துள்ளிவரும் வெள்ளலையே!

மூலப்பாடம்:

கான்ஜி எழுத்துருக்களில்
わたの原
こぎ出でてみれば
久方の
雲ゐにまがふ
冲つ白波

கனா எழுத்துருக்களில்
わたのはら
こぎいでてみれば
ひさかたの
くもゐにまがふ
おきつしらなみ

ஆசிரியர் குறிப்பு:

பெயர்: அமைச்சர் ததாமிச்சி

காலம்: கி.பி 1097-1164.

முந்தைய பாடலின் ஆசிரியர் தனது மகனைக் கதைசொல்லியாக ஆக்க ஒருவரிடம் பரிந்துரை கோரினார் என்று பார்த்தோமல்லவா? அவர்தான் இப்பாடலின் ஆசிரியர். பேரரசர் கோஷிராகவாவின் அரசவையில் தலைமை அமைச்சராக இருந்த இவர் ஜப்பானிய வரலாற்றில் அழியாப்புகழ் பெற்றவர். ஹோகென் கலவரத்தைக் கட்டுக்குள் கொண்டுவர உதவியதில் இவரது பங்கு மகத்தானது.

கி.பி 1123ல் பேரரசர் தொபாவும் கி.பி 1142ல் தொபாவின் மகன் பேரரசர் சுதொகுவும் அரசபதவியைத் துறந்த பின்னரும் சில குறிப்பிட்ட அதிகாரங்களைப் புதிய மன்னருக்கு அளிக்காமல் தங்களுடனேயே வைத்திருந்தனர். பேரரசர் தொபா தனது இன்னொரு மனைவியின் மகனான கொனோயேவுக்குப் பட்டம் சூட்டவிரும்பி சுதொகுவைப் பதவியிறங்கக் கூறினார். சுதொகுவும் தந்தையின் சொல்லை மதித்துக் கொனோயேவுக்குப் பின்னர் தன் மகன் முடிசூடவேண்டும் என்ற நிபந்தனையுடன் பதவியைத் துறக்கிறார். கி.பி 1155ல் கொனோயே நோய்வாய்ப்பட்டு இறக்கிறார். சுதொகு தன் மகனுக்குப் பட்டம் சூட்டக் காத்திருக்கையில் தொபாவின் இன்னொரு மகன், சுதொகுவின் தம்பி கோஷிராகவா பட்டத்துக்கு உரிமை கோருகிறார். சுதொகுவுக்கும் கோஷிராகவாவுக்கும் சண்டை ஏற்படுகிறது. அரச குடும்பத்துடன் மண உறவு பூண்ட வம்சங்களான ஃபுஜிவாரா, மினாமொதோ, தாய்ரா ஆகிய வம்சங்கள் இரண்டாகப் பிரிந்து இருவர் பக்கமும் நின்றன. கோஷிராகவாவுக்குப் பக்கபலமாக இருந்தவர்தான் இப்பாடலின் ஆசிரியர் ததாமிச்சி.

இவரது தம்பி யொரிநாகா சுதொகுவுக்கு ஆதரவாக இருந்தார். சுதொகுவின் பாசறையில் ஆலோசனையின்போது இரவில் எதிரிகள் உறங்கும்போது அவர்களைத் தாக்கி அழிக்கலாம் என ஆலோசனை கூறப்பட்டது. ஆனால் யொரிநாகா இது முறையற்ற செயல் என்றுகூறி அதை நிராகரித்துவிட்டார். ஆனால் அதே ஆலோசனை கோஷிராகவாவின் பாசறையில் கூறப்பட்டபோது ததாமிச்சி எந்தத் தயக்கமுமின்றி அதை ஏற்றுக்கொண்டு செயல்படுத்தினார். அன்றிரவு கோஷிராகவாவின் படை சுதொகுவின் அரண்மனையைத் தாக்கியது. இரவில் தாக்குதலை எதிர்பார்க்கவில்லை எனினும் தீரத்துடன் போரிட்டு முறியடிக்கும் நேரத்தில் இன்னொரு புறமிருந்து அரண்மனைக்குத் தீ வைக்கப்பட்டது. ஒருபக்கம் படை, இன்னொரு பக்கம் நெருப்பு என சுதொகுவின் படை நிலைகுலைந்து தோல்வியடைந்தது. கோஷிராகவா மன்னராக முடிசூடிக்கொண்டார். ததாமிச்சியின் உதவிக்குப் பரிசாகத் தலைமை அமைச்சர் பதவி கிடைத்தது. ஹோகென் கலவரம் அடங்கினாலும் இது மினாமொதோ வம்சத்துக்கும் தாய்ரா வம்சத்துக்கும் இடையில் சில மனக்கசப்புகளை உருவாக்கியிருந்தது. உள்ளுக்குள்ளேயே கனன்றுகொண்டிருந்த நெருப்பு சில ஆண்டுகளில் ஹெய்ஜி கலவரமாக வெடித்தது. இந்த ஹெய்ஜி கலவரம்தான் ஜப்பானில் மன்னராட்சி ஒழிந்து சாமுராய்களின் ஆட்சி மலரக் காரணமாக இருந்தது.

