அதிரியன் நினைவுகள் – 40

This entry is part 39 of 48 in the series அதிரியன் நினைவுகள்

மூலம் : மார்கெரித் யூர்செனார்

தமிழில் நா. கிருஷ்ணா

வசந்த காலத்தில், லூசியஸின் உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு, சில கடுமையான அச்சங்களை எனக்குள் தொடங்கி வைத்தன.  தீபுர் நகரில் ஒரு நாள் காலை குளித்துமுடித்ததும் உடற்பயிற்சிக் கூடத்திற்கு லூசியசுடன் சென்றேன். செலெர் அங்கு வேறுசில  இளைஞர்களுடன் சேர்ந்து பயிற்சியில் ஈடுபட்டிருந்தான்.  அவர்களில் ஒருவன் இந்நிகழ்வுகளில் ஒன்றை எங்களுக்குப் பரிந்துரைத்தான்.  அதன்படி, ஒவ்வொரு பங்கேற்பாளரும் கைகளில் கேடயத்தையும், ஈட்டியையும் ஏந்தியபடி ஓடவேண்டும். லூசியஸ் தனது இயல்புக்கேற்பத் தனக்குச் சரிவராதென்றான்.  ஆயினும் எங்கள் கேலிப்பேச்சு அவனைச் சம்மதிக்க வைத்தது. தன்னை ஆயத்தப்படுத்திக் கொள்ளும்போது, வெண்கலக் கேடயத்தின் எடை பாரமென முறையிட்டான்; செலரின் திடகாத்திரமான உடலுடன் ஒப்பிடுகையில், லூசியஸுக்கு மிகவும் மெலிந்த உடல், பலவீனமானவன். ஒரு சில அடிகளே எடுத்து வைத்திருப்பான், மூச்சுப்பேச்சின்றிச் சுருண்டு விழுந்தான் ; வாயிலிருந்து இரத்தம் கசிந்தது. நல்லவேளை பெரியஅளவில் பாதிப்பில்லை ; அதிகச் சிரமங்களின்றித் தேறினான். ஆயினும் இச்சம்பவம் என்னைக் கலவரப்படுத்தியது. இவ்விடயத்தில் உடனடியாக என்னைச் சமாதானப்படுத்திக் கொண்டிருக்கக்கூடாது. அவன் நீண்ட ஆரோக்கியத்துடன் இருந்தவன் என்பதோடு, அவனுடைய இளமையின் வற்றாத இருப்புகளிலும், உடலின் சரியான செயல்பாடுகளிலும் மறைமுகமாகக் கொண்டிருந்த நம்பிக்கை காரணமாகவும் லூசியஸின் முதல் நோய் அறிகுறிகளை முட்டாள் தனத்துடன் சாதாரணமாக எடுத்துக்கொண்டேன். அவனிடத்திலும் தவறு நேர்ந்திருப்பதை மறுக்கவியலாது ; மெல்லிய தீபச்சுடரொன்று அவனைத் தாங்கிப்பிடித்திருந்தது, நம்மைப்போலவே அவனுள்ளும் உயிர்சக்தி சில மாயத் தோற்றங்களுக்கு இடமளித்திருக்கவேண்டும். எனது இளமைக் காலங்கள் பயணங்கள், முகாம்கள், புறக்காவற்படை இருக்கைகள் என்று கழிந்திருந்தன. வயலும், காடுமான பிரதேசங்களில் கிடைக்கக்கூடிய நன்மைகளை மட்டுமின்றி வறண்ட மற்றும் கடும் குளிர் நிலவும் பகுதிகளில் கிடைக்கும் பலன்களையும் நன்கு அறிந்தவன்.  எந்தப் பன்னோனியா பிரதேசம் முதன் முதலாக எனக்குத் தலைமை அனுபவத்தைப் பெற வழிவகுத்ததோ, அதனுடைய கான்சலாக(Consul)  லூசியஸை நியமித்தேன். இப்பகுதியின் எல்லைகளில் கடந்தகால அளவிற்குப் பிரச்சினைகளில்லை. அங்கே அவனுடைய பணி, குடிமுறை நிர்வாகத்தின்  கடமைகளை அமைதியாகச் செயல்படுத்துவதும், அபாயங்கள் ஏதுமற்ற இராணுவ ஆய்வுகளை மேற்கொள்வதுமாகும். இக்கடினமான பிரதேசம் அவனுடைய உரோமானிய  மெத்தனப்போக்கை மாற்றக்கூடுமென எதிர்பார்த்தேன். உரோமானியப் பேரரசுக்கு உட்பட்ட பகுதியை நிர்வகிப்பதோடு, அது சார்ந்த பரந்த உலகை நன்கு புரிந்துகொள்ள அவனுக்கு இப்பதவியினால் நல்லதொரு வாய்ப்பு. உரோம் நகரைக் காட்டிலும் பிற பகுதிகளில் வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் எதிர்கொள்ள முடியும் என்கிற உண்மையை உணராமல், பன்னோனியா பிரதேசத்தின் கடுமையான காலநிலைக்கு மிகவும்  பயந்தான். ஆனால்  என்னை சந்தோஷப்படுத்தவென்று சிற்சில நேரங்களில் அனுசரணையுடன் அவன் நடந்துகொள்வதுண்டு ; அதன்படி கான்சல் பொறுப்பேற்கச் சம்மதித்தான்.

