நவம்

செல்லாமல் போய்விட்ட பண்டைய நாணயங்களை ஒத்து, மொழிக்குள் இலட்சக்கணக்கான சொற்கள் புதைந்து கிடக்கின்றன. நம் மொழிக்குள் என்று இல்லை, எம்மொழிக்குள்ளும். இன்றைய மதிப்பீட்டில் அவை காலாவதி ஆகி இருக்கலாம். ஆனால் வேறோர் சந்தை மதிப்பில் அவை அரிதானவை.

2011-ஆம் ஆண்டின் ஜனவரி மாதம், 2009க்கான கலைமாமணி விருதை அன்றைய முதல்வரான கருணாநிதி கையிலிருந்து பெற்றுக் கொண்டு, விமானமேறி, 2010க்கான சாகித்ய அகாதமி விருதை புது தில்லியில் ஏற்றுக் கொண்டு அரித்துவார் போயிருந்தேன். என்னுடன் மனைவியும் இருந்தார். மனைவியின் விமானச் செலவை தில்லி தமிழ்ச்சங்க நிர்வாகி ஒருவரும், தங்குமிடம் வசதியை நீண்ட கால குடும்ப நண்பர் எஸ்.வைத்தியநாதனும் பார்த்துக் கொண்டனர்.

அரித்துவார், ரிஷிகேஷ் போய்வருவதற்கான பயணச் சீட்டுக்களை ‘வடக்கு வாசல்’ ஆசிரியர் பெண்ணேஸ்வரன் வாங்கித் தந்தார். தலை எங்கே, கால் எங்கே என்று அறிந்து கொள்ள முடியாத, ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகப் பெருக்கெடுத்துப் பாய்ந்து கொண்டிருக்கும் ஆழமும் அகலமும் நீளமும் வேகமும் கொண்ட கங்கையைக் கண்டு பரவசப்பட்டு நின்றோம். கங்கா மா, கங்கா மையா, கங்கா மாயி எனப் புளகப்பட்ட பெருங்கூட்ட ஒலியின் ஊடே கங்கை ஆரத்தி கண்டோம். தங்கியிருந்த விடுதிக்கு, 14 0  c குளிரில் திரும்ப நடந்தபோது, நான்கடி அகலம், பத்தடி நீளத்தில் விரிக்கப்பட்டிருந்த கித்தான் துணியின் மேல், பழங்கால நாணயங்கள் விற்பனைக்குப் பரப்பி வைக்கப் பட்டிருந்தது கண்டோம்.

பழைய செப்பு ஓட்டைக் காலணா, பித்தளை அரையணா, ஓரணா, இரண்டணா, கறுக்காத இரும்புக் கால் ரூபாய், அரை ரூபாய், ஒரு ரூபாய், பிந்தைய செப்பு ஒரு காசு, பித்தளை இரண்டு காசு, ஐந்து காசு, பத்து காசு, இருபது காசு, இன்றைய நடப்பு நாணயங்கள் எனப் பல்வகை பாரத துணைக் கண்டத்தின் 56 தேசங்களில் எவரெல்லாம் நாணயம் அடித்துப் புழங்க விட்டிருந்தாரோ அவரது நாணயங்கள். இங்கிலாந்து, ஃப்ரான்சு, டச்சு, போர்ச்சுகீசு, இத்தாலி, அமெரிக்கா, கனடா, மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, சப்பான், சீனம் மற்றும் அரபு தேச நாணயங்கள். எல்லாம் பங்கு பங்காகக் குவித்துப் பரப்பப்பட்டும்.

உண்மையில் அவை செல்லாக் காசுகளா? புழக்கத்தில் இல்லாக் காசுகள். வேறொரு தளத்தில் சிறப்பாகச் செலாவணி ஆகின்றவை. சொற்களும் அப்படித்தான். அந்த நாணயக் குவிப்பைப் பார்த்தபோது எனக்கு அஃதே தோன்றியது.

செலாவணி ஆகிப் போன பண்டைத் தமிழ்ச் சொல் மவ்வல். இன்றைய தமிழ் சினிமாப் பாட்டில் செல்லுபடி ஆகிறது. அங்காடி தமிழ் சினிமாப் பெயராகிறது. பனுவல் புத்தகக் கடையின் பெயராகிறது. பழம் சொற்கள் பலவற்றையும் பரணில் போட்டு விட்டோம் என்பதனால் அவை உயிரற்றவை ஆகிவிடாது என்றும். நாவல் எனும் சொல்லுக்கு நவ்வல் என்பது மாற்றுச் சொல். நவ்வார் எனும் சொல்லுக்குப் பகைவர் என்று பொருள் உண்டு. பெண்மானைக் குறிக்க நவ்வி என்று சொன்னோம். நவ்வி என்றால் மரக்கலம் என்றும் பொருள். நாவாய் என்றாலும் மரக்கலம். நய்யா என்றால் இந்தியில் மரக்கலம். Navy எனும் சொல்லையும் நீங்கள் பரிசீலிக்கலாம். நவ்வு என்றால் முழுதாக நம்புதல் என்றும் பொருள்.

இந்தப் பின்புலத்தில் இந்தக் கட்டுரைக்கு நவம் என்று தலைப்பு வைத்தேன். உண்மையில் எண்கள் சார்ந்து இஃதென் ஒன்பதாவது கட்டுரை. நவம் என்ற சொல்லுக்கு முதற்பொருள் புதுமை. புதுமையை novel என்பர் ஆங்கிலத்தில். நாவல் என்பதோர் இலக்கிய வடிவம் என்பதும் அறிவோம். அதனால்தான் நாம் புதினம் என்றோம். நவம் எனில் நட்பு என்றும் பொருள் இருக்கிறது. பூமிக்கு நவம் என்பது மாற்றுச் சொல். நவம் எனும் சொல்லுக்கு நான்காவது பொருள் ஒன்பது என்ற எண். கார்காலம் என்பது ஐந்தாம் பொருள்.

