அதிரியன் நினைவுகள் – 36

This entry is part 35 of 48 in the series அதிரியன் நினைவுகள்

மூலம் : மார்கெரித் யூர்செனார்

தமிழாக்கம் : நா. கிருஷ்ணா

இந்த யூதயுத்தம் எனது தோல்விகளில் ஒன்றென்பதை மறுப்பதற்கில்லை.சைமனின் குற்றங்களுக்கும் ஏக்கிபாவின் பைத்தியக்காரத்தனத்திற்கும் நான் காரணமில்லை ;ஆனால் ஜெருசலேமில் குருடனாகவும், அலெக்ஸாண்டிரியாவில் அஜாக்கிரதையாகவும், உரோமாபுரியில் பொறுமையிழந்து நடந்துகொண்டதற்கும் என்னை நானே நிந்தித்துக்கொண்டேன்.  மக்களிடம் வெடித்த இந்தச் சீற்றத்தைத் தடுக்க அல்லது குறைந்தபட்சம் தாமதப்படுத்த உரிய  வார்த்தைகளை என்னால் கண்டறிய  முடியவில்லை; எப்போது கறாராக இருக்கவேண்டும் அல்லது எப்போது விட்டுக்கொடுத்துப் போகவேண்டும் என்பதும் எனக்குத் தெரிந்திருக்கவில்லை. நாம் கவலைப்படுவதற்கு எவ்வித முகாந்திரமுமில்லை என்பது நிச்சயம் ;அவநம்பிக்கைக்கு அதனினும்பார்க்கக் காரணம் குறைவு; நேர்ந்த பிழையும் கணக்கீட்டில் ஏற்பட்ட தவறும் இஸ்ரேலுடனான எங்களுடைய உறவுகளில் மட்டுமே; பிற இடங்களிலெல்லாம் இந்நெருக்கடியான காலங்களிலுங்கூடப்  பதினாறு ஆண்டுகாலம் கீழைநாடுகளில்   நாம் காட்டிய  உதாரகுணத்திற்கு உரிய பலனை அறுவடை செய்தோம். அரபு உலகில் ஏற்பட்ட கிளர்ச்சி, மன்னர் திராயான்  ஆட்சியின் இருண்ட இறுதி  ஆண்டுகளை ஒத்ததென்பது சைமன் கணக்கு; அதற்கும் மேலாக பார்த்தியர்கள்(Parthe) உதவியை அவன் நம்பத் துணிந்தான். அது ஏமாற்றத்தில் முடிந்தது, அவனுடைய தவறான கணிப்பு பெத்தார் கோட்டை சுற்றிவளைக்கப்பட்டதன் காரணமாக, மரணத்தைப் பையத் தழுவ நேரிட்டது ; அரபுப் பழங்குடியினரும் யூத மக்களிடமிருந்து தங்களைப் பிரித்துப்பார்த்தனர்; பார்த்தியர்கள் தாங்கள் கையொப்பமிட்ட ஒப்பந்தங்களுக்கு விசுவாசமாக இருந்தனர்.சிரிய நாட்டின் பெருநகரங்களின் யூதர் ஆலயங்கள் முடிவெடுப்பதில்  தயக்கம் காட்டியதோடு, இவ்விஷயத்தில் ஆர்வமின்றியும் இருந்தன. அவற்றில்  சற்றுத் தீவிரப்போக்குடையவை, யூதமத வெறியர்களான செலெட்களுக்கு இரகசியமாகப் பணம் அனுப்பிவைத்துத் திருப்தி அடைந்தனர்.அலெக்சாந்திரியா யூதர்கள் பொதுவாகக் கிளர்ந்தெழும் குணத்தினர்;அவர்களோ அமைதிகாத்தனர்.