அனைத்திந்திய நூல் வரிசை: வங்கச் சிறுகதைகள் – முன்னுரை

This entry is part 10 of 13 in the series வங்கம்

நேஷனல் புக் டிரஸ்ட் நிறுவனத்தார் இந்திய வாசகர்களுக்காக, இந்திய அரசியல் சட்டத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்ட இந்திய மொழிகளில் சிறுகதைத் தொகுப்புகள் வெளியிடவும் மற்ற இந்திய மொழிகளில் அவற்றின் மொழி பெயர்ப்புகளைப் பிரசுரிக்கவும் “ஆதான்-பிரதான்” என்ற பெயரில் ஒரு திட்டம் வகுத்தனர். அந்தத் திட்டத்திற்கேற்பத் தயாரிக்கப்பட்டது இந்தச் சிறுகதைத் தொகுப்பு. நமக்கு அறிமுகமான காலத்தைச் சேர்ந்த மனிதர்கள், சமூகம் இவற்றின் சித்திரம் இந்தத் தொகுப்பில் கிடைக்கும்.

வங்கச் சிறுகதைத் துறையில் முதற்பெருங் கலைஞர் ரவீந்திரநாத் தாகூர். அவரது கையில்தான் சிறுகதை உயிர் பெற்றது, வியக்கத்தக்க வளர்ச்சி பெற்றது. சிறுகதையின் பல்வேறு அம்சங்களிலும் அவரது கலைத்திறன் ஒளிர்கிறது. காதல், இயற்கை, சமூகப் பிரச்சினைகள், தத்துவம், காவியத்தன்மை, புனைவியல், வரலாறு, கேலி போன்ற பல துறைகளிலும் அவர் அனாயசமாக நடமாடினார். 1890 ஆம் ஆண்டு முதல் 1940 ஆம் ஆண்டுவரை ஓர் அரை நூற்றாண்டுக் காலம் அவர் சிறுகதைகள் எழுதினார்.

ரவீந்திரரின் காலத்தில் த்ரிலோக்யநாத் முகோபாத்தியாய், பிரபாத் குமார் முகோபாத்தியாய், சரத் சந்திர சட்டோபாத்தியாய், பிரமத சௌதுரி முதலியோர் வங்கச் சிறுகதைக்கு வளம் சேர்த்தனர்.

இந்தத் தொகுப்பில் நமக்குப் பரிச்சயமான காலத்தைச் சேர்ந்த சிறுகதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டுத் தொகுக்கப்பட்டுள்ளன. ரவீந்திரரும் சரத் சந்திரரும் நமக்கு அறிமுகமான காலத்தைச் சேர்ந்தவர்களல்லர். இவர்களுக்குப் பிற்பட்ட காலத்தில், கடந்த நாற்பதாண்டுகளில் சிறுகதைகள் வங்காளி மனப்போக்கின் பல்வேறு படிமங்கள் இடம் பெற்றுள்ளன. ஆகவேதான் இந்தத் தொகுப்பில் சரத் சந்திரருக்குப் பிற்பட்ட காலம் முதல் தற்காலம் வரையில் வெளிவந்துள்ள பல்வகைப் பட்ட சிறுகதைக் கருவூலத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகள் தொகுக்கப்பட்டுள்ளன.

