தேடலும் மறத்தலும்

அட்சுததாவுக்குப் பல காதல்கள் இருந்ததாக “யமாதோவின் கதைகள்” குறிப்பிடுகிறது. இந்தப் பெண்ணின் வரவால் பழைய நினைவுகள் மனதைவிட்டு அகன்றுவிட்டன என்று மட்டுமே பாடலில் இருப்பதால் உரையாசிரியர்கள் இருவிதமாகப் பொருள் கொள்கிறார்கள். முந்தைய காதல்கள் யாவும் மறக்கப்பட்டுவிட்டன என்றும் இவர்போன்ற ஒரு பெண்ணைச் சந்திக்கக் காத்திருந்த காலத்தில் ஏற்பட்ட இன்னல்களை இக்காதல் மறக்கச் செய்துவிட்டது என்றும் கூறுகிறார்கள்.

காதல்வலி விதைக்கும் வெறுப்பு

இப்பாடலின் வரிகளைக் கொண்டு காதலர்கள் இருவருக்கும் சந்திப்பு நிகழ்ந்ததா இல்லையா என உறுதியாகக் கூற இயலவில்லை. சில உரையாசிரியர்கள் சந்தித்தபின் பிரிவு ஏற்பட்டதால் உண்டான வலி என்றும் சிலர் சந்திக்க முயன்றும் இயலாததால் ஏற்பட்ட வலி என்றும் பொருள்கொள்கிறார்கள். ஆனால் எல்லா உரையாசிரியர்களும் ஒப்புக்கொள்ளும் பொதுவான கருத்து, காதலர்களின் துன்பத்துக்குக் காரணம் அவர்கள் மிகவும் எதிர்நோக்கியிருக்கும் சந்திப்புதான்

மறவேன் பிரியேன் என்றவளே!

காதலியால் கைவிடப்பட்ட ஆணொருவனின் சார்பாக எழுதப்பட்டதாக ஒரு குறிப்பு காணப்படுகிறது. ஜப்பானின் தற்போதைய மியாகி மாகாணத்தில் தகாஜோ நகரில் சுவேனோ மட்சுயமா என்றொரு மலை இருக்கிறது. இது ஜப்பானின் மிக உயரமான மலைகளில் ஒன்று. எப்பேர்ப்பட்ட சுனாமியும் அதனை மூழ்கடிக்க முடியாது. எனவே இது நடக்கவியலாத நிகழ்வுகளுக்கு உவமையாக ஜப்பானிய இலக்கியங்களில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது

காற்றினும் கடியது அலர்

மறைத்தாலும் மறையாதது காதல் என்பதால் அதனால் அலர் எழுந்துவிடுகிறது. ஆமாம், அந்தக் காலத்தில் காதலை ஏன் மறைக்க இத்தனை மெனக்கெடுகிறார்கள்? இசேவின் கதைகள் தொகுப்பும் கென்ஜியின் கதைகள் தொகுப்பும் இதற்குத் தரும் விடை காதலர்களுக்கு இடையேயான பதவி வேறுபாடு. காதலர்களில் ஒருவர் உயர்ந்த பதவியில் இருக்கும்போது அவரைக் காதலிக்கப் பலர் போட்டியிடுவதுண்டு. அதில் ஏதும் சிக்கல் எழாமலிருக்க மறைத்து வைக்கவேண்டியது அவசியப்படுகிறது. 

காதல் மறைத்தாலும் மறையாதது

நேரடியாகப் பொருள்தரும் இப்பாடலைக் கி.பி 946 முதல் 967 வரை அரசராக இருந்த முராகமியின் வேண்டுகோளுக்கேற்ப 960ல் இயற்றியிருக்கலாம் எனக் கருதுகிறார்கள். அந்தக்காலத்தில் நம் சங்கப்பலகை போன்று அரசவையில் தரப்பட்ட தலைப்பில் செய்யுள் இயற்றும் போட்டிகள் அவ்வப்போது நடப்பது வழக்கம். பேரரசர் முராகமியின் அரசவையில் புலவர்கள் அழைக்கப்பட்டு அரசருக்கு இடமும் வலமும் வரிசையாக அமரவைக்கப்பட்டு ஒவ்வோர் இணையாக ஒரே தலைப்பில் பாடல் புனையக்கூறி இரண்டில் சிறந்த பாடலைத் தேர்ந்தெடுக்கும் முறை இருந்துவந்தது.

