காதல்மொழிகள் கடலலை போலே!

மூலப்பாடம்:

கான்ஜி எழுத்துருக்களில்
音にきく
たかしの浜の
あだ波は
かけじや袖の
ぬれもこそすれ

கனா எழுத்துருக்களில்
おとにきく
たかしのはまの
あだなみは
かけじやそでの
ぬれもこそすれ

ஆசிரியர் குறிப்பு:

பெயர்: சேடிப்பெண் கீ

காலம்: காலம் தெரியவில்லை. கி.பி. 1102ல் இவருக்கு சுமார் 70-72 வயது.

பேரரசர் கோ-சுஜாக்குவின் பட்டத்தரசிக்கும் பின்னர் அவர்களின் மூத்த மகளுக்கும் அந்தரங்கப் பணிப்பெண் மற்றும் ஆலோசகராக இருந்தார். ஜப்பானிய இலக்கியத்துக்கு இவரது பங்களிப்பாக 31 பாடல்களும் இவரது பெயரிலேயே ஒரு தனிப்பாடல் திரட்டும் இடம்பெற்றிருக்கின்றன.

பாடுபொருள்: காதலரின் சொற்களை நம்பாமை.

பாடலின் பொருள்: உன் காதல்மொழிகள் எல்லாம் கரைக்கு வந்து மீண்டுவிடும் இந்தக் கடலலைகளுக்கு ஒப்பானவை என்பதால் பின்னர் வருந்த விரும்பவில்லை.

அழகானதொரு சிலேடைப்பாடல். இப்பாடல் இயற்றப்பட்ட பின்புலமும் மிகச் சுவையானது. முன்பு இத்தொடரின் சில பாடல்கள் அரண்மனைகளிலும் அரங்குகளிலும் நடைபெற்ற கவிதைப்போட்டிகளில் இயற்றப்பட்டவன் எனக் கண்டோமல்லவா? இதுவும் அத்தகையதொரு போட்டியில் இயற்றப்பட்டதுதான். இரு எதிர்பாலினக் கவிஞர்களை ஓர் இணையாக வகுத்து ஆளுக்கொரு காதல் கடிதத்தைக் கவிதையாகத் தீட்டவேண்டும். முதலாமவரின் கடிதத்துக்கு இரண்டாமவரின் கவிதை பதிலாக அமையவேண்டும். கி.பி. 1102ல் பேரரசர் ஹொரிகவாவின் அரண்மனையில் நடைபெற்ற இப்போட்டியின்போது ஓர் அணியாகப் பங்குபெற்றவர்கள் 70-72 வயது நிரம்பிய இப்பாடலாசிரியரும் இத்தொடரைத் தொகுத்த சதாய்யேவின் தாத்தா தொஷிததாவும். அப்போது தொஷிததாவுக்கு வயது 29.

“இவ்வூரில் யாருக்கும் தெரியாமல் உன்னை நினைத்துக் கொண்டிருக்கிறேன். இக்கடற்கரைக்கு இரவில் வந்துபோகும் கடலலைகள் போல உன்னுடன் இரவுகளில் பேச விரும்புகிறேன்” என்பது தொஷிததாவின் கவிதை. இதற்கு மறுமொழியாக கீ எழுதிய பாடல் இரட்டைப் பொருள் பொதிந்தது. நேரடிப்பொருளானது “கடலலைக்கு மிக அருகில் நெருங்கினால் என் மேல்சட்டையின் கைப்பகுதி நனைந்துவிடும்; எனவே எச்சரிக்கையாக இருக்கிறேன்” என்பதாகும். இதன் மறைமுகப்பொருளானது “உன் சொற்களை முழுமையாக நம்பினால் பின்னர் நீ கைவிட்டபின் நான் அழுது அழுது என் மேல்சட்டையின் கைப்பகுதி நனைந்துவிடும்” என்பது. 

இடைக்கால ஜப்பானிய இலக்கியங்களில் சட்டையின் கைப்பகுதி நனைவது காதலரின் பிரிவால் வாடும்போது உகுக்கும் கண்ணீரை உணர்த்துவது என்றும் அரண்மனைக் காதல்கள் எல்லாம் குறுகிய வாழ்வை உடையவை என்றும் பார்த்தோமல்லவா? போட்டிப்பாடல் பாடியவர் தனது செயலுக்குக் கடலலையை உவமையாகக் காட்டியதால் இவரும் இப்பாடலில் அத்தகைய பிரிவைக் கடற்கரையில் உடையை நனைக்கும் அலையுடன் இணைத்துப் பாடியிருக்கிறார். ஜப்பானில் சில கடற்கரைகளில் ஓர் இயற்கை விநோதத்தைப் பார்க்கலாம். பகலில் உள்வாங்கியிருக்கும் கடலின் நீர் மாலை நேரத்துக்குப்பின் கரைவரை நிறையும். பின்னர் அடுத்தநாள் காலை திரும்பவும் உள்வாங்கிவிடும். அதனால்தான் தொஷிததாவின் கவிதையில் இரவில் கரைக்கு வரும் அலைகள் போல இரவில் உன்னுடன் பேசவிரும்புகிறேன் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

