குவாரண்டீன்

பஞ்சாபி மூலம்: ரஜிந்தர் சிங் பெத்தி
தமிழில்: பென்னேசன்

John M Armleder (1948), 43mousse (1980) Buglossoïdes Arvensis, 2022

பிளேக் நோய், இமாலயத்தின் காலடியில் அமைந்த நிலப்பரப்பு முழுவதும், மூடுபனி  போலப் படர்ந்து  எல்லோரையும் குழப்பமான நிலையில்   அச்சத்தால் ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்தது. அதன் பெயரைக் கேட்டாலே ஊரில்  அனைவரும் அஞ்சி நடுங்கினார்கள்.

பிளேக் உண்மையில் மிகவும் பயங்கரமான வியாதியாக இருந்தது. ஆனால் குவாரண்டீன் அதைவிடக் கிலியூட்டுவதாக இருந்தது. மக்கள் பிளேக்குக்கு பயப்படுவதை விட மிகவும் அதிகமாக குவாரண்டீனுக்கு பயப்பட்டனர்.

ஒருவேளை, அதனால்தான்   சுகாதாரத்துறை, பொதுமக்களை எச்சரிக்கும் வகையில்,  முன்பெல்லாம் நகரெங்கும், பொது இடங்களிலும், சுவர்களிலும், வீடுகளின் கதவுகளிலும்      ‘எலி இல்லை-பிளேக் இல்லை’ என்ற வாசகங்களுடன் ஒட்டப்பட்டிருந்த  சுவரொட்டிகள் இப்போது ‘எலி இல்லை-பிளேக் இல்லை- குவாரண்டீன் இல்லை’  என்று திருத்தப்பட்ட வாசகங்களுடன் காணப்பட்டன.

குவாரண்டீன் பற்றிய மக்களின் அச்சம் நியாயமானதுதான். ஒரு மருத்துவனாக என்னுடைய கருத்து எப்போதும் நம்பக் கூடியதாகவே இருக்கும்.  நகரத்தில், பிளேக் நோயை விட குவாரண்டீன் விளைவித்த மரணங்களே அதிகமாக இருக்கும் என்று என்னால் உறுதியாகச் சொல்ல முடியும். குவாரண்டீன் என்பது வியாதியின் பெயர் இல்லையென்றாலும்,   சட்டத்தின் அடிப்படையில், பிளேக் நோய் ஏற்கனவே ஆரோக்கியமாக உள்ளவர்களுக்கு மேலும் பரவாமல் இருக்கும் வகையில், அந்த நோயால் பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரையும் தனியாக அடைத்து வைக்கும்  விசாலமான இடத்தின் பெயராகும்.

குவாரண்டீன் மையங்களில், தேவையான அளவு மருத்துவர்களும் செவிலியர்களும் இருந்தாலும் நோயாளிகள் ஒவ்வொருவர் மீதும் தனித்தனியாக, பிரத்தியேகமான கவனம் செலுத்துவது என்பது இயலாத காரியமாக இருந்தது.

நிறைய நோயாளிகள், தங்களின் குடும்பத்தினரும் நெருங்கிய நண்பர்களும் உடன் இல்லாது தனித்து விடப்பட்ட நிலையில்  முற்றிலும் தைரியத்தை இழந்து வருவதை ஒரு மருத்துவனாக  என்னால் பார்க்க முடிந்தது.

தங்களைச் சுற்றிலும் எக்கச்சக்கமான மரணங்களைப் பார்க்க நேரிட்டதால், நிறைய நோயாளிகள்   அவர்களின் மரணம் அடைவதற்கான நேரம் வருவதற்கு  முன்பே செத்துப் போனார்கள். குவாரண்டீன் மையத்தின் நோய்த்தொற்றுச் சூழலின் காரணமாக,   லேசான நோய் அறிகுறி இருந்த நோயாளிகள் கூட செத்துக்  கொண்டிருந்தார்கள்.

இப்படி அடிக்கடி நேர்ந்த மரணங்களால், இறுதிச் சடங்குகள் கூட குவாரண்டீன் மையத்தின் வசதியின் அடிப்படையில் நடைபெற்று வந்தது. செத்த நாய்களை இழுத்துப் போவதுபோல  கணக்கற்ற பிணங்கள்   இழுத்துச் செல்லப்பட்டு ஓரிடத்தில் குவியலாகக் குவிக்கப்பட்டன. மதச்சடங்குகள் எதற்கும் எந்த மதிப்பும் தராமல் பிணக்குவியல் மீது பெட்ரோலை ஊற்றி, அனைத்துப் பிணங்களும் நெருப்புக்கு இரையாக்கப்பட்டன. 

உயரத்தில் தீச்சுவாலைகள் மாலை நேரத்தின் ஆரஞ்சு நிறம் கலந்த அடிவானத்துடன் கலக்கும் போது, இன்னும் அரைகுறை உயிருடன் இருந்த நோயாளிகள், ஏதோ உலகமே தீப்பற்றி எரிகிறதோ என்று நினைத்தார்கள். குவாரண்டீன் இப்படி மேலும் பல மரணங்களுக்குக் காரணமாக இருந்தது. ஏனென்றால் வலுக்கட்டாயமாக குவாரண்டீன் மையத்தில் அடைக்கப்படும் அச்சத்தினால் மக்கள்  தங்கள் நோயின் அறிகுறியை யாருக்கும் சொல்லாமல் மறைக்கத் தொடங்கினார்கள். பிறகு   நோயால் பாதிக்கப்பட்ட வீட்டிலிருந்து வேதனை கலந்த கதறலுடன் அந்த வீட்டை விட்டு ஒரு பிணம் வெளியில் தூக்கிச்  செல்லப்படும்போது தான் பிளேக்கால் அந்த வீட்டில் யாரோ ஒருவர் பாதிக்கப்பட்ட செய்தி வெளியில் கசிந்தது.

