ஒருமுறை வந்து பாராயோ?

மூலப்பாடம்:

கான்ஜி எழுத்துருக்களில்
あらざらむ
この世のほかの
思ひ出に
今ひとたびの
逢ふこともがな

கனா எழுத்துருக்களில்
あらざらむ
このよのほかの
おもひでに
いまひとたびの
あふこともがな

ஆசிரியர் குறிப்பு:

பெயர்: புலவர் இசூமி ஷிக்கிபு

காலம்: கி.பி. 976-1027க்குப் பிறகு.

பேரழகியான இவர் சிறந்த புலவராகவும் சமகாலத்தில் அறியப்பட்டவர். இவரது பேரழகே இவரது வாழ்க்கையில் பல திருப்புமுனைகளை ஏற்படுத்தியது.  தனது 20ம் வயதில் இசூமி மாகாணத்தின் ஆளுநராக இருந்த மிச்சிசதாவை மணந்தார். இதனாலேயே இப்பெயரும் பெற்றார். கி.பி 997ல் கொஷிக்கிபு என்ற மகள் பிறந்தார். பிற்காலத்தில் இத்தொடரின் 60வது பாடலை இயற்றினார். மிச்சிசதாவை மணக்கும் முன்னரே அரசவையில் பணிபுரிந்த ஓமொதொமரு என்பவருடன் வாழ்ந்து வந்தார். சில வரலாற்றுக் குறிப்புகள் மனைவி என்று குறிப்பிடுகின்றன.

மிச்சிசதாவுடன் வாழ்ந்து கொண்டிருக்கும்போதே பேரரசர் ரெய்செய்யின் மகன் இளவரசர் தமேதகாவுடன் காதல் ஏற்படுகிறது. இதை அறிந்த மிச்சிசதா திருமண உறவை முறித்துக் கொள்கிறார். சில ஆண்டுகளிலேயே மிச்சிசதா இறந்துவிடுகிறார். இவரது பெற்றோரும் மகளும் இவரை வீட்டைவிட்டுத் துரத்தி விடுகின்றனர். பின்னர் ஓரிரு ஆண்டுகளிலேயே தமேதகாவும் நோய்வாய்ப்பட்டு இறந்து விடுகிறார். 

பிறகு தமேதகாவின் தம்பி அட்சுமிச்சியுடன் காதல் ஏற்படுகிறது. அப்போதுதான் “இசூமி ஷிக்கிபுவின் நாட்குறிப்பு” என்ற அந்தப் புகழ்பெற்ற நாட்குறிப்பை எழுதுகிறார். கி.பி 1003-1004ல் 9 மாதங்கள் இருவருக்குமிடையில் பரிமாறிக்கொள்ளப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட காதல் கவிதைகள் மற்றும் நிகழ்வுகள் இந்நாட்குறிப்பில் இடம்பெற்றுள்ளன. இக்கவிதைகளில் ‘ரெங்கா’ எனப்படும் தொடர்பாடல்களும் அடங்கும். பின்னர் திருமணம் செய்துகொண்டு அட்சுமிச்சியின் அரண்மனையில் குடியேறுகிறார். ஆனால் அட்சுமிச்சியும் சில ஆண்டுகளிலேயே கி.பி 1007ல் இறந்துவிடுகிறார். 

கி.பி. 1009ம் ஆண்டு பேரரசர் இச்சிஜோவின் அந்தப்புரத்தில் பணிக்குச் சேர்கிறார். அப்போது அரண்மனையில் இராணுவத் தளபதியாக இருந்த யசுமாசா என்பவருடன் காதல் ஏற்படுகிறது. திருமணம் செய்துகொண்டு இருவரும் தாங்கோ மாகாணத்துக்கு இடம்பெயர்கின்றனர். கி.பி 1025ல் இவரது மகள் கொஷிக்கிபு இறந்துவிடுகிறார். பின்னர் இவர் புத்தமதத்தைத் தழுவிக்கொள்கிறார். கி.பி. 1027ல் தனது கடைசிப் பாடலைப் புனைகிறார். அப்போது இறந்த பேரரசி யொஷிகோவின் நினைவாகப் புத்தருக்கு நகைகளைக் காணிக்கையளிப்பதாக அமைந்திருக்கிறது. அதன் பின்னர் எப்போது இறந்தார் என்பது தெரியவில்லை.