சொல்லாத காதல் எல்லாம்

உயர்ந்து வளர்ந்த மூங்கில் காட்டினிடையே வளரும் களைகள் எளிதாக மறைந்து கொள்வதைப் போன்றதன்று காதல். யாரிடமும் சொல்லாவிட்டாலும் காதலர் மீதான அன்பின் மிகுதியால் வெட்கம் அல்லது பசலை ஆகியவற்றால் எப்படியாவது வெளிப்பட்டுவிடுகிறது. எனக்கு ஏன் உன்மீது இத்தனை காதல் பொங்கி வழிகிறது?

இறை நின்று கொல்லுமோ?

மறக்கப்பட்டாலும் காதலன் மீதுள்ள அன்பை வெளிப்படுத்தும் அகப்பாடல். தலைவனுக்கும் தலைவிக்கும் இடையே காதல் கைகூடியபோது ஒருவரை ஒருவர் மறக்கமாட்டோம் எனக் கடவுளின்முன் உறுதியேற்கின்றனர். பின்னர்க் காலப்போக்கில் காதலன் காதலியை மறந்துவிடுகிறான். காதலன் தன்னை மறந்துவிட்டான் என்ற கவலையைவிடக் கடவுளின் கோபம் உறுதிமொழியை மீறீய காதலனுக்கு ஏதாவது தீங்கு விளைவித்துவிடுமோ எனக் கவலைப்படுகிறாள் காதலி.

புல்நுனியில் பனிமுத்து

மூலப்பாடம்: கான்ஜி எழுத்துருக்களில்白露に風の吹きしく秋の野はつらぬきとめぬ玉ぞ散りける கனா எழுத்துருக்களில்しらつゆにかぜのふきしくあきののはつらぬきとめぬたまぞちりける ஆசிரியர் குறிப்பு: பெயர்: கவிஞர் அசாயசு காலம்: கி.பி 9ம் நூற்றாண்டின் பிற்பகுதி (பிறப்பு இறப்பு பற்றிய குறிப்பான தகவல்கள் இல்லை). இத்தொடரின் 22வது பாடலை இயற்றிய புலவர் யசுஹிதேவின் மகன் என்பதைத் தவிர இவரைப்பற்றிய மேலதிகத் தகவல்கள் ஏதும் தெரியவில்லை. “புல்நுனியில் பனிமுத்து”

கோடைநிலா எங்கே?

இயற்கையைப் போற்றும் இன்னோர் எளிய பாடல். கோடைகால இரவுகள் எப்போதும் குறுகியவை. மாலை வந்துவிட்டதே என்று மகிழ்வதற்குள் விடிந்துவிட்டதே என்ற குறிப்பால் நீண்ட நேரம் இரவின் இதத்தை அனுபவிக்க முடியவில்லையே என்ற ஏக்கம் வெளிப்படுத்தப்படுகிறது. இதனுள் ஓர் அழகியலாக அவ்விரவை அழகாக்கிய நிலவை விடியலின்போது காணமுடியாமல் போவதை, அதற்குள் மேல்வானில் சென்று மறைந்திருக்க இயலாதே!

மனித மனமும் மலர் மணமும்

மனித மனத்தின் மாறும் தன்மையையும் மலர் மணத்தின் மாறாத் தன்மையையும் ஒப்பிடும் ஒரு புறப்பாடல். இப்பாடலுக்கு ஒரு சுவையான பின்னணி கூறப்படுகிறது. முன்பு ஒரு காலத்தில் இப்பாடலாசிரியர் ஒரு குறிப்பிட்ட விடுதியில் அடிக்கடி சென்று தங்கி வந்துள்ளார். பின்னர் நெடுநாட்கள் அங்குச் செல்லவே இல்லை. மீண்டும் ஒருநாள் சென்றபோது அந்த விடுதியின் மேலாளர், இந்த விடுதி எப்போதும் மாறாமல் தங்களுக்காக ஓர் அறையை வைத்துக்கொண்டுள்ளது. நீங்கள்தான் மாறிவிட்டீர்கள் என்றாராம். இத்தனை கால இடைவெளியிலும் எப்படி வழியை நினைவு வைத்திருந்தீர்கள் என்று கேட்டார். உடனே அதற்குப் பதிலளிக்கும் விதமாக, மனிதர்கள் மனம் மாறுவார்களா எனத் தெரியாது.

