மிளகு – அத்தியாயம் 89 – பின்கதை

சித்திரம் : அருண்

ஒற்றைப் பிரவாகமாகப் பிரபஞ்சங்களைத் தழுவி அமிழ்த்திக் காலம் முன்னால் சென்று கொண்டிருந்தது. கெருஸொப்பா, வரலாற்றின் அடிக்குறிப்புகளில் மட்டும் உயிர்த்திருக்க, மிளகு ராணி சென்னபைராதேவி என்ற சிறப்பான ஆளுமையை கிட்டத்தட்ட மறந்தே போனார்கள்.  

கெருஸொப்பாவை வலுக்கட்டாயமாகப் பிடித்தெடுத்த கெலடி நாயக்கர் வம்சம் நூற்றைம்பது வருடம் கழித்து அந்த உரிமையை ஹைதர் அலிக்கு விட்டுக்கொடுக்க, ஹைதர் அலிக்கு அப்புறம் ஆட்சிக்கு வந்த அவன் மகன் திப்பு சுல்தானைத் தோற்கடித்து கெருஸொப்பாவை பிரிட்டீஷ் கிழக்கிந்தியக் கம்பெனி கவர்ந்தெடுத்துக் கொண்டது.

இடிந்த புராதனக் கோவிலாகவும், கூரை இல்லாத கோவில் சந்நிதியாகவும், தரையில் கிடக்கும் கல்வெட்டுப் பதித்த கல்தூண்களாகவும் மட்டும் உயிர்த்து, நானூறு வருடத்தில் ஒரு நகரமே சிதைந்து   பொடிபொடித்துப் போய்விட்டது. நாகர்பஸ்திகேரி என்று பக்கத்து கிராமத்தின் பெயரை வைத்து கெருஸொப்பாவை அடையாளம் காண்பது இன்றைய வழக்கம். முயல் வழிகாட்ட, வற்றிப்போய் எலும்பும் தோலுமாக ஆடிவரும் கோவில் யானையைப் பார்ப்பதுபோல் துக்ககரமானது அது. அதுவும் அந்த நகரை நேசிக்கும் வரலாற்று அன்பருக்கு.

ஆச்சரியம் ஒன்று உண்டு. சதுர்முக பஸதி எந்த அழிவுமின்றி, நானூறு வருடப் பழமையோடு இன்னும் கம்பீரமாக நிற்கிறது. கெருஸொப்பா என்றால் சதுர்முக பஸதிதான். 

சென்னபைராதேவி பார்த்துப் பார்த்துக் கட்டிய மிர்ஜான் கோட்டையும் காலத்தின் கரங்களிலிருந்து தப்பி அன்று கண்ட மேனிக்கு அழிவில்லாமல் நிற்கிறது.  மழைக்காலங்களில் பச்சைப்பசேல் என்று பசும்பாசி அடர்ந்து அப்பிய கோட்டைச் சுவர்களும், பச்சைப் பாசிக் கம்பளம் விரித்த நிலப்பரப்புமாக மிர்ஜான் கோட்டை   ஆள் அரவமிற்ற சூழலில் நிலைத்து நிற்கிறது.

மிளகு மதிப்புக் குறைந்து சுத்தமில்லாத உணவு விடுதிகளில் உப்போடு கூட சிறு போத்தல்களில் நறநறுத்த  கருப்புப் பொடியாக நிறைத்து வைக்கப்பட்டு, சூப் கொண்டுவைக்கும்போது சற்றே தூவிக் கலக்கிக் கலந்து கொள்ளும் மிகச் சாதாரணமான உணவுப் பொருளாகி விட்டது. வெங்காயம் உணவுலகை ஏகபோகமாக ஆள்கிறது.  

இடமும் பொருளும் இப்படிக் கால வெள்ளத்தில் அடித்துப் போகப்பட, மிளகு பாத்திரங்கள் என்ன ஆனார்கள்? பிஷாரடியைக் கேட்டேன்,

பரமன் அல்லது பரமன் பிரதி காலத்தில் நானூறு வருடம் பின்னால் சாடி சதுர்முக பஸதி வழியாகத் திரும்பிப் போன பிறகு அவர் நம் காலக்கோட்டுக்கு வருவதே இல்லையாம்.  அந்த பரமன் அவதாரம் தன்னை விட நானூறு வருடம் மூத்த சிறுவன் மஞ்சுநாத்தை வளர்க்கக் காலம் கணிசமாகச் செலவிட்டாராம், காலத்தில் கணிசமும், குறைவும் ஏது என்று சிரிக்கிறார் பிஷாரடி.

