டெர்மினல்

ஹிந்தி மூலம்: நிர்மல் வர்மா

தமிழாக்கம்: அனுராதா க்ருஷ்ணசுவாமி 

அவள் எதுவும் சொல்லவில்லை என்றாலும்,  அவள் எப்போது அவனிடமிருந்து விலகிப் போனாள் என்பது அவனுக்குத் தெரியும். ” நீ கோபமாக இருக்கிறாயா?” என்று கேட்டபடியே அவன் அவளது தோள்களை பற்றி குலுக்கினான். ஒரு மெழுகு பொம்மையைப் போல அவள் அவனை குலுக்க அனுமதித்தாள். அவர்கள் புணரும் போதும் இதே தான் நடக்கும். அவளது உடல் ரப்பர் போல இணக்கமாகிவிடும். தன்னை முழுமையாக அவனுக்கு ஒப்புக் கொடுத்துவிட்டு அவள் அவனுக்குப் பிடித்ததைதெல்லாம் செய்ய அனுமதிப்பாள். அவள் விசும்பும் போது கூட  துன்பத்தாலும் மகிழ்ச்சியாலும் போர்த்தப்பட்டவள் போல, எதிர்காலத்தின் நிழலே படியாத எல்லையற்ற நிகழ் காலத்தின் மூன்றாவது உடலிலிருந்து எழுந்தவள் போலக் காட்சியளிப்பாள். ஒருவேளை இங்கிருந்து தான் துரதிருஷ்டத்தின் சீற்றம் அதிகரித்திருக்கவேண்டும் – எதிர்காலத்தை அறிந்து கொள்ள மாட்டேன் என்று யாரேனும் மறுப்பார்களா என்ன? ” “நாம் எதிர்காலத்தைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்” என்று அவள் அழுத்தம் கொடுத்துச் சொன்னாள். ” என்ன நடக்கப்போகிறது என்று தெரிந்து கொள்ள வேண்டும்.”அவன் அவளைத் தழுவிக் கொண்டான். அவளுக்கு இருட்டில் புலப்பட்டது அவனுக்கு மட்டும் ஏன் தெரியவில்லை என்று  ஆச்சரியமாக இருந்தது.” நீங்கள் ஒன்றும் இல்லை என்று சொல்கிறீர்கள். எதுவும் இல்லை என்று உங்களுக்கு நம்பிக்கை இருக்கிறதா? எதுவும் நடக்காது என்று உங்களுக்கு நம்பிக்கை இருக்கிறதா?” அவள் அவனைத் தன்னிடமிருந்து தூரத் தள்ளினாள. கோபத்தில் முகத்தைத் திருப்பிக் கொண்டாள். கல்லைப் போல இறுகிப்போனாள். அவன் அவளைத் தொட்ட போது வெதுவெதுப்பாக இருந்தது.”உன் கைகள்  எப்போதும் காய்ச்சல் அடிப்பது போல சூடாக இருக்கிறது” என்றான் அவன். அவள் சலனமற்று வேறொருபுறம் பார்த்துக் கொண்டிருந்தாள். அத்தகைய தருணங்களில் அவன் எதுவும் செய்ய முடியாது என்பதை  உணர்ந்தான். கடந்த ஏழு வருடங்களில் அவளது ஆத்மாவின் பல்வேறு தட்பவெட்பங்களை அவன் நன்கு அறிந்திருந்தான். ஆனால் மிகவும் குளிரான,  நடுங்க வைக்கிற சீதோஷ்ணத்தில் அவன் அவளது கைகளைப் பற்றிக் கொண்டு அமர்ந்திருக்கையில் அவள் எங்கோ வெகு தூரம் விலகிப்போயிருந்தாள்.

அடுத்த நாள் அவர்கள் சந்தித்தபோது அது மழையும் புயலும் அடித்து ஓய்ந்த பிறகு வரும் புத்தம் புது நாள் போல இருந்தது. விடுதியை விட்டு வெளியே வந்ததுமே அவளது முகம் பொலிய ஆரம்பித்திருந்தது. அவள் தனது துப்பட்டாவை அகற்றியதும் அவளுடைய முடி தோள்களில் தவழ்ந்து பறந்தது. நகரத்திலிருந்து வெகு தூரத்தில், அஸ்தமனச் சூரியனின் திசையில், நதி திரும்பும் வளைவில்  நதிக்கரையில்அவர்கள் வழக்கமாக உட்காரும் காலி பெஞ்சில் அமர்ந்தார்கள். அதற்கு எதிரே அமைந்திருந்த ஸ்கேட்டிங் ரிங்க்கிலி ருந்து வெறித்தனமான இசையையும் குழந்தைகளின் கூச்சலையும் ஒரு சேர கேட்க முடிந்தது. வீடு திரும்பவதற்கு முன்னால் அவர்கள் பெரும்பாலும் அங்கு தான் உட்காருவது வழக்கம். புயல் அடித்து ஓய்ந்த நாளுக்குப் பின்,  பாதியில் நின்று போன விஷயங்களின்  திரிகளை மறுபடியும் எடுக்க இது அமைதியான, சுத்தமான, உலர்ந்த இடமாக இருந்தது. ஆனால் அவள் அமைதியாக இருந்தாள். தூங்கும் குழந்தைகளை ப்ராமில் இட்டு தள்ளியவாறே அரட்டை அடித்துக் கொண்டு செல்லும் சில பெண்களை அவள் பார்த்தாள். ஒரு ஆள் பைப்பில் சுருட்டு குடித்துக் கொண்டே அவர்களை கடந்து சென்றான். அவனுடைய பைப்பிலிருந்து வெளிவந்த புகை அஸ்தமன சூரியனின் ஒளியில் பாம்பைப் போல  காட்சியளித்து மறைந்தது. அந்த ஆள் கண்களில் இருந்து மறையும் வரை அவள் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். பிறகு இவன் பக்கம் திரும்பி புன்னகைத்தாள்.  அரட்டை அடிக்கும் பெண்கள், தூங்கும் குழந்தைகள், சுருட்டு பிடிக்கும் ஆண் போன்ற வடிவங்களில்   நல்லவை அவர்களைக் கடந்து  சென்றது போல அவளுடைய கைகளில் ஒரு நடுக்கம் தோன்றியது. 

“இது ஒரு மாயத் தோற்றம் போல இல்லை?”

“மாயத் தோற்றம் எப்படி இருக்கும்?”

“நம்பிக்கைக்குரிய அனைத்தும் நம்மை தொட்டு விட்டு கடந்து செல்வதைப் போல”

“ஆமாம்.  இது உண்மைதான்” அவன் சிரித்துக் கொண்டே சொன்னான். ” உனக்கு எப்போதும் என் மீது ஏன் அவநம்பிக்கை ஏற்படுகிறது என்று தெரிந்து கொள்ள வேண்டும். அவநம்பிக்கையை குணப்படுத்த வழி ஏதும் உள்ளதா?”