நீண்ட வாழ்வே சாபமோ?

ஜப்பானிய இலக்கியங்களில் ஊசியிலை (பைன்) மரம் நீண்ட வாழ்வுக்கு உவமையாகப் பல இடங்களில் கூறப்படுகிறது. ஜப்பானின் மிக வயதான ஊசியிலை மரம் ஆயிரம் ஆண்டுகளைக் கடந்தது எனக் கணித்திருக்கிறார்கள். கொக்கின்ஷூ தொகுப்பில் பல இடங்களில் வயதான ஆண் மற்றும் பெண் ஊசியிலை மரங்கள் இணையாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. இரண்டுக்கும் இடையில் நீண்ட இடைவெளி இருந்தாலும் குறையாத அன்பைக் கொண்டிருப்பவை என விதந்தோதப்படுகின்றன. ஆனால் இப்பாடலில் சோகத்தைக் கூட்டப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

சக்குராவின் சலனம்

இந்த சக்குரா மலரின் நிலையாமையை வைத்துப் பல செய்யுள்கள் காலந்தோறும் ஜப்பானிய இலக்கியத்தில் இயற்றப்பட்டிருக்கின்றன. இத்தொடரின் 17வது பாடலின் (கடவுளும் காணா அதிசயம்) ஆசிரியரான நரிஹிரா இசேவின் கதைகள் புதினத்தில் சக்குரா பற்றி ஒரு பாடலை இயற்றியுள்ளார். இந்த சக்குரா மலர்கள் மட்டும் இல்லையென்றால் வசந்தகால இதயங்களில் எப்படி அமைதி நிலவும் என்பது அதன் பொருள். 

மலையாற்றின் இலையணை

மலையாற்றில் ஓர் அழகான தடுப்பணையைக் காண்கிறேன். காற்று மட்டுமே உலவும் ஆளரவமற்ற இவ்வனத்தில் யார் எதற்காக இந்தத் தடுப்பணையைக் கட்டினார்கள்? ஓ! காற்றுடன் போரிட்டு வீழ்ந்த மேப்பிள் இலைகளின் உடற்கூட்டமா இது?

நிலவு ஒரு பனியாகி

யொஷினோ என்பது இன்றைய நரா மாகாணத்தின் யொஷினோ நகராகும். இப்பாடல் இயற்றப்பட்டபோது அது கிராமமாக இருந்தது போலும். தலைநகர் கியோத்தோவுக்கு அருகில் யொஷினோ என்ற பெயரிலேயே மூன்று இடங்கள் இருக்கின்றன. இப்பாடலில் வரும் யொஷினோ கிராமம். முன்னர்த் தலைநகராக இருந்த யொஷினோ நகரம், இவ்விரண்டுக்கும் அருகிலேயே அமைந்துள்ள யொஷினோ மலை. இம்மூன்று இடங்களுமே பழங்குறுநூறு செய்யுள்களில் இடம்பெற்றிருக்கின்றன.

பிரிவினும் உளதோ பிரிதொன்று?

மிகவும் எளிமையாக நேரடியாகப் பொருள்கொள்ளத் தகுந்த பாடல். இதுவரை இத்தொகுப்பில் இடம்பெற்ற காதல் பாடல்களிலிருந்து சற்று வேறுபட்டது. காதலன் சந்திக்க மறுத்த துயரைக் காதலி வெளிப்படுத்தும் பாடலோ ஆணொருவன் ஒரு பெண்ணைக் கண்டவுடன் காதலில் விழும் பாடலோ அல்ல. ஏறத்தாழ நம் “முதல் மரியாதை”யில் வரும் நடுத்தர வயதுக் காதலை ஒத்தது. சாய்ந்துகொள்ளத் தோள் தேடும் ஆண்மகனுக்கு ஆறுதல் கிடைக்காத நிலையை உரைப்பது. எனவே வயதில் இளையோருக்குப் புரிவது சற்று சிரமம் என்ற முன்னுரை ஒன்றும் இப்பாடலுக்குக் காணக்கிடைக்கிறது.

