மிளகு – அத்தியாயம் பதினேழு

1598 மிர்ஜான் கோட்டை

”பிரபஞ்சத்தில் அனைவருக்கும், அனைத்துக்கும், என்றால், உயிருள்ள, உயிர் என்பது இல்லாத அனைத்துப் பொருட்களுக்கும் ஆன்மா உண்டென்று மொழிந்தருளினார் பகவான் மகாவீரர்.

”ஒரு குக்கலை, என்றால், நாயை, கல் எறிந்து காயப்படுத்தும் மூடர்கள் போல, ஒரு செடியை வலிந்து இழுத்துக் காயும் பூவும் பறிக்கும் மூடர்களும், அந்தத் தாவரத்தை வலியால் துடிக்க வைக்கிறார்கள் என்று சொல்லியருளினார் அந்த மகான். அது மட்டுமில்லை, ஒரு கல்லை இன்னொரு கல் கொண்டு தாக்கினாலும், தாக்கப்பட்ட கல்லுக்கு வேதனையும் வலியும் மிகும் என்பதைப் புரிந்து கொள்வீர்களாக.

”மண்ணுக்கும், அதில் ஆழத்தில் வசிக்கும் மண்புழுக்களுக்கும், மேலே செடிகொடி மறைவில் வாழும் எலிகள், முயல்களுக்கும், நிலத்தைப் பண்படுத்திப் பயிர் செய்வது மூலம் துன்பம் ஏற்படும். எனவே வேளாண்மை வேண்டாம், உணவு துறந்து நோற்றுச் சுவர்க்கம் புகுவோம்.

உங்களில் எத்தனை பெயர் உலகைத் துறக்க, உணவுச் சுவை துறக்க, உறவுச் சுமை துறக்க, ஆடை துறக்க மனம் ஒப்புகிறீர்கள்? யாரும் மாட்டீர்கள். மனம் பக்குவப்படும் வரை”.

நிர்மல முனி என்னும் சமண முனிவர் நிர்மலானந்த அடிகள் வாயைச் சுற்றிக் கட்டிய இரட்டை வெள்ளைத் துணிக் கவசங்களுக்கு இடையே வடிகட்டிய குரல் மெதுவாகக் கசிந்து வரப் பேசினார்.

தரையில் ஒரு கால் மடித்து மறு கால் நீட்டி உட்கார்ந்திருந்தார் அவர். அவர் முன், தண்ணீர்ப் பாத்திரம் வைத்த சிறு மரமேடை அவருடைய இடுப்புக்குக் கீழே மறைத்து இருந்தது. திசைகளையே ஆடையாக உடுத்த திகம்பரரான அவர் இப்படி ஆன்மீகச் சொற்பொழிவு நிகழ்த்தாத நேரத்தில் இடுப்பில் உடுப்பு இல்லாததைப் பற்றி நினைப்பதே இல்லை.

அரண்மனைப் பிரதானிகளும், அழைப்பு கிட்டிய பெருவணிகர்கள் மற்றும் நகரப் பிரமுகர்களும் சமணத் துறவியின் உபதேச உரை கேட்கப் பெருமளவில் வந்திருந்தார்கள். அவர்களில் பலரும் சமணர் இல்லை. சென்னபைரதேவி வரச் சொல்வதால் தட்டாமல் வருகிறவர்கள் பலரும்.

எல்லாம் பிரதானி சந்திரப்பிரபு கோரிக்கை விடுத்ததில் தொடங்கியது. இரண்டு வருடம் முன் அரசியின் அறுபதாம் பிறந்தநாள் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது போல் அண்மையில் அறுபத்திரண்டாம் பிறந்த நாள் நிகழ்ச்சிகளும் சிறப்பாக நடந்தேறியதைக் குறிப்பிட்டார் அவர். அதைப் பற்றிப் பேசும்போது, இந்துமத, சமணப் பேருரைகள் நிகழ்ச்சியின் பகுதியாக இருந்தால் நன்றாக இருக்கும் என்பதோடு இன்னொன்றும் கூறினார் அவர்.