“என்னுடைய பெற்றோர் உயிருடன் இருந்திருந்தால் நான் அவர்களிடம் கேட்டிருக்க முடியும். அவர்கள் நான் உன்னை சந்திக்க கூடாது என்று என்னிடம் கூறி இருந்தால் என் சார்பாக அவர்கள் முடிவெடுத்ததாக நினைத்து நான் ஆறுதல் பெற்றிருக்க முடியும். அவர்கள் அப்படி செய்திருக்காவிட்டாலும் அவர்கள் என்னை ஆதரித்தார்கள்  என்பதையாவது நான் தெரிந்து கொண்டிருப்பேன் – இப்போது ஒன்றுமே இல்லை.”

“அவர்களின் இன்மை உன்னை ஏன் இவ்வளவு வாட்டுகிறது? உன்னை ஏன் இந்த அளவுக்கு வேதனைப் படுத்தி துன்பத்துக்கு உள்ளாகுகிறது?”

“இது நம்பிக்கை சம்பந்தப்பட்ட விஷயம்” அவள் தன் இதயத்தின் ஆழத்தை உற்று நோக்கியபடியே பதில்ளித்தாள்.”நாம் செய்வது சரிதானா  என்று நாம் எப்படியாவது தெரிந்து கொள்ள வேண்டும்”

“நம்மிடம் யார் இதை சொல்லப் போகிறார்கள்?” அவன் எரிச்சலுடன் கேட்டான்.” இதை தெரிந்து கொள்ள நீ யாரிடம் போகப் போகிறாய்?”

சவரம் செய்யப்படாத அவனுடைய கன்னங்களை தன் உதடுகளால் வருடியபடியே அவள் கிசுகிசுத்தாள்.”எங்கே போக வேண்டும் என்று எனக்குத் தெரியும். உங்களுக்கு என்னுடன் வர விருப்பமா?”

“மறுபடியம் அதே பைத்தியக்காரத்தனம்”

அவன் தன் முகத்தை திருப்பிய போது காயம் பட்டிருந்த உதடுகளால் அவள் அவனது கன்னத்தை சிலிர்க்க வைக்கும் முத்தத்தால் ஈரப்படுத்தினாள். “நான் எங்கும் வரமாட்டேன்” அவன் துக்கத்தில் முனகினான்.”எனக்கு எங்கும் வர விருப்பமில்லை” சேற்றில் சிக்கிக்கொண்ட வண்டிச்சக்கரம் முணுகுவது போல  அவன் சொன்னதையே திரும்பச் சொன்னான்.

 “ஏன் முடியாது?”

“நான் உன்னிடம் ஏற்கனவே சொல்லி இருக்கிறேன். நீ தான் கேட்க மறுக்கிறாய்”

“எனக்கு மறுபடியும் சொல். நான் கேட்காதது எனக்கு  ஞாபகம் இருக்காதில்லையா? 

“இந்த மாதிரியான விஷயங்களில் எனக்கு நம்பிக்கை இல்லை. உனக்கு ஆர்வம் இருந்தால் நீ தனியாகப் போ. நான் வரமாட்டேன்.”

“நான் வரமாட்டேன்” என்று அவன் தீர்மானமாகச் சொன்னது, அவளை மேற்கொண்டு வற்புறுத்தத் தயங்க வைத்தது. அவள் பிச்சை எடுக்கவில்லை சற்றே பின்னால் நகர்ந்து கொண்டாள். ” யாரை நீ நம்புகிறாய்?”

எனக்கு யார் மீதும் நம்பிக்கை இல்லை என்று அவன் சொல்ல நினைத்தான். நான் உன்னை சந்தித்தது, மற்றவர்களின் ஒப்புதல் தேவைப்படும் துரதிஷ்டவசமான விபத்தாக இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. என்னிடம் இருப்பதெல்லாம் உனக்குச் சொந்தம் என்றும் நான் யாராக இருக்கிறேனோ அதன் காரணம் நீ தான் என்றும் நீ அறிவாயா? இந்த இருட்டு நகரில் என் ஒவ்வொரு இதயத்துடிப்பும் உன் உடலில் மின்னல் போல 

ஒளிரகிறது – என்னால் அதைத் தாண்டி வேறு எதையும் பார்க்க முடிவதில்லை. உன்னை ஹாஸ்டலில் விட்டு விட்டு கிளம்பியபின் என் இருப்பு என்னால் பொறுக்க முடியாததாக ஆகிவிடுகிறது. நான் என்னிலிருந்தே விடுதலை பெறுவதற்காக எவ்வளவு சீக்கிரம் முடிகிறதோ அவ்வளவு சீக்கிரம் என் ஆடைகளைக் களைந்து விடுகிறேன். அடுத்த நாள் நீ என் இருப்பை நினைவுபடுத்தும் வரை நான் என்னை மறந்து விட கடும் முயற்சி செய்கிறேன். மற்றவர்களுக்கு முன் என்னை நானே சுத்தம் செய்து கொள்ள வேண்டிய அளவுக்கு இது அத்தனை கொடிய பாவமா?

ஆனால் அவன் அவளிடம் அப்படி எதுவும் சொல்லவில்லை. ஏதாவது சொல்வதென்றால் அது அவளுடைய சந்தேகங்களை ஒப்புக் கொள்வதும், அவர்களை பாவத்தின் வட்டத்திற்குள் இழுப்பதற்கும் ஒப்பாகும். எதையும் செய்கிற அளவுக்கு அவனுடைய வார்த்தைகள் அவளை மிகவும் பயமுறுத்திவிடும். உறக்கத்தில் நடக்கும் பழக்கம் உள்ளவர்கள் தன்னிச்சையாகவே கூரையிலிருந்து கீழே விழுவதிலிருந்து தன்னை காப்பாற்றிக் கொள்கிற ஆனால் அதே சமயம் யாரேனும் எழுப்பும்போது கீழே விழுந்து விடுகிறவள் போல அவள் இருந்தாள். அவளை நம்ப எந்த வித உத்திரவாதமும் இல்லை. எனவே அத்தகைய தருணங்களில்  மௌனமாக இருப்பதே நல்லது என்று அவன் நினைத்தான். தற்போது அவன் என்ன நினைத்துக் கொண்டிருந்தான் என்பது எதிர்காலத்தில் எப்பொழுது வேண்டாம் ஆனாலும் தெரியக்கூடும் என்கிற நம்பிக்கை தான். அவன் தனக்குத்தானே பேசிக் கொண்டிருந்தான். எனினும் உடனடியாக அவனுக்கு அவனுடைய எண்ணங்கள் அபசகுனமானவை – தீய மந்திரம் என்று அவனுக்குத் தோன்றியது.

