா. கந்தசாமி, ராஜகோபாலன், ஸ்டெல்லா புரூஸ், அழகிய சிங்கர் ஆகியோருக்கு சென்னையில் அறிமுகம் செய்தவர். நாங்கள் முதன்முதலில் சந்தித்தது பம்பாய் ரே ரோடு ரயில் நிலையம் அருகிலிருந்த ஓல்டு அட்லஸ் மில்ஸ் காம்பவுண்டில் இருந்த எனது தொழிற்சாலையின் ஸ்டோர்ஸ் பிரிவில், 1975-ம் ஆண்டில். ‘மாவடு வகிர் அன்ன கண்ணி பங்கன்’ அருளன்றி வேறென்ன?
திருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்தவர் ஜி.யு. போப் அவர்கள்.
திருவாசகத்திற்கான மற்றுமோர் உரை என்னிடம் இருப்பது ஸ்ரீ சித்தர் ஞான பாடசாலை வெளியீடு. உரையாசிரியர் திரு. சி.சு. கண்ணாயிரம். முதற்பதிப்பு 2000. அவரது மக்கள் C.K. சுப்பிரமணியம், C.K. கந்தசாமி இருவரும் எமது ஆத்மார்த்தமான நண்பர்கள். சேக்கிழாரின் திருத்தொண்டர் புராணம் எனப்பட்ட பெரிய புராணம் உரையாசிரியர் சிவக்கவிமணி C.K. சுப்பிரமணிய முதலியாரின் பேரர்கள்.
இவையன்றியும் கோவை விஜயா பதிப்பகம் 2012-ல் வெளியிட்ட புலவர் வீ. சிவஞானம் உரை எழுதிய திருவாசகம் பதிப்பும் உண்டு எம்மிடம். திரு. மு. வேலாயுதம் அண்ணாச்சி கையெழுத்திட்டு வழங்கியது.
நான்காம் நூற்றாண்டு என்றும் எட்டாம் நூற்றாண்டு என்றும் கால நிர்ணயம் செய்யப்பட்ட மாணிக்கவாசகர் சினிமாக்காரரோ அரசியல் பெருந்தனக்காரரோ இல்லை என்றாலும் அவர் படைத்தளித்த திருவாசகத்துக்குப் பத்துக்கும் மேற்பட்ட உரைகள் எழுதப் பெற்றுள்ளன என்பது பெரிய வியப்பே!
இன்னொரு முக்கியமான உரை, திரவாவடுதுறை ஆதீனம் 1964-ல் வெளியிட்டது. உரையாசிரியர் ஆதீன மகா வித்துவான் ச. தண்டபாணி தேசிகர். அறிவீர் நீவிர் இசையரசு தண்டபாணி தேசிகர் என்றொரு இசை மேதைமை. அவர் நந்தனார் போன்ற திரைப்படங்களில் நடித்தவர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் இசைத்துறைத் தலைவராய்ப் பணியாற்றியவர். எனது பதினாறு – பதினேழு வயதில் சுசீந்திரம் தாணுமாலயசாமி கோயில் திருவிழாவில் அவர் பாடி நான் கேட்டிருக்கிறேன். இரு தண்டபாணி தேசிகர்களும் வெவ்வேறு ஆளுமைகள். எதற்குக் குறிப்பிடுகிறேன் என்றால், சினிமாப் புகழ் என்றால் தமிழனின் குறி இரண்டங்குலம் வளர்ந்து போகும் என்பதனால்.
கா.சு. பிள்ளை உரை என்னிடம் இருப்பது 2014-ம் ஆண்டுப் பதிப்பு.
திருவாவடுதுறை ஆதீன திருவாசக மாநாடு 1964 யூன் மாதம் 22 – 23 தேதிகளில் திருப்பெருந்துறையில் நடந்தபோது வெளியிட்ட திருவாசகப் பதிப்பு உமையொருபாகன் அருளால் எனை வந்து சேர்ந்தது. ஆதீன மகாவித்வான் ச. தண்டபாணி தேசிகர் உரையாசிரியர். பலகாலம் அதற்கு மறு பதிப்பு இல்லை. 1964-ல் அதன் விலை பத்துப் பணம். ஆவுடையார் கோயில் ஸ்ரீ ஆத்மநாத சுவாமி தேவஸ்தான திருப்பணிக்கு உரியது என்ற முத்திரையும் இருந்தது.
