- ஜப்பானியப் பழங்குறுநூறு
- துயரிலும் குன்றா அன்பு
- உனக்காக உறைபனியில்
- நீ காத்திருக்கப் பொறுக்கிலேன்
- கடவுளும் காணா அதிசயம்
- கனவிலேனும் வாராயோ?
- எத்தனை காலம்தான் தனித்திருப்பேனோ?
- உயிரையும் தருவேன் உனைக்காண
- நீ வருவாயென!
- மலைவளி வீழ்த்து தருக்கள்!
- துயர் கூட்டும் நிலவு
- செவ்விழையினும் உயர்ந்த செவ்விலை
- ஊற்றுநீர் அன்ன தூய இதயம்
- குளிரில் தனிமை கொடிது
- வெண்பனியா வெண்மலரா?
- பிரிவினும் உளதோ பிரிதொன்று?
- நிலவு ஒரு பனியாகி
- மலையாற்றின் இலையணை
- சக்குராவின் சலனம்
- நீண்ட வாழ்வே சாபமோ?
- மனித மனமும் மலர் மணமும்
- கோடைநிலா எங்கே?
- புல்நுனியில் பனிமுத்து
- கொடிவழிச் செய்தி
- இறை நின்று கொல்லுமோ?
- காணும் பேறைத் தாரீரோ?
- சொல்லாத காதல் எல்லாம்
- காதல் மறைத்தாலும் மறையாதது
- காற்றினும் கடியது அலர்
- மறவேன் பிரியேன் என்றவளே!
- காதல்வலி விதைக்கும் வெறுப்பு
- தேடலும் மறத்தலும்
- ஜப்பானிய பழங்குறுநூறு 47-50
- வலிவிடு தூது
- வாள்போல் வைகறை
- நெஞ்சம் மறப்பதில்லை
- நிலவினும் நெடிது!
- இடம் மாறினும் மணம் மாறுமா?
- காவலும் தாண்டுவது காதல்
- பனிவிலகலில் அக்கரை வெண்மை
- எனக்கெனவே மலர்ந்தாயோ?
- விழியிலிருந்து நினைவுக்கு
- உள்ளும் புறத்தும் தனிமையே!
- காதல்மொழிகள் கடலலை போலே!
- கேட்டதும் கிடைத்ததும்
- துள்ளிவரும் வெள்ளலையே!
- இடம்பெயரும் புள்ளினங்காள்!
- மைக்குழற் செறிவன்ன காதல்
- துயரறுத்தலே துயரமோ?
- உள்ளத்தில் உள்ளேனா?
- தூவானமும் வெண்வானமும்
- ரகசியமானது காதல்
- உடைகளும் சுமையடி தனிமையிலே!
- காலமென்ற தேரே, ஓடிடாமல் நில்லு!
- துன்பம் போக்குவதே தூயப்பணி
- எரிதழல் உள்ளம்
- துயர்சூழ் உலகில் தனிமை

மூலப்பாடம்:
கான்ஜி எழுத்துருக்களில்
明けぬれば
暮るるものとは
知りながら
なほうらめしき
朝ぼらけかな
கனா எழுத்துருக்களில்
あけぬれば
くるるものとは
しりながら
なほうらめしき
あさぼらけかな
ஆசிரியர் குறிப்பு:
பெயர்: அமைச்சர் மிச்சினோபு
காலம்: கி.பி. 972-994.
22 வயதிலேயே அகால மரணமடைந்த இவர் ஒரு சிறந்த போர்வீரர் மட்டுமின்றிக் காலத்தால் அழியாத 36 கவிஞர்களின் பிற்காலப் பட்டியலிலும் இடம்பெற்றிருக்கிறார். பேரரசர் என்யூவின் அரசவையில் படைத்தலைவராக விளங்கிய தமேமிட்சுவின் மகனாகப் பிறந்தாலும் இவரது மாமா கனெய்யே தத்தெடுத்துக்கொண்டார். ஜப்பானிய இலக்கியத்துக்கு இவரது பங்களிப்பாக 49 பாடல்களும் தனிப்பாடல் திரட்டு ஒன்றும் உள்ளன.