“தனியாகவா?” கண்ணீர் தளும்ப அவள் அவனைக் கேட்டாள். “சரி நான் தனியாகவே போய்க் கொள்கிறேன் நீங்கள் என்னோடு வர வேண்டிய அவசியம் இல்லை”

அவள் பெஞ்சில் இருந்து எழுந்தாள். முடியை ஸ்கார்ஃபால் கட்டிக்கொண்டாள். ஆடையை உதறிக் கொண்டு   ஏதையேனும் விட்டு விட்டோமா என பின்னால் திரும்பிப் பார்த்தாள் – அங்கு   இன்னமும்உட்கார்ந்து கொண்டிருந்த அவனைத் தவிர. அவனுடைய இருப்பு அவளை எந்த வகையிலும் பாதிக்கவில்லை. நதிக்கரையில் இருந்து  இறங்கி தெருவை வந்து சேர்ந்தாள். நடக்க ஆரம்பித்தாள். நகரத்து விளக்குகள் நதி நீரில் பளபளப்பதை அவள் பின்னால் திரும்பிப் பார்க்கவில்லை. நதியின் கரைகள் இரவின் இருளில் மறைந்து விட்டிருந்தன.

அவன் சில நொடிகள் அந்த இடத்திலேயே ஜடம்  போல அமர்ந்திருந்துவிட்டு பிறகு உற்சாகமாக  அவள் பின்னால் ஓடினான். இன்னமும் சூடாக இருந்த அவளது கைகளை அவன் பற்றினான்.  கையை உதறி இழுத்துக் கொண்டு விடுவாளோ என அவன் பதட்டம் அடைந்தான். அவள் அப்படிச் செய்யவில்லை என்றாலும் எந்தவித எதிர்வினையும் ஆற்றவில்லை. அவளது கை அவனுடைய கைகளில் மிருதுவான தளர்ந்து போன கையுறையைப் போலக் கிடந்தது. தெருவில் பெண்களோ குழந்தைகளோ கடைகளோ அல்லது மதுபானக் கடைகளோ இல்லை. அவர்கள் ஒரு சுரங்கப் பாதையின் வழியாக நகரின் ஒரு கோடியிலிருந்து இன்னொரு கோடிக்கு சென்று கொண்டிருந்தார்கள். பாதையின் முடிவில் அவளது விடுதி இருந்தது. விடுதியின் எல்லா மாடிகளிலும் இன்னமும் விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன. பகல் நேரமாக இருந்திருந்தால் அவன்  தன் கோபத்தை அடக்கிக் கொண்டு விடுதிக்கு உள்ளே சென்றிருருப்பான். ஆனால் அந்தப் பின்னிரவில் அவளை வெளியே விட்டு விட்டு திரும்புவதை  தவிர அவனால் வேறு எதுவும் செய்ய முடியவில்லை. அவள் விடுதியில் வராண்டாவில் நின்று கொண்டு அவனை நேராகப் பார்க்காமல் இரவைப் பார்த்துச் சொல்பவள் போல  “நீங்கள் போகலாம்” என்றாள். 

“நான் நாளை சந்திக்கலாமா?”

“அது உங்களுக்கு தான் தெரியும்.”

“எனக்கு எப்படித் தெரியும்?” வராண்டாவின் இருளில் அவனது முகத்தை அவளால் பார்க்க முடியாது என்பது அவனுக்கு ஆசுவாசத்தை அளித்தது.

அவன் தன் வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தான். அவன் பாலத்தின் மறுபுறம் நகரத்தின் பழைய பகுதியில் வசித்து வந்தான்.  பல வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட பாலம். இந்த பாலத்தைக் கட்டும் போது ராஜா ஆயிரக்கணக்கான முட்டைகளின் மஞ்சள் கருவை காரையோடு கலந்து உபயோகித்தார் என்று கேள்வி. அதன் காரணமாகத்தான் மகாராணி  இந்த பாலத்தை தன்னுடைய குதிரை வண்டியில் முதன்முறையாகக் கடந்த போது எப்படி இருந்ததோ அப்படியே 300 ஆண்டுகள் கழித்தும் இருக்கிறது. ஒருநாள் பாலத்தைக் கடந்து அவர்கள் அவனுடைய வீட்டை நோக்கி சென்று கொண்டிருக்கும்போது அவள், நிலவொளி வீசும் நாட்களில் நகர் உறங்கி அமைதியாக இருக்கும்போது இந்த பாதத்தின் மீது வண்டிச்சக்கரங்களின் ஓசையை கேட்க முடியும் என்று சொன்னாள். திருமணத்திற்கு முன்பு மகாராஜா ராணியிடம் அவரது அன்பைத் தெரிவிப்பதற்கு  பதிலாக, தனியாக பாலங்களைக் கடப்பதற்கு சோர்வாக இருக்கிறது என்றார் என்றும் அதற்குப் பிறகு அவர் மகாராணியோடு மட்டுமே பயணங்களின்போது எதிர்ப்படும் பாலங்களைக் கடந்ததாகச் சொல்வதுண்டு. அதற்கு மகாராணி என்ன பதில் அளித்தாள் தெரியுமா?

பாலங்கள்  நதிகளை கடப்பதற்காக மட்டுமே கட்டப்படுகின்றன. அங்கு  வீடு கட்டி வசிப்பதற்காக அல்ல. மகாராணி அவரிடம் என்ன சொல்ல விரும்பினாள் என்று மகாராஜாவுக்கு புரியவில்லை. பல வருடங்கள் கழித்து மகாராணி அந்த பாலத்திலிருந்து நதிக்குள் குதித்து விட்டாள். பாலத்தின் கீழே நதி இன்றும் ஓடிக்கொண்டிருக்கிறது.

2

அடுத்த நாள் அவள் ட்ராம் ஸ்டேஷனை அடைந்தபோது அவன் ஏற்கெனவே அவளுக்காக அங்கே காத்துக் கொண்டிருந்தான்.குளிர் இன்னும் தொடங்கியிராத போதிலும் அவன் நடுங்கிக் கொண்டிருந்தான். அவன் குளிரில் நடுங்கிக் கொண்டிருந்தானா அல்லது பயத்தில் நடுங்கிக் கொண்டிருந்தானா என்று சொல்வது கடினம்.சூரியன் மேகங்களுக்குப் பின்னால் மறைந்திருந்தான். காலையில் பெய்த மழையில் ட்ராம் லைன்கள் சுத்தமாகி பளபளத்துக் கொண்டிருந்தன. நேற்றிரவு பேசியதற்குப் பின் இருவரும் குற்ற உணர்வில் மூழ்கி இருந்ததால் ட்ராம் வந்ததில் பெரும் விடுதலை உணர்வு உண்டானது. பரஸ்பரம் ஒரு வார்த்தை கூட பேசிக்கொள்ளாமல் வேகமாக வண்டிக்குள் ஏறிக் கொண்டாரகள். 

