அதிரியன் நினைவுகள் -26

This entry is part 25 of 33 in the series அதிரியன் நினைவுகள்

அதன்பின்னர்  நாங்கள் கோயிலின் உட்புறம் சென்றோம்,  சிற்பிகள்  தீவிரமாகத் தங்கள் பணியில் ஆழ்ந்திருந்தனர்: போதிய வெளிச்சமில்லை, தங்கம் மற்றும் தந்தத்திலான   ஜீயுஸ்(Zeus) கடவுளின்  பிரம்மாண்ட வடிவமைப்பு அதிகத் தெளிவின்றி ஒளிர்ந்தது; சாரக்கட்டின் அடியில், இக்கிரேக்க ஆலயத்திற்கு அர்ப்பணிப்பதற்காக இந்தியாவிலிருந்து நான் கொண்டுவந்த மலைப்பாம்பு ஏற்கனவே அதற்கென அமைக்கபட்டிருந்த வேலைப்பாடுடைய கூடையில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தது, புனித விலங்கு, மண்ணுலக ஆன்மாவின் ஊர்வனவகை சின்னம், ஜீயுஸ்  குறியீடாகவும், அவருக்கு  ஏவல் தெய்வமாகவும் இருக்கிற நிர்வாண இளைஞனோடு எப்போதும் சேர்ந்தே காணப்படும் உயிர். ஆண்ட்டினஸ் தற்போது முன்னிலும் அதிகமாக ஜீயுஸ் உடனிருக்கும் இளைஞன் பாத்திரத்தைச் செய்தான். நிர்வாண இளைஞன் செய்ததைப்போலவே பாம்பிற்கு இறக்கைகள் வெட்டபட்ட சிறுகுருவிகளை உணவாகக் கொடுத்தான். பின்னர் இருகைகளையும் உயர்த்தி பிரார்த்தனையும் செய்தான். இப்பிரார்த்தனை எனக்காக, என்னைமட்டுமே இறைஞ்சுகின்ற வகையில் செய்யப்பட்டதென்று நான் அறிவேன். ஆனால் அவ்வேண்டுதல் எதைப்பற்றியது, அதற்குரிய பலன் ஒருநாள் அவனுக்குக் கிடைக்குமா என்பதை ஊகிக்க  எனக்குப் போதாது,  நான் கடவுள் இல்லை. அன்றையதினம் அந்த  நிசப்தத்திலிருந்தும், பொழுது சாயும் மங்கிய வெளிச்சத்திலிருந்தும் வெளியேறி விளக்கேற்றபட்ட  ஏதன்ஸ் நகர வீதிகளையும், சராசரி மனிதர்களின் பரிச்சயப்பட்ட கூட்டத்தையும், மாசடைந்த மாலைநேர காற்றோடு கலந்த மனிதர்கள் கூக்குரலையும் திரும்பவும் பார்க்கவும் கேட்கவும் நேர்ந்தபோது மனம் இலேசானது.  கூடிய சீக்கிரம் கிரேக்க உலகத்தின் நாணயங்களை அலங்கரிக்கவிருந்த அந்த இளம் உருவம், அங்கிருந்த மனிதர் கூட்டத்திற்கு, ஒரு நட்புக்குரிய ஜீவனாகவும், அடையாளமாகவும் மாறியிருந்தது.

