“அதிரியன் நினைவுகள்” –  குறிப்புகள் – 2

This entry is part 46 of 48 in the series அதிரியன் நினைவுகள்

மூலம் :  மார்கெரித் யூர்செனார்

19 ஆம் நூற்றாண்டின் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் வெளியில் இருந்து செய்ததை இங்கே நூலகத்தின் உள்ளே இருந்து நான் செய்தேன்.

Jamini Roy

1948 டிசம்பரில், சுவிட்சர்லாந்தில் இருந்து, போரின் போது நான் பாதுகாப்பாக வைத்திருந்த ஒரு பெட்டி கைக்கு வந்து சேர்ந்தது. அப்பெட்டியில்  நிறையக் குடும்ப ஆவணங்கள் மற்றும் பத்து வருடத்திற்கு மேற்பட்ட   பழைய கடிதங்கள் இருந்தன.  ஒருவரின் மரணத்திற்குப் பிறகு அவர் விட்டுச்சென்ற பொருட்களைக் கலைத்துப்போட்டுப் பார்க்கும் சோகமான அனுபவத்துடன் கணப்படுப்பின் அருகில் அமர்வேன். தனியொருத்தியாகப் பல பிற்பகல்களை அவற்றோடு கழிக்க நேர்ந்துள்ளது. கட்டுக் கட்டாகக் குவிந்திருக்கும் அவற்றைப் பிரித்துப்போட்டு,  தீயில் எரிப்பதற்கு முன்பாக பொறுமையுடன் பார்க்கவேண்டும். அவற்றில் நான் மறந்த அல்லது என்னை மறந்த மனிதர்களுடனான கடிதங்கள்,  இன்றளவும்  உயிரோடுள்ளவர்களின் கடிதங்கள் அல்லது இறந்துபோனவர்களின் கடிதங்களென்று பலவும் இருக்கலாம். இவற்றில் சில எனது தலைமுறைக்கும் முந்தைய தலைமுறை காலத்திற்கும் உரியவை. புரிந்துகொள்ள அப்பெயர்கள் மட்டும் போதாது. உதாரணத்திற்குப் பல « பிரான்சுவா »க்கள், பல « மரி »க்கள், பல « போல் »கள் பெயரில் எண்ணற்ற கடிதங்கள். அப்பெயர்ககளில் என்னிடமிருந்த இறந்தகாலக் கருத்துப் பரிமாற்றங்களை எந்திரத்தனமாகத் தீயிலிட்டேன். தட்டசில் நான்கைந்து காகிதங்கள் கிடைத்தன, அவற்றில் ஒரு துண்டில், “அன்பினிய மார்க்” எனத் தொடங்கியிருக்க எனக்கு முதலில் விளங்கவில்லை. மார்க் என்ற அப்பெயர்  ‘மார்கஸ் அரேலியஸோடு ‘ தொடர்புடையதென விளங்கிக்கொள்ள சில கணங்கள் பிடித்தன. அத்தருணத்திலிருந்து, இந்தப் புத்தகத்தை எப்பாடுபட்டாவது திரும்ப எழுதுவதென முடிவு செய்தேன்.

அன்றிரவு ஒழுங்கின்றிக் கிடந்த எனது நூலகத்தின் உடமைகளான இரண்டு தொகுதிகள் கைக்குக் கிடைத்தன. ஹாரி எஸ்த்தியனுடை அழகிய  பதிப்பாக  வெளிவந்திருந்த தியோன் காசியஸ் (Dion Cassus)  முதலாவது. அடுத்தது ஒரு சாதாரண பதிப்பாக வெளிவந்த ‘அகஸ்டஸ் வரலாறு‘ என்ற நூல். இரண்டு தொகுதிகளுமே அதிரியன் வாழ்க்கை குறித்த முக்கிய ஆதாரங்கள். இந்த இடைப்பட்ட ஆண்டுகளில் உலகமும் நானும் அனுபவமாகப் பெற்றவை அனைத்தும் கடந்த காலத்தின் வரலாற்றுப்பகுதியை வளப்படுத்தியதோடு,  எனது எண்ணத்திலிருந்த ஏகாதிபத்திய இருப்பு மீது வேறுவகையான இருளையும் ஒளியையும் பாய்ச்சின.  முதன்முறை இந்நூல் குறித்துச் சிந்தித்தபோது எனது எண்ணத்தில் குடிகொண்டிருந்தவர்கள் அறிஞரும், தேசாந்திரியும், கவிஞரும், காதலரும் ஆவர். இவைகளுக்குக் கேடில்லை ; ஆனால் முதன் முறையாக என்னுள் தீட்டப்பட்ட சித்திரங்களில் கனக் கச்சிதமாக அதீதக் கவனத்துடன் என்னுடைய இலட்சியத்திற்கு உகந்து மிகவும் அதிகாரபூர்வமாகவும் மிகவும் இரகசியமாகவும் உருவான சித்திரம் சக்கரவர்த்தியுடையது. அழிவுகளைச் சந்தித்துவருமுலகில் வாழ்ந்துகொண்டிருக்கும்  எனக்கு அந்த ஓவியம்  மன்னரின் முக்கியத்துவத்தைப் புரியவைத்தது.