ஜப்பானிய இலக்கியத்துக்கு இவரது பங்களிப்பாக 242 பாடல்களும் இரண்டு தனிப்பாடல் திரட்டுகளும் இடம்பெற்றிருக்கின்றன. காலத்தால் அழியாத புலவர்களின் பட்டியலில் பலவகைகள் உள்ளன. காலத்தால் முற்பட்ட பட்டியல், இடைக்காலப் பட்டியல், பிற்காலப் பட்டியல், பெண்பாற்புலவர்கள் பட்டியல் ஆகியவற்றில் இவர் இடைக்காலப் பட்டியலிலும் பெண்பாற்புலவர்கள் பட்டியலிலும் இடம்பெற்றவர் ஜப்பானிய வரலாற்றில் இவர் ஒருவரே.

பாடுபொருள்: இறக்கும்முன் ஒருமுறையாவது விரும்பியவரைக் காண முயல்வது.

பாடலின் பொருள்: என் வாழ்வு விரைவில் முடியப் போகிறது. வேறொரு உலகுக்கு உன் நினைவைக் கொண்டுசெல்ல விழைகிறேன். கடைசியாக ஒருமுறை வந்து என்னைக் காணமாட்டாயா? இப்போதே என்னைக் காண வரமாட்டாயா?

மிகவும் நேரடியாகப் பொருள் தரக்கூடிய வார்த்தை அலங்காரமற்ற எளிமையான பாடல். இப்பாடலை இவர் தன்னிலையிலிருந்து இயற்றினார் என்று கருத இடமில்லை. இவரது கடைசிப்பாடல் புத்தரின்பால் இயற்றப்பட்டது என்ற தெளிவான வரலாற்றுக்குறிப்பு நமக்குக் கிடைக்கிறது. 9 மாதகால நாட்குறிப்பில் இடம்பெற்ற பாடல்களைப் போல இதுவும் வெளியிலிருந்து படர்க்கையாக இயற்றியதுதான்.

வெண்பா:

முடிவும் நெருங்கும் உடலும் அழியும்
வடிவும் மறவாது கொள்ள – மடியுமுன்
வாராய் ஒருகணம் இன்றே அதனினும்
இன்னே தருவாய் நினைவு


நிலவென மறைந்தது நீயா?

மூலப்பாடம்:

கான்ஜி எழுத்துருக்களில்
めぐりあひて
見しやそれとも
分かぬまに
雲がくれにし
夜半の月かな

கனா எழுத்துருக்களில்
めぐりあひて
みしやそれとも
わかぬまに
くもがくれにし
よはのつきかな

ஆசிரியர் குறிப்பு:

பெயர்: புலவர் முராசாகி ஷிக்கிபு

காலம்: கி.பி. 973-1014. (1025ல் இறந்தார் என்றொரு கூற்றும் உண்டு).

உலக இலக்கியங்களில் உரைநடை தோன்றிய ஆரம்ப காலத்தில் எழுதப்பட்ட புதினங்களில் ஒன்றான ‘கென்ஜியின் கதை’யை எழுதிய இவரைப் பற்றிய ஏராளமான வரலாற்றுக் குறிப்புகள் காணப்படுகின்றன. அக்கால ஜப்பானிய சமுதாயத்தில் பெண்களுக்கு மறுக்கப்பட்ட பல உரிமைகளை இவர் கேள்விக்குள்ளாக்கித் தன் சொந்த வாழ்வில் பெற்று அனுபவித்தார். தன் இளம் வயதிலேயே பெற்ற தாயை இழந்த இவர் தனது மாற்றாந்தாயால் பல இன்னல்களுக்கு உள்ளானார். மாற்றாந்தாய் இருந்தவரை இவரது திறமைகள் வெளியே தெரியாமலேயே இருந்தன.

அக்காலத்தில் சீனமொழியைப் பயிலப் பெண்களுக்கு அனுமதி இல்லை. அரண்மனையில் அதிகாரிகளாகப் போகும் ஆண்களுக்கு மட்டுமே ஆசிரியர்களை வைத்துக் கற்றுத்தரப்பட்டது. இவரது அண்ணன் சீனத்தைப் பயில்வதற்காக இவரது தந்தை ஏற்பாடு செய்திருந்தார். வகுப்புகள் நடக்கும்போது அறைக்கு வெளியே அமர்ந்து கவனித்துத் தானே கற்று இலக்கியங்களை வாசிக்கும் அளவுக்கு முன்னேறினார். இதைக் கவனித்த தந்தை இவர் ஓர் ஆணாகப் பிறக்காமல் போய்விட்டாரே என்று வருத்தப்பட்டதைத் தன் நாட்குறிப்பில் பதிவு செய்திருக்கிறார்.