ஆக இந்த யூதர் பிரச்சினை சீழ்பிடித்திருந்தது ஜோர்டானுக்கும் கடலுக்கும் இடையில் நீண்டுக்கிடந்த வறண்ட பகுதியில் மட்டுமே; எனவே நோயுற்ற விரலை ஆபத்தின்றி வெட்டி எடுக்கலாம் அல்லது அதில் சூடுபோடலாம் என்கிற நிலை. இருந்தும் நான் ஆட்சியில் அமர்வதற்கு முன்பிருந்த இருண்ட நாட்கள் திரும்பத் தொங்கியதுபோல உணர்ந்தேன்.லூசியஸ் கொயிட்டஸ்(Lucius Quietus) முன்பொருமுறை சைரேன் நகரை எரித்திருந்தார்; லேயடீசியா(Laodicea) நகரின் முக்கிய பிரமுகர்களைத் தூக்கிலிட்டார் ;சிதிலமடைந்திருந்த எடெஸ்ஸா(Edessa) நகரைத் திரும்ப நமக்குச் சொந்தமாக்கினார்…இதன் தொடர்ச்சிபோல யூதர்கள் கிளர்ச்சி முடிவுக்கு வந்த நாளன்று, நகரின் இடிபாடுகளில்   திரும்ப  நம் பெருமை உறுதிசெய்யப்பட்டதை  மாலையில்  கிடைத்த தகவல்  உறுதிசெய்தவுடன், மீண்டும் நகருக்கு  நான் ஏலியா கேபிடோலினா எனப் பெயர் சூட்டினேன், ஆனால் யூதர்களோ தொடர்ந்து ஜெருசலேம் என்றே தங்கள் நகரை அழைக்கத் தொடங்கினர்.  அஸ்கலோன் நகரை எரித்திருந்தோம்; காஸாவில் கலகக்காரர்களைத் தூக்கிலிட வேண்டியிருந்தது…அமைதியை நேசித்த ஓர் அரசனின் பதினாறாண்டுகால ஆட்சி பாலஸ்தீனத்தின் மீதான இராணுவ அடக்குமுறை என்றொருபுள்ளியில்  முடிவடைந்திருந்தது; உலகில் அமைதிக்கான எதிர்கால வாய்ப்புகள் இருண்டிருப்பதாக எனக்குப்பட்டது.

என்னுடைய குறுகிய இராணுவ முகாம் படுக்கை அசௌகரியமாக இருந்தது,  முழங்கையை ஊன்றி எழுந்தேன். யூதர்கள் அனைவருமே கிளர்ச்சியென்கிற தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களில்லை;ஒரு சிலர் தப்பித்திருந்தனர் என்பதும் நிச்சயம்;அதற்கும் உதாரணங்களுமிருந்தன. ஜெருசலேத்திலே கூட,   பரிசேயர்கள்(Pharisiens) மதவெறியரான  ராபி ஏக்கிபாவை, கிழப்பைத்தியமாக நடத்தியதோடு, “இப்பூமியில் திரும்பவும் இஸ்ரேலியரின் வெற்றியைக் காண்பதற்கு முன்பாக, ரோமானியரின் அமைதி தந்த திடமான நன்மைகளைக்  காற்றிலெறிந்த இம் மனிதரின் வாயில், புல்பூண்டு முளைக்கட்டும்” எனச் சத்தமிட்டிருக்கின்றனனர். சொல்லப்போனால் ஒழுக்க சீலர்களைக் காட்டிலும் பொய்யான சமயவாதிகளை நான் விரும்பினேன்;  காரணம் முதல்வகை மனிதர்கள் தங்கள் சிரியன் வங்கியாளர்களிடமும், அதுபோல  கலிலேயா பண்ணைகளிலும் வைத்துள்ள தங்கத்தை மட்டுமீறிய வகையில் பறிக்க முயலும் சைமனிடமிருந்து தங்களைக் காப்பாற்றிக்கொள்ள நம்மை நம்புகிற அதேவேளையில் நம்மை வெறுக்கவும் செய்தனர்.