மிளகு அத்தியாயம் எழுபத்தைந்து

 1606 ஹொன்னாவர்

சித்திரம் : அருண்

கடந்த மார்க்கஷீர, புஷ்ய மாதங்களில் – தமிழ் மார்கழி, தை மாதங்கள் – தட்சிண கன்னடத்தில் மங்களாபுரி என்ற மங்களூரு, மைசூரு, , மலையாளக் கரையான ஆலப்புழை, திருவனந்தபுரம், தமிழ் பிரதேசங்களான மதுரை, தஞ்சாவூர், ஆந்திரத்தில் பெஜவாடா, கர்னூல், அனந்தபூர், உத்தர ஹிந்துஸ்தானமான அவத் என்ற லக்னௌ முதலான நகரங்களில் இருந்து ஜெரொஸுப்பா நகருக்கு வந்து போன நாட்டியக்காரிகளின் எண்ணிக்கை முப்பத்தேழு. இவர்கள் சதுர், மோகினி ஆட்டம், குச்சிப்புடி,கதக் என்று பலவித நாட்டிய வகைகளில் தேர்ந்தவர்கள். 

கிட்டத்தட்ட இரண்டு நாட்களுக்கு ஒரு நாட்டிய நிகழ்ச்சி வீதம் ஜெருஸுப்பாவில் இப்படியான பொழுதுபோக்கு  நிகழ்வுகள் நடந்திருப்பதை அரசின் கவனத்துக்குக் கொண்டு வருகிறோம். 

ஜெருஸூப்பா ஒற்றர் துறை அறிக்கை இப்படித் தெரிவித்தது.

பிரதானி நஞ்சுண்டய்யா தினமும் ராச்சாப்பாடு நேரத்தில் அன்றைக்கு நடந்த முக்கிய நிகழ்ச்சிகள், கேட்டது, பார்த்தது என்று அவருடைய அறுபத்தேழு வயது மனைவி ஹொன்னம்மாவிடம் சொல்லுவது வழக்கம். 

முழுவதும் சொல்ல முடியாது. ஏனென்றால் அவருக்கே சில விஷயங்கள் நினைவு இருக்காது. பார்த்ததும் கேட்டதும் முழுசாக இருக்காது. எழுபத்திரெண்டு வயசாகி விட்டதே. இத்தனை நாள் காலம் தள்ளியதே முர்தேஷ்வர் சிவபிரான் கிருபையால்.  இருப்பதற்கு நொட்டைச்சொல் சொன்னால் சிவன் அதையும் இல்லாமல் செய்து விடுவான். எதற்கு வம்பு. 

என்றாலும் அந்தப் பழுது, விஷய கனம் எல்லாம் கடந்து சொல்ல வந்ததை ஹொன்னம்மாவிடம் சொல்வது எதற்காக என்றால் காரணம் இருக்கிறது. அவருக்கோ அவரோடு ராஜ்ய சபையில் அந்த விஷயம் குறித்து விவாதம் செய்த மற்ற பிரதானிகள், உப ப்ரதானிகளுக்கோ, நிறைய மரியாதையோடு சொல்கிறதாக, மகாராணி சென்னபைரதேவிக்குமோ பிடிபடாத ஏதாவது ஒரு முக்கியமான கோணம் ஹொன்னம்மா வாயிலிருந்து கேள்வியாக அல்லது ஒரு வாக்கியமாக வந்து விழும்போது நஞ்சுண்டய்யா அசந்துதான் போவார். 

 இப்படி நிகழ்ந்தால் அடுத்த நாள் காலையில் அரசவைக்கு சற்று சீக்கிரமாகவே போய், மற்ற விஷயங்கள் பற்றிப் பேச்சு எழும் முன், பணிவோடும் பிரியத்தோடும் நேற்று நாம் விவாதித்த இந்த விஷயம் பற்றி இன்னும் ஒரு பார்வையைத் தவற விட்டுவிட்டோமோ என்று ராத்திரி உறங்கப் போகும்போது நினைவு வந்தது. காலையில் எழுந்து மறக்கக் கூடாதே என்று மேல்துண்டில் முடிச்சு போட்டு வைத்துக்கொண்டு காலையில் எழுந்து முடிச்சு மறந்து போக, அதை எடுத்துக் கொண்டு நடக்க, எதற்கு முடிந்து வைத்தேன் என்று அடுத்த நினைவு படுத்தலுக்கு சிந்தனையை உள்ளிட்டு, நான் சொல்ல வந்தது என்ன என்றால் – 

ராணி சென்னபைராதேவி முதல் அவையில் கடைக்குட்டி அதிகாரி வரை அவர் சொல்வதை சிலாகிப்பது வழக்கம். எல்லாப் புகழையும் அப்போது நஞ்சுண்டார் வழித்து எடுத்துக் கொள்வதும் வழக்கம் என்றாலும் ஹொன்னம்மா அது சுபாவமானது தானே என்று எடுத்துக் கொண்டு விடுவதால் நாற்பது வருட தாம்பத்தியம் அவர்களுக்கு வாய்த்திருக்கிறது. 

இன்றைக்கு ராத்திரி ஊத்தப்பம், சப்பாத்தி, ஹுளி உப்பிட்டுவோடு நாட்டியக்காரிகளின் ஜெர்ஸூப்பா விஜயம் பற்றிய அறிக்கை சாப்பிடும்போது பகிர்ந்து கொள்ள எடுத்து வைக்கப்பட்டது பிரதானியால். 

