கொன் ஊர் துஞ்சினும் யாம் துஞ்சலமே

இந்த அரைத்தூக்க நிலை அல்லது தூக்க மயக்கம் பல சுவையான விவாதங்களுக்கும் இட்டுச் சென்றிருக்கிறது; புதிர் நிறைந்த ஒன்று இது, சட்டமும், தத்துவமும் இதை எப்படிப் பார்க்கின்றன? தூக்கத்தில் நடப்பவர்களுக்கு, பகல் நேர ‘தான்’ என்பது  விடுபட்டு இரவு நேர ‘தான்’ என்று சுயேச்சையாக மாறுகிறதோ? ஆயினும் பகல் நேர ‘தான்’ முழுவதும் விடுபட்டுப் போய்விடுவதில்லை அல்லவா? தூக்க நடையாளரைப் பற்றி கலைக்களஞ்சியங்கள் பதிவு செய்துள்ளன. அதில் குறிப்பிடத்தகுந்த ஒன்று திருச்சபையின் இளைய குருவைப் பற்றியது. அவர் தன் இசையையும், பிரசங்கங்களையும் உறக்கத்தில் இருக்கும்போதே உண்டாக்கியுள்ளார்.

தூக்கம் நம் கண்களைத் தழுவட்டுமே

பல்லாயிரம் ஆண்டுகளாக, உறவினர்களுடனும், விரிந்து பரந்த குடும்பத்துடனும், இணைந்து பணி செய்பவர்களுடனும், நண்பர்களுடனும், பயணத்தில் இருக்கும் வியாபாரிகளுடனும் மனிதர்கள் ஒன்றாக ஒரே படுக்கையில் உறங்கியிருக்கிறார்கள். பயணத்தின் போது முன்பின் அறியாதவர்கள் தன்னருகில் படுத்திருப்பதை அனுமதித்திருக்கிறார்கள். ஆனால், அதிர்ஷ்டம் காலை வாரியதென்றால், கூட படுத்திருக்கும் நபர், குறட்டை விடுபவராகவோ, உடல் வாசத்தைப் பரப்பி சங்கடத்தில் ஆழ்த்துபவராகவோ, பிறந்த மேனியில் தூங்குபவராகவோ அமையலாம்!

உத்தமர் உறங்கினார்கள், யோகியார் துயின்றார்!

சில பேராசிரியர்களிடம் கேட்ட போது, அவர்கள் திருவள்ளுவர் தூக்கம் எனும் சொல்லையும் கையாண்டிருக்கிறாரே என்றனர். அவர்கள் சொன்னது உண்மைதான். ‘வினைத் திட்பம்’ அதிகாரத்துக் குறள் பேசுகிறது,
‘கலங்காது கண்ட வினைக்கண் துளங்காது
தூக்கம் கடிந்து செயல்’
என்று. சரிதானே! பிறகென்ன வழக்கு, வியாச்சியம், உச்ச நீதிமன்றத் தலையீடு என்று நீங்கள் கேட்கலாம்! ஆனால் இங்கு தூங்காது என்ற சொல்லுக்கு தாமதிக்காது, கால நீட்டிப்பு செய்யாது, தொங்கிக் கொண்டு கிடக்காமல் எனும் பொருளே தரப்படுகிறது. மனக் கலக்கம் இல்லாமல், தளர்வடையாமல், கால தாமதம் செய்யாமல், வினையாற்றுவதே செம்மையானது என்று பொருள் தருகிறார்கள். …நாஞ்சில் நாட்டுக்காரனும், மலையாளியும் உறக்கம் என்று இன்றும் பயன்படுத்தும் சொல், பிற தமிழ்த் திருநாட்டுப் பகுதிகளில் தூக்கம் என்று பயன்படுத்தப்படுகிறது.