மன்னிக்கணும், அவதாரம் என்று ஆளுமையின் பிரதி பற்றிய சுட்டுக்கு மற்ற சிலர் சூட்டிய பெயரைத் தவறாகப் பயன்படுத்திவிட்டேன் என்றார் பிஷாரடி. 

அவதாரம் எடுக்கக் கூடிய மகாப்ரபை ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா மட்டும் தான் என்று சொல்லிக் கைகூப்பி வணங்கினார் அவர்.

எப்போதாவது, சிதிலமடைந்த கெருஸொப்பாவில் முழு நிலவுக்கு இரண்டு இரவு முந்திய பொழுது பரமன் மஞ்சுநாத்தின் கையைப் பற்றிக்கொண்டு சாகர சயனவிபோ எனப் பாகேஸ்ரி ராகத்தில் பாடியபடி நடப்பதை அடுத்த கிராம வாசிகள் பார்த்திருக்கிறார்களாம். அந்தப் பரமனுக்குக் கால் இரண்டும் முழுமையாக, ஆரோக்கியமானவையாக இருக்கின்றனவாம். திலீப்-ஏ திலீப்-ஏ  என்று நிலா இரவில் சதுர்முக பஸதி அருகில் நின்று சத்தம் போட்டு அழைக்கிறார் பரமன் என்றும் செய்திகள் உலவுகின்றன. இதெல்லாம் neo lore என்று பிஷாரடி தள்ளிக் களைந்தாலும், பாகேஸ்வரி ராகத்தில் பரமன் தனக்காக ஒரு முறை அற்புதமாகப் பாடினார் என்று மறக்காமல் சொன்னார் பிஷாரடி.

மஞ்சுநாத் இளைஞரானதும் சமண முனியாக, திகம்பரராக ஆன்மா கனிந்து துறவு பூண்டு விட்டாராம். நான் துறந்ததிலேயே அதிக துக்கத்தைக் கொடுத்த இழப்பு என் தந்தை பரமன் அப்பாவை விட்டு நீங்கியது தான் என்று ஆன்மீகச் சொற்பொழிவுகளில் இன்றும் சொல்கிறாராம். ஆமாம், இன்னும் மஞ்சுநாத முனி உயிர்த்திருக்கிறாராம். மஞ்சுநாத் பிரதிகளின் பிரபஞ்ச விளையாட்டாக இருக்குமோ? தெரியாதாம் பிஷாரடிக்கு,.

 ரோகிணி பல ரோகிணி பிரதிகளின் தொகுப்பாக இருக்கலாம் என்கிறார் பிஷாரடி. ரோகிணி லிஸ்பன் திரும்பப் போய் அங்கிருந்து ஸ்பெயின் போனபோது காணாமல் போனதாகத் தெரிகிறதாகச் சொன்னார் அவர். பிரதிகள் தம்மளவில் ஆட்டம் நிறுத்தியிருக்கக் கூடிய அபூர்வமான சம்பவமாக இருக்கலாம் அது.

போர்த்துகல் பேரரசரின் தலைமைப் பிரதிநிதி இம்மேனுவெல் பெத்ரோ போர்த்துகீசிய படை  கெருஸொப்பாவில் இருந்து பின் வாங்கக் காரணகர்த்தர் என்று குற்றம் சாட்டப்பட்டு சீன நாட்டுக்குப் பிரதிநிதியாக அனுப்பப்பட்டார் என்றும், அதன்பின், சீனப் பெருநகர ஜனத்திரளில் அடையாளம் தொலைத்தார் அவர் என்றும் பிஷாரடி குறிப்பிட்டார்.

நேமிநாதனுக்கு மனைவியான ரஞ்சனா தேவி யுத்த காலத்தில் கருவுற்றிருந்து, அவன் இறந்தபிறகு பெற்றெடுத்தது அவர்களுடைய மகள் சென்னபைர நிரஞ்சனாவை. அந்தப் பெண், கெலடி மாநில அரசு கவர்ந்தெடுத்த கெருஸொப்பாவை அவளுடைய பதினாறாம் வயதில் திரும்பப் பெறப் பாதுகாப்பு அரசான விஜயநகரம் ஏற்பாடு செய்திருந்தது. கெலடி நாயக்கர் வம்ச அரசு சற்றுத் தளர்ந்த நேரம் அது. எனினும் நோய் கண்டு நிரஞ்சனா காலமாகி விட்டாளாம். அவளைப் பலி கொண்ட விஷக் காய்ச்சலுக்குப் புதிதாக உயிர்த்த போர்த்துகீஸ் கார்டல் நிதிக்குழுவைக் காரணம் காட்டக் கூடாது என்று சொல்லி விட்டார் பிஷாரடி.

