நகக்குறி,பற்குறி, மயிர்க்குறி

நேராக வாசற்படி ஏறி, படிப்புரை கடந்து, திண்ணை உள் நுழைந்தவன் சுற்று முற்றும் பார்த்தான். மங்களா, அரங்கு, சாய்ப்பு, பத்தயப்புரை, அடுக்களை, புழக்கடை எனக் கண்களை ஓட்டிக் காதுகளையும் தீட்டினான். ஆள் அனக்கம் இருக்கிறதா என ஆராய்ந்தான். திண்ணையில் சாய்வு நாற்காலியில் அமர்ந்து சுபகிருது வருடப் பஞ்சாங்கத்தில் மார்கழி மாதத்தைப் புரட்டிக் கொண்டிருந்தார் அம்பலவாணன், முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டிருப்பதைப் போன்று. வேலை தடைப்பட்டதால் எரிச்சல் அடைந்து கேட்டார்-

“ஏ, அழகப்பா… எழவெடுத்தவனே! என்னத்தையாக்கும் சுத்தி முத்திப் பாக்க? மயினி கொளத்துக்குக் குளிக்கப் போயிருக்கா… துணி தொவச்சு, தலை தேச்சுக் குளிச்சுக்கிட்டு வர இன்னும் அரை மணிக்கூர் ஆகும்… காலம்பற காப்பிக்குடி கழிஞ்சாச்சு… குளிச்சுக்கிட்டு வந்து தான் உலை வைப்பா பாத்துக்கோ… இப்பிடி ரெண்டுங் கெட்ட நேரத்தில என்னத்த அந்து விழுகுண்ணு வந்து அரக்கப் பரக்கப் பாக்க?”

“கோவப்படாத அம்பலண்ணே! மயினி இருக்காளான்னுதான் பாத்தேன். இந்த நேரம் பாக்க வந்ததுக்கும் காரியம் உண்டு. இப்பம் நான் பேசப்பட்ட விசயம் ஒரு குருவி அறியப்பிடாது, கேட்டயா? நீ மட்டும் மனசோட வச்சுக்கிடணும்…”

“அப்பிடி என்னடே அந்தரங்கம்? எங்கயாம் கூட்டத்திலே தற்கொலைப் படை தாக்குதல் நடத்த அச்சாரம் வாங்கீருக்கியா? நீ குண்டு கூட வைக்காண்டாம்… கூட்டத்திலே நிண்ணு குசு விட்டாப் போதும்… பத்துப் பேரு தலை சுத்தி விழுவான்… தேரை இழுத்துத் தெருவுலே விட்டிராதடே கொள்ளையிலே போவான்…”

“அட சும்மாருண்ணேன்… நீ வேற… நாமளே குண்டுலே விழுந்து கெடக்கோம்… இதுல போயி குண்டு வைக்கப் போறனாக்கும்…”

” சரி சரி… வந்த கால்லே நிக்காத… அன்னா அந்த பெஞ்சு கெடக்கில்லா, அதுல இரி… காரியம் என்னாண்னு சொல்லு…”

“ஆனா நீ விசயத்தை யாருட்டயும் கெம்பீரப்பிடாது… ராத்திரி கெட்டிப் புடிச்சுக்கிட்டு கெடக்கச்சிலே, மயினீட்ட கூட சொல்லப் பிடாது…”

“அடப் போலே புத்தி கெட்டவனே! நீ சொல்லப்பட்ட காரியத்தை நோட்டீசு அடிச்சு, பிள்ளையோ பள்ளிக்கூடம் விட்டு வந்ததும் கையிலே கொடுத்து, வீடு வீடாப் போயி விளம்பீட்டு வரச் சொல்லப் போறேன்… திரியான் வேலை மெனக்கிட்டு… சங்கதி என்னாண்ணு சொல்லுவியா!”

