அதிரியன் நினைவுகள் -31

This entry is part 30 of 33 in the series அதிரியன் நினைவுகள்

மூலம் :  மார்கெரித் யூர்செனார்

தமிழாக்கம்: நா.கிருஷ்ணா

ஆற்றின் எப்பகுதியில் ஆண்ட்டினோபோலிஸ் நகரம்  எழும்பிக் கொண்டிருந்ததோ, அப்பகுதிக்குத் தோணிகள்  மீண்டும் எங்களை அழைத்துச் சென்றது. போகும்போது உபயோகித்த  தோணிகள் எண்ணிக்கை இல்லை ; குறைவாக இருந்தன. அதிகம் நான் பார்க்க மறந்த  லூசியஸ், தன்னுடைய இளம் மனைவி, ஒரு மகனைப் பிரசவித்திருக்க, தாயையும் சேயையும் காணும் ஆவலில் ரோமுக்குச் சென்றிருந்தான்.  அவன் பயணம் பிறர் விவகாரங்களில் ஆர்வம் காட்டுகிற மனிதர்களிடமிருந்தும், பிற விரும்பத் தகாதவர்களிடமிருந்தும்  என்னை விடுவித்திருந்தது.  தொடங்கப்பட்ட வேலைகள் நதிக்கரை தோற்றத்தை மாற்றியிருந்தன; பூமியைச் சீரமைத்தும், தோண்டியும் குவிக்கப் பட்டிடுந்த மணல் மேடுகளுக்கிடையில் எதிர்காலக் கட்டிடங்களின் வரைபடச் சாயல்கள்; காணிக்கை கொடுத்த இடம் எது என்பதைக்கூட தெளிவாக சொல்ல முடியாமற் போனது. சடலப் பராமரிப்பு ஊழியர்கள்  தங்கள் வேலையை முடித்திருந்தனர். தேவதாரு மரத்தில் செய்த அதிக கனமற்ற சவப்பெட்டியை,  ஆலயத்தின் மிகவும் இரகசியமான கூடமொன்றில் நிறுத்தப்பட்டிருந்த போர்பிரி  பளிங்குக் கல்லினாலான தொட்டிக்குள் வைத்தனர். இறந்த மனிதனைத் தயக்கத்துடன் அணுகினேன். அவனுக்கு மாற்றுடை அணிவித்திருக்கவேண்டும்.  தலைமுடியை மறைக்கின்றவகையில் கடினமான எகிப்திய தலைக்கவசம். நாரிழைத் துணிப்பட்டைகளைக்கொண்டு இறுக கட்டப்படிருந்த கால்கள் நீளமான வெண்ணிறப் பொதியன்றி வேறில்லை, ஆனால் அந்த இளம் கழுகின் தோற்றத்தில் மாற்றமில்லை. ஒப்பனை செய்திருந்த இரு கன்னங்களிலும் நிழலாடிய கண்ணிமைகளை என்னால் அடையாளம் காண முடிந்தது. சடலத்தின் கைகளைக் கட்டுதுத்ணிகொண்டு மூடிமறைப்பதற்கு முன்பாக அவனுடைய பொன்வேயப்பட்ட நகங்களைக் கண்டு, நான் வியக்கவேண்டுமென மிகவும் விரும்பினர்.

