
Akt mit drei Armen, 1977
வாசித்த புத்தகங்களையும், பருவ இதழ்களையும், பிறிதோர் காலத்துத் தேவைப்படும் எனக் கருதியவற்றை மாற்றி வைப்பான். தேவைப்படாது எனக் கண்டவற்றைத் தனியாக அடுக்கி வைப்பான். இனி எத்தனை காலம் மிச்சம் இருக்கிறது? இன்றுவரை 27,823 நாட்கள் வாழ்ந்தாயிற்று. எஞ்சிய நாட்களை சித்திரகுப்த நயினார் அறிவாரா? தென்திசைக் காவலன் அறிவானா? நீலக்காலன் அறிவானா?
என்றாலும் வாழ்க்கையில் சலிப்பில்லை, அலுப்பில்லை, ஆயாசம் இல்லை, கோபமும் குறையவில்லை. சக்கைப் புளிக்கறிக்கும், மாம்பழப் புளிசேரிக்கும், புளி இஞ்சிக்கும், நெல்லிக்காய் விடிவளத்துக்கும் நாக்கின் மோகம் தீரவில்லை.
மாதம் முழுக்க, தனக்கு வேண்டாம் என்று தனியாக அடுக்கி வைத்திருக்கும் பனுவல்களையும் பருவ இதழ்களையும் ஆறேழு பார்சல்களாகக் கட்டித் தூதஞ்சல் மூலம் நண்பர்களுக்கு சொந்தச் செலவிலேயே அனுப்பி வைப்பான். பார்சல் மடக்கும் கெட்டிக் காகிதங்கள், தோதான உறைகள் எப்போதும் சேமிப்பில் இருக்கும். அவையும் அவனுக்கு வந்தனவற்றை நேர்த்தியாகப் பிரித்து அடுக்கப்பட்டவையே!
நகரில் அவன் வீடிருந்த ஒதுக்குப்புறமான பகுதியில், புகழ்பெற்ற தூதஞ்சல் நிறுவனம் ஒரு கிலோ பார்சலுக்கு எண்பது பணம் வாங்கினார்கள். பதிவுப் பார்சல் தபாலில் அனுப்ப ஐம்பத்தாறு பணம். ஆனால் வீட்டிலிருந்து நடுவெயிலில் போகவர மூவாயிரத்து இருநூற்று ஐம்பது காலெட்டுகள். அவனது ஒரு காலெட்டு 0.71 மீட்டர். கணக்குப்போட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள். கையில் ஸ்மார்ட் ஃபோன் இருக்கும்தானே! 5×5 கணக்குப் பார்க்கவே நமக்கு கால்குலேட்டர் கைவசம் வேண்டும் இன்று.
அவன் கால் நூற்றாண்டாக மணிக்கூண்டு அருகில் இருக்கும் சற்றுப் பிரபலம் குறைவான தூதஞ்சல் நிறுவனத்துடன் பரிச்சயம் உடையவன். மற்றவர்களிடம் ஒரு கிலோ பார்சலுக்கு வெளியூருக்கு அறுபதுபணம் வாங்குவார்கள். அவனுக்கு நாற்பத்தைந்து பணம். உள்ளூர் என்றால் இருபத்தைந்து பணமும். எதுவானாலும் அவன் கைப்பணம் அல்லவா? அன்றைய சந்தை மதிப்பில் நாற்பத்தைந்து பணத்துக்கு ஏழு கோழி முட்டைகள் வாங்கலாமே!
தூதஞ்சல் கொடுக்க மணிக்கூண்டு போவதற்கு அஃதோர் காரணம். மற்றொன்றும் உண்டு – கையில் எழுதும் கடைசித் தமிழ் எழுத்தாளன் அவன். ஒருபக்கம் அச்சிடப்படாத கால்துண்டு, அரைத்துண்டு, முழுத்துண்டுத் தாள்களைச் சேமித்து வைத்து, அவற்றில் முதல் வரைவு எழுதுவான். ஒரு கிழமை காலந்தாழ்த்தி அதில் சிவப்பு மையால் திருத்தங்கள் செய்வான். பிறகு நல்ல தாளில் திருந்திய படி எடுப்பான்.