எவரிடமும் நான் குறைத்து அன்புசெலுத்துவதில்லை, அதுபோல அதில்  எல்லைமீறுவதுமில்லை. அன்பின் கனம் என்பது மார்பின் குறுக்கே கனிவாக போடும் ஒரு கரம் மெள்ள மெள்ள  எங்கனம் பாரமாக மாறுமோ, அத்தகைய  தன்மையது. இவ்விஷயத்தில் என்னுடைய பழைய கூட்டாளிகளை நினைத்துப்பார்க்கிறேன்; ஒருமுறை மிலீட்டஸ்(Miletus) நகருக்குச் சென்றிருந்தபோது, என்னுடன் வந்த கனிவும் இரக்கமின்மையும் கலந்துருவான இளைஞனை நினைவு கூறமுடிகிறது, பின்னைர் அந்த சினேகிதத்தை அப்போதே கைகழுவி விட்டேன்.  பிறகு சார்டிஸ்(Sardis) நகரில்  கழித்த  ஒரு மாலைப்பொழுதை நினைத்துப்பார்க்கிறேன், கவிஞர் ஸ்ட்ரட்டன்(Strato)   எங்கெல்லாம் போகக்கூடாதோ, அங்கே அவர் அழைத்துச் சென்ற மாலைபொழுது அது, ஐயத்திற்குரிய  பெண்கள் எங்களைச் சூழ்ந்திருப்பார்கள். என் அவைக்களத்தினும் பார்க்க, இருண்டிருக்கும் ஆசிய மதுச்சாலைகளின் சுதந்திரத்தை விரும்பிய ஸ்ட்ரட்டன் அற்புத இரசனையும், பிறரை எள்ளிநகையாடும் குணமும் கொண்டவர். இன்பமற்றவைகளின் பயனின்மையை நிரூபிப்பதில் காட்டுகிற அவருடைய ஆர்வத்தைப் பார்க்கிறபோது, பிற தியாகத்திற்கு ஒருவேளை நியாயம் கற்பிக்கிறாரோ என நினைக்கத் தோன்றும். பிறகு ஸ்மிர்னா நகரில், வேசிப்பெண்ணொருத்தியின்  முன்னிலையில் என்னுடைய வேண்டப்பட்ட பொருளை இம்சித்த இரவும் ஞாபகத்தில் இருக்கிறது. காதல் பற்றிய எனது இளைஞனுடைய கருத்து கடுமையானது, தனக்கு மட்டுமே  சொந்தம், அது பிறருடன் பகிர்ந்துகொள்ள கூடியதல்ல என்றிருந்தான். இவ்விஷயத்தில்  ஆரம்பத்தில்  காட்டிய முகச்சுளிப்பு  கடைசியில் வெறுக்கின்ற நிலைமைக்குத் தள்ளியது.  பின்னர் பழகிக்கொண்டான். சில முயற்சிள் தோல்வியுற்றதற்கு நெறிமுறை கடந்தவற்றில் இருந்த ஆர்வம் காரணமாக இருக்கக்கூடும்;  இந்நிலையில் எங்கள் காதலுறவில் இன்பத்திற்கு துணை நிற்கும் ஒருவர்   தொடர்ந்து நம்முடைய  நண்பராகவும், அன்பிற்குரியவராகவும் இருக்க, ஒரு புதியவகை அன்னியோன்னியம் கண்டறியப்பட,  அதன் பலனாக   பிரச்சினைக்கிடையிலும் நம்பிக்கை உருவானது; ஒருவித போதனையாக நினைத்து, என்னுடைய இளமைக்கால  அனுபவங்களை அவனிடம் பகிர்ந்து கொண்டேன்,  அவனுடைய இளமைக்காலம் என்னுடைய இளமைக்காலத்தைக் கொண்டு நிரப்பப்பட்டது; ஒருவேளை இதுவரை அது வெளியிற்சொல்லபபடாத உண்மையாக இருக்கலாம், ஆனால் எங்கள் காதலை, வாக்குறுதிகள் நிர்ப்பந்தகள் ஏதுமற்ற சராசரி இன்பத்திற்கு மெல்லமெல்ல திரும்ப அழைத்துவர வேண்டுமென்பதே இதன் நோக்கம்.