அந்த நாட்களில் நான் ஒரு   குவாரண்டீன் மையத்தில் மருத்துவராகப் பணிபுரிந்து வந்தேன். என்னுடைய இதயமும் மனதும் கூட பிளேக்கின் அச்சுறுத்தலினால் கலங்கியிருந்தது. மாலை நேரங்களில் வீட்டுக்குத் திரும்பியதும் கார்போலிக் சோப்பைக் கொண்டு கைகளை நீண்ட நேரம் கழுவிக் கொண்டிருப்பேன்.   கிருமி நாசினி திரவத்தைக் கொண்டு வாயைக் கொப்பளித்துக் கொண்டிருப்பேன். அல்லது  வயிற்றில் உள்ளதையெல்லாம் எரிப்பது போல, சூடான காப்பியைக் குடிப்பேன் அல்லது பிராந்தியை அருந்துவேன். இருந்தாலும் எனக்குத் தூக்கமின்மை, பார்வைக் குறைபாட்டு ஆகியவற்றுக்கான அறிகுறிகள் தோன்றத் தொடங்கின. அடிக்கடி வாந்தி எடுத்து வந்தேன்.  நோயால் பீடிக்கப்படும் அச்சத்தினால் தேவையான மருந்துகளையும் உட்கொண்டு வந்தேன். காப்பியும் பிராண்டியும் ஏற்படுத்திய வயிற்றெரிச்சலால், மூளையில் ஆவி கிளம்பியது போன்ற உணர்வு ஏற்பட்ட போதெல்லாம் மிகவும் குழம்பியவனாக இருந்தேன். எப்போதெல்லாம் தொண்டையில் லேசாக கரகரப்பு ஏற்பட்டாலும் பிளேக் நோய் என்னைத் தாக்குவதற்கான மேற்கொண்டு அறிகுறிகளை எதிர்பார்க்கத் தொடங்கினேன்.

“கடவுளே… நானும் பிளேக்குக்கு பலியாகப் போகிறேன். பிறகு  எனக்கும் அந்தக் குவாண்டீன் மையம்தான்…

அந்த நாட்களில், புதிதாக கிறிஸ்துவத்துக்கு மதம் மாறியிருந்த  , “வில்லியம் பாகு” என்ற துப்புறவுத் தொழிலாளி, எங்கள்  பகுதியில் தெருக் கூட்டுபவன்,  என்னிடம் வந்து, “பாபுஜி, ரொம்ப மோசம். பக்கத்து ஏரியாவில்  இன்று இருபத்தோறு நோயாளிகளை ஆம்புலன்சில் வைத்துத் தூக்கிச் சென்றிருக்கிறார்கள்” என்றான்.

“இருபத்தொன்றா?  ஆம்புலன்சிலா?” ஆச்சரியத்துடன் கேட்டேன்.

“ஆமாம். சரியாக இருபதும்   ஒன்றும்தான். இவர்கள் எல்லோரையும் குவாரண்டீனுக்குத் தூக்கிப் போவார்கள். கடவுளே… பாவம். இவர்கள் இனி எப்போதும் அவர்கள் வீடுகளுக்குத்  திரும்பி வரமாட்டார்கள்”.

அவனைப் பற்றி அக்கம்பக்கத்தில் விசாரித்த போது,  பாகு, நள்ளிரவில் மூன்று மணிக்கே எழுந்து விடுகிறான்.  ஒரு குவார்ட்டர் சாராயத்தைக் குடித்து விட்டு கிருமிகள் மேலும் பரவாமல் இருக்கும்படி தெருவிலும்  சாக்கடையிலும் நெடுக, சுண்ணாம்புப் பொடியைத் தூவுகிறான்.  அப்படி தினமும்  விரைவாக தூக்கம் முடித்து அந்த நேரத்தில் எழுந்து கொள்வதற்கு, இரவெல்லாம் கடைத்தெருவில் குவிந்த பிணங்களை ஓரிடத்திர்ல  சேகரிப்பது அவனுடைய வேலையின் ஒரு பகுதியாக இருப்பதும் ஒரு காரணம் என்றான். பிறகு நோயின் அச்சத்தால் வீட்டை விட்டு வெளியில் எங்கும் செல்லாமல் இருப்பவர்களுக்கு, ஏதேனும் சிறுசிறு வேலைகளை செய்து கொடுப்பதும் தன்னுடைய வேலை என்றான்.  இன்னொன்று, பாகு நோயைக் கண்டு துளிக்கூடப் பயப்படவில்லை. அவனைப் பொறுத்த வரை, மரணம் தன்னை எப்போதாவது நெருங்கினால், எங்கு போய் ஓடி ஒளிந்து கொண்டாலும் அதனிடமிருந்து தப்பவே முடியாது என்பதுதான் அவனுக்கான தத்துவமாக இருந்தது.

அந்த நாட்களில், பிணத்தின் அருகில் யாரும் செல்ல மாட்டார்கள். தலை மற்றும் மூக்கைச்சுற்றி ஒரு துணியைக் கட்டிக் கொண்டு, அர்ப்பணிப்பு உணர்வுடன் அவன் மனித இனத்துக்கு சேவை செய்தான்.  சிறிதளவே ஞானம் இருந்தாலும், வியாதியில் இருந்து பாதுகாத்துக் கொள்ளும் வழிமுறைகளை ஒரு தேர்ந்த பேச்சாளனைப் போல மக்களுக்கு எடுத்துச் சொல்லி வந்தான். பொது சுகாதாரம் பற்றியும், வீட்டைச் சுற்றி சுண்ணாம்புப் பொடியைஙம தூவுவது பற்றியும் வீட்டை விட்டு எங்கும் வெளியில் செல்லாமல் இருப்பது பற்றியும் விளக்கமாக எல்லா இடங்களிலும் சொல்லி வந்தான். ஒருநாள் அவன் மற்றவர்களிடம் நோயிலிருந்து தப்பிக்க ஒருவர் நிறைய சாராயம் குடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தி வந்ததையும்  பார்க்க நேர்ந்தது.  அவன் அன்று என்னைப் பார்க்க வந்தபோது அவனிடம் கேட்டேன், “பாகு, உனக்கு பிளேக் நோய் பற்றிய பயமேதுமில்லையா?”