வழிபாட்டுத் தோத்திரங்களைச் சொல்லத் தொடங்கினார்கள். என்றென்றும் உண்மையாளனாகவும், நிலையான தூய்மைக்குச் சொந்தக்காரனாகவும்,  நிரந்தர இரக்கமுள்ளவனாகவும், நீதிமானாகவும், நற்பண்புகளை அவன் சிலாகித்ததாகவும் சமயக் குருக்கள் வாயிலாக இறந்தவன் புகழப்பட்டான். அவன் இவற்றை கடைப்பிடித்தற்கு, உயிருள்ள மனிதர்களிடமிருந்து ஒரு போதும் தள்ளியிருக்க விரும்பாத அவனுடைய குணம்தானென அதற்குக் காரணமும்  சொல்லப்பட்டது. ஊதுபத்தியின் துர்நாற்றம் வழிபாட்டுக்கூடத்தை நிரப்பியது; மண்டிய புகையூடாக ஒருவித மந்திரப்  புன்னகையை  இறந்த சடலத்தின் திசையில் முயற்சித்தேன். அசைவற்றிருந்த அந்த அழகிய முகம் மெல்ல நடுங்குவதுபோல எனக்குத் தோன்றியது. சில சடங்குகளைக் காண நேர்ந்தது, அவற்றைச் சமயக் குருக்களே செய்தனர். அம்மந்திரச் சடங்குகளின்படி இறந்தவனின் ஆத்மா  அங்குள்ள  சிலைகளுக்கிடையில் அதற்கென ஒதுக்கபட்ட இடத்தில் அனுமதிக்கப்படுவதன் மூலம், இறந்தவனின் நினைவு பாதுகாக்கப்படுமென நம்பப்பட்டது. இவை நடந்து முடிந்ததும், இறுதிச்சடங்குக்கென உபயோகிக்கும் மெழுகில், தங்கத்தில் வார்த்த  முகக்கவசத்தை வைத்தனர்; அவனுடைய முகக்கூறுகளோடு அது நன்கு பொருந்தியது. களங்கமற்ற  அழகான முகத்தின் மேற்பரப்பு  விரைவில் அதன்  ஜொலிப்பையும், கதகதப்பையும் மீண்டும் உள்வாங்கிக் கொள்ளும்; அழியாமையின் செயலற்ற அடையாளமாக, இறுகமூடப்பட்ட  இப்பெட்டியில் அம்முகம்  நிரந்தமாக உறங்கும். சடலத்தின் மார்பில் அகாசியா பூங்கொத்தொன்று வைக்கப்பட்டது. பத்துபன்னிரண்டு மனிதர்கள் சவப்பெட்டியை  அதன் பலகை கொண்டு மூடினார்கள். 

கல்லறைக்கான இடத்தை தேர்வுசெய்வதில் எனக்கு இன்னமும் தயக்கமிருந்தது. நாடெங்கும் இறந்தவனுக்காக,  அவனைத் தெய்வ நிலைக்கு உயர்த்தும் சடங்குகள் ; இறுதிச்சடங்கினை முன்னிட்டு விளையாட்டுகள், நினைவு நாணயங்களை அச்சிடுதல், பெதுவெளிகளில் சிலைகளை வைத்தல் முதலான ஏற்பாடுகளுக்கு உத்தரவிட்டபோது, ரோம் நகருக்கு மட்டும் விதிவிலக்களித்தேன் ;  காரணம்,    ரோமுக்குச்  சொந்தமில்லாத மனிதர்களைப் பிரியத்துக்கு உகந்தவர்களாகக் கொண்டாடுகிற எந்தவொன்றும் நகரில் பகையை அதிகரிக்கும் என்கிற பயம் எனக்கிருந்தது. அன்றியும், இக்கல்லறைக்கு நிரந்தரமாக காவலிருக்க என்னாலும் ஆகாது.  