இந்த விரும்பத் தகாத ஆசையால் என்னுடைய வாழ்க்கையில் வில்லங்கம் நேருமென்கிற அச்சம் இருந்தது.  அதன் காரணமாக இக்காதலை கைவிடவேண்டியதை எண்ணி வருந்தினேன். ஆசியா மைனரைச்சேர்ந்த திராடு(Troade) பயணத்தில்  ஸ்காமண்டர் சமவெளியை நாங்கள் பார்வையிட்டோம். வெள்ளப்பெருக்கு, அங்கிருந்த இடுகாட்டின் சவக்குழிகளை சேதப்படுத்தியதில், சிறுசிறு தீவுகளாக கல்லறைகள் மாறியிருந்தன. ஹெக்டர்(Hector)21 கல்லறை அருகே பிரார்த்தனை செய்ய சில கணங்கள் எனக்கு வாய்த்தன, ஆண்ட்டினஸ் ஏதோவொரு கனவில் பேட்ரோக்கிளாஸ்(Patrocle)21 சமாதியை நோக்கிச்சென்றான். என்னோடு பயணத்துணையாக வந்த இந்த இளம் மான் ஆக்கிலியஸ்(Achille)21 சீடர் சமாதியை நோக்கிச் சென்றதைக் கண்டு : « ஏடுகளில் மட்டுமே இப்பட்டிப்பட்ட உணர்ச்சிமிக்க விசுவாசங்களை பார்க்கமுடியும் » என்று நான் கேலிசெய்தேன், அதைக் காதில் வாங்கிய அழகு ஜீவன் கன்னங்கள் சிவந்து வெட்கப்பட்டது. எதிலும் வெளிப்படையாக இருப்பதென்கிற பண்புக்குக் கட்டுபட்டவன்வன் நான். மூத்தவயதுகொண்ட மனிதனொருவன் தனது இளம்வயது தோழனிடம் வைத்திருக்கும் பற்றும், பிணைப்பும் உதாரண புருஷர்க்குரிய கிரேக்க நெறிமுறையாக நாம் பார்ப்பது பெரும்பாலும் கபடநாடகம் அல்லது பாசாங்கு என்கிற உண்மை எனக்குப் புரிய ஆரம்பித்தது. அதுபோல உரோம் நகரின் தப்பான அபிப்ராயங்களுக்கு நினைத்ததைக் காட்டிலும் மன அளவில் கூடுதலாக பாதிக்கப்பட்டிருந்தேன். ஆனாலுங்கூட  காதல் விஷயத்தில்  எவை வெட்கக் கேடானவையாகப்  பார்க்கப்பட்டதோ, அவையே   மகிழ்ச்சி விஷயத்தில் தம் பங்கை அளித்தவை என்பதையும் நான் மறந்தவனில்லை. இத்தகு சூழலில் எந்தவொரு ஜீவனையும் இனி பிரத்தியேகமாக சார்ந்திருப்பதில்லை என்கிற வெறித்தனமான முடிவிற்குத் திரும்பவும் வந்திருந்தேன். பொதுவாக இளம் வயதினரை என்னால் தவிர்க்க முடியவில்லை. ஆனால்  அவர்களுடைய பொய்யும் புரட்டும் எனக்குக் கோபத்தை ஊட்டியது என்கிறபோதும், வித்தியாசமான இப்படிபட்டதொரு தாபம், என்னுடைய உரோமானிய வைப்பாட்டிகளின் வாசனாதி தைலங்கள், அலங்கார ஆடைகள்,  பகட்டான அணிகலன்கள் அளித்த எரிச்சலுக்கு நல்ல மாற்றாக இருந்தன. எவ்வித்ததிலும் நியாயப்படுத்த முடியாத அச்சங்கள், குழப்பமுற்றிருந்த இதயத்தில் ஊடுருவின; விரைவில் பத்தொன்பது வயது ஆகவிருந்த நிலையில் அவனிடம் அதுகுறித்த கவலைகள் இருப்பதைப் புரிந்துகொண்டேன்.  ஆபத்தான ஆசைகள்,  அவற்றோடு பொறுமையை இழக்கிறபோதெல்லாம் வெளிப்படும் கோபம், விளைவாக நெற்றியில் ஒட்டிக்கிடக்கும் மெடூசா துர்த்தேவதையின் கேசத்தை ஒத்த அவனுடைய சுருள்முடிகள் ஆட்டுவிக்கப்பட, முகத்தில் அதிர்ச்சியும் சோர்வும் வெளிப்படும். நான் அவனை அடித்திருக்கிறேன்: அக்கணத்தில் அவனுடைய விழிகள் திகிலூட்டுவதுபோலிருக்கும்,  நான் கன்னத்தில் அறைந்திருந்தாலும்  அவன் என் வழிபாட்டுக்குரியவன் என்பதால் உரிய பரிகாரங்களைத் தாமதமின்றி  ஆரம்பிப்பேன். 

