
சிற்றிதழ் பிரசுர அனுபவங்களுக்கு வண்ணமும் வேகமும் கூட்டுபவை அவ்வப்போது எழும் அசாதாரண மாறுதல்கள். இவை எளிய வகையில் அமையலாம் – ஒரு புதிய எழுத்தாளரின் ‘உதயத்தை’க் காணும் மகிழ்ச்சியால் இருக்கலாம், இல்லை, எதிர்பாராமல் கிட்டும் ஓர் அற்புதப் படைப்பைப் படித்துப் பிரசுரிக்கும் கிளர்ச்சியால் இருக்கலாம். அல்லது, கருத்தியல் தளங்களில் வரிசையாகக் கிட்டும் மாறுதல் அலையொன்றால் நடக்கலாம்.
இவை தற்செயலாகவோ, கிட்டிய வாய்ப்பைத் தவறவிடாமல் கைப்பற்றிய துரித புத்தியாலோ அல்லது பல மாதங்களாகத் திட்டமிட்டுப் படிப்படியாகக் கட்டி எழுப்பிய உழைப்புடன்கூடிய மதிநுட்பத்தாலோ அமையலாம்.
அல்லது சில இந்த இதழ்போல அமையலாம். இந்திய மொழிகளுக்குச் சிறப்பிதழ்களை வரிசையாகக் கொணர்வது என்று திட்டமிட்டபோது, வங்க மொழியை முதலில் தேர்ந்தெடுக்கக் காரணம் அந்த மொழியில் கிட்டும் அபாரமான படைப்புக் கருவூலம் என்பது இருந்தாலும் ஆழ்ந்த தேர்ச்சியோ, தீவிரப் பரிச்சயமோ இருந்தால்தான் அப்படி ஒரு கருவூலத்தின் வளங்களில் சிறந்தவற்றைப் பெறமுடியும் என்று எங்களுக்குத் தெரிந்திருந்தது.
நாங்கள் இதைத் துவக்க நிலை முயற்சியாகத்தான் கருதினோம்.
சில வருடங்களில் இந்தப் பயிற்சி ஆழப்பட்டு, இந்திய மொழிகளுடன் தமிழ் படைப்புலகுக்கு ஓர் உறுதியான பாலம், இணைப்பு, நெடுஞ்சாலை அமையும் என்று துவக்கினோம்.
ஆனால் பல நண்பர்களிடம் கேட்டுப்பெற்ற தகவல்களும் தொடர்புகளும் உதவியதில் நிறைய விவரங்களோடு படைப்புகளும் கிட்டத்தொடங்கின. ஒரு சில முயன்று பார்ப்போம் என்று செய்ததில் கிட்டிய நல்ல படைப்புகள்.
எதிர்பார்த்ததற்கு மேலாகப் பற்பல திக்குகளிலிருந்து பலரின் உற்சாகமான பங்கெடுப்புக் கிட்டியதோடு, பல வங்காளி நண்பர்களின் ஆதரவும் கிட்டியதால் திட்டமிட்டதற்கு மேலாகப் படைப்புகள் கிட்டியிருந்தன. அதனால் 240ஆம் இதழை வங்கச் சிறப்பிதழாக அமைத்தது போதாமல், 241ஆம் இதழையும் வங்க மொழிச் சிறப்பிதழாகக் கொணர வேண்டியதாயிற்று. கூரையைப் பிய்த்துக்கொண்டு கொட்டினாலும், கொட்டுவது கனகமாக இருந்தால் குறையா சொல்லப்போகிறோம்!
இந்த இதழை வங்கமொழிச் சிறப்பிதழின் இரண்டாம் பாகமாகக் கொணர்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம். வரும் வருடங்களில் இந்த மாதிரிச் சிறப்பிதழைக் கொணர்கையில் இப்போது ஏற்பட்ட பல தொடர்புகள் ஆழப்பட்டு மேலும் விரிவான, நுட்பமான அனுபவங்களை வங்கமொழிக் குழு மக்களின் நடுவே கண்டுணர்ந்து, அவற்றை நம் பொக்கிஷமாக ஆக்கமுடியும் என்ற நம்பிக்கையை இந்த இரு இதழ்கள் எங்களுக்குக் கொடுத்திருக்கின்றன.
இந்த இதழில் பல சிறுகதைகளைக் கொடுக்கிறோம். பனபூல், ராம்நாத் ராய், சமரேஷ் மஜும்தார், ஸீர்ஷோ பந்த்யோபாத்யாய், மஹாஸ்வேதா தேவி, ஆஷாபூர்ணா தேவி, சுபிமல் மிஸ்ரா, மோதி நந்தி, ரபீந்த்ரநாத் தாகுர்ஆகியோரின் கதைகள் உள்ளன. பிபூதி பூஷண் பந்த்யோபாத்யாயின் நாவல் ஒன்றின் அடுத்த பாகம் மொழிபெயர்க்கப்பட்டுக் கிட்டுகிறது. ஜாய் கோஸ்வாமி, ஸாங்க்யா கோஷ், புத்ததேவ் போஸ், சக்தி சட்டோபாத்யாயா ஆகியோரின் கவிதைகள் உள்ளன. தவிர நாடக உலகில் உத்வேகத்தைக் கொணர்ந்த பாதல் சர்க்கார் பற்றிய மூன்று கட்டுரைகள் வங்காள நாடக உலகில் ஒரு புது அலையாக வீசிய திறமிக்க நாடக இயக்குநர், ஆசிரியருக்கு இந்தியா நெடுக இருந்த தாக்கத்தை நமக்குத் தெரிவிக்கின்றன.
