“அதிரியன் நினைவுகள்” –  குறிப்புகள்

This entry is part 47 of 48 in the series அதிரியன் நினைவுகள்

மூலம் :  மார்கெரித் யூர்செனார்

தமிழாக்கம் : நா.கிருஷ்ணா

அவனுக்கு ஹெகுபா யார்? முதல் நாள் புதைத்திருந்த தன் சொந்த தந்தையிடம் தம்மால் ஏற்படுத்திக்கொள்ள முடியாததொரு ஆழமானதொரு பந்தத்தை  மூவாயிரம்  ஆண்டுகளுக்கு முன்பு மரணித்த அரசி ஹெகூபாவிடம் நடிகன் ஏற்படுத்திக்கொள்ள முடிந்து அதில் வெற்றி பெற்றிருப்பதைக் கண்டு நடிகன்  முன்னிலையில் தனக்குத் தானே இப்படியொரு வினாவை ஹேம்லெட் எழுப்புகிறான். ஆனால் அக்கேள்விக்கான பதில் அவனுக்கு முக்கியம்; ஆனால்  தனது எதிரியை விரைவாகப் பழிவாங்கும் அளவிற்குத், தனது துர்பாக்கிய நிலைமையை ஹேம்லெட் முழுமையாக உணரத் தவறியிருந்தான்.


சக்கரவர்த்தி அதிரியனின் எதிர்காலத்தைப் பற்றிய  கணிப்புகளாக நான்  எழுதியவை அத்தனையும் தெளிவானவை எனச் சொல்லவியலாது; இருந்தபோதிலும் நம்பகத்தன்மைக்குரிய எல்லைக்குள் இருந்தேன். மனிதவிவகாரங்களில் பாரபட்சமற்ற பகுப்பாய்வு இழைக்கும் தவறுகள், பொதுவாகவே சம்பவங்கள் ஒரே சீராகத் தொடரும்பொழுது, மிகவும் குறைவு.     இதற்கு நேர்மாறாக ஊகங்களின் அடிப்படையில் சம்பவங்கள் நடைபெறுவதற்கு முன்னதாக எப்படி, எவ்வாறென  விவரங்கள் மற்றும் திருப்பங்களைச் சொல்ல முனைகிறபோது தவறுகள் அதிகரிக்கின்றன. தனது மரணத்திற்கு ஒரு நூற்றாண்டிற்குப் பிறகு ஐரோப்பா ஒன்று புரட்சிகரமானதாக இருக்கும்  அல்லது  காசாக்ஸ் ஆக மாறியிருக்கும் என நெப்போலியன், செயிண்ட் ஹெலினாவில் இருந்தபோது தெரிவித்ததை இங்கே நினைவு கூர்வது அவசியம்.   அவர் பிரச்சினையின் இரு பக்கங்களுக்கும் தமது கூற்றில் இடமளித்திருந்தார். ஊகமென்கிறபோதும், ஒன்றை மற்றொன்றிற்கு மேல் வைத்து அவரால் கற்பனை செய்துபார்க்க முடியவில்லை. ஆனால், மொத்தத்தில், கர்வத்தினாலும், அறியாமையினாலும், கோழைத்தனத்தினாலும், பிறக்கப்போகும் சகாப்தங்களின் சிறப்புக்கூறுகளை  நிகழ்காலத்தில் பார்க்க மறுக்கிறோம். பண்டைக் காலத்தில் சுதந்திரமாக செயல்பட்ட   ஞானிகள்  இயற்பியல் விடயத்திலும் சரி உடற்கூற்றிலும்  சரி நம்மைப்போலவே சிந்தித்தவர்கள்.  மானுடத்தின் இறுதி மூச்சையும் , இப்புவியின் முடிவையும் எதிர்பார்த்தவர்கள். புளூட்டாக், மார்கஸ் அரேலியஸ் இருவருமே ‘கடவுள்களும் நாகரீகங்களும்’ நிரந்தரமானவை அல்ல என்பதையும் ; மரணிக்கக்கூடியவை என்பதையும் அறியாத மனிதர்களில்லை. தவிர்க்கமுடியாத எதிர்காலத்திற்கு முன்பாக நிறுத்தப்பட்டவர்கள் நாம் மட்டுமே அல்ல. 