பக்க வாத்யம் என்ன எல்லாம் பண்ணியிருக்கே என்று ஹொன்னம்மாவை வழக்கம்போல் விசாரித்தார் நஞ்சுண்டர். அவள் சமையல் செய்யக் கரண்டியைக் கையில் எடுத்து இரண்டு மகாமகம் ஆச்சு என்பதும் சமையல் வேலைக்கு நிற்கிற ஆணும் பெண்ணுமான, கூடவே புருஷன், பெண்டாட்டியான தமிழ் பிராமண ஜதை அதை எல்லாம் வேளை தவறாமல் கவனித்துக் கொள்கிறார்கள் என்பதும் நஞ்சுண்டய்யாவுக்குத் தெரிந்ததுதான் என்றாலும் சாப்பாட்டு மேஜையில் ஹொன்னம்மாவைத்தான் அவர் எதற்கும் கூப்பிடுவார். 

தமிழர்கள் கைவேலை என்பதால், சக்கரை பொங்கல், பால் பணியாரம், அக்கார வடிசில் என்று தமிழ்ப் பலகாரம் அடிக்கடி தலைகாட்டுவது நஞ்சுண்டய்யா, ஹொன்னம்மா தம்பதிக்குப் பிடித்திருந்தது. இன்றைக்கு அப்படியான சிறப்பு தமிழ் ஆகாரம் இல்லைதான் என்று தெரியப்படுத்தப்பட நஞ்சுண்டாருக்குச் சிறிய ஏமாற்றம். 

என்ன சமைத்தார்கள் ஊத்தப்பம், சப்பாத்தி, ஹுளி  உப்பிட்டுவோடு? 

சாஸ்திரத்துக்கு மிளகு விழுது ஒரு துளியும், ஒரு மண்டை வெல்லமும் குழைத்த மிளகுத் துவையல் தொட்டுக்கொள்ள என்று கேட்டு பரபரப்பானார் நஞ்சுண்டய்யா. உஸ் உஸ் என்று நாக்கை வெளியே நீட்டிக்கொண்டு துவையலில் ஊத்தப்பத்தை பிரட்டும்போது ஹொன்னம்மா அவர் அருகில் வந்து தயங்கி நின்றாள். 

என்ன ஹொன்னு? துவையல் உரைப்பாக இருக்கேன்னு விசனப்படறியா? போறது. அபார ருஜியா இருக்கே. அது போதும்.  

 சிலாகித்தபடி ஆகாரத்தைத் தொடர, ஹொன்னம்மா அவரிடம் ரகசியமாகச் சொன்னாள் – எப்படி இருக்கும்னு பார்க்க நான் ஊத்தப்பத்திலே வெங்காயம் நெய்யிலே வறுத்து அரிஞ்சு தூவி வார்க்கச் சொன்னேன். தப்புதான். மன்னிச்சுக்குங்க. நம்ம வீட்டிலே வெங்காயம் நுழைஞ்சிருக்குன்னு விசனப்பட வேண்டாம். இன்னிக்கு ஒரு ராத்திரிக்கு மட்டும்தான்.  

மகாதப்பு மகாதப்பு. இந்த கிரஹத்துலே மாமிசம் துல்யமான வெங்காயமா? மகாதப்பு. எங்கே அந்த வெங்காய ஊத்தப்பம்? உடனே எடுத்துட்டு வா. அழிச்சுடலாம். 

சமையல் பரமேஸ்வர ஐயரும் பார்யாள் லட்சுமியும் ஓட்ட ஓட்டமாக உடம்பு பதற ஒரு தட்டில் இரண்டு வெங்காய ஊத்தப்பங்களோடு வந்து குற்றவாளி தோரணைகளோடு நின்றார்கள். 

என்ன பார்க்கறீர் ஐயரே, அந்த சனியனை என் எலையிலே போடுங்கோ. நிர்மூலம் பண்ணிடறேன். எனக்காச்சு அதுக்காச்சு என்று முழங்கியபடி வெகு சந்தோஷமாக உண்ண ஆரம்பிக்கும் முன் பெரிய சிரிப்பு ஒன்றை உதிர்த்தார். ஹொன்னம்மாவும் முகத்தில் தீற்றியிருந்த பயம் போக அந்தச் சிரிப்பில் கலந்து கொண்டாள். 

லட்சுமிக்கு மட்டும் கொஞ்சம் துக்கம். அந்த ரெண்டு வெங்காய சுவர்க்க ஆகாரத்தையும் அவளுக்காகவும் புருஷர் ஐயருக்குமாக வார்த்து எடுத்து வைத்திருந்தாள் அவள். ஆனாலென்ன, இப்போது போய் இன்னொரு தடவை வெங்காயப் பண்டம் உண்டாக்க தேவையான மாவு, வெங்காயம் எல்லாம் தயாராக உண்டே. 

நஞ்சுண்ட பிரதானி லட்சுமியிடம் சொன்னார் – தப்பு பண்ணினது முழுசாப் பண்ண வேணாமா? துவையல்லே வெங்காயம் போட்டு இன்னொரு தடவை சிரமம் பார்க்காமல் அரைச்சு வச்சிருக்கலாமே என்றார். 

மறுபடி சிரிப்பு. சமையல் தம்பதி போன பிறகு சாப்பாட்டு முற்றத்து ஓரம் இரும்பு வாளியில் நீர் சேந்தி செம்பில் எடுத்துக் கை கழுவினார். தாம்பூலம் மடித்துத் தர ஒரு முக்காலியில் ஆரோகணித்து காத்திருக்க, வெற்றிலைத் தட்டோடு ஹொன்னம்மா வந்து அருகில் அமர்ந்தாள். வெற்றிலை மடித்துதர ஆரம்பித்தாள். 

மென்றபடி நஞ்சுண்டார் திடீரென்று தொடங்கினார். அத்தனை ஆட்டக்காரிகளும் ஆட வேறே மேடை இல்லாமலா ஜெரொஸுப்பா வந்தாங்க? 

ஹொன்னம்மா நிமிர்ந்து உட்கார்ந்தாள். கோட்டை வம்பு ஒன்று இப்போது பகிர்ந்து கொள்ளப்பட இருக்கிறது.  

அது இருக்கட்டும் ஹொன்னு, யுத்தத்தைப் பற்றி என்ன நினைக்கறே நீ? 

