துயர்சூழ் உலகில் தனிமை

மூலப்பாடம்:

கான்ஜி எழுத்துருக்களில்
人もをし
人も恨めし
あぢきなく
世を思ふゆゑに
物思ふ身は

கனா எழுத்துருக்களில்
ひともをし
ひともうらめし
あぢきなく
よをおもふゆゑに
ものおもふみは

ஆசிரியர் குறிப்பு:

பெயர்: பேரரசர் கோதொபா

காலம்: கி.பி. 1180-1239.

ஜப்பானில் சாமுராய்களின் ஆட்சி தொடங்கியபோது அரசராக இருந்தவர் இவர். இவரது அண்ணன் அந்தொக்கு கெம்ப்பெய்ப் போரில் கொல்லப்பட்டுவிட, தனது 3வது வயதிலேயே அரசராகிவிட்டார். இத்தொடரின் 93வது பாடலில் (காலமென்ற தேரே, ஓடிடாமல் நில்லு!) பேரரசர் கோதொபாவின் வரலாறு கூறப்பட்டுள்ளது. கி.பி. 1221ல் ஒக்கி தீவுக்கு நாடுகடத்தப்பட்ட பின்னர் இலக்கியத்தின் பக்கம் கவனத்தைத் திருப்பத் தொடங்கினார். ஷின் கொக்கின்ஷூ தொகுப்பைத் தொகுத்தவர்களில் முதன்மையானவராகத் திகழ்ந்தார். 18 ஆண்டுகள் அத்தீவில் வாழ்ந்த பின்னர் கி.பி. 1239ல் இறந்தார். ஜப்பானிய இலக்கியத்துக்கு இவரது பங்களிப்பாக கோதொபாவின் கொகுதென் என்றொரு தனிப்பாடல் திரட்டு இடம்பெற்றுள்ளது.

பாடுபொருள்: முதுமையில் வாட்டும் தனிமை

பாடலின் பொருள்: சில நேரங்களில் மனிதர்களை நேசிக்கிறேன். சிலநேரங்களில் வெறுக்கிறேன். என் ஆசைகள் நிறைவேறுவது என் கையில் இல்லை என்று தெரிந்தாலும் அவை பகல் கனவாகப் போவது என்னை வருத்துகிறது.

முதுமையின் வலியை உணர்த்தும் ஓர் எளிய பாடல். ஓசை நயத்துக்காக இப்பாடல் விதந்தோதப்பட்டது. முதல் இரண்டு வரிகளும் கடைசி இரண்டு வரிகளும் ஒரே வாய்ப்பாடு கொண்டு ஒன்றுபோல் ஒலிக்குமாறு இயற்றப்பட்டிருக்கின்றன.

வெண்பா:

விருப்பம் சிலவாகக் காய்தல் பலவாய்ச்
சுருங்கப் பகரின் நிலையா – உருவமும்
ஆசையும் கைகூடா தேங்கிடும் ஏக்கமும்
ஆகும் பகலின் கனவு


மீண்டு(ம்) வருமோ?

மூலப்பாடம்:

கான்ஜி எழுத்துருக்களில்
百敷や
ふるき軒端の
しのぶにも
なほあまりある
昔なりけり

கனா எழுத்துருக்களில்
ももしきや
ふるきのきばの
しのぶにも
なほあまりある
むかしなりけり

ஆசிரியர் குறிப்பு:

பெயர்: பேரரசர் ஜுன்தொக்கு

காலம்: கி.பி. 1197-1242.

முந்தைய பாடலை (துயர்சூழ் உலகில் தனிமை) இயற்றிய பேரரசர் கோதொபாவின் மூன்றாவது மகன். கி.பி. 1221ல் ஜோக்யூ போரில் தோற்று ஒக்கி தீவுக்கு கோதொபா நாடு கடத்தப்பட்டபோது இவர் சதோ தீவுக்குக் கடத்தப்பட்டார். ஜப்பான் வரலாற்றில் நெடுங்காலமாகவே சதோ தீவு அதிகாரம் பெற்றிருந்த அரசியல் கைதிகளின் சிறைக்கூடமாக இருந்திருக்கிறது. எனவே, அவர்களுடன் சேர்த்து அங்கு கலைகளும் வளர்ந்திருந்தன. 

