வைரஸ்

(தமிழில்: சிவா கிருஷ்ணமூர்த்தி)

“இந்த கொய்யா மரம் எத்தனை வித்தியாசமாக இருக்கிறது, கவனித்தீர்களா? மென்மையாகவும் இருக்கிறது, அதே சமயம் உறுதியாகவும் இருக்கிறது. எங்கே ஒரு கிளையை உடையுங்கள் பார்க்கலாம். அத்தனை சுலபமாக உங்களால் முடிகிற காரியமில்லை இது” என்று சொன்ன அந்த மனிதர், மரத்தை அணைத்து வருடிக்கொடுத்துக்கொண்டே என்னவோ முணுமுணுத்தார்.

பின் இரு துண்டு கயிறுகளைக் கொண்டு மரத்தைச் சுற்றிக்கட்டினார். கயிற்றின் ஒரு முனையை தன் கை முஷ்டிகளில் இறுக்கி திரும்பி மரம் சாய்ந்திருந்த திசைக்கு எதிராக இழுத்தார். அவரது கை நரம்புகள் புடைத்து தெறித்தன.

அவர் இந்தளவிற்கு சிரமப்பட்டிருக்கத் தேவையில்லை. கொஞ்சம் உறுதியாக இழுத்திருந்தாலே சுபோத்பாபுவிற்குப் பிடித்தமான அந்த கொய்யா மரத்தை நிமிர்த்தியிருக்கலாம்.
கயிற்றின் முனையை தென்னை மரத்தின் அடியில் இழுத்துப்பிடித்து கட்டினார். இரு கைகளையும் இடுப்பில் வைத்தவாறே மரத்தை அண்ணாந்துப் பார்த்தார். அவரது செயலில் மிகவும் திருப்தியடைந்தவராகக் காணப்பட்டார்.

சுப்பாத்பாபு, மெல்லிய புன்னகையுடன், “மரத்திடம் என்ன சொல்லிக்கொண்டிருந்தீர்கள்?” என்று கேட்டார்.

அந்த மனிதர், சங்கடப்பட்டவாறே. “இல்ல, இந்த மாதிரி கயிறெல்லாம் கட்டி இழுக்கிறோமே..அதுதான்…மரத்திடம் ஒரு வார்த்தை சொல்லிடலாமேன்னு…!”

“ஓ…!”, சுப்பாத்பாபு வெடித்துச் சிரித்தார் “ நீ அதனிடம் அனுமதி கோரினாய்!”

அவரோ அப்பாவித்தனமாக, “என்னைப் பொறுத்தவரை, இந்த மரங்கள், பறவைகள் எல்லாம் மனிதர்கள் போலத்தான் ஸார். இந்த கொய்யா மரத்தைப் பாருங்களேன். கொடுமையான புயலால் இது எத்தனை துன்பத்தை அனுபவித்துக்கொண்டிருந்தது. தாங்க முடியாமல் கிட்டதட்ட தரையில் சாய்ந்துவிட்டிருந்தது. கொஞ்சம் இழுத்துப்பிடித்து நிமிர்த்து விட்டதும் எப்படி பழையபடி நிமிர்ந்து கம்பீரமாக நிற்கிறது!”

“ மனுஷங்களுக்கும் இது போன்ற ஆதரவு எப்போதுமே கொஞ்சம் தேவை ஸார் – நீங்கள் எனக்குச் செய்தது போல்…”

சுப்பாத்பாபுவிற்கு இது சங்கடத்தை அளித்தது போல் இருந்தது.
“சரி சரி, இந்த உடைந்த கிளைகளை எல்லாம் அப்புறப்படுத்தி இடத்தை சுத்தமாக்கிவிடு. கிட்டதட்ட நடுப்பகலாகப்போகிறது”
“இதோ, சட்டுன்னு வேலையை முடிச்சிடறேன் – உங்க குளியலுக்கும் சாப்பாட்டிற்கும் நேரமாகிவிட்டது”

சுப்பாத்பாபு வீட்டில் கோடாரி கிடையாது; தேங்காய்களை சீவுவதற்காக இருந்த குட்டையான அகலக்கத்தியை சுபோத்பாபு அவருக்கு கொண்டுவந்து கொடுத்தார். சுபோத்பாபு பார்த்துக் கொண்டிருக்க, திறமிக்க கைகளைக் கொண்டு அவர் உடைந்த மரக்கிளைகளை கிடுகிடுவென்று வெட்டி அப்புறப்படுத்தினார்.