க்ளைவ் பெல் என்ற ஒரு குழல் இசைக்கலைஞரின் பேட்டியையும் கொடுத்திருக்கிறோம். சில விமர்சனக் கட்டுரைகளும், வரலாற்றில் வங்க இலக்கியம் ஆற்றிய பங்கு பற்றிய ஆய்வுக் கட்டுரை ஒன்றையும் (தீபேஷ் சக்ரபர்த்தி), கூம்கூம் ராயின் பார்வையில் மஹாபாரதத்தில் பெண்களின் நிலைமை பற்றிய கட்டுரையும் உள்ளன. தஸ்லிமா நஸ்ரீனின் ‘லஜ்ஜா’ நாவல் ஏற்படுத்திய சர்ச்சைகள் பற்றிய அவரது மறுவினையையும் கொடுக்கிறோம். இன்னும் உரையாடல்களாக வங்காளக் கவிஞர்கள், கதாசிரியர்களின் எழுத்துப் பயணங்களையும் கொடுத்திருக்கிறோம். சென்ற இதழில் இங்கிலிஷில் கொடுக்கப்பட்டிருந்த மொழிபெயர்ப்பாளர் அருணவ சின்ஹாவின் பேட்டி இந்த இதழில் தமிழில் கிட்டுகிறது.
இது முழுமையான பட்டியல் இல்லை. இதற்கு மேலும் பல கதைகள், கட்டுரைகள், கவிதைகள் உள்ளன. (உதாரணமாக தாகூரின் ஒரு கதையை பாரதியாரின் மொழி பெயர்ப்பில் நீங்கள் பார்க்கலாம்.)
இந்த இதழ்களைப் படித்துவிட்டு உங்கள் மறுவினைகளை இதழின் பக்கத்திலேயே பதிவு செய்யுங்கள், அல்லது மின்னஞ்சலாக எழுதித் தெரிவியுங்கள். (முகவரி: solvanam.editor@gmail.com)
உங்கள் படைப்புகள், கட்டுரைகள் ஏதும் அனுப்புவதானால் அதே முகவரியைப் பயன்படுத்தலாம்.
இந்த வருடம் வேறு மொழிச் சிறப்பிதழ்கள் கொணரப்போகிறோம். உத்தேசமாக நான்கு மாதங்களுக்கு ஒருமுறை சிறப்பிதழ்கள் வெளிவரும். உங்களுக்கு இந்திய மொழிகளில் வேறு எந்த மொழியாவது நன்கு பரிச்சயமானதாக இருந்தால் அந்த மொழியிலிருந்து படைப்புகளைத் தமிழுக்கு மாற்றி அனுப்புங்கள், உதவும். அல்லது அந்த மொழியில் உள்ள படைப்புகளைப் பற்றி கட்டுரைகள் எழுதி வாசகர்களுக்கும் எங்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். அடுத்த சிறப்பிதழ் பற்றிய அறிவிப்பு ஓரிரு இதழ்கள் தாண்டுகையில் வெளிவரும்.
இறுதியாக, இந்த இதழ் தயாரிப்பில் உதவிய அம்பை, நம்பி கிருஷ்ணன் ஆகியோருக்கு எங்கள் நன்றி. அம்பை அவர்கள் பங்கெடுக்கும் ஆவணக் காப்பக அமைப்பான ஸ்பாரோ (மும்பை), அவர்களது வெளியீடுகளில் இருந்து பல கட்டுரைகள், கதைகள், கவிதைகளைப் பயன்படுத்த எங்களுக்கு அனுமதி வழங்கினார்கள். ஸ்பாரோ அமைப்புக்கு எங்கள் நன்றி.
இதழ் அமைப்பும், பிரசுரமும் பல பதிப்புக் குழு உறுப்பினர்களின் சீரிய, இடைவிடாத உழைப்பால்தான் சாத்தியமாயின. அவர்களுக்கு இந்தப் பத்திரிகை எப்போதும்போல கடமைப்பட்டிருக்கிறது. இலக்கிய வரலாறு உடனடி வாழ்வில் தடம் எளிதில் புலப்படாத மெல்லிருட்டில் அடங்கி இருக்கும். இந்தக் குழுவினரின் 12 ஆண்டு காலப் பங்கெடுப்பும், உழைப்பும் பிற்காலத்தில் தமிழுலகில் தக்க கவனம் பெறும் என்று நம்புகிறேன்.