ஏடாகூடமான இந்த உறவின்  கர்ணகடூரமான இசைக்கோர்வைகளுக்கு உண்மையில் ஆசியக் கண்டத்திற்க்கென்றிருந்த அனைத்து மர்மங்களும் தெம்பூட்டியிருந்தன.  எலியூசிஸின் காலம் முடிந்தது. இரகசியம் மற்றும் வினோதம் கலந்த வழிப்பாட்டு முறைகளில் பயிற்சிகள்  ஆரம்பமாயிற்று.   நடனம் என்பது மயக்கம் தரும் ஆவேசக் கூத்தாக இருந்தது,  அது கூச்சலிடும் பாடலாக முடிந்தது; இக்காலகட்டத்திற்கு ஏற்ப விதிகளை மீறிய நடைமுறைகள் கடைபிடிக்கபட்டன; ஆனால் இவைகளை  நாட்டின் நிர்வாகத்தில் பங்கேற்பவன் என்கிற வகையில் நான் சந்தேகித்தேன். சமோத்ரேஸ் தீவில்,  தசையும் இரத்தமுமான  பழமையும் ஆபாசமும் கலந்த கபீர் (பார்சீக) வகை மர்ம வழிப்பாட்டு முறைகளிலும் பயிற்சி பெற்றிருந்தேன். திரோபோனியோஸ்(Trophonios) கடவுள்  குகையில் பால் குடித்த பாம்புகள் என் கணுக்கால்களைச் சுற்றிய அனுபவமுண்டு; ஓர்ஃபேயஸ் திரேசிய பண்டிகைச்  சடங்குகளில் நான் கற்றது, ஒருவித காட்டுமிராண்டித் தனமான சகோதரத்துவம். எந்த அரசாங்கப் பிரதிநிதி  சடங்குகளின்போது எவ்வித வடிவத்திலும் அங்கவீனங்கள் கூடாதென்பதற்காக, அவற்றை தடைசெய்யவேண்டி கடுமையான தண்டனைகளை பிரகடனம்செய்திருந்தாரோ, அம்மனிதரே இரத்த்களறியுடன் பம்பரம்போல சுழன்றாடிய களியாட்டங்கள் மிகுந்த சிரியா நாட்டு பெண் தெய்வ விழாவில் பங்கேற்கவேண்டிய கட்டாயம் ; என்னுடைய இளம் தோழனோ, ஊர்ந்து செல்லும் விலங்கொன்றைக் கண்டு ஈர்க்கப்பட்ட குதிரைபோல,  வயது மற்றும் காமத்தின் தேவைகளைச் சமாளிக்க மரணத்தையொத்த அல்லது அதைக்காட்டிலும் பயங்கரமானதொரு பதிலைத் தேடும் மனிதர்களைத்  திகிலுடன் அவதானித்துக் கொண்டிருந்தான்.