“அம்மா, இந்த வருடம் மிளகுப் பயிருக்கு தேவையான மழை இன்னும் பெய்யவில்லை. வந்து விடும் என்றாலும் தெய்வத்தைப் போற்றிக் கொண்டாடிக் கூட்டமாகப் பக்திப் பாடல் இசைத்தும், சான்றோர் நல்ல விஷயங்களைப் பற்றி உரை நிகழ்த்தியும் நல்ல வாக்குகளை, அவை உண்டுபண்ணும் நல்ல அதிர்வுகளை வெளியிலெங்கும் பரப்பி, மழைத் தேவனையும் மற்ற சிறு தெய்வங்களையும் மகிழ்ச்சியடைய வைத்தால், மழை நிச்சயம். சமண, இந்துத் துறவிகளை உங்கள் பிறந்த நாளைச் சிறப்பித்து நல்வாக்கருளி மிர்ஜான் கோட்டையில் உரை நிகழ்த்த அழைத்து வர உங்கள் உத்தரவு உண்டு தானே? இசை நிகழ்ச்சிகளை ஜெருஸோப்பாவில் ஏற்பாடு செய்திருக்கிறோம்”.

மழை பெய்யப் பிரசங்கம் என்றதுமே இதெல்லாம் தெரிந்தவள் அப்பக்கா மகாராணி என்று சென்னபைரதேவி நிச்சயம் செய்து விட்டாள்.

அப்பக்கா, அவள் ராஜாங்க இருப்பிடமான புட்டிகே-யில் மழை காலத் தொடக்கம் என்பதால் இருக்கிறாள் என்று செய்தி கொண்டுபோய் திரும்ப வாங்கி வரும் தூதர்கள் சொன்னார்கள். வைத்தியரும் சொன்னார்.

கோடை வந்தால் அங்கே இல்லாமல், இரண்டாவது தலைநகரான உள்ளால் துறைமுக நகரில் ஏற்றுமதி ஆகும் வெல்லமும், லவங்கப் பட்டையும் தரமானதாக இருக்கிறதா என்று வர்ததகர்களோடு வர்த்தகராக மேற்பார்வை பார்த்தபடி நிற்பாள். போகவர வெல்லம் கிள்ளித் தின்னவும் அவளுக்குப் பிடிக்கும்தான். இப்போதெல்லாம் உள்ளாலில் தான் பெரும்பாலும் இருப்பு.

நேரம் கடத்தாமல், குதிரையேறி விரையும் தூதர்களை அப்பக்காவிடம் லிகிதத்தோடு அனுப்பினாள் சென்னா. பதில் உடனே தேவை என்று கேட்டிருந்தாள்.

சுருக்கமான கடிதம் அது.

”பிரியமான அபி, நாட்டில் மழை பெய்ய வேணும். பேசினால் மழை பெய்யும் என்ற க்யாதி உள்ள சந்நியாசிகளில் அதி சிறந்தவர் பெயரையும் எங்கே அவரைக் கண்டு அழைத்து வரலாம் என்பதையும் உடனே பதில் லிகிதமாக எழுது. சிகப்பு ஆடைத் துறவிகள் மட்டுமில்லை, திகம்பரர் என்றாலும் சரிதான். மழைக்காலத்தில் சாதுர்மாச விரதமாக ஒரே இடத்தில் நான்கு மாதம் ஆராதித்திருக்க முனிகளுக்கு மிர்ஜானிலோ ஹொன்னாவரிலோ, கோகர்ணத்திலோ தகுந்த வசிப்பிடம் ஏற்பாடு செய்து விடலாம்”.

கடிதம் வந்த அடுத்த நாளே அப்பக்கா வேண்டி வணங்கி சம்மதிக்க வைத்து அனுப்பி வைக்க, நிர்மலானந்த அடிகள் வந்து சேர்ந்தார். சாதரணமாக எவ்வளவு தூரம் இருந்தாலும் அங்கங்கே இருந்து இளைப்பாறி நடந்து தான் வருவது வழக்கம் சமண சந்நியாசிகள் எல்லோருக்கும்.

அவசரம் என்பதால் வாடகைக்கு வண்டி பண்ணி, என்றால், வாகனம் ஏற்பாடு செய்து அனுப்பாமல், அப்பக்காவின் சொந்த சாரட்டில் அவரை ஏற்றி மிர்ஜானுக்கு அனுப்பியிருந்தாள் அவள். குதிரைக்குத் துன்பம் என்று அதற்கு எத்தனை மறுப்பு தெரிவித்திருப்பாரோ.

