அதிரியன் நினைவுகள் – 44

This entry is part 43 of 48 in the series அதிரியன் நினைவுகள்

மூலம் : மார்கெரித் யூர்செனார்

தமிழாக்கம் :  நா.கிருஷ்ணா

சர்மைஸ்செத்தூஸா(Sarmizegéthuse) நகருக்குத்  தனது புதிய பதவியை  ஏற்பதற்காக ஆண்ட்டினோபோலீஸ் ஆளுனர் ஃபைடஸ் அக்விலாவை(Fidus Aquila) சென்றுகொண்டிருந்தார் ; அவரை வழியில் திரும்பச் சந்தித்தேன். இறந்த ஆண்ட்டினூஸ் இன்று கடவுள் ; அவன் நினைவாக நைல் நதிக்கரையில் கொண்டாடப்படும் வருடாந்திரச் சடங்குகளைப் பற்றியும், அவ்விழாவிற்கு  வருகைதரும்  வடக்கு மற்றும் தெற்குப் பிராந்திய ஆயிரக்கணக்கான பக்தர்களைப் பற்றியும், வந்தவர்கள் மது மற்றும் தானியங்களைக் காணிக்கையாகச் செலுத்துதல், அவர்களுடைய  பிரார்த்தனைகள் ஆகியவற்றைப் பற்றியெல்லாம்  என்னிடம் அவர் விவரித்தார். மூன்று வருடங்களுக்கு ஒருமுறை அவனுடைய பிறந்தநாள்ளை முன்னிட்டு விளையாட்டுகள் ஆண்ட்டினோபோலீஸ் நகரிலும், அலெக்ஸாந்திரியா, மாண்ட்டினேயா போன்ற நகரிலும், ஏன் எனக்கு மிகவும் பிடித்தமான ஏதன்ஸ்நகரிலும் கூட நடத்துவதுண்டு. மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை வரும் இவ்விழாக்கள், இந்த இலையுதிர்காலத்தில் நடக்கவிருக்கின்றன, ஆனால் அது ஒன்பதாவது முறையாகப் பிறக்கவிருக்கிற அதிர்(Athyr) மாதம்வரை நீடிப்பதற்கு வாய்ப்பில்லை. விழாக்களின் ஒவ்வொரு விவரமும் முன்கூட்டியே திட்டமிடப்படவேண்டியது மிகவும் முக்கியம். இறந்தவன் ஞாபகார்த்தமாகக் குறிசொல்லுதலுண்டு ; அந்நிகழ்வு நான் மிகவும் அக்கறையோடு உருவாக்கிய பிரமாண்டமான ஆலயத்தின் இரகசிய அறையில் நடைபெறும்.  நம்பிக்கையின் அடிப்படையில் அல்லது தங்கள் கவலைக்குத் விடிவுகாண மனிதர்கள் கேட்கும்  எல்லாவிதமான கேள்விகளுக்கும் தயாரிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான பதில்களை ஒவ்வொரு நாளும் ஆலய குருக்கள் வினியோகிப்பர்.  அவற்றில் பலவற்றை நானே எழுதியதாக விமர்சனமுண்டு. அதில் உண்மையும் இருக்கலாம்; அதற்காக எனது போற்றுதலுக்குரிய ஆண்ட்டினூஸ் கடவுளிடத்தில் எனக்கு மரியாதை இல்லையென்றோ, அல்லது பாலஸ்தீன படையெடுப்புத் துருப்புகளில்  ஒரு போர்வீரனாக சென்றுள்ள தனது கணவன் உயிருடன் திரும்புவானா எனக் கேட்கிற மனைவி, ஆறுதலைத் தேடி ஆண்ட்டினூஸ் ஆலயத்திற்கு வரும் நோயாளி,  செங்கடலில் பயணிக்கும் தனது சரக்குக் கப்பல்களை பற்றிய கவலையில் ஆழ்ந்திருக்கும் வியாபாரி,  தங்களுக்குக் குழந்தைவேண்டி வருகிற தம்பதிகள் ஆகியோரிடம் எனக்கு இரக்கமில்லையென்றோ பொருள்கொள்ளக்கூடாது. முடிவில் அதொருவகையான வார்த்தை விளையாட்டு ; ஒருவலையான கவிதைப் புதிர் ; அவ்விளையாட்டில் சிற்சில சமயங்களில் நாங்கள் எல்லோரும் பங்குபெற்றோம். அவ்வாறே இங்கு வில்லாவில் கெனோப்பஸ்(Canopus) ஆலயத்தைச் சுற்றிலும் எகிப்திய வழிப்பாட்டுமுறையில் ஆண்ட்டினூஸைக் கொண்டாடுவது பலரையும் வியப்பில் ஆழ்த்தும் விவகாரம். அலெக்ஸாந்திரியாவின் புறநகர்ப் பகுதிகளில் அவனுடைய பெயரில் பல  இன்பக் கூடங்களை அமைத்திருக்கிறேன், அங்கு வருகைபுரியும் விருந்தினர்களுக்கு வேண்டிய வசதிகளையும்  பொழுதுபோக்குகளையும் செய்து தருகிறேன் ; சிற்சில வேளைகளில் அவர்களுடன் நானும் பங்கேற்க நேரும். இறந்த ஆண்ட்டினூஸும் இதுபோன்ற சூழலுக்குப் பழகியவன். எனக்கும் நடைமுறை வாழ்க்கையின் செயல்பாடுகளில் படிப்படியாக நம்மை ஈடுபடுத்திக்கொள்வதைவிட்டு, ஆண்டுகள் பலவாக ஒற்றைச் சிந்தனையில் நம்மைச் சிறைவைத்திருப்பது ஒருபோதும் நல்லதல்ல எனப்பட்டது.