வங்க இலக்கியத்தில் ரவீந்திரர்-சரத்சந்திரருக்கு அடுத்த காலமான ‘கல்லோல் யுகம்’, இந்தக் காலத்தின் அளவு 1923 முதல் 1939 வரை. இந்தக் காலத்தில் உலகளாவிய பொருளாதார மந்தமும், இந்தியாவில் பிரிட்டிஷ் ஏகாதிபத்திய எதிர்ப்புக் கிளர்ச்சியும் இருந்த போதிலும் ‘கல்லோல்’, ‘காலிகலம்’ பத்திரிகைகளில் சிறுகதைகள் எழுதிய எழுத்தாளர்கள் மொத்தத்தில் அமைதியான சூழ்நிலையில் இலக்கியம் படைத்தனர். இந்தப் பருவத்தில் தோன்றியவர்கள் தாரா சங்கர் பந்த்யோபாத்தியாய், அசிந்த்ய குமார் சென் குப்தா, பிரமேந்திர மித்ரா, புத்ததேவ போஸ், மனீஷ் கட்டத்(ஜுவனாஸ்வ), பிரபோத் குமார் சன்யால், பவானி முகோபாத்தியாய் ஆகியோர். விபூதி பூஷண் முகோபாத்தியாய், மாணிக் பந்தயோபாத்தியாய், அன்னதா சங்கர்ராய், பனஃபூல், விபூதி பூஷண் பந்த்யோ பாத்தியாய, சரதிந்து பந்த்யோபாத்தியாய், ரவீந்திர நாத் மித்ரா, பரிமல் கோஸ்வாமி, சஜனிகாந்த தாஸ், பிரமாங்குர் ஆதர்த்தி, சரோஜ் குமார் ராய் சௌதுரி, பிரமதநாத் பிஷி, கஜேந்திர குமார் மித்ரா, ஆஷாபூர்ணாதேவி, மனோஜ் போஸ், பிமல் மித்ரா முதலியோர் ‘பிசித்ரா’, ‘சனிபாரேர் சிட்டி பத்திரிகைகளில் எழுதினார்கள். இந்தக் காலத்தில்தான் ராஜசேகர் போசும் பரசுராம் என்ற புனைபெயரில் கேலியும் ஹாஸ்யமும் ததும்பும் சிறந்த சிறுகதைகள் எழுதினார்.

இரண்டாவது உலகப்போரின் தொடக்கத்திலிருந்து இந்தியா விடுதலை பெற்ற காலம் வரை- அதாவது 1939 முதல் 1947 வரை உள்ள காலத்தைக் ‘கல்லோலுக்குப் பிற்பட்ட யுகம்’ என்று கூறலாம். இந்தக் காலம் வங்காள நாட்டிலும் சமூகத்திலும் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்த காலம். பஞ்சம், விமானத் தாக்குதல், விலைக் கட்டுப்பாடுகள், உணவுப் பங்கீடு, ராணுவத்துக்காகக் கொள்முதல், கறுப்புச் சந்தை, சமூக வாழ்வில் சீரழிவு, பொருளாதாரச் சீர்குலைவு, ஒழுக்கம் பற்றிய மதிப்பீடுகளின் அழிவு, வகுப்புக் கலகங்கள்,நாட்டு விடுதலை, நாட்டுப் பிரிவினை, அகதிகளின் வெள்ளம் இவை போன்ற பெரும் மாற்றங்களும் விபரீதங்களும் இந்தக்காலகட்டத்தில்தான் நிகழ்ந்தன.