மடிக்கணினியில், ஸ்மார்ட் ஃபோனில் தட்டச்சு செய்யலாம் என்றும், பேசினால் போதும் அதைத் தட்டச்சு செய்து தரும் ஆப் உண்டென்றும் இதுவரை அவனுக்கு 169 ஆலோசனைகள் வழங்கப்பெற்றுள்ளன. நினைத்தால் அந்தத் தட்டச்சு செய்து தரும் ஆப் வரட்டும் என்று அவன் நளி பேசுவான். வந்தாலும் வந்துவிடும். வாட்ஸ் ஆப்பில் எட்டுச் சொற்களில் செய்தி அனுப்ப தமிழில் தட்டச்சு செய்தான். ‘நீங்கள் செய்த இந்த உதவிக்கு உங்களுக்கு பெரும் புண்ணியம் கிடைக்கும்’ என்று செய்தி அனுப்புவது அவன் உத்தேசம். புண்ணியம் என்று தட்டச்சு செய்ய உத்தேசித்து, ‘புண்’ என அடித்தவுடன் ‘டை’ வந்து விழுந்தது. கேட்டால் நண்பர்கள் இதுதான் Artificial Intelligence என்றார்கள். ‘நன்றே செய்வாய், பிழை செய்வாய், நானோ இதற்கு நாயகமே!’ எனக் கதறலாம் போலிருந்தது.
எழுபத்தாறு வயதுக் கிழவனைக் கல்லூரி மாணவனாகக் காட்ட ஈதென்ன எண்ணூறு கோடிப் பணத்தில் தயாரிக்கப்படும் தமிழ்த் திரைக் காவியமா? திருந்திய பிரதி எடுத்தபின் பக்கத்துக்கு இருபத்தைந்து பணம் கொடுத்து DTP செய்து கொள்வான்.
எந்த வார, மாத, இருதிங்கள், காலாண்டு இதழும் கையெழுத்துப் பிரதியை ஏற்றுக் கொள்வதில்லை. DTP செய்து, அவரவருக்குத் தோதான Font–ல் மாற்றி, E-mail செய்தல் வேண்டும். சன்மானம் கிடையாது என்றாலும் சங்கதி இதுவேதான்! இலவசமாய் சும்பனம் செய்து பல்லுப் பறிந்த கதை என்பார்கள்.
எனவே திருந்திய பிரதி எடுத்தபின், DTP செய்யக் கொடுக்குமுன் ஜெராக்ஸ் செய்யவேண்டும். அவன் குடியிருந்த பகுதியில் ஒளிநகல் செய்ய பக்கத்துக்கு இரண்டு பணம். நகல் சரியாக விழவேண்டும் என்ற எதிர்பார்ப்பில் கருப்பு மையால் எழுதினாலும் சிலசமயம் ஒளி அச்சுப் படி மங்கலாகவே இருக்கும். அரசாங்க விண்ணப்பம் செய்ய இணைக்கும் ஒளியச்சுப் படிகள் எப்படி இருந்தாலும் எவரும் கண்டு கொள்வதில்லை. அங்கு செயல்படும் நியமம் வேறு. ஆனால் கதை, கட்டுரை எழுத்து அங்ஙனமல்ல. எனவே தூதஞ்சல் கொடுக்க மணிக்கூண்டு போகும்போது ஜெராக்ஸ் வேலையையும் அங்கே முடித்துக் கொள்வான். அங்கு அதற்கான கூலி பக்கத்துக்கு ஒன்றரைப் பணம்தான்.