வெண்பா:

இரவினில் கூடும் திரையதைப் போன்றே
அருகினில் பேசிடும் நும்மின் – பிரிவினில்
கொள்ளும் வருத்தமது கைவிட எந்தன்
மனமது கொள்ளும் தெளிவு


முகிலில் மறையும் மலர்

மூலப்பாடம்:

கான்ஜி எழுத்துருக்களில்
高砂の
をのへの桜
咲きにけり
外山のかすみ
立たずもあらなむ

கனா எழுத்துருக்களில்
たかさごの
をのへのさくら
さきにけり
とやまのかすみ
たたずもあらなむ

ஆசிரியர் குறிப்பு:

பெயர்: ஆளுநர் மசாஃபுசா

காலம்: கி.பி 1041-1111.

இத்தொடரின் 59வது பாடலை இயற்றிய எமோனின் கொள்ளுப்பேரன். சிறுவயது முதலே அறிவிற் சிறந்தவராக அறியப்பட்டவர். சீனமொழியிலும் மிகுந்த புலமை பெற்றவர். இவரது குடும்பமே பல தலைமுறைகளாக அறிஞர்களாக விளங்கியது. இவருக்கு ஒரு நூற்றாண்டு முன்னர் வாழ்ந்த அறிஞர் மிச்சிஜானேவுக்கு (இத்தொடரின் 24வது பாடலை இயற்றியவர்) இணையாகப் புகழ்பெற்றிருந்தவர். பேரரசர் ஹொரிகவாவின் நம்பிக்கைக்குப் பாத்திரமாக இருந்து பல்வேறு பொறுப்புகளை அரண்மனையிலும் வெளியிலும் வகித்துவந்தார். ஜப்பானிய இலக்கியத்துக்கு இவரது பங்களிப்பாக 119 பாடல்கள் இடம்பெற்றுள்ளன.

பாடுபொருள்: மலரின் அழகை இரசித்தல்.

பாடலின் பொருள்: எதிரிலுள்ள தகாசாகோ மலையில் சக்குரா மலர்கள் அழகாகப் பூத்துக் குலுங்குகின்றன. ஆனால் இடையிலிருக்கும் குன்றின் மீது தவழும் மேகக்கூட்டமே, இடையில் வராதே!

இயற்கையை வியக்கும் நேரடிப் பொருள்தரும் இன்னோர் எளிய பாடல். இத்தொடரின் 34ம் பாடலின் (நீண்ட வாழ்வே சாபமோ?) நிகழிடமும் இதே தகாசாகோ மலைதான். கவிஞர் நின்றுகொண்டு பார்க்கும் இடத்துக்கும் சக்குரா மலர்கள் பூத்துக்குலுங்கும் தகாசாகோ மலைக்கும் இடையே தொயாமா என்றொரு குன்று இருக்கிறது. அப்போது தொயாமாவின் மீது மேகக்கூட்டம் ஒன்று பயணிக்கிறது. அது இன்னும் சற்று நகர்ந்து வந்தால் சக்குராவின் அழகிய காட்சி பாதிக்கப்படும். எனவே கவிஞர் அம்மேகக்கூட்டத்தை அருகில் வரவேண்டாம் என வேண்டுகோள் விடுக்கிறார். மிகவும் புலமை பெற்ற கவிஞர் எனப் புகழப்படுபவர் இதுபோன்ற எளிய பாடல்களையும் எழுதியிருக்கிறார். அது சிறந்த 100 பாடல்கள் என்ற தொகுப்பிலும் இடம்பெறுகிறது. ஒருவேளை, புலவருக்கான பொதுவான அங்கீகாரமோ?

வெண்பா:

சக்குரா பூத்தது கண்ணில் நிறைந்திட
அக்குணி மாசில் கவினுறச் – செக்கர்
நிறைவானின் பின்னணி மூடாது சற்றே
முகிலெனும் பஞ்சே விலகு

அக்குணி – சிறிதளவு
செக்கர் நிறைவானம் – செக்கச் சிவந்த வானம்

(மீண்டும் அடுத்த தான்காவில் சந்திப்போம்)

ஜப்பானியப் பழங்குறுநூறு

உள்ளும் புறத்தும் தனிமையே! கேட்டதும் கிடைத்ததும்

Discover more from சொல்வனம் | இதழ் 365 | 26 ஏப். 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.