வெண்பனியா வெண்மலரா?

இத்தொடரில் வெண்தோகை, வெண்மையான ஃபுஜி மலை, வெண்பனி ஆகியவற்றின் வரிசையில் இப்போது வெண்சாமந்திப்பூ. இரவெல்லாம் வெண்பனி பொழிந்துள்ளது. காலையில் கண்விழித்துச் சாளரத்தின்வழி பார்த்தால் வெண்கம்பளத்தை விரித்து வைத்தாற்போல் பனி எங்கும் படர்ந்திருந்தது. வெண்சாமந்திப்பூச் செடியின் மீதும் படர்ந்திருந்ததால் எது பூவின் இதழ், எது உறைபனி எனப் பிரித்தறிய முடியவில்லை. ஒருவேளை இதழ்களை மடித்துப் பார்த்தால் வேண்டுமானால் கண்டறியலாம்.

குளிரில் தனிமை கொடிது

மலைமீதுள்ள கிராமம் எல்லாப் பருவங்களிலும் ஆள் நடமாட்டம் குறைந்தே காணப்படும். ஜப்பானின் மலைப்பகுதிகள் அனைத்தும் பெரும்பாலும் குளிர்காலங்களில் பனிப்பொழிவைப் பெறுபவையாகவே இருக்கின்றன. எனவே, இப்பாடலில் குறிப்பிடப்படும் மலை எது என்று தெரியாவிட்டாலும் பனி பொழிவதால் மேலே செல்ல மக்கள் விரும்ப மாட்டார்கள் என்றும் இலையுதிர்காலத்தின் தொடர்ச்சியாகப் பனிக்காலம் வருவதாலும் அடுத்து வசந்தகாலம் வரும்வரை மரங்களில் இலைகள் துளிர்விடா. மனிதர்கள் வசிக்கும் மலைவீடுகள் மட்டுமின்றி மரங்களும் தனிமையை அனுபவிக்கின்றன என்று கவித்துவமாக இயற்றியிருக்கிறார்.

ஊற்றுநீர் அன்ன தூய இதயம்

கொசென்ஷூ தொகுப்பின் 1102வது பாடல் ஹெய்கேவின் கதைகள் என்ற புதினத்தில் நேரடியாக இடம்பெற்றுள்ளது. எல்லா விஷயங்களிலும் தெளிவாகச் சிந்திக்கும் தந்தைக்குத் தனது மகன் விஷயத்தில் மட்டும் அன்பு கண்ணை மறைத்தது என்ற புகழ்பெற்ற கவிதைதான் அது. கென்ஜியின் கதை புதினத்தை எழுதிய முராசாகி இவரது கொள்ளுப்பேத்தி ஆவார். இப்பாடலில் இடம்பெற்றிருக்கும் மிகா சமவெளியின் அருகில்தான் இவர் வசித்து வந்திருக்கிறார். இரு வெவ்வேறு காலகட்டங்களில் தலைநகர்களாக இருந்த நராவையும் கியோத்தோவையும் பிரிக்கும் கமோ ஆற்றின் கரையில்தான் இச்சமவெளி அமைந்துள்ளது.

காணும் பேறைத் தாரீரோ?

இயற்கையை வியக்கும் இன்னோர் எளிய பாடல். பேரரசர் உதா அரசபதவியைத் துறந்த பின்னர் ஓய் ஆறு ஓடிக்கொண்டிருக்கும் ஒகுரா மலைக்குப் பயணம் செல்கிறார். அவரது உடன்கூட்டத்தில் ஒருவராக இப்பாடலின் ஆசிரியரும் செல்கிறார். இலையுதிர்காலத்தில் ஜப்பானில் மேப்பிள் மரங்களின் இலைகள் அடர்சிவப்பு நிறத்தில் அழகாகக் காட்சியளித்துப் பருவ முடிவில் உதிர்ந்து பனிக்காலம் தொடங்கும்.