எனவே எனக்குப் பரிந்துரைக்கப்பட்ட அனைத்தையும் செய்தேன். காத்திருந்தேன் ;  சில நேரங்களில் பிரார்த்தனையும்  செய்தேன். அசரீரி குரல் கேட்டது(Audivi voces divinas)... கவிதாயிணி ஜூலியா பல்பில்லா(Julia Balbilla) விடியற்காலையில் மெம்னோனுடைய(Memnon) மர்மமான குரலைத்  தான் கேட்டதாக முட்டாள்தனமாக நினைத்தாள். நானோ, இரவின் சலசலப்புகளைக் கேட்டேன். ஆவிகளை ஈர்க்கும் குணமுடைய தேனையும் பன்னீரையும் ஒன்றுகலந்து தேகமெங்கும் பூசிக்கொண்டேன். ஓர் உயிரியின் இருத்தலுக்கு அவசியமென்கிற வகையில் கைவசம் ஒரு கிண்ணம் பால், ஒரு பிடி உப்பு , ஒரு துளி இரத்தம் ஆகியவை இருந்தன. ஆண்ட்டினூஸ் ஆலயத்தின் சிறிய கருவறையின் பளிங்கு தரையில் என்னைக் கிடத்திக் கொண்டேன். நட்சத்திரங்களின் ஒளி, சுவரில் உள்ள விரிசல்களின் வழியாக ஊடுறுவி, அங்கும் இங்குமாக அச்சமூட்டும்வகையில்  வெளிறிய ஒளித் துணுக்குகளாகக் கிடந்தன. அவனைச் சவமாகக் கிடத்தியிருந்தபோது, சமயக் குருக்கள் தங்கள் கட்டளையை அவன் காதில்  முணுமுணுத்ததும்,  கல்லறையில், அதுவரையினாலான பாதையைப் பொறித்திருந்ததும் ஞாபகத்திற்கு  வந்தன. எனவே அவனுடைய ஆவிக்குக் கல்லறையிலிருந்து இங்கு வருவதற்கு வழி தெரியும். வாயிற்காப்போரும் பிரவேசிக்க அனுமதிப்பார்கள்பல ஆயிரம் நாட்கள் யாரெல்லாம் அவனை நேசித்தார்களோ அவர்களைத் தேடி, அவன் வருவதும் போவதுமாக இருப்பான். .சில நேரங்களில், நீண்ட இடைவெளிக்குப் பிறகு, யாரோ என்னை நெருங்குவதுபோலவும், கண்ணிமைகளின் தொடல்போன்ற இலேசான தீண்டலையும், அதில் உள்ளங்கை வெதுவெதுப்பையும் உணர்ந்திருக்கிறேன். பட்ரோகிளாஸ் ஆவியை அக்கீலியஸ் அருகில் பார்க்க முடிந்தது…. தனிமைக்கும், இரவுநேரக் குளிருக்கும் எதிராகப் போராடும் ஒருமனிதனின் கடைசி முயற்சியாக எனதுடலின் ஆழ்பரப்பிலிருந்து இந்த வெதுவெதுப்பும் மென்மையும் வெறுமனே வெளிப்படாமல் இருந்திருந்தால் இந்த உண்மையை ஒருபோதும் அறிந்திருக்க மாட்டேனோ ?. காதல் உயிர்ப்புடன் இருந்த நாட்களில் எழுந்த இதுபோன்ற வினாக்களிடம் அப்போது ஆர்வம் இருந்தது ; இன்றில்லை ;  காரணம், அழைக்கும் ஆவிகள் என் நினைவின் பாதாளத்திலிருந்து வருகின்றனவா அல்லது வேறு உலகத்திலிருந்தா என்பதுபற்றிய கவலைகள் எனக்கில்லை. ஆவிகளைப் போலவே என்னுடைய  ஆத்மாவும், (அப்படியொன்று எனக்கும்  உண்டெனில்), ஆவிகள், பேய்கள் உருவாக்கப்பட்ட அதே பொருளைக்கொண்டு செய்யப்பட்டிருக்கவேண்டும். ஊதிப் பெருத்ததுபோலிருக்கும் அதன் கைகள் ; வெளுத்திருக்கும் நகங்கள் ; பாதி கரைந்ததுபோன்ற அதன் தோற்றம் ; வலிகள், ஆசைகள், கனவுகள் என்ற்டங்கிய இப்பொதியாகிய ஆவி,  திடத்திலும் தெளிவிலும் ஒரு நிழலைக் காட்டிலும் மேலானது. பிணங்களுக்குக் கூடுதலாக மூச்சை அடக்கும் திறனுண்டு என்கிற வகையில் மட்டுமே அவற்றை உயிருடன் இருக்கும் மனிதர்களிடமிருந்து வேறுபடுத்திப் பார்க்கிறேன் ;  மரணித்த மனிதர்களின் இருப்பு உயிருடனிருக்கும் என்னைக்காட்டிலும் அதிகமாக உறுதிப்படுத்தபட்டுள்ளன. அவ்வகையில்  ஆண்ட்டினூஸும் புளோட்டினாவும் இறந்திருந்தாலும் ஒருவகையில் என்னைப்போல உயிருள்ள நிஜமனிதர்கள். 