“சொன்ன உடனே வெப்ராளப் படப்பிடாதுண்ணே… வெளீல ஒரு மனுசன் கிட்டே மூச்சு விட்டிரப் பிடாது…”

“நீ இப்பம் இங்கினே இருந்து எந்திரிச்சுப் போறியா? வெறுவாக்கலங் கெட்ட மூதி… பொறப்பிட்டு வந்திருக்கான் நம்ம புடுக்கை அறுக்கதுக்கு!”

“சரி, விடு அதை… கவனமாட்டு கேட்டுக்கோ… ஒன்னை நம்பித்தான் சங்கதியைச் சொல்லுகேன்…”

“சரி டே! சொல்லி அழு!”

“வந்து… நம்ம… நீ சாடிக்கேறி அடிக்க வரப்பிடாது…நம்மள நடிகை கமலபாலிகா இருக்காள்ளா…”

“ஆமா, இருக்கா… அவளுக்குத் தீண்டல் வரல்லியா? இல்லே காய் விழுந்திற்றா…?”

“அது இல்லண்ணே… அவளுக்க கேசம் ஒண்ணு வேணும்…”

“என்னது? மனசிலாகல்லே…”

“அதாம்ணேன்… அவளுக்க தலைமுடி ஒண்ணு வேணும்…”

“என்னது? திரும்பச் சொல்லு…”

“என்னண்ணேன் நீ? பஞ்சாயத்து மெம்பராட்டு இருக்கே! இது தெரியாதா? இது கூடத் தெரியாமத்தான் டெல்லி வரை ஆளு இருக்குண்ணு பீத்தீட்டுத் திரியயா?”

“நீ காரியத்தை தொறந்து சொல்லுடே இரப்பாளி!”

“நடிகை கமலபாலிகாவுக்குத் தலையிலே இருக்கப்பட்ட நீளத் தலைமுடி ஒண்ணு வேணும்ணேன்…”

“எலே! கூறு கெட்டவனே! அது ஒரிஜினல் தலைமுடியா, டோப்பா முடியான்னு நாம என்னத்தைக் கண்டோம்?”

“எனக்கு அதெல்லாம் தெரியாதுண்ணேன்… ஒரிஜினல் கூந்தல் மயிரொண்ணு வேணும்! அம்புட்டுத்தான்… என்ன செலவானாலும் சாரமில்லே…”

“சரிடே! செலவைப் பொறவு யோசிப்போம்… இப்பம் அவளுக்கத் தலைமுடி என்னத்துக்கு ஒனக்கு…?”

“அதெல்லாம் ஒனக்கு என்னத்துக்குண்ணே?”

“சும்மா தெரிஞ்சிக்கிடத்தான்… குறைச்சல் படாம சொல்லு நீ!”

“பொறவு நீ என்னைப் பரியாசம் பண்ணப்பிடாது!”

“சும்மா சொல்லுடே… ரொம்ப வெளச்சல் காட்டாத என்னா?”

“எனக்கு இப்பம் வயசு என்ன இருக்கும்ணு நெனைக்கே?”

“முப்பத்திரண்டு, முப்பத்தி மூணு இருக்குமா?”

“சரியாப் போச்சு… வாற வைகாசியிலே முப்பத்தொம்பது முடியும்…”

“இன்னுமாடே ஒரு பொண்ணு பாத்துக் கெட்டி வைக்கத் துப்பில்லாம இருக்காரு ஒங்க அப்பா…”

“நல்ல கதையாப் போச்சு… அவுரும் பதிமூனு வருசமாப் பாக்காரு… எங்க போனாலும் சாதகம் சேரமாட்டேங்கு… ஏழரை நாட்டுச் சனீ… செவ்வா தோசம்… பாவ சாதகம்… மூலம் நட்சத்திரம்… பல்லு நீளம்… கட்டை… கறுப்பு… காலு கிந்திக் கிந்தி நடக்காங்கான்… நல்ல காலம், இன்னும் எவனும் சாமான் நீளம் கொறைவுண்ணு மாத்திரம் சொல்லல்லே!”