உள்ளே வெகு சிலரே இருந்தார்கள். அவர்களும் தங்கள் ரெயின்கோட்டுக்குள்  ஒளிந்து கொண்டிருந்தார்கள். இறங்கிப் போன பயணிகள் விட்டுச் சென்ற சகதியில் படாமல் தரையிலிருந்து சற்று மேலே கால்களை வைத்த படி அவர்கள் எல்லோரும் அமர்ந்திருந்தார்கள். வெளியே பார்க்க எதுவும் இல்லாத போதிலும் அவர்கள் ஒருவரை ஒருவர் பார்க்காமல் வெளியே பார்த்துக்கொண்டிருந்தார்கள். ட்ராமின் ஜன்னல் கம்பிகளின் மீது கனத்த போர்வை போல தூசு படிந்திருந்ததில் நடைபாதையில் இருந்த மரம், விளக்குக் கம்பம் மற்றும் தெருவில் சென்று கொண்டிருந்த மனிதர்கள் எல்லாம் ஏதோ பழைய படத்தின் மீது படிந்திருக்கும் அழுக்கைப் போல வழுக்கியபடி மங்கலாகக் காட்சியளித்தார்கள். ஒவ்வொரு நிறுத்தத்திலும் சில பயணிகள் இறங்கினார்கள். நடத்துநர் மணி கட்டப்பட்டிருந்த கயிற்றை இழுக்கும்போதெல்லாம் ட்ராம் விக்கலுடன் முன்னால் சென்று நின்றது.

நடத்துநர் அருகில் வந்ததும் அவள் அவசரமாக தன் கைப்பையிலிருந்து பணத்தை எடுத்து இரண்டு பயணச்சீட்டு களை வாங்கினாள். நடத்துநர் போன பிறகு அவள் கைப்பையை மூடாமல்  அதிலிருந்து ஒரு சீப்பை எடுத்து தன் தலை முடியை கோதிக்கொள்ளத் தொடங்கினாள். பழக்கம் காரணமாக அவள் கண்ணாடி ஜன்னலில் தன் முகத்தைப் பார்த்துக்கொள்ள திரும்பினாள். தெளிவாகத் தெரியாத போது, அருகே உட்காராமல் பின்னாலிருந்து அவன் அவளை உற்றுப் பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டாள். அவள் சிரித்தபோது பதிலுக்கு அவனுடைய பிம்பமும் சிரித்தது. அவள் ஜன்னலிலிருந்து தலையைத் திருப்பி அவனைப் பார்த்தபோது அவன் சிரிக்கவில்லை. அவளருகே மௌனமாக அமர்ந்திருந்தான். திடீரென பதற்றத்துடன் அவள் அவனது கையை பற்றி இறுக அழுத்தியதில் அவன் பயந்து போய் தன் கையை இழுத்துக் கொண்டான். அவளுடைய நகங்கள் அவனது கையில் ஆழமாக பதிந்ததில் லேசாக ரத்தம் வெளிவர ஆரம்பித்து இருந்தது. அவள் தன் கைப்பையில் இருந்து சடார் என்று கைகுட்டையை எடுத்து ரத்தத்தை துடைத்தாள். இருவரும் சிரிக்க ஆரம்பித்தனர். முந்தைய இரவை ஒருபுறம் தள்ளிவிட்டு இருவரும் நெருங்கி வந்தனர். அவள் தன் தலையை அவரது தோளின் மீது பொறுத்து விட்டு கண்களை மூடிக்கொண்டாள்.

அவன் ஜன்னலுக்கு வெளியே பார்க்க ஆரம்பித்தான். அவளுடைய வெதுவெதுப்பான மூச்சுக்காற்று அவனுடைய கன்னத்தை வருடிக் கொண்டிருந்தது. ஒன்றும் நடக்காது,  நாம் போய்விட்டு மாலைக்குள் திரும்பி விடலாம் என்று அவன் நினைத்துக் கொண்டான். அவனுடைய சட்டை பாக்கெட்டில் பல நாட்களுக்கு முன் அவன் வாங்கி இருந்த இந்த மேஜிக் ஃப்ளூட் படத்திற்கான இரண்டு டிக்கெட்டுகள் இருந்தன. அவன் அவளை ஆச்சரியப்படுத்த விரும்பினான். சரியாக ஏழு மாதங்களுக்கு முன்பு அவர்கள் ஒருவரை ஒருவர் அதிகம் அறியாத காலத்தில் சேர்ந்து பார்த்த அதே ஓபரா தான் இது. இப்போது அது பல வருடங்களுக்கு முன் நடந்த நிகழ்வு போல தோன்றியது. கஷ்டம் எதுவும் இல்லாமல் சுலபமாக டிக்கெட்டுகளை வாங்கி விடுவதற்காக அவன் நிகழ்ச்சி தொடங்குவதற்கு வெகு நேரம் முன்பாகவே அங்கு சென்று விட்டான். ஆனால் அவன் அங்கு சென்ற போது முன்கூட்டியே டிக்கெட் வாங்கும் கவுண்டர் மூடப்பட்டு கூடியிருந்த கூட்டமும் கலையத் தொடங்கி இருந்தது. அவன் நம்பிக்கை இழந்து எங்கும் அங்கும் நடக்கத் தொடங்கினான். அந்த நாளுக்காக அவன் வெகு ஆவலோடு காத்திருந்தான். ஆனால் இப்படி ஏமாற்றத்துடன் வீடு திரும்ப நேரிடும் என்று அவன் எதிர்பார்க்கவில்லை. சங்கீத நிகழ்ச்சிகளுக்கு போகும்போது மட்டுமே அவன் வழக்கமாக அணிந்து கொள்கிற டையும் கருப்பு கோட்டும் அவனுக்கு அன்று வினோதமாக இருந்தது. எந்த காரணமும் இன்றி அவன் எங்கும் அங்கும் சுற்றிக் கொண்டிருக்கிறான் என்று பார்ப்பவர்கள் நினைத்துக் விடக்கூடாதென்று அவன் எரிச்சலுடன் வாயிலில் நிற்க வைக்கப்பட்டிருந்த அறிவிப்புப் பலகையை படிக்கத் தொடங்கினான். அப்போது அவனுக்கு பின்னால் இருந்து ஒரு மெல்லிய குரல் கேட்டது – உங்களுக்கு டிக்கெட் வேண்டுமா என்னிடம் ஒரு  எக்ஸ்ட்ரா டிக்கெட் இருக்கிறது – அவன் திரும்பி அவளைப் பார்த்தான். அவள் தன்னுடைய கருப்பு ஆடையில் உயரமாகவும் இளமையாகவும் தெரிந்தாள். அவர்கள் பழக ஆரம்பித்ததும் தான் அவள் அவன் நினைத்ததை விட உயரம் குறைவானவள் மற்றும் வயது அதிகமானவள் என்று அவன் தெரிந்து கொண்டான். அவள் கையில் இருந்த டிக்கெட்டுகள் கசங்கி இருந்ததில் அதை பிரித்தெடுப்பது கடினமாக இருந்தது. அவர்கள் இருவரும் அருகருகே அமர்ந்து கொண்டிருந்தபோது தான் அவனுக்கு டிக்கெட்டுக்கான பணத்தை கொடுக்கவில்லை என்பது ஞாபகம் வந்தது. ஆனால் அதற்குள் நேரம் கடந்திருந்தது. 

