அதிரியன் நினைவுகள் -30

This entry is part 29 of 33 in the series அதிரியன் நினைவுகள்

மூலம் : மார்கெரித் யூர்செனார்

தமிழாக்கம் : நா.கிருஷ்ணா

மீண்டும் மரக்கலத்திற்கு வந்தேன்; ஆறியதென  நினைத்த காயத்தில்  மீண்டும் இரத்தக் கசிவு; யூஃபோரியன் என் தலைக்குக் கீழே தள்ளிய தலையணையில் முகம் புதைத்து கதறி அழுதேன். சடலமும் நானும் நீரோட்டத்தின் இழுவிசைக்கு உட்பட்டிருந்தோம், எதிரெதிர் திசைகளில் பயணித்த  இருவேறு  கால நீரோட்டங்கள் அவை.  அத்திர்(Athyr) மாதத்தின் தொடக்கம், நம்முடைய உரோமானிய நாட்காட்டியின் படி,  டிசம்பர் மாதம் தொடங்க ஐந்து நாட்கள் இருந்தன, கடந்து சென்ற நொடிகள் ஒவ்வொன்றும் சடலத்தை மேலும் மேலும் மூழ்கடித்து, இறப்பை முடித்துவைத்தது. திரும்பவும் ஏதேதோ நினைவுகள்;   நகங்களை பயன் படுத்தி புதையுண்ட நாளை தோண்டி எடுக்கிறேன். ஃபிளெகன் கதவை பார்க்கிற வகையில் அமர்ந்திருக்க, தோணியின் பின்பக்கமிருந்த சிற்றறைக் கதவை கையொன்று தள்ளுகிறபோதெல்லாம் விளக்கொளி வருவதும் போவதுமாக இருக்க, விளைவாக தான் இடைஞ்சலுற்றதை மட்டுமே அவரால் நினைவு கூர முடிந்தது. இழைத்தகுற்றத்திற்க்காக, குற்றம் சாட்டப்பட்ட ஒரு மனிதனைப் போல, ஒவ்வொரு மணிநேரத்தையும் கழித்தவிதம் குறித்து யோசித்துப் பார்த்தேன்: எனது கட்டளையையும், ஆணையையும் வழக்கம்போல நான் சொல்ல காரியதரிசி குறிப்பெடுத்ததும், பின்னர் எபேசஸ் செனட்டிற்கு  பதிலொன்றை தெரிவித்ததும் நினைவுக்கு வந்தன;  ஆனால் அடைந்துள்ள துயரத்தினை இவ்விரண்டில் எப்பக்கம் சேர்ப்பதென்ற குழப்பம். நடையில் வேகம், வெறுமையான நதிக்கரை, கற்பாளமிட்ட தரையென அவன் சென்ற வழித்தடக்காட்சியை திரும்பக் கட்டமைத்தேன்; நெற்றி விளிம்பில் விழுந்திருக்கும் முன் தலை மயிர்க் கற்றையை  கத்தியால் வெட்டுகிறான்; உடல் சாய்ந்துள்ளது; மிதியடியை கைத்தொட்டு அவிழ்ப்பதற்கு ஏதுவாக கால் மடிந்துள்ளது; கண்களை மூடப்பட்டிருக்க  வேறெங்கும் கண்டிராத வகையில் உதடுகள் பிரிந்திருக்கின்றன. நன்றாக நீந்தத் தெரிந்த ஒருவன் இப்படியொரு கருஞ்சேற்றில் மூச்சைவிட துணிவதெனில் நிச்சயம் அது விரக்தியில் எடுத்த முடிவாக இருந்திருக்கும். கைவிடும் இதயம், செயல்பட மறுக்கும் மூளை,  சுவாசிக்க மறுக்கும் நுரையீரலென்கிற இப்புரட்சி அனைத்துமே, நாம் எல்லோரும் கடந்துசெல்ல வேண்டியவை என்பதால், எனது சிந்தனைகளை அப்புரட்சிவரை முயற்சித்தேன். இப்படியொரு பேரிடி என் தலையிலும் விழும்; என்னுயிரும் பிரியும். ஆனால் ஒவ்வொரு வேதனையும் வித்தியாசமானது; அவனுடைய சம்பவத்தை நான் கற்பனை செய்துபார்த்தேன், ஆனால் நான் எடுத்துக்கொண்ட முயற்சிகள் இறுதியில் பெறுமதியற்றதொரு  கட்டுக்கதையாக முடிந்தது, அவன் ஒற்றையாக  இறந்திருந்தான்.