பாரதியிடம் நவம் எனில் புதுமை எனும் பொருளில் உயர்ந்த கவிதை வரியொன்றுண்டு.

‘விசையுறு பந்தினைப் போல் – உள்ளம்
வேண்டிய படி செல்லும் உடல் கேட்டேன்
நசையறு மனம் கேட்டேன் – நித்தம்
நவம் எனச் சுடர் தரும் உயிர் கேட்டேன்’

என்றார்.  நசை – ஆசை, இச்சை, விருப்பு. நவம் – புதுமை. தினந்தினம் புதிதெனச் சுடர் விடும் உயிர் வேண்டும் என்பது பாரதியின் பிரார்த்தனை. அற்புதமான வரி. பாரதிக்கே அது போன்ற கவிவரிகள் வாய்க்கும் போலும். ‘மத்துறு தயிர்’ கம்பனின் ஆட்சி. ஜெயமோகனின் சிறுகதை ஒன்றின் தலைப்பு. ‘விசையுறு பந்து’ என்பது பாரதி ஆட்சி. நசையுறு மனம் தலைவர்கள் ஆட்சி.

திருவாசகம் நவம் எனும் சொல்லைப் புதுமை எனும் பொருளில் கையாள்கிறது. தில்லையில் அருளைப் பெற்ற திருத்தெள்ளேணம், நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா பேசுகிறது:

‘அவமாய  தேவர் அவகதியில் அழுந்தாமே
பவமாயம் காத்தென்னை ஆண்டு கொண்ட பரஞ்சோதி
நவமாய் செஞ்சுடர் நல்குதலும் நாம் ஒழிந்து
சிவமான வாபாடித் தெள்ளேணம் கொட்டிமோ’

என்பது பாடல். மகா வித்வான் தண்டபாணி தேசிகர் உரை: வீணான தேவர்களது கீழான நெறியிற் சென்று அழுந்தாதபடி, பிறப்பால் உண்டாய வஞ்சனைய நின்று அடியேனைக் காப்பாற்றி ஆண்ட மேலான ஒளிவடிவமாகிய பெருமர் புதிதாய் சிவஞானத்தை அருளுதலும், தாம் என்னும் முனைப்பு நீங்கிச் சிவமான தன்மையைப் புகழ்ந்து பாடித் தெள்ளேணம் கொட்டுவோம்.

அவம் எனில் கீழ்மை. நவம் எனில் புதுமை. நவம் இல்லை எனில் அது அவம், சவம். சொற்கள் சார்ந்து தொடங்கினோம் இந்தக் கட்டுரையை அண்மையில். திருச்சிராப்பள்ளியில், அபுதாபி   நண்பர் ஜெயகாந்த் ராஜூவின் புதல்விகளின் நாட்டிய அரங்கேற்றம். எனக்கும் கலந்து கொள்ள வாய்த்தது. புரந்தர தாசரின் கன்னட கீர்த்தனை ஒன்றுக்கு அபிநயம் பிடித்தார்கள் அற்புதமாக. “கோவிந்தா கோவிந்தா” எனும் பிருந்தாவனி ராகக் கீர்த்தனை. தயிர் கடையும் மத்தை ஒளித்து வைத்திருந்த கோவிந்தனிடம், யசோதை, மத்து தந்தால் தானே தயிர் கடைந்து வெண்ணெய் எடுத்து உண்ணத் தரவியலும் என்று கெஞ்சும் பாவம். மத்து என்றால் நாம் அறிவோம். அவற்றுள் கீரை கடையும் கீரை மத்து உண்டு. தயிர் கடையும் தயிர் மத்தும் உண்டு. மத்துக்கு மாற்றுச் சொல்லாக, புரந்தர தாசர் ‘கடகோலு’ என்றொரு கன்னடச் சொல்லைக் கையாண்டிருந்தார். கடகோலின் தமிழ் வடிவம் கடைகோல். கடைக்கோல் என்று ஒற்றுச் சேர்க்கலாகாது. கடைசியான, இறுதியான கோல் என்று பொருள் ஆகிவிடும். வினைத் தொகையாகக் கடைகோல் எனல் வேண்டும். கடைந்த கோல், கடைகிற கோல், கடையும் கோல். மத்துக்கான மாற்றுச் சொல்லாக கடை கோல் என்றறிய சிலிர்ப்பாக இருந்தது.

அதுபோலவே நவம் என்ற சொல்லும். நவதை என்றாலும் புதுமை என்பதே பொருள். நவநீதம் என்றாலும் புதுமையே. புதுமைக்கு மற்றுமொரு சொல் நவியம். நாவல்டி, நியூனெஸ், நியூ (Novelty, Newness, New) எனும் பொருள் சொல் நவியம். தமிழ்ச் சொற்களைக் கையாள்வதில் எளிமை உணரலாம், ஆனால் பொறுப்பும் உண்டு. நவியம் என்றால் கோடரி என்றும் பொருள் உண்டு. புற நானூற்றில், கல்லாடனார் பாடல். பாண்டியன் தலையானத்துக் கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனைப் பாடியது. அந்தப் பாடல், கோடரி என்னும் பொருளில் நவியம் எனும் சொல்லை ஆள்கிறது. ‘வடி நவில் நவியம் பாய்தலின், ஊர்தொறும் கடிமரம் துளங்கிய காவும்’ என்று.

எந் நாளும் அழியாத மா கவிதை, நவ கவிதை என்பார் பாரதி.

’சுவை புதிது பொருள் புதிது வளம் புதிது
சொல் புதிது சோதி மிக்க நவகவிதை
எந்நாளும் அழியாத மா கவிதை’

என்கிறார்.