அவளுடைய கைகள் சூடாகவும் மிருதுவாகவும் இருந்தன. காய்ச்சல் அடிப்பது போல தோன்றியது. முந்தின நாள் மழையில் பளிச்சென துலக்க பட்டிருந்த நகரத்தையும் அதன் புழுதி மண்டலத்தையும் ட்ராமின் ஜன்னல் வழியாக பார்த்த அவன், அவளுடைய நரம்புகளின் புடைப்பிலும் இதயத்துடிப்பிலும், நாடி நரம்புகளில் பாயும் ரத்த ஓட்டத்திலும்  அடுத்து நடக்கப் போகிற ஒவ்வொரு நிகழ்வும் அவளுக்கு முன்கூட்டியே தெரியும் விதமாக அவளுடைய எல்லா செயல்களுமே காய்ச்சல் மயக்கத்தில் நிகழ்ந்தனவோ என்று ஆச்சரியமடைந்தான்.

ஒரு நாள்,  அவர்கள் பழக ஆரம்பித்த பின், அவன் அவளிடம் “அன்றிரவு நாம் மொஸார்ட் ஒபேராவில் சந்தித்தோமே, அப்போது நீ இன்னொரு டிக்கெட்டை யாருக்காக வாங்கி இருந்தாய்?” என்று கேட்டான்.

“உங்களுக்காகத் தான்” என்று அவள் சிரித்தபடி பதில் அளித்தாள்.

“இல்லை. உண்மையாகச் சொல். நீ யாருக்காக காத்திருந்தாய்?” அவள் சற்று நேரம் மௌனமாக இருந்தாள். அவள் சிரிக்கவும் இல்லை. எதுவும் பேசவும் இல்லை. ” சொல்ல எதுவும் இல்லை. நான் உங்களிடம் சொல்லப் போவதில்லை. ஏனென்றால் நீங்கள் அதை நம்ப மாட்டீர்கள்.” அவன் சற்றே பதற்றத்துடன் “சாக்கு சொல்லாதே. யாருக்காக நீ காத்திருந்தாய் என்று என்னிடம் சொல்ல உனக்கு விருப்பமில்லை” என்றான். 

“உங்களுக்காகத்தான் என்றாள் அவள்.

“ஆனால் நாம் ஒருவர் ஒருவர் தெரிந்திருக்கவில்லையே”

“இதனால்தான் நான் உங்களிடம் சொல்ல விரும்பவில்லை. இம்மாதிரியான விஷயங்கள் எனக்கு அடிக்கடி நடக்கின்றன. தூரத்திலிருந்து ஏதோ சமிக்ஞை கிடைப்பது போல, ஏதோ நடக்கப் போகிறது என்று என் உள்ளுணர்வு சொல்கிறது. நான் இதை ஒரு முறை தான் பார்க்கிறேன் என்ற போதும் என்னை தயாராக இருக்கச் சொல்லி அது வற்புறுத்துகிறது என்பதை நான் அறிவேன். அன்று நான் டிக்கெட் வாங்குவதற்காக வரிசையில் முதல் ஆளாக நின்றிருந்தேன்.  டிக்கெட் கொடுக்கும் ஜன்னலில் இருந்து எத்தனை டிக்கெட் வேண்டும் என்று குரல் வந்த போது நான் இரண்டு என்று பதிலளித்தேன். அவற்றை வாங்கிய பிறகு தான் இரண்டாவது டிக்கெட் யாருக்கு என்று எனக்கு ஆச்சரியம் ஏற்பட்டது. அப்போதுதான் நான் உங்களை பார்த்தேன்”

அவர்கள் டெர்மினலை அடைந்தார்கள். வண்டி அதற்கு மேல் போகாது. அங்கிருந்த அது மதியப் புகையில் தொலைந்திருந்த நகரை நோக்கிச் சென்றது. அவர்கள் வண்டியில் இருந்து இறங்கிய பின்னரும் அவனுக்கு எங்கே இருக்கிறோம் என்று சற்று நேரம் குழப்பமாக இருந்தது. வேகமாக நடந்து கொண்டிருக்கும் அவளை பின்தொடர்வதைத் தவிர அவனுக்கு வேறு வழி இல்லை. நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த அவள் சிறிய சந்துக்குள் திரும்பினாள். அவன் ஏற்கனவே அங்கு போய் இருக்கிறான் என்பது அப்போதுதான் அவனுக்கு நினைவு வந்தது. 

அது மிகவும் குறுகலான தெரு. இருபுறமும் வீடுகள் ஒன்றின் மீது ஒன்று குனிந்து கொண்டிருப்பது போல தோன்றியது. மேலே இருந்த வானம் புழுதியிலும் புகையிலும் மறைந்து, வீடுகளை அழுக்குத் துணியை போல மூடி இருந்தது. அவள் ஒவ்வொரு திருப்பத்திலும் நின்று அவன் வருவதற்காகக் காத்திருந்தாள். நடு நடுவே அவர்களுக்கு இடிந்து  பாழடைந்த வீடுகள் தென்பட்டன. அவற்றின் உடைந்து போன சுவர்களும் காற்றில் ஆடும் இரும்பு கம்பிகளும் மறக்கப்பட்ட பிணங்களின் எலும்புக்கூடுகளைப் போலக் காட்சி அளிந்தன. ஜல்லி கற்களை கவனமாக தவிர்த்து அவள் நடப்பதை பார்த்தால், நகரத்தின் தெரியாத பகுதியில் அல்ல, மாறாக அவள் தன் வீட்டை நோக்கி நடப்பது போல இருந்தது. ஆனால் திடீரென அவளது கால்கள் தடுமாறின. அவள் ஒரு வீட்டின் முன்னால் குழப்பத்துடன் நின்று கொண்டிருந்தாள். அவன் கைகளை பற்றி கொண்டு, அவள் மிகவும் தீவிரமாக அடை விரும்பிய பொருளை இழந்து விடுவோமோ என்கிற பயத்துடன் அவனைப் பார்த்தாள். ஆனால் சந்தேகம் வலுப்பதற்குள் அவள் அதை தன் காலடியில் அழுத்தி நசுக்கிவிட்டு அந்த வீட்டின் கதவைத் தட்டினாள். கதவு திறக்கப்படுவதற்காக காத்துக் கொண்டு வராமல் அவள் அவனுடைய கைகளைப் பற்றி கதவுக்கு முன்னால் தள்ளினாள். வினோதமான ஓசை எழுப்பிய படி கதவு தானாகவே திறந்து கொண்டது. அவள் கதவை சடாரென சாத்தி இருக்காவிட்டால் அது வெகுநேரம் வரை முனகிக் கொண்டிருந்திருக்கும்.