இந்தக் காலத்தில் எழுதத் தொடங்கியவர்கள் தங்களுக்கு இலக்கிய உணர்வு பிறந்தது முதலே குறிப்பிடப்பட்ட மாற்றங்கள் பற்றிய நேரடி அனுபவம் பெற்றிருந்தார்கள். இந்தக் காலத்தின் சமூகச் சூழ்நிலை அமைதியற்றதாகவும் குழப்பம் மிகுந்ததாகவும் இருந்தது. இந்தச் சூழ்நிலை அவர்களது பார்வையைக் கூர்மையாக்கியதோடு குழப்பவும் செய்தது. கல்லோல் காலத்து ரொமான்ட்டிக் சூழ்நிலை, நாடோடி மனப்பாங்கு, தறிகெட்ட காதல் வேகம் இவையெல்லாம் இந்தக் காலத்துச் சிறுகதைகளில் இல்லை. இந்தக் காலகட்டத்தில் நமது சமூகத்திலும் எண்ணற்ற மாறுதல்கள் விரைவாக நிகழ்ந்தன. சமூகத்திலும் தனி மனித வாழ்விலும் எண்ணற்ற சிதைவுகள், ஆக்கங்கள், பிரச்சினைகள், அசாதாரண விதிவிலக்குகள், இவையெல்லாம் இணைந்த புரட்சியின் தீவிர வேகம்–சிறுகதை எழுத்தாளனின் அறிவுப் பசியையும் உணர்வுத் திறனையும் கூர்மையாக்கின. நிலை பெற்றிருந்த சட்டங்களும் விதிகளும் தளர்ந்து போயின தறிகெட்ட உணர்வுகளும் இயற்கைக்கு மாறான போக்குகளும் தோன்றின பல நுண்மையான அதிருப்திகள் மனிதனைப் பீடித்தன ரசனை சீர்கெட்டதால் பல்வேறு புதிய அனுபவங்களை ருசிப்பதில் ஆர்வம் பிறந்தது புதிய உறுதிகள், புதிய நம்பிக்கைகள் வாழ்க்கைப் போராட் டத்துக்கு ஓர் அலாதியான உருவம் கொடுத்தன இவையெல்லாம் இரண்டாம் உலகப் போருக்குமுன் நினைக்கக்கூட முடியாதவை யாகும். போர் ஒரு பயங்கர பூகம்பம் போல நேர்ந்தது. அதன் விளைவாகக் கண்ணியத்தின் போர்வை, நீதி நியாயம் என்ற கவசம், குடும்ப கௌரவம், அன்பு-பரிவு, கீழ்ப்படிந்து நடக்கும் தன்மை, மத நம்பிக்கைகள், சடங்குகள் இவையெல்லாமே மண்ணோடு மண்ணாகிவிட்டன. இதற்கு நடுவில் ஒரு புதிய சமூகத்தைப் படைக்கும் கனவு பிறந்தது. கனவை நனவாக்குவதாக உறுதிமொழி ஒலித்தது.

சுபோத் கோஷ், சதிநாத் பாதுரி, சந்தோஷ்குமார் கோஷ், நாராயண் கங்கோபாத்தியாய், நரேந்திர நாத் மித்ரா, நபேந்து கோஷ், நனி பௌமிக், சுசீல் ஜானா, ஜோதிரிந்திர நந்தி ஆகியோரின் சிறுகதைகளில் இந்த மாறுதல்கள் பிரதி பலித்தன. ஜகதீஷ் குப்தா, மாணிக் பந்த்யோபாத்தியாய், அசிந்த்ய குமார் சென் குப்தா, பிரபோத் குமார் சன்யால், முதலிய கல்லோல் யுக எழுத்தாளர்களும், விபூதி பூஷண் பந்த்யோபாத்தியாய். தாராசங்கர் பந்த்யோபாத்தியாய், மனோஜ் போஸ், சரோஜ்குமார் ராய்சௌதிரி, ஆஷா பூர்ணா தேவி, பிரமதநாத் பிஷி, பரிமல் கோஸ்வாமி, பனஃபல், சுசீல்கோஷ், வாணிராய், சாருசந்திர சக்ரவர்த்தி முதலிய ‘பிசித்ரா’ ‘சனிபாரேர் சிட்டி எழுத்தாளர்களும் மேலே கூறப்பட்ட பட்டியலில் சேர்க்கப்பட வேண்டியவர்கள்.

