மலைவளி வீழ்த்து தருக்கள்!

மூலப்பாடம்:

கான்ஜி எழுத்துருக்களில்
吹くからに
秋の草木の
しをるれば
むべ山風を
嵐といふらむ

கனா எழுத்துருக்களில்
ふくからに
あきのくさきの
しをるれば
むべやまかぜを
あらしといふらむ

ஆசிரியர் குறிப்பு:

பெயர்: புலவர் யசுஹிதே

காலம்: கி.பி. 9ம் நூற்றாண்டின் நடுப்பகுதி.

இத்தொடரின் “இணையற்ற அழகும் நிலையற்றதே” என்ற 9வது செய்யுளை எழுதிய புலவர் கொமாச்சி ஓனோவின் காதலர்களில் ஒருவர்தான் இப்பாடலின் ஆசிரியர். கி.பி 920ல் புலவர் ட்சுராயுக்கி தலைமையில் தொகுக்கப்பட்ட கொக்கின்ஷு பாடல்தொகுப்பின் அணிந்துரையில் இவர்களுக்கு இடையே இருந்த காதல் குறிப்பிடப்பட்டுள்ளது. காலத்தால் அழியாத 36 கவிஞர்கள் என ஜப்பானிய இலக்கிய வரலாற்றில் உள்ள காலத்தால் முற்பட்ட நிஷி ஹொங்கான்ஜி பட்டியலிலும் புலவர் ட்சுராயுக்கி தலைமையில் தொகுக்கப்பட்ட ஜப்பானின் ஆறு பழம்புலவர்களின் பட்டியலிலும் இடம்பெற்று இருப்பவர். வெகுசிலரே இரண்டு பட்டியல்களிலும் இடம்பெற்றவர்கள். இவரது பிற 5 பாடல்கள் கொக்கின்ஷு தொகுப்பில் இடம்பெற்றுள்ளது. அதன் அணிந்துரையில் இவர் செய்யுளுக்குச் சொற்களைத் தேர்ந்தெடுப்பதில் வல்லவர் என்றும் இவரது செய்யுள்கள் ஒரு பணக்கார வியாபாரிக்கு ஆடம்பரமான ஆடைகளை அணிவித்ததுபோல் இருக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளன. இப்பாடலிலும் அராஷி என்ற சொல்லை வைத்து விளையாடி இருக்கிறார்.

பாடுபொருள்: காற்றின் வலிமை

பாடலின் பொருள்: மலைமீதிருந்து வீசும் காற்றால் இலையுதிர்காலச் செடிகள் சரியத் தொடங்குகின்றன. ஓ! அதனால்தான் உன் பெயர் வன்காற்றோ!

ஜப்பானிய மொழியின் எழுத்து வரலாறு கான்ஜி எனப்படும் 5000+ சித்திர எழுத்துருக்களைக் கடன் வாங்கியதிலிருந்து தொடங்கியது. இந்தச் சித்திர எழுத்துக்கள் எல்லாம் ஒவ்வொன்றும் ஒரு சொல்லைக் குறிக்கும். ஒன்று அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட எழுத்துக்களின் ஒலிப்பைக் கொண்டிருந்தாலும் ஒரே எழுத்தாகத்தான் கருதப்படும். உதாரணமாக, நிலா(月) என்ற சொல்லை எடுத்துக்கொண்டால் அது தொடர்பான மற்ற சொற்களிலும் அதே எழுத்தும் இன்னொரு தொடர்புடைய எழுத்தும் பயன்படுத்தப்படும். நிலவொளி, அமாவாசை, பவுர்ணமி, மாதம், திங்கட்கிழமை என நிலா தொடர்பான அனைத்துச் சொற்களிலும் நிலாவுக்கான சித்திர எழுத்தும் ஒளி, இன்மை, முழு, நாள் போன்றவற்றுக்கான எழுத்துக்களும் முன் அல்லது பின்னொட்டுக்களாகப் பயன்படுத்தப்பட்டுச் சொற்கள் உருவாக்கப்பட்டன. 