மேலும் அந்த முகாந்திரத்தில் விஜயா பதிப்பகம் வேலாயுத அண்ணாச்சியுடன் சற்று நேரம் உரையாடலாம். மனக்குறைகள் பேசலாம். முறையிட ஒரு இடம் வேண்டும்தானே! சர்வோதய சங்கம் கடையில் எள்ளுருண்டை, பேரீச்சம்பழம், எள்ளு மிளகாய் பொடி, பருப்புப் பொடி, சோளமாவு, ராகிமாவு என வாங்கலாம்.
மணிக்கூண்டில் இருந்து குமரன் காய்கறிச் சந்தை, உக்கடம் கறிகாய்ச் சந்தை இரண்டுமே ஐந்து மணித்துளி நடை. கையில் பெரிய பையிருந்தால் அவரைக்காய், வெண்டைக்காய், கத்தரி, காரட், பீட்ரூட், பாகற்காய், காலிஃப்ளவர், பச்சை மிளகாய், உருளைக்கிழங்கு, பெல்லாரி வெங்காயம், சின்ன உள்ளி, வாழைப்பூ என வாங்கலாம். அவன் வீட்டில் தென்னை நடவில்லை. தெருவில் இருக்கும் பிற வீடுகளில் தேங்காய் வெட்டும்போது உரிக்காத நெற்றுத் தேங்காய் இருபத்தைந்து வாங்கிக் கொள்வான். மட்டையுடனான தேங்காய் ஒன்றுக்கு சில ஆண்டுகளாகவே பன்னிரண்டு பணம்தான். அவன் குடியிருக்கும் நகரின் விலையை விட காய்கறிகள் கிலோவுக்கு பத்து ரூபாய் சகாயம். அஃதன்றியும் ரச கதலி, செந்துளுவன், ஏத்தன், சிங்கன், பேயன், பாளையங்கோட்டன், கற்பூரவள்ளி வாழைப்பழச் சீப்புகளில் ஏதோ ஒன்று விலைபேசி வாங்கிக் கொள்ளலாம். பப்பாளியும் சீதாப்பழமும் அன்னாசியும் மலிவாகக் கிடைக்கும்.
எனவே மணிக்கூண்டு போகவரப் பேருந்துப் பயணம், ஒரு கட்டன் சாயா, நகர்மன்றக் கட்டணக் கழிப்பிடத்தில் மூத்திரம் பெய்ய ஐந்து பணம், மூன்று மணி நேரம் செலவு என்று கணக்கிட்டாலும், மணிக்கூண்டு போய் வருவது நட்டமில்லை. ஒரே தூரம்தான் என்றாலும் லொடலொட கடமுட அரசுப் பேருந்தில் கட்டணம், ஒரு வழிப் பயணத்துக்குப் பதினோரு பணம். அரசு வெடவெட சொகுசுப் பேருந்தில் இருபத்தி மூன்று பணம். காமம் பீறிட்டுச் சொரியும் சினிமாப் பாடல் இரைச்சலுடன் தனியார் பேருந்தில் பன்னிரண்டு பணம்.
அறுபத்தைந்து வயதுக்கு மேற்பட்டவர்கள், தம்மால் முடிகிற நேரத்தில், வீட்டிலிருந்து வெளியே இருப்பது நல்லது என்றொரு மருத்துவக் கட்டுரை வாசித்த நினைவு. யாவற்றுக்கும் மேலே, இது போன்றதொரு அனுபவமும் கதைக்கரு ஆகும் அல்லவா?
அன்றும் அவன் கையில் ஜெராக்ஸ் எடுத்த தாள்களும், விஜயா பதிப்பகத்தில் வாங்கிய என். ஸ்ரீராம் எழுதிய ‘மாயாதீதம்’ எனும் சிறிய நாவலும், விஜய ராவணன் எழுதிய ‘இரட்டை இயேசு’ என்ற சிறுகதைத் தொகுப்பும், பொள்ளாச்சி அபி எழுதிய ‘பாட்டையா’ எனும் சிறுகதைத் தொகுப்பும் அடங்கிய பை ஒன்று. அல்லாமல் மேற்படி பல வெஞ்சன – காய்கறிகள் கொண்ட இரண்டு பைகள். மூன்றுமாக ஆகக்கூடி எட்டுக்கிலோ இருக்கலாம். அவன் வயதுக்கு அதிகச் சுமைதான். அப்படித்தான் காலம் கொண்டு போக முடிகிறது.