1964-ம் ஆண்டு யூன் மாதம் வெளியிடப் பெற்ற நூல் எனில், அப்போதுதான் நான் ஸ்கூல் ஃபைனல் எனப்படும், SSLC, பதினொன்றாவது வகுப்பு தேறி இருந்தேன். தாழக்குடி அரசு உயர்நிலைப் பள்ளியில் முதல் மாணவன். மாவட்டத்தில் இரண்டாம் இடம். பயிற்று மொழி தமிழ். பசியும் பட்டினியுமாகப் பள்ளி வாழ்க்கை. கடந்த காலம். எங்கிருந்து மோசணம் செய்து நான் பத்துப் பணம் சேர்த்திருக்க இயலும்? என்றாலும் மாணிக்கவாசகரும் மகாவித்வான் தண்டபாணி தேசிகரும் நம்மை வந்தடைய முடிவெடுத்திருந்தனர்.
மாணிக்கவாசகரே ‘குழைத்த பத்து’ பகுதியில் ஆத்தும நிவேதனமாகக் கூறுவார் –
“அன்றே என்றன் ஆவியும் உடலும் உடைமை எல்லாமும்
குன்றே அனையாய் என்னை ஆட்கொண்டபோதே கொண்டிலையோ
இன்றோர் இடையூறு எனக்கு உண்டோ எண்தோள் முக்கண் எம்மானே
நன்றே செய்வாய் பிழை செய்வாய் நானோ இதற்கு நாயகமே!”
என்று.
நான் பம்பாய்க்கும் அங்கிருந்து கோவைக்கும் புலம் பெயர்ந்து ஐம்பத்து நான்கு ஆண்டுகள் ஆகிவிட்டன. சொந்த ஊருக்குப் பயணம் போகும்போதெல்லாம் உறவினர் வீடுகளுக்கும் போவதுபோல் நூலகங்களுக்கும் போவேன். அவற்றுள் ஒன்று ஆரல்வாய்மொழி கிளை நூலகம். ஆரல்வாய்மொழி எனும் ஊரைப்பற்றி அறிய விரும்புவோர், புலவர் ஆர். பதுமநாப பிள்ளை எழுதி 1942-ம் ஆண்டில் வெளியிட்ட ஆரல்வாய்மொழி சரிதம் எனும் நூலை வாசிக்கலாம். சில ஆண்டுகளுக்கு முன்பு ‘நாஞ்சில் மலர்’ மூலம் மறுபதிப்புக் கண்டது.
இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நாள் அந்த நூலகத்தினுள் நுழைந்தபோது, அட்டை கிழிந்த பல பழைய நூல்கள் பலவற்றை ஒரு மூலையில் அம்பாரமாகக் குவித்துப் போடப்பட்டிருந்ததைக் கண்ணுற்றேன். பழைய பேப்பர்காரனுக்கு எடைக்குப் போடுவதற்காக. இரும்பு பிடித்தவன் கையும் சிரங்கு வந்தவன் கையும் சும்மா இருக்காது என்பார்கள். பழைய புத்தகங்கள் வாசித்தே சுகம் கண்ட நாம் சும்மா இருப்போமா?
அளைந்து துழாவித் தேடியதில் இரண்டு நூல்கள் கிடைத்தன. அட்டையின்றி, முகப்புப் பக்கங்கள் கசங்கி, கட்டு நைந்து. அவற்றுள் ஒன்று மகாவித்வான் தண்டபாணி தேசிகர் உரை எழுதிய திருவாசகம். பெரிய அளவில் 1500 பக்கங்கள். இன்னொன்று ‘பரணர்’. பெரிய அளவில் 300 பக்கங்களில் சங்கப் புலவன் பரணர் குறித்த ஆய்வு நூல். எழுதியவர் வித்வான் V. வெங்கடராஜுலு ரெட்டியார். சென்னை சர்வகலாசாலை ஓரியண்டல் ரிசர்ச் இன்ஸ்டிட்யூட் தமிழ் ஜுனியர் லெக்சரர். நூலை வெளியிட்டது சென்னைப் பல்கலைக்கழகம், 1933-ம் ஆண்டில்.