டொமீஷியஸ் ரொகாட்டஸ் என்னுடைய நம்பிக்கைக்குரியவர், லூசியஸைக் கண்காணிக்கவென்றே செயலாளராக நியமித்து அவனருகில் இருக்கசெய்தேன் ; அவரிடமிருந்து உத்தியோகபூர்வ  அறிக்கைகள் மட்டுமின்றி,  இரகசிய  தகவல்களும்  என்னிடம் வரும் ; கோடைகாலம் முழுக்க  அவற்றைக் கவனமாக வாசித்திருக்கிறேன்; கிடைத்த அறிக்கைகள் திருப்தியாக இருந்தன. பன்னோனியா கான்சலான லூசியஸிடம் எனக்குச் சில எதிர்பார்ப்புகள் இருந்தன, என் மரணத்திற்குப் பிறகு ஒருவேளை தனது நியதிகளைத் தளர்த்திக் கொள்ளக்கூடும், ஆனால் தற்போதைக்கு அவற்றைத் தீவிரமாகப்  பூர்த்திசெய்ய  அவன் அறிந்திருந்தான். புறக்காவல் நிலையங்களில்  குதிரைப்படையினரிடையே ஒரு தொடர் சண்டையை முன்னின்று சிறப்பாக ஏற்பாடுசெய்திருந்தான். மற்ற இடங்களைப் போலவே மாகாணங்களிலும், அவனால் மனிதர்களின் ஆதரவை எளிதாகப் பெறமுடிந்தது. அவனுடைய ஈரமற்ற ஆணவத்தன்மையால் பாதகமில்லை. ஏதோ ஒரு கூட்டத்திடம் பொறுப்பை  ஒப்படைத்துவிட்டு நமக்கென்ன என்றிருக்கும் மனிதனுமல்ல. ஆக மொத்தத்தில் நிர்வாகம் சீராகப் போய்க்கொண்டிருக்க, இலையுதிர்காலத்தின் ஆரம்பத்திலேயே நீர்கோர்ப்பு நோயினால் பாதித்திருந்தான். விரைவில் தான் குணமடைந்துவிடுவோம் என்றும் அவன் நினைத்தான்; ஆனால் இருமல் திரும்பவந்தது ; பிடித்த காய்ச்சல் நீடித்தது, இனிப் போகமாட்டேன் என்பதுபோல. தற்காலிமாகக் குணமடைந்தபோதும் அடுத்து வந்த வசந்த காலத்தில் திரும்பவும் நோயில் விழுந்தான். மருத்துவர்களின் அறிக்கைகள் அச்சுறுத்தின. அண்மைக்காலத்தில் தகவல் பரிமாற்றத்தை விரைவு படுத்தும் நடவடிக்கைகளை எடுத்திருந்தேன்,  இப்புதிய முயற்சியில் குதிரைகளும், ஊர்திகளும் சேர்க்கப்பட்டன. ஆனால் அவை அவனுடைய நோய்குறித்த தகவல்களை என்னிடம் சேர்ப்பிக்கவே செயல்படுகின்றன என்கிற எண்ணத்தை ஏற்படுத்தின. லூசியஸ் நோய் விடயத்தில் கடுமையாக நடந்துகொண்டிருக்கவேண்டும் ; அல்லது அப்படியிருக்கத் தவறியிருக்கிறேன் என நினைத்துச் சில மனிதாபிமானமற்ற காரியங்களில் இறங்கினேன்; அதற்கு எனக்கு மன்னிப்பே கிடையாது. பயணத்திற்கு அவனுடைய உடல்நிலை இடம்கொடுக்குமென்பதை அறியவந்தபோது, இத்தாலிக்கு அவனைக் கொண்டுபோக ஏற்பாடு செய்தேன்.  