பேரரசர்கள் இச்சிஜோவின் அரசவையில் நடுத்தரநிலை அதிகாரியாக இருந்த இவரது தந்தை தமேதொக்கி கி.பி 996ல் எச்சிஜென் மாநில (தற்போதைய ஃபுக்குய் மாநிலம்) ஆளுநராகப் பணிமாற்றம் செய்யப்பட்டார். அப்போது முராசாகியும் தந்தையுடன் பயணப்பட்டார். அக்காலத்தில் தொலைதூரப் பயணங்கள் பெண்களுக்கு மறுக்கப்பட்டிருந்தன. 5 நாட்கள் ஆகும் பயணத்தை மேற்கொண்ட முதல் பெண்மணி இவர்தான். இரண்டு ஆண்டுகளில் தலைநகருக்குத் திரும்பிவந்து தன் தந்தையின் நண்பர் நொபுதக்காவைத் திருமணம் செய்துகொண்டார். ஆனால் அவருக்குப் பல மனைவிகள் மட்டுமின்றிப் பல காதலிகளும் இருந்ததால் அவரை முராசாகி வெறுக்கத் தொடங்கினார்.

பின்னர் சில ஆண்டுகளில் நொபுதக்கா அப்போது ஜப்பானில் பரவிய காலரா பெருந்தொற்றால் இறந்துவிடுகிறார். அதன் பிறகு சிலகாலம் முராசாகி தனிமை தன்னை வாட்டியதாகத் தம் நாட்குறிப்பில் பதிவு செய்திருக்கிறார். குடும்ப நண்பர்களின் அறிவுரைப்படி அருகிலுள்ள ஷிகா மாநிலத்தின் பிவா எனும் ஏரிக்கரைக்குக் குடிபெயர்கிறார். அங்கிருந்த அமைதியான சூழல் இவரை இலக்கியத்தின் பக்கம் திருப்பி இசேவின் கதைகள், தக்கேதொரியின் கதைகள் போன்ற புதினங்களை வாசித்தது மட்டுமின்றிப் புகழ்பெற்ற கென்ஜியின் கதையையும் படைத்தார்.

கி.பி. 1008 முதல் 1010 வரையிலான நிகழ்வுகளை ‘முராசாகி ஷிக்கிபுவின் நாட்குறிப்புகள்’ என்று பதிவு செய்திருக்கிறார். ஜப்பானிய இலக்கியத்துக்கு இவரது பங்களிப்பாக 128 பாடல்களும் ஒரு தனிப்பாடல் திரட்டும் இந்த நாட்குறிப்பும் ‘கென்ஜியின் கதை’ புதினமும் இடம்பெற்றிருக்கின்றன. காலத்தால் அழியாத புலவர்களின் பட்டியலில் இவர் பிற்காலப் பட்டியலிலும் பெண்பாற்புலவர்கள் பட்டியலிலும் இடம்பெற்றவர்.

பாடுபொருள்: குழந்தைக்கால நண்பனைத் தற்செயலாகச் சந்தித்தபோது.

பாடலின் பொருள்: நிலவொளியை ரசித்துக் கொண்டிருந்தபோது நாம் தற்செயலாகச் சந்தித்தோம். ஆனால் உன்னை நான் கண்டுணர்வதற்குள் நிலவு மேகத்துக்குள் ஓடி மறைந்ததுபோல் சென்றுவிட்டாய்.

மிகவும் நேரடியாகப் பொருள் தரக்கூடிய வார்த்தை அலங்காரமற்ற எளிமையான பாடல். பிவா ஏரிக்கரையில் இயற்கையோடு இயைந்த வாழ்வு வாழ்ந்தபோது இயற்றப்பட்ட பாடல். தான் அனுபவித்ததை எழுதினாரா அல்லது கற்பனையா என்று தெரியவில்லை.

வெண்பா:

அந்தியில் அம்புலி ஊர்ந்திடும் மங்கலில்
வந்திடும் உன்முகம் ஆயினும் – வந்ததும்
சென்றது என்னெஞ் சறியாமை காட்டும்
முகிலில் மறையும் நிலவு


பாடல் 58: மறந்ததைக் காற்றும் மறைக்காதே!

மூலப்பாடம்:

கான்ஜி எழுத்துருக்களில்

ありま山
ゐなの笹原
風吹けば
いでそよ人を
忘れやはする

கனா எழுத்துருக்களில்

ありまやま
ゐなのささはら
かぜふけば
いでそよひとを
わすれやはする

ஆசிரியர் குறிப்பு:

பெயர்: புலவர் சான்மி

காலம்: கி.பி. 999-1082.