வீட்டிற்குள் நுழைந்ததும் முதலில் கண்ணில் பட்டது அங்கிருந்த அழுக்கு தான். அது எல்லா மூலைகளில் இருந்தும் அவன் மீது தாவிக் குதித்தது. அதில் பழைய ஈரமான புழுக்களால் அறிக்கப்பட்ட துணிகன் நாற்றம் அடித்தது. வெகு நாட்களாக பெட்டியில் அடைப்பட்டு கிடந்த துணிகளின் நாற்றம் அல்லது நெடு நாட்களாக குளியல் காணாத ஈரும் பேனும் மொய்க்கும் தலைமுடியின் நாற்றம். ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், வெறுத்து ஒதுங்குவதற்கு பதிலாக வீடு அவனை உள்ளே அழைத்தது போலவும் எல்லாவற்றிலிருந்தும் தன்னை விளக்கிக் கொண்டு உள்ளே வரும்படி வற்புறுத்தியது போலவும், உலகின் மின்னும் வெளிச்சங்களில் இருந்தும் ஏமாற்றங்களில் இருந்தும் ஆறுதல் அளிக்க அடர்ந்த காடு அழைப்பதை போலவும் அவனுக்குத் தோன்றியது. அவளை தேடுகிறான். அவள் அவனிடம் உள்ளே வரும்படி சைகை காட்டாமல் இருந்திருந்தால் அவன் அங்கு எதற்கு வந்தான் என்பதை மறந்திருப்பான்.

அவனுக்கு தெரிந்திருக்குமா? ஆசை அவனை கரடு முரடான கோனல் மானாட வழிகளில் அழைத்து வந்து இங்கு நிறுத்தும் என்பது அவனுக்குத் தெரியாது. முற்றும் மங்கலாக வெளிச்சம் தரக்கூடிய சணல் போர்வைகளால் தடுக்கப்பட்டிருந்தது. முற்றத்தின் நடுவே கருங்காலி மர நேரத்தில் ஒரு குட்டையான மேஜை போடப்பட்டிருந்தது. மேஜையின் இரண்டு முனைகளிலும் இரண்டு மெழுகுவர்த்திகள் எரிந்து கொண்டிருந்தன.

“அருகே வா” தூரத்தில் இருந்து குரல் கேட்டது. அவன் மேஜைக்கு அருகில் சென்ற போது எதிர்புறத்தில் நீளமான முடியுடன் வெளிர்மஞ்சள் நிறத்தில் ஒரு முகம் அவனை உற்றுப் பார்த்துக் கொண்டிருப்பது தெரிந்தது. அந்தப் பெண் தன்னுடன் இல்லை என்பதை அவன் உணர்ந்தான். 

“அவள் சீக்கிரமே வந்து விடுவாள்” என்று ஒரு பெண்மணி அவனுடைய பயத்தைப் புரிந்து கொண்டவள் போல கூறினாள். “தயவு செய்து உட்காருங்கள். அங்கே இல்லை… இங்கே என் அருகே” பிறகு அவள் மேஜைக்கு இடப்புறம் இருந்த சிவப்பு மக்கள் துணியால் மூடப்பட்ட முகாலியை அவன் அமர்வதற்காக இழுத்து அவன் எதிரில் வைத்தாள். அவன் அமர்ந்து கொண்டதும் அந்தப் பெண்மணி வினோதமான உரத்த குரலில் சொன்னாள்.

“நான் நினைத்ததில் இருந்து நீ வேறுபட்டு இருக்கிறாய்”. அவன் குனிந்த தலையுடன் அமர்ந்திருந்தான். 

“உனக்கு இங்கு வர பயமாக இருந்ததா?”அவன் தலையை நிமிர்த்தி னான். மெழுகுவர்த்தியின் வெளிச்சத்தில் அவள் முகம் பளிங்கினால் செய்த சிலை போல இருந்தது. 

“என்ன எதிர்பார்ப்பது என்று எனக்குத் தெரியவில்லை” அவன் பதிலளித்தான்.

“நீங்கள் இங்கு வந்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி”இன்று அவள் மெதுவாகச் சொன்னாள். “ஒரு மனிதனின் மிக நீண்ட பயணம் எங்கிருந்து தொடங்குகிறது என்று உங்களுக்கு தெரியுமா?

அவன் எடுத்து வைக்கும் முதல் அடியிலிருந்து” அவள் முதல்முறையாக

 இரக்கமோ கேலியோ இல்லாமல மெலிதாகச் சிரித்தாள். அறிவும் நம்பிக்கையும் நிறைந்த  உறுதியான குரலில்,  “என்னை பார்” என்றாள். அவன் தைரியத்தை திரட்டி கொண்டு அவளைப் பார்க்க முயற்சித்தான். அறிவிலும் அழகிலும் ஒளிர்விடும் அத்தகையதொரு முகத்தை அவன் இதுவரை கண்டதில்லை என்று அவனுக்குத் தோன்றியது‌. மெழுகுவர்த்தியின் இருளில் மறைந்திருந்த அவளது முகத்தின் மறுபாதியை பார்ப்பதற்காக அவன் சற்றே முன்னால் குனிந்தான். திடீரென வீட்டின் பின்புறம் இருந்த இருட்டு சுவர்கள் ஒன்றிலிருந்து அந்தப் பெண் வெளிவருவதை அவன் பார்த்தான். அவள் அவனுக்கருகே இருந்த தலையணையில் வந்து அமர்ந்ததும், அவன் மிகவும் மகிழ்ச்சி அடைந்தான். தன்னை கட்டுப்படுத்திக் கொள்ள முடியாமல் அவளிடம் எதையோ கிசுகிசுப்பான குரலில்  சொல்வதற்காகஅவன் முன் புறம் குனிந்தபோது யாரோ அவனை மெதுவாகத் தொடுவதை உணர்ந்தான். அந்தப் பெண்மணி அவன் தலையின் மீது கையை வைத்திருந்தாள். அவளுடைய கை மரணத்தை போல அசைவற்றும் குளிர்ச்சியாகவும் இருந்தது. கருப்பு மூடியால் ம அது அவனுடைய உள்ளுறை  ஆளுமையை கருப்பு நிற மூடியைப் போல மூடியது. 

“நீங்கள் இந்த நபரைக் காதலிக்கிறீர்களா?” அந்த பெண்மணியின் பார்வை யுவதியின் மீது பதிந்திருந்தது. யுவதி தலையசைத்தாள். அந்தப் பெண்மணி திரும்பி அவனை பார்த்தாள். “நீங்கள்?”அவள் பதிலுக்காக சற்று நேரம் காத்திருந்து விட்டு நீண்ட பெருமூச்சு  விட்டாள். அவன் என்ன பதில் சொல்வது என்று யோசித்துக் கொண்டிருக்கும் வேளையில், திருடனைப் போல மேஜிக்கு அடியே மறைந்து இருந்த அந்தப் பெண்ணின் கை, மிகுந்த ஆர்வத்துடன் அவனுடைய விரல்களை பற்றி கொண்ட  அவனை பதிலளிக்க வற்புறுத்திக் கொண்டிருந்தது. ஆமுக்கும் இல்லை க்கும் இடையே அவளுடைய மன உணர்வுகளை பிரதிபலிக்கத்தக்க ஒரு சொல் இருக்குமா என அவனுக்கு வியப்பாக இருந்தது. அவன் “ஆம்” என்றான். 