“இல்லை பாபுஜி.  எனக்கான சாகப்போகிற நேரம் வரவில்லையென்றால், என் மயிரைக்கூட யாராலும் பிடுங்க முடியாது. நீங்கள் பெரிய மருத்துவர்.  ஆயிரக்கணக்கான மக்களை குணப்படுத்தியிருக்கீறிர்கள். ஆனால், உங்களுடைய குணமளிக்கிற கைகளும் மருந்தும் கூட, எனக்கு சாவு வரும்போது எந்த வேலைக்கும் ஆகாது.  ஆமாம் பாபுஜி, இதை நான் உரக்கச் சொல்லமுடியும்.  தெளிவாகவும் சொல்ல முடியும்” என்றான்.  பேச்சை மாற்றுவது போல, “இந்த குவாரண்டீன் பற்றி ஏதாவது கொஞ்சம் சொல்லுங்க பாபுஜி” என்றான்.

“குவாரண்டீன் மையத்தில் ஆயிரக்கணக்கான நோயாளிகளை தினமும் கொண்டு வர்றாங்க. எங்களால் முடிந்த வரை அவங்களுக்கு சிகிச்சை அளிக்க முயற்சி செய்யறோம்.  ஆனால் எத்தனை தூரத்துக்கு? அப்புறம் என்னோட வேலை பார்க்கிறவங்க நோயாளிகளோட கொஞ்ச நேரம் இருக்கறதுக்குக் கூட பயப்படறாங்க. பயத்துலே அவங்க தொண்டையும் உதடும் உலர்ந்து போகுது.  உன்னை மாதிரி யாரும் நோயாளிகளின் முகத்துக்குப் பக்கத்துலே போய் பேசறது இல்லை. உன்னை மாதிரி யாரும் கடினமாக வேலை செய்யறதும் இல்லை.  பாகு, கடவுள் உன்னைக் காப்பாற்றட்டும். மனித இனத்துக்கு நீ ரொம்பவும் அதிகமாகவே சேவை செய்யறே”. 

பாகு, கழுத்தைக் கீழ்நோக்கி வளைத்து, முகத்தையும் வாயையும் மூடியிருந்த துணியை விலக்கி சாராயத்தால் சிவந்திருந்த முகத்தைக் காட்டிச் சொன்னான், பாபுஜி, நான் எதற்கும் லாயக்கு இல்லாதவன். என்னால் யாருக்கு என்ன நல்லது செய்ய முடியும்? என்னுடைய வேலை மற்றவர்களுக்குப் பயனுள்ளதாக இருக்கட்டும். இது எனக்குக் கிடைத்த பெரிய பாக்கியம்.  பாபுஜி, பிரச்சாரம் செய்யறதுக்காக எங்க பகுதிக்கு அடிக்கடி வருகிற பாதிரியார் ஆபே, சொல்லுவார், நோயாளிக்கு உதவற வேலையிலே நம்ம உயிரைக்கூட பணயம் வைக்கலாம்னு ஏசு போதிக்கிறார்” என்று. அதனால் நான் யோசிக்கிறேன்…

 பாகுவின் தைரியத்தை உண்மையிலேயே பாராட்ட வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் அதீதமான உணர்ச்சி மிகுதியில் நிறுத்திக் கொண்டேன். அவனுடைய மன உறுதியும் மிகவும் யதார்த்தமான நடத்தையும் என் உள்ளத்தில் ஒருவகையான பொறாமையை ஏற்படுத்தியது.  இதனால், இன்றிலிருந்து எங்கள் குவாரண்டீன் மையத்தில் அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்படவும், முடிந்தவரை நிறைய நோயாளிகளின் உயிரைக் காக்க முயற்சிக்கவும் தீர்மானித்தேன். ஆனால்  எப்போதும் நாம் சொல்வது ஒன்று. நடப்பது முற்றிலும் வேறுதான்.   குவாரண்டீன் மையத்துக்குப் போய் அங்குள்ள நோயாளிகளின் கோரமான நிலையைப் பார்த்ததும், அவர்களின் வாய்களிலிருந்து கிளம்பிய துர்நாற்றம் என் நாசியை எட்டியதும், என்னுடைய ஆவியே ஆடிப்போனது போல இருந்தது.  பாகுவின் வழியை மேலும் பின்பற்றுவதற்கான தைரியம் என்னை விட்டு நழுவிப் போனது.  

இருந்தாலும், அன்று, பாகுவுடன் சேர்ந்து நிறைய வேலைகளைப் பார்த்தேன். நாங்கள் செய்த வேலையெல்லாம் நோயாளிகளின் அருகில் நெருக்கமாகச்சென்று செய்யக் கூடிய வேலைகள்தான். அவற்றை எல்லாம் பாகுவை செய்யச் சொன்னேன். அவன் எவ்விதத் தயக்கமும் இன்றி நான் சொன்ன அனைத்து வேலைகளையும்  செய்தான். நான் நோயாளிகளிடமிருந்து சற்றுத் தள்ளியே நின்றிருந்தேன். ஏனென்றால் எனக்கு பிளேக் மற்றும் குவாரண்டீன் மீது மேலும் அதிகமாக பயம் ஏற்பட்டிருந்தது. ஆனால் இந்த பாகு என்ன சாவுக்கும் குவாரண்டீனுக்கும் மேலானவனா என்ன?

ஒருநாள், சுமார் நானூறு நோயாளிகள் குவாரண்டீன் மையத்தில் சேர்க்கப்பட்டார்கள். அவர்களில் இருநூற்று ஐம்பது பேர் இறந்து போனார்கள்.

 மீதமிருந்த அத்தனை நோயாளிகளையும் என்னால் காப்பாற்ற முடிந்ததென்றால் அது பாகுவின் அர்ப்பணிப்பு கலந்த சேவையினால் மட்டுமே. குணமடைந்த நோயாளிகளின் பட்டியல் தலைமை மருத்துவரின் அறையில் தொங்கவிடப்பட்டது. அதில் என் மேற்பார்வையில் சிகிச்சை பெற்ற நோயாளிகளின் எண்ணிக்கையே அதிகமிருந்தது. வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் அந்த அறைக்குச் சென்று பட்டியலைப் பெருமையுடன் பார்வையிட்டு வந்தேன்.  அந்த வரைபடம் நூறு சதவிகிதத்தை நோக்கி ஏறுவதைப் பார்ப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது.