கிட்டத்தட்ட ஒர் ஞானியாக எனது மனதிற்பதிந்த இம்மனிதர் சித்திரத்தை  ஒரு முறைக்குப் பலமுறை திருத்தி எழுதினேன். 

ஓரளவிற்கு இதற்குச் சமமாக என்நெஞ்சில் பதிந்த மற்றொரு வரலாற்று நபர் கவிஞரும் வானியல அறிஞருமான உமர் கயாம். ஆனால் கயாமுடைய வாழ்க்கை என்பது ஒரு தூய சிந்தனையாளருக்குரிய வாழ்க்கை. செயல் உலகம் அவருக்கு மிகவும் அந்நியமானது. தவிர எனக்குப் பாரசீக உலகும் தெரியாது, அந்த மொழியும் தெரியாது. 

பெண் கதாபாத்திரத்தை மையமாக எடுத்துக்கொள்வதும் எனக்குச் சாத்தியமற்றது. எடுத்துக்காட்டாக, எனது கதையின் அச்சாக,  அதிரியனுக்குப் பதிலாக புளோட்டினாவைக் கையாளுவது எனக்கு இயலாது. தவிர பெண்கள் வாழ்க்கையென்பது வரையறைக்குட்பட்டது; இரகசியம் காக்கவேண்டிய நெருக்கடிக்கு ஆளாகக் கூடியது.  ஆணைப்பற்றி எழுதுகிறபோதே  சில உண்மைகளை அவனுடைய வாயால் சொல்வதற்கு யோசிக்க வேண்டியுள்ளது. ஒரு பெண்ணைக் கதை சொல்ல அனுமதித்தால் என்ன நடக்கும்; உலகம் வைக்கக்கூடிய முதற் குற்றச்சாட்டு அவளொரு பெண் ஜென்மமே இல்லை என்பதாகத்தான் இருக்கும்.

நியூ மெக்ஸிகோவின் தாவோஸுக்குப் புறப்பட்டுச் சென்றேன். இந்தப் புத்தகத்தை மீண்டும் தொடங்குவதற்கான வெள்ளைத் தாள்களை என்னுடன் எடுத்துச் சென்றேன். ஒரு நீச்சல்காரன் மறுகரையை அடைவோமா என்பது தெரியாமல் தண்ணீரில் குதித்ததுபோலவே என்னுடைய நிலைமை இருந்தது. பின்னிரவுகளில் மண்ணில் உறைந்துவாழும் ஒரு ஜீவனாக என்னைப்பாவித்து    நியூயார்க்கிற்கும் சிக்காகோ நகருக்குமாகப் பயணிக்கிறபோதெல்லாம் எழுதியிருக்கிறேன். அடுத்த நாள், சிகாகோ இரயில் நிலைய உணவகத்தில், பனிப்புயல் பிரச்சினையால் பாதிக்கப்பட்ட இரயிலுக்காகக்  காத்திருக்கும் நேரத்திலும் எழுதுவதுண்டு. பின்னர், மீண்டும் விடியும்வரை எந்நேரமும் நட்சத்திரங்களும் கொலராடோ கருமலைகளும் சூழந்திருக்கும் சாண்டா-ஃபெ கண்காணிப்பு வாகனத்தில் தனித்து நான் இருக்கிறபோதும் எழுதுவேன்.  உணவு, காதல், உறக்கம், மனிதனின் அறிவு போன்ற பத்திகளையெல்லாம் துண்டுதுண்டாக எழுதிக்கொண்டிருப்பதில்லை; ஒரே மூச்சில் எழுதி முடித்துவிடுவேன். அதீத ஆர்வத்துடன் ஒரு பகலை  அல்லது கூடுதலான தெளிவுடன் ஓர் இரவைக் கழித்த தாக நினைவில்லை.  