இந்தக் கட்டுரையின் தலைப்பான நவம் என்ற சொல்லுக்கு ஒன்பது எனும் மூன்றாவது பொருளைக் கையாண்டு தொடர்கிறேன். எவரோ வினவுவதும் செவிப்படுகிறது! ஏன் ஒன்பது என்று சொல்லிவிட்டுப் போய்விடலாமே என்று. சொல்லி விடலாம் தான். ஆனால் நவம் எனும் சொல் ஓரசைச் சீர். நிரையசை. ஓசை நலம் நன்றாக இருக்கிறது. புதுமையாகவும் இருக்கிறது பிரதானமாக. மற்று, வடமொழிக் காதலால் அல்ல. ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே மொழிக்குள் வந்து வாழும் சொல்லை இழக்க வேண்டாமே என்பதுவும் காரணம். மேலும் முறைப்படுத்தப் பட்டு, மொழிக்குள் வந்து சேரும் சொற்கள் மொழிக்கு உரமே அன்றிக் களை அல்ல என்பதென் கருத்து.

நவமணிகள் எனும் சொல்லொன்று வெகுகாலமாகப் புழங்குகிறது. அதனை நவரத்தினங்கள் என்பார்கள். குஜராத்தி உணவு விடுதிகளில் நவ்ரத்தன் குருமா என்றொரு தொடுகறி உண்டு. அது நவமணிகளினால் ஆனதல்ல. கோமேதகம், நீலம், பவளம், மரகதம், மாணிக்கம், முத்து, புட்பராகம், வைடூரியம், வயிரம் என்பன நவமணிகள். அவற்றுள் ஒன்றோ, இரண்டோ பார்த்திருப்பேன். எதையும் அறிந்ததில்லை. கம்பன் இவற்றுள் எல்லா மணிகளையும் கையாள்கிறான். அவனும் அத்தனையும் பார்த்திருப்பனோ என்னவோ?

மும்மணிக் கோவை,  நான்மணி மாலை போல நவமணி மாலை என்றொரு பிரபந்த வகையும் உண்டு தமிழில். ஒன்பது பாவினங்களையும் அந்தாதித் தொடையில் இயற்றப் பெறும் ஒரு சிற்றிலக்கியம். நெக்லஸ் ஆஃப் 9 ஜெம்ஸ்   (Necklace of 9 Gems) என்பதை நவரத்தின மாலை என்றும் நவமணி மாலை என்றும் சொல்வார்கள். நமது மரபில் அஷ்டமி, நவமி என்பது அடிக்கடி பயன்படுத்தப்படும் சொற்கள். நவமி எனில் பௌரணமி அல்லது அமாவாசைக்கு அப்புறம் வரும் 9 ஆவது நிலாநாள் ஆகும். (9th Lunar day after the new or full moon). இனிமேல் நாம் நவம் தொடர்பான சில செய்திகள் காணலாம்.

நவக்கிரக செபம்-       மனிதர்க்கு உண்டாகும் தீமைகளை விலக்குவதற்காக, சூரியன் முதலாய ஒன்பது கோள்களையும் வழிபடும் கொள்கை.

நவக்கிரகம்-                  சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், காரி, இராகு, கேது ஆகிய ஒன்பது கோள்கள். கோளறு பதிகம் என்றொரு பதிகமும் உண்டு.

நவக்கிரக வாதி-      நவக்கிரகங்களே படைப்பு முதலாய முத்தொழிலுக்கும் மூல காரணம் என வாதிடும்  சமயத்தினர்.

நவகண்டம்-             பூமியிலுள்ள ஒன்பது கண்டங்கள் – நவ வர்ஷங்கள் என்பன.

நவ கதிர்-                   ஆசீவக சமயத்தார் நூல்

நவ கோடி சித்தபுரம்- திருவாவடு துறை

நவ கருமம்-              புதுப்பிக்கும் வேலை. Renovation, repairs.

நவ சூதிகை-             A cow recently calved. அண்மையில் ஈன்ற பசு. கன்றை உடைய பசு என்பதற்கு ‘கற்றா’ என்கிறார் மாணிக்க வாசகர். அண்மையில் ஈன்ற பசுவினைக் குறிக்க, ‘புனிற்றா’ எனும்  சொல் பழந்தமிழ் நூல்களில் பயன்படுத்தப் பட்டிருக்கிறது. அதாவது நவ சூதிகை= புனிற்றா.

நவஞ்சம்-                  ஓமம்

நவம்சாரம்-              நவச்சாரம் எனும் உப்பு

நவத்துவாரம்-         கண்கள், நாசித் துவாரங்கள், காதுகள், வாய், மலத்துவாரம், சிறுநீர்த்துவாரம் எனும் ஒன்பது உடல் வாயில்கள். இது ஆண்களுக்குச் சரி. பெண்களுக்கான யோனி வாசல் என் கருத்தில் கொள்ளப்படவில்லை என்பது தெரியவில்லை.

நவகளம்-                  தாமரையின் இள இலை.

நவ தாரணை-        யோகத்தில் ஒன்பது வகைப்பட்ட மனோ தாரணை

நவ தாளம்-               ஒன்பது வகையான தாளங்கள்

நவ தானியம்-         ஒன்பது வகை தானியங்கள்.  கோதுமை, நெல், துவரை, பயிறு, கடலை, அவரை, எள்,  உழுந்து, கொள் என்பன. இந்தப் பட்டியல் நிரந்தரமானதல்ல. சப்த கன்னியர் போல விருப்பம் சார்ந்து மாறக்கூடியது.

நவதி-                         தொண்ணூறு. பொடுதலை எனும் மருந்துச் சிறு கீரை வகை

நவதிகை-                  brush

நவ தீர்த்தம்-             இந்துக்களின் ஒன்பது புனித நதிகள். கங்கை, யமுனை, சரசுவதி, நர்மதை, சிந்து, காவேரி,  கோதாவரி, சோணை, துங்கபத்திரா எனும் புண்ணிய நதிகள்.

நவ நதி-                     கங்கை, யமுனை, சரஸ்வதி, நர்மதை, கோதாவரி, காவிரி, சரயு, குமாரி, பயோஷ்ணி

நவ தீர்த்த, நவ நதிப் பட்டியலும் நிரந்தரமானதல்ல.

