பனிவிலகலில் அக்கரை வெண்மை

மூலப்பாடம்:

கான்ஜி எழுத்துருக்களில்
朝ぼらけ
宇治の川霧
たえだえに
あらはれわたる
瀬々の網代木

கனா எழுத்துருக்களில்
あさぼらけ
うぢのかはぎり
たえだえに
あらはれわたる
せぜのあじろぎ

ஆசிரியர் குறிப்பு:

பெயர்: புலவர் சதாயொரி

காலம்: கி.பி. 995-1045.

இத்தொடரின் 55வது பாடலை (நெஞ்சம் மறப்பதில்லை) இயற்றிய புலவர் கின்த்தோவின் மகனும் பேரரசர் முராகமியின் மகள் வயிற்றுப் பேரனும் ஆவார். 60வது பாடலை (தனிவழியில் கவிப்பயணம்) இயற்றிய புலவர் கொஷிக்கிபுவைப் போட்டியின்போது எள்ளி நகையாடியவர் இவர்தான். அரசவையில் பல உயர்பொறுப்புகளை வகித்த இவர் கவிஞர், ஓவியர், இசை வல்லுநர் எனப் பன்முக ஆளுமையாகத் திகழ்ந்தவர். ஜப்பானிய இலக்கியத்துக்கு இவரது பங்களிப்பாக 45 பாடல்கள் இடம்பெற்றிருக்கின்றன. காலத்தால் அழியாத 36 புலவர்களின் பிற்காலப் பட்டியலில் இடம்பெற்றவர்.

பாடுபொருள்: காலைப் பனியின் அழகு.

பாடலின் பொருள்: காலைநேரப் பனி மெல்லமெல்ல விலக உஜி ஆற்றின் அக்கரையில் உள்ள மூங்கில்கூட்டம் மீன்பிடி முறம்போல் தெரிகிறது.

இயற்கையை வர்ணிக்கும் நேரடியாகப் பொருள்தரும் இன்னோர் எளிய பாடல். தலைநகர் கியோத்தோவின் தெற்கில் ஓடும் நதிதான் உஜி. தற்போதைய ஷிகா மாகாணத்தின் பிவா ஏரியிலிருந்து உற்பத்தியாகும் செதா நதி தெற்கில் பாய்ந்து அமாகசே அணையிலிருந்து உஜி நதியாக மாறி மேற்கு நோக்கிப் பாய்ந்து ஓயமசாகி என்னும் இடத்தில் கட்சுரா மற்றும் கிஜு நதிகளுடன் இணைந்து யொதொகவா ஆறாக மாறி ஓஸகாவை நோக்கிப் பயணிக்கிறது. இந்த உஜி நதியின் கரைகளில் அரச குடும்பத்தினரும் அரசவை உயர்நிலை அதிகாரிகளும் தங்கள் ஓய்வு மாளிகைகளைக் கொண்டிருந்தனர். இப்புலவர் அத்தகைய மாளிகைகளில் ஒன்றிலிருந்து பனிக்காலத்தில் இக்காட்சியைக் கண்டிருக்கலாம்.

இந்த நதியின் கரையில் அஜிரோகி என்றொரு வகையான மூங்கில் செடிகள் வளர்கின்றன. மீன்பிடி வலைகள் கண்டுபிடிக்கப்படும் முன் இம்மூங்கிலின் பட்டைகளைச் சிறிது இடைவெளியுடன் முறம்போல் பின்னி ஜப்பானியர்கள் மீன்பிடிக்கப் பயன்படுத்தி வந்தார்கள் என்ற தகவலை இப்பாடல் தன்னகத்தே கொண்டுள்ளது.

வெண்பா:

எண்டிசை யாங்கனும் தண்ணம் பரவிட
வெண்பனி சூழ்வது கண்டிடக் – கண்விழி
அன்ன கயல்கொள் முறமெனத் தோன்றும்
தெவிட்டப் பருகும் விருந்து

தண்ணம் – குளிர்ச்சி


அலரினும் கொடிது உண்டோ?

மூலப்பாடம்:

கான்ஜி எழுத்துருக்களில்
恨みわび
ほさぬ袖だに
あるものを
恋にくちなむ
名こそ惜しけれ

கனா எழுத்துருக்களில்
うらみわび
ほさぬそでだに
あるものを
こひにくちなむ
なこそをしけれ

ஆசிரியர் குறிப்பு:

பெயர்: புலவர் சகாமி

காலம்: காலம் தெரியவில்லை. இப்பாடல் கி.பி. 1051ல் இயற்றப்பட்டது.