இவ்வரிசையில் பயங்கரத்தின் உச்சத்தை சந்தித்த அனுபவம்  சிரியாவின் பல்மைரா பயணத்தின்போது ஏற்பட்டது. மெலெஸ் அக்ரிப்பா என்கிற அரபு வணிகர்,  அற்புதம் ஒருபக்கம், காட்டுமிராண்டித்தனம் இன்னொருபக்கம் வகை ஆடம்பரகளுக்கிடையில் மூன்று கிழமைகள் தங்க வைத்திருந்தார். ஒரு நாள்,  மது அருந்திய பின்னர், மித்ராயிக் (Mithraic)வழிபாட்டு முறையில் நம்பிக்கைக் கொண்ட  மரியாதைக்குரிய மெலெஸ் தாம் ஒரு பஸ்ட்டோஃபோர்(Pastophore)22 ஆக இருந்தும் தம்முடைய மதகுரு பொறுப்பு சார்ந்த கடமைகளைப் பெரிதுபடுத்தாமல் ஆண்ட்டினஸிடம் எருதை பலிதரும்  ஒரு சடங்கில் கலந்துகொள்ளுமாறு கூறினார். இவ்வகையான நிகழ்வொன்றில் நானும் ஒருமுறை பங்கேற்க நிர்ப்பந்திக்கபட்டது இளைஞனுக்குத் தெரியும், எனவே மிகுந்த ஆர்வத்துடன் கலந்துகொள்ள சம்மதித்தான். இப்படியொரு அமானுஷ்ய நிகழ்வில் அவன் கலந்துகொள்வதை தடுக்க நானும் முனையவில்லை. இச்சடங்கில் கலந்துகொள்ள குறைந்தபட்ச சுத்திகிரியையும், ஒரு சிலவற்றை தவிர்த்திருத்தலும் போதுமானது.  என்னுடைய அரபு மொழிச் செயலாளர் மார்கஸ் உல்பியஸ் காஸ்டொரஸ்ஸ் என்பவருடன் இணைந்து நிகழ்ச்சியின் தாளாளராக இருக்க சம்மதித்தேன். சொல்லப்பட்ட  நேரத்தில் அனைவருமாக புனித குகைக்குள் இறங்கினோம்; என்னுடைய பித்தீனிய வாலிபன் இரத்தத்தால் குளிப்பாட்டப்படவேண்டி படுத்தான். சரீரமெங்கும் இரத்த கோடுகள், சேற்றில் பிசைந்த கேசம்,  அவைகளே போனால்தானுண்டு கழுவ இயலாது என்பதுபோல முகம் முழுக்க விசிறி அடித்திருந்த கறைகளுடன் படுத்திருந்த குழியிலிருந்து அவன் எழுந்தபோது, எனக்குக் குமட்டிக்கொண்டு வந்ததடோன்றி,  குகைக்குள் நடந்த அந்த  மோசமான வழிபாட்டு முறைகள் மீது வெறுப்பும் உருவானது. சில நாட்களுக்குப் பிறகு, எமேசாவில்(Emesa) தங்கியிருந்த துருப்புக்களுக்கு,  இச்சூனிய மித்ரேயம்(Mithraeum) கோபுரத் திசைபக்கம் போகக்கூடாதென உத்தரவிட்டேன்.