ஒருநாள் நான் தேவைக்கு அதிகமாகவே பிராந்தியைக் குடித்தேன். இதனால் என் இதயத்துடிப்பு அதிகரித்து, நாடித்துடிப்பு குதிரையைப் போலத் துள்ளி ஓடத்தொடங்கியது. ஒரு பைத்தியத்தைப் போல அங்குமிங்குமாக நடந்து கொண்டிருந்தேன். இறுதியில் பிளேக் நோய்க்கிருமி என் உடம்பிலும் தொற்றிக் கொண்டது போல சந்தேகம் கொண்டேன். விரைவில் என் கழுத்திலும் தொடையிலும் கட்டிகள் தோன்றும். எனக்கு பயமாக இருந்தது. அன்று நான் குவாரண்டைனிலிருந்து ஓடநினைத்தேன். நான் அங்கு நின்றிருந்தவரை அச்சத்தால் நடுங்கிக் கொண்டிருந்தேன். அன்று பாகுவை வெறுமனே இருமுறைதான் பார்க்க நேர்ந்தது.

பிற்பகலில் அவன் ஒரு நோயாளியைக் கட்டித் தழுவிக் கொண்டிருந்ததைக் காண நேர்ந்தது. மிகுந்த பாசத்துடன் அவனுடைய முதுகைத்  தட்டிக் கொடுத்துக் கொண்டிருந்தான். அந்த நோயாளி தன் சக்தி அனைத்தையும் ஒன்று திரட்டி பாகுவிடம் சொன்னான், “அல்லாஹ்தான் அனைவருக்கும் பெரிய எஜமானன். அவன் தன்னுடைய மோசமான எதிரியைக் கூட இந்த இடத்துக்குக் கூட்டி வரவேண்டாம். என் இரண்டு பெண்கள்…

பாகு, அவனுடைய வார்த்தைகளைக் கத்தரித்து எறிவது போல  “ஏசு மஸிஹாவுக்கு நன்றி சொல்.  நீ நன்றாகத்தானே இருக்கிறாய்”

“ஆமாம் சகோதரனே, இறைவனுக்கு நன்றி சொல்கிறேன். நான் இப்போது சுமாராக இருக்கிறேன். என்னை குவாரண்டீன் செய்தால்….” இந்த வார்த்தைகளை அவன் சொல்லிக் கொண்டிருந்தபோதே அவனுக்கு நரம்புகள் இழுத்தன. வாயிலிருந்து கோழை சணலாக ஒழுகியது. கண்கள் கண்ணாடிக் கற்களைப் போல இறுகின. உடம்பு பலமுறை குலுங்கியது. ஒரு நிமிடத்துக்கு முன்பு கூட தான் குணமாகி வருவதாகச் சொன்ன அந்த நோயாளி, இப்போது நிரந்தரமாக அமைதியடைந்தான். அவன் இறந்ததைப் பார்த்த பாகுவின் கண்களில் மறைமுகமாக ரத்தக் கண்ணீர் துளிர்த்தது. இவனுடைய சாவுக்கு அழுவதற்கு வேறு யார் இருக்கிறார்கள்? யாராவது சொந்தக்காரன் இவனுக்கு இருந்தால் அவன் வாய்விட்டு அழுதிருப்பான். பாகு மட்டுமே அங்கு இருந்தான்.  அங்குள்ள அனைவருக்கும் அவனே உறவினன். அனைவரின் வலியை உணர்ந்தவன் அவன். ஒருநாள் ஏசுவின் முன்பு, அவனும் மனித இனத்தின் பாவங்களுக்குப் பிராயச்சித்தம் செய்து கொள்ள வேண்டும்.

அதே நாள், மாலை வேளை. பாகு என்னிடம் ஓடி வந்தான். அவன் மூச்சடைத்தும் வலி நிறைந்த குரலிலும் பேசினான். “சாஹிப்… இந்த குவாரண்டீன் நரகம்தான்.  துல்லியமாக அது ஒரு நரகம்தான். பாதிரியார் விவரிக்கும் நரகமும் இந்த குவாரண்டீன் போலத்தான் இருக்கும்.  நரகத்தை மேல் உலகத்தில் இருக்கும் குவாரண்டீன் என்று விவரிப்பார்”.  . 

 “ஆமாம் தம்பி. இது நரகத்தை விட மோசமானது. இங்கிருந்து எப்படித் தப்பித்து ஓடுவது என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன். என்னுடைய உடல்நிலையும் இன்று ரொம்பவே மோசமாக இருக்கிறது” என்றேன்.

“பாபுஜி, இதை விட மோசமாக வேறு என்ன இருக்க முடியும்? இன்று ஒரு நோயாளி,  வியாதியின் அச்சத்தால் மூச்சடைத்து மயங்கி விழுந்திருக்கிறான். மையத்தில் யாரோ ஒருவன் இவனை செத்துப் போனதாகக் கருதிப் பிணங்களுடன் பிணமாக  அங்கு குவித்து வைக்கப்பட்டிருந்த பிணக்குவியலில் இழுத்து விட்டான்.  பிறகு வழக்கம் போல, எல்லாப் பிணங்களை ஒன்று திரட்டி பெட்ரோலை ஊற்றி தீயை மூட்டியதும் அனைவராலும் இறந்து போனதாக  நினைத்த அந்த நோயாளி  எரிந்து கொண்டிருந்த பிணக்குவியலில் இருந்து கைகால்களை வேகமாக ஆட்டியதைப் பார்த்தேன். உடனே நான் சிதையருகில் தாவிக் குதித்து அவனை அங்கிருந்து தூக்கினேன்.  ஆனால் பாபுஜி அவன் மிகவும் மோசமாக எரிந்து போயிருந்தான். அவனைக் காப்பாற்றும் முயற்சியில் என்னுடைய வலது கை முற்றிலும் கருகிப்போயிருந்தது.

பாகுவின் கைகளைப் பார்த்தேன்.  மஞ்சள் நிறத்தில் கருகிப் போன கொழுப்பு தெரிந்தது. அந்த நிலையில் அவனைப் பார்த்து ஆடிப்போனேன். அவனைக் கேட்டேன், “அந்த ஆள் பிழைத்துக் கொண்டானா?

“பாபுஜி, அவன் உண்மையிலேயே நல்லொழுக்கம் கொண்ட மனிதனாக இருந்திருக்கிறான்.    இந்த உலகத்துக்கு  அவனுடைய பக்தியினாலும்  நல்லொழுக்கத்தினாலும் எந்தப் பயனும் இல்லை.  மிகுந்த வலி நிறைந்த நிலையில் அவன்   தலையைத் தூக்கினான். பாதி உயிர்போயிருந்த நிலையில் செருகிப்போன  கண்களால் அவன் எனக்குத் தன் நன்றியைத் தெரிவித்தான்.”