13ம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே அரசாட்சி வீழ்வதற்கான அறிகுறிகள் தென்படத் தொடங்கிவிட்டன. மேற்கிலிருந்த தலைநகர் கியோத்தோவுக்கு இணையான அதிகாரம் கிழக்கிலிருந்த கமாகுராவில் ஷோகன்கள் வடிவில் வளரத் தொடங்கியது. அதை முறியடிக்கப் பேரரசர்கள் கோதொபாவும் ஜுன் தொக்குவும் திட்டமிட்டு வீரர்களை ஏவினர். ஆனால் இவர்களால் சுமார் 17,000 வீரர்களை மட்டுமே திரட்ட முடிந்தது. எனவே, சுமார் 190,000 வீரர்களைக் கொண்டிருந்த ஷோகன்கள் இதை எளிதாக முறியடித்தார்கள். ஷோகன்களின் கைப்பாவையாக இருக்கச் சம்மதித்த கோஹொரிகவாவைத் தவிர மற்ற இளவரசர்கள் அனைவரும் வெவ்வேறு தீவுகளுக்கு நாடுகடத்தப்பட்டனர். சதோ தீவுக்குக் கடத்தப்பட்ட பின் அங்கு 21 ஆண்டுகள் வாழ்ந்து மறைந்தார். 

இப்பழங்குறுநூறு தொகுப்பின் ஆசிரியர் சதாய்யேவிடம் கவிதை பயின்றவர். இப்பாடல் கி.பி. 1216ல் இயற்றப்பட்டது.  அதன் பின்னர் கி.பி. 1219ல் யக்குமோ மிஷோ என்னும் புகழ்பெற்ற இலக்கியத்தைப் படைத்தார். எட்டு மேகக்கூட்டங்களைப் பற்றியது எனப் பொருள்படும் தொடர்பாடல்களைக் கொண்ட ஒரு தொகுப்பு. ஜப்பானிய இலக்கியத்துக்கு இவரது பங்களிப்பாக 159 பாடல்கள் வெவ்வேறு இலக்கியங்களில் இடம்பெற்றிருக்கின்றன.

பாடுபொருள்: வளமான கடந்த காலத்தை எண்ணி ஏங்குதல்

பாடலின் பொருள்: பாழடைந்து வரும் இவ்வரண்மனையின் தாழ்வாரங்களில் புல்பூண்டுகள் படர்ந்து கொண்டிருக்கின்றன. என்னதான் முயன்றாலும் கடந்தகாலம் மீண்டும் வராதே!

அரசரின் அதிகாரங்கள் குறைந்துகொண்டு வருவதை உணர்ந்தபோதே இப்பாடலை இயற்றியிருக்கிறார். இழந்த அதிகாரத்தை மீட்டெடுக்கவேண்டும் என்ற வேட்கையும் இப்பாடலில் தெரிகிறது. என்னதான் முயன்றாலும் கடந்தகாலப் பெருமைகள் அவ்வளவு எளிதில் திரும்ப வராது என்ற கையறுநிலையும் தொனிக்கிறது. கி.பி. 9-10ம் நூற்றாண்டுகளில் வானளாவிய அதிகாரம் கொடிகட்டிப் பறந்த காலத்தில் நாட்டில் அமைதியும் அதன் விளைவாகக் கலைகளும் உச்சத்தில் இருந்தன.

ஷினொபு என்ற சொல் இப்பாடலில் சிலேடையாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. வெவ்வேறு பொருள்களைத் தரும் ஒரே ஒலிப்பைக் கொண்ட இருவேறு சொற்கள் மிகவும் நுட்பமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஷினொபு என்றால் பாழடைந்த கட்டடங்களில் முளைக்கும் புல்பூண்டுகள் என்றும் கையில் இல்லாத ஒரு பொருளை எண்ணி ஏங்கும் ஏக்கம் என்றும் இருபொருள் கொள்ளலாம். இவற்றை வேறுபடுத்திக் காட்டத்தான் கான்ஜி எழுத்துருக்கள் பயன்படுகின்றன.

வெண்பா:

ஏங்கிடும் ஏக்கமும் கொண்டது எண்ணியே
நீங்கிடும் இன்பமும் ஆயினும் – யாங்கனும்
ஆவலும் ஆர்வமும் கொள்ளினும் மீளவும்
மீண்டு வருமோ மகிழ்வு

(தொடர் நிறைவுற்றது)

ஜப்பானியப் பழங்குறுநூறு

எரிதழல் உள்ளம்

Discover more from சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.