மூன்றுவருட ஆய்வுகளை முடிந்தமட்டும் வெகு விரைவாக மேற்கொள்வதென முடிவெடுத்தேன், துறைசார்ந்த வல்லுனர்கள் மட்டுமே என் அளவிற்கு ஆர்வத்துடன் உழைத்திருப்பார்கள். அதுபோல மனோவியாதிக்காரர்கள் ஆர்வங்காட்டகூடிய ஒருவிதமான பிதற்றல் முறையையும் எழுத்தில் அபிவிருத்திசெய்தேன்.  குறிப்பாக இப்பிதற்றல்முறை  காதல்போன்ற கற்பனை நவிற்சிப் பகுதிகளுக்கு உதவக்கூடியது. ஆக, வேறுவகையில் சொல்வதெனில் உள்ளதை உள்ளவாறே தெளிவும்,  மாறாத் தன்மையுமாய்  படைப்பை முடிந்தமட்டும் கொண்டு செல்லவேண்டும்.

புலமையில் ஒரு கால், மாந்த்ரீகத்தில் மற்றொரு காலென அல்லது  இன்னும் துல்லியமாகச் சொல்வதெனில்  எண்ணங்களூடாக  உருவகத்தை மறந்து நமது ஆழ்மனதிற்குள் மிகவும் சுவாரஸ்யமான இம்மந்திரசக்திகொண்டு பயணிக்கும் வழிமுறையென இக்கதைசொல்லலை எடுத்துக்கொள்ளலாம்.

இந்நாவல் ஒரு குரலின் சித்திரம். “அதிரியன் நினைவுகள்” என்ற இந்நாவலை, நான் தன்மையில் எழுதத் துணிந்தன் காரணம், முடிந்தவரை நான் உட்பட எந்த இடைமனிதர்களின் குறுக்கீடின்றி நாவல் சொல்லப்படவேண்டும் என்பதற்காக. என்னைக் காட்டிலும் அதிரியன் மட்டுமே தன் வாழ்க்கைக் குறித்து உறுதியாகவும், நுட்பமாகவும் எடுத்துரைக்க முடியும். 

~oOo~

வரலாற்று நாவலை ஒரு தனி வகைக்குள் வைப்பவர்கள், நாவலாசிரியர் என்பவர் எப்போதுமே ஒன்றின் உட்பொருளை, அவர் தம்முடைய  காலத்தின் துணையுடனும், குறிப்பிட்ட எண்ணிக்கையிலான கடந்த கால உண்மைகளைக் கொண்டும், சுயநினைவுடனோ அல்லது அல்லாமலோ, தனது சொந்த அல்லது பிறர் சார்ந்த   மனதிற் தேக்கியுள்ள  நினைவுகளைக்கொண்டும், ஒரு வரலாற்றை எழுத உபயோகிக்கும் கூறுகளைக் கொண்டே ஒரு படைப்பை வெளிக்கொணர்கிறார்  என்கிற உண்மையையும் கணக்கிற்கொள்ளவேண்டும் என்பதை மறந்து விடக்கூடாது.  “போரும் அமைதியும்” நாவலைப்போலவே, ப்ரூஸ்டின்(Proust) பணியும் இழந்த காலத்தின் மறுகட்டமைப்பு ஆகும். 1830களில் வரலாற்று நாவலென்பது கத்திச்சண்டைகள், கண்ணீர்வடித்தல், இறுதியில் சுபம் என்கிற வகைமையில் சொல்லப்பட்டவையே அன்றி அவற்றில் பல்ஸாக் நாவல்களான « லான்ழே சீமாட்டி(Duchesse de Langeais ) » அல்லது « பொன்னிறக் கண்கள் கொண்ட பெண் (Fille aux yeux d’Or) » ஆகியவற்றின் பெருமைக்குரிய சங்கதிகளில்லை. ஃப்ளோபெர், ஹமில்கர் அரண்மனையை நூற்றுக்கணக்கான சிறு விவரங்களைப் பயன்படுத்திக் கடினமாக உழைத்து மறுநிர்மாணத்தைச் செய்திருப்பார், இத்தகைய உழைப்பை அவருடைய « மதாம் பொவாரி »யின் யோன்வீல் நகர விஷயத்திலும் காணமுடியும். இன்றைய காலகட்டத்தில், ஆய்வுகள், தேடல்கள்  இலக்கிய வடிவங்களில் ஆதிக்கம் செலுத்த முனைவதால், ​​ஒரு வரலாற்று நாவல் (அல்லது சிலகாரணங்களை முன்னிட்டு அப்பெயரும் நமக்குத் தேவைதான்) என்பது அந்நாவலூடாக திரும்பப்பெற்ற கடந்த காலத்திற்குள் மீண்டும் பிரவேசித்து, அதன் அகவுலகை நமதாக்கிக்கொள்ளும் செயலாகும்.  