பாடுபொருள்: காதலர்களைப் பிரிக்கும் விடியல்.
பாடலின் பொருள்: இப்போது விடிந்திருக்கிறது. நாம் சந்திக்க மீண்டும் இரவு வருமென்று தெரியும். இருப்பினும் உன்னிடமிருந்து பிரிப்பதால் இவ்விடியல் எனக்கு வேதனையைத் தருகிறது.
நம் சங்க இலக்கியத்தின் 157வது குறுந்தொகைப் பாடலை ஒத்திருக்கிறது இப்பாடல்.
“குக்கூ” என்றது கோழி; அதன் எதிர்
துட்கென்றன்று என் தூய நெஞ்சம்-
தோள் தோய் காதலர்ப் பிரிக்கும்
வாள் போல் வைகறை வந்தன்றால் எனவே.
ஜப்பானில் காதலின் ஒரு பகுதியாகக் காதலியின் மனை நீங்கிய காதலன் அன்றைக்கே கடிதம் அல்லது கவிதை ஒன்றை அனுப்புவார் என்று பார்த்தோமல்லவா? நேற்றைய சந்திப்புடன் நம் உறவு முடிந்து விடாது; இன்னும் தொடர விரும்புகிறேன் என்பதற்கு இக்கடிதம் ஒரு அடையாளம். இப்பாடலும் அத்தகைய ஒரு கடிதம்தான்.
இரவு முழுவதும் கூடி மகிழ்ந்திருந்த காதலர்களை விடியல் பிரித்துவிட்டது. மீண்டும் இரவு வரும் என்று தெரிந்திருந்தாலும் விடியல் ஏன் வந்தது என்ற பொருள் தொனிக்கும் நேரடியான எளிமையான பாடல்.
வெண்பா:
வறியவன் கையறென நீங்கினும் சேர்தல்
மறிதரும் என்றே மனமும் – அறியினும்
நெஞ்சம் நிறையவே வேதனை கூட்டிடும்
நம்மைப் பிரிக்கும் விடிவு
கையறு – ஏதும் செய்யவியலாத
மறிதரும் – மீண்டும் வரும்
கொடிது கொடிது தனிமை கொடிது!
மூலப்பாடம்:
கான்ஜி எழுத்துருக்களில்
嘆きつつ
ひとり寝る夜の
明くるまは
いかに久しき
ものとかは知る
கனா எழுத்துருக்களில்
なげきつつ
ひとりぬるよの
あくるまは
いかにひさしき
ものとかはしる
ஆசிரியர் குறிப்பு:
பெயர்: அமைச்சர் மிச்சிட்சுனாவின் தாய்
காலம்: கி.பி. 937-995.
ஃபுஜிவாரா வம்சத்தைச் சேர்ந்த இவரது இயற்பெயர் தெரியவில்லை. முந்தைய பாடலின் ஆசிரியரைக் கனெய்யே தத்தெடுத்தார் என்று பார்த்தோமல்லவா? அந்தக் கனேய்யேவின் மனைவிதான் இவர். அழகிலும் கவிபாடும் திறமையிலும் இணையற்றவர் என்ற குறிப்புகள் இவரைப்பற்றிக் காணப்படுகின்றன. ஜப்பானின் மூன்று இணையற்ற அழகிகள் பட்டியலிலும் ஜப்பானிய இலக்கிய வரலாற்றில் காலத்தால் அழியாத 36 பெண்பாற்கவிஞர்களின் பட்டியலிலும் இடம்பெற்றிருக்கிறார்.