முந்தின இரவு அடித்த பேய்ப் புயலுக்குப்பின் காலையில் வீட்டுத்தோட்டத்தைப் பார்த்த சுப்பாத்பாபுவின் மனைவி கிட்டதட்ட அழுதுவிட்டார். பேச்சிற்குத்தான் அதைத் தோட்டம் என்று கூறமுடியும். பின் கதவிற்கு முன்னும் பின்னும் கொஞ்சம் நித்யகல்யாணிச்செடிகளும் சாமந்தி செடிகளும். முன் கதவிற்கு அருகில் ஒற்றை மல்லிகை மரம். அவ்வளவுதான்.

மீதமிருந்த இடத்தில் ஆங்காங்கே வரிசையாக சுரைக்காய், கத்திரி, தக்காளிச்செடிகளோடு கொஞ்சம் கீரை பாத்திகளும் பயிரிடப்பட்டிருந்தன.

தோட்டத்தின் மறுமுனையை, ஒற்றையாக நின்ற பம்பளிமாஸ் வாட்டர்-ஆப்பிள் மரங்களும், இரு கொய்யா மரங்களும் அலங்கரித்தன. வேலியை ஒட்டி தென்னை மரங்கள் அடர்ந்திருந்தன.

புயல், சுண்டைச்செடிகளையும் கீரை பாத்திகளையும் மிச்சம் வைக்காமல் நாசப்படுத்திவிட்டது. முறிந்த மரக்கிளைகள் தரையெங்கும் சிதறிக் கிடந்தன. சுப்பாத்பாபு பால்கனியிலிருந்து கவலையுடன் கண்களைச் சுருக்கியபடி சேதாரத்தைப் பார்வையிட்டுக்கொண்டிருந்தார். இந்த சேதாரத்தை எப்படி சுத்தம் செய்வது என்று எண்ணிக்கொண்டிருக்கும் போதுதான் இந்த மனிதர் வந்து சேர்ந்தார்.

மிக தெரிந்தவர் போல, “அடடா, என்ன கொடுமை இப்படி ஆயிடுச்சே… உடைந்த மரக்கிளைகளையெல்லாம் நகத்தி, இந்த இடத்தை சுத்தம் செய்துகொடுக்கட்டுமா பாபு?” என்று கேட்டார்.

சுப்பாத்பாபு அவரை உற்றுப்பார்த்தார். இல்லை இதற்குமுன் இவரை பார்த்ததில்லை. தெரியாத ஆள் என்று பட்டதுமே சுப்பாத்பாபு, அவரை வீட்டிற்கு அனுமதிக்கக்கூடாது என்று முடிவுசெய்துவிட்டார். தேவைப்பட்டால் தோட்டத்திற்குள் மட்டுமே விடவேண்டும்.

எச்சரிக்கை கலந்த குரலில், சுப்பாத்பாபு,” இந்த வேலைக்கு எவ்வளவு எதிர்பார்க்கிறாய் (கேட்பாய்)?” என்று கேட்டார்.
அந்த மனிதர் இதை எதிர்பார்க்காததுபோல் இருந்தது.
சற்றே தடுமாற்றத்துடன்,” உங்களுக்கு எவ்வளவு சரின்னு படுதோ அது கொடுங்க ஸார், போதும்” என்றார்.

சுப்பாத்பாபு, அவரை கூர்ந்து கவனித்தபடி “ இந்த மாதிரி வேலைகளை இதுக்கு முன் செஞ்சிருக்கிங்களா” என்று வினவினார்.

சோர்ந்த குரலில், “ நானொரு ஏழைங்க, எங்க என்ன வேலை கிடைச்சாலும் செய்வேங்க. இப்பல்லாம் வேலையே சுத்தமா இல்லிங்க” என்றார், அந்த மனிதர்.