“நல்ல கதையா இருக்குடே! பருவப் பத்திலே நாலரைக் கோட்ட விதைப்பாடு… ஊரடியிலே ரெண்டு ஏக்கர் தென்னந் தோப்பு… மட்டுப்பா போட்ட மங்களா வீடு… பால் மாடு, காங்கயம் காளை பூட்டின வில் வண்டி, உரம் அடிக்க, நெல்லு கொண்டு போக சக்கடா வண்டி… உனக்காடே இந்த நிலைமை? உங்க அம்மைட்ட நூத்தம்பது இருநூறு பவுனு உருப்படி இருக்காது?”

“அந்தக் கணக்கைத் தள்ளுண்ணேன்… நீ கேசத்துக்கு வழி சொல்லு சுணங்காம…”

“எலே, இதென்ன வெளையாட்டுக் காரியம்னு நெனச்சியா? சரி! ஒரு காரியம் கேக்கட்டும்! அவளுக்க தலைமுடியை வச்சு வசிய மந்திரம் போடப் போறியா? துரியோதனனுக்கு அவன் பொண்டாட்டி பானுமதி வசிய மருந்து கூட்டிப் பால்லே கலந்து குடுத்த கதை ஆயிராம! ஆனை தூறுச்சுண்ணு ஆட்டுக்குட்டி தூறுனா அண்டம் கிழிஞ்சிரும் தெரிஞ்சுக்கோ!”

“உனக்குத் தெரியாதுண்ணே… நாங்க போகாத கோயில் இல்லே! திருமணஞ்சேரி வரைக்கும் போயிப் பாத்தாச்சு… பால் கொடம், காவடி, தூக்கம், மொட்டை, அங்கப் பிரதட்சணம், தங்கத் தேரு இழுக்கது, இருமுடிக்கெட்டு, பொங்கலு, அரவணைப் பாயசம், ஔவையாரம்மன் கோயில் கொழுக்கட்டை, மண்டைக்காட்டுப் பகவதிக்கு நேர்ச்சை, வெள்ளாட்டுக் கிடா வெலி, கருங்கோழிச் சேவல் அறுப்பு, எல்லாம் எல்லாக் கோயில்லேயும் நேந்தாச்சு பாத்துக்கோ…”

“பின்னே எதுக்குடே? பாதாதி கேசம் பூசையா?”

“ஒனக்குத் தெரியாதுண்ணே… நம்ம சீதப்பால் ஊரு தாண்டி தாடகை மலைக்குப் போனா, மலை அடிவாரத்திலே ஒரு சித்தர் பீடம் இருக்குல்லா… வெள்ளி செவ்வாய்லே அங்க சித்தரு பிரஸ்னம் பாப்பாரு… அங்க போயிருந்தேன் ஒரு நாளு, வெளக்கு வய்க்கப்பட்ட நேரத்திலே… நான் மட்டும்தான்… யாரையும் கூட்டீட்டுப் போகல்லே…”

“அதுக்கு?”

“அவுரு மேல அருள் வந்து குறி சொன்னாரு!”

“என்னண்ணு? கமலபாலிகா தலைமுடி ஒண்ணு வாங்கீட்டு வந்து மணத்தி மணத்திப் பாரு, பக்கத்துலே போட்டுப் படுத்துக்கோண்ணு சொன்னாரா?”

“அதுல்லண்ணே … செலபேரு இந்த ஆனைரோமம் வாங்கீட்டு வந்து மோதிரத்திலே, காப்புலே வச்சு பொதிஞ்சு கெட்டிப் போடுகாள்ளா. ..”