ஹொன்னம்மா அடுத்த வெற்றிலையில் கம்மியாக சுண்ணாம்பு தடவியபடி கூறினாள் – அது யுத்தமா இருக்குமான்னே பலத்த சந்தேகம். நூறு இருநூறு பேர் ரெண்டு பக்கத்திலேயும் மோதிக்கற கலவரமாக வேணுமானா இருக்கும் என்றாள் சிரித்தபடி. 

இருந்தாலும் பாதிப்பு எல்லோருக்கும் இருக்கும்னு நினைக்கறியா? 

அடுத்த கேள்வியைக் கேட்டார். தரையில் அமர்ந்து வெற்றிலை மடித்துத் தரும் குரு, முக்காலியில் உட்கார்ந்து அதைக் கையில் வாங்கி  தாம்பூலம் தரிக்கும் சிஷ்யனாக அவர்களை அந்நேரம் வானத்தில் பறந்து போகும் பெண் தெய்வங்கள் பார்த்திருந்தால் நினைத்திருக்கலாம். 

இந்த மோதல்லே அம்மா ஜெயிச்சால் எதுவும் மாறாது. மகன் ஜயிச்சாலும் அம்மா இல்லேங்கறது தவிர எதுவும் மாறாது. 

நஞ்சுண்டார் கண்ணை மூடி உட்கார்ந்திருந்தவர் கண் திறந்து ஹொன்னம்மாவை கேட்டார் – அந்த கவலை இல்லாத மனோபாவம் தான் ஜெருஸுப்பாவிலே ரெண்டே மாசத்திலே கிட்டத்தட்ட நாற்பது ஆட்டக்காரிகளை வரவழைச்சிருக்கு ஆடுங்க ஆடுங்கன்னு. இது தவிர பாடகர்கள் இந்த ரெண்டு மாசத்திலே பதினேழு பேர் வந்து பாடி, வாத்தியம் வாசிச்சிட்டு போயிருக்காங்க. அதைவிட ஒற்று அறிக்கையிலே குறிப்பிட்டிருக்கிற இன்னொரு விஷயம் மகாஜனங்கள் மூணு வேளை மட்டுமில்லே, நினைக்கற நேரத்திலே எல்லாம் கண்டதையும், கடலை மாவு பண்டம், நெய் ஜாங்கிரி, இப்படி தின்னுட்டே இருக்காங்களாம். இப்படி ஆட்ட பாட்டம் தீனியிலே ஒரு நகரமே ஈடுபட்டிருப்பது அதிசயமாக இருக்கு. அப்படித்தான் இருக்குமோன்னு ஒரே யோசனை ஹொன்னு. 

ஹொன்னம்மா நிமிர்ந்து உட்கார்ந்தாள். அப்படியான, இது உள்வீட்டு விவகாரம், அடிச்சுப்பாங்க, கூடிப்பாங்க இன்னும் ரெண்டு நாள்லே அம்மா விட்டுக் கொடுத்து மகன் ஆட்சிக்கு வருவான் இல்லே மகன் விட்டுக்கொடுத்து அம்மாவை இன்னொரு வருஷம் இருக்க வைப்பான். நமக்கென்ன போச்சு மனோபாவம் இங்கே ஹொன்னாவர்லே இருக்கலாம். ஜெரொஸுப்பாவிலே எப்படி வந்திருக்கும்? வந்திருந்தா வீட்டை எல்லாம் இடிச்சு வச்சுட்டு போவாங்களா என்ன? 

ஹொன்னம்மா கேட்க நஞ்சுண்டய்யா-வருக்கு பொறிதட்டின மாதிரி இருந்தது. வீட்டை இடிச்சு புதையலை புதைச்சு வைக்கணும். வரும் காலத்திலே எப்போவாவது அதை திரும்ப எடுத்துக்கணும். அதே நேரம். வாழ்க்கையை இனிமேல் நாளைக்குங்கறதே இல்லேங்கற மாதிரி அனுபவிக்கணும் இது ரெண்டும் ஒத்துப் போகாது ஹொன்னு என்றார் நஞ்சுண்டர். 

ஒருவேளை ஜெரொஸுப்பாவிலே எல்லோரும் உள்ளூர பயப்படறாங்களோ. யுத்தம் எப்படி முடிஞ்சாலும் ஊரே அழியப் போறது. அதுக்கு முன் நாம் அழிச்சிடுவோம். சாகறது தான் சாகறோம், இருக்கற நாள்லே நாட்டியம் பார்த்துட்டு, பாட்டு கேட்டுட்டு, நாக்குக்கு ருசியா வயிறு புடைக்கத் தின்னு பீப்பாய் போல் ஊதி சந்தோஷமா சாவோமேன்னு நினைக்கறாங்களோ என்னமோ. 

ஹொன்னு சொல்லியபடி அவ்வளவுதான் வெற்றிலை என்று வெற்றுத்தட்டோடு எழுந்தாள். அவளை வியப்போடு பார்த்தார் நஞ்சுண்டார். அவள் மட்டும் ஆணாக இருந்தால் நஞ்சுண்டரை விட நூறு மடங்கு பெரிய பதவியில் யார் கண்டது அரசியாகவே ஆகியிருப்பாள்.

காலையில் எல்லா பிரதானிகளும் மிர்ஜான் கோட்டைக்கு வராமல் நீண்ட பயணமாக ஜெருஸோப்பா சென்று காத்திருக்க வேண்டும் என்று ராணி கட்டளையிட்டிருந்தாள். ஜெருஸோப்பா ராமேஷ்வர் கோவில் மற்றும் புதியதாகக் கட்டப்பட்ட சமண ஆலயமான சதுர்முக பசதியில் மாலை நேரத்தில் மக்களை சந்திக்கிறாள் மகாராணி. 