இந்தக் கால கட்டத்தைத் தொடர்ந்து வந்தது துண்டுபட்ட சுதந்திரம் கூடவே வந்தது அகதிகளின் வெள்ளம். இன்னும் பெரிய அளவில் சமூகத்தின் சமநிலைக்குக் கேடு. சுதந்திரத்தின் தோரண வாயிலில் ஒலித்த நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் எல்லாமிழந்த அகதிகளின் அழுகையொலி அமுக்கிவிட்டது. அப்போது இந்தக் குழப்பம் நிறைந்த, இரத்தத்தில் தோய்ந்த நாட்டில் சிறுகதை எழுத்தாளர்களின் இன்னொரு குழு தோன்றியது – சமரேஷ் பாசு, பிமல்கர், ரமாபத சௌதிரி, சையது முஸ்தபா அலி, ஹரிநாராயண் சட்டோபாத்தியாய், பிரபாத் தேவ் சர்க்கார், சாந்தி ரஞ்சன் பந்த்யோபாத்தியாய், ஸ்வராஜ் பந்த்யோபாத்தியாய், பிராணதோஷ் கட்டக், சுதீர் ரஞ்சன் முகோபாத்தியாய், சுசீல் ராய், ரஞ்சன், சசீந்திர நாத் பந்த்யோபாத்தியாய், சுலேகா சன்யால், கௌர் கிஷோர் கோஷ், ஆசுதோஷ் முகோபாத்தியாய், சத்தியப்பிரிய கோஷ், ஆசீஷ் பர்மன், அமியபூஷண் மஜும்தார், கமல்குமார் மஜும்தார், கௌரிசங்கர் பட்டாச்சார்யா, தீபக் சௌதுரி, மகாசுவேதாதேவி இன்னும் பலர்.

இந்தக் காலத்துக் கதாசிரியர்கள் இதற்கு முந்தைய காலத்து எழுத்தாளர்கள் போலவே செயல்பட்டனர். உண்மையில் இந்த இரு காலத்து எழுத்தாளர் குழுக்களை வெவ்வேறாகப் பிரித்துவிட இயலாது. நரேந்திரநாத் மித்வாடி, நாராயண் கங்கோபாத்தியாய், சந்தோஷ்குமார் கோஷ், நனி பௌமிக், சுசீல் ஜானா, சாந்திரஞ்சன் பந்த்யோபாத்யாய், ஸ்வராஜ் பந்தியோபாத்தியாய், பிராணதோஷ் கட்டக், ஆசுதோஷ் முகோபாத்தியாய் இவர்கள் எல்லாருமே 1916 ஆம் ஆண்டிலிருந்து 1922ஆம் ஆண்டுக்குள் பிறந்தவர்கள். இரண்டாம் உலகப்போர் தொடங்கிய சமயத்தில் – கல்கத்தாவும் வங்காளம் முழுதுமே ஒரேயடியாக மாறிக் கொண்டிருந்த குழப்பமான நேரத்தில் – இவர்கள் தங்கள் இளமைப் பருவத்தில் காலெடுத்து வைத்தனர். அன்று முதல் இன்று வரை இவர்கள் உறுதியோடு எழுதிக்கொண்டு வருகின்றனர். 1940க்கும் 70க்கும் இடைப்பட்ட முப்பதாண்டுக் காலத்தில் சமூக வாழ்க்கையிலும் தனிப்பட்ட மனித வாழ்விலும் நிகழ்ந்த பல்திறப்பட்ட மாற்றங்கள் இவர்களுடைய சிறுகதைகளில் பிரதிபலிப்பதைக் காணலாம்.

இந்த நூற்றாண்டின் பின்பாதியில் வங்கச் சிறுகதையின் இன்னொரு பருவம் தோன்றியுள்ளது. இந்தப் பருவத்தைச் சேர்ந்த இளம் கதாசிரியர்கள் 1930 முதல் 1940க்குள் பிறந்தவர்கள். இவர்கள் புதிய தலைமுறை எழுத்தாளர்கள் – சையது முஸ்தபா சிராஜ், மதி நந்தி, சுநீல் கங்கோபாத்தியாய், சியாமல் கங்கோபாத்தியாய், பரேன் கங்கோபாத்தியாய், சீர்ஷேந்து முகோபாத்தியாய், பிரபுல்ல ராய், திப்யேந்து பாலித், அதீன் பந்த்யோபாத்தியாய், தீபேந்திர நாத் பந்த்யோபாத்தியாய், தேபேஷ் ராய், சந்தீபன் சட்டோபாத்தியாய், கவிதா சின்ஹா, லோக்நாத் பட்டாச்சார்யா, சங்கர் ஆகியோர் இந்தப் பருவத்து எழுத்தாளராவர்.