அப்பக்கா எத்தனை மன்றாடி அவரை மிர்ஜானுக்கு அனுப்பி வைத்தாள் என்பது அவளுக்குத்தான் தெரியும். கடுமையான உதர நோய் கண்டு குணமடைந்ததால் ஒரு பொழுது மட்டும் உண்ணும் திகம்பர விதிமுறையைச் சற்றே தளர்த்தி பகலிலும் மாலையிலும் ஒரு கைப்பிடி உண்ணுவாராம் நிர்மலானந்த முனியவர்கள். அவர் என்ன உண்ணுவார், எப்போது உண்ணுவார், எவ்வளவு உண்ணுவார் என்பதையும் எழுதியிருந்தாள் அப்பக்கா.

அதன்படி காலை ஐந்து மணிக்கு ஒரு குவளை காய்ச்சாத பசும்பாலும் சிறு கிண்ணத்தில், உலர்ந்த திராட்சைப் பழங்களும். பகலில் பருப்பு சாதம் – தால் சாவல் – ஒரு சிறு கோப்பை, ஒரு குவளை குடிநீர். சாயந்திரம் ஐந்து மணிக்கு இரண்டு கரண்டி சோறும், காரமில்லாத வெண்மிளகுக் குழம்பும், தணலில் வாட்டிய ஒரு பப்படமும் சாப்பிடும் துறவி அவர். மிர்ஜான் கோட்டையிலும், அருகே கிராமங்களிலும் அவை கிடைக்கும் என்பதால் முனிவருக்கு விருந்து புரக்கும் மரியாதை நல்லபடி செலுத்த சென்னாவால் முடிந்தது.

நிர்மலானந்த அடிகளின் உபந்நியாசத்தைக் கேட்க முதலில் வந்தவர் கோட்டைக் காவலர்களில் வயதானவரான இஸ்லாமியர் குர்ஷித் மியான். ”நான் எல்லா மதத்திலும் நல்ல விஷயங்களைத் தெரிந்து கொள்ள சொற்பொழிவுகளுக்குப் போகிறேன் அம்மா. இந்த சமண சாமியார் வித்தியாசமானவர் என்றார்கள். என்ன வித்தியாசம் என்று பார்க்க வந்தேன்” என்றார் அவர் சென்னபைரதேவியிடம் மரியாதை விலகாத குரலில்.

மேடையில் உடுப்பு இல்லாமல் நிர்மலானந்த அடிகள் அமர்ந்திர்ப்பதைப் பார்த்து சற்றே சங்கடத்தோடு முதல் வரிசையில் உட்காராமல் ஐந்தாவது வரிசைக்குப் போனாள் சென்னா.

அவர் பேசுவது எல்லாம் கேட்க நன்றாகத்தான் இருக்கிறது. என்றாலும் இது மட்டும் தான் சமண மதம் என்று சொன்னால் சென்னா நம்ப மாட்டாள். கல்லுக்கும் உயிர் உண்டு என்பதால் கல்லை உடைத்துக் கட்டடம் கட்டி வசிக்கக் கூடாது. கல்லைக் கொண்டு கோவிலும் கட்டக் கூடாது. கேட்க நன்றுதான் இது.

வேளாண்மையின்போது மண்ணுக்குள் நெளியும் மண்புழுவும் மற்றவையும் இறக்கக் கூடிய அபாயம் உள்ளதால் பயிர்த்தொழில் வேண்டாம் என்கிறாரே அடிகளார். அதைப் பற்றி யோசித்தாள் சென்னா பேச்சு முடிந்து எழுந்தபோது. சாப்பிடாமல் வயிற்றைப் பட்டினி போட்டு இறைவனின் திருவடி போவதுதான் எல்லோருக்கும் விதிக்கப்பட்டதா?

சார்ந்தவர்களுக்கு எளிய சோறும், புளிக்குழம்பும், மோரும், ஒற்றைக் காய்கறியும் கூடத் தர முடியாதவர்கள் எதில் சேர்த்தி? தகப்பன், தாய், பெண்டாட்டி, மகன், மகள் என்று நெருங்கி இருந்து வாழும் உறவில் வந்தவர்களுக்கு சோறு போடாமல், பட்டினி கிடந்து போகிற சொர்க்கத்தில் என்ன மகிழ்ச்சி கிடைக்கும்?