சக்கரவர்த்தி அதிரியனுக்கு இத்தகைய தீர்க்கதரிசன ஞானத்தை, நான் வழங்கிய நோக்கம் ஃபாஸ்டியன்(Faustien) நாடோடிக் கதை, சிபிலன் பாடல்கள்(Chants Sibyllins), அரிஸ்டைட் (Ælius Aristide)எழுத்துகள், ஃப்ரோண்ட்டன்( Fronton)தீட்டிய  அதிரியனுடைய வயதான ஓவியம்  ஆகிய ஆனைத்துக் கூறுகளையும் முன்னிலைப்படுத்துவதற்கான ஒரு வழிமுறையாகும்.  சரியோ தவறோ, இறந்த இம்மனிதருக்குச் சராசரி மனிதப் பண்புகளைக் காட்டிலும் மேம்பட்ட பண்புகளை வழங்குதல்  எனது நோக்கம். 


இம்மனிதர் உலகில் அமைதியை நிலைநாட்ட முயலாதிருப்பின், ரோம சாம்ராச்சியத்தின் பொருளாதாரத்தைச் சீர்படுத்தத் தவறிஇருப்பின்,  அவருக்கு நேர்ந்த நன்மைகள் தீமைகளை அதிகம் நான் பொருட்படுத்தி இருக்கமாட்டேன். 


பனுவல்களுக்கிடையிலுள்ள பந்தத்தைப் புரிந்துகொள்ள பேரார்வத்துடன் செயல்படுவது கட்டாயம்; ஆனால் அதற்குரிய நேரத்தை நாம் ஒருபோதும் அர்ப்பணிப்பதில்லை.  சக்கரவர்த்தி அதிரியன் தெஸ்பைய(Thespiae) என்கிற நகரில் “ஹெலிகான் மலையில் நர்சிஸஸ் ஊற்றருகே « வேட்டையாடும் வெற்றிக்கோப்பை » என்றொரு கவிதையை(Le poème du trophée de chasse) கி.பி 124ஆம் ஆண்டு, வசந்தகாலத்தில் காதற்கடவுளுக்கும், யுரேனியன் வீனசுக்கும் அர்ப்பணித்ததாகத் தெரிகிறது. அக்காலகட்டத்தில் மாண்ட்டினியா(Mantinée) நகரையும் மன்னர் கடந்து செல்ல நேர்ந்ததாகவும் அங்குத் தளபதி எபமினோண்ட்டாஸ்(Épaminondas) என்பவருக்கு எழுப்பிய கல்லறையிலும் ஒரு கவிதையை எழுதிவைத்ததாகவும்  அறிஞர் போசானியாஸ்(Posanius) என்பவருடைய குறிப்பிலிருந்து தெரிந்துகொள்கிறோம். மாண்ட்டினியா  குறிப்புகள் பற்றிய தகவலேதும் இன்றில்லை.  ஆயினும் அதிரியனின் இச்செயலுக்கான காரணத்தைப் புரிந்துகொள்ள, புளூட்டாக்(Plutarch) எழுதியுள்ள ‘மொராலியா'(Morals),வில் இச்சம்பவம் குறித்து எழுதியிருப்பதை வாசிக்கவேண்டும்.  அதன்படி எபாமினோண்ட்ஸ் அவருடன் கொல்லப்பட்ட இரு இளைஞர்களுக்கிடையில் புதைக்கப்பட்டிருக்கிறார்.  மேற்கண்ட சம்பவங்களும், அவற்றோடு பேசப்படும் கவிதைகளும், அதிரியனும் ஆண்ட்டினஸும் ஆசியா மைனரில் சந்தித்த காலத்தோடு(கி.பி 123-124) ஒத்துப்போகின்றன. இதன் நம்பகத்தன்மைக்கு உறுதி அளிப்பவை உருவப்பட வல்லுனர்களின் கண்டுபிடிப்புகள். அதன்படி இவ்விரு பாடல்களும் ஆண்ட்டினஸ் கவிதைத் தொகுதிக்குள் வருகின்றன. இரண்டுமே கிரேக்கத்தின் கொண்டாடப்பட்ட இரு காதலர்கள் ஏற்படுத்திய தாக்கத்தினால் எழுதப்பட்டவை. இதுகுறித்தே பின்னாளில் ஆண்ட்டினஸ் இறப்பினைத் தொடர்ந்து அர்ரியன் (Arrien)அவனைப் பட்ரோகிளாசுடன் ஒப்பிட்டு நினைவுகூர்கிறார்.