இந்தப் பருவத்து எழுத்தாளர்கள் முற்றிலும் ஒரு புதிய வகையைச் சேர்ந்தவர்கள். இவர்களுக்குள்ளும் இவர்களுக்கு முந்தைய பருவத்து எழுத்தாளர்களுக்குமிடையே எவ்வித ஒற்றுமையுமில்லை. இவர்கள் தங்களுக்கு முற்பட்ட காலத்தில் நிகழ்ந்த எதையும் பார்க்கவில்லை, எந்தவிதமான பாரம்பரியத்திற்கும் நன்றி பாராட்டவில்லை; அதைப் பற்றிய நினைவுகூட இவர்களுக்கு இல்லை. இருட்டடிப்பு, பஞ்சம், வகுப்புக் கலவரம், இரத்தம் தோய்ந்த சுதந்திரம் இவையெல்லாம் நிகழ்ந்து சிறிது காலத்துக்குப் பின், அகதிக் குடியிருப்புகளின் ஓரங்களிலோ அல்லது அவற்றுக்கு வெளியிலோ இவர்கள் வாழ்ந்து வளர்ந்தார்கள். இவர்களுக்கு முற்பட்ட எழுத்தாளர்களுக்கு இவர்கள் முற்றிலும் அன்னியப் பட்டவர்களாகத் தோன்றினார்கள். இவ்விரு பிரிவினருக்குமிடையே எவ்விதப் பிணைப்புமில்லை. இளைய பருவத்தினர் வளரத் தொடங்குவதற்கு முன்னேயே கூட்டுக் குடும்ப வாழ்க்கையின் இதமான மாளிகை இடிந்து தூள் தூளாகிவிட்டது. மரியாதை, பக்தி போன்ற உணர்வுகள் வெறும் உபதேசங்களாகி விட்டன. ஆண்-பெண் உறவு மாறிப்போய்விட்டது. அதாவது அடிப்படை உந்துதல்கள் அப்படியே இருந்தாலும் அவற்றைச் சூழ்ந்திருந்த கற்பனைப் போர்வை இல்லை. தங்களுக்கு எதிரான கலகத்தில், வாழ்வதற்காக ஒன்றிணைந்தோ அல்லது ஒன்றிணைவது போல் பாசாங்கு செய்தோ அவர்கள் தங்களைத் தயார் செய்து கொள்கிறார்கள்; உண்மையில் அவர்கள் முன்னைவிடத் தனியர்கள், அமைதியற்றவர்கள், இயற்கைக்கு மாறான வழிகளிலோ நரம்புக் கிளர்ச்சியிலோ அமைதி காண முயல்பவர்கள் – இவ்வாறுதான் முந்தைய தலைமுறை எழுத்தாளர்கள் இந்தத் தலைமுறை எழுத்தாளர்களைப் பார்க்கிறார்கள். இந்த இரு தலைமுறை எழுத்தாளர்கள், தனித்தனித் தீவுகளாவர்.