திடமுடன் போராடினேன்; இத்துயரை ஒர் இழைய அழுகல்(gangrène) நோய்போல எதிர்கொண்டேன். அவனுடைய பிடிவாதங்களும், புளுகுகளும்  நினைவுக்கு வந்தன; உயிருடன் இருந்திருப்பின் எதிர்காலத்தில் மாறியிருப்பான், உடல் பருமனும் அதிகரித்திருக்கும், வயதும் கூடியிருக்கும், என்றெல்லாம் மனதிற்குள் கூறிக்கொண்டேன்.   அக்கறையுள்ள ஒரு தொழிலாளி உன்னத படைப்பொன்றை  மிகுந்த கவனத்துடன் நகலெடுப்பது போல, மூர்க்கத்துடன் என் நினைவிலிருந்து, எவ்வ்த ஒழுங்கிற்கும் இணக்கமற்ற அவனுடைய துல்லிய வடிவை உயர்ந்த அவனுடைய மார்பை கவசம் போல உருவாக்க முனைந்தேன், ஆனால் கண்ட பலன் பூஜ்யம். சிற்சில சமயங்களில் படிமங்கள், காட்சிகள் தானாக வெளிப்படும்; அப்படியொரு சூழல், இனிமை வெள்ளத்தில் மிதந்தேன்; மீண்டும் திபூரில்  பழத்தோட்டமொன்றைப் பார்த்தேன், இளைஞன்  கூடைபோல  தன் ஆடையைச் சுருட்டி  அதில் இலையுதிர்காலப் பழங்களைச் சேகரித்துக் கொண்டிருந்தான். அனைத்தையும் பறிகொடுத்ததொரு நிலமை எனக்கு. என்னுடைய இரவுநேரக்கூட்டுக் களவாணியான இளைஞன் குத்துக்காலிட்டு உட்கார்ந்து,  என்னுடைய டோகாவின் மடிப்புகளை சரிசெய்துகொண்டிருந்த யூஃபோரியனுக்கு உதவினான். சமயகுருக்கள் கூற்றுப்படி அந்நிழலும் தனக்கு அடைக்கலம் தந்த வெதுவெதுப்பான உடலை இழந்து தவித்துக் கொண்டிருக்கிறது. தான் நன்கறிந்த அருகிலும் சற்றுத் தளியுமுள்ள  சுற்றுபுறங்களை முனகலுடன் தேடிஅலைகிறது, தன் இருப்பை எனக்கு உணர்த்தமுடியாதவகையில் பலவீனமாகவும் இருக்கிறது. இது உண்மையாக இருப்பின், அவனுடைய பலவீனமான குரலுக்குச் செவிசாய்க்காமை, சம்பவித்த மரணத்தை விட மோசமானது. அதிலும் சம்பவம் நடந்த அன்று காலை என்னருகே அவன் கதறிஅழுததை நான் நன்றாகப் புரிந்துகொண்டேனா? என்ற கேள்வியெழுகிறது. 

ஓரிரவு ஷப்ரியாஸ் கழுகு விண்மீன் குழுமமொன்றில் நட்சத்திரமொன்றைக் காட்டினார், இதுவரை அரைகுறையாகத் தெரிந்த அந்நட்சத்திரம் அன்று திடீரென மாணிக்க கல் போல மின்னத்தொடங்கியது, இதயம்போல துடித்தது.  நான்  அதை அவனுடைய நட்சத்திரமாக, குறியீடாக எடுத்துக்கொண்டேன். ஒவ்வொரு இரவிலும் அதன் பாதையில் பார்வையை ஓடவிட்டு களைப்புற்றேன்; வானத்தின் அக்குறிப்பிட வெளியில் விசித்திரமான பல தோற்றங்களைக் கண்டேன். பலரும் என்னை பைத்தியக்காரனென்று  நினைத்தார்கள். ஆனால் அதை நான் பொருட்படுத்தியதில்லை.