சில மணி நேரங்களுக்கு முன்பாக, இதே கூடாரத்தில்  பணிவாகவும், சமரசத்திற்குத் தயாரானதுபோலவும்,  அடிமைபோலவும் எனக்கெதிரில் அமர்ந்து அதேவேளையில் எனக்குள் இருந்த மேதைமை மனத்தை எப்போதும் புறக்கணிக்கும் வகையறிந்த எதிராளிகள் கூட்டத்திலிருந்து எங்கள் பக்கம் வந்த மனிதர்களைப் பற்றியும் சிந்தித்தேன்.நம்முடைய சிறந்த  உளவாளி  எலி பென் அபாயத்,உரோமுக்கு எதிரிகள் பற்றிய தகவல்களைக் கொடுப்பவராகவும் உளவாளியாகவும் அவர் இருந்தார், அதனாலேயே இருதரப்பினர் வெறுப்பிற்கும் ஆளாகியிருந்தார்; இருப்பினும், உளவாளிகள் குழுவில் மிகவும் புத்திசாலி ;முற்போக்குவாதி ;ஆனால் இதய நோயுற்ற மனிதர் ;ஒரு பக்கம் தம்முடைய மக்களிடத்தில் மிகுந்த பற்றுதல் ;இன்னொரு பக்கம் நம்மிடத்திலும் நம்முடைய இலக்கியத்திலும் இரசனையுள்ளவர் ; அவருங்கூட அடிமனதில் இஸ்ரேலுக்கு இடமளித்திருந்தார்.  சமாதானத்தைப் போதித்த ஜோஷுவா பென் கிஸ்மா, அவரும் ஏறக்குறைய ஏக்கிபா போலவே நடந்துகொண்டார் ;ஆனால் இவரிடம் முன்னவரைக் காட்டிலும் கூச்சசுபாவமும் பாசாங்கும் கூடுதலாக இருந்தன; நீண்டகாலமாக யூதர் விவகாரங்களில் எனது ஆலோசகராக இருந்தவர் ராபி ஜோஷுவாவும் ஒரு விநோதமான ஆசாமியே. இவரிடம் வளைந்துகொடுக்கும் தன்மையும், பிறர் மனம் நோகாமல் நடந்துகொள்ளும் பண்பும் இருந்தன, ஆயினும் இம்மனிதருக்கு இருமாறுபட்ட குணம் கொண்ட கூறுகளின் சந்திப்பென்பது உடன்பாட்டிற்கானதல்ல, மோதலுக்கானது.நமது பிரதேசங்கள் பலநூறு லீகுகள்(leagues) பரப்புடனும், ஆயிரக்கணக்கில் மைதானங்களுடனும், மலைகளின் விளிம்புகளையும் கடந்து பெத்தார் மலைவரைப்பரந்திருந்தது ; நம்முடைய உரோம சாம்ராச்சியத்தின் எல்லை அது. .சைமன் வெறித்தனமாக தற்கொலைக்கு முயன்ற கோட்டையின் பாரிய சுவர்களை நாம் இடித்திருக்க முடியும்; என்னசெய்வது சம்பந்தப்பட்ட இனத்தினர் கூடாதென்றபோது நம்மால் மறுக்க இயலவில்லை.

