இப்படியொரு எண்ணத்திற்கு நான் தள்ளப்பட புதிய அனுபவங்களில் எனக்கிருந்த ரசனையும் ஈடுபாடும் காரணமாகும், விளைவாக காட்டுமிராண்டிகள், மிலேச்சர்கள் போன்றவர்களிடமும் விரும்பிப் பழகினேன். இப்பெரிய பிரதேசம் தன்யூபு மற்றும் போரிஸ்தீனஸ் நதிகளின் முகத்துவாரங்களுக்கு இடையில் அமைந்த ஒரு முக்கோண நிலப்பரப்பு, இதன் மூன்று பக்கங்களில் இரண்டு எனக்கு நன்கு பரிச்சயமானவை. நிலத்தை ஊடுருவிய கடலின் கரையோரங்களில் பிறந்து, இயற்கையாக அமைந்த இப்பகுதியின் தூய்மை, வறட்சி, குன்றுகள், தீபகற்பத்தையொத்த நிலப்பகுதிகள் அனைத்தையும் நன்கறிந்த நமக்கு, உலகின் அதிசயிக்கத் தக்க பிராந்தியங்களில் இதுவுமொன்று என்கிற எண்ணத்தை இப்பகுதி தரும்.