மரணம் குறித்த தியானம் அல்லது சிந்தனை இறப்பதற்கான  வழிமுறைகளைப் போதிப்பதில்லை. உடலைவிட்டு உயிரை வெளியேற்றுவதை அது சுலபமாக்காது ;  நான் தேடுவது அத்தகைய சுலபமான வழிமுறையுமல்ல ;   அன்பிற்குரிய ஆண்ட்டினூஸ், பிடிவாதமும் எளிதில் குறைகாணும் குணமும் கொண்டவனே !  உன்னை நீ காணிக்கையாக அளித்தது எனது உயிர்வாழ்க்கையை நீட்டிக்க அல்ல, எனது மரணத்தை மேம்படுத்த. என்னை நெருங்கிவரும் மரணம் நம் இருவர்க்கிடையில் ஒருவித நெருக்கமான அன்யோன்யத்தை கட்டமைத்திருக்கிறது. என்னைச் சூழ்ந்துள்ள மனிதர்களும்; சிலவேளைகளில் மனக்கசப்பை அளித்தபோதிலும் என்னிடம் அர்ப்பணிப்புடன் பணியாற்றும் ஊழியர்கள்கூட,  இவ்வுலகம் எந்த அளவிற்கு நம்மிருவருக்கும் வேண்டாததாக இருக்கிறதென்பதை ஒருபோதும் அறியப் போவதில்லை. காய்ந்த வண்டு, விறைப்புடனிருக்கும் பதப்படுத்திய சவம், ஓயாமல் தலைப்பிரட்டைகளை ஈனும் தவளை போன்ற துயர் தரும் எகிப்தியக் கல்லறைச் சின்னங்களை நினைத்துப் பார்க்கிறபோது என்னிடம் வெறுப்பே மேலோங்குகிறது. சமயக் குருக்களின் வார்த்தைகளுக்கு இணங்கி,   நைந்துபோன ஆடையைப் போல  மனித உயிர்க் கூறுகள் கிழிந்து சின்னாபின்னமாகும் இந்த இடத்தில், நிலைபேறுடையதும், அழிவற்றதும், வரவிருப்பதும் உறைகிற இச்சதுக்கத்தில் உன்னை நான் விட்டுச்  சென்றேன். அனைத்துக்கும் மேலாக, இப்பகுதி மக்களின் நம்பிக்கையும் சரியானதே,   மரணமும் உயிர் வாழ்க்கையைப் போலவே மழுப்பலான மற்றும் குழப்பமான பொருளால் உருவானது. ஆனால் இறவாமை பற்றிய எந்தவொரு கோட்பாட்டிடமும் எனக்கு நம்பிக்கை இல்லை. ஏற்கனவே தீர்ப்பளிப்பதிலுள்ள சங்கடத்தை நன்குணர்ந்த இந்த நியாதிபதியை நடைமுறையிலுள்ள வெகுமதிகளும் தண்டனைகளும் உணர்ச்சிகளுக்கு இடம்கொடுப்பதற்குத் தடைபோட்டுள்ளன.. இன்னொரு புறம்,  சில சமயங்களில் எளிதான மாற்றுத் தீர்வையும் காண்கிறேன் ; அம்மாற்றுத் தீர்வு முழுமையானதொரு சூன்யம் ; எபிகியூரஸ் சிரிப்பு மட்டுமே ஒலிக்கிற உள்ளீடற்ற ஒரு வெற்றிடம்.