இப்பாடலாசிரியர் ததாமிச்சி அமைச்சர் பதவியிலிருந்தாலும் சிறந்த கவிஞராகவும் சிறந்த எழுத்து வரைகலை நிபுணராகவும் சீனமொழியில் புலமை பெற்றவராகவும் விளங்கினார். ஜப்பானிய இலக்கியத்துக்கு இவரது பங்களிப்பாக இவரது சீனமொழியில் ஒன்று, ஜப்பானிய மொழியில் ஒன்று என இரு தனிப்பாடல் திரட்டுகளும் பிற இலக்கியங்களில் 58 பாடல்களும் இடம்பெற்றுள்ளன.

பாடுபொருள்: கடலலையின் அழகை வியத்தல்.

பாடலின் பொருள்: ஆழ்கடலில் படகைச் செலுத்தும்போது தூரத்தில் எழும் பேரலையின் வெண்மை மேகமோ எனக் கருதத் தூண்டுகிறது.

இயற்கையை வியக்கும் இன்னோர் எளிய பாடல். பேரரசர் சுதொகுவும் இவரும் படகில் பயணம் செய்துகொண்டிருந்தபோது இயற்றியதாகச் சொல்கிறார்கள். இத்தொடரின் 11வது பாடலும் (என் நிலை உரைப்பார் யாரோ?) இதே போன்ற கடல்பயணத்தின்போது இயற்றப்பட்டதுதான். ஆனால் இரு கவிஞர்களின் மனநிலையும் வெவ்வேறானவை. இத்தொடரின் 33வது பாடலைப் (சக்குராவின் சலனம்) போன்றே இப்பாடலிலும் ஹிசாகதா என்றொரு சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு சொர்க்கம், கதிரவன், நிலவு, மேகம், ஒளி எனப் பல பொருள்கள் உள்ளன. 33வது பாடலில் ஒளி என்ற பொருளிலும் இப்பாடலில் மேகம் என்ற பொருளிலும் இச்சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது.

வெண்பா:

தெள்ளிய முந்நீர்ப் பயணம் தொலைவினில்
ஞெள்ளலில் மேவும் சிறப்புறு – வெள்ளலை
கண்டிடும் போதில் களிகொள் மனதை
மதிமயக்கம் செய்யும் முகில்

முந்நீர் – கடல்
ஞெள்ளல் – இறக்கம், பள்ளம்


பிரிவு என்பதே உறவுக்காகத்தான்!

மூலப்பாடம்:

கான்ஜி எழுத்துருக்களில்
瀬をはやみ
岩にせかるる
滝川の
われても末に
あはむとぞ思ふ

கனா எழுத்துருக்களில்
せをはやみ
いはにせかるる
たきがはの
われてもすゑに
あはむとぞおもふ

ஆசிரியர் குறிப்பு:

பெயர்: பேரரசர் சுதொகு

காலம்: கி.பி 1119-1164.