சங்க இலக்கிய நூல்கள் புறநானூறு, பதிற்றுப்பத்து, அகநானூறு, நற்றிணை, குறுந்தொகை எனும் தொகை நூல்களில் பரணர் எழுதிய பாடல்கள் மொத்தம் 85. பரணர் வேறு வன்பரணர் வேறு என்பதறிக.
இஃதேபோல் ‘கபிலர்’ என்றொரு நூலுண்டு. பேராசிரியர், தமிழறிஞர் ம.ரா.போ. குருசாமி அவர்கள் எழுதியது. அவர்களை எல்லாம் மறந்துவிட்டு, புறக்கணித்து விட்டு, சொந்த சொத்துக் கணக்குப் பெருக்க ஏதேதோ மாய மனோவசியங்கள் செய்த சில்லறைகளைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம், தமிழ் வளர்த்ததாக. யாவுமே கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழிகள்தாம். அவை பிரியாணிக்கே உகந்தவை.
நூலகத்தில் தேடிப் பற்றிய இரு நூல்களையும், காலிக்கோ கெட்டி அட்டை போட்டுப் பாதுகாக்க வேண்டி எனது நண்பர் வேனில் கிருஷ்ணமூர்த்தியின் ‘நந்தினி அச்சக’த்தில் கொடுத்திருந்தேன். அதனை வாங்கப் போன சந்தர்ப்பத்தில் தற்செயலாக அங்கு வந்து சேர்ந்த பேராசிரியர் கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் அவர்களிடம் அந்நூல்களைக் கர்வத்துடன் காண்பித்தேன். அவர் செல்லமாக என் தோளில் தட்டிக் கொடுத்து அவற்றை வாங்கிப் பார்த்தார். பரணர் புத்தகத்தைப் புரட்டிப் பார்த்தவர், ‘முதல் பக்கத்தில் கையெழுத்துப் போட்டிருப்பது யாரெனத் தெரியுதா?’ என்றார். அதுவரை அதை நான் பொருட்படுத்திப் பார்த்திருக்கவில்லை. சிற்பி சொல்லித்தான் தெரிந்து கொண்டேன். ஆங்கிலத்தில் கே.என். சிவராஜபிள்ளை என்று கையெழுத்தும் 13-செப்டம்பர்-1933 என்று நாளும் இருந்தன.
தமிழ்த் தாத்தா உ.வே. சாமிநாதைய்யர் புறநானூறு நூலுக்கு எழுதிய உரைக்குத் திருத்தங்கள் குறித்து நூலெழுதியவர்.
இந்தத் தகவல்களை எவருக்கேனும் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டுமானால், தகவல் தந்துவிட்டு எப்போது வேண்டுமானாலும் எனதில்லம் வரலாம்.
இரண்டு நூல்களுக்குமாக அன்று கிளை நூலகத்துக்கு நான் பன்னிரண்டு பணம் செலுத்தி இரசீது பெற்றுக் கொண்டேன். அவற்றுள் திருவாசக உரை மறுபதிப்பு அண்மையில் வந்துள்ளது.
இந்த சந்தர்ப்பத்தில் சொந்தத் தகவல் ஒன்று – என் மகள் M.B.B.S. படிப்பு முடிந்து கோவையின் புகழ்பெற்ற மருத்துவமனையில் பணியில் சேர்ந்தார். Intensive Care Unit–ல் பணியாற்றிக் கொண்டே DNB எனும் ஈராண்டு பட்ட மேற்படிப்புக்குத் தயாராகி வந்தார். அவளுடைய Friend, Philasopher & Guide ஆக இருந்தவர் Dr. சுந்தரி. மயக்க மருந்து நிபுணர். அவர் மகாவித்வான் தண்டபாணி தேசிகர் அவர்களின் மகள் வயிற்றுப் பேத்தி. எங்கள் வீட்டுக்கு முன்பு வந்திருந்தபோது, அவரின் தாத்தா எழுதிய திருவாசக உரை காண்பித்தேன். வாங்கிக் கண்களில் ஒற்றிக் கொண்டார். அண்மையில் அந்நூலின் மறுபதிப்புப் பிரதி ஒன்று வாங்கி மகள் மூலம் அவருக்குக் கொடுத்து அனுப்பினேன். குருவுக்கு சிஷ்யையின் காணிக்கையாக!