இந்த 5000+ எழுத்துக்களில் ஒற்றை ஒலிப்பைக் கொண்டிருக்கும் சொற்களை மட்டும் மேலும் எளிமைப்படுத்தி ஹிராகனா, கதாகனா என 46 எழுத்துக்களைக் கொண்டு அரிச்சுவடியை உருவாக்கினார்கள். அ, இ, உ, எ, ஒ எனக் குறில் எழுத்துக்களை மட்டும் கொண்டு, க், ச், ட், ந், ப், ம், ய், ர், வ் ஆகிய மெய்யெழுத்துக்களுடன் மொத்தம் 40 உயிர்மெய் எழுத்துக்களையும் ‘ன்’ என்றொரு மெய்யெழுத்தையும் உருவாக்கினர். ஜப்பானிய மொழிச் சொற்கள் கான்ஜியிலும் இணைப்பு உருபுகள் (ஐ, ஆல், கு, இன் முதலான வேற்றுமை உருபுகளும் எதிர்மறை மற்றும் காலம் குறிக்கும் முன்னொட்டு, பின்னொட்டுகளும்) ஹிராகனாவிலும் வேற்றுமொழிச் சொற்கள் கதாகனாவிலும் எழுதப்படும். 

இவ்வாறு காற்றுக்கான சித்திர எழுத்தை வைத்து அது தொடர்பான மென்காற்று, வன்காற்று, புயல், சூறாவளி என வெவ்வேறு பெயரடைகளைப் பயன்படுத்திப் பல சொற்கள் உருவாக்கப்பட்டன. கசே(風) என்றால் பொதுவாகக் காற்று என்று அழைக்கப்படுவது. மலை மீதிருந்து தவழ்ந்து வரும் தென்றலை யமாகசே(山風-மலைக்காற்று) என்பார்கள். யமா(山) என்றால் மலை. தவழாமல் வேகமாக வீசும் காற்றை அராஷி(嵐) என்பார்கள். மலையையும் காற்றையும் அடுத்தடுத்து இரு எழுத்துக்களாக எழுதாமல் ஒரே எழுத்தாக மேல்பாதியாகவும் கீழ்ப்பாதியாகவும் எழுதினால் அது சூறாவளிக்காற்று எனப்படும்.

இப்பாடல் இந்த அராஷி என்னும் சித்திர எழுத்தையும் அதன் பொருளையும் வியக்கிறது. எல்லா மொழிகளிலும் ஒரே ஒலிப்பைக் கொண்டு பல பொருள்களைத் தரும் சொற்கள் உண்டு. உதாரணமாக அச்சு என்ற சொல் பதிப்புத்துறையில் எழுத்துக்களைக் கோப்பதையும் போக்குவரத்தில் கடையாணி என்ற பொருளையும் வரைபடங்களில் திசையையும் குறிக்கப் பயன்படுகிறது. நமக்குத் தமிழில் வெவ்வேறு எழுத்துமுறைகள் இல்லையாதலால் மூன்று சொற்களையும் ஒரே மாதிரி அ-ச்-சு என்றே எழுதுகிறோம். ஆனால் ஜப்பானிய மொழியில் கான்ஜி என்ற வசதியின் மூலம் ஒவ்வொரு சூழலுக்கும் அதற்கேற்ற எழுத்தைப் பயன்படுத்தி அச்சு என்பதை மூன்று விதமாக எழுதுகிறார்கள். படிப்போர்க்கும் அதன் பொருள் பார்த்தவுடன் விளங்கிவிடுகிறது. ஜப்பானிய மொழியில் அராஷி என்ற சொல்லுக்கு வன்காற்று(嵐) என்றும் அடித்துச் செல்லுதல் (荒らし) என்றும் இரு பொருள்கள் உள்ளன. 

இலையுதிர்காலத்தில் மலைமீதிருந்து வரும் வலிமையான காற்று செடிகளையும் சிறுமரங்களையும் சரித்து வீழ்த்தி அடித்துச் செல்வதால்தான் அராஷி என்ற பெயர் அக்காற்றுக்கு வந்ததோ என வியந்து வார்த்தை விளையாட்டு விளையாடி இருக்கிறார் ஆசிரியர்.

இலைகள் உதிர்வு இயல்பாய் இருக்கும்
மலையில் உதிக்கும் பவனம் - நிலைஇல்
நிலையில் தருக்களை வைக்கவே நின்பெயர்
ஆயிற்றோ வல்லிய காற்று!

பவனம் - காற்று (நல்ல காற்றைத் தரக்கூடிய முற்றங்களைக் கொண்ட பெரிய வீடுகளுக்கும் இதனால் பவனம் என்ற பெயர் வந்திருக்கலாம்)
Series Navigation<< நீ வருவாயென!துயர் கூட்டும் நிலவு >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.