இத்தொடரின் முந்தைய பாடலை இயற்றிய முராசாகிக்கும் நொபுதக்காவுக்கும் பிறந்தவர் இவர். முராசாகி எழுதிய ‘கென்ஜியின் கதை’ புதினத்தின் கடைசி 10 அத்தியாயங்களை இவர் எழுதினார் என்றொரு கருத்தும் ஜப்பானிய இலக்கிய உலகில் நிலவுகிறது. ஜப்பானிய வரலாற்றில் முதன்முதலில் வெட் நர்ஸ் (பெற்ற தாய் ஏதோ காரணத்தால் குழந்தைக்குப் பாலூட்ட இயலாத சூழலில் மாற்றாந்தாயாகப் பாலூட்டும் பெண்) என்ற தகவல் இடம்பெறுவது இப்பாடலில்தான்.

கி.பி. 1026ல் அரசவையின் படைத்தளபதியாக இருந்த கனேதக்காவுடன் மலர்ந்த காதலால் ஒரு பெண்குழந்தையைப் பெற்றெடுக்கிறார். அதே காலகட்டத்தில் பேரரசர் சுஜாகுவுக்குப் பிறந்த குழந்தைக்கு ஏதோ காரணத்தால் பாலூட்டி இருக்கிறார். பின்னாளில் அக்குழந்தை இரண்டாம் ரெய்செய் என்ற பெயருடன் கி.பி. 1045ல் அரியணை ஏறியது. பின்னர் நரிஅகிரா என்பவரைத் திருமணம் செய்து ஓர் ஆண் மகவைப் பெற்றெடுக்கிறார். ஜப்பானிய இலக்கியத்துக்கு இவரது பங்களிப்பாக 37 பாடல்களும் ஒரு தனிப்பாடல் திரட்டும் இடம்பெற்றிருக்கின்றன.

பாடுபொருள்: காதலர் தம்மை மறந்துவிட்ட வருத்தம்.

பாடலின் பொருள்: அரிமா மலையின் அடிவாரத்திலுள்ள இனா சமவெளியில் இருக்கும் மூங்கில்கள் உரசும்போது வெளிப்படும் காற்று நீ என்னை மறந்துவிட்டாய் என்கிறது. ஆனாலும் நான் உன்னை மறக்கமாட்டேன்.

ஜப்பானின் புவியியல் கூறுகளைப் பதிவு செய்திருக்கும் ஒரு பாடல். தற்போதைய ஹ்யோகோ மாகாணத்தில் உள்ளது புகழ்பெற்ற அரிமா வெந்நீர் ஊற்று. ஜப்பானில் வெந்நீர் ஊற்றுகள் மிகவும் புகழ்வாய்ந்தவை. நிலத்துக்கடியில் அவிந்துபோன எரிமலைகள் இருக்கும்போது அங்கே இயற்கையாக ஏற்படும் ஊற்றில் வெளிப்படும் நீர் வெதுவெதுப்பாக இருக்கும். குளிர்காலங்களில் இத்தகைய வெந்நீர் ஊற்றுகளுக்குச் சென்று நீராடி வருவது ஜப்பானியர்களின் வழக்கம். அந்த நீரில் கந்தகச் சத்து கலந்திருப்பதால் தோலிலுள்ள நச்சுப்பொருட்கள் நீங்கிப் புத்துணர்ச்சி பெருகுவதாகவும் கருதுகிறார்கள்.

அந்த அரிமா மலையின் அடிவாரத்தில் இனா என்றொரு நதி ஓடிக்கொண்டிருக்கிறது. அதன் இருபுறமும் உள்ள சமவெளியில் மூங்கில் மரங்கள் வளர்ந்து காணப்படுகின்றன. அந்த மூங்கில்களினூடே காற்று புகுந்து இசையாக வெளிப்படும்போது அந்த இசை “ஆமாம். அப்படித்தான். நீ என்னை மறந்துவிட்டாய்” என்பதுபோல் ஒலிப்பதாக ஆசிரியர் கூறுகிறார். நம் கோவலனும் கண்ணகியும் மதுரை நோக்கி வரும்போது வழியில் கட்டப்பட்டிருந்த தோரணங்கள் அவர்களை வரவேண்டாம் எனக் கூறியதுபோல் இளங்கோவடிகள் பயன்படுத்திய தற்குறிப்பேற்றத்துடன் இதை ஒப்பிடலாம். தன்னை மறந்துவிட்ட ஆணை நோக்கிப் பெண் பாடுவதாக அமைந்துள்ள இப்பாடலின் கடைசி வரியை “இருப்பினும் நான் உன்னை மறக்க மாட்டேன்” என முடிக்கிறார்.

வெண்பா:

அன்பதன் தாக்கம் வருத்தமும் தந்திடத்
துன்பமும் கொள்வது பெண்டிரே – என்பதை
மூங்கிற் குழலும் மறந்தனை என்றிடினும்
வாழ்கிலேன் உன்னை மறந்து

(மீண்டும் அடுத்த தான்காவில் சந்திப்போம்)


Discover more from சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.