19 ஆண்டுகள் ஜப்பானை ஆண்ட பேரரசர் சுதொகு கி.பி. 1142ல் அரசபதவியைத் துறக்க நிர்ப்பந்தப்படுத்தப்படுகிறார். அப்போது அரசராக முடிசூடிய கொனொயே இறக்கும்வரை தன் மகன் அரியணை ஏறும் காட்சியைக் காணக் காத்திருந்தார். அப்போது கி.பி. 1151ல் இப்பாடலை இயற்றினார்.

முந்தைய பாடலில் பார்த்த ஹோகென் கலவரத்தின் முடிவில் தோல்வியடைந்த பேரரசர் சுதொக்கு சனுக்கி மாகாணத்துக்குக் கடத்தப்படுகிறார். அங்கு அவர் தன்னை வென்ற பேரரசர் கோஷிராகவாவைச் சபித்தவாறும் தலைமுடியையும் தாடியையும் நகங்களையும் நீளமாக வளர்த்துக் கோர உருவத்தைக் கொண்டும் மீதமுள்ள வாழ்க்கையை வாழ்ந்து வந்தார். இக்காலத்தில் எழுதப்பட்ட கொன் ஜாகுவின் கதை எனும் புதினத்தில் கதாநாயகன் சனுக்கி மாகாணத்துக்குச் செல்லும்போது அங்கு சாய்க்யோ என்ற கோரமான பேயைக் காண்பதாக வருகிறது. அப்பேய் இவராக இருக்கலாம் என்றும் கருதுகிறார்கள்.

கவிதை புனைவதில் வல்லவரான இவர் இத்தொடரின் 79வது பாடலை இயற்றிய புலவர் அகிசுகேவைப் பல்வேறு தனிப்பாடல்களைத் தொகுத்து ஷிக்காஷு எனும் தொகுப்பை உருவாக்கப் பணித்தார். ஜப்பானிய இலக்கியத்துக்கு இவரது பங்களிப்பாக 78 பாடல்கள் இடம்பெற்றுள்ளன.

பாடுபொருள்: பிரிவுக்கு ஆறுதல் கூறுதல்.

பாடலின் பொருள்: நதியின் ஓட்டத்தில் எதிர்ப்படும் பாறை நதியின் பாதையை இரண்டாகப் பிரித்தாலும் பாறையைத் தாண்டியபின் ஒன்றாகக் கூடுவதைப்போல் இப்போது பிரிவை எதிர்கொள்ளும் நாமும் பின்னர் ஒன்று சேர்வோம்.

காதலினாலோ போரினாலோ வேறு ஏதாவது சிக்கலாலோ பிரிந்த இருவர் மீண்டும் ஒன்று சேர்வோம் என்ற நம்பிக்கையைக் கொள்ளவைக்கும் பாடல். இப்பாடலின் ஆசிரியர் இந்த மூன்று காட்சிகளில் எதை மனதில் வைத்து எழுதினார் என்று தெரியவில்லை. இவர் இக்கவிதையை இயற்றிய காலத்தில் ஜப்பானில் போர்கள் ஏதும் நடைபெறவில்லை. எனவே, கவிதை புனைவதில் வல்லவர் என்பதால் காதலை மையமாக வைத்து எழுதியிருக்கலாம் என்றும் தன் குடும்பத்தை விட்டு அரசபதவி போய்விட்டதால் மீண்டும் தன் குடும்பவாரிசு அரியணை ஏறுவதை மீண்டும் இணைவதாக உருவகித்திருப்பதாகவும் உரையாசிரியர்கள் இருவேறு விதமாகப் பொருள் கொள்கிறார்கள்.

வெண்பா:

நதியிடை தோன்றிடும் பாறையைத் தாண்டிச்
சிதிலமும் இன்றியே சேர்தல் – விதியேபோல்
நும்மைப் பிரிந்திட்ட நானுமே மீண்டுமுமைச்
சேர்ந்திடவே நேர்ந்த பிரிவு

(மீண்டும் அடுத்த தான்காவில் சந்திப்போம்)

ஜப்பானியப் பழங்குறுநூறு

கேட்டதும் கிடைத்ததும் இடம்பெயரும் புள்ளினங்காள்!

Discover more from சொல்வனம் | இதழ் 366 | 10 மே 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.