காசநோயில் சிறப்பு ஞானம் பெற்றிருந்த எபேசஸ் நகரின் மருத்துவர்  ரூஃபஸ் என்பவரும் நானுமாக ‘பையெ’ துறைமுகத்தில் நோயில் வாடும் என்னுடைய ஏலியஸ் சீசரை(லூசியஸ்) வரவேற்கக் காத்திருந்தோம். தீபுரின் தட்பவெப்பநிலை, இத்தாலியை விட நன்றாக இருக்கும் ; இருப்பினும் நுரையீரல்கள் பாதிக்கப்பட்ட நோயாளிக்கு வேண்டிய  இதமான தட்பவெப்பம் அங்கில்லை. எனவேதான் இலையுதிர் காலத்தின் பிற்பகுதியைப் பாதுகாப்பான இப்பிரதேசத்தில் லூசியஸ் கழிப்பது நல்லதென முடிவெடுத்து, அவனை இங்கு அழைத்துவந்தேன்.  ஒரு சிறியபடகு நோயாளியையும் மருத்துவரையும் கரைக்குக் கொண்டு சேர்த்தது. அதிர்ச்சியில் உறைந்திருந்த அவனுடைய முகத்தைத் தாடிபூசிய கன்னங்களுடன் பார்த்தபோது தோற்றத்தில் என்னைபோல இருக்கும் உத்தேசமிருக்கலாம் என நினைத்தேன்.  அவனுடைய விழிகளிரண்டும் விலையுயர்ந்த கற்களாலான தீக்கங்குகள் போலிருந்தன. என்னுடைய உத்தரவின்பேரில் தான் திரும்பிவந்ததை நினைவூட்டுகிற வகையில் அவனுடைய முதல் வார்த்தை இருந்தது. அவனுடைய நிர்வாகத்தில் குறைசொல்ல ஒன்றுமில்லை. எனது கட்டளைகளை  மீறுகிறவனுமில்லை. தனது நாளின் அன்றாட அலுவல்களை நியாயப்படுத்தும் ஒரு மாணாக்கனைப்போல நடந்துகொள்வான். அவனுக்குப் பதினெட்டுவயது நடந்தபோது, ஒரு பருவகாலம் முழுக்க சிசெரோ வில்லாவில் இருவருமாகத் தங்கியிருந்தோம்; இப்போது, அதே வில்லாவில் அவனைத்  தங்கவைக்க ஏற்பாடு செய்தேன். இங்கிதமறிந்து எங்கள் பழைய நாட்களைக்குறித்துப் பேசுவதைத் தவிர்த்தான்.

தொடக்கநாட்கள் நோயை வாகை சூடியதைப்போன்ற உணர்வை அளித்தன.  இத்தாலிக்குத் திரும்பவந்ததேகூட ஒருவகை சிகிச்சைதான் ; அத்தகைய உணர்வையே பெற்றிருந்தேன். அதிலும் நாங்கள் திரும்பிய பருவகாலம் நாடு மொத்தமும் ஊதா நிறத்திலும், இளஞ்சிவப்பு நிறத்திலும் ஜொலித்த காலம். ஆனால் மழை பெய்ய ஆரம்பித்திருந்தது;  சாம்பல் வண்ணக் கடலிலிருந்து ஈரக்காற்றும் வீசியது. அவனைத் தங்க வைத்திருந்த சிசெரோ வில்லா குடியரசுக் காலத்தில் கட்டப்பட்ட ஒரு பழைய இல்லம், தீபுர் வில்லாவில்  கிடைக்கக் கூடிய அதி நவீன வசதிகளுக்கு இங்குப் பற்றாகுறை. மோதிரங்களைச் சுமக்கும் தன்னுடைய நீளமான விரல்களை முகவாட்டத்துடன் தீச்சட்டியில்  கதகதப்புவேண்டிக்  காட்டிக்கொண்டிருந்த லூசியஸைப் பார்த்தேன். மருத்துவர் ஹெர்மோஜேனெஸை  தம்முடைய  மருந்துகளின் இருப்பைப் புதுப்பித்துக்கொள்ளவும், புதிய மருந்துகள் தேவையைப் பூர்த்திசெய்வதற்காகவும் கீழை நாடுகளுக்கு அனுப்பி வைத்திருந்தேன்; அவர் சமீபத்தில் இத்தாலிக்குத் திரும்பியிருந்தார். சக்திவாய்ந்த தாது உப்புக்களால் செறிவூட்டப்பட்ட சேற்றினைக்கொண்டு  லூசியஸ் நோயைக் சீர்படுத்த முயற்சித்தார். இம்முறை அனைத்து நோய்களையும் குணப்படுத்துமெனச் சொல்லப்பட்டது. எனினும் எனது தமனிகள் அளவிற்கு லூசியஸுடைய நுரையீரல்கள் பலன்பெறத் தவறின.