நவதை-                     புதுமை

நவ நாகம்-             அட்ட மா நாகங்களும், ஆதி சேடனுமாகிய ஒன்பது மகா நாகங்கள். அட்ட மா நாகங்கள் எவை என்பதை எனது அட்டமா கட்டுரையில் காணலாம்.

நவ நாகம்-              ஓமம்

நவ நாணயம்-       புது வழக்கம். New practice, Innovation

நவ நாத சித்தர்-    ஒன்பது முதன்மைச் சித்தர்கள்.

சத்திய நாதர், சதோக நாதர், ஆதி நாதர், அனாதி நாதர், வகுளி நாதர், மதங்க நாதர்,  மச்சேந்திர நாதர், கடேந்திர நாதர், கோரக் நாதர்.

நவ நாயகர்-            ஒன்பது கிரக நாயகர்கள். The nine planetary lords.

நவ திதி-                    குபேரனின் ஒன்பது வகையான நிதிகள். (The nine treasures of Kubera.)

பதுமம், மா பதுமம், சங்கம், மகரம், கச்சபம், முகுந்தம், நத்தம், நீலம், கர்வம் எனும் ஒன்பது  வகைத்தான குபேர நிதி. இன்றைய குபேரர்களின் நவ நிதியங்கள் என்பன கரன்சி, பொன்,  எஸ்டேட், கம்பனி பங்குகள், நிலங்கள், வணிக வளங்கள், வாற்று ஆலைகள், கல் அல்லது மணல் குவாரிகள், மருத்துவ அல்லது பொறியியல் கல்லூரிகள் அல்லது மருத்துவ மனைகள்.

நவ நீதகம்               நெல்

நவ நீத சோரன்     வெண்ணெய்க் களவாணி, கண்ணன்

நவநீத பாகம்         Transparent simplicity of poetic style.

நவ நீதம்                  வெண்ணெய், புதுமை

நவ நந்தனர்           ஒன்பது இடையர்கள்

நவப் பிரம்மா        The nine creators.

மரீசி, பிருகு, அங்கிரர், கிரது, புலகன், புலத்தியன், தக்கன், வசிட்டன், அத்திரி எனும் ஒன்பது சிருஷ்டி கர்த்தாக்கள்

நவப் பிரீதி               வெடியுப்பு

நவப் பிரேதம்          எட்டுத் திக்குகளையும் மேலிடத்தையும் காவல் செய்யும் பூதங்கள்

நவ பண்டம்             நவ தானியம்

நவ பதார்த்தம்          The nine categories of fundamental realities. சீவம், அசீவம், புண்ணியம், பாவம், ஆசிரவம், சம்வரை, திர்ச்சலை, பந்தம், மோட்சம் எனும் ஒன்பது வகை ஜைனத் தத்துவங்கள்

நவ பாண்டம்           புதுப்பானை

நவ பாஷாணம்        இராமநாதபுரத்தை அடுத்துள்ள யாத்திரைத் தலமான தேவிபட்டணம் கடற்கரை நீரில் பிரதிஷ்டை செய்யப்பட்ட, நவக்கிரகங்கள் என்று கருதப்படும் ஒன்பது பெருங்கற்கள்.

நவ புண்ணியம்       The nine acts of hospitaility shown to an honoured guest. எதிர் கொளல், பணிதல், இருக்கை தருதல், கால் கழுவல், அர்ச்சித்தல், தூபம் கொடுத்தல், தீபங்காட்டல், புகழ்தல், உண்டி கொடுத்தல் எனும் ஒன்பது வகை உபசாரச் செயல்கள். இன்று சினிமா நடிகருக்கும், அரசியல்காரர்களுக்கும் தமிழர் செய்வது மேலுமோர் உபசாரம் உண்டு. அது இங்கே தவிர்க்கப்படுகிறது.

நவ பூசா வந்தம்       ஒன்பது முகமுள்ள காதணி

நவ போத மூர்த்தம் -Nine manifestations of Siva. ஒன்பது வகை சிவ போதம். சிவம், சக்தி, நாதம், விந்து, சதாசிவம், ஈசன், உருத்திரன், மால், அயன் என்பன.

நவம்                          புதுமை. நட்பு. ஒன்பது. கார்காலம். பூமி. சாரணி

நவ மரம்                   நாவல் மரம்

நவ முகில்               The nine kinds of clouds. சம்வர்த்தம், ஆவர்த்தம், புட்கலம், துரோணம், காளம், நீலம், வாருணம், வாயுவம், தமம் எனும் ஒன்பது வகை மேகங்கள்.

நவர்                           person- ஆள், நபர்

நவரதன்                   பீமரதன் புதல்வன்

நவ சாத்திரன்        வசுதேவருக்கும், தேவகிக்குமான மகன்

நவக்கிரக

அம்சங்கள்               சிவன் – சூரியன்

உமை- சந்திரன்
முருகன்– அங்காரகன், செவ்வாய்
திருமால்- புதன்
பிரம்மா- குரு, வியாழன்
இந்திரன் -சுக்கிரன் (வெள்ளி)
யமன்- சனி, காரி
பத்ரகாளி-இராகு
சித்திரகுப்தன் –கேது
இது சோதிட சாத்திரத்தின் படி.

நவசக்திகள்           வாமை, கேஷ்டை, ரவுத்ரி, காளி, கல விகரணி, பல விகரணி, பலப் பிரதமனி, சர்வ பூத தமனி,                                        மனோன்மணி.

குணங்குடி மஸ்தான் சாகிபுவின் ‘மனோன்மணிக் கண்ணி’ நினைவுக்கு வருகிறது.

நவ அபிடேகங்கள் – மஞ்சள், பஞ்சாமிர்தம், பால், நெய், தேன், தயிர், சர்க்கரை, சந்தனம், விபூதி

நவரசம்                     இன்பம், நகை, கருணை, கோபம், வீரம், பயம், அருவருப்பு, அற்புதம், சாந்தம் என்பன. இதனை, சிருங்காரம், ஆசியம், கருணை, ரௌத்திரம், வீரம், பயம், குற்சை, அற்புதம், சாந்தம் என்பர்.