கீடம் எனும் சொல் தேடிப் புறப்பட்டேன் நான். பலமரம் கண்ட தச்சன் ஒரு மரமும் வெட்டான் என்பதுபோல் ஆகிவிட்டது கட்டுரையின் போக்கு. கீடம் எனும் சொல் குறிக்கும் புழு பற்றிப் பேச இத்தனை நீண்ட முகமன் அவசியமாகி விட்டது. கீடத்துக்கான துல்லியமான பொருள் தேடப் புகுந்ததனால் இத்தனை திருவாசக உரைகளையும் புரட்டும்படி ஆயிற்று. மேற்சொன்ன பாடலுக்கு மகாவித்வான் தண்டபாணி தேசிகர் இரண்டு பக்க அளவில் உரை தந்துள்ளார். அதில் இருந்து பொருள் விளக்கம் தரும் முதல் பத்தியை மட்டுமே எடுத்தாள்கிறேன் –
‘அம்மானாய்! யானை புழு மனிதர் தேவர் முதலிய மற்றைய பல பிறவிகளிலும் பிறந்து இறந்து இளைத்த என்னை ஊனையும் உருக்கி, என் பழவினைகளை ஓட்டுவதில் உகந்தருளி, தேன் பால் கருப்பஞ்சாறு இவற்றைப் போல இனிமையான தலைவனாக எழுந்தருளித் தன் அடியார் கூட்டத்து ஒருவனாக அடிமை கொண்டருளிய தேவ தேவனுடைய பொலிவாகிய திருவடிகளையே பாடுவோம்’ – என்பது பொருள்.
ஈண்டு யானை முதல் புழு ஈறான பிறவிகள் என்பது பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் எல்லையான என்பதைக் குறிக்க. எல்லாம் உயிர்தானே என்றால் யாம் திருப்பிக் கேட்போம்! கவர்ச்சிக்கன்னி சினிமா நாயகியும் சாலையோரம் அமர்ந்து கூறுகட்டி கொத்தவரங்காய் விற்பவளும் ஒன்றா உமக்கு நாயன்மாரே!

நாம் இங்கு விளம்ப வந்த விடயம், புழு என்ற பொருளைத் தரும் கீடம் என்று மாணிக்கவாசகன் ஆண்ட சொல் குறித்து! சங்க இலக்கியங்கள் பாட்டும் தொகையும் ‘கீடம்’ பயன்படுத்தியுள்ளதா என்று தேடினால் யாண்டும் கண்டிலேன். திருக்குறளில் புழுவும் இல்லை கீடமும் இல்லை. எம்மைத் தொடர்ந்து வாசிப்பவர்கள் அனுமானித்திருப்பார்கள், தொடர்ந்து பேரகராதியில் தேடுவேன் என. கீடம் எனும் சொல்லுக்கு புழு எனப் பொருள் தந்துள்ளது திவாகர நிகண்டு. சூடாமணி நிகண்டோ வண்டு என்று பொருளுரைக்கின்றது. கீடமணி என்றால் மின்மினி என்கிறது சங்க அகராதி. கீடம்பகை எனில் புழுக்கொல்லி.
அயற்சொல் அகராதி, கீடம் என்ற சொல்லின் மூலம் சமற்கிருதம் என்கிறது. பொருள் – புழு, கோற்புழு, வண்டு என்பன.
‘க்ஞான் பீட்’ என்றழைக்கப்படும் விருது தமிழில் ஞானபீடம் என ஆனதுபோல், ‘த்யான் பீட்’ எனும் சொல் தியான பீடம் ஆனதுபோல் கீட் எனும் சமற்கிருதச் சொல் தமிழுக்கு வரும்போது கீடம் என ஆயிற்று எனலாம். கீத் எனும் சொல் கீதம், நாத் எனும் சொல் நாதன் பூத் எனும் சொல் பூதம் என ஆனதுபோல்.
மும்பையில் 1972 முதல் 1989 வரை வாழ்ந்தவன் என்பதாலும், வடகிழக்கு மாநிலங்கள், காஷ்மீர் தவிர்த்து பல மாநிலங்களில் பயணம் செய்தவன் என்பதாலும் கீட் எனும் சொல் புழு எனும் பொருளில் புழங்குவதை நான் அறிந்திருந்தேன். குயுக்தியும் குதர்க்க புத்தியும் உன்மத்த குணமும் உடையவனை, சர்வ சாதாரணமாக, ‘உஸ்கா சிர் பே கீட் ஹை’ என்பர். பொருள் – அவன் மண்டையில், தலையில், சிரசில், மூளையில், புத்தியில் புழு பற்றிவிட்டது என்பதாகும்.