கொசுவொன்று ரீங்காரமிட்டது; யூஃபோரியனுக்கு வயதாகிக்கொண்டிருந்தது, அதன் காரணமாக  ஒருவகை சல்லாதுணியாலான மெல்லியத் திரையைச் சரியாக மூடும் விஷயத்தில் அலட்சியம் செய்திருந்தான்;தரையிற்கிடந்த புத்தகங்களும் நிலப்படங்களும் காற்றில் படபடத்தவண்ணம் கூடாரத் தடுப்பின் கீழாக நகர்ந்தன. கட்டிலில் உட்கார்ந்தவாறு,    பாதரட்சைகளை அணிந்தேன்; இருட்டில் தடவியபடி நடந்து எனது அங்கியையும்,  அரைக்கச்சுவையும், உடைவாளையும் தேடினேன்; இரவுக் காற்றைச் சுவாசிக்க வெளியே சென்றேன்.நான் இராணுவ முகாமிலிருந்த அகன்ற சீரான வீதிகளில் நடந்தேன் ; பின்னிரவில் இதுபோன்ற மணிநேரத்தில் பொதுவாக இந்தவீதிகள் வெறிச்சோடிக் கிடந்தபோதிலும், நகரங்களைப்போலவே வெளிச்சத்துடனிருக்கும் ;அன்றும் அப்படி இருந்தன; எதிர்ப்பட்ட  படைமுகாமின் காவற் துருப்புகள் பவ்யமாக வணங்கினார்கள்; மருத்துவமனையாகச் செயல்பட்ட படைவீடுகளைக் கடந்து செல்லும்போது , ​​வயிற்றுப்போக்கின் அசுத்தமான துர்நாற்றத்தை சுவாசிக்கநேரிட்டது.பகைவரிடமிருந்தும்  அணைத் தடுப்பிலிருந்தும்  எங்களைப் பிரித்திருந்த கொடும்பாறை நோக்கி நடந்தேன்; நிலவொளி ஆபத்தானமுறையயில் கோடிட்டுக் காட்டியிருந்த கோட்டைச் சுவர் சுற்றுப்பாதையில் ஓர் இராணுவப் பாராக்காரன்,  அகலக் கால் வைதது சீராக  நடந்துகொண்டிருந்தான்;  போவதும் வருவதுமாகவிருந்த அவனுடைய செயலை மிகப்பெரிய எந்திரமொன்றின் பற்சக்கரம் இயக்கம் போலவும், என்னை அதன் சுழல் அச்சாகவும் உணர்ந்தேன்; இத்தனிமை அரங்கேற்றிய நாடகமும், ஆபத்தான இச்சூழல்களுக்கிடையில், இம்மனித நெஞ்சத்தில் தீச்சுடர்போல சுருக்க உணர்ந்த கற்பனையும் என்னை நெகிழச்செய்த மறுகணம், எங்கிருந்தோ வந்த அம்பொன்று என்னை உரசிச்சென்றது,  கூடாரத்தில் சற்றுமுன்பு எனக்குக் கொசு தந்த  இடையூறுக்கும் இதற்கும் அதிக பேதமில்லை; அம்பின் தாக்குதலில் இருந்து காத்துக்கொள்ள முனைந்து,மணல் மூட்டைகளை அடுக்கி உருவாக்கபட்டிருந்த பாதுகாப்பு அரணில் சாய்ந்தேன்.

ஒருசில ஆண்டுகளாகவே என்னிடம் விசித்திரமான தீர்க்கதரிசனமும், உன்னதமான மர்மங்களும் இருக்குமென்கிற ஐயம் பலருக்கும் இருந்துவந்ததது. இதுபோன்றதொரு அபிப்ராயங்களில் பிழைகள் இருக்கலாம்;நான் அறியேன். ஆனால் ஒன்றுமட்டும் உண்மை, மலை நகரமான பேத்தார்(Bethar) சம்பந்தப்பட்ட இரவு நேரங்களில், என்னைச் சீண்டும்வகையில் பேய்களின் நடமாட்டத்தைக் கண்டதுண்டு. அங்கு வெறுமையான மலைகளின் முகட்டில் விரிந்த காட்சிகள் மாட்சிமையில்  ஜானிகுல்(Janicule)  மலைகளைக் காட்டிலும், ஜொலிப்பில் சன்னியன்(Sunnion) முகடுகளைக் காட்டிலும் மேலானவை எனக் கூறுவதற்கில்லை; இங்கிருந்து பார்க்க அதன் வெளி சரிவாக, தாழ்நிலப் பகுதியாக(nadir) என் கண்களுக்குத் தோன்றின. மனிதர்களுக்கும் பொருட்கக்கும் வழங்காத, சொல்லப்போனால் நம்முடைய விவேகிகள் கடவுள்களுக்குக்கூடக் வழங்காத நித்யத்தை ஏதென்ஸுக்கும் உரோமிற்கும் எதிர்பார்ப்பது வீணென்று நினைத்தேன்.