நவ திரவியங்கள்     பிருத்வி, அப்பு, தேயு, வாயு, ஆகாயம், காலம், திக்கு, ஆன்மா, மனம்

நிலம், நீர், தீ, காற்று, வானம், காலம், திசை, ஆன்மா, மனம் என்பர்

நவ விரதங்கள்         சிவனுக்கான விரதங்கள் ஒன்பது.

சோமவாரம், திருவாதிரை, உமா மகேச்வரன், சிவராத்திரி, பிரதோஷம், கேதாரம், ரிஷபம், கல்யாண சுந்தரம், சூலம் என்பர்.

நவ சந்தி தாளங்கள்- அரிதாளம், அரும தாளம், சம தாளம், சுப தாளம், சித்திர தாளம், துருவ தாளம், நிவர்த்தி தாளம், படிம தாளம், விட தாளம் எனப்படும்.

நவ ரத்தினங்கள்      விக்கிரமார்க்கனின் சபையில் இருந்த ஒன்பது புலவர்கள். தன்வந்திரி, க்ஷணபதர், அமர சிம்ஹர், சங்கு, வேதால பட்டர், கட கர்ப்பரர், காளிதாசர், வராகமிஹிரர், வரருசி எனப்படுபவர்.

நவ வீரர்                    உமாதேவையின் காற்சிலம்பில் சிந்திய மணிகளில் பிறந்த பெண்கள். சிவனைக் காமுற்றுப் பிறந்த ஒன்பது வீரர்கள். முருகனுக்குத் துணைவரும் ஒன்பதின்மர். வீரபாகு, வீரகேசரி,வீரமகேந்திரன், வீர மகேச்சுவரன், வீரபுரந்திரன், வீரமார்த்தாண்டன், வீர ராட்சதன், வீராந்தகன், வீர தீரன்.

நவரங்கத் தட்டு       -நவரங்கப் பணி, விதான வேலைப்பாடுகளில் ஒரு வகை.

நவரங்கப் பளி         புடவை வகை

நவரங்கம்                 நாடகசாலை. கோயில் பிரதான மண்டபம்

நவரப் புஞ்சை        நெல்வகை

நவரம் பழம்             ஒரு வகை வாழைப் பழம்.

நவராசிகம்              கணக்கு வகை

நவராத்திரி              ஆவணி மாதத்தில் ஆண்டு தோறும் சுக்ல பட்ச பிரதிமை

தொடங்கி ஒன்பது நாட்கள். துர்க்கை, இலக்குமி, சரசுவதி, தேவியருக்கான திருநாட்கள்.

நவரை                       வாழை வகை. செந்நிறம் உள்ள ஆறு அங்குல நீளமுள்ள கடல் மீன் வகை

நவரை                       நெல் வகை

நவரையன் காளை  நெல்வகை

நவரோசு                   ஒரு இராகம்

நவலோகக் குப்பி  சுதை மண்

நவரோக பூபதி       ஒரு வகைக் காட்டு மருந்து

நவலோகம்              Nine kinds of metal.

பொன், இரும்பு, செம்பு, ஈயம், வெள்ளி, பித்தளை, தரா, துத்தநாகம், வெண்கலம்

நவலோகாங்கம்    காந்தம்

நவ வரிகை               புதுமணப் பெண்

நவ வருடம்               Nine divisions of Earth according to ancient Indian Geography.

 குருவருடம், இரணிய வருடம், இரமிய வருடம், இளாவிருத வருடம், கேதுமால வருடம், பத்திர  வருடம், அரி வருடம், கிம்புருட வருடம், பாரத வருடம் என்பர்.

நவ வானோர்கள்  Nine Choirs of Celestial spirits. கிறித்தவ மதத்தில் வழங்கப் பெறும் ஒன்பது வகை தேவ

கணங்கள்

நவ வியாகரணம்  ஒன்பது வகைப்பட்ட வடமொழி இலக்கணங்கள்

நவ வியூகம்              ஒன்பது வகைப் பொருள் தொகுதிகள்

நவ வியாச சபை   ஒன்பது வகை சுத்த ஆத்மாக்கள் கூடும் சபை.

நவாட்டுச் சர்க்கரை White cane sugar. நவாது

நவாடா                     தோணி

நவாம்சம்                  இராசியை ஒன்பதாகப் பிரித்தல்

நவியம்                      புதுமை, புதியது.

நவிர்                           ஆண் மயிர். மருதப் பண். தக்கேசிப் பண். வாள்.

முள் முருங்கை மரம். Blade of grass.

நவிரம்                       ஆண் மயிர். உச்சி. தலை. மயில். மலை. புன்மை.

நவீனம்                      புதுமை. நாவல். நவீனத்துவம் எனும் சொல் இதனின்று பெறப்பட்டது.

நவீனகம்                   புதுமை

 

நவம் புதுமை எனில் நவம் ஒன்பதும் ஆகும். ஒன்று முதல் பத்து வரையிலான எண்களில், ஒன்பது தவிர்த்த எண்கள் யாவும் இரட்டித்து வரும் என்கிறது நன்னூல். ‘ஒன்பது ஒழித்த எண் ஒன்பதும் என்பது நூற்பா. ஒவ்வொன்று, இவ்விரண்டு, மும்மூன்று, நந்நான்கு, ஐயைந்து, அவ்வாறு, ஏழேழு, எவ்வெட்டு, பப்பத்து என வருவது போல ஒன்பதுக்கு வராது. அந்த எண்ணுக்கு அந்தப் பேறு இல்லை. ஏனென்று தெரியவில்லை.