கோட்டையில் பெண்கள் கூட்டத்தில் அவள் உயிருக்கு ஆபத்து வந்தது போல் இங்கே வராமல் இருக்க தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிவீர் தளவாய் செய்கிறார். நன்றாக நடந்தேறட்டும் என்ற பிரார்த்தனையோடு உறக்கத்தில் ஆழ்ந்தார் நஞ்சுண்டய்யா வாரு. 

காலை ஜெருஸோப்பா செல்லும் வழியில் மிர்ஜான் கோட்டைக்குப் போய் ராணியை நலம் விசாரித்தார் நஞ்சுண்டய்யா. 

நஞ்சுண்டரே வாரும், உம்மைத்தான் நினைத்துக் கொண்டிருந்தேன். யுத்தம் வந்தாலும் வராவிட்டாலும் நூறு ஆயுசு உமக்கு என்று முகத்தில் மலர்ச்சியை வலுக்கட்டாயமாக வரவழைத்துக்கொண்டு உபசார வார்த்தை சொன்னாள் மிளகு ராணி. 

ஏதாவது ராத்திரியோடு ராத்திரியாக நல்ல திருப்பம் உண்டாயிருக்குமோ என்று அறிய ஆவலம்மா என்று நிஜ ஆர்வத்தோடு கேட்டார் நஞ்சுண்டய்யா. 

அப்படி இருந்தால் நானும் மகிழ்வேன் என்றாள் சென்னா. 

நான் உம்மை நினைத்துக்கொண்டது ஜெருஸூப்பா போகும்போது என் சாரட்டிலேயே நீங்களும் வந்தால் பயண நேரத்தில் திட்டங்களை விவாதிக்கலாமே என்றுதான். செய்யலாமே என்றார் நஞ்சுண்டர். 

அவருக்கு ஒரு கெட்ட அல்லது சுபாவமான நல்ல பழக்கம் பத்து அடி சாரட்டில் நகர்ந்தால்கூட உறங்க ஆரம்பித்து விடுவார்.  போய்ச் சேரவேண்டிய இடத்தில் இறங்கும்போது தெளிவாக, சுறுசுறுப்பாக இருப்பார். 

ராணியம்மாவோடு போனால் உறக்கத்தை எப்படி விரட்டுவது? அதோடு போர்க்காலத் திட்டங்களை வேறு பேச வேண்டும் என்கிறாள் மகாராணி. 

ஈசன் பாடு ராணி பாடு, சரி என்று சொல்லியாகத்தானே வேண்டும்? சரி என்றார் நஞ்சுண்டய்யா பிரதானி. கிளம்பி நேரே போகாமல் கோட்டைக்குள் எட்டிப் பார்க்க அப்படி என்ன இருக்கிறது என்று தன்மேலேயே கொஞ்சம் கோபமும் ஏற்பட்டது. 

நேற்று ராத்திரி சாப்பிடும்போது மனைவி ஹொன்னம்மாவிடம் பிரஸ்தாபித்திருந்தால் வேண்டாம் என்று காரண காரியம் கூறி தடுத்தாட்கொண்டிருப்பாள். அப்படி இல்லை என்றிருக்கிறது, என்ன செய்ய? 

நஞ்சுண்டர் கோட்டை உத்தியோகஸ்தன் மூலமாக ரதசாரதியை திரும்பிப்போய் கோட்டைக்கு மாலை ஆறு மணிக்கு மறுபடி வரும்படி சொல்லி அனுப்பினார்.

நம்முடைய ஆட்கள் எத்தனை பேர் என்று சாரட்டில் போகும்போது திடுதிப்பென்று நஞ்சுண்டய்யாவை வினவினாள் சென்னா மகாராணி. 

மூவாயிரத்து இருநூற்று முப்பத்தாறு பேர் என்று நினைவில் இருந்து சொன்னார் நஞ்சுண்டய்யா. 

என்ன சொல்கிறீர் நஞ்சுண்டரே, நிஜமாகவா? இத்தனை பேர் எங்கே இருக்கிறார்கள்? கோட்டையில் மூவாயிரம் பேர் இருந்தால் நாம் எல்லாரும் வெளியே போக வேண்டி வருமே. சென்னா சிரித்தாள். 

இவர்கள் இங்கேதான் வட கன்னட பிர்தேச கிராமங்களில் வசிக்கிறவர்கள். ஊதியம் கிடையாது. தயார் நிலைப் பணமாக மாதம் இருபது வராகன் பெறுகிறார்கள். கூப்பிட்டால் யுத்தத்துக்கு வந்து விடுவார்கள்.

கூப்பிட்டீர்களா? 

கூப்பிட்டு விட்டோம். நூற்று பதினெட்டு பேர் வரத் தயாராக இருக்கிறார்கள். மீதி? எல்லோரும் ஒன்று பெஜவாடா, பெனுகொண்டா போயிருக்கிறார்கள் அல்லது மதுரை, திருச்சிராப்பள்ளியில் காவல் பணிக்குப் போயிருக்கிறார்கள். மாமியாருக்கு வளைகாப்பு, மாப்பிள்ளைக்கு காது குத்து இப்படி காரணம் சொல்லி சிலர் தில்லி, அவௌத் என்று போயிருக்கிறார்கள்.

 எப்படி இவர்களைப் படை திரட்டப் போகிறீர்கள்? அடுத்த மாதம் பிறந்ததும் தயார்நிலைப் பணம் வாங்க கருவூலத்துக்கு வருவார்கள். அப்போது பிடித்துக் கோணிச் சாக்கில் கட்டிப் போட்டு விடுவீர்களா? சென்னா சிரித்தாள். 

நாளை பக்கத்து கிராமங்களில் தண்டோரா போட்டு தயார்நிலைப் பணம் பெறுகிறவர்கள் எல்லோரும் நாளை மறுநாள் கட்டாயம் கோட்டைக்கு வரவேண்டும். வரவில்லை என்றால் அவர்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள். இப்படிச் செய்யலாமா?