அவனுடைய கடினப்போக்கிற்கும், மெத்தனத்  தன்மைக்கும் ஒருசில மோசமான குணங்களுண்டு; அவை அம்பலத்திற்கு வர இந்நோய் காரணமாயிற்று. லூசியஸ் மனைவி, நோயாளிக் கணவனைப் பார்க்க வருவதுண்டு; அச்சந்திப்பு  கசப்பான வார்த்தைகள் பரிமாற்றத்தில் முடியும்; பின்னர் அவளும் வருவதில்லை. அவனுடைய மகனை அழைத்துவர ஏற்பாடு செய்யப்பட்டது, அழகான ஏழுவயது குழந்தை ;   பொக்கைவாய்ச் சிரிப்பு. ஆனால் லூசியஸ் குழந்தையிடம் பாராமுகமாக நடந்துகொள்வான். உரோமாபுரி அரசியல்  நடப்புகளைத் தெரிந்துகொள்வதில்  அவன் காட்டிய அக்கறை ஒரு சூதாடியின் அக்கறையாக இருந்ததேயன்றிப்  பேரரசின் நிர்வாகிகளில் ஒருவனுடைய அக்கறையாக ஒருபோதும் இருந்ததில்லை.    எதைக்குறித்தும் கவலைப்படாத அவனுடைய பண்பை ஒருவகைத் துணிவாகக் கருதவேண்டியிருந்து. பிற்பகல் பொழுதை வெகுநேரம் நோய்தரும் இன்னல்களில் அல்லது உறக்கத்தில் கழித்து எழுந்தானென்றால் கடந்தகாலத்திய ஆரவாரமான  உரையாடல்களில் தன்னை முழுமையாக ஒப்படைத்துவிடுவான். வியர்வையில் நனைந்த அம்முகம் சிரிப்பதை மட்டும் இன்னும் விடவில்லை. அவனுடைய மெலிந்த உடல் மருத்துவரை வரவேற்கவென்று அழகாக எழுந்து நிற்கும். அவன் இறக்கும்போதுகூடத் தந்தம் மற்றும் தங்கத்தால் உருவான இராஜகுமாரனாகவே இருப்பானென மனம் நினைத்தது. 

இரவு எனக்குத் தூக்கமில்லை; எனவே நோயாளியின் அறையில் தங்க நேரிட்டது. செலெர், லூசியஸை அதிகம் நேசிப்பவனில்லை ; என்னிடத்தில் அதீத விசுவாசம் கொண்டவன், அதனாலேயே  பிறரிடத்தில் அவர்கள் எனக்கு  வேண்டியவர்களாக இருந்தாலுங்கூட அவ்ர்களுக்குப் புரியும் பணியில் அலட்சியம் வெளிப்படும். இந்நிலையில் என்னுடனிருந்து நோயாளியைக் கண்காணிக்கச் சம்மதித்தான்.   போர்வைக்குள்ளிருந்து சீரான சுவாசத்தின் ஒலியைக் கேட்கமுடிந்தது. இன்னதென்று விவரிக்கவொண்ணாத கசப்புணர்வு ஆழ்கடலில் மூழ்கியிருந்தேன்: லூசியஸ் என்னை ஒருபோதும் உண்மையில் விரும்பியவனில்லை; எனக்கும் அவனுக்குமான உறவு வெகு சீக்கிரம் ஒரு செலவாளி மகனுக்கும்,  சுகமாக நாட்களைக் கழிக்க விரும்பிய ஒரு தகப்பனுக்கும் இடையிலான  உறவாக மாறியது. உருப்படியான பெரிய திட்டங்கள், தீவிர சிந்தனைககள், வெறித்தனமான இச்சைகளென்று எதுவுமற்றதோர் வாழ்க்கை. பொற்காசுகளின் அருமையை உணராத ஒரு ஊதாரிபோலத் தன்னுடைய வருடங்களை அவன் வீணடித்திருந்தான். இடிபாடுடனிருந்த  சுவரொன்றில் சாய்ந்திருந்தேன். எனது அரசியல் வாரிசாக அவனைத் தெரிவுசெய்ய ஏராளமான தொகையைச் செலவழித்திருந்தேன்; படைவீரர்களுக்கு மாத்திரம் முந்நூறு மில்லியன் செஸ்டர்ஸ்களை விநியோகித்திருந்தேன்; அவற்றை யெல்லாம் எண்ணிப்பார்த்தபோது கோபம் வந்தது. ஒரு வகையில், அவ்வப்போது ஒருசில சங்கடங்கள் குறுக்கிட்டபோதிலும் என்னுடைய நல்லகாலம் உடன் பயணித்திருந்தது. என்னால் கொடுக்கக் கூடியதையெல்லாம்  லூசியஸுக்குக் கொடுத்து எனது பழைய ஆசையைப் பூர்த்திசெய்திருந்தேன். ஆயினும் பேரரசிற்குக் கேடும், எனது கௌரவத்திற்கு இழுக்கும் இவ்வாரிசுத் தேர்வினால் ஏற்பட்டுவிடக்கூடாதென்பது, எனது எதிர்பார்ப்பு. தவிர ஆழ்மனதில், அவன்  நலம் பெறும் விஷயத்தில் அச்சமும் இருந்தது. தற்செயலாக  மேலும் சில வருடங்கள் உயிர்வாழ்ந்தாலுங்கூட, உடல்நிலையில் முன்னேற்றம் இல்லையெனில், வெறும் ஜடமாகவுள்ள இவனிடத்தில் பேரரசை எப்படி விட்டுச் செல்வது ?