குமரன் சந்தையில் இருந்து குறுக்குச் சாலைகளில் நடந்து வந்து வைசியாள் வீதி பேருந்துத் தரிப்புக்கு வந்தான். வைசியம் என்பது நான்கு வர்ணங்களில் ஒன்றுதான். என்றாலும் ஐம்பத்தேழாண்டு முற்போக்கு சமூகநீதி சமத்துவ அரசுகள் அப்பெயரை அனுமதித்தன. ஆனால் ஆச்சாரியார், கிராமணியார், நாயுடு, தேவர், பிள்ளை, நாடார், கவுண்டர், முதலியார், செட்டியார் எனும் பெயர்ப் பின்னொட்டுக்கள், அறிஞராயினும் தியாகி ஆயினும் போராளி ஆயினும் விரும்பத்தகாதவை. பிறமாநிலத்துப் பின்னொட்டுக்கள் பற்றி அக்கறை இல்லை எவர்க்கும்!
வைசியாள் வீதி என்றதும் அவனுக்கு நினைவுக்கு வருவது சந்தையும் பலசரக்கு சாதனங்களும் டாஸ்மாக் கடையும் அல்ல. அவன் காத்து நின்ற பேருந்துத் தரிப்பில் இருந்து மூன்று நிமிட நடையில், அதே வீதியில் சிவக்கவிமணி சி.கே. சுப்பிரமணிய முதலியார் வாழ்ந்த வீடு, ‘சேக்கிழார் இல்லம்’ இருந்தது. அவர்தான் பன்னிரு திருமுறைகளில் பன்னிரண்டாம் திருமுறையான பெரியபுராணம் எனப்படும் திருத்தொண்டர் புராணத்துக்கு உரை எழுதியவர். முதற்பதிப்பு 1943. இதுவரை ஐந்து பதிப்புகள் வந்துள்ளன. 4281 பாடல்களுக்குமான உரை மொத்தம் ஏழு தொகுதிகள். A 4 அளவில் கிட்டத்தட்ட ஏழாயிரம் பக்கங்கள். அதுமட்டுமல்லாமல் கோவைச் சிறையில் செக்கிழுத்து, சிறைத் தண்டனை அனுபவித்து, காராக்கிரகத்தில் இருந்து கப்பலோட்டிய தமிழன் வ.உ. சிதம்பரம்பிள்ளை விடுதலை ஆனபோது அவரை எதிர்கொண்டு வரவேற்று, தனது வீட்டில் அடைக்கலம் தந்து ஆதரித்தவர். அல்லால் வ.உ.சி.யின் விடுதலையை எதிர்பார்த்து – தலையா கடலலையா என்று எந்தக் கூட்டமும் காத்திருக்கவில்லை. பாரதியின் மரணத்துக்கு மட்டும் மக்கட் பெருக்கால் சாலை மறிந்து வழிந்ததா என்ன? சினிமாக்காரன் செத்தால் தீக்குளிப்பவன்கள் இவன்கள்!
சிவக்கவிமணி சி.கே.எஸ். முதலியார் உரத்துக்கான காரணம் அவர் வழக்கறிஞர் என்பதும், சைவ இலக்கியங்களை எழுத்தெண்ணிப் படித்தவர் என்பதும் சிவநெறிச் செம்மல் என்பதுமாகும். ஈண்டு சிவநெறிச் செம்மல் என்பது அவரது தகுதிகருதிய அடைமொழி. மற்றல்லாமல் ஏதோர் அரசியல் கட்சியின் சிபாரிசினால் வழங்கப்பெறும் வேம்பு விருது, சேம்பு விருது, வாகை விருது, புங்கன் விருது, கொன்றை விருது, எட்டி விருது, நாவல் விருது, மருது விருது போன்றதொன்று அல்ல.