மற்றபடி தெரிசாவுக்கும் சங்கரனுக்கும் மகனான மருது, திலீப் ராவ்ஜியின் மகள் கல்பாவைக் கல்யாணம் செய்து கொண்டதையும், திருமணத்துக்கு சங்கரன், அவர் மனைவி வசந்தி, இன்னொரு மனைவி தெரிசா தில்லியில் இருந்து வரமுடியாதபடி செப்டம்பர் 11 அசம்பாவிதம் காரணம் ஒத்தி வைக்கப்பட்டு அடுத்த மாதம் நடந்ததாம் .

இரட்டைக் கோபுரங்கள் மேல் விமானம் செலுத்தி மோதிய தீவிரவாதிகள் அந்த விமானத்தில் சங்கரனைப் பிடித்துப் போனதாக சங்கரன் இரண்டு வாரம் சித்தம் கலங்கி இருநதாராம். நல்ல வேளை. விரைவில் மீண்டாராம்.

 திலீப்பின் மகன் அனந்தன் தன் நண்பன் வாசுவை ஒரேபாலினத் திருமணம் செய்து கொள்ள உத்தேசித்தது, வாசுவுக்கு கனடா நாட்டுப் பெருநகரம் வான்கோவரில் பிரபல போர்த்துகீஸ் வர்த்தக நிறுவனத்தில் commodities chief  dealer உத்தியோகம் கிடைத்ததால் ஒத்திவைக்கப் பட்டதாகச் செய்தி.

சாரதா தெரசா அம்பலப்புழை ஜான் கிட்டாவய்யர் சைவ உணவகத்தில் அவளுடைய ஐம்பது சதவிகிதப் பங்கையும் திலீப் ராவ்ஜிக்கு விற்றுவிட்டு இங்கிலாந்து மேற்கு யார்க்‌க்ஷயர் கால்டர்டேல் சிறுநகரில் தன் தந்தூரி இந்தியன் வட இந்திய உணவகத்தைத்   திறந்துவிட்டதாகச் செய்தி. அமியும் முசாபரும் அவளுக்கு  உணவக நிர்வாகத்தில் உதவியாக இருக்கிறதாகவும் செய்தி. ஜான் கிட்டாவய்யர் தென்னிந்தியச் சைவ உணவகத்தை யார்க்‌க்ஷயரில் நடத்தினால் பிசினஸ் பிய்த்துக்கொண்டு போகும் என்று முசாபர் கருதுகிறார். கால்டர்டேலின் முதல் தென்னிந்திய சைவ உணவகம் விரைவில் தொடங்கப்படலாம். பிராட்ஃபோர்டிலும், மேன்செஸ்டரிலும் கூட.

வேறு தகவல் இருந்தால் ட்விட்டர் நேரடிச் செய்தியாகத் தருகிறேன், உள்பெட்டியைத் தயவுசெய்து அவ்வப்போது திறந்து பாருங்கள் என்று எழுந்து போனார் அவர். இன்றும் நாளையும் அம்பலப்புழை கிருஷ்ண அம்பலத்தில் கல்யாண சௌகந்திகம் கதகளியாம். பீமன் பாஞ்சாலிக்கு மணம் மிக்க சௌகந்திக மலர் பறித்து வந்ததைச் சொல்லும் ஆட்டக் கதை அது. மகாபாரதக் கிளைக்கதை. ராத்திரி ஒன்பதுக்குத் தொடக்கம். நீரும் வருவீரா எனக் கேட்டார் பிஷாரடி பிரதி. நாளைக்கு வருகிறேன் என்று விடைபெற்று நேற்றும் இன்றும் நாளையும் வரிசை மாறிய யாருடைய பிரதியோ ஆன நான்  எழுந்து உள்ளே போனேன். கிருஷ்ணார்ப்பணம்.  

மிளகு: இரா முருகன் - நாவல்

மிளகு – அத்தியாயம் 88

Discover more from சொல்வனம் | இதழ் 362 | 08 மார் 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.