“அப்புறம் பாபுஜி”, அதற்குப்பிறகு, அவன் பட்ட வேதனையை நான் வேறு எந்த நோயாளியிடமும் இதற்கு முன்பு எப்போதும் பார்த்தது கிடையாது. அதற்குப் பிறகு அவன் செத்துப் போனான். நான் அப்போதே அவன் உயிருடனே எரிந்து போவதற்கு விட்டிருந்தால் எத்தனையோ நன்றாக இருந்திருக்கும்.  மேலும் கஷ்டப்பட வேண்டும் என்பதற்காகவே அவனை நான் காப்பாற்றியிருக்கிறேன் என்று தோன்றுகிறது.”

அதற்குப் பிறகு, பாகு எதுவும் பேசமுடியாமல் உட்கார்ந்திருந்தான்.  சிறிது நேரம் கழித்து, மிகுந்த வேதனையின் இடையில், தயக்கத்துடன் சொன்னான், “பாபுஜி, அவன் என்ன வியாதியால் செத்துப்போனான் என்று தெரியுமா? அவன் போனது பிளேக்  நோயால் அல்ல. குவாரண்டீனால்தான் செத்துப்போனான்.  ஆமாம். குவாரண்டீன்.”

நரகம் என்பது மக்களின் முடிவற்ற கோபங்களுக்கும் ஆவேசத்துக்கும் இடையில் அவர்களை சமாதானப்படுத்தும் வகையிலான ஒரு விஷயம் என்றாலும், நோயின் பாரம் சுமக்கும் அந்த மனிதர்களின் கதறல்கள் இரவெல்லாம் காதுகளைப் பிளந்து கொண்டிருந்தன.

தாய்மார்களின் அழுகை, சகோதரிகளின் சோகப்பாடல்கள், மனைவியரின் சோகம், குழந்தைகளின் அலறல்கள் நகரத்தின் காற்றில் மிதந்து கொண்டிருந்தன. அவற்றைக் கேட்டு ஆந்தைகள் கூட நள்ளிரவில் எதையும் பேசத்தயங்கின. எங்கும் உள்ளத்தை உருக்கும் காட்சிகளாக இருந்தன.  நோயால் பீடிக்கப்பட்டு தங்களின் வீட்டிலேயே படுத்துக்கொண்டு, அந்த வீட்டில் ஆரோக்கியமாக இருக்கும் மற்றவர்களின் நெஞ்சில் சுமையை ஏற்றும் நோயாளிகளின் நிலை என்னவாக இருக்கும்? காமாலை நோயால் பீடிக்கப்பட்டது  போல கதவுகளிலிருந்தும் சுவர்களிலிருந்தும் கசியும் நம்பிக்கையின்மையின் மஞ்சள் துளிகளைப் பார்க்கிறவனின் நிலை என்ன? பிறகு குவாரண்டீன் மையங்களில் வைக்கப்பட்டுள்ள நோயாளிகள், விரக்தியின் எல்லையைக் கடந்த பிறகும்,  மரண தேவதையின் நிழலைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்களா? அடித்துக் கிளப்பும் புயற்காற்றில் ஏதோ ஒரு மரத்தின் உச்சாணியில் உள்ள கிளையைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருப்பவனைப் போல அவர்கள் தங்கள் உயிரைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கிறார்கள். புரண்டோடும் நீரின் பேரலைகள் ஒவ்வொரு கணமும் எந்த சிகரத்தையும் மூழ்கடிக்கக் காத்திருக்கின்றன.

எனக்கு ஏற்பட்ட விரக்தியின் காரணமாக, அன்று நான் குவாரண்டீன் மையத்துக்குக் கூடப் போவில்லை. ஏதோ அவசர வேலையிருப்பதாக சாக்கு போக்கு சொல்லிவிட்டேன்.  மனதளவில் நான் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தேன். ஏனென்றால், ஏதாவது ஒரு நோயாளிக்கு அங்க என்னுடைய உதவியால் ஏதேனும் பயன் கிடைத்திருக்கலாம்.  ஆனால் என் மனதைப் பற்றியிருக்கும் பயத்தினால் நானே என் கால்களுக்கு விலங்கிட்டுக் கொண்டேன். மாலையில்   தூங்கிக் கொண்டிருந்தபோது, ஐந்நூறுக்கும் மேற்பட்ட நோயாளிகளை குவாரண்டைனுக்கு எடுத்து வந்திருப்பதாகச் சொன்னார்கள்.

குடலைச் சுடுமளவுக்கு மிகவும் சூடான காப்பியைக் குடித்து விட்டு மீண்டும் படுக்க ஆயத்தம் செய்து கொண்டிருந்தேன்.  அந்நேரம் யாரோ கதவைத் தட்டினார்கள். அது பாகு. என் வேலைக்காரன் கதவைத் திறந்த தும், மூச்சிரைத்துக் கொண்டே உள்ளே நுழைந்தான். “பாபுஜி, என் மனைவிக்கு பிளேக் நோய் தாக்கியிருக்கிறது.  தயவு செய்து காப்பாற்றுங்கள். அவளிடம் பால் குடிக்கும் எங்களுடைய ஒன்றரை வயதுக்குழந்தை, அவனும் செத்து விடுவான்”.

அவனிடம் ஆறுதலாகப் பேசுவதற்குப் பதிலாக கோபத்தில் என் குரலை உயர்த்தினேன், “நீ ஏன் முன்னமே வரவில்லை? இப்போதுதான் காய்ச்சல் ஆரம்பித்து இருக்கிறதா?”

“பாபுஜி, நான் காலையில் அவளுக்கு லேசாகக் காய்ச்சல் இருந்த து. நான் குவாரண்டீன் மையத்துக்குக் கிளம்பிவிட்டேன்…”

என்ன? வீட்டில் படுத்திருந்தாளா? அப்போதும் நீ குவாரண்டீனுக்குப் போயிருக்கிறாய் இல்லையா?”