மார்க்-ஆண்ட்டனிக்கு அவருடைய இறுதி  யுத்தத்திற்கு முன்பாக சில சகுனங்கள் தோன்றின அதுபோல அன்றைய இரவும், காவல் தெய்வங்கள் பணிநேரம் முடிந்து விடைபெறும்போது ஒலிப்பவை என சொல்லப்படுகிற  இசை மெல்லமெல்ல விலகிச்செல்வதைக் காதில் வாங்கினேன்… ஆனால் அதை எச்சரிக்கையாக எடுத்துக்கொள்ளத் தவறினேன். தடுமாறி  விழும் நேரத்தில் குதிரைவீரனுக்கு ஒரு தாயத்து தரும் பாதுகாப்பு எப்படியோ, அப்படியொரு பாதுகாப்பில்  எனக்கும் நம்பிக்கை ஏற்பட்டிருந்த தருணம். சாம்சாட்(Samsat) நகரில், கீழைத்தேய சிற்றரசர்களின் கூட்டம் எனது அனுசரணையில் நடந்தது; ஆப்கர்(Abgar), ஆஸ்ரோன்(Osroene) பகுதி சிற்றரசர்,  வல்லூறுகளுக்கு வேட்டையாட பயிற்றுவிக்கிற கலையைத் தாமே பயிற்சியாளாராக நின்று எனக்குக் கற்றுத்தந்தார்; நாடகக் காட்சிகள்போல புதர்கள் மற்றும் செடிகொடிகளினின்று விலங்குகள், வெருட்டப்பட மான்கள் கூட்டம் கூட்டமாக ஓடிச்சென்று ஊதாநிற வலைக்குள் வீழ்ந்தன. ஆண்ட்டினஸ் செய்யவேண்டியது, நாணேற்றிய அம்பினைக்கொண்டு தன் சக்தி அனைத்தையும் பிரயோகித்து தங்க நுகத்தடியை இழுத்துக்கொண்டு ஓடும் ஒருஜோடி  விலங்குகள் பாய்ச்சலைத் தடுப்பது.  ஆக இப்படியான ஏற்பாடுகளின் கீழ் அற்புதமான எங்கள் மொத்த பேரங்களும் முடிவுக்கு வந்தன. இம்முடிவுகள் எனக்குச் சாதகமாகவும் இருந்தன, விளையாட்டு எதுவாயினும் ஜெயித்தவன் நான். 

அந்தியோக்கியா அரண்மனையில் குளிர்காலத்தைக் கழித்திருந்தோம், ஒரு காலத்தில் இங்குள்ள மாந்திரீகவாதிகளிடம் எனது எதிர்காலத்தைத் தெரிந்துகொள்ள விரும்பியுள்ளேன். உண்மையில், இனிமேல் என்னிடம் கொடுப்பதற்கென்று எதிர்காலத்திற்கு எதுவுமில்லை, இந்த எதுவுவுமில்லை என்பதேகூட ஒருவகையில் என்னைப்பொறுத்தவரை ஒரு பரிசு. திராட்சை தோட்டத்தில் அறுவடைகளை முடித்து நாளாயிற்று; தொட்டியில் இருப்பதெல்லாம் வாழ்க்கையின் சாறுபிழிந்த சக்கைகள். என்னுடைய விதியை இனி வழிநடத்துவதில்லை எனத் தீர்மானித்திருந்தேன், ஆனால் முந்தைய நாட்களில் மிகுந்த கவனத்துடன் வகுத்துக்கொண்ட நெறிகளை எண்ணிப்பார்க்கிறபோது  அவற்றை மனித வாழ்க்கையின் ஆரம்பகால விதியாகவே இன்றும் பார்க்கமுடிகிறது, வேறுவகையிலில்லை; அடுத்து, விதிஎன்பது நடனக் கலைஞன் காலில் கட்டபட்ட ஒரு சங்கிலி, குதிக்கிறபோது போதிய உயரத்திற்கு நடனக்கலைஞனை அனுமதிக்கின்ற வகையில், அது கட்டப்பட்டிருப்பது அவசியம். சில விஷயங்களில், சிக்கனத்தை எப்போதும்போல  கடைபிடிக்க வேண்டியிருந்தது: பின்னிரவுக்கு முன்பாக, மதுவை வழங்குவதை நான் தொடர்ந்து தடை செய்தேன்,  மெருகூட்டப்பட்ட  இதே மர மேசைகளில், மன்னர் திராயானின் கை நடுக்கத்தைப் பார்த்தது எனக்கு நினைவிருக்கிறது, ஆயினும் மதுவன்றி வேறு போதைகளும் இருக்கவே செய்கின்றன. எனது வாழ்க்கைமீது  மரணமோ, அடைந்த தோல்வியோ,  நானே அவ்வப்போது தேடிக்கொண்ட  நுட்பமான பிரச்சினைகளோ, கூடிக்கொண்டுபோன  வயதோ எந்த ஒன்றும்  பாதிப்பினை செலுத்தவில்லை. இருந்தபோதிலும்,  ஒவ்வொரு மணித்துளியும் ரம்மியமானது, இறுதியானது என்கிற எண்ணத்தில் ஓடிக்கொண்டிருந்தேன். 