எனது கவனம் தற்போது உயிர் வாழ்க்கையின் முடிவின் மீது உள்ளது. எனக்கு நானே மேற்கொண்ட இத்தொடர் சோதனைகள் ஒரு நீண்ட ஆய்வாகச் சட்டையரஸ் மருத்துவமனையில் ஆரம்பிக்கப்பட்டுத்  தொடர்கிறது. இதுவரை ஏற்பட்டுள்ள பாதிப்பு அனைத்துமே,  காலமும் மோசமான வானிலையும் ஒரு  நினைவுச்சின்னத்தின் வடிமைப்பிலோ கட்டமைப்புப் பொருட்களிலோ மாற்றத்தை ஏற்படுத்தாது ; வெளிப்புறத்தில் மட்டும் தாக்கத்தை ஏற்படுத்துவதைப்போல, என்னுடைய உடலுக்கு வெளியில் தான் மாற்றம் நிகழ்ந்துள்ளது. அதனை சில சமயங்களில் வெடிப்புகள், பிளவுகள், சேதம் ஏதுமற்ற அடித்தளம், நித்யமாக இருக்கக்கூடிய கற்கள் ஆகியவற்றில் பார்வையால் அறிந்திருக்கிறேன், அவற்றைக் கைகளால் தொட்டுணர்ந்திருக்கிறேன். நான் என்னவாக இருந்தேனோ அதுவாகவே இருக்கிறேன், மாறுதலுக்கு உடபடாமல்  இறந்து கொண்டிருக்கிறேன். ஸ்பெய்ன் தோட்டத்தில் விளையாடி வளர்ந்த பலசாலியான இக்குழந்தை, பின்னர் இராணுவக் கூடாரங்களில் குனிந்து உள்ளே நுழைந்து, தோள்களைக் குலுக்கி, ஒட்டிக் கிடக்கும் பனித் துகள்களை உதறிக் களையும் இலட்சியமிக்க இராணுவ அதிகாரியாக உயர்ந்து, நாளை தீக்கிரையாகிறபோது, முதற்பார்வைக்கு,   முற்றிலும் சேதமுற்றதொரு உடலாகவே தோன்றுவேன், ஆனால் உண்மையில் எனதுடலுக்குள்  எவ்விதச் சேதமும் இல்லை ; உடற் பாகங்கள் அனைத்தும் நன்றாக உள்ளன, அவற்றிலிருந்து என்னைப் பிரிக்க முடியாது. ஓரளவிற்கு மனிதர்களிடம் காணும் அமைதிப் பண்பிலிருந்து நான் விலக்கப்பட்டவனும் அல்ல ; இருந்தும் என்னுள்  ஒரு பகுதியில் பிணத்தின் மார்பில் விழுந்து கதறி அழத் தொடங்கிய மனிதன் இன்னமும் தனது புலம்பலை நிறுத்தவில்லை. நிரந்தரமாக நோயாளிக்குள் அடைந்துகிடக்கும் பயணி மரணத்தில் ஆர்வம் காட்டுகிறார்;  ஏனெனில் அது புறப்பாட்டின் குறியீடு. என்னிடம் ஒருகாலத்தில் குடியிருந்த சக்திக்கு  இன்றைக்கும் எண்ணற்ற பிற உயிர்களை இயக்கவும், உலகமக்களைத் திரண்டெழச்  செய்யவும் இயலும் என்பதுபோலத் தோன்றுகிறது. நான் அதிக நாட்கள் உயிர்வாழப்போவதில்லை என்பதுதான் நிலைமை ; அதிசயமாக ஒரு சில நூற்றாண்டுகள் என் ஆயுளில் சேர்க்கப்பட்டாலுங்கூட இதுநாள் வரை செய்ததைத்தான் செய்யப்போகிறேன் ; தவறுகளும் இதில் அடக்கம்; பின்னர் ஒலிம்பியட் மலை,  இறந்தோரின் பாதாள உலகமென்று வலம் வருவேன் ; இத்தகைய அவதானிப்பு மரணத்தின் பயன்பாட்டினைப் புரிந்துகொள்வதற்கு ஆதரவான சிறந்ததொரு வாதம் ; ஆனால் அதே நேரத்தில் அதன் மொத்தச் செயல்திறன் குறித்துப் பல கேள்விகளை எழுப்புகிறது.