தொல்காப்பியம், சங்க காலம், சங்கம் மருவிய காலம் சார்ந்த இலக்கியங்கள் சிலவற்றில் ‘தொண்டு’ என்ற சொல், ஒன்பது எனும் பொருளில் வழங்கப் பெற்றிருக்கிறது. தொல்காப்பியம், பரிபாடல், மலைபடுகடாம், ஏலாதி ஆகிய நூல்களில் தொண்டு எனும் சொல் கையாளப் பெற்றுள்ளது ஒன்பது எனும் பொருளில்.

பரிபாடல், கடுவன் இளவெயினனார் பாடல், தத்துவங்களின் வடிவம் பேசும் காலை,

‘பாழ் என, கால் என, பாகு என ஒன்று என

இரண்டு என, மூன்று என, நான்கு என, ஐந்து என,

ஆறு என, ஏழு என, எட்டு என, தொண்டு என,

நால்வகை ஊழி எண் நவிற்றும் சிறப்பினை.’

என்கிறது. அறிஞர் ச. வெ. சுப்பிரமணியன் உரை: ‘பரமாத்வாகிய புருடன், நிலம் நீர்,தீ, காற்று, ஆகாயம் என ஐம்பூதங்களும் சொல்லல், இயங்கல், கொடுத்தல், விடுத்தல், இன்புறல் ஆகிய ஐந்து தொழில் கருவிகளும், ஆகாயம் ஒன்று, காற்று இரண்டு, தீ மூன்று, நீர் நான்கு, நிலம் ஐந்து, மனம் ஆறு, அகங்காரம் ஏழு, ஆணவம் எட்டு, புத்தி ஒன்பது. மூலப்பகுதி இவ்வாறு எல்லா வகை ஊழிகளிலும் ஆராய்ந்து கூறப்படும் சிறப்பினை உடையை.’  ஒருவாறு அர்த்தமானாலும் எனது தேவை ஒன்பதுக்குப் பதிலாக தொண்டு எனும் சொல் பயன்படுத்தப் பட்டுள்ளது என்பதுவே.

தென் திருவிதாங்கூர் இந்துக் கல்லூரியின் தமிழ்த் துறைத் தலைவராக இருந்த முனைவர் சி. சுப்பிரமணியன் ஒரு கட்டுரையில் ’40 ஆண்டுகளின் முன் தமிழகப் புலவர் குழுவின் வெளியீடாகிய மலர் ஒன்றில், தொண்டு என்னும் எண்ணுப் பெயர் குறித்த கட்டுரை வெளி வந்தது. அதில் ஏழ் (ஏழு) நீங்கலாக ஒன்று முதல் பத்து வரை, நூறு உட்பட யாவும் குற்றியலுகர முடிபினவே,’ எனவே ஒன்பது என்ற எண்ணுப் பெயருக்குப் பதிலாக தொண்டு என்ற எண்ணுப் பெயரே உகந்தது’ என்கிறார்.

திராவிட மொழியியல் அறிஞர்கள், ‘ஒன்பது’ என்பதன் மூல திராவிட வடிவமாகத் ‘தொண்டு’ இருந்ததாகக் கருதுகிறார்கள். எனவே தொண்டு (9), ஒன்பது (90), தொண்ணூறு (900), தொள்ளாயிரம் (9000) என்று நிலைத்திருக்க வேண்டும்.

எனினும் தொல்காப்பிய காலத்திலேயே, தொண்டுக்கு மாற்றாக 9 எனும் எண்ணைக் குறிக்க, ஒன்பது எனும் சொல்லும் புழக்கத்தில் வந்து விட்டது. ஒன்பது என்ற சொல்லை அக நானூறு, குறுந்தொகை மற்றும் திருமுருகாற்றுப் படை பயன்படுத்தியுள்ளமை அறிகிறோம். ‘ஒன்பதிற்று’ எனும் சொல்லையும் குறுந்தொகை, திருமுருகாற்றுப் படை, பரிபாடல் பயன்படுத்திய சான்றும் உண்டு.

பேரகராதி, ஒன்பது என்ற சொல்லுக்கு, ஒன்பது என்ற எண் தவிர்த்து வேறு பொருள் எதுவும் தரவில்லை. நவத்துக்கு உண்டான அனைத்துச் சிறப்பும் ஒன்பதுக்கும் உண்டு எனினும், ஒன்பது சார்ந்து அதிகம் பதிவுகளும் பேரகராதியில் இல்லை.   கண்ட சிலவற்றைக் கீழே தருகிறேன்.

ஒன்பதினாயிரப் படி-       திருவாய்மொழிக்கு நஞ்சீயர் செய்த வியாக்யானம்

ஒன்பதொத்து           –          ஒருவகைத் தாளம்

ஒன்பான்                   –           ஒன்பது

     ஒன்பது+நூறு= தொள்ளாயிரம் ஆனதற்கு விதி கூறும் தொல்காப்பிய எழுத்ததிகார                நூற்பா, ‘ஒன்பான் முதனிலை முந்து கிளந்தற்றே’ என்று தொடங்குகிறது.

ஒன்பது வாசல்                     மானுட தேகத்திலுள்ள நவத் துவாரங்கள்.

ஒன்பது                                  Number Nine. ஒன்பது என்னும் எண்.

பாரதியின் ’கனவு’ எனும் கவிதை,

‘ஒன்பதாய பிராயத்தாள் என் விழிக்

கோது காதைச் சகுந்தலை ஒத்தனள்’

என்று ஒன்பது வயதுக் காதலைச் சொல்கிறது.

திருவள்ளுவர், எதற்கு வம்பு என்று ஒன்பது, தொண்டு, நவம் எதுவும் பயன்படுத்தவில்லை. அக நானூற்றில் பரணர் பாடல்,

’சூடா வாகைப் பறந்தலை ஆடு பெற
ஒன்பது குடையும் நன் பகல் ஒழித்த
பீடு இல் மன்னர் போல’

என்று உவமை கூறுகிறது. ’வாகைப் பறந்தலை என்னும் போர்க்களத்தில், கரிகால் வளவன் வாகை சூட, ஒரே நாள் பகலில், தம் குடைகளைப் போட்டு விட்டு, உயிர் பிழைக்க ஓடிய பெருமை இல்லாத மன்னர்களைப் போல, நீயும் எமக்கு முன் நிற்க மாட்டாமல் ஓடுவாய்,’ என்று தலைவன் வினை முடிந்து மீண்டதை உணர்த்த தோழி, தலைவிக்குக் கூறுவதாகப் பாடல்.