இரக்க குரலில் “ம்ம்ம்..லாக்டவுன்…யாருக்கும் வேலை நிச்சயம் இல்லை…” என்ற சுப்பாத்பாபு, “சரி, நீ ஒன் வேலையை ஆரம்பிக்கலாம்”

சொல்லி முடித்தவுடன் சுப்பாத்பாபுவிற்கு மெல்லிய குற்ற உணர்வு ஏற்பட்டது. அவர், ஓர் அரசு பள்ளி ஆசிரியர். லாக்டவுனினால் பள்ளிக்குச்சென்று வகுப்புகள் எடுக்க முடியாமல் வீட்டினுள் முடங்கிக்கிடந்தாலும் அவருக்கு மாத சம்பளம் வந்துகொண்டுதான் இருக்கிறது. மீண்டும் வகுப்புகள் ஆரம்பித்தவுடன் இரண்டு மடங்கு வேலை செய்து பாடத்திட்டங்களை எல்லாம் முடித்து வாங்கும் சம்பளத்திற்கு நியாயம் சேர்த்துவிடவேண்டுமென எண்ணிக்கொண்டிருக்கிறார்.

உடைந்து போய் தோட்டமெல்லாம் பரவிக்கிடந்த மரக்கிளைகளையெல்லாம் சேகரித்து கிடுகிடுவென வேலையை முடித்துவிட அந்த மனிதர் நிறைய நேரம் எடுத்துக்கொள்ளவில்லை. எல்லாம் முடிந்தவுடன் கைகளை மெல்லத்தட்டியது, ஓர் பிரார்த்தனை போல இருந்தது.

சுப்பாத்பாபு, சட்டைப்பையிலிருந்து முதலில் 100 ரூபாய்த் தாளை எடுத்தார். பின் சற்று யோசித்து, இரண்டு 10 ரூபாய்த்தாள்களையும் கூட எடுத்தார். அம்மனிதர், இருகரங்களாலும் பணத்தைப் பெற்றுக்கொண்டு நெற்றியில் நன்றியுடன் ஒற்றிக்கொண்டார்.
சுப்பாத்பாபு நெகிழ்ந்து போனார்.

அம்மனிதர் குழிந்த கண்களுடன், மிக களைப்புற்றவராக காட்சியளித்தார். வியர்வையில் தொப்பலாக நனைந்திருந்த அவரது அழுக்கு உடைகள் நலிந்த உடலோடு ஒட்டியிருந்தன. இந்த ஆள், கடந்த இரு மணி நேரங்கள் கடுமையாக உழைத்திருக்கிறார். எதற்காக? வெறும் நூற்று இருபது ரூபாய்களுக்காக!

என்ன சொல்கிறோம் என்று உணரும் முன்னே சுப்பாத்பாபு சொல்லிவிட்டார், “ நேரமாகிவிட்டது. ஏதாவது சாப்பிட்டுவிட்டு போகிறாயா?”

அம்மனிதரின் முகம் பிரகாசமானது. சற்றே தயக்கமாய், “ சாப்பாட்டைக் கட்டி எடுத்துக்கிட்டுமா, ஸார்?” என்று கேட்டார்.
“எதை வச்சு கட்டிப்ப? உன்கிட்ட கிழிஞ்ச துணி கூட இல்லையே! என்ன வேலைக்காரனப்பா நீ! வேலைக்குன்னு வீட்டைவிட்டு வெளிய இறங்கும்போது இப்படித்தான் வெறுங்கையோடத்தான் வருவயா?…சரி,சரி இரு, வீட்டுல என்ன இருக்குன்னு பார்க்கிறன்” என்றவாறே வீட்டிற்குள் சென்றார் சுப்பாத்பாபு.

சட்டென இப்படிச் சொல்லிவிட்டாரே தவிர, மூன்று வாய்களுக்கு கொடுக்குமளவிற்கு வீட்டில் சாப்பாடு இருக்கிறதா என்று கூட அவருக்குத் தெரியாது.

ஆனால் அந்த கொய்யா மரம் காப்பாற்றப்பட்டது, அவரது மனைவியை ஒரு புனிதராக மாற்றிவிட்டது.