இவரது இயற்பெயர் ஒதோஜிஜு. இவரது கணவர் கிமியோரி சகாமி மாகாணத்தின் (தற்போதைய கனாகவா மாகாணம்) ஆளுநராக இருந்ததால் இவருக்கு இப்பெயர் கிடைத்தது. யகுமோமிஷோ என்றொரு கவிதைத் தொகுப்பில் இவர் பற்றிய தகவல்கள் கிடைக்கின்றன. பெண்பாற்கவிஞர்கள் அகாஜொமேமோன், முராசகி ஷிக்கிபு ஆகியோருக்கு இணையாகப் போற்றப்படுபவர். இவரது கணவரைப் பிரிந்தபிறகு முந்தைய பாடலின் ஆசிரியர் சதாயொரி, அதன் பின்னர் கவிஞர் சுகேமிச்சி ஆகியோருடன் இவருக்குக் காதல்கள் இருந்ததாகச் செவிவழிக் கதைகள் உலவுகின்றன. ஜப்பானிய இலக்கியத்துக்கு இவரது பங்களிப்பாக இவரது பெயரிலேயே அமைந்த தனிப்பாடல் திரட்டு தவிரப் பிற இலக்கியங்களில் 109 பாடல்கள் இடம்பெற்றிருக்கின்றன. காலத்தால் அழியாத 36 பெண்பாற்கவிஞர்கள் வரிசையிலும் 36 பிற்காலப் புலவர்கள் பட்டியலிலும் இடம்பிடித்துள்ளார்.

பாடுபொருள்: ஊராரின் அலருக்கு அஞ்சுதல்.

பாடலின் பொருள்: இப்போது நான் வெறுக்கும் வலிமையைக்கூட இழந்துவிட்டேன். அழுது அழுது என் சட்டையின் கைப்பகுதி தொடர்ந்து நனைந்துகொண்டே இருக்கிறது. அது நைந்து போவதைவிடக் கவலை தருவது இதனால் ஏற்படும் அலர் இதுவரை நான் சேர்த்து வைத்திருக்கும் நற்பெயரைக் கெடுத்துவிடுமே என்பதுதான்.

கி.பி. 1051ல் அரசவையில் நடைபெற்ற கவிதைப்போட்டி ஒன்றில் இப்பாடல் இயற்றப்பட்டது. இப்பாடலின் பின்புலமாக இருவேறு செய்திகள் நிலவுகின்றன. இவரது கணவர் கிமியோரியுடன் குழந்தைகள் இல்லாததால் இருவருக்குள் மனக்கசப்பு அதிகரிக்கிறது. ஒரு கட்டத்தில் பிரிந்து விடுகிறார்கள். அந்த வலியை வெளிப்படுத்த எழுதப்பட்டது என்று ஒரு சாரார் கூறுகிறார்கள். இது போட்டிக்காக அப்போதைக்குக் கொடுக்கப்பட்ட தலைப்புக்கேற்ப அந்த நேரத்தில் தோன்றிய கவிதை மட்டுமே என இன்னொரு சாரார் கூறுகின்றனர். இவர் வசித்துவந்த இடத்தில் இருக்கும் ஹக்கோனே என்ற மலைமீது இருக்கும் கொங்கென் என்ற கோயிலுக்கு 100 சோகப் பாடல்களை அர்ப்பணித்திருக்கிறார். இக்கவிதையின் பொருளையும் இவரது வரலாற்றையும் இணைத்துப் பார்க்கும்போது இரண்டும் இணைந்து இருப்பதே சாத்தியம் எனத் தோன்றுகிறது.

இத்தொடரின் முதல் பாடல் தொட்டே சட்டைப்பையின் கைப்பகுதி நனைவது சிறப்பித்துச் சொல்லப்படுகிறது. இங்கு மட்டுமின்றிப் பிற இலக்கியங்களிலும் இது காணப்படுகிறது. முதல் பாடல் போன்று பனியால் நனைவதைத் தவிர்த்துப் பார்த்தால் உழைக்கும்போது வரும் வியர்வையாலோ அழும்போது வரும் கண்ணீராலோ சட்டையின் கைப்பை நனைவதால் சட்டையை அணிந்திருப்பவர் உல்லாச வாழ்க்கை வாழவில்லை என்பது வெளிப்படுத்தப்படுகிறது.

வெண்பா:

அழுதிடும் வாழ்க்கை தொடரேல் விதியே
எழுதிடும் துன்பியல் காட்சி – வழுவிடும்
மெய்ப்பை தவிரவும் துன்பமிக நல்குமே
நற்புகழ் மாய்க்கும் அலர்

ஜப்பானியப் பழங்குறுநூறு

காவலும் தாண்டுவது காதல் எனக்கெனவே மலர்ந்தாயோ?

Discover more from சொல்வனம் | இதழ் 365 | 26 ஏப். 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.