மூன்று கவிதைகள்

ஜொய் கோஸ்வாமீ
(தமிழில்: விருட்சன்)

இந்த ஒரு நண்பகல்

இந்த நண்பகலில் நான் உறங்கவில்லை, நான் துயிலெழவும் இல்லை,
நான் இறக்கவில்லை, நான் வாழவும் இல்லை
காலம் சன்னல் வழியாக அறையின் உள்ளே நுழைகிறது,
இந்த நண்பகல் வரை என் கைகளை நான் அறிந்திருக்கவில்லை, எனக்கு சொந்தமான என்னுடைய மெல்லிய கைகளென்பது ஒரு யாழ்
நீ அந்தக் கைகளை இசைக்கலைஞன் ஒருவன் தன்னுடைய இசைக்கருவியை முழங்கைக்கும் ஆட்காட்டிவிரலுக்கும் இடையில் பற்றியிருப்பதைப் போல பற்றியிருக்கிறாய்
மேலும் “என்ன ஒரு அற்புதமான பொருள் இது” என்பதைப் போலவே அதைக் காண்கிறாய்
உன்னுடைய உதடுகள் விழுகிறது விரலின் உச்சியிலிருந்து
பளிச்சென்று ஒளிரும் மேல் ஸ்தாயி கீழ் ஸ்தாயி இசைக் குறிப்புகளின் மீது அதன் மீது மேலும் அதன் மீது
என் உள்ளங்கையில் நீ கண்டடைகிறாய் செந்நிறக் குருதி நாளத்தை, என்ன ஒரு ஆச்சரியம்! இந்த நண்பகல் வரை அது நடுங்கிக்கொண்டிருந்ததை நான் அறியவில்லையே

இந்த நண்பகலுக்கு முன்பு வரை
நான் எதையும் அறிந்திருக்கவில்லை நீரைப்பற்றியோ, நிலத்தைப்பற்றியோ மற்றும் வானத்தைப்பற்றியோ
நான் உறங்கவில்லை, நான் துயிலெழவில்லை, நான் மரணிக்கவில்லை, நான் உயிர் வாழவில்லை, ஒரு பறவை மட்டுமே என் முகத்தில் வந்தமர்கிறது
ஒரு கிராமம் நதிக்குள்ளாக ஒரு கல்லைப்போல விழுகிறது
மேலும் நதி தனது திசையை மாற்றிக்கொள்கிறது
அந்நேரத்திலிருந்து அங்கே குன்றிலிருந்து வழியும் நீரினால் உருவான நீரோடை ஒன்று என் வீடிருந்த இடத்தை பிடித்துக்கொண்டது
நான் மூழ்கவில்லை,
நான் மிதக்கவில்லை, நான் பறக்கவில்லை

நான் இந்த நீரோடைக்கும் மேம்பட்டவன் அல்ல
நீ உன் கைகளில் என்னை ஒரு கோப்பையாக்கி
உன்னை நீயே புத்துணர்வூட்டிக்கொள்ள முடியும்
உன் முகத்தை பளிச்சென்று வெளிப்படுத்துவதைத் தவிர என்னால் வேறு எந்த வேலையும் செய்யமுடியாது.
நீ நீந்துவதற்கான நேரம் வந்துவிட்டது

நீ உன் தலையை நீருக்கடியில் மூழ்கச்செய்கிறாய்
மேலும் மூச்சை இழுத்துப் பிடித்தபடி என் கண்களை கண்டடைவதற்காக தீவிரமாக தேடுகிறாய்
என்னுடைய மூடிய கண்களின் மீது உன்னுடைய உதடுகளை அழுத்துகிறாய்
மேலும் நான் நினைவுகூர்கிறேன் என் ஓநாய்களுடைய வாழ்வை, என் தேள்களுடைய வாழ்வை, என் மலைப் பாம்பினுடைய வாழ்வை, என் கொலைகாரனுடைய வாழ்வை, கானகத்தில் மறைந்து வாழ்ந்த வாழ்வை
என் உதடுகளில் உன்னை பொறுத்திக்கொள்வதாக ஒருமுறை உனக்கு வாக்களித்திருந்தேன்
அதை நிறைவேற்றும் பொருட்டு பல காலம் கழித்து நான் மீண்டும் வந்திருக்கிறேன்
இப்பொழுது இங்கே யாரும் வரவில்லை, உனது தலை மட்டுமே எனது மடி தேடி இறங்கிவந்திருக்கிறது

மீண்டும் நாம் ஒருவரையொருவர் தீவிரமாக தேடுகிறோம்
உன் உதடுகளின் அழுத்தம் இம்மதியத்தின் வாழ்வை கவ்விப்பிடிக்கிறது
இம்மதியமென்பது ஒரு நீரோடை இதுவரைக்குமே,
இந்த நீரோடையின் கீழ்தான் நாம் ஒன்றாக கிடந்தோம், நாம் இனி உறங்கப்போவதில்லை, நாம் துயிழெலப்போவதில்லை,
நாம் மரணிக்கப்போவதில்லை, நாம் ஒருபோதும் பிறக்கப் போவதுமில்லை

ஏனெனில் இந்த ஓடையில் காலம் நின்றுவிட்டது—
ஏனெனில்
இப்பொழுது நாம் காதலில் திளைத்துக்கொண்டிருக்கிறோம்

(THIS ONE NOON)