திருவாசகத்தில் சிவபுராணம் பாடும் மாணிக்க வாசகர், மானுட உடம்பை, ‘மலம் சோரும் ஒன்பது வாயில் குடில்’ என்கிறார். போற்றித் திரு அகவல் பாடும்போது, கர்ப்பகால இடர்களை அவர் பட்டியல் இடுகிறார்.

ஒருமதித் தான்றியின் இருமையில் பிழைத்தும்
இருமதி விளைவின் ஒருமையில் பிழைத்தும்
மும்மதி தன்னுள் அம்மதம் பிழைத்தும்
ஈர் இரு திங்களில் பேரிருள் பிழைத்தும்
அஞ்சு திங்களில் முஞ்சுதல் பிழைத்தும்
ஆறு திங்களில் ஊறலர் பிழைத்தும்
ஏழு திங்களில் தாழ்புவி பிழைத்தும்
எட்டுத் திங்களில் கட்டமும் பிழைத்தும்
ஒன்பதில் வருதரு துன்பமும் பிழைத்தும்
தக்க தசமதி தாயொடு தான்படும்
துக்க சாகரத் துயிரிடைப் பிழைத்தும்

உரை சொன்னால் தெளிவாக இருக்கும். முதன் முதலில் எம். எல். பட்டம் பெற்ற சட்டக் கல்லூரிப் பேராசிரியர் கா.சு. பிள்ளை, எம். எல். பிள்ளை என்று அழைக்கப்பட்ட கா. சுப்பிரமணிப் பிள்ளை உரை கீழ் வருமாறு:

தாயின் கருப்பையில் ஒரு மாதம் ஆனவுடன், தான்றிக்காய்     அளவு அமைந்த கருவானது. கருப்பையில் பொருந்தி ஒன்றுபடாது பிளவு படுதலாகிய இருமையில் நின்று தப்பியும், இரண்டாவது மாதத்திலே, பிற புழுக்களின் இரக்கப்பட்டு மிகுதியாலே உருவெடாமையில் நின்று தப்பியும்,

மூன்றாம் மாதத்திலே கரு வளர்தல் பொருட்டுக் கருப்பையில் பெருகும் கொழுப்பான நீர் மிகுதி நின்று தப்பியும், கரு நீரினாலே கருப்பையிலே நான்காம் திங்களில் இருள் மிகுந்த காலை, அந்த இருளில் நின்று தப்பியும், ஐந்தாம் மாதத்திலே (கருப்பை நீர் மிகுதியாலும், இருள் மிகுதியாலும்) சாவதில் நின்று தப்பியும், ஆறாவது மாதத்திலே தினவு மிகுதியால் உண்டாகிய துன்பத்திற்குத் தப்பியும், ஏழாவது மாதத்திலே கருப்பை தாங்காமையால் பூமியில்  காயாய் விழுதலில் நின்று தப்பியும், எட்டாவது மாதத்திலே, கருப்பையில் உண்டாகிய வளர்ச்சி நெருக்கத்தில் தப்பியும், ஒன்பதாவது மாதத்திலே வெளிப்பட இயலாது வாடும் துன்பத்தில் தப்பியும், பத்தாவது மாதத்திலே தாயும் தானும் வெளிப்படுவதற்காகப் படும் துன்பக் கடலில் நின்று தப்பியும் (நிலவுலகில் பிறந்து) வளரும் காலை.”

பின்னவீனத்துவ நாவல் வாசிப்பது போல இருக்கலாம். எனினும் எட்டாம் நூற்றாண்டு மாணிக்க வாசகர் பேசுகிறார் விரிவாகவும், விஞ்ஞான பூர்வமாகவும்.

குறுந்தொகையில் பரணர்  பாடல் ஒன்று. பெண்கொலை செய்த நன்னன் எல்லை காண முடியாத நரகத்துக்குச் சென்றதைப் போன்று, காதலுக்குக் குறுக்கே நிற்கும் தாயும் போவாள் என்று தலைவி கூற்றாகப் பாடல்.

’மண்ணிய சென்ற ஒண்ணுதல் அரிவை
புனல் தரு பசுங்காய் நின்றதன் தப்பிற்கு
ஒன்பதிற்று ஒன்பது களிற்றொடு அவள் நிறை
பொன்செய் பாவை கொடுப்பவும் கொள்ளான்
பெண் கொலை புரிந்த நன்னன் போல’

என்று நீளும் பாடல் வரிகள். மண்ணிய = நீராட, ஒண்ணுதல்= ஒளி பொருந்திய நெற்றி, அரிவை= சிறுமி, பசுங்காய்= மாங்காய், தப்பிற்கு= தவறுக்கு, ஒன்பதிற்று ஒன்பது= 9×9=81, களிறு= ஆண்யானை, அவள் நிறை பொன் செம்பாவை = அவள் எடைக்குச் சமமான பொன் உருவம்.

நீராடச் சென்றாள் ஒள் நுதல் அரிவை. அப்போது ஆற்று நீரில் அடித்து வரப்பட்ட பச்சை மாங்காயைப் பிடித்துக் கடித்துத் தின்றாள். அது நன்னனின் காவல் மரமான மாமரத்தின் காய். அந்தத் தவறுக்காக அந்தப் பெண்ணைக் கொலை செய்யத் துணிந்தான். எண்பத்தொன்று களிறும், அவள் எடைக்கு எடை பொன் கொண்டு பணி செய்த பாவையும் தருவதாய்க் கூறியும் இணங்கான். நன்னன் பெண்கொலை செய்தான் என்பது செய்தி.

பரிபாடலில், கடுவன் இளவெயினனார் திருமாலைப் பாடுகிறார்.