நுட்பமும், சிக்கலுமுடைய வாழ்க்கையின்இவ்வடிவங்களும் ;கலையையும், நல்வினையையும்எவ்வித இடர்ப்பாடுகளுமின்றி எளிதாக மேம்படுத்தவல்ல இப்பண்பாடுகளும் ; தனக்கான தேவையின் அடிப்படையில் தேடவும், தீர்மானிக்கவும் மனதிற்குள்ள சுதந்திரமும் – எண்ணற்ற அரிய சந்தர்ப்பங்களையும், ஒன்றிணைக்கச் சாத்தியமற்ற சூழ்நிலைகளையும் சார்ந்திருக்கின்றன ; ஆயினும் இவற்றின் இந்த நிலை நீடிக்காது ; முடிவுக்குவரும். யூதேயா பிரச்சினைக்கு வருகிறேன், எவ்வாறேனும் சைமன் கதையை முடிக்கவேண்டும்; ஆர்மீனியாவை, ஆலன்கள் படையெடுப்பிலிருந்து எப்படிப் பாதுகாக்க வேண்டுமென்பது  அர்ரியனுக்குத்  தெரியும்.ஆனால் மீண்டும் இங்கு வேறு மனிதர்கூட்டம் வரும்;போலி தீர்க்கதரிசிகள் வருவார்கள். மனிதனின் நிலையை மேம்படுத்தும்  நமது பலவீனமான முயற்சிகளைத்தெளிவற்ற வகையில் என்றாலுங்கூட நமது வாரிசுள் தொடர்வார்கள்; மாறாக, நன்மையில் அடங்கியுள்ள பிழை மற்றும் அழிவின் விதை வருகின்ற நூற்றாண்டுகளில்  பயங்கரமாக வளர்ந்துவிடும்;  நம்மால் களைப்புறும் உலகம் வேறு எஜமானர்களைத் தேடலாம்; அவ்வுலகில் நமக்குப் கருத்தாழமிக்கதாக இருப்பது, பிறருக்கு எரிச்சலூட்டுவதாக இருக்கலாம்; நமக்கு அழகாயிருப்பது, அவர்களுக்கு அருவருப்பானதாகத் தோன்றலாம்.‘மித்ரா’ சிறு சமய வழிபாட்டுமுறை(Mithraism)த் தீட்சையில் அவ்வப்போது கடைபிடிக்கப்படும் இரத்தக் குளியலும், புதைகுழி அனுபவங்களும்  ஒட்டுமொத்த மானுத்திற்கும் தேவைப்படலாம். கடுமையான நெறிமுறைகளையும் ,  உக்கிரமான கடவுள்களையும், காட்டுமிராண்டித்தனமான ஆட்சியாளர்களின் கேள்விகேட்க ஆளில்லாத சர்வாதிகாரத்தையும், பகைநாடுகளால் நிரந்தரப் பாதுகாப்பின்மைக்குப் பலியான உலகத்தையும் எனது மனக்கண்ணில் திரும்பக் கண்டேன். நகரங்களின் கோட்டைமதில்களில் அப்போதும் பாதுகாப்புக் காவலர்கள் வலம் வருவர்;அவர்களில் அம்புகளின் அச்சுறுத்தலுக்கு ஆளானவர்களும் காவலர்களாக இருப்பர்;  முட்டாள்தனமான, ஆபாசமான, கொடூரமான விளையாட்டுகள் வழக்கம்போல தொடரும் ;வயது கூடிக்கொண்டுபோகிறபோது உயிரினங்கள் ஐய்யத்திற்கிடமின்றித் தம்மை மேம்படுத்திக்கொள்கிறேன் என்ற பெயரில் புதியவகைக் கொடூரங்களைத் தத்தெடுக்கும். நமது சகாப்தத்தின் அதீத குறைபாடுகளையும், போதாமைகளையும் பிறரைக்காட்டிலும் கூடுதலாக அறிவேன், இருந்தும் வருங்காலத்தில் ஒருநாள் நம்முடைய இக்காலக் கட்டத்தை மானுடத்தின் பொற்காலமெனக் கருத வாய்ப்புண்டு.