என் வாழ்க்கையின் சில காலகட்டங்களில்,  நான் என் கனவுகளைப்பற்றி எழுதிவைப்பதுண்டு.பின்னர் அக்கனவுகளின் பொருளை விளங்கிக்கொள்ள மதக் குருமார்கள், தத்துவவாதிகள், ஜோதிடர்கள் ஆகியோரிடம் விவாதித்திருக்கிறேன். கனவுகாணும் சக்தியைப் பல ஆண்டுகளாக வெகுவாக இழந்திருந்தேன், நோயில்வாடும் சில மாதங்களாகத்தான் மீண்டும் அதனைத் திரும்பப்பெற்றேன். விழித்திருக்குபோது நடக்கும் சம்பவங்களில் உண்மை குறைவு, சில சமயங்களில் கனவுகளினும் பார்க்க, அவற்றில் இடையூறும் குறைவு. இப்பூமியைக் காட்டிலும் அபத்தமும், அர்த்தமின்மையும் அதிகம் பல்கிப்பெருகும் ஆவி மற்றும் புழுக்கள்  நெளியும் உலகம் ; உடலிலிருந்து பிரிந்த ஆத்மாக்களின் உண்மை நிலைமையென்ன  என்பதைப் பற்றியதொரு கருத்தை நமக்கு அது வழங்க முன்வருவதில்லை ; அவ்வாறு வருமெனில், புலன்களின் துல்லியமான கட்டுப்பாட்டிற்காகவும், மனிதப் பகுத்தறிவின் கண்ணோட்டத்திற்காகவும் ஐயத்திற்கிடமின்றி எனது காலம் முழுக்க மனம் வருந்த நேர்ந்திருக்கும். 