நடுவு நிலை திறம்பில் நலம் இல் ஒருகை,
இரு கை மா அல்!
முக்கை முனிவ! நாற்கை அண்ணல்!
ஐங்கைம் மைந்த! அறுகை நெடுவேள்!
எழுகையாள! எண்கை ஏந்தல்!
ஒன்பதிற்றுத் தடக்கை மன் பேராள!
பதிற்றுக்கை மதவலி நூற்றுக்கை ஆற்றல்!
ஆயிரம் விரித்த கைம் மாய மன்ன!
பதினாயிரம் கை முதுமொழி முதல்வ!
நூறாயிரம் கை ஆறு ஆறி கடவுள்!

என்று விரித்துப் பேசுகிறது பரிபாடல்.

நல்ல அமிழ்தைத் தேவர்களுக்குக் கொடுத்து நடுநிலை மாறிய ஒரு கை. இரு கைகளையுடைய திருமால். மூன்று கைகளை உடைய முனிவன். நான்கு கைகளையுடைய அண்ணல். ஐந்து கைகளை உடைய வலிமையுடையவன். ஆறு கைகளை உடைய முருகன். ஏழு கைகளை உடையவனே! எட்டுக் கைகளை உடைய ஏந்தலே! ஒன்பது கைகளை உடைய பெருமை கொண்டவனே! பத்து, நூறு, ஆயிரம், பதினாயிரம், நூறாயிரம் என எல்லையற்ற எண்ணிக்கை கடந்த கைகளை உடையவனே! என்றெல்லாம் திருமாலைப் போற்றும் பாடல் ஒன்பது இங்கு ஒன்பதிற்று எனப்படுகிறது.

திருமுருகாற்றுப் படை, இந்திரனைப் பாடும்போது, ‘ஒன்பதிற்று இரட்டி உயர்நிலைப் பெற்றியர்’ என்று பதினெட்டுக் கணங்களைப் பேசுகிறது. பதினெண் கணங்கள் என்பவர்- தேவர், அசுரர், தைத்தியர், கருடர், கின்னரர், கிம்புருடர், இயக்கர், விஞ்சையர், இராக்கதர், கந்தருவர், சித்தர், சுரணர், பூதர், பைசாசர், தாராகணம், நாகர், ஆகாச வாசிகள், போக பூமியோர் என்பவர்.

அறுபடை வீடுகளில் ஒன்றான திருவேரகம் (சுவாமிமலை) பற்றித் திருமுருகாற்றுப் படை பாடும்போது, ‘ஒன்பது கொண்ட மூன்று புரி நுண் ஞாண்’ என்கிறது. ஒன்பது நூல்களை உடைய மூன்று புரிகளால் ஆன பூணூல்   என்பது பொருள்.

யாவற்றுக்கும் மேலாக, மானுட உயிரின் கர்ப்ப காலம் ஒன்பது மாதங்கள். எனினும் தொண்டு என்று இன்று நாம் இழந்து போன சொல்லைப் பற்றி நிற்கிறது மனம். பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் கடைசி நூல் ஏலாதி. காலத்தால் மிகவும் பிற்பட்டது. கடைச் சங்கம் மருவிய காலம் என்கிறார் மறைமலை   அடிகளின் மாணவரும் கழகத் தமிழ்ப் புலவராயிருந்தவருமான தி.சு. பாலசுந்தரம் பிள்ளை என்னும் இளவழகனார். என் கைக்குக் கிடைத்த 1923 ஆம் ஆண்டு பதிப்பொன்று இந்தத் தகவலைத் தருகின்றது.

ஏலாதி என்கிற அறநூல், தமிழாசிரியர் மகனார், மரக்காயனார் மாணாக்கர் கணிமேதையார் இயற்றியது. இவர் கணிமேதாவியார் என்றும் வழங்கப்படுகிறார். இவர், சிறு பஞ்ச மூலம் செய்த, மற்றொரு மரக்காயனார் மாணவர் ஆகிய காரியாசானுடைய ஒரு சாலை மாணாக்கர் என்று அறிய முடிகிறது. ஒரு சிறப்புப் பாயிரமும், ஒரு தற்சிறப்புப்

பாயிரமும், எண்பது பாடல்களும் கொண்ட ‘ஏலாதி’ வரைக்கும் ஒன்பதைக் குறிக்கும் ‘தொண்டு’ என்ற சொல் புழங்கி வந்திருக்கிறது.

தொண்டு என்றால் இன்று ஊழியம், தேங்காயின் புறச் சவுரி, வழி அல்லது பாதை எனப் பொருள்படுமே அன்றி, ஒன்பது என்ற பொருள் இல்லை. இஃதோர் வருந்தத் தக்க விடயம்.

’உணராமையால் குற்றம் ஆம் ஓத்தான் வினையாம்
உணரான் வினைப் பிறப்புச் செய்யும்- உணராத
தொண்டு கரும் துன்பம் தொடரும் பிறப்பினான்
மண்டிலமும் ஆகும் மதி’

என்பது பாடல். ‘அறியாமையால் குற்றங்கள் உண்டாகும். நூலுணர்ச்சியால் நல் வினைகள் விளையும். அறிவு நூல்களை உணராதவன் செயல்கள் பிறப்பை உண்டாக்கும். பிறப்பினால், அறியப்படாத ஒன்பது பெரிய துன்பங்கள் தொடரும். அதனால் பிறவி என்பது சுழற்சி ஆகும். ஆகவே அதனைக் கருத்தில் கொள்க,’ என்பது உரை.

அறியாமையால் குற்றங்கள் பெருகும் என்பதும், நூல்களைக் கற்பதனால் நல்வினைகள் விளையும் என்பதுவே செய்தி. மண்ணிலும்  எனும் சொல்லுக்கு பரிவர்த்தனை, வட்டமாய் ஓடுதல் என்று பொருள் எழுதுகிறார்கள்.

12/01/2017

One Reply to “நவம்”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.