வடசொல்லே ஆனாலும் தற்பவம் இலக்கணப்படி கீடம் எனும் சொல் மாணிக்கவாசகர் காலத்திலேயே தமிழுக்குள் சேர்ந்து விட்டது. ஆய்வறிஞர்கள் – இது அரசாங்கம் ஆள் பார்த்து வழங்கும் விருது எனக் கொளல் ஆகா – மாணிக்கவாசகர் காலம் குறித்துப் பற்பல கருத்துக்களைக் கொண்டுள்ளனர். அதனை நிறுவப் பல்வேறு ஆதாரங்களையும் அளித்துள்ளனர். மகாவித்வான திரு. ச. தண்டபாணி தேசிகர், மாணிக்கவாசகர் காலம் கி.பி. மூன்றாம் நூற்றாண்டு என முடிவு செய்துள்ளார்.
திருமலைக்கொழுந்துப் பிள்ளை மாணிக்கவாசகர் காலம் 1-ம் நூற்றாண்டாகவும், பொன்னம்பலப் பிள்ளை 2 அல்லது 3-ஆம் நூற்றாண்டு எனவும், மறைமலை அடிகள் 3-ம் நூற்றாண்டாகவும், வில்சன் வுட் என்பவர் 7-ஆம் நூற்றாண்டு எனவும், ஜி.யூ. போப் 7 அல்லது 8 அல்லது 9-ஆம் நூற்றாண்டு என்றும், சூலின் வில்சன் 9 அல்லது 10-ஆம் நூற்றாண்டு என்றும், கௌடி 8 முதல் 10-ஆம் நூற்றாண்டுவரை ஆகலாம் எனவும், டாக்டர் ரோசட் 13 அல்லது 14-ஆம் நூற்றாண்டு எனவும், நெல்சன் 9-ஆம் நூற்றாண்டு என்றும், கே.ஜி. சேசய்யர் 3 அல்லது 4-ஆம் நூற்றாண்டு எனவும், சீனிவாச பிள்ளை 9-ஆம் நூற்றாண்டு என்றும், சிவக்கவிமணி சி.கே. சுப்பிரமணிய முதலியார் தேவார மூவர்க்கும் முந்தியவர் எனவும் கொள்கின்றனர்.
ஆதிசங்கரர் குறித்தும் இதுபோன்ற கால நிர்ணயங்கள் உண்டு. நாம் தமிழறிஞரோ ஆய்வறிஞரோ சமய அறிஞரோ இல்லை என்பதனால் தோதான இடத்தில் நின்று கொள்ளலாம். தமிழைப் பிரசவித்தும் பாலூட்டித் தாலாட்டிப் போற்றி வளர்த்ததாகப் புகழப்பெறும் அரசியல் பிரமுகர் சிலரை எவரால் என்ன செய்ய இயலும்? நாழி முகவாது நா நாழி எனும் ஔவையாரின் மூதுரை வரிதான் நினைவுக்கு வருகிறது.
நமது அவதானிப்பு, கீடம் எனும் சொல்லை மாணிக்கவாசகர் ஆண்டுள்ளார் என்பதில் நிலை கொள்கிறது. சேக்கிழார் அருளிய பெரியபுராணம் நூலில் 4286 பாடல்கள். அதாவது 17,144 அடிகள். அங்கு எங்கும் கீடம் இல்லை. கம்பன் கீடம் எனும் சொல்லைப் பயன்படுத்தியிருப்பானே எனும் வினா நமக்கு எழாமல் இராது. 10,368 பாடல்களில் இரு இடங்களில் கீடம் கண்ணில் பட்டது.
ஆரண்ய காண்டம், கரன் வதைப்படலம், கம்பனின் பாடல் –
“அஞ்சிறை அறுபதம் அடைந்த கீடத்தைத்
தஞ்சு எனத் தன்மயம் ஆக்கும் தன்மைபோல்
வஞ்சகத்து அரக்கரை வளைத்து வள்ளல்தன்
செஞ்சரத் தூய்மையால் தேவர் ஆக்கினன்”
என்பது.