“ஓகோ ..அது மாதிரி அவளுக்க முடியைக் கொண்டாந்து பூணு கெட்டி ஒனக்கு சக்கரையிலே போடச் சொன்னாரா ? ”

“தற்குத்தறம் பேசப்பிடாது…”

“பின்ன என்னடே ? கமலபாலிகா அவளுக்கு தீண்டல் வரப்பட்ட நாளு, எத்தனை கணவன், காதலன், வாடிக்கையாளன் என்பதெல்லாம் சித்தருக்கு எப்பிடிடே தெரியும்? அவுரும் படத்திலே அவளுக்க தொடை, குண்டி, முலைக்கூம்பு எல்லாம் பாக்காரா ?”

“திண்டுக்கு முண்டு பேசப்பிடாதண்ணேன்…அவ பேரை அவுரு சொல்லவேயில்லை !”

“பின்னே ?”

“எனக்கு யாரை ரெம்பப் பிடிக்குமோ, அவுளுக்கக் கேசம் ஒண்ணு கொண்டாந்து மோதிரத்துலே வச்சு அடச்சு, இடக்கை நடு விரல்லே போடச் சொன்னாருண்ணே …”

“அப்பம் அது பொம்பளை முடியாத்தான் இருக்கணும் என்னா?”

“ஆமாண்ணே ..எனக்கு கமலபாலிகாவை ரொம்பப் புடிக்கும். அதுனாலதான் அவ முடி கேக்கேன்!”

“ஏண்டே திருவளத்தான், வேற ஒனக்குப் பிடிச்ச பொம்பளையோ முடி ஆகாதா ? அம்மை, அத்தை, ஆத்தா …”

“அவங்கள்ளாம் புடிக்கும்ணே ..ஆனா இவ வேற மாதிரி. ..”

“ஓ அதாக்கும் சமாச்சாரம்! ஓண்ட்ராடம் கூட கரசேவையா ?”

“போண்ணேன்…நீ ஒரு கிருத்திருமம் புடிச்சவன்…”

“சரி ! அவளுக்க கேச மயிர் கொண்டாந்து மோதிரம் செய்து போட்டா ?”

“தொண்ணூறு நாள்லே எனக்கு கலியாணம் உறுதி ஆகீருமாம்…”

“யாரு?” கமலபாலிகா கூடவா ? எலே , அவ படத்துக்கு அஞ்சு கோடி வாங்குகாளாம்…அதை விட மூணு மடங்கு வருமானம் ஓவர் டைம் செய்தா ..வயசு நாப்பத்தேழு நாப்பத்தெட்டு இருக்கும்! இது ஆகிற காரியமாடா ஆக்கங்கெட்ட மூதி ?”

“அவளைக் கெட்டாண்டாம் ..வேற பொண்ணுத்தரம் அமைஞ்சிரும்லா”

“ஓ! தென்னை மரத்திலே தேள் கொட்டுனா புன்னை மரத்துக்கு நெறி கெட்டுமாங்கும்?”

“நீ அதெல்லாம் ஆலோசிக்காண்டாம்ணே ..எனக்கு ஒரு முடி மட்டும் வாங்கிக் குடு, போரும்!”

“ஏலே , அவ முடியைக் கேட்டு, வேற எவ முடியையாவது கொண்டாந்துட்டா ?”

“அதுக்காச்சுட்டித்தானே உங்கிட்டே வந்தே ன். நீ தலத்தட்டு வரைக்கும் புடி உள்ளவன்…கட்சிலேயும் நல்ல செல்வாக்கு…அடுத்த வட்டச் செயலாளருக்கு உன் பேராக்கும் அடிபடுகு…நீ சொன்னா எவம்ணேண் தட்டுவான்?”

“இதுக்கெல்லாம் ரெம்பச் செலவாகுமப்பா ..”