மரணம் பயங்கரமானது, உயிர்வாழ்க்கையும் அப்படிப்பட்டதுதான். விதிவிலக்கின்றி அனைத்துமே இங்கு முகச்சுளிப்புக்குரியவை. அவன் நினைவாக ஆண்ட்டினோபோலிஸ் என்றொரு நகருக்கு அடிக்கல் நாட்டப்பட்டது, ஆனாலது புரட்டுவணிகர்களுக்குப் புகலிடமாகவும், அரசாங்க அலுவலர்கள் முறையற்றவகையில் தங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தவும், விபச்சாரத்திற்கும், ஒழுங்கின்மைக்கும், தங்கள் உறவுகள் மரணத்திற்குக் கண்ணீர் சிந்திய மறுநாள் அவர்களை மறந்துபோகிற கோழகளுக்கும், அமைந்த மற்றுமொரு நகரம்,  இந்நிலையில் அதனை ஓர் அபத்த விளையாட்டெனில் மிகையில்லை. மரித்தவர்களை தெய்வமாக்கும் (Apotheosis)  நிகழ்வு தேவையற்றது. ஏனெனில் ஊரறியச் செலுத்தப்படும் இத்தகைய மரியாதை, எனதுபிரியத்திற்குரிய இளைஞனை ஒரு பேசும்பொருளாக வைத்து இச்சகம்பேசவும்; எள்ளிநகையாடவும்; இறப்பிற்குப் பின்னே மலிவான ஆசைக்கும் அவதூறுக்குமுரிய பொருளாகவும்; வரலாற்றின் சந்துபொந்துகளை நிரப்பும் வீச்சக் கதையாகவும் இருக்க மட்டுமே அவை உதவும். எனது துக்கிப்பு என்பதே ஒரு வகையில் மிகைப் படுத்திய வெளிப்பாடுதான், மானக்கேடான நடத்தைதான்,  காரணம் என் அன்புக்குரியவன் தன் மரணத்தையே எனக்கென வழங்கியிருக்க, அதில் பயனுற்றதும், முழுமையாக அனுபவித்ததும், இன்புற்றதும்  நான். ஒரு இருந்த  விரக்தியடைந்த  மனிதன் தனக்குள் அழுதான்.