“உங்கள் பெயர் என்ன?”

“பெயர்?” அவனுடைய உதடுகள் இருந்து அந்த வார்த்தை வெளிப்பட்ட அதே நொடியில், அந்தப் பெண்மணி காற்றில் பறக்கும் பட்டத்தை பிடிப்பது போல மோதிரங்கள் மினுமினுக்கும் தன் 5 விரல்களால் அதை இறுகப் பற்றிக் கொண்டாள். அதே நொடியில் அவனது உள்ளத்தில் லேசான நடுக்கம் ஏற்பட்டது. சில நொடிகளுக்கு முன்பு வரை மரணத்தைப் போல அவன் தலை மீது படிந்திருந்த அந்த கை, இப்போது விரல்களில் வைரங்கள் ஜொலிக்க அவனை கேலி செய்து கொண்டிருந்தது. அந்தப் பெண்மணி இரு காகித துண்டுகளில் அவர்களின் பெயரை எழுதினாள். பெண்ணே அவளுக்கு ஏற்கனவே தெரிந்திருந்ததால் அவளிடம் பெயரைக் கேட்கவில்லை. பிறகு அவள் இரண்டு காகித துண்டுகளையும் கசக்கி தன்னுடைய உள்ளங்கைக்குள் உருட்டி மேசையின் மீது வீசினாள். சிறிது நேரம் அவர்களுடைய பெயர்கள் அந்த கசங்கிய காகிதத்திற்குள் சிக்கிக் கிடந்தன. பிறகு அவள் வைர மோதிரங்களால் அலங்கரிக்கப்பட்ட தன் கையால் அந்த காகித துண்டுகளை எடுத்து மெழுகுவர்த்தியின் அருகே  அவை மெதுவாக விரியும் வரை பிடித்துக் கொண்டிருந்தாள். வைரங்களின் வெளிச்சத்தில் அவர்களது பெயர்கள் விரிந்து போன காகிதத் தொண்டில் ஒளிர்ந்து கொண்டிருந்தன. அவள் சற்று நேரம் அதையே பார்த்துக் கொண்டிருந்தாள். பிறகு திடீரென கரி படிந்திருந்த கைகளால் கைதட்டியபடியே, மெசேஜின் மீது மெதுவாக விழுந்து கொண்டிருந்த  சாம்பல் துண்டுகளைப் பார்த்தாள். எதிர்காலத்தில் நடக்க போகும் எதையோ, அவர்கள் இருவரும் பிறப்பதற்கு முன்பே நியமிக்கப்பட்ட நிகழ்வையோ பார்த்தது போல அவள் தன் தலையை ஆட்டினாள். அவள் வருத்தத்துடன் தன் தலையை ஆட்டினாள். ஒரு முறை.. இரண்டு முறை.. மூன்று முறை.. தன்னுடைய அச்சின் மீது வேகமாக சுழலும் பெண்டுளத்தை போல அல்லது வலிப்பு வந்தவர் போல. மெதுவின் மீது இருந்த அந்தப் பெண்மணியின் கை மீது யுவதியை தன் தலையை வைத்ததும் அவள் தலையாட்டுவது நின்றது. அந்தப் பெண்மணி கண்களை திறந்த போது தொடக்கத்தில் இருந்தது போல அமைதியாகவும் சாந்தமாகவும் ஆரம்பத்தில் இருந்தது.

அவள் பளிங்கு போன்ற தன் வெண்ணிற கைகளால் யுவதியின் தலையை வருட தொடங்கினாள். ” முட்டாள் பெண்ணே பெரும் துரத் திருஷ்டத்திலிருந்து தப்பித்ததற்காக நீ சந்தோஷப்படத் தான் வேண்டும். அதுவும் உன்னுடன் கூட வந்திருக்கும் இந்த நபரால்”

அவள் மேதையிலிருந்து தலையை தூக்கி தோற்றுப் போன கண்களுடன் அந்த பெண்மணியைப் பார்த்தாள். “எம்மாதிரியான துரதிஷ்டம்?  நாங்கள் இருவரும் ஒன்று சேர முடியாதா?”

அந்த பெண்மணி அமைதியாக இருந்தாள்.  இருளின் சுவர்களில் இருந்து வெளிவந்து அவளை நான் புறமும் சூழ்ந்து நிற்கும் அந்த நிழல்களை அழித்துவிட விரும்புபவள் போல அவரது முகத்தில் முதன்முறையாக தூரத்து சோகத்தை பிரதிபலிக்கும் கீற்றொன்று இழையோடியது. “நான் பார்த்ததை என்னால் விவரிக்க முடியாது. என்னால் உனக்கு அதை காண்பிக்க மட்டும் தான் முடியும். நீ காண விரும்புகிறாயா?”

மேஜைக்கு கீழே இருந்து அவளுடைய விரல்களைப் பற்றிக் கொண்டிருந்த யுவதி என் கைகள் நடுங்கி பிறகு ஸ்திரமாயின. அவர்கள் அங்கிருந்து அப்போதே வெளியேறி இருக்க வேண்டும். ஏனெனில் அந்த நொடியில்  மறைந்திருந்ததும் பணயம் வைக்கப்பட்டிருந்ததும்அவர்களது காதலின் எதிர்காலம் மட்டுமல்ல; அதை அடைவதற்கான வேட்கையும் கூட. ஒருவேளை அந்தப் பெண்மணியும் கூட இதைத்தான் விரும்பி இருக்கலாம் ஆனால் அவளால் அதைச் சொல்லி விடவும் முடியாது.  அதை அறிந்து கொள்வதில் இருந்து அவர்களை தடுக்கவும் முடியாது. அவர்களுக்கு முன் அவள் திறந்து வைத்திருந்த பகுதியில் அவளால் அவர்களுக்கு உதவியிருக்க முடியாது. உண்மையில், அவள் அவர்களுக்கு  காண்பிக்க நினைத்த காட்சியின் வெறும் பார்வையாளர் மட்டுமே.

3

அந்தப் பெண்மணி யுவதி தலையை வைத்திருந்த கையை நகர்த்திக் கொண்டாள்.  மேஜை மீதிருந்த வைரங்கள் ஜொலிக்கும் அந்த பெண்மணியின் கை பாம்பு படம் எடுப்பது போல இருந்தது. பிறகு மெதுவாக தன்னுடைய கைகளை மேஜையிலிருந்து யுவதியின் கண்களுக்கு எதிரே வரும் வரை நகரத்தினாள். வானத்தில் பிரகாசிக்கும் சூரியனை தண்ணீருக்கு அடியில் இருந்து பார்க்கும் மீனின் கண்களைப் போல அவை அமைதியாக இருந்தன. “நீங்கள் இதைத்தான் பார்க்க விரும்பினீர்களா?”