நஞ்சுண்டய்யா பிரதானி இரண்டாயிரத்து சொச்சம் பேரை எப்படி எங்கே அடைத்து வைத்து சாப்பாடு கொடுப்பது என்று நினைக்கையிலே விதிர்விதிர்த்தார். 

தண்டோரா போட்டு அரச உத்தரவுப்படி இவர்கள் வந்து சேர்ந்தாலும் அதே பிரச்சனை தான் இருக்கும். 

இருக்காது என்று அவர் மனதுக்குள் இருந்து ஹொன்னம்மா சொன்னாள் – கோட்டை அகழி, எதிரே பெரிய வெற்றிடம் இங்கெல்லாம் அவர்களை இருக்க வைத்து கோட்டை போஜனசாலையில் அரிசிச் சோறும் புளிக் குழம்பும் வாழைக்காய் கறியும் உணவு கொடுத்து சண்டைக்குப் போகத் தயாராக்கலாமே. அந்த முக்கியமான இடத்தை எதிரணிப் படை சூழ்ந்து நெருக்க திட்டமிட்டாலும் அதை இல்லாதாக்கி விடலாம்.

இதை நிச்சயம் சென்னபைரதேவி ராணியிடம் சொல்ல வேண்டும். 

நிமிர்ந்து ராணியைப் பார்த்தார் அவள் உறங்கிவிட்டிருந்தாள். 

ஜெருஸோப்பா நெருங்க நெருங்க நஞ்சுண்டருக்குப் படபடப்பு அதிகமாகிக் கொண்டிருந்தது.  இரண்டாயிரம் பேரை ஒன்றரை நாளில் என்ன பயிற்சி கொடுத்து கையில் வாளைக் கொடுத்து யுத்தம் செய்ய அனுப்புவது? 

இவர்களுக்கு ஆடி ஓடி சாடும்போது உடலில் தடை செய்யாமல் எப்படி வஸ்திரம் அணியத் தருவது?   ஒரே நிறத்தில், நீலக் குப்பாயத்தை ஹொன்னாவரிலும் ஜெருஸூப்பாவிலும் கோகர்ணத்திலும், மீர்ஜான் கோட்டையிலும் தையல்காரர்கள் தைத்துத் தள்ளிக்கொண்டிருக்கிறார்கள். ஆளுக்கு குறைந்தது இரண்டு குப்பாயமாவது தரவேண்டும். அப்படிக் கொடுத்தால் அதில் ஒன்றை வீட்டில் பிள்ளைகளுக்குத் தரப் பத்திரமாக எடுத்து வைத்து விட்டு, ஜீவித்திருந்தால் ஒரே குப்பாயத்தோடு நாள் கணக்காக வியர்வை மணக்க ஓடியாடுவார்கள். அதைச் செய்யாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

காலுக்குச் செருப்பு அணியத் தரவேணும் என்று கோரிக்கை எழலாம். இதுநாள் வரை செருப்பு அணியாமல் இப்போது அணிந்து ஓடிக் குதித்து யுத்தம் புரிந்தால் செருப்பில் தான் கவனம் போக அசௌகரியமாக அது கடித்துத் தொலைக்கலாம். அதுக்கு, செருப்பில்லாமலேயே போருக்குப் போவது சரிப்படும். 

யுத்தத்தில் ஜெயித்தால் வேறே மாதிரி புத்தி போகாமல், அதாவது நம் பக்கத்தில் இருந்து நமக்கு எதிராக போர் செய்து குழப்பம் உண்டாக்கும் சிந்தை ஏற்படாது ஜெயித்ததற்குப் பரிசு தந்து ஊக்கப்படுத்துவது, தோற்று ஓடி வந்தால் அந்தப் பெரும்படையை அல்லது நூறும் இருநூறுமாக திரும்பி வந்தவர்களைக் கவனிப்பது, மருத்துவச் செலவு. 

நஞ்சுண்டருக்குத் தலை சுற்றியது. பத்து கல்யாணம் ஒரே நாளில் ஏற்பாடு செய்து நடத்தி விடலாம். ஒரு சிறிய யுத்தம் நடத்துவது பெரும்பாடு. 

அவர் முணுமுணுத்தபோது ராஜமாளிகை வாசலில் சாரட் வந்திருப்பது தெரிந்தது. வாகனம் நின்றதும் தான் முன்னால் இறங்க வேணுமா அல்லது ராணியா என்று நஞ்சுண்டருக்குப் புலப்படவில்லை. 

இதுவரை ராணியோடு ஒரே சாரட்டில் பயணப்படுவது இந்த நாற்பத்தைந்து வருடத்தில் எத்தனை தடவை நடந்தது? மனதில் இருந்து ஹொன்னம்மா கேட்டாள். ஒன்று கூட இல்லை என்றார் அவசரமாக. அப்போது நீங்கள் இறங்கலாமே என்றாள் ஹொன்னு.. அப்படியே நஞ்சுண்டர் இறங்க, சாரட் நேரே உள்ளே போய்விட்டது. 

நஞ்சுண்டருக்கு அப்போதுதான் அடிப்படையான தேவைகள் அவர் முக்கிய பிரதானி என்பதையும் மீறி முன்னால் வந்தன. சிறுநீர் கழிக்க வேண்டும். தாகத்துக்கு தண்ணீர் வேண்டும். சற்றே படுத்து எழ ஒரு படுக்கை வேணும். பசிக்கிறது. மதியத்துக்கு ஆகாரம் வேண்டும்.   சாயந்திரம் சென்னபைரதேவி கூட்டங்களுக்கு போய்ச்சேர வாகனம் வேண்டும். 

ஜெரஸோப்பாவில் யாரைக் கேட்க? ராஜமாளிகைக்குள் போகலாமா என்று மனதில் ஹொன்னுவைக் கேட்க பதிலே இல்லை. பகல் உறக்கத்தில் போல. 