« Natura deficit;fortuna mutatur ;deus omnia cernit. » – « இயற்கை கைவிட்டுவிட்டது ;அதிர்ஷ்டமும் நமக்கு நிரந்தரமில்லை ;மேலிருந்து கடவுள் எல்லாவற்றையும் பார்த்து கொண்டிருக்கிறார். » எனது கைவிரலில் போட்டிருந்த மோதிரத்தின் முகப்பைச் சீண்டிக்கொண்டிருந்தேன்.கசப்பான நாளொன்றில் சோகமான சிலவார்த்தைகளை அதில் பொறித்திருந்தேன்; மாயைகளிலிருந்து விடுவித்துக்கொண்டு வெகுதூரம் வந்திருந்தேன் ; பதிலாக,  இதனைத்தெய்வநம்பிக்கை குறித்த நிந்தனைகளில் வெகுதூரம் சென்றதாக எடுத்துக்கொள்ளலாம். மனிதர் அழிவென்பது இயற்கையானது; அது நியாயமும் கூட என்பதை  இறுதியில் உணரவும் ஆரம்பித்திருந்தேன். நம்முடைய இலக்கியங்கள் கடுஞ்சோர்வுக்கு ஆளாகி இருக்கின்றன; கலைகள் உறக்கத்தில் ஆழ்ந்துள்ளன; பான்கிரேட்ஸ்(Pancrates) ஹோமர் ஆகமுடியாது; அதுபோல நம்முடைய அர்ரியன், தத்துவவாதி செனபோன்(Xénophon) அல்ல; ஆண்ட்டினூஸைக் கல்லில்  வடித்து என்றென்றும் சிரஞ்சீவியாக வைத்திருக்க நான் முனைந்தபோது, சிற்பி பிராக்ஸிடேலிஸ்(Praxiteles) கூடக் கைகொடுக்கமுன்வரவில்லை. அரிஸ்டாட்டில், ஆர்க்கிமிடீஸுக்குப்பிறகு நமது அறிவியலில் எவ்வித முன்னேற்றமுமில்லை; அவ்வாறே, நம்முடைய  தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு ஒரு நீண்டகாலப்போரின் பாதிப்பை எதிர்கொள்ள சக்தி இன்றில்லை; நம்முடைய இன்பவிரும்பிகளுக்கு, தற்போது மகிழ்ச்சி கசக்கிறது. ஒழுக்கநெறிகளை எளிமைபடுத்துதலும், சிந்தனைகளில்  முன்னேற்றமும், கடந்தநூற்றாண்டில் நல்லெண்ணங்கொண்ட  சிறுபான்மையினரின் பணியாக இருந்துள்ளது;  இன்றைக்கும் வெகுசனமென்பது அறியாமையில் உழலும் மக்கள்;முடிந்தபோது தங்கள் கடுஞ்சினத்தை வெளிப்படுத்துகிறார்கள் என்றாலும் சுயநலத்துடனும், குறுகிய மனப்பான்மையுடனும் இருக்கிறாகள் ; அவர்கள் ஒருபோதும் மாறமாட்டார்கள் எனத் துணிந்து பந்தயம் கட்டலாம். பெரும்பாலான பேராசைகொண்ட  மாகாண நிதித்துறை செயலர்கள், மற்றும் நிர்வாகிகளாலும், பொதுப்பணி ஒப்பந்ததாரர்களாலும், சந்தேகத்திற்குரிய செனெட்டர்களாலும், இராணுவ சதயர்களாலும்(Centurians) ஆக்கபூர்வமான  நம்முடைய பணிகள் பல இடையூறுகளைச் சந்திக்கின்றன;  தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொள்ளும் நேரம் மனிதர்களுக்கு அதிகம்;மாறாக  பேரரசுகளுக்குக் குறைவு.  