ஏதேதோ எண்ணங்கள்; அர்த்தமற்ற வார்த்தைகள்; பாலைநில வெட்டுக்கிளிகளைப் போலவோ அல்லது குப்பைகளில் மொய்க்கும் ஈக்களைபோலவோ சலசலக்கும் குரல்கள்; புறாக்களின் புடைத்த கழுத்துபோல எங்கள் தோணிகளின் பாய்பரக் கித்தான்கள் காற்றிலுப்பி பொய்யையும், நெருடலையும் சுமந்து பயணித்தன. மனிதர் நெற்றிகளில் அறியாமைத் தெளிவாக எழுதப் பட்டிருந்தது. இறப்பு எங்கெல்லாம் சாத்தியமோ அங்கெல்லாம் அதனுடைய பிரத்தியேகப் பண்பான சிதைவையும், அழுகலையும் ஊடுறச் செய்துள்ளது என்பதை அதிகம் பழுத்த கனியொன்றின் கறையிலும், ஓர் அலங்காரச் சீலையின் அடிப்பகுதியில் கண்ணுக்குப்புலனாகாததொரு கிழிசலிலும், நதிக்கரையோரம் கிடக்கும் இறந்த விலங்கின் உடலிலும், முகமொன்றின் கொப்புளத்திலும், ஒரு படகோட்டியின் முதுகிலுள்ள கசையடி வடுக்களிலும் காணமுடியும். எனது கைகளிரண்டும் எப்போதும் அழுக்கடைந்தவைபோலிப்பதாக எனக்குப் பட்டன. குளிக்கின்ற நேரம், மயிர்களை மழிக்க, எனது கால்களை அடிமைகளிடம் நீட்டினேன்,  திடமான என் உடலின் மீது கவனம் சென்றது, வெறுப்புடன் பார்த்தேன்,  எளிதில் அழியாத இந்த எந்திரம் உண்டதை ஜீரணித்தது, நடந்தது, உறங்கவும் செய்ததது, இனி இன்றில்லையேல் நாளை  காதலின் வழக்கமான  நடைமுறைகளுக்குத் தன்னை மீண்டும் பழக்கப்படுத்திக் கொள்ளும் என்கிற உண்மையும் நான் அறியாததல்ல. சில பணியாட்கள், அவனை நினைவூட்டும் வகையில் நடந்துகொண்டனர், அவரவர் வழிமுறையில் இறந்த இளைஞனை நேசித்தவவர்கள் அவர்கள். உடலைப்பிடித்துவிடும் மனிதரிடமும், விளக்கேற்றும் ஊழியம் செய்யும் வயதுபோன நீக்ரோவிடமும்  என்னுடைய மரணத்  துக்கிப்பின் எதிரொலியைக் காணமுடிந்தால் அவர்களை என்னால் சகித்துக்கொள்ள முடிந்தது. மாறாக  நதியின் குளிர்ச்சியை முகத்தில் வாங்கமுடிந்த அம்மனிதர்கள் தங்களுக்கிடையில் சிரித்து மகிழ்ந்தனர், மரணச் சம்பவம்குறித்து அவர்களிடமிருந்த சோகம் அச்சந்தோஷத்தை தடுக்கவில்லை. ஒருநாள் காலை, தடுப்பில் கைகளை ஊன்றியபடி, சமைக்கவென்று ஒதுக்கப்பட்ட இடத்தில்  அடிமையொருவன் எகிப்திய அசுத்தமான அடைகாப்புக்கருவியில் பொரித்த ஆயிரக்கணக்கான கோழிக்குஞ்சுகளிலொன்றை சுத்தம் செய்துகொண்டிருப்பதைக் கண்டேன; கோழிக்குஞ்சியின் வயிற்றைக் கிழித்து பிசுபிசுப்பான குடலை கைகொள்ள எடுத்து நீரிலெறிந்தான். வாந்தி எடுக்க தலையைத் திருப்பக்கூட எனக்கு நேரமில்லை. வழியில் ஃபிலே தீவில் நாவாய் நின்றது. தீவின் நிர்வாகி எங்களுக்கு வழங்கிய விருந்தின் போது, ஒரு நூபியன் காவலாளியின் மூன்று வயது குழந்தை, வெண்கல கறுப்பு நிறம்,  நடனங்களைப் பார்ப்பதற்காக முதல் மாடியில் உள்ள முகப்புத்தளத்திற்குள்  நழுவியன், கீழே விழுந்தான். விபத்தை மறைக்க எங்களால் முடிந்ததைச் செய்தோம்; இறந்த குழந்தையின் தந்தையான காவலர் தன் எஜமானுடைய விருந்தினர்களுக்கு இடையூறாக தனது செய்கை அமையக்கூகூடாதென நினைத்து தன்னுடைய பொங்கிவந்த அழுகையை அடக்கிக்கொண்டார். சமையலறை கதவு வழியாக, சடலத்தை எடுத்துச்சென்றார்கள. சவுக்கடியொன்றிர்க்கு கீழ்ப்படிவதுபோல அங்கிருந்த தோள்கள் அனைத்தும் திடீரென உயர்ந்து தாழ அவற்றுக்கிடையில் அக்காட்சியை நான் காணமுடிந்தது. ஹெர்க்குலிஸ், அலெக்ஸாண்டர், பிளேட்டோ ஆகியோரின் நண்பர்கள் இறப்பின் வலியை எங்கனம் என்னுடையதாக கருதினேனோ அதுபோல இறந்த குழந்தையின் தகப்பன் வேதனையையும் எனதாக எடுத்துக்கொண்டது போன்ற உணர்வு. இப்பரிதாபத்திற்குரிய மனிதருக்கு சில தங்க நாணயங்களை அனுப்பிவைத்தேன், நான் செய்யக்கூடியது அதொன்றுதான். இரண்டுநாட்களுக்குப் பிறகு வாயிற்படிக்குக் குறுக்கே வெயிலில் மகிழ்ச்சியோடு பேன் எடுத்தபடி படுத்திருந்த  அம்மனிதரைத் திரும்பக் கண்டேன்.