“ஆமாம் பாபுஜி” நடுங்கிக் கொண்டே சொன்னான் பாகு. அவளுக்கு லேசான காய்ச்சல் இருந்தது.    மார்பில் பால் கட்டியிருக்கும் அதனால் இருக்கலாம் என்று நினைத்தேன். வேறு ஏதும் பிரச்சினை இல்லை… பிறகு என் இரண்டு தம்பிகளும் வீட்டில்தான்  இருந்தார்கள். குவாரண்டீனில் நூற்றுக்கணக்கான நோயாளிகள் எந்த உதவியும் இல்லாமல் இருக்கிறார்கள்”.

“அதனாலே, நீ தாரளப்பிரபு, தியாகச்செம்மல்.  வீட்டுக்கு நோய்க்கிருமிகளைக் கொண்டு வந்துட்டே. அங்கே நோயாளிகள் கிட்டே அத்தனை அருகாமையில் போகக்கூடாது என்று சொல்லியிருக்கிறேனா இல்லையா? பார், அதனால் இன்று நான் அங்கே போகவில்லை. எல்லாம் உன்னுடைய தவறு. இப்போது நான் என்ன செய்ய முடியும்? உன்னை மாதிரி ஹீரோக்கள் எல்லாம் ஹீரோயிசத்தோட விளைவை அனுபவித்துத்தான் ஆகணும். ஊர் முழுக்க நூற்றுக்கணக்கான நோயாளிகள் இருக்கிற இந்த வேளையிலே….”

பாகு, பிரார்த்தனை செய்யும் தொனியில், ஆனால் தேவன் ஏசு கிறிஸ்து….”

“மரியாதையாக வெளியே போ.  தெரிந்தே தீயில் கையை வைத்திருக்கிறாய். இப்போது அதற்கான தண்டனையை நான் எதற்கு அனுபவிக்கணும்? தியாகம் இன்னொரு பெரிய தியாகத்தை வேண்டுகிறது. இந்த நடுராத்திரியிலே நான் ஒண்ணும் செய்ய முடியாது.”

“ஆனால் பாதிரியார் ஆபே…

வெளியே போ.  அந்தப் பாதிரியார் ஆபே கூட நீயும் நாசமாகப் போ… இடத்தைக் காலி செய்…”

பாகு தலையைக் குனிந்து கொண்டே அங்கிருந்து வெளியேறினான். அரைமணி நேரம் கழித்து, என் கோபம் சற்றுத் தணிந்ததும், என் செயலை நினைத்து நானே வெட்கப்பட்டேன். துரதிருஷ்டவசமாக ஏதேனும் நடந்து விட்டால், அதை நினைத்து பின்னர் வருந்துவதற்கு நான் ஒன்றும் அத்தனை மகான் அல்ல. இது எனக்குக் கிடைத்துள்ள பெரிய தண்டனை. மனது கேட்கவில்லை.  என்னுடைய அகங்காரம் எல்லாவற்றையும் அடித்து நொறுக்கி, பாகுவைத் தேடிச் சென்று என்னுடைய நடத்தைக்கு மன்னிப்புக் கோரவேண்டும். முழு மனதுடன் அவனுடைய மனைவிக்கு சிகிச்சை அளிக்க வேண்டும்.  அவசர அவசரமாக உடையை மாற்றிக் கொண்டு, பாகுவின் வீட்டை நோக்கி ஓடினேன். நான் அங்கு போனபோது பாகுவின் இரண்டு தம்பிகளும்  பாகுவின் மனைவியை ஒரு கட்டிலில் வைத்து சுமந்து கொண்டு வெளியில் கிளம்பிக் கொண்டிருந்தார்கள். 

“இவளை எங்கே எடுத்துப்போகிறீர்கள்?” பாகுவைக் கேட்டேன்.

மெல்லிய குரலில் சொன்னான், “குவாரண்டைனுக்கு”

“பாபுஜி, நீங்கள் வரமறுத்து விட்டீர்கள். பிறகு எங்களுக்கு செய்வதற்கு வேறு என்ன இருக்கிறது? அங்கே வேறு யாராவது டாக்டரிடம் உதவி கிடைக்கும் என்று நினைத்தேன். அங்கே வைத்து மற்ற நோயாளிகளுடன் இவளையும் கவனித்துக் கொள்வேன்”.

“கட்டிலை உள்ளே கொண்டு போ. இன்னும் நீ மற்ற நோயாளிகளைப் பற்றி நினைப்பதை நிறுத்தவில்லை இல்லையா?  முட்டாளே…”

கட்டில் உள்ளே எடுத்துச் செல்லப்பட்டது. பாகுவின் மனைவிக்கு சரியாகப் பார்த்து மருந்து கொடுத்து வேண்டிய ஊசியும் போட்டு விட்டு என் கண்ணுக்குப் புலப்படாத எதிரியுடன் போரிடத் தொடங்கினேன். பாகுவின் மனைவி லேசாகக் கண்களைத் திறந்தாள்.

நடுங்கிய குரலில் பாகு குழறத் தொடங்கினான், “பாபுஜி, உங்கள் கருணையை என்னால் எப்போதும் மறக்க முடியாது பாபுஜி… என்றான்.

“நான் முன்பு அப்படி நடந்து கொண்டதற்கு என்னை மன்னித்து விடு பாகு…  மற்றவர்களுக்கு நீ செய்த தன்னலமற்ற சேவைக்கு   உன்னுடைய மனைவியைக் குணப்படுத்துவதன் மூலம் இறைவன் அவளை மீண்டும் உனக்குப் பரிசாக அளிக்கட்டும்.

கண்ணுக்குப் புலப்படாத என் எதிரி   கடைசியாகத் தன்னுடைய ஆயுதத்தைப் பயன்படுத்தியதை அப்போது பார்த்தேன். அந்தப் பெண்மணியின் உதடுகள் துடிக்கத் தொடங்கின. அவளுடைய நாடியைப் பிடித்துப் பார்த்தேன். அது மெதுவாகக் குறைந்து அவளுடைய தோளை நோக்கிச் சரிந்தது. என் கண்ணுக்குப் புலப்படாத எதிரி, எப்போதும் வெற்றியையே காணுகின்றவன், வழக்கப்படி என்னை நான்கு மூலைகளிலிருந்தும் அடித்து வீழ்த்தினான். மிகுந்த மனஉளைச்சலுடன் தலையைக் குனிந்தவாறு,   “பாகு, துரதிருஷ்டசாலி பாகு… உன் தியாகங்களுக்கு இப்படி ஒரு துயரமான பரிசு உனக்குக் கிடைத்திருக்கிறது… என்றேன்.