பொருள் – அழகான இறகுகளை உடைய குளவி, அடைக்கலமாகத் தன்னிடம் சேர்ந்த புழுக்களைத் தன்வடிவமாகச் செய்யும் தன்மைபோல், அருள் வள்ளலாகிய இராமன் ஆனவன் வஞ்சனை நிரம்பிய அரக்கர்களை வளைத்துக் கொண்டு, தன்னுடைய சிறந்த அம்புகளின் தூமையால் அவர்களைத் தேவராகுமாறு செய்தான்.
குளவி புழுக்களைப் பிடித்துக் கொட்டிக் கொட்டித் தன்னைப்போலக் குளவி ஆக்குவதுபோல என்பது உவமை.
யுத்த காண்டத்தில் 27-வது படலமான மீட்சிப் படலத்தில் 65-வது பாடல். இராமன் சீதையைக் கடிந்து உரைக்கும் காட்சி.
“கலத்தினின் பிறந்த மாமணியின் காந்துறு
நலத்தின் நிற் பிறந்தன நடந்த; தன்மை சால்
குலத்தினில் பிறந்திலை; கோள் இல் கீடம் போல்
நிலத்தினில் பிறந்தமை நிரப்பினாய் அரோ!”
என்பது முழுப்பாடல்.
ஆபரணங்களிற் பதிக்கப்படும் இரத்தினம் போலப் பிரகாசிக்கின்ற தன்மையோடு பொருந்திய குணம் செயல்களாய் நின்னிடம் முன்பு உள்ளனவாய அவை இப்பொழுது போயின. மேன்மையுடைய உயர்குலத்தில் பிறந்தவளாய் நீ நடந்துகொள்ளவில்லை. குறிக்கோள் இல்லாத புழுவைப் போல் மண்ணில் பிறந்தாய் என்பதை நிரூபித்து விட்டாய் – என்பது உரை.
நிலத்தை உழுதபோது படைச்சாலில் சீதை தோன்றியவள் என்பது கருதி எள்ளலாக இராமன் இவ்வாறு கூறினான். அவளைப் பழித்துப் பேசி அவள் எரிபுகத் துணியும் சந்தர்ப்பம் இது.
இவை கம்பன் கையாளும் கீடம். சங்க இலக்கியத்துள் – பத்துப்பாட்டு, எட்டுத்தொகை எனும் பதினொரு நூல்களினுள் – எனக்குத் தெரிந்து இல்லை, கீடம்.
இன்று மாமனிதர் எனப் பேரறிவான மக்களும் தொண்டரும் இரசிகரும் கொண்டாடும் எவரையும் அற்பப் புழு என வைதால் உமக்கு மோட்ச சாம்ராஜ்யம் அல்லது ஏழு பாதாளங்களில் ஒன்று முன்பதிவு உறுதி. அரிவாளோ, விரையும் வாகனமோ எமனின் திசையான தெற்குத் திசையிலிருந்து ஏவப்பெறும். ஆனால் கீடம் என்று திட்டினால் அறியமாட்டார்கள். ‘பீடமெறிப் பொலிந்த எம் கீடமே!’ என்று சினிமாவில் காதல் பாட்டு எழுதினால் கைதட்டுவார்கள்.
எல்லாம் சரி! புழுவினைக் குறிக்கக் கீடம் எனும் சொல் பயன்படுத்திய திருவாதவூரர், புழு எனும் சொல்லை நேரடியாகக் கையாண்டுள்ளாரா?
மாணிக்கவாசகர் நான்கைந்து பாடல்களில் புழு, புழுக்கள் உடை, புழுக்கூடு, புழுத்தலை, புழுத்து, புழுவினாய் போன்ற சொற்களை ஆண்டுள்ளார்.
சரி! புழு எனும் தூய தமிழ்ச்சொல் இருக்கையில் மாணிக்கவாசகருக்கு ஏன் இந்த அதிகப்பிரசங்கத்தனம்? சநாதன, பார்ப்பனத் திமிரா? ஓசை நயத்துக்காக, இலக்கண வசதிக்காக அவர் பயன்படுத்தி இருக்கலாம். இலக்கணப்படி புழு என்பது நிரையசை, இணைக்குறில் என்பதனால். ஓரசைச் சீர். கீடம் எனில் நேர் நேர் – தேமா – ஈரசைச் சீர்.