ஒரு சில மனித உயிரிகளை முழுமைப் படுத்த வேண்டியிருந்தது; குறிப்பாக  புளோட்டினா, சபீனா, அர்ரியன், சூட்டோனியஸ் முதலானவர்களை. ஆனால் அவர்களைக் குறித்து அதிரியனுக்கென்று ஒரு பார்வை இருந்தது;  அதனூடாகவே அவர்களைக் கண்டான். ஆண்ட்டினஸேகூட ஒருவித திரிபுகோணத்தில் சக்கரவர்த்தியின் நினைவுகள் சுட்டிய முறையில் அணுகப்பட்டிருந்தான்; மிகத் தெள்ளத் தெளிவாக நினைவுகூர்ந்தபோதும், ஆங்காங்கே சிறு சிறு பிழைகள் இருக்கவே செய்கின்றன.


ஆண்ட்டினஸுடைய மனோபாவங்கள் அனைத்தையும் சொல்லக்கூடிய வகையிலேயே அவனுடைய  சித்திரங்களும், உருவச்சிலைகளும் இருக்கின்றன. 21 ஆம் நூற்றாண்டின் கலை விமர்சகர்களும்  வரலாற்றறிஞர்களும் நல்லொழுக்கங்கங்களையும்,   தவறான மற்றும் தெளிவில்லாதவற்றையும் எவ்வாறு மேடையேற்றுவது அல்லது எப்படி  இலட்சியப்படுத்துவது என்பதை மட்டுமே அறிந்திருந்த நிலையில் கவிஞர் ஷெல்லி பாராட்டத்தக்க நேர்மையுடன் சுருக்கமாக அத்தியாவசியமானவை எவையெனக் குறிப்பிடுகிறார்; அவை ஆர்வம், காதலற்ற அன்பு, பெண்ணுக்குரிய ஊடல் குணம் ஆகியவை. இவை நம்முடைய ஆண்ட்டினசுக்குப் பொருந்துகின்றன. 