உங்கள் பங்கெடுப்பு இந்தப் பத்திரிகையை மேன்மேலும் ஒளி மிக்கதாக்கும் என்றே நாங்கள் நம்புகிறோம்.
பதிப்புக் குழு சார்பில்,
மைத்ரேயன்
முதல் இதழில் வெளியான படைப்புகள் குறித்த அறிமுகம்:
இந்த 241ஆம் இதழில் :
சிறுகதைகள்
- வைரஸ் – ஸிர்ஷோ பந்தோபாத்யா: தமிழில்: சிவா கிருஷ்ணமூர்த்தி
- சுல்தானாவின் கனவு – ருகையா ஷகாவத் ஹுசென்: தமிழில்: நம்பி கிருஷ்ணன்
- டிஸம்பர் ’72ல் ஓர் அந்திப்பொழுது – சுபிமல் மிஸ்ரா: தமிழில்: உஷா வை.
- சௌவாலி – மஹாஸ்வேதா தேவி: தமிழில்: எம் ஏ சுசீலா
- தீப்பெட்டி – ஆஷாபூர்ணா தேவி: தமிழில்: நரேன்
- துக்கம் – ஆஷாபூர்ணா தேவி: தமிழில்: எம் ஏ சுசீலா
- ஒரு கடிதம் – சமரேஷ் மஜும்தார்: தமிழில்: க. ரகுநாதன்
- ஒரு கொலை பற்றிய செய்தி – மோதி நந்தி: தமிழில்: முத்து காளிமுத்து
- ஊர்மி – ராமநாத் ராய்: தமிழில்: க. ரகுநாதன்
- நவாப் சாகிப் – பனபூல்: தமிழில்: விஜய் சத்தியா
- “நஷ்ட பூஷணம்” அல்லது காணாமற் போன நகைகள் – ரபீந்திர நாத் தாகூர்: தமிழில்: மஹாகவி பாரதியார்
- கற்பனையின் சொகுசு – பனபூல்: தமிழில்: மாது
தொடர்கதை
இலக்கிய அனுபவங்கள்
- மரணமின்மை எனும் மானுடக் கனவு – சுனில் கிருஷ்ணன்
- குரல் கொடுப்பதிலிருந்து இடம் கோருவது வரை – கூம் கூம் ராய்: தமிழில்: முத்து காளிமுத்து
- துருவன் மகன் – உத்ரா
- கவியோகி ரவீந்திரநாத் தாகூரின் கீதாஞ்சலி மொழிபெயர்ப்புக்கள் – த. நரேஸ் நியூட்டன்
- யசோதராவின் புன்னகை – மீனாக்ஷி பாலகணேஷ்
- வங்கச் சிறுகதைகள்: அறிமுகம் – சக்தி விஜயகுமார்
கலை
- பாதல் சர்க்காரும் தமிழ் நவீன அரங்கியலும் – அ. ராமசாமி
- பொடுவா கலைஞர்களின் வங்காள ராமாயண ஓவியங்கள் – ரா. கிரிதரன்
- பிறகொரு இந்திரஜித்: இந்திய நவீனத்துவ நாடகம் – அ. ராமசாமி
- பாதல் சர்கார்: இயக்கத்தை அரங்கமைப்பது – அவீக் சாட்டர்ஜீ: தமிழில்: நம்பி கிருஷ்ணன்
மொழிபெயர்ப்புக் கட்டுரைகள்
- புத்தெழுச்சி இயக்கத்தின் ஆவணக்காப்பகங்கள்: வங்காளத்தில் இலக்கியமும், அடையாள அரசியலும் – தீபேஷ் சக்ரபர்த்தி: தமிழில்: மைத்ரேயன்
- வங்காள வரலாறு – பானுமதி.ந
கவிதைகள்
- ஷாங்க்யா கோஷ் கவிதைகள் – தமிழில்: வேணுகோபால் தயாநிதி
- சக்தி சட்டோபாத்யாய் கவிதைகள் – தமிழில்: கு. அழகர்சாமி
- சுகந்தா பட்டாச்சார்யா கவிதைகள் – தமிழில்: ராமலக்ஷ்மி
- ஜோய் கோஸ்வாமி கவிதைகள் – தமிழில்: விருட்சன்
- படைப்பின் தருணம் – புத்ததேவ போஸ் – தமிழில்: வெங்கட் பிரசாத்
பேட்டிகள்
- “பான்சுரிக்குப்பின் வேறு ஒரு கருவி மீதும் ஆர்வம் வரவில்லை” : கிளைவ் பெல் பேட்டி – ரா. கிரிதரன்
- நேர்காணல்: கிருஷ்ண பாஸு – சி.எஸ். லக்ஷ்மி
- “மொழிபெயர்ப்பு ஒரு வகையில் போதை மருந்து மாதிரிதான்” – நகுல்வசன்
- சுசித்ரா பட்டாச்சாரியா – சி.எஸ்.லக்ஷ்மி: உரையாடல்
ஆளுமை
நூல் அறிமுகம்
இதழ் – 200 எப்படி பார்க்க இயலும்
Here: https://solvanam.com/category/%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D-200/