ஆண்ட்டினோபோலிஸ் நகரின் வாயில்களருகே திட்டமிட்டிருந்த இந்நினைவுச்சின்னம் எனக்கென்னவோ அதிகம் பொதுமக்கள் புழங்குமிடமாகப் பட்டது ; எனவே பாதுகாப்பு போதாது. ஆலய குருக்களின் யோசனைப்படி அவர்கள் காட்டுமிடத்தில் கல்லறையை உருவாக்குவதென முடிவு செய்தேன். அராபிக் மலைத்தொடரின் சரிவொன்றில், நகரத்திலிருந்து மூன்று லீக்(league)தொலைவில் அவர்கள் ஓரிடத்தைத் தெரிவித்தார்கள். பண்டைக்காலத்தில் எகிப்திய மன்னர்களின் இறுதிச் சடங்கை நிறைவ நிறைவேற்றும் நிலவறையாக இருந்துதவிய குகைகளில் அதுவுமொன்று. மலைச்சரிவில் சவப்பெட்டியை எருதுகள் இழுத்துச் சென்றன; பின்னர், கயிறுகொண்டு சுரங்க வழியாக இறக்கப்பட்டு, இறுதியில் பாறையொன்றின் முகப்பில் சாய்த்து வைக்கப்பட்டது. கிளோடியோபோலிஸ் நகரத்தின் பிள்ளை, கல்லறையில் ஒரு பார்வோன்(Pharaoh)போல, ஒரு தாலமி(Ptolemy)போல, இறங்கினான். அவன் தனிமையில் விடப்பட்டான். காற்றின்றி, ஒளியின்றி, ஆண்டிற்குரிய பருவகாலங்களின்றிப் படைக்கப்பட்ட காலவெளிக்குள் நுழைந்தான் ; இப்புதிய நெறிப்படி ஒட்டுமொத்த வாழ்க்கையும் குறுகியதாகத் தோன்றியது. அப்படியொரு நிலைத்தன்மையை அல்லது அமைதியை அவன் எட்டியிருந்தான். காலத்தின் ஒளிபுகா கருவறையில் பிறவாத குழந்தையாக காத்திருக்க,   பல நூறு ஆண்டுகள் ஆயிரக்கணக்கில் அவன் இருப்பைத் திருப்பித் தராமல், அவனுடைய  இறப்பிலும் யாதொன்றையும் சேர்க்காமல், அவன் எங்ஙனம் இருந்தானோ அதில் குறுக்கிடாமல் கடந்து செல்லும். ஹெர்மோஜேனெஸ் என்னுடைய கரத்தைப்பற்றி மீண்டும் திறந்தவெளிக்கு வருவதற்கு உதவினார்; குகைக்கு வெளியே, மேற்பரப்பைத் திரும்பக் காண்பது மிகுந்த மகிழ்ச்சிக்குரிய  ஒன்று ; ஒரு வகையில் பழுப்பு நிற இருபாறைகளுக்கிடையில் காண்கிற குளிர்ந்த நீலவானத்தைத் திரும்பக் காண்பது போன்றது. மிச்சமிருந்த பயணம் ; சுருக்கமாக முடிந்தது.  அலெக்ஸாந்திரியாவில் , பேரரசி உரோமுக்குத் திரும்பக் கப்பல் ஏறினாள்.