கொடிவழிச் செய்தி

பழங்கால ஜப்பானிய வழக்கத்தில் திருமணம் முடிந்தபின் மனைவி தன்வீட்டில் இருக்கத் தலைவன் அங்குச் சென்றுவருவான் என்று பார்த்தோமல்லவா? இப்பாடலில் உன்னை என்னிடம் அழைத்துவரும் எனக் குறிப்பிட்டிருப்பது பாடியவர் ஆணாக இருந்தாலும் தன்னைப் பெண்ணாகப் பாவித்துப் பாடுவதுபோல் இயற்றப்பட்டிருப்பதால்தான். கொசென்ஷூ தொகுப்பில் இப்பாடலுக்கு எழுதப்பட்டிருக்கும் முன்னுரையும் இதை உறுதிப்படுத்துகிறது. 

செவ்விழையினும் உயர்ந்த செவ்விலை

இவர் இறந்த உடனே ஜப்பானில் பிளேக் நோய் பரவத் தொடங்கி இளவரசர்கள் ஒவ்வொருவராக இறக்கத் தொடங்கினர். அரண்மனையின் கலைக்கூடம் தொடர்ந்து பலமுறை மின்னல் தாக்குதலுக்கு உள்ளானது. நாட்டின் பல பகுதிகளில் பெருமழையும் வெள்ளமும் வாரக்கணக்கில் தொடர்ந்து பேரழிவை ஏற்படுத்தின. மக்கள் இவற்றையெல்லாம் மிச்சிஜானேவின் ஆவி கோபத்தால் ஏற்படுத்தும் அழிவுகள் என நம்பத் தொடங்கினர். கோபத்தைக் குளிர்விக்கத் தலைநகர் கியோத்தோவில் கிதானோ தெம்மாங்கு என்ற இடத்தில் இவருக்கு ஒரு கோயில் கட்டப்பட்டு இடி, மின்னலின் கடவுளாக ஏற்றுக்கொள்ளப்பட்டார். பின்னர் 70 ஆண்டுகள் கழித்து இவரது கல்விப்பணிக்காகவும் இலக்கியப் பங்களிப்புக்காகவும் கல்விக் கடவுளாகவும் ஆக்கப்பட்டார்.

துயர் கூட்டும் நிலவு

இந்த இலையுதிர்காலம் எனக்கு மட்டுமானது இல்லை என்றாலும்கூட இன்றைய நிலவு ஆயிரக்கணக்கான துயரங்களை என் இதயத்துள் கிளறுகிறது. இந்த எளிய பாடல் சீனமொழிப் பாடல் ஒன்றைத் தழுவி எழுதப்பட்டது என்றொரு கருத்து நிலவுகிறது. இவரது 25 பாடல்களில் பல சீனக் கவிதைகளின் ஜப்பானிய மொழிபெயர்ப்பாக இருக்கின்றன. 

மலைவளி வீழ்த்து தருக்கள்!

இவ்வாறு காற்றுக்கான சித்திர எழுத்தை வைத்து அது தொடர்பான மென்காற்று, வன்காற்று, புயல், சூறாவளி என வெவ்வேறு பெயரடைகளைப் பயன்படுத்திப் பல சொற்கள் உருவாக்கப்பட்டன. கசே(風) என்றால் பொதுவாகக் காற்று என்று அழைக்கப்படுவது. மலை மீதிருந்து தவழ்ந்து வரும் தென்றலை யமாகசே(山風-மலைக்காற்று) என்பார்கள். யமா(山) என்றால் மலை. தவழாமல் வேகமாக வீசும் காற்றை அராஷி(嵐) என்பார்கள். மலையையும் காற்றையும் அடுத்தடுத்து இரு எழுத்துக்களாக எழுதாமல் ஒரே எழுத்தாக மேல்பாதியாகவும் கீழ்ப்பாதியாகவும் எழுதினால் அது சூறாவளிக்காற்று எனப்படும்.

நீ வருவாயென!

இப்பாடலில் நகாட்சுகி (長月) என்றொரு சொல் வருகிறது. நீண்ட நேரம் இருக்கும் நிலவு என்று பொருள். நிலவு நீண்ட நேரம் இருந்தால் இரவும் நீண்டது என்று பொருள். ஓர் ஆண்டின் நீண்ட இரவு வருவது செப்டம்பர் மாதத்தில். இலையுதிர்காலம் தொடங்கும் நேரம். ட்சுகி (月) என்ற சொல்லுக்கு மாதம் என்றும் ஒரு பொருளுண்டு. தமிழில் திங்கள் என்பதை நிலவுக்கும் மாதத்துக்கும் பொதுவாகச் சொல்கிறோமே, அதுபோல. நீண்ட நிலவு இருக்கும் இரவு என்றும் நீண்ட மாதம் காத்திருந்தேன் என்றும் சிலேடையாகப் பொருள் கொள்ளலாம்.