இத்தொகுப்பிலும் 39 பாடல்கள் அடங்கிய இவரது தனிப்பாடல் திரட்டிலும் பாடலையும் உரைநடையையும் கலந்து இவர் எழுதிய ககேரோ நிக்கி (தட்டாம்பூச்சியின் நாட்குறிப்புகள்) நூலிலும் மிச்சிட்சுனாவின் தாய் என்றே குறிக்கப்பட்டிருக்கிறார். தட்டாம்பூச்சியின் நாட்குறிப்புகள் இடைக்கால ஜப்பானிய சமூகத்தில் அரசகுலப் பெண்டிரின் வாழ்க்கைமுறை பற்றிய பல அரிய தகவல்களை அறிந்துகொள்ள உதவுகிறது. கனெய்யேவுடனான கசப்பான திருமண வாழ்க்கையின் கி.பி 954 முதல் 974 வரையிலான 20 ஆண்டுகாலப் பதிவுதான் தட்டாம்பூச்சியின் நாட்குறிப்புகள். மூன்று பாகங்களாகக் காலவரிசைப்படி அமைந்துள்ளது. மகன் மற்றும் சுற்றத்தாரின் வற்புறுத்தலையும் மீறி வாழ்வின் கடைசி 20 ஆண்டுகள் துறவியாகக் கழித்தார்.
பாடுபொருள்: கணவரின் வருகைக்காகக் காத்திருக்கும் மனைவியின் விரக்தி.
பாடலின் பொருள்: இரவு முழுவதும் உங்களுக்காகக் காத்திருந்த என் தனிமை வேதனையை இந்த அறை மட்டுமே அறியும். உங்களுக்கு எங்கே புரியப்போகிறது?
ஜப்பானிய அரசகுடும்பத்தின் திருமணங்கள் பெரும்பாலும் பலதாரமணங்களாகவே இருந்தன. அரசியல் காரணங்களும் அடங்கும். பெண்ணின் தந்தையும் அரசரும் சேர்ந்து இதை முடிவு செய்வார்கள். மணமுறிவுகளும் அதிகம் இருந்தன. அதிகச் சிக்கல் இல்லாத முறிவுமுறையும் வழக்கத்தில் இருந்தது. பெண்கள் ஒரேநேரத்தில் ஒருவரை மட்டுமே கணவனாகக் கொண்டிருக்கமுடியும். மணமுறிவுக்குப் பிறகு பெண்கள் பிறரை மணம்புரியத் தடையில்லை.
கனெய்யே இவரது இரண்டாவது கணவர். இவரைத்தவிரக் கனெய்யேவுக்கு இன்னும் சில மனைவியர் இருந்தனர். ஒருநாள் இரவை இன்னொரு மனைவியின் இல்லத்தில் கழித்துவிட்டு அதிகாலையில் வீட்டுக்கு வரும் கனெய்யேவைச் சிறிது நேரம் வாசலிலேயே காக்க வைத்ததற்காகக் கனெய்யே இவரைக் கடிந்துகொள்கிறார். அப்போதுதான் மறுமொழியாக இப்பாடலை இயற்றுகிறார். சூழ்நிலையை நேரடியாக எடுத்துரைக்கும் இதுபோன்ற எளிய பாடல்கள் ககேரோவின் நாட்குறிப்புகள் முழுவதும் விரவிக்கிடக்கின்றன.
வெண்பா:
தனிமை துணையாய்த் துயரம் அணியாய்த்
தனிகை வருந்திடக் கொண்டான் – நுனிநா
உதிர்க்கும் சுடுசொல் வழியே அனகையை
வாட்டும் தனிமை கொடிது
தனிகை – இளம்பெண், கற்புடையவள்
அனகை – பாவமறியாத பெண்
இன்றே இனிய நினைவுடன்
மூலப்பாடம்:
கான்ஜி எழுத்துருக்களில்
忘れじの
行く末までは
かたければ
今日をかぎりの
命ともがな
கனா எழுத்துருக்களில்
わすれじの
ゆくすゑまでは
かたければ
けふをかぎりの
いのちともがな
ஆசிரியர் குறிப்பு:
பெயர்: புலவர் தகாக்கோ
காலம்: பிறப்பு தெரியவில்லை. இறப்பு கி.பி. 996.