அகஸ்ட்டஸ் நெறிமுறை ( Disciplina Augusta )

கிரேக்கத்திற்குத்  தரைமார்க்கமாகத் திரும்பினேன். நீண்டதொரு பயணம்; கீழை நாடுகளின் பயணத்தைப் பொறுத்தவரை, ஐயத்திற்கிடமின்றி அதை என்னுடைய உத்தியோகப் பூர்வமான கடைசிப் பயணமாக இருக்குமென நினைத்ததற்குக் காரணம் இருந்ததால், அனைத்தையும் என் விழிகளால் நேரில் காணவேண்டுமென ஆர்வம் கொண்டிருந்தேன். வழியில் அந்தியோக்கியா நகரில் ஒரு சில கிழமைகள் தங்க நேர்ந்தபோது அதைத் தற்போது  புதிய வெளிச்சத்தில் பார்ப்பதுபோல இருந்தது. நகரின் பெருமைமிக்க நாடக அரங்குகள், விழாக்கள், இன்பத்தை அள்ளித்தரும் டாஃனே(Daphne) தோட்டங்கள், அங்கு வண்ணமயமாக வலம் வரும்  மனிதர் கூட்டம் – இவை எல்லாம் முன்புபோல என்னை ஈர்க்கவில்லை. நான் கூடுதலாக இம்மக்களிடம் கவனிக்க நேர்ந்தது :  ஊர்வம்பு பேசுவதும், எள்ளலும், நிரந்தரப் பண்பாக மாறிப்போன மெத்தனப்போக்கும் ஆகும்; இவற்றை அலெக்சாந்திரியா நகரிலும்  காணமுடிந்தது. தவிர அறிவார்ந்த செயல்கள் என்ற பெயரில் அரங்கேறும் மூடத்தனம், கீழ்த்தரமாகக் கடைவிரிக்கப்படும் பணம் படைத்தவர்களின் ஆடம்பரம் முதலானவையும் இதிலடங்கும். ஏறக்குறைய இப்பகுதிகளில் குறிப்பிடத்தக்கவர்கள் எனச் சொல்லபட்ட மனிதர்களில் ஒருவருமே ஆசியாவில் எனது பணியையும், சீர்திருத்தத் திட்டங்களையும் ஏற்றுக்கொண்டவர்களில்லை; தங்கள் ஊருக்கும், தங்களுக்கும் இவற்றால் கிடைக்கக்கூடிய பலன்களை மட்டும் கருத்தில்கொண்டு திருப்தி அடைந்திருக்கின்றனர்.  சிரியாவின் செருக்குமிக்க தலைநகருக்கு கேட்டினை ஏற்படுத்துகின்ற வகையில் ஸ்மர்ன்(Smyrne), பெர்கமன்(Pergamon) போன்ற நகரங்களின் முக்கியத்துவத்தை அதிகரிப்பதென ஒரு கணம் யோசித்துப் பார்த்ததுமுண்டு, ஆனால் அந்தியோகியாவின் குறைபாடுகள் எல்லாப்  பெருநகரத்திலும் இயற்கையில் காணக்கூடியவைதான்; எந்தவொரு பெருநகரமும், இதற்கு விதிவிலக்கல்ல. நகர்ப்புற வாழ்க்கையின் மீது எனக்கிருந்த வெறுப்பு, இயலுமானால் விவசாய சீர்திருத்தங்களில்,  என்னைக் கூடுதலாக அக்கறைகொள்ளச்  செய்தது;  எனவே ஆசியா மைனரில் பேரரசுக்குட்பட்டவைகளை  மறுசீரமைப்புக்கு உட்படுத்தி இருந்தோம்;  அது மிகவும் சிக்கலானதுமட்டுமல்ல, காலமும் பிடித்தது; அவற்றில் இறுதிக்கட்டவேலைகள் எஞ்சியிருந்தன; அவற்றையும் முடித்தேன்;  முடிவில விவசாயிகள் நிlலைமையில் முன்னேற்றம்; பேரரசும் அதனால் பலனடைந்தது. திரேசு(Thrace) பிராந்தியத்தில் ஆண்ட்ரினோபிள்(Andrinople) நகரைக் திரும்பக் காண விரும்பினேன் ; அங்கு டேசியன், சார்மேதியர் யுத்த முன்னாள் படைவீரர்கள், பூமிதானம் மற்றும் வரிக்குறைப்பு ஆகியவற்றால் ஈர்க்கப்பட்டுப் பெரும் எண்ணிக்கையில்  குடிபோயிருந்தனர். ஆண்ட்டினோபோலீசிலும்(Antinopolis) இதுபோன்றதொரு திட்டத்தைச் செயல்படுத்தும் உத்தேசம் இருந்தது. கற்றறிந்த, கறாராகவும் வாழத் தெரிந்த நடுத்தர வர்க்கத்தின் பராமரிப்பு மற்றும் மேம்பாட்டை ஊக்குவிக்கும் நம்பிக்கையில் பல இடங்களில் உள்ள மருத்துவர்கள் மற்றும் பேராசிரியர்களுக்கும் இதே போன்ற சலுகைகளை நீண்டகாலமாகவே வழங்கிவந்தேன். பல்வேறு வகுப்பினரிடையே உள்ள குறைகளை நான் அறியாமலில்லை; ஆனால், ஓர் அரசு நீடிக்க, இவைகள் அவசியம். 