லூசியஸ் ஒருபோதும் கேள்விகளை எழுப்புவதில்லை; பதிலாக  என் சிந்தனைக்குள் பிரவேசித்திருந்தான். எனது அசைவுகள் ஒவ்வொன்றையும் அவனுடைய கண்கள் பின்தொடர்ந்தன. இரண்டாவது முறையாக அவனைக் கான்சல் ஆக நியமித்தேன். ஆனால் இம்முறை  அப்பணிகளைத் தம்மால் நிறைவேற்ற முடியுமாவென்கிற அச்சம்,. என்னை விரக்தியடையச் செய்கிறோம் என்கிற வேதனை அவனுடைய உடல் நிலையை மோசமாக்கியது. « நீ மர்செலஸாக வாழ்வாய்..(Tu Marcellus eris) … » கவிஞர் வேர்ஜில், அகஸ்ட்டஸுடைய சகோதரி மகனுக்கென்று  எழுதிய கவிதை வரிகளைத் திரும்ப உச்சரித்தேன். மர்செலெஸுக்கும்,  பேரரசைத் தருவதாக வாக்குறுதி தரப்பட்டிருந்தது, ஆனால் அவன் பாதையில் குறுக்கிட்ட  மரணம் அதை அவன் அடைய முடியாமற் செய்தது. தொடர்ந்து வெரிஜிலின் வரிகளை நினைவுகூர்ந்தேன் : « கைகள் நிறைய அல்லிமலர்களை அள்ளிக்கொடு ……, நான் செந்நிறப் பூக்களை வாரி இறைக்கிறேன்…( Manibus date lilia plenis… Purpureos spargam flores…) ».. பூக்களை நேசிக்கிற மனிதர்களுக்கு என்னிடமிருந்து கிடைப்பது இறுதி அஞ்சலியாக நான் சாற்றுகிற அற்ப மலர்வளையம் மட்டுமே.  

தன்னுடை உடல்நலன் சீரடைந்திருப்பதாக நினைத்து உரோம் நகருக்குத் திரும்ப விரும்பினான்.  இனி அவன் எத்தனைக் காலம் வாழ்வான் என்பதைக் குறித்துத் தங்களுக்குள் விவாதிக்க விரும்பாத மருத்துவர்கள் அவன் விருப்பப்படி நடக்குமாறு எனக்கு அறிவுறுத்தினார்கள். ஆங்காங்கு இடையில் தங்கி, என்னுடைய மாளிகைக்கு அழைத்துவந்தேன். செனெட் அவையினருக்கு, அவனை என்னுடைய  அரசியல் வாரிசெனத் தெரிவிக்கும் நிகழ்ச்சி, வருடப்பிறப்பைத் தொடர்ந்துவரும் உடனடி அமர்வில் ஏற்பாடாகி இருந்தது. மரபுப்படி, நிகழ்வின் இறுதியில் அவன் நன்றியுரை நிகழ்த்த வேண்டும். இந்த உரை விவகாரத்தில் கடந்த பல மாதங்களாகவே அவன் அக்கறை செலுத்திவந்தான் ; மிகவும் கடினமான பகுதிகளை, இருவருமாக எளிமைப்படுத்தினோம். அன்று ஜனவரி மாதத்தின் முதல்நாள். அவன் வாயிலிருந்து திடீரென இரத்தம்; மயக்கமுற்றான். தனது இருக்கையில் சாய்ந்து. கண்களை மூடினான். மெலிந்திருந்த. அந்த ஜீவனுக்கு மரணம் ஒரு தலைச் சுற்றலாக நேரிட்டது. அது புத்தாண்டு தினம். பொது விழாக்களுக்கும், தனிப்பட்ட மகிழ்ச்சிக்கும் இடையூறு ஏற்படாத வகையில், அவன்து மரணத் தகவலை உடனடியாகப் பரவாமல் தடுத்தேன். அதற்கு மறு நாள்தான் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அவனுடைய இல்லத் தோட்டத்தில் ஆரவாரமின்றி உடல் அடக்கம்  செய்யப்பட்டது. அடக்கம் செய்வதற்கு முதல் நாள், சக்கரவர்த்தியின் சுவீகார மகனென்ற வகையில் லூசியஸுக்குள்ள உரிமை காரணமாக புனிதமான மரியாதையைச் செலுத்தவும், எனக்கு  அனுதாபம் தெரிவிக்கவும், செனெட் அவை தங்கள் பிரதிநிதிகள் அடங்கிய குழுவொன்றை அனுப்பிவைத்தது;  ஆனால் நான் அவர்களைச் சந்திக்க மறுத்துவிட்டேன். இவ்விவகாரத்தில் ஆரம்பம் முதல் ஏற்கனவே அரசுக்கு அதிகப் பணம் விரயமாகியிருந்தது. லூசியஸ் கடவுளில்லை, எனவே சில கல்லறைக் கோட்டங்களும்,  அவன் வாழ்ந்த இடங்களில் சிலைகளை நிர்மாணிப்பதும் போதுமென முடிவெடுத்தேன்.  