பாகுவின் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

பாலருந்தும் தன் குழந்தையைத் தாயிடம் இருந்து நிரந்தரமாகப் பிரித்து, என்னை மிகுந்த மரியாதையுடனும் பணிவுடனும் பாகு வழியனுப்பி வைத்தது இதயத்தை நொறுக்கும் காட்சியாக இருந்தது.

உலகமே இருண்ட நிலையில் பாகு இனி யார் மீதும் அக்கறை காட்ட மாட்டான் என்று நினைத்தேன்… ஆனால் அடுத்த நாளே, அவன் சில நோயாளிகளை மேலும் அதிக அக்கறையுடன் கவனித்துக் கொண்டதைப் பார்த்தேன். தன்னுடைய உயிரை துச்சமாக மதித்து நூற்றுக்கணக்கான இல்லங்களில் விளக்கு அணையாமல் பார்த்துக் கொண்டான். பாகுவை அடியொற்றியது போல நானும் மிகவும் விடாமுயற்சியுடன் வேலை பார்த்தேன். குவாரண்டீன் மையத்திலும் மருத்துவ மனையிலும் வேலை முடிந்த பிறகு நகரத்தின் ஏழ்மையான பகுதிகளுக்கு, சாக்கடைகள் மற்றும் குப்பைகள் நிறைந்த பகுதிகளில் வாழ்ந்து இந்த நோய்க்கு எளிதில் இரையாகும் ஏழைகள் வசிக்கும் பகுதிகளுக்குச் சென்றேன்.

நகரத்தின் காற்று மெதுவாகக் கிருமிகளின்றித் தூய்மையடையத் துவங்கியது. நகரம் மொத்தமாகக் கழுவி விடப்பட்டது. எலிகளின் தடயம் எங்கும் காணப்படவில்லை. நகரத்தில் ஒன்றிரண்டு நோயாளிகள் மட்டுமே இருந்தனர். அவர்களுக்கும் உடனடியாக உரிய மருத்துவ சிகிச்சை அளித்தால் நோய் மற்றவர்களுக்குப் பரவாமல் இருக்கும் வகையில் நிலைமை தேறி வந்த து. நகரில் வியாபாரம் மீண்டும் தலையெடுத்தது. பள்ளிகள், கல்லூரிகள், அலுவலகங்கள் மீண்டும் திறக்கப்பட்டன.

ஒரு விஷயம் என்னால் உறுதியாகப் பார்க்க முடிந்தது. நான் கடைத்தெருவில் நடந்து சென்ற போதெல்லாம் பல விரல்கள் என்னைச் சுட்டிக் காட்டத் தொடங்கின.   கண்களில் நன்றியைத் தேக்கிக் கொண்டு அனைவரும் என்னைப் பார்த்தனர். செய்தித்தாள்களில் என்னுடைய புகைப்படத்துடன் என்னைப் பாராட்டும் வகையில் செய்திகள் வெளிவந்தன. அனைத்துத் தரப்பிலிருந்தும் கிடைத்த இந்தப் பாராட்டுக்கள் என் மனதில் கொஞ்சம் செருக்கை உண்டாக்கியது.

இறுதியாக, பெரிய அளவில் ஒரு விழா ஏற்பாடு செய்யப்பட்டது. அதில் கலந்து கொள்ள நகரத்தின் பெருவியாபாரிகளும் மருத்துவர்களும் அழைக்கப்பட்டார்கள். உள்ளாட்சி அமைச்சர் அக்கூட்டத்துக்குத் தலைமை தாங்கினார். என்னைத் தலைவரின் அருகில் அமர வைத்தார்கள்.  ஏனென்றால், அந்த விழாவே எனக்குப் பாராட்டுத் தெரிவிக்கும் வகையில் ஏற்பாடு  செய்யப்பட்டிருந்தது. மலர்மாலைகளின் பாரம் என்னுடைய தலையைக் கீழே அழுத்தியது.    என்  ஆளுமையை பூதாகாரமாகப் பெருக்கிக் காட்டியது. ஆணவப்பார்வையை மெதுவாக அங்குமிங்குமாக சுழலவிட்டேன். மனிதகுலத்துக்கு நான் ஆற்றிய சேவையைப் பாராட்டி எனக்கு ஆயிரம் ரூபாய் அடங்கிய பணமுடிப்பு ஒன்று நன்றிப் பரிசாக வழங்கப்பட்டது.

அந்த விழாவுக்கு வந்திருந்த அனைவரும் என்னுடன் பணிபுரிந்த மருத்துவர்களையும் குறிப்பாக என்னையும் மிகவும் பாராட்டிப் பேசினார்கள். என்னுடைய கடுமையான உழைப்பினால் கணக்கற்ற உயிர்களைக் காப்பாற்றியதாகவும் என்னுடைய அர்ப்பணிப்பு விலைமதிப்பற்றது என்றும் கூறினார்கள். இரவு பகல் என்று பாராது, என் உயிரை இந்த தேசத்தின் உயிராகக் கருதியதாகவும் என்னுடைய தலைநகரை இத்தேசத்தின் தலைநகராக க் கருதி உழைத்த தாகவும் பேசினார்கள்.

மேஜையின் இடப்புறமாக நின்றிருந்த அமைச்சர், கையில் மெல்லிய பிரம்பு ஒன்றை வைத்துக் கொண்டு சபையோரிடம் உரையாற்றினார். சுவற்றில் தொங்கிக் கொண்டிருந்த வரைபடத்தைத் தன் கையில் இருந்த பிரம்பால் சுட்டிக் காட்டிப் பேசினார்.  நகரில் குணமடைபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகக் கூறினார்.  ஒரு குறிப்பிட்ட நாளில் என்னிடம் சிகிச்சைக்கு ஒப்படைக்கப்பட்ட ஐம்பத்து நான்கு நோயாளிகளும் முற்றிலும் குணமடைந்து தங்களின் வீடுகளுக்குத் திரும்பியதாகத் தெரிவித்தார். இதன் விளைவாக நாம் நூறு சதவிகித வெற்றியை சாதித்திருக்கிறோம் என்றும் அந்தக் கருப்புக் கோடு வெற்றியின் ஏறுமுகத்தை நோக்கிப் போகிறது என்றும் கூறினார்.