உயிரையும் தருவேன் உனைக்காண

இத்தொடரின் “வலிய காதல் வழிகிறதே!” என்ற 13வது செய்யுளை எழுதிய பேரரசர் யோசெய்யின் முதல் மகன்தான் இளவரசர் மொதொயோஷி. இவர் பட்டத்து இளவரசர் மட்டுமின்றிக் காதல் இளவரசரும் கூட. இவரது காதல்களைப் பற்றி “யமாதோவின் கதைகள்” என்ற 10ம் நூற்றாண்டுப் புதினம் பல்வேறு இடங்களில் பேசுகிறது. ஜப்பானிய இலக்கியத்துக்கு இவரது பங்களிப்பாகக் கொசென்ஷு தொகுப்பில் 20 பாடல்கள் இடம்பெற்றுள்ளன. இந்த இருபதும் மொதொயோஷி ஷின்னோஷு என்ற தனித் தொகுப்பாகவும் உள்ளது. கொசென்ஷூ தொகுப்பிலும் இப்பாடல் இடம்பெற்றுள்ளது. அதிலுள்ள குறிப்பின் மூலம்தான் இப்பாடல் யாரை நோக்கி எழுதப்பட்டது என்பது தெரியவருகிறது.

எத்தனை காலம்தான் தனித்திருப்பேனோ?

இத்தொடரில் நம் சங்க இலக்கியங்களைப் போலவே புவியியல் தகவல்களைத் தன்னுள் பொதித்து வைத்திருக்கும் இன்னொரு அகப்பாடல். தற்போதைய ஓசகா மாகாணத்தின் நாம்பா எனும் பகுதிதான் இங்கு நானிவா விரிகுடாவாகக் கூறப்பட்டுள்ளது. அதன் கரையோரங்களில் நாணல்கள் வளர்ந்து அழகாகக் காட்சியளிக்கும். மூங்கில் போன்று இருக்கும் அந்த நாணல்களின் இரு கணுக்களை இணைக்கும் பகுதி சற்றுத் தடிமனாகவும் சிறியதாகவும் இருக்கும்.

கனவிலேனும் வாராயோ?

அரசராக முடிசூட்டிக்கொள்ள இயலாத துணைக்குடும்பத்தைச் சேர்ந்த இவர் அரச குடும்பத்தினருடன் தலைமுறை தலைமுறையாக மண உறவு கொள்ளும் குடும்பத்தில் பிறந்தவர். நம் சோழர்களுக்குக் கொடும்பாளூர் வேளிர்களும் பழுவூர் வம்சத்தினரும் அமைந்தது போல ஜப்பானின் அரசர்களுக்கு இவர்கள். இவரது வாழ்வின் உச்சம் பெற்ற பதவியாக அரசரின் மெய்க்காவல் வலங்கைப் பிரிவின் தலைவராக இருந்தார். இவரும் காலத்தால் அழியாத 36 கவிஞர்கள் என ஜப்பானிய இலக்கிய வரலாற்றில் உள்ள காலத்தால் முற்பட்ட நிஷி ஹொங்கான்ஜி பட்டியலில் இடம்பெற்று இருக்கிறார்.