வைசியாள் வீதி பேருந்து நிறுத்தத்தில் ஆணும் பெண்ணுமாக நல்ல கூட்டம். யாவரின் கைகளிலும் சந்தைச் சாமானோ, பல வெஞ்சனச் சாமானோ கொண்ட சின்ன பிளாஸ்டிக் சாக்கு, கூடை, கட்டைப்பை, துணிப்பைகள் இருந்தன. அடுமனை, மருந்தகம், பிளாஸ்டிக் பொருட்கள் விற்கும் கடை வாசல்கள் தவிர ஒதுங்கி நிற்க நிழல் இல்லை. கிடைத்த இடத்தில், கடைப் படிக்கட்டு ஓரங்களில் முதிய பெண்டிர் சிலர் ஒடுங்கி அமர்ந்திருந்தனர். அந்த வழித்தடத்தில் சிறுவாணி, வெள்ளியங்கிரி, ஈஷா யோக மையம், மாதம்பட்டி, சுண்டக்காமுத்தூர், கோவைப்புதூர், பேரூர் எனப் பல பேருந்துகள்!
அவன் பேருந்துக்கு அவனன்றி வேறு யார் காத்து நிற்க இயலும்? அடுத்து வரும் பேருந்து நமதுதான் எனும் நம்பிக்கையின் பேரொளி யாவரிடமும் இருந்தது. அடுத்து வருவது நல்லாட்சிதான் எனும் நம்பிக்கைதானே மக்களாட்சி! திருப்பத்தைத் தாண்டி, போலீஸ் ஸ்டேஷன் – வேண்டாம் – காவல்நிலையம் கடந்துவரும் ஒவ்வொன்றையும் உற்றுப் பார்த்து நின்றனர். மூன்று நிமிடத்திலும் வரலாம் ஐம்பத்தாறு நிமிடத்திலும் வரலாம். யாவும் அன்றைய ராசிபலன் படி. ஆரபி ராகத்தில், நகுமோமு எனும் கீர்த்தனையில் ஏழாவது வரியில் தியாகய்யர் பாடியதைப் போல, ‘ஜகன்மேலே பரமாத்ம எவரிதோ மொறலிடுது?’
செவ்வாய் கோளுக்கு விண்கலன்கள் பாயும். கண்டம் விட்டுக் கண்டம் தாவ ஏவுகணைகள் உண்டு. ஆழ்கடலின் கனிமவள ஆய்வு நடக்கும். அதிவேக விமானம், இரயில், கார் அநேகம். மதிய உணவு பசி நேரத்தில், நிழற்குடையின்றி, நா வறள, வாகன நெரிசல் புகைப் புழுதி ஆரன் வல்லோசைப் புழுக்கத்தில், மூத்திரம் அடக்கிக்கொண்டு – மலம் முட்டாதிருந்தால் நற்பேறு – பலரும் அரைமணி முதல் முக்கால் மணி நேரம் வரை, பேருந்துக்குக் காத்து நிற்றல் வேண்டும். ஒரு நாள் நிகழ்வல்ல; தினசரி நடைமுறை. ஒரு நாள் செத்தால் ஒரு நாள் ஒப்பாரி வைக்கலாம்! அன்றாடம் சவம் விழுந்தால் எவரிடம் முறையிடுவது உலகத்தில் பரமாத்மாவே!
கஞ்சிக்கு உப்பில்லை என்பதுவும் கவலைதான். சுண்டக் காய்ச்சிய பசும்பாலில் போட குங்குமப்பூ இல்லையே என்பதுவும் விசனம்தானே!
மாதம்பட்டி பயணியருக்கு, பெண்களுக்கு ஓசி எனும் பேருந்து வந்தது. முகப்புப் பக்கம் ஊதாநிறம் என்பதே அடையாளம். பயணச்சீட்டு வாங்கும் ஆண்களும் ஏறிக்கொள்ளலாம். ஆனால் கட்டணக் கழிப்பறைக்கு எவர் போனாலும் கட்டணம் ஐந்து பணமேதான்.