ஆசியா மைனர் பகுதிகளுக்கு அடிக்கடி சென்றதும், தங்கியதும் மாந்திரீக கலைகளில் தொடர்ந்து தீவிர அபிமானிகளாக இருந்த ஒரு சிறு கூட்டத்துடன் தொடர்புகொள்ள காரணமானது. நூற்றாண்டுகள் ஒவ்வொன்றிர்க்கும் பிரத்தியேகமான துணிச்சல்கள் இருக்கின்றன, நம்முடைய நூற்றாண்டின் சிறந்த மனத்துணிவுகள் என்பது, சோர்வுற்ற ஒரு தத்துவம், முழுக்க முழுக்க  ஒரு சிந்தனைப்பள்ளியின் கருத்தியலாக வளர்ந்து, எங்கே மனிதர்களுக்குத் தடைபோடப்பட்டுள்ள்தோ அந்த எல்லைக்குள் பிரவேசித்து மகிழ்வதாகும். தயர்(Tyr), நகரில் படைப்பாளி ஃபிலோன் பைப்லோஸ் (Philon de Byblos) போனீசியா(phénicienne) பகுதியில் வழக்கிலிருந்த  ஒருசில பழைய மந்திர வித்தைகள்பற்றிய தகவல்களை என்னிடம் பகிர்ந்துகொண்டதோடு, ‘அந்தியோக்கியா’வரை என்னுடன் வந்தார். தத்துவவாதி நுமெனியுஸ்(Numénios) இங்கு, மெய்யியல்வாதி பிளாட்டோ, ஆன்மாவின் இயல்பு பற்றி தெரிவித்திருந்த கருத்துக்கு ஒரு புதிய விளக்கமளித்தார், அதை அரைமனதுடன் தெரிவித்தபோதிலும், அதில் வழக்கத்திற்குமாறாக அவரிடம்  நெஞ்சுரம் வெளிப்பட்டது. அவருடைய சீடர்கள் சாத்தான்களிடம் விண்ணப்பம் செய்தனர், நமக்கு அதுவுமொரு விளையாட்டு. என் கனவுகளின் மஜ்ஜையில் உருவான விசித்திர உருவங்கள் ஸ்டைராக்ஸ் (styrax) மரக் குச்சிகளைக் கொளுத்திய புகைக்கிடையில் தோன்றின, அசைந்தாடின, பின்னர் ஓர் தெரிந்த  ஜீவனுள்ள முகம்போன்ற எண்ணத்தை எங்களிடம் ஏற்படுத்திய பின்னர் அவை கரைந்தும் போயின. இவை அனைத்துமே ஒருவேளை ஒரு சாதாரண செப்படி வித்தையாக இருக்கலாம், வேறாக இருக்க வாய்ப்பில்லை, உண்மை இதுவெனில், செப்படிவித்தை ஆசாமி, தொழிலில் கெட்டிக்காரனாக இருக்கவேண்டும். 

தொடரும்…

——————————————————————

21. ஹெக்டர், (Hector), பேட்ரோகிளாஸ்(Patroclaus) ஆக்கிலியஸ்(Achilles) திராயான் யுத்தத்துடன் தொடர்புடைய மாவீரர்கள். 

22. பஸ்ட்டோஃபோர்(Pastophor) கிரேக்க தொன்மத்தில் இடம்பெற்ற பண்டைய சமயகுருக்கள் 

Series Navigation<< அதிரியன் நினைவுகள் -25அதிரியன் நினைவுகள் – 27 >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.