இப்பிரச்சினையில் காலத்தின் பங்கு அவ்வளவாக முக்கியம் பெறுவதில்லை. இதில் எனக்கும் வியப்பூட்டும் செய்தி, இந்த அண்டத்தை வெல்லவும் மாற்றி அமைக்கவும் தம்மால இயலுமென நம்பும் என்னுடைய சமகாலத்தவர்கள், நூற்றாண்டுகளின் தொலை தூரத்தையும் விரும்பியவாறு சுருக்கமுடியும் என்கிற உண்மையைப் புரிந்துகொள்ளாமல் இருப்பது. 

 எந்த ஒன்றும் நிரந்தரமில்லை. நாம் உட்பட அனைத்துமே ஒரு நாள் நம்மிடமிருந்து  தப்பிச் செல்வது நிச்சயம். என் தந்தையின் வாழ்க்கையில்  அதிரியன் வாழ்க்கையைக் காட்டிலும்  நான் அறிந்திராதவை அதிகம். என்னுடைய வாழ்க்கையையே எழுதுவதென்றால்கூட  என்னை அந்நியப்படுத்திக்கொண்டு, பிறர் வாழ்க்கையை எழுதும் சிரமங்களுடன் எழுதவேண்டிவரும். தடுமாறும் நினைவுகளை ஒருமுகப்படுத்த நான் கடிதப் பரிமாற்றங்கள், சுற்றியுள்ள மனிதர்களின் நினைவுகள் ஆகியவற்றைத் தேடிச்செல்லவேண்டும். அவைகளும் அனேகமாக  இடிந்து விழுந்த சுவராகவோ, துண்டு நிழலாகவோ இருக்கும், கூடுதலான எதிர்பார்ப்புகள் இல்லை. இப்படைப்பைப் பொறுத்தவரை அதிரியன் வாழ்க்கை முடிந்த மட்டும் சொல்லப்பட்டிருக்கிறது; விடுபட்டது அநேகமாக சக்கரவர்த்தியே தன்னில் மறந்தவையாக இருக்கலாம்.

இவ்வாறு நான் சொல்வதால்,   அடிக்கடிப் பலரும் தெரிவிப்பதுபோல வரலாற்றுண்மை என்பது முழுமையாக எட்டமுடியாதது அல்ல.  எல்லா உண்மைகளுக்குள்ளும் ஓர் உண்மை இருக்கிறது, அதில் கூடுதலாகவோ குறைவாகவோ தவறு நேர்வது இயல்பு; வரலாற்று உண்மைக்கும் அது பொருந்தும். 

இவ்விளையாட்டின் முக்கிய  விதிகள் :