“என்ன கேள்விங்க இது? நம்ம ரெண்டு பேருக்கு சமைச்சிருக்கேன்னா அது மூணு பேருக்கு தாராளமா போதும்”

அந்த மனிதர் வீட்டில் இருந்து கொஞ்சம் சாப்பிட்டுவிட்டு சுப்பாத்பாபுவின் வீட்டிலிருந்த பழைய டிபன் காரியரில் மீதத்தை எடுத்துக்கொண்டு செல்வது என முடிவாகியது. பாத்திரங்களை நிச்சயம் திரும்பி தந்துவிடுவதாக அம்மனிதர் உறுதியாகச் சொன்னார். திரும்பி வரும் போது காலிப்பாத்திரங்களாக இல்லாமல் சோறும் காய்கறிகளும் கொண்டு நிரம்பி வரலாம்.
சுப்பாத்பாபுவின் மனைவி, இளகிய குரலில், “இவருக்கு நிச்சயம் வீட்டில் பொண்டாட்டியும் பிள்ளைகளும் இருக்கும்னு நினைக்கிறேன்” என்றார்.

எல்லா ஏற்பாடுகளும் நடந்தன. வராந்தாவிலுள்ள மேசையில் உணவு பரிமாறப்பட்டது – சோறு, பருப்பு, காய்கறிகள் மற்றும் பாலாடைக்கட்டி.

சுப்பாத்பாபுவால் கால்களை மடக்கி தரையில் அமர முடியாது. உணவு மேசையின்முன் இருந்த நாற்காலியில் அமர்ந்துகொண்டார்.

லாக்டவுனினால் கடைகளுக்குச் சென்று எதுவும் வாங்க முடியாது. எனவே, வாரத்தில் இரு முறைகள் ஒரு ஆள் மூலம் காய்கறிகள், மீன், முட்டைகளை தருவித்துக்கொண்டிருந்தார்.

உணவு தட்டின் முன் அமர்ந்த அம்மனிதர், எதையும் தொடாமல் சற்று நேரம் மவுனமாக இருந்தார். பின், “என்ன மாதிரியான வைரஸ்…இல்லை நோய் இது? எங்களால் ரெண்டு வேளைகூட சாப்பிட முடியல…”

ஏற்கனவே, தோட்டக்குழாயில் கைகளையும் கால்களையும் கழுவியிருந்தாலும், மீண்டும் ஒரு முறை கைகளை கழுவிக்கொண்டார். பின்னர், தட்டைத் சற்று தம் பக்கம் இழுத்துக்கொண்டபோதுதான் அது நடந்தது.

தடதடவென்று ஒரு கூட்டம் தோட்டத்திற்குள் உள்ளே புகுந்தது. நிமிர்ந்து பார்த்த சுப்பாத்பாபு, அதிர்ந்து போனார். கூட்டத்தில் நிறைய தெரிந்த முகங்கள் இருந்தன. அவர்கள் அந்த பகுதியிலுள்ள இரு அரசியல் கட்சிப் பேர்வழிகள். சுப்பாத்பாபுவின் பழைய மாணவர்கள் கூட அந்த கூட்டத்தில் இருந்தனர். இவர்கள் அனைவரும் ஒன்று கூடி சுப்பாத்பாபுவின் வீட்டில் இந்த நேரத்தில் திபுதிபுவென நுழைவதற்கு என்ன காரணம் இருக்க முடியும்?
கூட்டத்தில் ஒரு சிலர் முன் வந்தனர் – அவர்களை அவர் இதற்கு முன் பார்த்த நினைவில்லை. வராந்தாவில் அமர்ந்திருந்த அம்மனிதரை நோக்கி கைகளை நீட்டி கூவினர்…”இதோ, இங்க இருக்கான் பார்!”
இப்போது மற்றவர்களும் சத்தம் போட்டனர், “ஆமா, அவந்தான். கண்டுபுடிச்சிட்டோம்!”

சுப்பாத்பாவிற்கு தூக்கிவாரிப்போட்டது. அய்யோ, இந்த ஆள் ஏன் இப்படி பதறிப்போய்ட்டார்? ஒருவேளை திருட்டு ஆளை வீட்டில் உட்கார வச்சிருக்கமா?

அம்மனிதரோ தட்டிலிருந்து, மேசையிலிருந்து விலகி, அடி வாங்கப்போகும் விலங்கு போல் தன்னைக் குறுக்கி சுவருடன் ஒண்டிக்கொண்டார்.