என்றாலும் சுத்த சுயம்பு தூய பரிசுத்த தமிழ் மொழிக் காவலர் எவரும் சொல்லக்கூடும், அவருக்கு வடமொழி மோகம் என்று. எனில் கும்பமுனி திருப்பிக் கேட்பார் – “உம்ம கிட்ட அப்பம், அதிரசம், சர்க்கரைக் கொழுக்கட்டை, முந்திரிக்கொத்து, கும்மாயம் – அரவணை – அக்கார அடிசில் – சர்க்கரைப் பொங்கல் எல்லாம் இருக்கில்லாவே? பின்னே என்ன மயித்துக்கு மைசூர்பாக், குலோப்ஜாமூன், லட்டு, பேடா, பர்பி, பாதுஷா, அல்வா, ஜிலேபி, ஜாங்கிரி, ரசகுல்லா, பாதாம்கீர் எல்லா எழவும்?” என்று.
இலக்கியத் தர்க்கரீதியாகக் கேட்டால் ஓணான் எனும் ஒரு சொல் இருக்கும்போது உமக்கு எதற்கு நாயன்மாரே ஓந்தான், ஓதி, ஒடக்கான், ஒடக்கா, ஒடக்காயி, தெண்டல், வக்கை, ஓந்தி எனும் சொற்கள்?
கம்பன் கையாண்ட வடசொற்களும் அவற்றின் தற்பவ வடிவங்களும் எடுத்துக்காட்டுக்குச் சில –
பாஷை – பாடை
முகூர்த்தம் – முழுத்தம்
பக்தி – பத்தி
முக்தி – முத்தி
கமல் – கமலம்
நளின் – நளினம்
அரவிந்த் – அரவிந்தம்
உடலுறவு என்ற சமீபத்தியக் கண்டுபிடிப்பான சொல்லுக்கு சுத்தத் தமிழ் மாற்றுச் சொற்கள் புணர்ச்சி, கலவி, முயக்கம், உவப்பு. சங்க இலக்கியங்கள் பயன்படுத்தியுள்ளன. சம்போகம் என்பது வடசொல். சமீபகாலமாகத் தமிழன் ‘சம்பவம் செய்தான்’ என்று எழுதுகிறான். சம்போகம் என்பதற்கான தற்பவச் சொல்லா சம்பவம் என்பதறியேன்.
கிடக்கட்டும், நாம் புழுவிற்குத் திரும்புவோம்!
சிவபுராணத்தில் மாணிக்கவாசகர் பேசுவார் –
“புல்லாகிப் பூடாய் புழுவாய் மரமாகிப்
பல் விருகமாகிப் பறவையாய் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல் அசுரராகி முனிவராய்த் தேவராய்
செல்லாஅ நின்ற இத்தாவர சங்கமத்துள்
எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன் எம்பெருமான்’
என்று. விருகம் என்றால் மிருகம், விலங்கு என்று பொருள்.
பிடித்த பத்து பகுதியில் அவரே – ‘முழுப் புழுக் குரம்பையில் கிடந்து’ என்பார். குரம்பை எனில் கூடு. புழுக்கள் நிரம்பிய கூட்டில் கிடந்து என்பது பொருள்.
நிலையாமை அதிகாரத்துத் திருக்குறள் –
‘குடம்பை தனித்தொழியப் புள் பறந்தற்றே
உடம்போடு உயிரிடை நட்பு’
என்று பேசும். குடம்பை என்றாலும் கூடு என்றே பொருள். குடம்பைக்கு முட்டை என்று பொருள் கொள்வாரும் உண்டு.
பிடித்த பத்து பகுதியிலேயே மாணிக்கவாசகர் –
“அம்மையே அப்பா ஒப்பிலா மணியே
அன்பினில் விளைந்த ஆரமுதே
பொய்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்
புழுத்தலைப் புலையனேன் தனக்குச்
செம்மையே ஆய சிவபதம் அளித்த
செல்வமே சிவ பெருமானே
இம்மையே உள்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவது இனியே’
என்பார், வேறொரு பாடலில்.
பொய்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும் புழுத்தலை மேதையர் தமக்கு இன்று செம்மையே சேர்க்கும் சக்திகள் பெருகிப் போயின உலகில்!
Discover more from சொல்வனம் | இதழ் 367 | 24 மே 2026
Subscribe to get the latest posts sent to your email.