துறவறத்தையும் அஹிம்சையையும் இவ்வளவு தூரம் இழுத்து வந்தது சரிதான். எல்லோரும் துறவியாக முடியாது. ஆனவர்கள் கடினமாக அஹிம்சையைக் கடைப்பிடிக்கட்டும். மற்றவர்கள் முடிந்த அளவு அன்பே லட்சியமாக, தினசரி வாழ்க்கையில் தீச்செயல் விலக்கிப் பிற உயிர்கள் மேல் அன்பு கொண்டு இருக்கட்டும்.

யாரும் கடைப்பிடிக்க முடியாத போதனைகளை தீர்த்தங்கரர்களின் பாதம் பணிந்து வணங்கிக் கடந்து போவதன்றோ இனிச் செய்ய வேண்டியது.

சென்னாவுக்குப் பசித்தது. பழைய சோறு கூடாது. பூச்சிகள் பறந்து வந்து பாத்திரத்தில் சோற்று நீரைப் பருக எழுந்து இறந்து வீழலாம். ஆக புதுச் சோறு, பழைய சோறு எதுவும் வேண்டாம். உடுப்பும் தேவை இல்லை. சென்னா மலையாகச் சோறைக் குவித்து உண்ணப் போகிறாள். ஈரப் பிடவை களைந்து வேறொன்று உடுக்க வேணும். பசிக்கிறது.

புளிச்சாறும், தயிரும், உப்பிட்டு ஊறிய எலுமிச்சையும் உண்டு உண்டு வயிறு வலிக்கட்டும். வைத்தியன் கவனித்துக் கொள்வான். அவள் அவசரமாகப் பிடவையை இறுக்கிக் கொண்டாள். மழை பெய்ய ஆரம்பித்திருந்தது.

நிர்மலானந்த அடிகள் பேசி முடித்தபோது கனமழை பொழிந்ததால் அவருடைய பேச்சு ராசி எல்லோருக்கும் பிடித்துப்போனது. மழை தொடர்ந்து பெய்யும் தென்மேற்கு பருவ மழைக்காலம் வழக்கத்தை விட விரைவாக வந்ததுக்கு எல்லோருக்கும் மகிழ, அப்பக்கா அடுத்த நாள் மழையிலேயே நீளமான வாகன் ரதத்தில் மிர்ஜான் வந்துவிட்டாள்.

அவளுடைய பாதுகாப்பு வீரர்களும் ரதத்தில் நின்றபடி வந்தார்கள். ஹொன்னாவருக்கு வந்தவள் மழைக்குறி கண்டு மிர்ஜான் கோட்டைக்கு வைத்த பயணம் அது.

”அடி என் செல்ல சாளுவி. சொன்னேனே, நிர்மலானந்த அடிகள் பிரசங்கிச்சால் மழை கொட்டும்னு. நீ பாதி நம்பினே. இப்பப்பாரு. உன் ஊர்லே மழை”.

அப்பக்கா சென்னபைரதேவியை இறுகக் கட்டிக்கொண்டு மிர்ஜான் கோட்டையின் கொத்தளத்தில் நின்று அவளோடு மழைச் சாரலில் ஆடினாள். சந்தோஷம் அதிகமானால் அப்பக்கா மகாராணி ஆடித்தான் அதைத் தெரிவிப்பாள்.

“ஏண்டி சாளுவி, மழை பெய்யப் பேசறதுக்கு இன்னுமொரு சாமியார் வேணுமா? என் கிட்டே கேளு. ரொம்ப மழை பெய்து வெள்ளப் பெருக்கா? அப்போ வெயில் வரப் பேச ஒரு சாமியார் வேணுமா? இந்த அப்பக்காவுக்கு அதுக்கான சுவாமிகளையும் தெரியும். இன்னும் யுத்தத்திலே ஜெயிக்கப் பேசற சாமியார், யுத்தம் வராமல் பண்ணற பேச்சுக்கார சாமியார், பண்டிகை காலத்துலே நோய் பரவாமல் இருக்கப் பேசறவர், நோய் இருந்தா குணப்படுத்த பேசறவர், பயணம் நல்லா நடக்க பேசறவர்…”.

”உன் லொடலொட வாயைக் கட்ட சாமியார் உண்டாடி?”