சாப்பிட ஆரம்பித்திருந்த சுப்பாத்பாபு, அதை நிறுத்திக்கொண்டு கூட்டத்திற்கும் அம்மனிதருக்கும் இடையில் போய் நின்றார். “இருங்க, இருங்க”, சற்று செருமியவாறு, “ என்ன இங்க பிரச்சனை?”

கூட்டத்திலிருந்து உத்தரன் சர்கார் முன் வந்தான். அந்த வட்டாரத்திலுள்ள ஓர் அரசியல் கட்சியின் இளைஞர் அணி தலைவர்களிலொருவன் அவன்.

“நல்ல மனுஷர் நீங்க இப்படி ஒரு பிரச்சனை பண்ணியிருக்கிங்க, சுப்பாத்பாபு” என்றான்.

“யார வேணும்னாலும் வீட்டுல விட்டிடுவிங்களா? இந்த ஆள் யார் தெரியுமா உங்களுக்கு? எத்தனை ஆபத்தானவன் இந்த ஆள் தெரியுமா?”

சுப்பாத்பாபு, திரும்பி அந்த மனிதரைப் பார்த்தார். அவர், கைகளை இறுக்கிக் கட்டிக்கொண்டு தலை குனிந்து பரிதாபகரமாக நின்றார். பார்த்தால் எந்த விதத்திலும் அபாயகரமானவராகத் தெரியவில்லை. திரும்பி, உத்ரன் சர்காரிடம், “எனக்கு அப்படித் தெரியலையே? கொஞ்சம் விளக்கமா சொல்லு” என்றார்.

உத்ரன், கைகளை ஆட்டி கத்தினான், “ இந்த ஆள் ஒரு கூலிக்காரன். நேத்துதான் தெலுங்கானாவல இருந்து ஊர் திரும்பியிருக்கான். 18 நாட்கள் தனிமையிலிருந்திருக்கணும். அரசாங்கம் எல்லா ஏற்பாடுகளையும் பண்ணியிருக்கு. ஆனா, இவன் ரயிலிருந்து குதிச்சி தப்பியோடியிருக்கான். வீட்டுக்கு போற அவசரத்துல… வேற எதுக்கு? “ ஏளனமாக உறுமினான்.

“கிராமத்துல ஆளுங்க இவனைக் கவனிச்சிருக்காங்க, பின்னாடியே வந்திருக்காங்க. எப்படியோ பதுங்கிக்கிட்டே வந்திருக்கான். இவனால சமுதாயத்திற்கு எவ்வளவு பெரிய ஆபத்து இப்ப, யோசிச்சு பாருங்க…ஒரு ஆட்கொல்லி வைரஸ்ஸை இவனோட கொண்டு வந்திருக்கான்”

“இவனே ஒரு வைரஸ்!” கூட்டத்திலிருந்த எதிர்கட்சி ஆள், பிகாஷ் கத்தினான். “ஆளைப் பாரு! அவனும் குத்திக்கிட்டு இருக்கிற அவன் தலை முடியும்… ஹஹஹா!” அவனது தமாஷிற்கு அவனே சிரித்துக்கொண்டான்.

இப்போது உத்ரனின் பின்னால் வந்து நின்று கொண்டான். இருவரும் ஒன்று சேர்ந்து கக்கினார்கள்.

“சரி…இதுவரைக்கும் வெளியூர்ல இருந்து வந்த யாருக்காவது கொரானா வைரஸ் பாசிடிவ்னு கண்டுபிடிச்சிருக்காங்களா?” சுப்பாத்பாபு பொறுமையாக வினவினார்.

அந்தக் கேள்வி பிகாஷை சற்று நிறுத்தியது. உத்ரன், சற்று வேகமாக, “ அதைக் கண்டுபிடிக்கறதக்குத்தான் இவனை தனிமையில இருக்கச் சொன்னது. எல்லா டெஸ்ட்டும் அங்கதானே பண்ண முடியும்?”

“எங்கே இருக்கு, இந்த தனிமை செண்டர்?” சுப்பாத்பாபு, தனது கேள்விகளை நிறுத்தவில்லை. இவர்கள் எல்லாரும் அவரது பழைய மாணவர்கள். இவர்களை தனது தொடர் கேள்விகளால் துளைத்து எடுப்பதில் பழகிப்போயிருந்தார்.