இந்த முறை,   ஒவ்வொரு கணமும் முக்கியம் ; தவற விடக்கூடாதது. நோயாளியின் கட்டிலருகே இருந்தபோது இதுபற்றி  சிந்திக்க எனக்கு நிறைய நேரம் கிடைத்தது, திட்டங்கள் முடிவாகியிருந்தன. செனட் அவையில்,  ஆண்ட்டனைனஸ் என்ற பெயரில்  சுமார் ஐம்பது வயதுள்ள ஒருவரைக் கண்டிருந்தேன்,  மாகாணப்பகுதியைச் சேர்ந்த   குடும்பம் ;  புளோட்டினாவுக்கும்  தூரத்து உறவு. வித்தியாசமான மனிதர்; தவிர , செனெட் அவையில், ஓரளவிற்கு முடங்கிய நிலையிலிருந்த மாமானார் இருக்கைக்கு அருகிலேயே,  தமது இருக்கையை அமைத்துக்கொண்ட அவருடைய மென்மையான குணமும் எனது கவனத்தைப் பெற்றிருந்தது.  அவருடைய சேவைகுறித்த பதிவுகளைத் திரும்ப வாசித்தேன். குறை காணமுடியாத அரசு ஊழியர், வகித்த அனைத்துப் பதவிகளிலும் சிறப்பாகச் செயல்பட்டிருந்தார். எனது தேர்வு இனி அவராகத்தான் இருக்கமுடியும். ஆண்ட்டனைனஸ் பற்றி  ஒவ்வொருமுறையும் கூடுதலாக அறியவரும்போதெல்லாம், அவர் மீதான என் மதிப்பு  மரியாதையாக உருவெடுத்தது. இந்த எளிய மனிதரிடம் நான் இதுவரைச் சிறிதும் எண்ணிப் பார்த்திராத,  என்னுடைய சொந்த வாழ்க்கையில்  கடைபிடித்திருந்தும் அதுகுறித்து யோசிக்கத் தவறிய அன்பு என்கிற நற்பண்பைக் கண்டேன்.  விவேகளிடம் காண்கிற சராசரி குறைபாடுகள் இவரிடமும் உண்டு, அப்பழுக்கற்றவர் எனக்கூறுவதற்கில்லை.  தினசரிப் பணிகளை நுட்பமாக நிறைவேற்றும் விவகாரத்தில் தமது அறிவுத் திறனை எதிர்காலத்தைக் காட்டிலும் நிகழ்காலத்திற்குப் பயன்படுத்தினார்.  உலகம் பற்றிய அனுபவம்,  அவருடைய சொந்த நற்பண்புகளால் வரையறுக்கப்பட்டிருந்தது.அவரது பயணம் சில உத்தியோகபூர்வ பணிக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டது, அப்பணிகளை நன்கு நிறைவேற்றியுமிருந்தார்.  கலைகளில் போதிய ஞானமில்லை;. புத்தகங்களில் ஆர்வமில்லை; எனது கருத்துக்களில் உடன்படத் தயங்குவார்;  உதாரணத்திற்கு மாகாணங்களில் அவற்றின் வளர்ச்சிக்குரிய   காரணிகளுக்கு  இடமுண்டு என்பதென் கட்சி, அவரோ அதற்கு நேர்மாறானவர். எனது ஆக்கபூர்வமான வேலைகளை விரிவுபடுத்தாமற் போனாலும் தொடரக்கூடியவர் ; அதைச் சிறப்பாகவும் செய்யக்கூடியவர். இவரிடம் பொறுப்பை ஒப்படைத்தால், உரோம சாம்ராச்சியம்  தன்னளவில் ஒரு நேர்மையான ஊழியரையும், ஒரு நல்ல எஜமானையும் கொண்டிருக்கும்.