சென்னா அப்பக்காவின் அணைப்பில் இருந்து மெல்ல விடுபட்டு அவள் கன்னத்தில் செல்லமாகத் தட்டியபடி கேட்டாள்.

“என் பேச்சை கட்ட அந்த ஆண்டவன் தான் திகம்பர சாமியாரா வந்து பேசணும்” என்றாள் அப்பக்கா. ”அதுவும் திகம்பர சாமியாராத்தானா? கிழிஞ்சுது போ” என்றாள் சென்னா.

“கிழிச்சுப் போட்டுட்டுத்தான் திகம்பரத் துறவியானாங்க” என்றாள் அப்பக்கா.

உள்ளே போனார்கள். வைத்தியர் வண்டியிலிருந்து இறங்கிக் கோட்டைக்குள் குடை பிடித்து வந்து கொண்டிருந்ததே காரணம்.

“ஐயோ வைத்தியன். பார்த்தா உடனே என்னைக் கொன்னுடுங்கோன்னு சொல்லிச் சொல்லியே இருக்கப்பட்ட கஷாயம் எல்லாம் குடிக்க வச்சுடுவான்”. இரண்டு அரசியர்களுக்கும் வைத்தியர் என்றாலே கலவரமான பயம், முகத்தில் குழந்தை மாதிரி தெரிந்தது.

மழையோடு மழையாக பெரிய சாரட் வண்டி ஒன்று கோட்டை வாசலுக்கு வந்து நின்றது. புத்தம்புதிய விசாலமான வண்டி அது. சாளரத்தின் வழியே கண்காணித்துக் கொண்டிருந்த வீரர்களை நிமிர்ந்து பார்த்தாள் சென்னா.

அவர்கள் கீழே ஓடி வந்து, தலை வணங்கி, மானுவெல் பெத்ரோ பெரிய துரையவர்களின் வாகனம் என்று தகவல் சொன்னார்கள். மழையில் நனைந்து சிலிர்த்த குதிரைகள் கனைத்தது சற்றுத் தூரத்தில் சென்னாவும் அப்பக்காவும் நின்றிருந்த இடம் வரை எதிரொலித்துக் கேட்டது.

இந்த எதிரொலியும் மிர்ஜான் கோட்டையின் தொழில் நுட்பத்தில் ஒன்று. கோட்டை பிரதேசத்தில் எங்கே பேசினாலும், முணுமுணுத்தாலும் கூட வளைந்து வளைந்து எழுந்த இரு சுவர்களில் அவை மோதி இரண்டு நிமிடத்தில் சத்தமாக கோட்டைக்குள் எதிரொலிக்கும்.

”அப்பக்கா, நீ வாசல்லே நின்னு சிரிச்சால் கூட எனக்குத் தெரிந்துவிடும்” என்றாள் சென்னா அவள் கையைப் பற்றிக்கொண்டு.

“சிரிக்க வைக்க ஒரு சாமியார், நெக்குருகி அழ வைக்க ஒரு சாமியார், ரௌத்ரம் எழப் பேச இன்னொருத்தர் இப்படியான சாமியார்களையும் எனக்குத் தெரியும்” என்றாள் அப்பக்கா.

”அடேயப்பா இத்தனை சாமியாரும் நிரந்தரமாக உன் தேசத்திலே இருந்து தினம் உபதேசம் பண்ணினா எப்படி இருக்கும். எதைக் கேட்பே? இருக்காங்களா?” என ஆர்வத்தோடு கேட்டாள் சென்னா.

”இந்த நிமிடத்தில் புட்டிகே-யில் ஒரு சாமியாரும் கிடையாது. நானாக ஏற்படுத்திக்கிட்ட என் ரெண்டாவது தலைநகரம் உள்ளால்-லேயும் கிடையாது. என்னைச் சந்திக்க ஒரு இத்தாலிய தேசப் பயணி நேத்து நேரே துறைமுகத்துக்கு வந்து திகம்பர சாமியார் எப்போ வருவார் எப்போ வருவார்னு உயிரை எடுத்துட்டான். திகம்பர சாமியாரோட பீஜத்தைத் தொட்டுக் கும்பிடுவது தான் இந்திய வழக்கம்னு அவன் கிட்டே யாரோ சொல்லியிருக்காங்க. அதை நேர்லே பார்க்க அதுவும் நான் தொட்டுக் கும்பிடறதைப் பார்க்க நேற்றுப் பூரா காத்திருந்தான். அவன் அதிர்ஷ்டம் ஒரு சாமியார் கூட வரல்லேன்னா பார்த்துக்க. அவனுக்கு ஏற்கனவே ஏமாற்றம். நான் கால்லே செருப்பு போடாம சாதாரணமா தெருவிலே நடந்து போகிறது”.