“செலவைப் பத்தி யோசிக்காண்டாம்ணே …அம்மைட்ட கொஞ்சம் காசு உண்டும்…சண்டு நெல் தூத்துனது…தேங்கா வித்தது..பாலு வித்தது..பணத்தை முடிச்சுப் போட்டு எங்க வச்சிருக்காண்ணு எனக்குத் தெ ரியும்! களவாண்டாலும் வெளீல சொல்ல முடியாது…”

“ஆனா கமலபாலிகா தரணும்லாடே ? ஏதாம் கெட்ட பிரவர்த்தி, செய்வினை, பில்லி சூனியம்செய்யதுக்குத்தான்ணு அவளுக்கு சம்சயம் வராதா ?”

“வாஸ்தவம்தா ன்…அவளுக்குத் தெரியாமத்தான் எடுக்கணும்…மேக்கப்காரன் கிட்டே சொல்லி வச்சுவாங்க முடியாதா ? காசு குடுத்தா அடைபடாத காரியம் உண்டுமா நாட்டிலே?”

வீ ட்டு வாசலில் ஆளரவம் கேட்டது. துவைத்துப் பிழிந்த துணிகள் தோளிலும், பித்தளைக் குடம் நிறையத் தண்ணீர் இடுப்பிலுமாக உதறி முடியாத ஈரக் கூந்தலுடன் அம்பலவாணன் மனைவி ஆவுடையம்மாள் படியேறி வந்தா ள்.

“என்னா கொழுந்தம்பிள்ளே ? காலம்பறயே செம்மொழி மாநாடா?”

“இல்லே மயினியோ ! அண்ணன் கிட்ட சும்ம அரசியல் பேசீட்டு இருந்தேன். நீங்க இருந்திருந்தா ஒரு தேயிலை போட்டுத் தந்திருப்பியோ ! போட்டும், நான் பொறவாட்டு வாறன் என்னா !”

அம்பலவாணனுக்கு கண்சாடை செய்துவிட்டு அழகப்பன் படி இறங்கிப் போனான்.

பத்துப் பதினைந்து நாள் சென்று, அம்பலவாணன், தன் மனைவியின் உதிர்ந்த தலை முடி ஒன்றை ஈருகோலில் கண்டடைந்து, நீளம் ஆய்ந்து, புதிய வெள்ளை உறையொன்றில் போட்டு ஒட்டி அழகப்பனிடம் சேர்த்து, சகல வரிகள் அடக்கம் ஐயாயிரத்து எண்ணூற்று அறுபத்தேழு பணம் கறந்துவிட யோசித்தார். அரசியல் தொழில் செய்பவர் என்றால் அது கூட இல்லாமல் எப்படி?

அம்பலவாணனுக்கு அப்போது தோன்றாமலும் இல்லை . “எழவெடுப்பான் என்னத்தை யாம் காட்டிக் கூட்டித் தன் மனைவியை வசியம் செய்து விடுவானோ ?” என்று. ‘சவம் போனால் போட்டு’ என்று தன்னைத் தேற்றியும் கொண்டார். தொழில் தர்மம் அறியாமல் கச்சவடம் செய்ய முடியுமா ?

*

விறுவிறு என எழுதி முடித்து, பேனாவை மூடிவிட்டு, சற்றுச் செருமினார் கும்பமுனி. சங்கேதத்தைப் புரிந்து கொ ண்ட தவசிப்பிள்ளை , “என்ன பாட்டா ? கட்டன் எடுக்கட்டா?” என்றார். எழுதி வைத்த கத்தைக் காகிதங்களை தவசிப்பிள்ளையிடம் நீட்டிய கும்பமுனி, “எப்பிடி வந்திருக்குண்ணு வாசிச்சுச் சொல்லும்வே !” என்றார். வாங்கி க்கொண்டு குசினிப்புரைக்குள் நுழைந்தார் தவசிப்பிள்ளை .