மடல்ககள் குவிந்தன; பான்கிரெட்ஸ் தனது கவிதையை ஒருவழியாக முடித்து எனக்கு அனுப்பி வைத்தார்; அதொரு சராசரி ஹோமெரிக் ஹெக்சாமீட்டர் (Homeric hexameters)வகை கவிதை, ஆனால் அதில் கிட்டத் தட்ட ஒவ்வொருவரியிலும் இடம்பெற்றிருந்த பெயர்  பிற உன்னத படைப்புக்களைக் காட்டிலும் என்னுடைய மனதை மிகவும் உருக்கும் வகையிலிருந்தது. நியூமேனியஸ்(Numenius), துன்பத்தில் வாடும் மனதிற்கு ஆறுதல் அளிக்கப் பாடுகிற கான்சலேஷன்(Consolation) கவிதையொன்றை அதற்குரிய இலக்கணத்தோடு வடித்து எனக்கு அனுப்பியிருந்தார். கவிதைக்குரிய பொதுவான அம்சங்கள் அனைத்தும் அதில் குறையாமலிருந்தன,  ஓர் இரவை அதற்கென ஒதுக்கி வாசித்தேன். மரணத்திற்கு எதிராக மனிதர் அமைத்துக்கொண்ட பலவீனமான பாதுகாப்பு இரு முறைகளில் சொல்லப்பட்டிருந்தன. முதலாவது, தவிர்க்கவியலாத தீமையென ‘இறப்பை’ முன்வைத்தது, அவ்வகையில் அழகோ, இளமையோ, காதலோ எந்தவொன்றும் இப்படியொரு அழிவிலிருந்து தப்பிக்க சாத்தியமில்லை என்பதை நமக்கது நினைவூட்டியது; அவ்வாறே, உயிர்வாழ்க்கையும் சரி அதனுடன் பயணிக்கும் அனைத்து தீமைகளும் சரி மரணத்தைக்காட்டிலும் மிகவும் கொடியவை, எனவே முதுமை அடைவதைக்  காட்டிலும், சாவதுமேல். குறிப்பாக விரக்திக்கு வலுசேர்க்கும் இத்தகு மெய்மைகள், தவிர்க்க இயலாதவற்றை ஏற்பதற்கு நமக்குத் துணை செய்பவை. இரண்டாவதாக முன்வைத்த வாதம் முதலில் கூறப்பட்டக் கருத்தோடு   முரண்பட்டது, ஆனால் நமது தத்துவவாதிகள் அத்தனை நுணுக்கமாக இதனை அணுகுவார்கள் என நான் நினைக்கவில்லை. பிரச்சினை மரணத்தை தவிர்க்கவியலாது என்பதைக் குறித்தது அல்ல, அதை மறுப்பது பற்றியது. இப்பிரச்சினையில் நாம் பொருட்படுத்த வேண்டியது ஆத்மா மட்டுமே; உடலின்றி அது செயல்படுவதை ஒருபோதும் நாம் கண்டதில்லை, இருந்தும், எப்பாடுபட்டேனும் அதன் இருப்பை நிரூபிக்கவேண்டும் என்பதற்குப் பதிலாக அதற்கு முன்பே, இத்தெளிவற்ற சூட்சம பொருளின் அழியாத் தன்மையை ஓர் உண்மையென மமதையுடன் முன்வைக்கிறோம். ஆனால் ஆத்மாவின் இருப்புக் குறித்து உறுதியான அபிப்ராயங்கள் எனக்கில்லை. காரணம் புன்னகை, பார்வை, குரல் இன்னும் இது போன்ற எண்ணற்ற பல கூறுகள் ஒரு மனிதனின் இறப்போடு முடிகின்றன என்கிறபோது, ஆத்மாவிற்கு மட்டும் ஏன் விதிவிலக்கு? உயிருள்ள உடலில் உணரும் வெப்பத்தைக் காட்டிலும் கூடுதலானதொரு சூட்சம பொருளாக ஆத்மா எனக்குப் படவில்லை.  ஆத்மா இல்லையென்ற நிலையில் அந்த உடலை விட்டு நாங்களும் விலகிச் சென்றிருந்தோம்.  இருப்பினும்,  அவ்வுடலைக்குறித்து என்னிடம் எஞ்சியிருந்த பொருள் அந்த ஒன்று மட்டுமே, தவிர மரித்த உடல் உயிர்வாழ்ந்தது என்பதற்கான ஒரே ஆதாரமும் அtதொன்றுதான். சங்கரியோஸ்  நதிகரையோரம் ஊழிக்காலம்வரை தலைமுறை தலைமுறையாக நீடிக்கவுள்ள பித்தினியர்கள் வம்சம் அவ்வளவு முக்கியமல்ல, காரணம் மனிதரினத்தின் நிலைபேறுடமை ஏதோவொரு வகையில் இறப்பு ஒவ்வொன்றிற்கும் ஈடு செய்கிறது.  கீர்த்தி குறித்து பேசுகிறோம், நயமான அச்சொற்களில் பூரித்துபோகிறோம். ஆனால் இக்கீர்த்திக்கும், இறவாமைக்குமிடையில், ஒரு குழப்பத்தை ஜோடனை செய்கிறோம், அதாவது ஒரு உயிரியின் சுவடு அதன் உயிர்வாழ்க்கை, மரணம் இரண்டு நிலையிலும் பேதமற்றதென  நிறுவ முயற்சிக்கிறோம். சடலத்தின் இடத்தில் ஒளிமயமான கடவுள் தெரியவர, எனக்கேற்ப அக்கடவுளை வடிவமைத்துக் கொண்டேன். எனதுமுறையில் அவனிடத்தில் நம்பிக்கை வைத்தேன், ஆனால் நட்சத்திரங்களின் குழுமத்தில் ஒளிர்ந்த மரணத்திற்குப் பிந்தைய விதி, சுருங்க முடிந்த வாழ்க்கை ஈடுசெய்ய தவறியது. இறைவன் இழந்த ஜீவனுக்கு மாற்றாகவும் அமையத் தவறினான். 