ஆண்ட்டினஸுக்கு வடித்த பிரதிமைகள் ஏராளம். அவை தனித்துவமானவை மட்டுமல்ல, சராசரி வகைமைக்குள்ளும்  அடங்கும். அவை சிற்பி  ஒருவனின் கலைத் திறன்கள், அந்தந்த வயதுக்குரிய படிமங்கள், அவன் உயிருடனிந்தபோது வடித்தவை, இறந்தபின்னர் அவனைப்போற்றுகின்ற வகையில் உருவாக்கியவை என்கிற பல்வேறுவிதமான பண்புகள் கொண்டவை. ஆயினும்  அவற்றை எளிதில் அடையாளப்படுத்தக்கூடிய, அதேவேளையில் பல்வேறுவிதமாகத் தம்மை வெளிப்படுத்தும் திறன்கொண்ட இவ்வுருவத்தின் நிழலுருவங்களுக்கு,  நம்மை நம்பவியலாததொரு உண்மையில் ஆழ்த்த வேறு சில காரணங்களுமுண்டு.  உதாரணமாகத் தொன்மச் சிற்பங்களில் இவனுடையது வித்தியாசமானது. உயிர்ப்பும், எண்ணற்ற தன்மையும் கொண்டு கல்லில் வடிக்கப்பட்ட இம்முகம் ஒரு நாடாண்ட மன்னனுக்கோ அல்லது தத்துவவாதிக்கோ சொந்தமென்கிற வகையில் உருவானதல்ல; நேசித்தோம், செதுக்கினோம் என்கிற எளிய காரணத்திற்கு உட்பட்டது. அண்ட்டியானஸைப் பற்றிய உருவ வடிவங்களில்  மிகவும் குறைவாக அறியப்பட்டவைகளில் இரண்டு சிற்பங்களும் அடங்கும்.  அழகான இவ்விரண்டும்  ஒரு சிற்பியின் பெயரை  நமக்குத் தந்துள்ளன.  முதலாவது ஒரு புடைப்புச்சிற்பம், கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்டு இன்று ஃபண்டி ரஸ்த்திசியின்(les Fundi Rustici) வேளான் நிறுவனமொன்றில் உள்ள அச்சிற்பத்தைச்  செதுக்கியவர் அப்ரோடிசியாஸ ஆண்ட்டனியானஸ். ஏற்கனவே எண்ணற்ற  சிலைகளின் காட்சிக்கூடமாக இருக்கிற  ரோம்நகரின் சுற்றுலா பற்றிப் பேசும் எந்தவொரு வழிகாட்டி நூலும் இதனைப்பற்றி எதுவும் கூறாததால், சுற்றுலாவாசிகள் அறிந்திருக்க வாய்ப்பில்லை. இப்படைப்பு இத்தாலிய பளிங்குக் கல்லினால் ஆனதென்பதால், இத்தாலியில் வெகுகாலமாக வாழ்ந்ததொரு சிற்பியின் கைவண்ணத்தில் உருவானதாகவோ அல்லது அதிரியன் தமது அரசு விவகாரமாக அந்நிய தேசங்களில் திரிந்தபோது, அழைத்துவந்த  சிற்பிகொண்டு  செதுக்கப்பட்டதாகவோ இருக்கவேண்டும் என்பது நிச்சயம். எல்லையற்ற நேர்த்தியுடன் வடிக்கப்பட்ட படிவம். சாய்ந்து, ஓரளவு சோகத்துடனுமுள்ள இளைஞனின் முகத்தை வளைந்து நெளிந்தும் சித்திரக்கொடிகள் அலங்கரிக்கின்றன. இலையுதிர்காலப் பிற்பகலொன்றின் குறுகியகால முடிவின் திராட்சை அறுவடையை ஆண்ட்டினஸ் வாழ்க்கையோடு இணைத்துக் கற்பனை செய்தல் நமக்குத் தவிர்க்கமுடியாதது. மனிதர்களின் முட்டாள்தனமான காரியங்களால், தெய்வங்களும் வதைபட நேர்வதுண்டு ; உதாரணமாக இறுதியுத்தத்தின்போது பாதாள அறையொன்றில் புடைப்புச் சிற்பம் பல ஆண்டுகள் கிடந்ததின் அடையாளமாகப் பளிங்குக்கல்லுக்கே உரித்தான வெண்மையைத்  தற்காலிகமாக இழந்து  ஆங்காங்கே மண்தரையின் கறைகள்  உள்ளன; இதுதவிர சிற்பத்தின் இடதுகையில் மூன்று விரல்களும் உடைந்துள்ளன. 