பயணத்தினூடே, இடையில் தங்கிச்செல்ல எப்போதும் ஏதன்ஸ் எனக்கு விருப்ப்மான நகரம்; இருந்தும் எனது சொந்த வாழ்க்கையோ அல்லது வரலாறோ – நினைவுகள் எதைப்பற்றியதாயினும் ஏதன்ஸ் நகரின் அழகு, மிகவும் குறைவான தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதை வியந்திருக்கிறேன். ஒவ்வொரு விடியலின்போதும் நகரத்தைப் புதிதாக உணர்வேன். இம்முறை அர்ரியன் இல்லத்தில் தங்கினேன். என்னைப்போலவே எலியூசிஸ் நகரில் சமய போதனைகளைப் பெற்றிருந்த அவர், அட்டிகா பிரதேசத்தில், நான் எப்படி யூமோல்பைட்ஸ்(Eumolpides) என்கிற பாதிரியார்கள் குடும்பத்தில் சுவீகாரமாக வளர்ந்தேனோ அதுபோல அவர் கேரைக்ஸ் (Kerykes) என்கிற பெரிய குருத்துவக் குடும்பமொன்றின் பிள்ளையாக வளர்ந்தவர் ; அக்குடும்பத்திலேயே மணமும் புரிந்துகொண்டார்; அவருடைய  மனைவி பெருமையும், அழகும் ஒருசேரப்பெற்ற ஏதன்ஸ் நகர ஓர் இளம்பெண். இருவருமே கவனமுடன் என்னைப் பராமரித்தவர்கள். ஏதென்ஸுக்கு நான் அறக்கொடையாக வழங்கிய புதிய நூலகத்திலிருந்து  சில அடிகள் தூரத்தில்  அவர்களது வீடு இருந்தது.  நூலகத்தில்  தியானத்திற்கும் அதற்கு முன்பாக ஓய்வெடுக்கவும்  வாய்ப்புகளிருந்தன; உதவியாக சௌகரியமான இருக்கைகள்,  அடிக்கடி நிலவும் கடுங்குளிர்காலத்தை எதிர்கொள்ள போதுமான வெப்பம், நூல்களை அடுக்கிவைத்த கூடங்களை எளிதாக அணுகுவதற்குப் படிக்கட்டுகளெனக் குறையின்றி அனைத்துமிருந்தன; ஆலபாஸ்ட்டர்(albâtre) என்கிற பளிங்குக்கல் மற்றும் தங்கத்திற்கு நிகரான ஆடம்பரம் இங்கிருப்பினும்; அமைதி, அடக்கம் இரண்டும் அவற்றின் சிறப்பு. நூலகத்தில் விளக்குகளின் தேர்விற்கும் அவற்றின் இருப்பிடத்திற்கும் பிரத்தியேகக் கவனம் செலுத்தப்பட்டது. பழைய தொகுதிகளைச் சேகரித்துப் பாதுகாப்பது; புதிய நகல்களைப் படியெடுக்க கடமை உணர்வுள்ள எழுத்தர்களை நியமிப்பது போன்றவற்றின் தேவையை நான் அதிகமுணர்ந்த தருணமது. இந்த நற்பணிக்கு, முன்னாள் படைவீரர்கள் மற்றும் நாட்டின் வளத்திற்கு உழைக்கிற ஏழைக் குடும்பங்கள் ஆகியோருக்குதவ அரசுகாட்டிய அதே வேகம் தேவைப்பட்டது; நாரியப்பொருட்கள் மற்றும் எழுதும் மை துணைகொண்டு சிந்தனைகள் நம்மைத் தேடிவருகின்றன. இவற்றை அழிப்பதற்கு ஒன்றிரண்டு யுத்தங்களும், அவற்றைத் தொடரும் இன்னல்களும், ஈவிரக்கமற்ற காட்டுமிராண்டித்தனமான ஒரு சில மன்னர்களின் மோசமான ஆட்சிக்காலமும் போதும். இந்த பண்பாட்டுரிமையால்  பயனுறும் ஒவ்வொரு மனிதனும் ஏதோவொரு வகையில் பாக்கியசாலி; அவ்வகையில் நூலகம் மூலம் தானடைந்த பண்பாட்டுப் பலனை மானுடத்திற்காகக் கட்டிக் காக்கவேண்டிய பொறுப்புமிக்க பணி ஒவ்வொரு மனிதனுக்கும் இருக்கிறது.