அழைக்காமல் அரசு மாளிகைக்குள் போவது நாகரிகம் இல்லை என்று தோன்றியது. என்ன செய்வதென்று அறியாமல் மெல்ல நடக்க ஆரம்பித்தார்.  

ஜெருஸோப்பா கடைவீதிக்குப் போனால் பழக்கமான பெரும் வர்த்தகர்கள் நிறைய உண்டு. பெத்ரோவின் அலுவலகமும் அங்கே உண்டு. 

அவர் அடுத்த அடி எடுத்து வைப்பதற்குள் பக்கத்தில் இன்னொரு பெரிய மூன்று குதிரை வாகனம் நின்றது. 

தேவரீர் எழுந்தருளணும். உள்ளே இருந்து இருகை கூப்பியபடி வகுளாபரணன் இறங்கி நஞ்சுண்டய்யா பிரதானியை தன்னோடு வரச் சொன்னான். 

பக்கத்தில் அரசுப் பிரதானி மாளிகை இருப்பதை மறந்து போனீரோ? 

வகுளன் அவர் சாரட்டில் ஏறக் கையைப் பிடித்து உயர்த்தி விட்டான். 

ஜெருஸோப்பா வராமல் மிர்ஜான் கோட்டையிலேயே அரசாங்கம் நடந்தால் இப்படியான விஷயம் எல்லாம் மனதில் வராது, இதுதான் பிரச்சனை என்று அவனிடம் சொல்ல வேணும் போலிருந்தது நஞ்சுண்டருக்கு. 

ஜெருஸோப்பா கூட்டங்கள்? நஞ்சுண்டர் கேட்க, வரவில்லை என்று தலையாட்டினான் வகுளன். 

அவரை இறக்கி விட்டு உள்ளே நுழையும் வரை பார்த்திருந்து விட்டு வகுளன் கோச்சை நகர்த்தினான்.

திருப்தியான சாப்பாடு, சற்றே உறக்கம். ஐந்து மணிக்கே அரசு மாளிகை ஏற்பாடு செய்து கொடுத்த வாகனத்தில் ஈஸ்வரர் கோவில்.  நஞ்சுண்டய்யா நாளிறுதிப் பரபரப்பின் வசமானார்.

காவல் சேவகர்கள் பத்து இருபது பேர் நடை பயின்று கொண்டிருந்தார்கள். நஞ்சுண்டரைப் பார்த்ததும் சவுதஸோ. சல்யூட் என முழங்கி போர்த்துகீஸ் காலணி அணிந்த கால்களைச் சத்தமெழ தரையில் அடித்து சல்யூட் செய்தார்கள்.

 நஞ்சுண்டய்யாவுக்கு பெருமையாக இருந்தது. தளபதியும் அப்படி வெள்ளைக்கார சலாம் வைத்தால், அதுவும் ஹொன்னம்மா பார்த்துக் கொண்டிருக்க காலை உதைத்து சல்யூட் செய்தால் ரொம்ப கௌரவமாக இருக்கும். ஆனால் இந்த தளபதி நரி மாதிரி. ராணியம்மா ஜாக்கிரதையாக இவனை நம்பாமல் இருந்தால் நல்லது. 

தளபதி மேலே நார்த்தங்காய் ஊறுகாய் மணம் வீச அருகில் வந்து நஞ்சுண்டய்யாவைக் கேட்டான் – பிரதானி அவர்களே, எவ்வளவு பெரிய கூட்டத்தை இங்கே எதிர்பார்க்கிறீர்கள்? 

முன்னூறில் இருந்து ஐநூறு வரை. அடுத்து சௌதாமுக சமண பஸ்தியில்? 

இருநூறில் இருந்து முன்னூறு பேர். ஆக எண்ணூறு பேர் அதிகபட்சம், ஐநூறு பேர் குறைந்த பட்சம். அது போதுமா? இந்த ஊரே திரண்டு வந்து கேட்க வேண்டாமா? நஞ்சுண்டய்யா தெரியவில்லை என்பதுபோல் தலையை ஆட்டியபடி தளபதியைக் கூர்ந்து பார்த்தார். 

தமிழ்ப் பிரதேசத்தில் தஞ்சாவூரில் இருந்து மிகப் பிரபலமான இந்துமதி, சாந்தமுகி, சுவர்ணாம்பா சகோதரிகளின் சதுர் கச்சேரி இன்று மாலை நடக்கிறதாம். அதைப் பார்த்துக் களிக்க பெரிய கூட்டம் இருக்குமாம்.  ராணியம்மா அவர்களோடு போட்டியிட முடியுமா தெரியவில்லை.

ஆட்டக்காரி சென்னாவை மனதில் கண்டவனாக தளபதி சிரித்தான்.

இவன் இன்றைக்கு எந்தப் பக்கம் இருக்கிறான்? நஞ்சுண்டருக்குத் தெரியவில்லை.

கோவில் வாசலில் சாரட் வந்து நிற்க, கோவில் முக்கியஸ்தர்களும், குருக்கள்களும் பூர்ண கும்பத்தோடு மெல்ல எதிர்கொண்டு நடந்தார்கள்.

 ஜெருஸுப்பா மகாராணி மிளகு அரசி சென்னபைரதேவி வாகனத்தில் இருந்து கைகூப்பியபடி புன்னகைத்துக் கொண்டு இறங்கினாள்.  

வழக்கமாக கோவிலுக்கு வரும் நூறு நூற்றைம்பது பேர் கோவில் திருக்கல்யாண மண்டபத்தில் குழுமி இருந்தார்கள். சிறிய மேடையை மண்டபத்தின் நடுவே தாற்காலிகமாக அமைத்து வாள், துப்பாக்கி ஏந்திய காவலர்கள் நாலு திசையிலும் பார்த்து மிடுக்காக நின்றார்கள். 