[1958 ஆம் வருடத்திய குறிப்பு: மேற்கண்ட வரிகள் முதன் முதலாக என்னிடமிருந்து வெளி உலகிற்குத் தெரியவந்து ஆறுஆண்டுகள் ஆகின்றன. இதற்கிடையில் வட்டித் தொழிலில் ஈடுபட்டிருந்த அர்துய்ரோ ஓசியொ என்கிற ரோமானியருக்கு ஆண்ட்டினஸ் புடைப்புச் சிற்பம் சொந்தமாகி இருந்தது; இம்மனிதர் ஸ்டெந்தலிடமும் பல்சாக்கிடமும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கவேண்டும். ரோம் நகருக்குக் கூப்பிடு தூரத்திலுள்ள தமக்குச் சொந்தமான இடத்தில் ஓசியொ கொட்டடியில் அடைக்காமல்  விலங்குகளைச் சுதந்திரமாகச் சுற்றித்திரியும் வகையில் வளர்த்திருக்கிறார்; அதுபோல ஒர்பெத்தெல்லோ பண்ணையில் அவர் பராமரிப்பில் ஆயிரக்கணக்கில் மரங்கள் இருந்திருக்கின்றன; இவைகளிடத்தில் காட்டும் அதே அக்கறையை இம்மனிதர் இந்த அழகிய சிற்பத்தின்மீதும் காட்டியுள்ளார் ; இக்குணம் பிற இத்தாலியரிடம் காணக்கிடைக்காத முதலாவது அரிதான பண்பு. 1828 ஆம் வருடம் ஸ்டந்தால்  இத்தாலியரைப் பற்றிப் பேசும்போது, “இத்தாலியர்கள் மரங்களை வெறுப்பவர்கள்” என்று எழுதியிருந்தார்; இன்றைய வீட்டு மனை விற்பனைத் தொழிலில் ஈடுபட்டுள்ள இத்தாலியர்களோ அடுக்குமாடிக் குடியிருப்புகளுக்காகப்  பெருநகர வளர்ச்சித்துறையின் சட்டங்களால் பாதுகாக்கப்படும் குடைவகை பைன் மரங்களை வெந்நீர் ஊசிபோட்டுக் கொன்றொழிப்பதைக் காண நேர்ந்தால், இன்னமும் கூடுதலாக என்ன சொல்வாரோ? தவிரப் பணக்காரர்களில் எத்தனை பேர் வேட்டையாடும் இன்பத்திற்காக அல்லாமல் போற்றத்தக்க ஈடனைத்(Eden) திரும்ப உருவாக்கத்  தங்கள்  காடுகளையும் புல்வெளிகளையும் சுதந்திரமாகச் சுற்றித் திரியும் விலங்குகளால் நிரப்புகிறார்கள்? அந்த வகையில், இதொரு  அரிய ஆடம்பரமும் கூட.  உத்தரவாதமற்ற எதிர்காலம், நிகழ்காலமும் பிரச்சினைக்குரியதென்கிற சூழலில் ; தொன்மமும் அமைதியும், அதேவேளையில் பக்குவமாகக் கையாளவேண்டியதும் நிலைத்து நிற்கக்கூடியதுமான பொருளிடத்தில் காதல்கொண்ட மனிதர்களைத்  தொன்மக் கலைப்பொருள் சேகரிப்பாளர்களிடையே காண்பது மிக மிகச் சொற்பம். இத்துறைசார்ந்த விற்பன்னர்களின் கருத்தின்படி, ஆண்ட்டினஸ் புடைப்புச் சிற்பத்தின் புதிய உடமையாளர் மிகுந்த கவனத்துடன் அழுக்கினைத் துடைத்திருக்கவேண்டும்; பளிங்குக்கல்லில் துருக் கறையையும் ஒட்டிக்கிடந்த தூசுகளையும் விரல்முனைகளால் தொட்டுத்தொட்டு விடுவித்துச் சிற்பத்தின் அல்பாஸ்ட்டர் மற்றும் தந்தத்தின் பளபளப்பை மீட்டெடுத்திருக்கவேண்டும். ]