ரெக்சின் இருக்கையையும் சாய்வையும் கழற்றிக் கடாசிவிட்டு அப்படியே காயலான் கடைக்கு அனுப்பி, தூக்கம் கணக்கிட்டு, கிலோ பதினேழு பணம் மேனிக்கு விற்றுவிடலாம் எனும் தோதில் பேருந்து. அடுத்த தேர்தலில் நிற்கவும் பத்திருபது கோடி வேண்டும். முப்பது தலைமுறைக்கு ஆடம்பர சொகுசு சுகபோக வாழ்வுக்காக அவயான்கள் போலப் பொந்துகளில் புதைத்து வைக்க செல்வக் குவியல்கள் அடித்து மாற்ற வேண்டும்.
அந்தப் பேருந்து கண்ணீரும் கம்பலையுமாகக் கடந்து போனபிறகு பதினேழாவதாக அவன் தடத்து வண்டி வந்தது. ஒரு கையில் பைகளைப் பிடித்துக் கொண்டு, மறு கையால் கம்பியைப் பிடித்துக் கயறுவது பிரயாசையாக இருந்தது. பத்தாண்டுகளுக்கு முன்பு இந்த எண்ணங்களே தோன்றியதில்லை.
முதுமை பல விடயங்களைப் புலப்படுத்தும் களன். சுவை பேதங்களை மழுங்கடிக்கும். செவித்திறனைக் கலங்கடிக்கும். பற்கள் உடைபடும், இடை விடும், நெரிபடும், விழுபடும். தலைமயிர் – குஞ்சி – வெளிவாங்கும், வெண்மை பரப்பும். மூக்கு கற்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ என உசாவும். முகம் புலப்படும் பெயர் விடுபடும். பண்டு பலமுறை பயணித்த பாதை மறக்கும். காமக் கடும்புனல், பசிப்பிணி, இல்லி தூர்ந்த பொல்லா வறுமுலை போல் முதுமை சோர்வா, தளர்வா, தன்னம்பிக்கை உடைவா, சாவுக்கான நீண்ட வரிசையில் நின்று வரிசை பிழைப்பதா? அணங்கும் பிணியும் அன்றே என்பதா?
ஒரு கையில் பேருந்துக் கைப்பிடிக் கம்பியும் மறுகையில் மொத்தமாய் ஏழெட்டுக் கிலோ எடை கொண்ட பைகளுமாய் உள்ளேறி, உட்கார இடமில்லை என்பது தெளிந்து, தோதாக நிற்க இடம் தேடியபோது, அடுத்த நிறுத்தத்தில் இறங்கப்போகிற ஒருவர் எழுந்து இடம் தந்தார். அது பின் சக்கரத்தின்மேல் அமைந்த, கால்வைக்கும் இடம் மேடான இருக்கை. நிற்றலின் கால்மடக்கி அமர்தல் நன்றன்றா? வலது காலை பின்சக்கர மேடையில் மடக்கி வைத்து, பைகளை மேட்டில் வைத்துப் பிடித்துக் கொண்டு, இடதுகாலை வெளியே வைத்து, இடக்கையில் முன்னிருக்கைக் கம்பியைப் பற்றிக் கொண்டான்.