கடவுளும் காணா அதிசயம்

இசேவின் கதைகள், யமாதோவின் கதைகள், கொக்கின்ஷு ஆகிய நூல்கள் இவர் கிழக்கு ஜப்பானுக்கு இரண்டு உதவியாளர்களுடன் இடம்பெயர்ந்ததைக் குறிப்பிட்டுள்ளன. ஆனால் இரண்டு காரணங்களுக்காக இவ்விடப்பெயர்வு சந்தேகத்துக்குரியதாகப் பார்க்கப்படுகிறது. தலைநகர் கியோத்தோவிலிருந்து கிழக்கு நோக்கி இன்றைய தோக்கியோ வரை பயணப்பட்டதில் வழியிலுள்ள முக்கியமான இடங்களில் ஒவ்வொரு பாடலைப் புனைந்தார் என இசேவின் கதைகள் குறிப்பிடுகிறது. ஆனால் பாடல்களின் எண்ணிக்கையும் முக்கியமான இடங்களின் எண்ணிக்கையும் பொருந்தவில்லை. இது முதல் காரணம். மேலும், அரச குடும்பத்தில் பிறந்து உயர் பதவியில் இருக்கும் ஒருவர் வெறும் இரண்டே இரண்டு உதவியாளர்களை மட்டுமே அழைத்துக்கொண்டு அவ்வளவு தூரம் பயணம் செய்வார் என்பதும் பொருத்தமாக இல்லை.

நீ காத்திருக்கப் பொறுக்கிலேன்

எந்த இடத்தில் எந்தச் சொல்லுக்கு எந்தப் பொருள் என்று எளிதாகப் புரிந்துகொள்ளத்தான் கான்ஜி எனப்படும் சித்திரவடிவச் சீன எழுத்துருக்கள் உதவுகின்றன. சாதாரணமாக まつ என எழுதப்படும் இந்த மட்சு எனும் சொல்லை 待つ என எழுதினால் காத்திருத்தல் என்றும் 松 என எழுதினால் ஊசியிலை மரம் எனவும் பார்த்தவுடனே எளிதாகப் பொருள்கொள்ளலாம்.

உனக்காக உறைபனியில்

அரசவையில் உள்ளோர் மற்றும் உடலுழைப்பு அவ்வளவாகத் தேவைப்படாத பணியைச் செய்து வந்தவர்கள் முழுக்கை கொண்ட உடையையும் விவசாயம், தச்சுவேலை போன்ற பணிபுரிவோர் அரைக்கை ஆடைகளையும் போர்வீரர்கள் போன்ற சண்டையிடுவோர் கைப்பகுதி அற்ற ஆடைகளையும் செய்தொழில் வசதிக்காக அணிந்தனர். அரசவையில் இருந்த முழுக்கை ஆடையோர்க்கு அவர்களின் கைப்பகுதியின் தூய்மை முக்கியத்துவம் பெற்றது. அழுக்காகும் வாய்ப்புகள் குறைவு என்பதால் தனக்கு விதிக்கப்படாத ஒரு பணியைச் செய்தாலொழியக் கைப்பகுதியின் தூய்மை கெடாது எனக் கருதப்பட்டது.

துயரிலும் குன்றா அன்பு

தூரத்து வடகிழக்குத் திசையில் இருக்கும் ஷினோபு நகரத்தில் மொஜிஜுரி முறையில் வண்ணமிடப்பட்ட பட்டுத்துணியைப் போல் என் உள்ளம் காதலால் கலங்கிக் கிடக்கிறது. ஆனால் அதன் காரணமாகவெல்லாம் நான் உன் மீது வைத்த காதல் மாறிவிடாது.

ஜப்பானியப் பழங்குறுநூறு

பழந்தமிழரின் வாழ்வைக்கூறும் நம் இலக்கியங்களைப் போலவே ஜப்பானிய மொழியிலும் இலக்கியங்கள் உள்ளன. நம்மைப் போலவே, புலவர்கள் மட்டுமின்றிப் புரவலர்களும் பாடல்கள் இயற்றியிருக்கிறார்கள். கி.பி. 7ம் நூற்றாண்டு முதல் 13ம் நூற்றாண்டு வரை ஜப்பானை ஆண்ட பல அரசர்களும் அரசியரும் நிலப்பிரபுக்களும் மதகுருக்களும் இயற்றிய பாடல்களில் சிறந்த 100 பாடல்களைத் தேர்ந்தெடுத்து ஃபுஜிவாரா வம்சத்தைச் சேர்ந்த சதாய்யே என்ற மன்னர் கி.பி. 1235ல் 百人一首 (Hyaku nin isshu – Verses from Hundred people) என்ற நூலாகத் தொகுத்திருக்கிறார். இவர் இயற்றிய ஒரு பாடலும் 97வது பாடலாக இத்தொகுப்பில் இடம்பெற்றிருக்கிறது.