இக்காலகட்டத்தில் நிறையப் படித்தேன். ஒலிம்பியாட் என்ற பெயரில் காலவரிசைப்படி செனபோன் கிரேக்கம்(Xenophon’s Hellenica) பற்றிய வரலாற்றைத்  தொடர்ந்து எழுத் பிளேகனை உற்சாகப்படுத்தினேன்; அத்தொடர் எனது ஆட்சிக்காலத்தையும் உள்ளடக்கி எழுதப்பட வேண்டுமென்பது எனது விருப்பம். இதொரு துணிச்சலான திட்டம் ; தவிர, எளிமையான இந்தக் கிரேக்க வரலாற்றை, ஓரளவிற்கு உரோமாபுரி நகரின்  மகத்தான வரலாற்றின் தொடர்ச்சியெனலாம். பிளேகன் சொல்லும்முறை எரிச்சலூட்டும்; அதுவன்றி வறட்சித் தன்மையும் கொண்டது;   ஏற்கனவே முடிக்கப்பட்டிருந்த அவற்றில் சிலவற்றைச் சரி செய்யவேண்டும் ; உண்மைகளையும் திரட்டவேண்டும்.. இத்திட்டத்தால் கடந்தகால சரித்திர ஆசிரியர்களைத் திரும்ப அறியமுற்பட்டேன்; சொந்த அனுபவத்தைக்கொண்டு நான் மதிப்பிட முடிந்த அவர்கlளுடைய ஆக்கங்கள் சில இருண்மையான கருத்துக்களை என்னுள் நிரப்பின. ஆட்சியாளர்கள் எவராயினும் அவர்களுடைய ஆற்றலும், நல்லெண்ணமும், எதிர்பாராத மற்றும் ஆபத்தான சம்பவங்கள் முன்பும்; திட்டமிடவோ, சமாளிக்கவோ, முடிவெடுக்கவோ  இயலாத மிகவும் குழப்பமான பேரிடர்கள் முன்பும் அர்த்தமற்றுப் போகின்றன. கவிஞர்களையும் தேடினேன்; பலகாத தூரத்திற்குச் சொந்தமான  கடந்த காலத்திலிருந்து, ஒரு சில முழுமையான மற்றும் தூய்மையான குரல்களைப் பிரித்தறிய நான் விரும்பினேன். அப்படித்தான் கவிஞர் தியோக்னஸ் (Théognis) எனக்கு நண்பரானார்; அவர் மேட்டுக்குடியினர், புகலிடவாழ்க்கை, மாயை, பரிவு ஆகியவற்றிற்கு மனதில் இடம்கொடாமல்  பிரச்சினைகளை அவதானித்த மனிதர்;  நாம் தீமைகளென  அழைக்கிற பிழைகள் மற்றும் குறைபாடுகளைப் பகிரங்கமாக கண்டிக்க எப்போதும் தயாராக இருந்தவர் ; எதிலும் தெளிவான பார்வை ; காதலின் உச்சக்கட்ட பரவசங்களைச்  சுவைத்தவர்;  அவருக்கும், அவரைப்போலவே மேட்டுக்குடியிலிருந்து வந்த அவருடைய பிரதிநிதி – இளைஞர் சைர்னஸ்(Cyrnus) என்பவருக்கும், நெருக்கமான பந்தமிருந்தது. சந்தேகங்கள், பொறாமைகள், பரஸ்பர மனக்குறைகள் ஆகியவற்றிற்கிடையிலும் ; ஒருவரின் முதுமைக் காலம் வரையிலும், மற்றவரின் நடுத்தரவயதுவரையிலும்; அப்பந்தம் நீடித்தது. மேகராவின்(Megare) இளைஞனிடம், « நான் சாகமாட்டேன் » என அவர் அளித்திருந்த வாக்குறுதியை, ஆறு நூற்றாண்டுகளுக்குப் பிறகு நான் நினைவிற்கொள்ள முடிந்ததெனில், அவ்வாகுறுதி வெற்று வார்த்தையல்ல. ஆனால், பண்டைய கவிஞர்களில், குறிப்பாக ஆன்டிமக்கஸ்(Antimaque) என்னை ஈர்த்தார். கவிதைகளில் அவர் கையாளும் தெளிற்ற, அடர்த்தியான பாணியை நான் மகிழ்ந்து பாராட்டுவேன்; விரிவாகச் சொல்லப்பட்டிருக்கும், எனினும் செறிவானது, அக்கவிதைகள் பெரிய வெண்கலக்கோப்பை கொள்ள நிரப்பபட்ட கெட்டியான திராட்சை இரசம். கவிஞர் ரோட்ஸ் அப்போலோனியஸ்(Apollonius) எழுதிய  ஆர்கோனோட்டிகா(Argonautica) கவிதையில் இடம்பெறும் திருப்பங்கள் நிறைந்த ஜேசன்(Jason) பயணம் எனக்கு மிகவும் பிடித்தமானது. ஆண்ட்டிமாக்கஸ் தொடுவானங்கள் மற்றும் பயணங்களின் மர்மங்களை நன்றாகப் புரிந்து கொண்டிருந்தார் ; அதுபோல என்றென்றும் நிலைத்திருக்கும் இந்த இயற்கை வெளியில் குறுகிய காலமே உயிர்வாழும் மனிதன் எறியக்கூடிய நிழலையும் விளங்கிக் கொண்டிருந்தார். தனது மனைவி லிடியாவின் இறப்பிற்கு உணர்ச்சி வசப்பட்டு அழுத மனிதர்; வலி மற்றும் துக்கத்தின்பாற்பட்ட  அனைத்துப் புனைவுகளையும் கொண்ட அந்த நீண்ட கவிதைக்கு இறந்த மனைவியின் பெயரைச் சூட்டியிருந்தார்.  இந்த லிடியாவை உயிருடனிருக்கிறபோது நான் ஒருவேளை அவரைப் பாராது இருந்திருக்கலாம்., ஆனால் அவர்தான் மிகவும் பரிச்சயமுள்ள நபராக, எனது சொந்தவாழ்க்கை பெண்மாந்தர்களில் மிகவும் விரும்பத்தக்கவராக மாறியிருந்தார். இக்கவிதைகளைக் கிட்டத்தட்ட மறந்திருந்தேன் ;  இருந்தும் அவைதான், இறவாமை குறித்த  நம்பிக்கையை மெல்ல மெல்ல அப்போது எனக்கு மீட்டுத் தந்தன.

தொடரும்….

Series Navigation<< அதிரியன் நினைவுகள் -30அதிரியன் நினைவுகள் – 32 >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.