கோவில் மணி இல்லாமல் சாயரட்சை தீபாராதனை நடந்தது. குருக்கள் அர்ச்சனை செய்யும்போது குரல் தாழ்த்தி தனக்கும் சுவாமிக்கும் மட்டும் கேட்கும்படியாக மந்திரம் சொன்னார். 

சென்னா பேச ஆரம்பித்தாள் –

உங்கள் வயது நாற்பதுக்குள் இருக்கும் என் அன்பு மகன், மகள்களே, நாற்பதிலிருந்து எழுபது வயதான என் சகோதர சகோதரிகளே, என் பெற்றோர் போல் எப்போதும் எனக்கு வாழ்த்தும் ஆசியும் அருளும் அன்னை, தந்தையரே, அனைவருக்கும் என் வணக்கம். 

நான் ஜெருஸோப்பாவை அரசாட்சி செய்து வரும் கடந்த ஐம்பத்தைந்து வருடத்தில்  நான் எப்போதும் உங்கள் அனைவரையும் எதையாவது உதவி என்று கேட்டு வந்ததில்லை. இப்போது வந்திருக்கிறேன். 

என் அன்புள்ள ஜெருஸுப்பா தேசவாசிகளே, நான் உங்களிடம் பொன்னோ மணியோ, மரகதமோ, வெள்ளியோ கேட்க வரவில்லை. வரியை உயர்த்திக் கட்டச் சொல்லிக் கோரிக்கை விடுக்கவில்லை. 

இதுவரை மிகச் சிறந்த முறையில் நிர்வாகம் செய்யப்பட்டு, தரமான மிளகு மற்றும் இதர வாசனைத் திரவியங்கள் ஏற்றுமதி மூலம் வளமான, முன்னேற்றப் பாதையில் நடக்கும் நாடு ஜெர்ஸோப்பா. 

அதன் குடிமக்களான உங்கள் அனைவரையும் செழிப்பும் செல்வமும் பெருகி வாழ வழிநடத்திப் போவதில் பெருமை கொண்ட நான் இப்போது உங்களிடம் ஒன்றே ஒன்றுதான் கேட்கிறேன். 

இங்கே பத்து வினாடி இடைவெளி விட்டு நிறுத்தித் தொடர்ந்தார் சென்னா.  

வீட்டுக்கு ஒருவர். ஆம், வீட்டுக்கு ஒருவர் வரட்டும். 

எங்கு என்று உங்களுக்குத் தெரியும். 

எல்லையில் போர் மேகங்கள் அடர்ந்து ஜெரஸோப்பாவின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்க நாச சக்திகள் மும்முரமாகச் செயல்படுகின்றன. அவை வென்றால் நாமும் இத்தனை நாள் நாம் கட்டிக்காத்த நிலையான அரசும், பெற்ற பெருவளமும் எல்லாம் இனி கனவாகப் போய்விடும். 

ஜெரஸோப்பா சைனியம் நாட்டைக் காக்க அணிவகுத்து வந்துகொண்டிருக்கிறது. அவர்களுக்கு உறுதுணையாக நின்று, நடந்து உதவ இரண்டாம் நிலை படை திரட்ட நான் வந்திருக்கிறேன். 

வீட்டுக்கு ஒருவர் எதிர்பார்த்தபடி யுத்தம் வந்தால் மிர்ஜான் கோட்டைக்கு வாருங்கள். உங்களுக்கான பணி, எங்கே எப்போது எத்தனை நாள் தேச சேவை செய்ய உங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்பதெல்லாம் நாளை என் மூத்த பிரதானியான நஞ்சுண்டய்யா அவர்களால் அறிவிக்கப்படும். 

நாட்டுக்கு உழைக்க உங்களுக்கு ஒரு வாய்ப்பு. இந்த சென்னபைரதேவிக்கு நீங்கள் ஒவ்வொருவரும் அளிக்கும் மகத்தான உதவி இது. 

நான் உயிரோடு இருக்கும் வரை உங்கள் உதவியை மறக்க மாட்டேன். போர் மேகங்கள் விலகியதும் உங்களைத் தகுந்த முறையில் கௌரவிக்க நான் மறக்க மாட்டேன். 

வீட்டுக்கு ஒருவர். வேறேதும் கேட்கவில்லை. ஒன்று போதும் ஒரு இல்லத்திலிருந்து. வீட்டுக்கு ஒருவர். வருக ஜெரஸோப்பாவை வலுவானதாக்க எனக்கு உதவிக்கரம் தாருங்கள். 

ஊர்கூடித் தேர் இழுப்போம். வாரீர்.

சென்னா உருக்கமாகப் பேச, பக்கத்தில் நின்ற பிரதானிகளும், உப பிரதானிகளும், தளவாய் போன்ற மூத்த அதிகாரிகளும் கரகோஷம் செய்ய வந்திருந்த கூட்டத்தில் முக்கால்வாசி பேர் அவசர வேலை இருப்பதுபோல் கோவிலுக்கு வெளியே விரைந்து நடந்து போனார்கள். 

இனி உங்கள் கேள்விகளுக்கு நான் பதிலிறுப்பேன் என்று அடுத்து சொன்னாள் மகாராணி. எதுக்கு அவர்கள் ஏதும் பேச மேடை தரணும் என்கிற மாதிரி நஞ்சுண்டய்யாவும் சந்திரபிரபு பிரதானியும் சென்னாவைப் பார்த்தார்கள். 

நல்லா நடக்கும், கவலைப்படாதீங்க என்று கண் இமை தாழ்த்தி சமிக்ஞை கொடுத்தாள் மிளகு ராணி. ஒருவர், இருவராகக் கூட்டம் சேர்ந்தது.

மனம் திறந்து பேசலாம். யாரையும் கேள்வி கேட்டதற்காகத் தண்டிக்கவோ, கண்டிக்கவோ போவதில்லை. விமர்சனத்தை ஐம்பத்தைந்து வருடமாக வரவேற்று மாற்றுக் கருத்துகளை மதித்துவாங்கிப் பரிசீலித்து நாடு நிர்வகிப்பவள் நான். இப்போதும் எதிர்பார்க்கிறேன். 