இருந்தபோதிலும், என்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டு பொய்யான கனவுலகில் திரும்பப் பிரவேசிப்பதை  நான் வழக்கமாக்கிக் கொண்டிருக்கிறேன். கனவுகள்தோறும் ஒரு சில கணங்கள் சில இரகசியங்கள் எனக்குச் சொந்தமானவை. ஆம், நான் தெரிவிப்பதைப் போலச் சில கணங்கள் மட்டுமே சொந்தம் ; பின்னர் அவை என்னிடமிருந்து தப்பிவிடும். இக்கனவுகளில் அள்ளிப்பருகும் வாய்ப்புகளும் எனக்குண்டு.  இதுபோன்றதொரு கனவில் ஒருமுறை வனவிலங்குகளின் வேட்டையை முடித்த மாலைநேரத்தில் எனது குதிரையுடன் ஏமன் (Ammon) பசுஞ்சோலையில் இருந்தேன்.  மகிழ்ச்சியில் திளைத்திருந்தேன். ஆரோக்கியமாக இருந்தபோது என்ன நடக்குமோ அப்படித்தான் சம்பவங்கள் நடந்தன ; சிங்கமொன்றை வீழ்த்தியிருந்தேன் ; காயமுற்ற சிங்கம் எழுந்து நின்றது, உரிய சமயத்தில் கொல்ல முயற்சித்து  விலங்கை நெருங்கினேன். ஆனால் இம்முறை எனது குதிரை பதற்றத்துடன் கால்களைப் பின்னெடுத்துவைக்க, நான் தரையில் எறியப்பட்டேன். பயங்கரமான இரத்தக் களரியுடன் விலங்கு என் மீது பாய்ந்தது; அதன் கூர்நகங்கள் எனது மார்பைக் கிழித்தன. பிறர் உதவியின்றி தனித்த ஆளாக, உதவி கேட்டுச் சத்தமிட்டபடித் தீபுரிலுள்ள என்னுடைய அறைக்குத் திரும்புகிறேன். பிறகு இன்னொரு கனவு ; இது அண்மையில் கண்டது, நான் எப்போதாவது நினைத்துப் பார்க்கிற  என் தந்தையைத் திரும்பக் கண்டேன்.  அவர் எங்களுடைய இத்தாலிகா (ஸ்பெய்ன்) வீட்டில் ஓர் அறையில் தன்னுடைய நோயாளிக் கட்டிலில் படுத்திருந்தார் ; இவ்வளவிற்கும் அந்த வீட்டைவிட்டு அவர் இறப்பிற்குப் பிறகு வெளியேறி இருந்தேன். அவருடைய கட்டிலருகே இருந்த மேசையில் வலியிலிருந்து விடுவித்து நித்திரையளிக்கும் ஒரு சிறு திரவ மருந்துக் குப்பியொன்று இருந்தது. அக்குப்பியை எனக்குக் கொடுக்குமாறு கெஞ்சினேன்.  அவருக்குப் பதில் சொல்லக் கூட நேரமில்லை ;  நான் கண்விழித்திருந்தேன். தங்கள் கனவில் இறந்தவர்களுடன் பேசுவதற்கு  வெகு எளிதில் இணங்கும் பெரும்பாலான ஆண்கள் ஆவிகள், பேய்கள் விஷயத்தில் இத்தனை பயம் கொண்டிருப்பது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.