கனவுகளை கனவுகளென்று உணரப்போதாமல் கற்பிதங்களுக்கு ஆதரவாக உண்மைகளை வெறுக்கும்நிலைக்குச் செல்லும், மனிதர்களிடமுள்ள இக்கோபத்தைக்கண்டு எனக்கெரிச்சல்.  உயிர்வாழும் மனிதருக்குள்ள  எனது கடமைகளை வேறுவகையில் புரிந்துகொண்டிருந்தேன். பூமியையும், பாசாங்கையும் துணைக்குவைத்துகொண்டு அதிவேகத்துடன் மனிதர்கள் மூடிமறைக்கிற கமுக்கம், மௌனம், உறைந்த  இரத்தம், செயலற்ற உறுப்புகள் என்கிற  உண்மைகளுடன் இணங்கிச்செல்ல அல்லது  அவற்றை எதிர்கொள்ள எனக்குத் துணிச்சல் இருந்தது,  இல்லாதிருந்தால் இம்மரணம் பொருளற்றதாகி இருக்கக்கூடும், அவசரதிற்கு உதவும் விளக்குக்கூட  இன்றி இருட்டில் தட்டுத்தடுமாறிச் செல்ல விரும்பினேன். நெடிய துக்கத்தின் பரிமானம் என்னைச் சுற்றியிருந்த மனிதர்களைப் பாதித்திருந்தது, அவர்கள் எரிச்சலுறத் தொடங்கியதை என்னால் உணரமுடிந்தது, காரணத்தைக்காட்டிலும்,  சண்டாளம் சோகத்திற்கு ஏற்படுத்திய இழிவு அதிகம். இதே அளவிற்கு ஒரு சகோதரன் அல்லது ஒரு மகனுடைய இறப்பிற்கு நான் கதறும்போதுகூட   பெண்பிள்ளையைபோல அழுகிறான் என விமர்சிக்கக்கூடியவர்கள்தான் இவர்கள்.பெரும்பாலான மனிதர்களின் நினைவுகள் கவனிப்பாரற்ற கல்லறை, இங்கே இறந்த மனிதர்களின் கீர்த்திகள் ஆராதிக்க ஆளின்றி கிடக்கின்றன.  நெடுநாள் தொடரும் துயரம் அவற்றை நாம் மறந்ததற்குரிய கண்டனம்.

தொடரும்….

Series Navigation<< அதிரியன் நினைவுகள் -29அதிரியன் நினைவுகள் -31 >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.