கேள்விகள் கேள்விகள் ஒரு பெரிய ஜனக்கூட்டம் அரசியிடம் தொடர்ந்து வினாத்தொடுத்தது. விடை கொண்டது. பேச்சைக் கேட்க இருந்தவர்களை விட கோவில் முழுக்க அடைத்துக்கொண்டு வெளியேயும் நின்றபடி கிட்டத்தட்ட எண்ணூறு பேர் சென்னபைரதேவியிடம் கேள்வி கேட்டவை இதுவரை கேட்கப்பட்டவை தான் – பதில் தேவைப்படாத, புகார் செய்யும் தொனியில் வந்தவை பெரும்பாலும். 

போர் வருதென்றால் நீங்கள் இத்தனை நாள் அது வராமல் தடுக்க என்ன செய்தீங்க? இப்போது எப்படி வந்தது?

ஏன் அரசுத் துறையில் மிளகு விற்ற வருமானத்தையும், தனியார் வர்த்தகர்கள் மிளகு விற்றதுக்குக் கணிசமான வரி கட்டி வந்த வருமானத்தையும் தொடர்ந்து கட்டடம் கட்ட பயன்படுத்தணும்?

ஐம்பத்தைந்து வருடம் ஆண்டாச்சுன்னு நீங்க பெருமையா சொல்றீங்க. எங்களுக்கும் பெருமைதான். போதுமே. நீங்க பதவி துறந்து அடுத்த தலைமுறை ஆட்சிக்கு வர வழி பண்ணலாமே?

வீட்டுக்கு ஒருத்தர் வந்தால் எங்கே பயன்படுத்துவீங்க அவங்களை? 

ரெண்டாம் நிலை போர் ஆதரவுப் படை என்கிறது உண்மையா? முதல் நிலைப் படையே நம்மிடம் கிடையாதே. இவங்க எப்படி அடுத்த நிலையிலே வருவாங்க?

வீட்டுக்கு ஒருத்தரை கூப்பிட்டு ஒரு பயிற்சியும் இல்லாமல் கையிலே துப்பாக்கியைத் தூக்கிக் கொடுத்து மிர்ஜான் கோட்டையைப் பாதுகாக்க நிறுத்தி அவங்களை இறப்புக் கோட்டுக்கு அருகே கொண்டு போய் விடுவீங்க அப்படித்தானே?

நாங்கள் வராமலே ரெண்டாயிரம் பேருக்கு மேலே ரெண்டாம் நிலைப்படைக்கு தயார்ப் பணம் மாதாமாதம் வழங்கி நிறுத்தி வச்சிருக்கீங்க. அவர்களை முதல்லே கூப்பிட்டு விட்டு யுத்தத்துக்கு அனுப்புங்க. அப்புறம் வேணும் என்றால் நாங்கள் வீட்டுக்கு ஒருவரை அனுப்ப முடியுமான்னு பார்க்கறோம்.

அம்மாவுக்கும் பிள்ளைக்கும் சண்டை வந்தா கதவை அடைச்சு வச்சுட்டு வீட்டுக்குள்ளே அடிச்சுக்குங்க, தீர்த்துக்குங்க.  . எங்களை எதுக்கு யுத்தத்திலே இழுத்து விடறீங்க?

சென்னா சட்டென்று எழுந்தாள். முகம் இறுகி இருந்தது. நடக்க ஆரம்பித்தாள். 

தேசபக்தியும் அரசுமேலே நம்பிக்கையும் மதிப்பும் இல்லாத நகரம் ஜெருஸொப்பா. இது இனியும் இருக்க வேணாம்னுதான் நீங்களே இடிக்க ஏற்பாடு செய்யறீங்க. இடியுங்க.  நல்லா இருங்க. ரொம்ப நல்லா இருங்க. உங்களை தெய்வம் காப்பாற்றட்டும்.

அவள் வாயிலிருந்து இப்படி ஆயாசமும் அங்கலாய்ப்புமான வார்த்தைகள், இதுவரை வந்ததே இல்லை. எனினும் அதைப் பொருட்படுத்தாமல் கூட்டம் சென்னபைரதேவியை எதிர்த்துக் கோஷம் போட்டபடி கலைந்து போனது.

கோவில் மணி முழங்கியது. ராத்திரி ஆராதனை. சென்னா கண்ணீர் கன்னங்களில் பெருகி வடிய கண்மூடி கைகூப்பி சந்நிதியை நோக்கி நின்று வேண்டினாள் – எல்லோருக்கும் நல்ல புத்தி கொடுப்பா. எல்லாரும் கோபத்திலே பேசியதை மன்னிச்சுடு. எல்லோரும் நம்மவர்கள். எல்லோரும் என்னவர்கள். எல்லோரும் சந்தோஷமாக நல்வாழ்வு வாழட்டும்.

பக்கத்தில் நின்று கைகூப்பி இருந்த நஞ்சுண்டய்யா விம்மி விதிர்த்துக் கண்ணை அங்கவஸ்திரத்தால் துடைத்தபடி சென்னாவை மரியாதையோடு நடத்தி வெளியே கூட்டி வந்தார்.

சதுர்முக பசதி கூட்டத்துக்கு போய்த்தான் ஆகணுமா அம்மா? அவர் விசாரித்தார்.

நிச்சயம் போய்த்தான் ஆகணும். வாங்க.

சாரட் உள்ளே இரு முதியவர்கள் கண்மூடி சிறு உறக்கத்தில் இருக்க வாகனம் ஊர்ந்தது.

(தொடரும்)

மிளகு: இரா முருகன் - நாவல்

 மிளகு அத்தியாயம் எழுபத்து நான்கு மிளகு அத்தியாயம் எழுபத்தாறு

Discover more from சொல்வனம் | இதழ் 365 | 26 ஏப். 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.