நிமித்தங்களின்  எண்ணிக்கை பெருகி வருகினறன. தற்போதெல்லாம் அனைத்துமே ஏதோவொருவகையில் சகுனமாகவும், வருவதை உரைக்கும் குறியீடாகவும் எனக்குத் தோன்றுகின்றன. சற்று முன்பு, மோதிரம் ஒன்று கைதவறி விழுந்ததில்  அதில் பதித்திருந்த விலையுயர்ந்த கல் உடைந்தது, அக்கல்லில் கிரேக்கக் கைவினைஞர் ஒருவர் எனது உருவத்தைப்  பொறித்திருந்தார்.   இதுபோன்ற சகுனங்கள் எனக்குக் கலக்கத்தை அளிக்கின்றன. உடைந்த அந்த உன்னதமான படைப்பிற்காக வருந்தவும் செய்கிறேன். சில நேரங்களில் வேறு விஷயங்களைப் பேசுகிறபோது, நடந்த சம்பவங்களை எனது சமபவங்களாகக் கருதிப் பேசுகிறேன்.செனெட் அவையில் லூசியஸ் மரணத்திற்குப் பிறகு ஏற்பட்ட நிகழ்வுகளைக் குறித்து விவாதிக்கையில், நாக்குப் பிறழ்ந்து அனேக தடவைகள் நடந்தவற்றை  என்னுடைய சொந்த மரணத்திற்குப்பின் நிகழ்ந்தவையாகச்  சொல்ல நேர்ந்தது. சில மாதங்களுக்கு முன்பு, எனது பிறந்தநாளில் கப்பித்தோலியம்(Capitole) மலைப் படிகளில்  பல்லக்கில் ஏறிச் சென்றபோது  தன் உறவை இழந்து துக்கத்திலிருந்த ஒரு மனிதனை நேருக்கு நேர் சந்தித்தேன், அவன் முகம் என்னுடைய வயதான ஷப்ரியாஸ் முகம்போல இருந்தது. அப்போதெல்லாம் அடிக்கடி நான் வெளியிற் செல்வதுண்டு. அப்போது உரோமானிய தொன்ம மத வழக்குப்படிப் பிரதான மதக் குருவின் (Grand Pontif) கடமையையும் அர்வல் சகோதரர் (Frère Arvale) சமயக் கடமையையும் பிறரைச் செய்ய அனுமதிக்காமல் நானே செய்ய ஆரம்பித்து, இறுதியில் பின்னாட்களில் பெரும்பாலான அந்நியச் சமயச் சடங்குகளிலும் ஆர்வம்கொண்டேன். நான் பலிபீடத்தின் முன் நின்று, சுடர் ஏற்றத் தயாராக இருந்தேன்; ஆண்ட்டினூஸுக்காகத் தெய்வங்களுக்குப் பலியும் கொடுத்தேன். அப்படிப் பலிகொடுத்த அன்று எனது தலையையும் நெற்றியையும் மறைத்திருந்த துணி திடீரென்று நழுவித் தோளில் விழுந்தது ; அதன்காரணமாக வெறுந்தலையுடன் நின்றேன். அதனால் பலிகொடுக்க வந்தவனாக அன்றி, நானே பலியாக மாறியதைப் போன்றதொரு நிலைமை. உண்மையும் அதுதான் ; இன்று என்னை  காணிக்கையாகத் தரவேண்டிய நேரம் வந்திருக்கிறது.   

தொடரும்….

அதிரியன் நினைவுகள்

அதிரியன் நினைவுகள் – 43 அதிரியன் நினைவுகள் – 45

Discover more from சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.