சற்றுப் பொறுத்து, தவசிப்பிள்ளை கொணர்ந்து கொடுத்த கட்டன் சாயாவைக் கொதிக்கக் கொதிக்க, ஊதியூதிக் குடித்து முடித்தார், கும்பமுனி. கடுமையான உழைப்பின் நிமித்தமாய், நெற்றியில், மேலுதட்டில் வியர்வை பொடித்தது, உவப்பின் உச்சம் கண்டவரைப் போல.

கும்பமுனி எழுதிய சிறுகதையின் முதல்படியை வாசித்து முடித்த தவசிப்பிள்ளை , இடக்கரத்தால் காகிதக் கத்தையை அவரிடம் நீட்டினார்.

“எப்படி வந்திருக்குவே ?” என்றார் கும்பமுனி.

தவசிப்பிள்ளை சற்று இளக்காரப் புன்னகையுடன் கேட்டார், “பாட்டா, உள்ளதைச் சொல்லும்..உண்மையிலேயே அழகப்பன் கமலபாலிகாவுக்குத் தலையிலுள்ள முடியைக் கேட்டான்ணு எழுதுகது தான் உம்ம ஆத்தியத்த உத்தேசமாட்டு இருந்ததா?”

கும்பமுனி வெடிச்சிரிப்பொன்று சிந்தினார், உரும் இனம் உக்கினதைப் போன்று. சிரித்துக்கொண்டே சொன்னார்.

“கேசம், அளகம், ரோமம் எல்லாம் சமஸ்கிருதம்வே கண்ணுவிள்ளே ! முடி இல்லேண்ணா மயிர்தான் தமிழ், கேட்டேரா?”

“நீரு பேச்சை மாத்தாதையும் என்னா !” என்று சலித்து யதாஸ்தானத்தில் நின்றும் நீங்கினார் தவசிப்பிள்ளை .

4 Replies to “நகக்குறி,பற்குறி, மயிர்க்குறி”

  1. மனிதர்களின் மூட நம்பிக்கையை எள்ளி நகையாடும் இந்த கதை அருமை

    கும்பமுனி, கண்ணுப்பிள்ளை இந்த இரு கதாபாத்திரத்தின் மூலம் தான் சொல்ல ஆசைப்பட்ட அனைத்தயும் நாஞ்சிலார் சொல்லிவிடுவார் ,ஆரம்பத்தில் அம்பலவாணன் என்ற ஒரு பாத்திரத்தின் மூலம் கதையை ஆரம்பித்த போது ஒருக்கால் கும்பமுனிக்கு கொஞ்சம் ஓய்வு கொடுத்துவிட்டு வேறு பாத்திரத்திற்கு உயிர் கொடுத்துவிட்டாரோ என்ற யோசிக்க வைத்தது காரணம் இந்த பாத்திரத்திரமும் குசும்பு பிடிச்சதாகத்தான் இருக்கு ஆனால் நான் கவலைப்பட்டது மாதிரி எதுவும் நடக்க வில்லை

    இருந்தாலும் கும்பமுனியின் குசும்பு கொஞ்சம் குறைச்சலாகத்தான் இருக்கிறது

    1. நிஜமாகவே இந்த கதையின் உள்ளர்த்தம் புரிந்து தான் பின்னூட்டம் இட்டீர்களா?

      ““பாட்டா, உள்ளதைச் சொல்லும்..உண்மையிலேயே அழகப்பன் கமலபாலிகாவுக்குத் தலையிலுள்ள முடியைக் கேட்டான்ணு எழுதுகது தான் உம்ம ஆத்தியத்த உத்தேசமாட்டு இருந்ததா?” – இதற்கு என்ன அர்த்தம் என்றாவது தெரியுமா? கதையை படிக்கும் நாஞ்சில் நாட்டுக்காரர்களுக்கு நன்றாகவே புரியும் தவசிப்பிள்ளை எதை சொல்ல வருகிறார் என்று.

      ஆனாலும் சொல்வனம் குழுவினருக்கு தைரியம் தான், இந்த கதையை வெளியிட்டதற்கு!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.