அவருடைய பேச்சுக்குப் பிறகு, அமைச்சர் என்னுடைய தைரியத்தைப் பாராட்டினார்.  “இவருடைய தன்னலமற்ற சேவைக்கு பிரதிபலனாக டாக்டர் பக்ஷி ஜி அவர்கள் லெப்டினெண்ட் கர்னல்  கிரேடுக்கு பதவி உயர்வு அளிக்கப்படுகிறது என்றும் அறிவித்தார்.

அந்த அரங்கமே கரவொலியால் அதிர்ந்த து.

கரவொலியின் இடையில், பெருமையுடன் தலையை உயர்த்தினேன். தலைவருக்கும் பெருமதிப்புள்ள விருந்தினர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் நானும் உரையாற்றினேன். அதில், பல்வேறு விஷயங்களுக்கு இடையில், மருத்துவமனைகள்,  குவாரண்டீன் மையங்கள் மட்டுமே மருத்துவர்களின் கவனத்தில் இருக்கக்  கூடாது.  ஆனால் ஏழைகள் வசிக்கும் வீடுகளையும்  மருத்துவர்கள் தங்கள் கவனத்தில் வைக்க வேண்டும்.  அந்த ஏழைகள் முற்றிலும் கையறு நிலையில் இருக்கிறார்கள். பெரும்பாலான ஏழை நோயாளிகள் இந்தக் கொடிய நோய்க்கு அதிகமாக பலியாகி இருக்கிறார்கள். நானும் என் உடன் பணிபுரியும் மருத்துவர்களும் இந்தக் கிருமியின்  தோற்றுவாயைக் கண்டுபிடித்து அதை  முற்றாக ஒழிக்கும் வகையில் எங்கள் முழு கவனத்தையும் செலுத்தினோம். மருத்துவமனைகளிலும் குவாரண்டீன் மையத்திலும் பணி முடித்த பிறகு இரவு நேரங்களில் நாங்கள் வியாதி அதிகமாகப் பரவும் இடங்களுக்குச் சென்று அங்கு வசிக்கும் ஏழை மக்களுக்கு சிகிச்சை அளித்தோம்” என்று என் உரையை முடித்தேன்.

ஒருவழியாகப் பாராட்டு விழா முடிந்ததும், ஒரு லெப்டினெண்ட் கர்னலாக, தோளை நிமிர்த்தி, கழுத்தில் பாரமாகத் தொங்கிய மாலைகள் மற்றும் மக்கள் என் சேவையைப் பாராட்டி நன்றிப் பரிசாக அளித்த ஆயிரம் ரூபாய் பணமுடிப்பையும்  சுமந்து என் வீட்டை அடைந்தேன்.  மெல்லிய குரல் ஒன்று என்னை அங்கு வரவேற்றது. “வாழ்த்துக்கள் பாபுஜி”.

என்னை வாழ்த்தியவாறே, அதே பழைய துடைப்பத்தை பக்கத்திலிருந்த சாக்கடை மூடி ஒன்றின் மீது வைத்து விட்டு முகத்தை மூடியிருந்த துணியை இரு கைகளாலும் விலக்கினான்.  நான் திகைத்து நின்றேன்.

“நீ இங்கேதான் இருக்கிறாயா பாகு…? சகோதரனே… என்று மிகவும் சிரமப்பட்டுக் கூறினேன். “இந்த உலகத்துக்கு உன்னைத் தெரியாது… பாதிரியார் ஆபேயின் ஒப்பற்ற சீடர்கள்… கடவுள் உன்னை ஆசிர்வதிக்கட்டும்…”

அந்தக் கணத்தில் என் தொண்டை வறண்டு போனது. மரணத்தின் வாயிலில் இருந்த பாகுவின் மனைவியும் குழந்தையும் என் கண்களில் வந்து மறைந்தார்கள். என் கழுத்தில் பாராமாகத் தொங்கிக் கொண்டிருந்த மாலைகள் என் கழுத்தை நெறிப்பது போல எனக்குத் தோன்றியது. பணமுடிப்பின் பாரம் என் பாக்கெட்டை வெடித்துச் சிதறடிப்பது போல  இருந்தது.  மேலும்… எத்தனையோ பாராட்டுக்களையும் சிறப்புக்களையும்  அடைந்த பின்னரும் இப்படி என்னைப் பாராட்டிக் கொண்டாடும் இந்த  உலகத்தை நினைத்து என் துயரத்தைக் கொண்டாடினேன்.

குறிப்பு

ரஜீந்தர் சிங் பெத்தி (1915-1984) மிகவும் ஆகச்சிறந்த உருது சிறுகதை மற்றும் நாவலாசிரியர்.  சினிமாக்கதாசிரியர், இயக்குனர், தயாரிப்பாளர் என்று பன்முகத்தன்மை கொண்டு இயங்கியவர்.  இவருடைய பெரும்பாலான எழுத்துக்கள் மானிடத்தின் வலிகளை சுமந்தவை. பிரிவினை பற்றிய இவருடைய கதைகள் வாசிப்பவர்களின் நெஞ்சை உலுக்கும்  தன்மை கொண்டவை.  இந்த குவாரண்டீன் சிறுகதை, பிரிட்டிஷ் ஆட்சியின் போது இந்தியாவை வாட்டிய   பிளேக் தொற்றுநோய் மற்றும் அப்போது மேற்கொள்ளப்பட்ட ‘குவாரண்டீன்’ என்னும் தனிமைப்படுத்துதலை மையமாக வைத்து எழுதப்பட்ட கதை. 

இந்தக் கதை சமீபத்தில் உலகத்தையே கலக்கிய கோவிட் நோய்த்தொற்று, அதன் விளைவான மரணங்கள்  மற்றும் நோயாளிகளின் தனிமைப்படுத்துதல் ஆகியவற்றையும் மிகவும் எளிதாக நினைவுபடுத்துவதைத் தவிர்க்க முடியாது.  

Series Navigation<< இறுதி சல்யூட்ஒரு துண்டு வெயில் >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.