உத்ரன், எரிச்சலாய், “ இதைப்பத்தி ஏகப்பட்ட அறிவிப்புகள் வந்திருக்கு. நீங்க கேள்விப்பட்டதே இல்லையா?” என்று வினவினான். “ஸ்டேஷனுக்கு அடுத்து இருக்கிற பினோடினி உயர்நிலைப் பள்ளியின் முதல் மாடியை அரசாங்கம் சென்டரா மாத்தியிருக்கு. படுக்கை வசதிகள் எல்லாம் செஞ்சு வச்சிருக்கு”

“அப்புறம் பரிசோதனைகள்? அதுவும் அங்கதானா?” சுப்பாத்பாபு அவர்களை விடுவதாக இல்லை.

இப்போது, இன்னொருவர் கூட்டத்திலிருந்து முன் வந்தார். தணிந்த குரலில், “ ஸார், நான் இந்த வட்டாரத்திற்கான மாவட்ட மருத்துவர். உண்மையில், வெளியூரிலிருந்து வர ஒவ்வொருவரையும் கோவிட் நோயாளியாக இருக்கிற சாத்தியமுள்ளவராகத்தான் கருதணும்னு அரசாங்க ஆணை. இந்த ஆள், இப்ப தனிமையில் இருக்கணும் ஸார். ஆனா, இந்த மாதிரி ஆட்கள் அப்படி இருக்கறதில்லை, எப்படியாவது வெளிய சுத்த கிளம்பிடறாங்க. இந்த மாதிரி செய்யறது மற்றவர்களுக்கு எத்தனை ஆபத்தானதுனு இவங்களுக்கு புரியலை ஸார்”

மருத்துவரின் குரலில் இருந்த சாந்தம், அம்மனிதருக்கு சற்று தைரியம் கொடுத்திருக்க வேண்டும்.

“அய்யா, நான் வீட்டை விட்டு வெளியூருக்கு வேலைக்குப் போய் பத்து மாசமாச்சுங்க. இங்க, வீட்டுல பணம் காசில்லிங்க, எல்லாரும் பட்டினி. இங்க வரதுக்கு முன்னாடி, என் சின்ன பொண்ணுக்கு ரொம்ப ஜூரம்னு செய்தி கேள்விபட்டேன். இதுக்கப்பறமும் இத்தனை பக்கத்திலிருந்துட்டு எப்படிங்க பாக்க போகாம இருக்க முடியும்?”

“அப்படின்னா, இப்ப இங்க எதுக்குடா சுத்திக்கிட்டு இருக்க?” நக்கலாய் கேட்டான், பிகாஷ்.

“அய்யா…எனக்கு பசிங்க” என்றார் அம்மனிதர், “ரயிலுல்ல ஒரு துண்டு, வரண்ட ரொட்டித்துண்டுதான் சாப்பிட்டேன். மிச்சமெல்லாம் கெட்டுப்போச்சு. ரெண்டு வாய்க்குமேல தண்ணிகூட குடிக்கலை”

அவர் குரலில், மெல்ல கட்டுப்படுத்தப்பட்ட கசப்பும் கோபமும் ஏறியிருந்தன. நிமிர்ந்து உட்கார்ந்தார். அவரது முதுகு இறுகி, பரிதாபத்திலிருந்து ஆட்சேபத்தொனிக்கு மாறியிருந்தது.
அவர்முன் தொடப்படாத சோறும் பருப்பும் இருந்தன. அவரது கடுமையான வேலைக்கான ஊதியம்.

சுப்பாத்பாபு அவரை கூர்ந்து கவனித்தார். கண் முன் இருப்பது பசித்திருக்கும் மொத்த தேசமும் என்பது அவருக்கு தெளிவாகத் தெரிந்தது.

ஆனால் வைரஸ்? சுப்பாத்பாபுவிற்கு அது எப்படி இருக்குமென இன்னும் தெரியவில்லை.

Series Navigation<< டிஸம்பர் ’72ல் ஓர் அந்திப்பொழுதுஒரு பெண் பற்றிய சொற்சித்திரம் >>

3 Replies to “வைரஸ்”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.