தலைசிறந்த இப்படைப்புகளில் இரண்டாவது மார்ல்பரோ ஜெம் (Gemme Marlborough)வகைத் தொகுதிக்குள் அடங்கிய, இன்று பலவகைகளில் கிடைக்கிற சர்டோனிக்ஸ் (Sardonyx)கல்லினாலான சிற்பம்; 30 ஆண்டுகளுக்கு மேலாக, பூமிக்குள் புதைந்து கிடந்துள்ளது. 1952ம் வருடம் ஜனவரியில்  இலண்டனில், பொதுவிற்பனைக்கு ஏலத்திற்கு வந்தபோது வெளி உலகிற்குத் தெரியவந்தது. இதுபோன்ற பொருட்களில் ஞானமிக்க கலைப்பொருட்கள் சேகரிப்பாளர் ஜியோர்ஜியோ சாங்கியோர்ஜி இதற்குரிய விலையைச் செலுத்தி ரோம் நகருக்குக் கொண்டுவந்தார். தனித்துவமான இச்சிற்பத்தை மேற்கண்டவரின் தயவினால் தொட்டுப்பார்க்க எனக்கும் வாய்ப்புக் கிடைத்தது. சிற்பத்தின் விளிம்பில் அரைகுறையாக இருக்கிற ஒரு கையொப்பத்தைக் கொண்டு ஐயமின்றி  நம்மால் அப்ரோடிசியாசைச் சேர்ந்த அண்ட்டோனியானஸுடைய  படைப்பென்கிற முடிவுக்கு வரமுடிகிறது.   கலைஞர், இந்தச் சரியான சுயவிவரத்தை சர்டோனிக்ஸ் குறுகிய சட்டமொன்றில் சாதுர்யமாக இணைத்துள்ளார்; இத்துண்டும், ஒரு சிற்பத்தைப்போல அல்லது புடைப்புச் சிற்பத்தைப்போல,  இன்று நாம் இழந்திருக்கும் அரிதானதொரு கலையின் சாட்சியமாக உள்ளது. படைப்பின் அளவுப் பொருத்தங்கள், நம்மைச் சம்பந்தப்பட்ட  பொருளின் பரிமாணங்களை மறக்கச் செய்கின்றன. இன்று பூமியின் நிலப்பரப்பில் காணமுடிகிற அனேகப் பொருட்களில் அதிரியன் கைகள் ஏந்தியதென ஓரளவிற்கு உறுதிப்படுத்த முடிந்த  ஒரேபொருள். பைசாந்தியர் காலத்தில் சுத்தமான தங்கத்தில் விலைமதிப்பற்ற இக்கல்லைப் பதித்து இது உருவாக்கப்பட்டிருக்கிறது. அதன்பின்னர் பெயர்தெரியாத பல தொல்பொருள் சேகரிப்பாளர்களிடம்  கைமாறி   வெனிஸ்வரை வந்துள்ளது; அங்குப் பதினேழாம் நூற்றாண்டின் மிகச் சிறந்ததொரு கலைப்பொருள் என்கிற பெயரையும் பெற்றுள்ளது. பின்னர் கவின் ஹாமில்டன் என்கிற புகழ்பெற்ற பழம்பொருள் சேகரிப்பாளர் விலைக்குப்பெற்று இங்கிலாந்துக்குக் கொண்டுவந்தார்;, அங்கிருந்து திரும்பவும் அது முதலில் உருவான ரோம் நகருக்கே வந்துசேர்ந்தது.  


                                           .

தொடரும்…

அதிரியன் நினைவுகள்

“அதிரியன் நினைவுகள்” –  குறிப்புகள் – 2 “அதிரியன் நினைவுகள்” –  குறிப்புகள் – 4

Discover more from சொல்வனம் | இதழ் 365 | 26 ஏப். 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.