பெரும்பாலும் நடந்ததை நினைவுபடுத்திப் பார்க்க முயற்சிப்பது  அவனது வழக்கமாக இருந்த போதிலும் அதற்குப் பிறகு என்ன நடந்தது என்று அவனால் நினைவு கூரமுடியவில்லை. அவன்  அந்தப் பெண்ணின் கூக்குரலைக் கேட்டான். அது கத்தி முனையை விடக் கூர்மையானதாக இருந்தது. மினுமினுத்துக்கொண்டிருந்த மெழுகுவர்த்திகள் அணைந்தபின் சுவற்றின் மீது ஆடிக் கொண்டிருந்த பூத உருவங்கள் அந்தப் பெணமணியைச் சுற்றிக் கொண்டன. அதற்குப் பிறகு இருளில் மின்னி மறையும் அந்த கூக்குரலை தவிர அவனுக்கு வேறு எதுவும் புலப்படவில்லை.”இப்போது உனக்கு தெரிந்து விட்டதால், முடிவு செய்”

அவனுக்கு  ஒரே பாய்ச்சலாகப் பாய்ந்து அந்தப் பெண்மணியின் கழுத்தை நெரிக்க வேண்டும் போலத் தோன்றியது. இதற்கு பதிலாக அவன் அந்த யுவதியின் கையைப் பிடித்துக் கொண்டு அவளை இழுத்து அணைத்துக் கொண்டான். “இங்கிருந்து வெளியே போய் விடலாம் வா” இந்த முறை அவள் மறுக்கவில்லை. அவள் மரப் பம்பரம் போல அவன் தன்னை இழுத்துச் செல்வதை அனுமதித்த போதிலும் சணல் திரைச்சீலைகளைத்  தாண்டி நடக்கும்போது சற்றே தயங்கி நின்றான். அவள் அவனை தன் புறம் இழுத்து  வெறித்தனமாக முத்தமிட்டாள். ஆழமான இருட்டான கிணற்றில் எதையோ தேடுபவதைப் போல அவளுடைய நா அவனுடைய நாவைத் தேடியது.

4

எந்த  ட்ராமில ஏறி அவர்கள் அந்த பெண்மணியின் வீட்டிற்கு சென்றார்களோ அதே ட்ராமில் அவர்கள் நகருக்கு திரும்பியது தற்செயல் நிகழ்வாகத் தான் இருக்க வேண்டும். நடத்துநர் அவர்களைப் பார்த்தும் புன்னகைத்தார். மதியம் டெர்மினலில் இறங்கிய இணைர்கள் என அவர் அவர்களை நினைவு கூர்ந்தார்.

எல்லாம் முன்பிருந்தது போலவே இருந்தது. அவர்கள் முன்பு உட்கார்ந்து கொண்டு சென்று இருக்கையில் மறுபடியும் அமர்ந்து கொண்டார்கள். ஒரே வித்தியாசம் என்னவென்றால் இந்த முறை அவர்கள் சற்று தள்ளி அமர்ந்து கொண்டார்கள். மழைக்குப் பிறகு வந்த மூட்டமான மதியம், நகரின் தெருக்களும் வானுயர்ந்த கட்டிடங்களும் பளீரிடப்போகும் வெளிச்சமான மாலையை நோக்கி வேகமாக நகர்ந்து கொண்டிருந்தது. சற்று முன்பு தான் அவர்கள் மெழுகுவர்த்தி வெளிச்சம் மட்டுமே இருந்த  அறையிலிருந்தும் பழைய வீடு ஒன்றின் இருட்டு நிழல்களிலிருந்தும் வெளிவந்தவர்கள் என ஒருவரும் யூகித்திருக்க மாட்டார்கள்.

அவர்கள் அவளுடைய விடுதியை போய் சேரும் முன்பு அவள் முதன்முறையாக அவனைப் பார்த்து, கைகளைத் தொட்டு அவளுடைய டிரான்டிக்கட்டை அவனிடம் தந்து ” இனி என்னை ஒருபோதும் பார்க்க முயற்சி செய்யாதீர்கள். இன்று நடந்ததையெல்லாம் மறந்து விடுங்கள்” என்றாள்.

டிராம் அவள் இறங்க வேண்டிய ஸ்டேஷனுக்கு வந்ததும் அவள் தன்னுடைய பையை எடுத்துக் கொண்டு, துப்பட்டாவை சரி செய்து கொண்டு ட்ராமிலிருந்து இறங்கினாள். அவள் ட்ராமோடு கூடவே கொஞ்ச தூரம் நடந்த பிறகு, செங்கல் கட்டிடமாக மாறினாள். அந்தக் கட்டிடம் தான் அவளுடைய விடுதி. அதன் மூன்றாம் மாடியில் அவளுடைய அறை இருந்தது. 

டிராம் அடுத்த ஸ்டேஷனை அடைந்தபோது அவன் நடத்தினரிடம் தன்னுடைய டிக்கெட்டை கொடுத்தான் அதில் அவளுடைய கைகளில் வெதுவெதுப்பு இன்னமும் மீதமி ருந்தது. ட்ராமிலிருந்து இறங்கியதும் அவன் வழக்கமாக அவளை விடுதியில் விட்டுவிட்டு வீடு திரும்புகையில் வரும்  பாலத்தை நோக்கி  மெதுவாக நடந்தான். அது ஒரு பழைய பாலம். அஸ்தமனச் சூரியனின் வெளிச்சம் அதன் கீழே ஓடும் நதியின் மீது  பளபளத்துக் கொண்டிருந்தது. தன்னிச்சையாக அவன் தன் பாக்கெட்டில் கை விட்ட போது அன்று மாலை நடைபெறவிருந்த ஓபராவிற்கான இரண்டு டிக்கெட்டுகள் இருப்பதைக் கண்டான். அவை வேறு ஏதோ உலகத்தைச் சேர்ந்தவை போல அவனுக்கு தோற்ற மயக்கம் உண்டானது. அவன் மறுபடியும் நடக்க ஆரம்பித்து பாலத்தின் முடிவுக்கு வந்ததும் நின்று விட்டான்.  பாலத்துக்குக் கீழேபாதி அஸ்தமனச் சூரியனின் வெளிச்சத்திலும் மீதி மாலை இருளிலும் மறைந்திருந்த  அமைதியாக ஓடிக் கொண்டிருந்த நதியை அவன் பார்த்தான். பிறகு,  வெளிச்சமும் இருளும் மாறி மாறி வந்த குழப்பத்தில், தண்ணீரின் மேற்புறம் ஒரு முகம் நீந்தி கொண்டிருப்பதை கண்டான். அந்த முகம் அவன் நின்று கொண்டிருந்த இடத்தையும் அவனையும் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தது. 300 ஆண்டுகளுக்கு முன்பு பாலத்தில் இருந்து குதித்து மாண்ட மகாராணியின் முகமாக அல்லது மூன்று மணி நேரங்களுக்கு முன்பு,  அவர்களை மூழ்குவதில் இருந்து காப்பாற்றிய, மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் பார்த்த அந்தப் பெண்மணியின் முகமாக என்று அவனால் தெளிவாகத் தீர்மானிக்க முடியவில்லை.

Series Navigation<< ஒன்றரை அங்குலம் மேலே 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.