யன்னலோர இருக்கைக்காரர் இரண்டு கால்களையும் சக்கர மேடை மேல் மடித்து வைத்து, தலையை முன்பக்க இருக்கைக் கம்பியில் முட்டுக் கொடுத்து வலது கையில் ஸ்மார்ட் ஃபோன் வைத்து நோண்டிக் கொண்டிருந்தார். உலக இலக்கியங்கள் வாசிக்கப் போகிறாரா அல்லது கர்னாடக – இந்துஸ்தானி – மேற்கத்திய இசை கேட்கப் போகிறாரா? பெரும்பாலும் முலைக்காம்புகளையும் யோனிப்பிளவையும் மட்டுமே மறைத்து ஆடிப்பாடும் கற்பின் கனலிகளின் சினிமாக் காட்சிகளையும் வக்கரித்த பாடல்களையும்தான்! மேம்போக்காகப் பேருந்தினுள் நிரவி மேய்ந்ததில் அமர்ந்திருந்தோரில் பெரும்பான்மையோர் செல்ஃபோன்தான் பீராய்ந்து கொண்டிருந்தனர். ‘கல்லினில் நார் உரிப்பாருண்டோ, நின்னைக் காரணம் காட்டுதல் ஆகுமோ?’ என்ற பாடல்வரி நினைவுக்கு வந்தது. அவனது மொபைல் போன் புத்தகங்கள் இருந்த பைக்குள் கிடந்தது.
சில சமயம் அவனுக்குத் தோன்றும். ஒரு மாதகாலம் செல்ஃபோன்களுக்கான எத்தொடர்பும் கிட்டாமற் போனால் என்ன நடக்கும் நாட்டில்? எண்ணற்ற தற்கொலைகள், கணக்கற்ற கொலைகள், வரம்பற்ற பித்து நிலைகள் தோன்றக்கூடும். திரு விவிலியத்தில் ஆண்டவர் எச்சரித்ததைப் போல – ‘God sent Noah the rainbow sign; No more water, The Fire next time’ – என்பது சரியாகவே இருக்கும் போல. தீ – நெருப்பு – கனல் – அனல் – அக்னி – அங்கி – எரி – தழல் – அழல் – தணல் – கனல் எவ்வடிவில் வந்தாலென்?
தடதட, கடகட, லொடலொட, மடமட, படபட, சடசட, வெடவெட எனும் சப்த ஸ்வர ஒலிகளோடும் கர்புர் எனும் ஸ்வர பேதங்களுடனும் சாலைகளின் குன்றுகளிலும் பள்ளத்தாக்குகளிலும் நீர்நிலைகளிலும் ஏறியும் இறங்கியும் பேருந்து போய்க்கொண்டிருந்தது. நற்பேற்றின் காரணமாக அந்த அரசு நகரப் பேருந்தில் ஒலிபெருக்கிகள் இல்லை. புட்டத்தையும் தொடைகளையும் கொங்கைகளையும் இடையையும், அடிவயிற்றையும் காமக் கடுப்புடன் போற்றிப்பாடும் இதிகாசப் பாடல்கள் இல்லை.
செல்வபுரம், தெலுங்குபாளையம் தாண்டி, சாய்க்கடை போல் கிடந்த நொய்யலையும் அதன் மருங்கில் கிடந்த சுடுகாடுகளையும் கடந்து பேரூரில் வந்து நின்றது பேருந்து.
பட்டீசுவரரும் பச்சை நாயகியும் இருப்பிடம் கொண்ட, சுந்தரமூர்த்தி நாயனார் பாடிய வைப்புத்தலம். நொய்யல், இறவாப்பனை, பிறவாப்புளி, தெப்பக்குளம் எனச் சிறப்புக்கள் பெற்ற தலம்.
சிலர் இறங்கினர், மற்றும் சிலர் ஏறினர். நேரம் மதியம் இரண்டேகால் மணி. பசி மொழிப்பகை எனப் படர்ந்து எரிந்தது. அவன் இருக்கைக்கு அருகில் மூன்று மூத்த பெண்டிர் வந்து நின்றனர். இருக்கைக் கம்பியின் மேல் பற்றி இருந்த அவன் கையின் மேல் படிந்து கடந்து முதிய பெண்கரம் ஒன்று கம்பியைப் பலமாகப் பிடித்து நின்றது. கையில் செக்கச் சிவந்த ஆறு கண்ணாடி வளைகள் கிடந்தன. நிமிர்ந்து பார்த்தான். எப்படியும் எண்பது கடந்திருப்பார். சிவந்த நிறம். திருமாங்கல்யம் மஞ்சள் கயிற்றிலும் தங்கத்தின் மாலையும் சுருக்கம் விழுந்த கழுத்தில். காதுகளில் கம்மலும் மாட்டியும். தோளில் அதிக எடையற்ற பையொன்று தொங்கிற்று. இடக்கையில் பச்சை நிறக் கண்ணாடி வளையல்கள் ஆறு கிடந்தன.