ஃபுஜிவாரா வம்சத்தைச் சேர்ந்த மிச்சிதகாவின் மனைவி இவர். இத்தம்பதிக்கு மூன்று குழந்தைகள். பின்னாளில் ஆளுநராக இருந்த தகாய்யே, பேரரசர் இச்சிஜோவை மணந்த தெய்ஷி, ஆளுநர் கொரேச்சிகா ஆகியோர். இலக்கியக் குறிப்புகளில் இவர் கொரேச்சிகாவின் தாயாகவே அறியப்படுகிறார். ஜப்பானிய இலக்கிய வரலாற்றில் காலத்தால் அழியாத 36 பெண்பாற்கவிஞர்களின் பட்டியலில் இடம்பெற்றிருக்கிறார். ஜப்பானிய இலக்கியத்துக்கு இவரது பங்களிப்பாக 5 பாடல்கள் உள்ளன.
பாடுபொருள்: காதலன் பிரிந்து செல்வதைத் தாங்காத பெண்மனம்.
பாடலின் பொருள்: என்னை மறக்கவே மாட்டேன் என்று உறுதியளித்தாய். ஆனால் ஆண்கள் மனது மாறக்கூடியது என்று எனக்கு நன்றாகத் தெரியும். எனவே நீ என்னை நேசித்துக்கொண்டிருக்கும் இந்த வினாடியிலேயே இறந்து போக விரும்புகிறேன்.
ஜப்பானிய இலக்கியங்களில் இன்பியல் முடிவுகள் மிகவும் குறைவு. இடையில் காதலர்கள் ஒன்று சேர்ந்தாலும் விரைவில் பிரிந்து விடுவார்கள். எனவே குறுகியகாலக் காதல் வாழ்க்கையை எல்லாக் கதாபாத்திரங்களும் பெரும்பாலும் எதிர்பார்த்தே இருக்கும். இந்தப்பாடல் ஒருபடி மேலேபோய்ப் பிரிவு உறுதியாக நிகழும் என உரைக்கிறது. ஆனால் அதேநேரம் கைகூடிய காதலையும் கொண்டாடத் தவறவில்லை.
ஜப்பானிய அரசகுடும்பத்துத் திருமணங்களில் மனைவி வீட்டுக்குத் தினமும் கணவன் வந்து செல்வது வழக்கம் என்று பார்த்தோமல்லவா? மனைவியை விட்டுப் பிரியவேண்டும் என்று முடிவெடுத்த கணவன் இரு வருகைகளுக்கு இடையிலான இடைவெளியைச் சிறிது சிறிதாக அதிகரித்து இறுதியில் வராமலே இருந்து விடுவார். சென்ற பாடலில் பார்த்ததைப்போல் மணமுறிவு ஏற்பட்டுவிடும். கணவர் வரும் நாட்களிலெல்லாம் ஏராளமான பொன்னும் பொருளும் மனைவியின் வீட்டுக்கு வரும். மணமுறிவு ஏற்பட்ட பிறகு வறுமை சூழும் நிலையும் ஏற்படுவதுண்டு. அதனால் பெண்கள் மறுமணம் செய்வது ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தது.
இதேபோன்றதொரு பாடல் இவரது சமகாலப் புலவரான அகாஜொமே என்பவராலும் இயற்றப்பட்டு கொஷூய்ஷூ தொகுப்பில் உள்ளது. இக்காலத்துத் படைப்புகளில் அதீத மகிழ்ச்சியை வெளிப்படுத்துமாறு வருகிறதே ‘இப்பவே செத்துடலாம்னு தோணுது’ என்பது போல.
வெண்பா:
உறுதியாய் என்றும் மறவேன் எனினும்
மறுவரற் போதில் கலங்கும் – இறுதியாய்
இந்நிலை காணும் திறனிலி பேதைக்கு
இப்போதே வேண்டும் இறப்பு
மறுவரல் – மனம் மாறுதல்
Discover more from சொல்வனம் | இதழ் 366 | 10 மே 2026
Subscribe to get the latest posts sent to your email.