ஒரு நெசவாளி, நெய்யும் ஆடையில் இழை அறுந்தால், அதை சரிசெய்ய முனைகிறார் ;ஒரு திறமையான கணக்கர் தவற்றைக் கண்டுபிடித்து திருத்த முற்படுகிறார் ;ஓர் ஓவியர் தம்முடைய தலைசிறந்த படைப்பு மிகச் சிறிய அளவில் சேதமுற்றிருந்தாலும் அல்லது ஒழுங்கின்றி இருந்தாலும் தூரிகைகொண்டு குறையை நிவர்த்தி செய்து படைப்பை மீட்டெடுக்க முயற்சிக்கிறார்; ஆனால் இயற்கையில் என்ன நடக்கிறது?  முறையாக உபயோகிக்கத் தவறி வீணடித்த பின்பும், பேரிடரைச் சந்தித்ததற்குப் பிறகும், குறுக்கிட்ட இடர் குறித்த கவலையின்றி எந்த மண்ணில் தொடங்கியதோ அதே மண்ணில் இயற்கை தன் பணியைத்  தொடருகிறது ;அதைத்தான் இயற்கையின் ஒழுங்கு அல்லது நியதி என்கிறோம். நான் தலையை உயர்த்தினேன்; என்னை உயிர்ப்பிக்கக கண்விழித்து நெட்டுயிர்த்தேன். சைமனுடைய  கோட்டைக்கு மேல், எதிரியின் பின்னிரவு வாழ்க்கையின் விவரிக்கவியலாத காட்சிகள் அங்கு ஒளி அலைகளாக  வானத்தைச் சிவக்க வைத்திருந்தது. எகிப்து பக்கமிருந்து  சுழன்று வீசிக் கடந்து சென்ற புழுதிக்காற்று, பார்க்க ஒரு பேய்போல இருந்தது. விளிம்புகள் சிதைந்த மலைகள் நிலவொளியில் அரேபிய  மலைத்தொடரை நினைவூட்டின. மேலங்கியின் நுனியை வாயிற் கவ்வி இழுத்தபடி மெல்ல அறைக்குள் நுழைந்தேன் ;அடுத்த நாளுக்கு ஆகவேண்டியதைக் குறித்து யோசிக்க  அல்லது உறங்க இரவைப் பயன்படுத்தி இருக்கவேண்டும் ; பதிலாக பொருளற்ற எதிர்காலத்தைப் பற்றிய தியானத்தில் இரவைக் கழித்ததற்காக எரிச்சலுற்றேன்.உரோம் நகரின் சரிவு, அப்படியொன்று நிகழ்ந்தால், எனக்குப்பின் அரசாள்பவர்களை அது கவலைகொள்ளச் செய்யும்; உரோமானிய சகாப்தத்தின்படி,  எண்ணூற்றி எண்பத்தேழாம் வருடம் என்பது, யூதேயர்களின் கலகத்தை முற்றாக ஒடுக்கி, நோயில் வாடும் எனது படையினரைச் சேதமின்றி கீழைத் தேயத்திலிருந்து திரும்ப அழைத்துவரும் பணிக்குரியதாகும்.   கோட்டைவெளியை கடக்கிறபோதெல்லாம் முதல் நாள் சிரச்சேதம் செய்யபட்ட கலகக்காரனின் இரத்தத்தில் சில நேரங்களில் வழுக்கி விழ நேரும்.    ஆடையைக் களையாமல் அன்றிரவு உறங்கினேன் ; இரண்டு மணி நேரம் கழித்து, விடியல்  எக்காளங்கள் சத்தமிட,  கண் விழித்தேன்.

தொடரும்……

அதிரியன் நினைவுகள்

காட்டுப்பன்றி இலச்சினையை நாட்டுப் பன்றியெனத் தவறாகப் புரிந்துகொண்டு… அதிரியன் நினைவுகள் – 37

Discover more from சொல்வனம் | இதழ் 365 | 26 ஏப். 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.