எனக்கு உலகப் பாதுகாப்பை உறுதிசெய்வது முக்கியம் என்பதால் தலைமுறை இடைவெளி, பெரிதாகத் தோன்றவில்லை. இயலுமானால்,  கவனத்துடன் தெரிவு செய்கிற இந்த சுவீகார பரம்பரையை  நீண்டகாலத்திற்குக் கொண்டுசெல்லவும், காலத்தின்பாதையில் தொய்வின்றி இம்முறையை வழிநடத்துவதற்கு ஏற்ப நம்முடைய  சாம்ராச்சியத்தைத் தயார் செய்யவும் எனக்கு விருப்பமிருந்தது. உரோம் நகருக்குத் திரும்பும் ஒவ்வொரு முறையும், எனது வெகுநாளைய சினேகிதரான வெரஸ் குடும்பத்தினரைச் சந்தித்து நலன் விசாரிக்கத் தவறியதில்லை. உயர்நீதிமன்றத்தில் பணிபுரியும் முற்போக்கான அக்குடும்பத்திற்கும்  என்னைப்போல ஸ்பெய்ன் பூர்வீகம். 

இளம் வயதில் ஆன்னியஸ் வெரஸ்(Annius Verus) என்று அழைக்கப்பட்ட  உனக்கு நான் வைத்தப் பெயர் மார்கஸ் அரேலியஸ்(Marcus Aurelius), தொட்டிற் குழந்தையிலிருந்தே உன்னை அறிவேன். என் வாழ்க்கையின் மிகவும் ஒளிமிகுந்த காலங்களில்,  குறிப்பாக  பாந்தியன் தேவாலயம் நிறுவப்பட்ட காலக்கட்டத்தில், உன்னுடைய குடும்பத்துடன் கொண்டிருந்த நட்பு காரணமாக, நமது உரோமானிய பண்டைய சமய மரபுகளைப் பக்தியுடன் தொடர்கிற ஆர்வெல் சகோதரர்கள் சமயக் குழுவினரின் சடங்கில் உனக்கும் இடம்தர  ஏற்பாடு செய்தேன் ; நிகழ்ச்சிக்கு அப்போது சக்கரவர்த்தி திராயான் தலைமை தாங்கினார். டைபர் நதிக்கரையில் அதே ஆண்டு நடைபெற்ற பலிதரும் நிகழ்ச்சியின்போது, உன்கையைப் பிடித்துகொண்டு நானிருந்தேன்.  ஐந்து வயது சிறுவன் நீ,  அவ்வயதுக்குரிய குழந்தைத் தனத்துடன் நீ வேடிக்கை பார்த்தாய், பன்றி பலிகொடுக்கப்பட்டபோது விலங்கு எழுப்பிய ஓலத்திற்குப் நீ பயந்தாய்; ஆனாலும் சுற்றிலுமிருந்த பெரியமனிதர்களைப்போல நடந்துகொள்ள எத்தனித்தாய். மிகவும் நல்லைபிள்ளையாகவும் அறிவு மிக்கவனாகவும் இருந்த உன்னுடைய கல்வியைக் குறித்த அக்கறை எனக்கிருந்தது; உனக்கென நல்லாசிரியர்களைத் தேடிய உன் தந்தைக்கு நான் உதவிசெய்தேன். வெரஸ், வெரேஷியஸ்(உண்மையானவன்) என, உனது பெயரை வைத்துக்கொண்டு  விளையாடி இருக்கிறேன். என்னிடம் பொய் சொல்லாத ஒரே ஜீவன் நீ ஒருவன்தான்.

தத்துவஞானிகளின் எழுத்துக்களை ஆர்வத்துடன் படித்ததை, கடினமான கம்பளி உடுத்தியதை, வெறும் தரையில் உறங்கியதை, சற்றே பலவீனமான உனது  உடலை ஸ்டோயிக்ஸ் தத்துவத்தின் பொருட்டு அனைத்து வகையிலும்  வருத்திக்கொள்வதை – அனைத்தையும் என் கண்களால் பார்த்திருக்கிறேன். சற்று மிகையென்கிறபோதும், பதினேழுவயதில் இவை உன்னுடைய நற்பண்பிற்கான அறிகுறிகள். இத்தகைய ஞானம்கொண்ட படகை விபத்துக்குள்ளாக்கி மூழ்கடிக்கப்போகும் பாறை எதுவாக இருக்குமென்று என்னை நானே கேட்டுக்கொள்வதுண்டு ; காரணம், நேரம்காலமின்றி நாம் மூழ்கடிக்கப்படுகிறோம். அப்பாறை  மனைவியாகவோ, நம்முடைய அன்பிற்கு மிகவும் பாத்திரமான மகனாகவோ அல்லது களங்கமற்ற, கோழைத்தனமான இதயங்களுக்கென்றேயுள்ள சட்டப்பூர்வமான பொறிகளில்  ஒன்றாகவோ இருக்கலாம், அந்த ஒன்றுதான் எது?  அல்லது நமது வயதும், நோயும், சோர்வும்,  வஞ்சமும் தெரிவிப்பதுபோல, நமது நற்குணங்கள் உட்பட அனைத்துமே வீணா ? உன்னுடைய பதின்வயது கள்ளங்கபடமற்ற முகத்திற்குப் பதிலாக, களைப்புற்றதொரு முதிய முகத்தை நான் கற்பனை செய்திருக்கிறேன். ஆய்ந்தறிந்து  நீ எடுக்கிற திடமான முடிவில்  இனிமைக்கும் பலவீனத்திற்குங்கூட இடமுண்டென்பதை நான் அறியாதவனல்ல. உனக்குள் ஒர் மேதை ஒளிந்திருப்பதை  என்னால் யூகிக்க முடிகிறது, அதற்காக அந்த மேதை ஓர் ஆட்சியாளனாகத்தான் இருக்கவேண்டுமெகிற  கட்டாயமும் இல்லை. இத்தகைய மேதமை அதிகாரத்தின் உச்சத்துடன் இணைந்து செயலாற்றுவதை ஒருமுறை பார்க்கநேரும் இவ்வுலகு, என்றென்றும் வளத்துடனிருக்கும் என்பதில் சந்தேகமில்லை. மார்கஸ் அரேலியஸ் ஆகிய உன்னை, பெரியவர் ஆண்ட்டனைஸ் தத்தெடுக்கத்  தேவையான அனைத்தையும் செய்தேன்; உன்னுடைய இந்தப் புதிய பெயரின் கீழ், நீயும் ஒருநாள் பேரரசர்களின் பட்டியலில் இடம் பெறுவாய், இனி நீ என் பேரன். மனிதர்களுக்கு ஒரு போதும் நனவாகாத பிளாட்டோவின் கனவு; வருங்காலத்தில் பரிசுத்தமான இதயங்கொண்ட தத்துவாதி ஒருவனுடைய ஆட்சியினால் நிறைவேறப் போகிறது.