மாலைப் பொழுதொன்றில் துயரம் வரும் வேளை

இந்த மாலைப்பொழுதில் துயரம் வந்து கதவருகில் நின்றுகொண்டிருக்கிறது, அவனுடைய முகம் மறைக்கப்பட்டிருக்கிறது, மரணித்துக்கொண்டிருக்கும் சூரியனிடமிருந்து அவன் சில வண்ணங்களை எடுத்து அவனுடைய உடலில் வரைந்துக்கொள்கிறான்
இந்த மாலைப்பொழுதில் துயரம் வந்திருக்கிறது
நான் என் கையை நீட்டுகிறேன் மேலும் அவன் என் மணிக்கட்டை பற்றுகிறான், ஒரு இரும்புப் பிடியில்.
அவன் என்னை அறைக்கு வெளியே பிடித்தான், அவனுடைய முகம் கருப்பாயிருந்தது, அவன் என் முன்பாகவே இருந்தான் மேலும்
நான் அவனைப் பின்தொடர்ந்தேன்.
மாலைப்பொழுதைக் கடந்து இரவிற்கு சென்றேன்
இரவிலிருந்து அதிகாலைக்கு, அதன் பிறகு காலைப்பொழுதிற்கு, நண்பகலுக்கு, நாளுக்கு, மாதத்திற்கு
நீரைக் கடந்து, மரத்தை, படகை, மாநகரை, குன்றைக் கடந்து
அடிகளைக்கடந்து, நடுக்கத்தை, விஷத்தை, சந்தேகங்களை, பொறாமைகளை, சமாதிகளை, இனப் படுகொலைகளை, எழும்புகளை, நாகரீகத்தின் விலாவெலும்புகளை, சதுப்பு நிலங்களை மற்றும் புல்லைக் கடந்து
அதன் பிறகு எனக்கேயான என் மரணத்தைக் கடந்து, மரணத்திற்கு பிறகான மரணத்தைக் கடந்து போகிறேன் போய்க்கொண்டே இருக்கிறேன்.
வத்தலான விரல்கள் பற்றிக்கொண்டிருப்பது வேறொன்றுமில்லை ஒரு பேனாதான்
வேறொன்றுமில்லை….

(IN THE EVENING SADNESS COMES)


எரியும் பறவை சிந்துகிறது



ஒரு நாள் மாலைப் பொழுதுதொன்றில் சந்தேகம் அவன் தோளில் வந்தமர்கிறது
மிக மெதுவாக, நீண்ட, மெல்லிய அலகுடன், அது தனது காதை சுத்தப்படுத்திக்கொள்கிறது
அவன் மனமகிழ்ச்சியுடன் தனது கண்களை மூடும்பொழுது
சந்தேகம் பறவையின் கீச்சொலியுடன் உள்நுழைகிறது
அவனுடைய காதுகளின் உட்புழையில்
மேலும் அவன் அதைக் கவனிக்கவில்லை

அதன் பிறகு எப்பொழுதும் ஒரு பறவையின் சிறகடிப்பு ஒலி அவனது மண்டையோட்டினுள்.
வேறு யாரோ ஒருவருடையதை கேட்பதற்கு அவன் முயற்சி செய்யும்பொழுது அதற்கு பதிலாக அவன் அந்த ஒலியையே கேட்டான்.
யாரொ ஒருவருடைய கண்களை பார்க்கும்பொழுதெல்லாம் அவன் எப்பொழுதும் அந்தப் பறவையின் கண்களையே கண்டான்
துயிலெழும் காலைபொழுது ஒவ்வொன்றிலும் ஒருவருடைய நட்பை துண்டித்தான்
இரவில் அவனுடைய மனைவிக்கு அருகில் கிடக்கும்பொழுது தனது சொந்த உடலையே சோதித்துக்கொண்டான்
அவன் அதை பரிசோதனை செய்யவிரும்பினான்
அவனுடைய மனைவி வேறொருவனுடனும் படுக்கவில்லை என்பதை உறுதிசெய்துகொள்வதற்கு

(THE BURNING BIRD DROPS)


ஜொய் கோஸ்வாமீ

நவீன காலத்தில் மிக அற்புதமான கவிதைகளைப் படைத்துவரும் கவிஞரான இவர் கொல்கத்தாவில் பிறந்தவர். வங்காளக் கவிதைகளில் புதிய உத்திகளையும், எழுத்து நடையையும் கையாள்பவர் . இயற்கை, காலம், பிரபஞ்சம் இவற்றைப் பாடு பொருளாக்கி ஓர் ஓடையைப் போலவே வார்த்தைகளை உணர்வுகளின் தளத்தில் கவிதைகளாக விரித்து பரவசப்படுத்தும் கவிஞர். இவருடைய கவிதைத் தொகுப்பான “PAGALI TOMARA SANGE” ஆங்கிலத்தில் “with you crazy o crazy girl” 2000ஆம் ஆண்டு சாகித்ய அகாதமி விருது பெற்றது.

ஆங்கிலத்திலிருந்து தமிழில்: விருட்சன்.

விருட்சன் என்ற புனைப்பெயரில் எழுதிவரும் கார்த்திகேயன் கும்பகோணத்திற்கு அருகிலுள்ள திப்பிரஜபுரத்தில் வசிப்பவர். இவர் இந்தோனேசிய கவிஞர்களான சபார்டினோ ஜோகோ தமனோ, ஜோக்கோ பினர்போ போன்றோரின் கவிதைகளைத் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். தொடர்ந்து தெற்காசியக் கவிஞர்களின் கவிதைகளை மொழிபெயர்த்து வருகிறார்.

One Reply to “மூன்று கவிதைகள்”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.