அனைத்தையும் கற்பதும், எல்லாவற்றையும் வாசிப்பதும்,  ஒட்டுமொத்த தகவல்களையும் திரட்டி அதே வேளையில் எதற்காக இவற்றைச் செய்தோமா அதனை நிறைவேற்றப் புனித இக்னேஷியஸ் லயோலாவின் ஆன்மீக பயிற்களை, அல்லது ஒர் இந்து சந்நியாசியின் கடினமான வழிமுறைகளை மேற்கொள்வதுமாகும். எதுவரை? என்றைக்கு மூடிய கண்ணிமைகளின் கீழ் மிகத் துல்லியமாக நாம் கட்டமைக்க நினைக்கும் பிம்பத்தைக் காண்கிறோமோ, அதுவரை. பின்னர் ஆயிரக்கணக்கான உண்மைத் தகவல்கள் அடிப்படையில் பணிகளைத் தொடருதல்; உறைந்திருக்கும் உண்மைகளை  அவற்றின் இறுகிய முகத்துடன் நடமாட  ஆவன செய்தல்; நாம்  மறுப்பதற்கு இயலாத  மாறுபட்ட  கருத்துடைய இரண்டு பிரதிகளை எதிர்கொள்கிறபோது, ஒன்றைக்கொண்டு மற்றதை நிராகரிக்காமல், இணக்கத்தைத்தேடி மகிழ்தல்; அவற்றில் வித்தியாசமான இருவேறு முகவிலாசங்களை, ஓருண்மையின் இரு வேறு நிலைப்பாடுகளின்  தொடர்ச்சியை,  பிரதியின்  கடினத் தன்மையினால்  உறுதிப்படும்  நம்பகத்தன்மையை,  பிரதிகளின் பன்முகத்தன்மையினால் அதன் மானுடப் பண்பை புரிந்துகொள்ளுதலும்  இவ்விளையாட்டிற்கு அவசியமாகின்றன. அடுத்துச் செய்யவேண்டியது இரண்டாம் நூற்றாண்டைசேர்ந்த பனுவலை இரண்டாம் நூற்றாண்டுக்குரிய கண்களோடும், இதயத்தோடும் வாசிக்க முற்படுதல், அவ்வாறு வாசிக்கிறபோது சமகால உண்மைகளை அவை பிறப்பெடுத்த நீரில் நீராட அனுமதித்தல். இவ்வாறான அனுபவத்தில் இறங்குகிறபோது அக்கால மக்களுக்கும் நமக்கும் இடையே வரிசையாகக் குவியும் அனைத்து எண்ணங்களையும் உணர்வுகளையும் முடிந்தால் நிராகரிக்கும் துணிவும் நமக்குத் தேவைப்படுகிறது. ஆயினும் இதனைப் படைப்பிற்குத் தயார்ப்படுத்தும் ஆய்வாக எண்ணி, அறியவந்தவற்றை ஒன்றோடொன்று ஒப்பிட்டுப்பார்த்து, தேவையெனில் சிலவற்றை மறுபரிசீலனைக்கும் உட்படுத்தி, இப்பனுவல்,  இந்த உண்மை, இம்மனிதன் (அதிரியன்)ஆகியோரிடமிருந்து. படைப்பாளியை அந்நியப்படுத்த முனையும் பல நூற்றாண்டுகளும், அவை சார்ந்த நிகழ்வுகளும், படைப்பிற்கு வழங்கும் புதிய பார்வையைப் புரிந்துணர்ந்து பயன்படுத்திக்கொள்ளுதல்,  அவற்றை ஒரு குறிப்பிட்ட கால கட்டத்திற்குச் செல்லும் பாதையில் மைல்கற்களாகப் பயன்படுத்தல் ஆகியவை முக்கியம்; பயணம்மேற்கொள்ளும் எழுத்தாளனின் நிழல் அதில் விழாமல் தவிர்த்தல் ;  பெருமூச்சினால் அவன் விடும் ஆவி நிலைக்கண்ணாடியில் பரவ அனுமதியாதிருத்தல் ; இறுதியாக  ஆலிவை நறுக்கெனக் கடித்து ருசிப்பதில்; விரும்பி ஒயின் அருந்துவதில்; விரல்களைத் தேனில் தோய்ப்பதில்; பேய்க்காற்றை, பெருமழையை எதிர்த்துப் போராடுவதில்,  கடுங்கோடையில் பிளாட்டனஸ் மரநிழலைத்தேடி ஒதுங்குவதில்; இன்புறுவதில், சிந்திப்பதில், முதுமை அடைவதில், முடிவில் மரணிப்பதில்,  புலனுணர்வுகளிலும்  மனதின் செயல்பாடுகளிளும் பிற மனிதர்களுடன் ஒரு புள்ளியில் நாம் இணைவதுண்டு. இவற்றில் மிகவும் இன்றியமையாதவைகளையும், நீடித்திருக்கக்கூடியவற்றையும் மட்டுமே  எடுத்தாளத் தெரிந்திருத்தலும்  நமக்கு அவசியமாகிறது.

கால வரிசைப்படி அதிரியன் நோய்குறித்த தகவல்களை மருத்துவர்களிடம் காண்பித்து, அது குறித்த மருத்துவக் கருத்தை அவர்களிடம் கேட்டுப் பெற்றேன்.  ஆக மொத்தத்தில் கிடைத்த தகவல்கள், பல்சாக்கின் மரணம் பற்றிய மருத்துவ விளக்கங்களிலிருந்து வேறுபட்டதல்ல.

அதிரியனுடைய இதய நோயின் ஆரம்ப காலப் பிரச்சினைகளை இது புரிந்துகொள்ள உதவியது.

தொடரும்…

அதிரியன் நினைவுகள்

“அதிரியன் நினைவுகள்” –  குறிப்புகள் – 1 “அதிரியன் நினைவுகள்” –  குறிப்புகள்

Discover more from சொல்வனம் | இதழ் 365 | 26 ஏப். 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.