உனக்களித்த இக்கௌரவத்தை ஏற்றுக்கொள்ள மிகவும் தயங்கினாய்; இனி நீ இருக்கவேண்டிய இடம் அரண்மனை.  வாழ்க்கையிலுள்ள அத்தனை சுகந்தங்களையும் நுகர்வதற்கு  நேற்றுவரை நான் ஒருங்கிணைக்க வாய்ப்பளித்த  தீபுர், உனது இளம் வயது நற்பண்பிற்கு இடையூறு அளிக்கிறது.. ரோஜாச்செடிகள் பூத்துக்குலுங்கும் தோட்டப்பாதைகளில் எதையோ பறிகொடுத்தவன்போல போவதும் வருவதுமாக இருப்பதைப் பார்க்கிறேன்,  உனது பாதையில் அழகான இரு மனித உடல்கள் குறுக்கிடுகின்றன;  அவற்றால் ஈர்க்கப்பட்டு  நீ நெருங்குவதைக் கண்டதும், என்னிடத்தில் சிரிப்பு ; வெரோனிகா அல்லது தெயோடொரோஸ் இருவரில் யாரைத் தேர்வுசெய்வது என்பதில் இலேசானத் தயக்கம் உனக்கு ; பின்னர் உன்னுடைய வாலிபத்திற்குக் களங்கம் நேர்ந்து விடக்கூடாது என்பதைப்போல, இரு பெண்களையுமே நிராகரிக்கிறாய். இதுபோன்ற கணநேர இன்பங்களில் உனக்குள்ள மனச்சோர்வை என்னிடமோ, எனது இறப்பிற்கு பிறகு இல்லையென்றாகப் போகிற இம்முற்றத்திடமோ நீ ஒளிப்பதில்லை. என்னை நீ அவ்வளவாக விரும்புவதில்லை என்பதுதான் உண்மை. மகனென்கிற உரிமை சார்ந்து பெரியவர் ஆண்ட்டனைனஸ்   மீது உனக்குப் பாசம் அதிகம். அதுபோல என்னிடம் நீ காண்கிற ஞானம், உன்னுடைய ஆசிரியர்கள் உனக்குக் கற்பிப்பதற்கு நேர்மாறானது. அதுபோலப் புலன்களுக்கு என்னை அர்ப்பணித்துக்கொள்வதென்பது, நான் அமைத்துக்கொண்ட வாழ்க்கைமுறை, அது கடுமையான உனது வாழ்க்கைக்கு எதிரானதுபோன்ற தோற்றம் தரினும், உண்மையில் உனது வாழ்க்கைக்கு இணையானது. அதனாலென்ன, நீ என்னை புரிந்து நடக்க வேண்டுமென்பது கட்டாயமில்லை. உலகில் ஒன்றா இரண்டா, ஓராயிரம் ஞானங்கள் ; அனைத்துமே உலகிற்குத் தேவை ; ஒன்றுக்கொன்று மாறுபடுவதில் தவறில்லை.

தொடரும்……

அதிரியன் நினைவுகள்

அதிரியன் நினைவுகள் – 39 அதிரியன் நினைவுகள் -41

Discover more from சொல்வனம் | இதழ் 365 | 26 ஏப். 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.