அவனினும் மூத்த பெண்மணி என்பதால், எழுந்து “உக்காருங்கம்மா…” என்றான்.
அவன் தோளைத் தொட்டு அழுத்தி, “வேண்டாந் தம்பி… நீங்களே உக்காருங்க… சுண்டக்காமுத்தூர் வரைதான்…” என்றார்.
கணக்குப்படி அவனுக்கு இன்னும் ஆறு தரிப்புகள் இருந்தன. மேலும் இரு தரிப்புகள் கடந்தால் வரும் தரிப்பு அவன் வாழ்ந்த பகுதி. பொறுக்கிகள் பெயரிலும் தியாகிகள் பெயரிலும் நகர்கள் இருந்தன நாட்டில். தமிழன் நஞ்சும் அமுதென்று நினைத்து ஆசையாய் அள்ளிப் புசிப்பவன்.
அவருடன் ஏறிய மற்ற இரண்டு மூத்த பெண்டிரும் நின்றுகொண்டே உரையாடி வந்தனர். ஏதாவது கல்யாணம், சீமந்தம், சஷ்டியப்தபூர்த்தி, சீர் முடிந்து வீடு திரும்புபவர்களாக இருக்கலாம். மூத்த சுமங்கலிகள். குமுதச் செவ்வாயில் வெற்றிலைக் கொலு வீற்றிருந்தது. சுந்தரத் தெலுங்கினில் மாத்தாடினார்கள். அவனுக்குத் தெலுங்கு தெலிசிலேது என்றாலும் மாத்தாடினால் மனசிலாகும்.
எல்லோர் முகங்களும் கலகலப்பாக இருந்தன. அவன் பக்கம் நின்றிருந்த செம்மூதாட்டி ஜாக்கெட்டுக்குள் கைவிட்டு, மணிப்பர்ஸ் எடுத்து மூன்று பயணச் சீட்டுகள் வாங்கினாள். பயணச்சீட்டு வாங்கியபின்பும் செம்மணிப் பூக்கள் அணிந்திருந்த அவள் கை, அவன் கைகளின் மேல் படிந்து இருக்கைக் கம்பியைப் பிடித்திருந்தது. அவனுக்கு அவன் விரல்களின் மீதான அவள் ஸ்பரிசம் பிடித்திருந்தது. ஆசிகளைச் சக்தியாக மாற்றிக் கடத்துவதாக உணர்ந்தான். மூத்தாள் தனது கடைசி நிமிடம் வரை நடமாடித் திரியவேண்டும் என பட்டீசுவரரையும் பச்சை நாயகியையும் வேண்டிக் கொண்டான்.
சுண்டக்காமுத்தூரில் அவர்கள் இறங்கிப் போயினர். வயது குறித்த அவனது அதீதமான அச்சமும் அவர்களுடன் இறங்கிப் போயிற்று. கலித்தொகையில், பாலைபாடிய பெருங்கடுங்கோ, ‘வளியினும் வரை நில்லா வாழுநாள்’ என்பார். (வளி – காற்று). அவரே, ‘யாறு நீர் கழிந்தன்ன இளமை’ என்பார். (யாறு – ஆறு). நற்றிணையில் காமக் களிப்பசலையார் ‘கவறு பெயர்த்து அன்ன நில்லா வாழ்க்கை’ என்பார். (கவறு – சூதாடும் கருவி).
எல்லாம் தெரியும், ஆனால் ஒன்றும் தெரியாது என்று எண்ணிக்கொண்ட அவன், தனது நிறுத்தத்தில் இறங்கத் தயாரானான்.
Discover more from சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026
Subscribe to get the latest posts sent to your email.