“கல்லோல்” யுக எழுத்தாளர்கள், இரண்டாம் உலகப்போர்க்கால எழுத்தாளர்கள், இளைய தலைமுறை எழுத்தாளர்கள் என்னும் இந்த மூன்று பிரிவுகளில் முதலிரண்டு பிரிவினருக்கிடையேயுள்ள வேற்றுமையைவிடப் பின்னிரண்டு பிரிவினருக் கிடையேயுள்ள வேற்றுமை பல மடங்கு அதிகம். கல்லோல் யுகத்துக்குப் பிற்பட்ட பருவத்தில் கல்லோல் யுகத்தின் ரொமான்ட்டிக் தன்மை இல்லாவிடினும் வாழ்க்கையில் மகிழ்ச்சியும், நீதி – நியாயம் போன்ற மரபு நெறிகளிடம் மரியாதையும் இருந்தது. இது இன்றைய எழுத்தாளர்களிடம் இல்லை. இந்த விஷயத்தில் இவர்களிடையே உள்ள பிளவு கடக்க முடியாதது.
இந்தப் பிளவு மனப்போக்கில் மட்டுமல்ல, மொழியிலும் கட்டமைப்பிலும் கூடத்தான்; வாழ்க்கையை நோக்கும் பார்வையில் மட்டுமல்ல, வாழ்க்கைச் சாதனங்களைப் புதுமையான முறையில் கையாள்வதிலும் இந்தப் பிளவு பிரதிபலிக்கிறது. வங்கச் சிறுகதை ரவீந்திரரின் படைப்பிலேயே கொடுமுடியை எட்டிவிடவில்லை என்பது இதிலிருந்து தெரிகிறது. வங்கச் சிறுகதை மேலும் மேலும் முன்னேறியுள்ளது, அதன் திருப்பு முனைகளைக் குறிக்கும் மணி பல தடவைகள் ஒலித்துள்ளது, அதில் சோதனை முயற்சிகள் குறையவில்லை, வாழ்க்கையைப் புதிய நோக்கில் பார்க்கும் ஆர்வம் ஒருபோதும் வற்றிவிடவில்லை.

சில குறிப்பிட்ட நிபந்தனைகளுக்குட்பட்டு, ஒரு குறிப்பிட்ட பக்க எல்லைக்குள், ஒரு குறிப்பிட்ட எண்ணுள்ள சிறுகதைகளைத் தேர்ந்தெடுக்கும்போது அத்தொகுப்பு எல்லாருக்கும் திருப்தியளிக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. ஆனால் பல நிபந்தனைகளுக்கும் எல்லைகளுக்கும் உட்பட்டால் இது தவிர்க்க முடியாதது.

ரவீந்திரர்-சரத்சந்திரருக்குப் பிற்பட்ட மூன்று பருவங்களின் சிறுகதைகள் பல்திறப்பட்டவை, வளம் செறிந்தவை. அவற்றிலிருந்து செய்யப்படும் எந்தத் தொகுப்பும் திருப்தியளிக்காது. ஆகையால் வாசகரின் அனுதாபத்தையும் தாராள மனதையும் நம்புவதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை.

தற்கால வங்க இலக்கியத்தின் இரண்டு தலைசிறந்த எழுத்தாளர்கள் விபூதிபூஷண் பந்த்யோபாத்தியாயும் மாணிக் பந்த்யோபாத்தியாயும் ஆவர். ஓராண்டு முயற்சி செய்தும் பதிப்புரிமைப் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாததால் முன்னவரின் ‘ஆஹ்வான்’ சிறுகதையையும் பின்னவரின் ‘நமூனா’ சிறுகதையையும் இறுதி நேரத்தில் இத்தொகுப்பிலிருந்து விலக்கிவிட நேர்ந்தது. நான் விரும்பாமலே நேர்ந்துவிட்ட இந்தக் குறைக்காக வாசகர்களின் மன்னிப்பைக் கோருகிறேன்.

அருண்குமார் முகோபாத்தியாய்
வங்கமொழி-இலக்கியத்துறை,
கல்கத்தா பல்கலைக் கழகம்.

  • அனைத்திந்திய நூல் வரிசை: வங்கச் சிறுகதைகள்
    தொகுப்பு : அருண்குமார் மகோபாத்யாய்
    வங்கத்திலிருந்து தமிழாக்கம்: சு.கிருஷ்ணமூர்த்தி
    நேஷனல் புக் டிரஸ்ட், இந்தியா
  • ISBN 81-237-2140-4
  • முதற்பதிப்பு 1997 (சக 1919)
  • தமிழாக்கம் © நேஷனல் புக் டிரஸ்ட், இந்தியா 21
    Bengali Short Stories (Tamil)
  • வெளியீடு: இயக்குநர்,நேஷனல் புக் டிரஸ்ட்,
    இந்தியா ஏ-5, கிரீன் பார்க், புதுதில்லி 110016

முந்தைய பதிவுகள்:

Series Navigation<< வங்க இலக்கியங்கள்வங்காள வரலாறு >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.