அப்பக்கா எத்தனையாவது முறையாகவோ சிரித்தாள். சென்னபைர தேவியும்.

”சரி உன்னை சந்திக்க போர்த்துகீஸ் அரசப் பிரதிநிதி வந்திருக்கார். மிளகு விலை பேச வந்திருந்தால், நினைவு வச்சுக்கோ, நல்ல காரமான மிளகு நிறைய விளையப் போகிறது. விலையை எந்தக் காரணத்துக்காகவும் குறைக்காதே. அவர் நம்மை அண்டி பொருள் வாங்க வந்தவர். நாம் எல்லா வளமும் வாய்த்து பொருள் விற்கறவங்க. கெத்தா இரு. நான் போறேன்”.

அப்பக்கா புறப்பட்டாள். கூட வந்த எட்டு சிப்பாய்களும் வாளும் துப்பாக்கியுமாக புறப்பட்டார்கள்.

”இருடி நான் நிறைய பேசணும். சமையல்காரங்க இன்னிக்கு பதிர்பேணின்னு ஒரு இனிப்பு பண்ணியிருக்காங்க. அரிசி உப்புமாவும் உண்டு. நிர்மலானந்த அடிகள் கொஞ்சம்போல் சாப்பிடச் சம்மதிச்சார். அவர் பெயரைச் சொல்லி நானும் நீயும் சாப்பிடலாம். இரு. நான் சந்திப்பு முடிஞ்சு வரேன். போயிடாதே”.

முன்மண்டபத்தில் கையில் பூச்செண்டும், பழுப்பு நிற உறை ஒன்றுமாக இமானுவெல் பெத்ரோ உட்கார்ந்திருப்பதைப் பார்த்தபடி அரண்மனை உள்ளே போனாள் சென்னா.

சொட்டச் சொட்ட நனைந்து இருந்த அவள் வருகைக்காகக் காத்திருந்த மெய்க்காப்பாளினிகள் இருவர் எடுத்து வைத்துக் காத்திருந்த தமிழ் பேசும் பிரதேசத்து கைத்தறி பிடவை குளிர்ந்த நீலமும், பொன் நிறமும் கலந்து, வாசனை தைலங்கள் தொட்டு வந்த நல்ல மணத்தோடு உடுக்கத் தயாராக இருந்தது.

பிடவை கொசுவம் வைக்கவும், தோளின் குறுக்கே கௌரவத் தோற்றம் தர மேலே சுற்றி விடவும் மெய்க்காப்புப் பெண்கள் உதவினார்கள். கச்சு வேண்டாம் என்று சொல்லிவிட்டாள் சென்னா. தொளதொளத்த ரவிக்கை அணிவித்துச் சேலை முந்தானையை மேலேற்றி இழுத்து வைத்தார்கள்.

”ரெசிபேர் ரெசிபேர்”

போர்த்துகீஸ் மொழியில் வருக வருக என உரக்கச் சொல்லியபடி அரண்மனை உள்ளிருந்து சென்னபைரதேவி இரு கரம் கூப்பி வந்து கொண்டிருந்தாள்.

“அப்ரிகாடோ வொஸ்ஸா மெஜெஸ்டேட்”

(நன்றி யுவர் மெஜஸ்டி)

பெத்ரோ, அரசியார் கைகாட்டிய ஆசனத்தில் அமர்ந்து கையில் வைத்திருந்த பழுப்பு நிற உரையைப் பிரித்தார்.

“யுவர் மெஜஸ்டி, நல்ல காரியம் ஏதும் தொடங்கினால் அது தானே வேகமடைந்து போக வேண்டிய பாதையில் போகும் என்பதை அரசியார் நம்புவார்கள் தானே?”

“எந்த நல்ல காரியம் பெத்ரோ பிரபு அவர்களே இடுப்பில் அணியும் கடியாரம் நன்றாக இருப்பதாகச் சொன்னது உங்கள் முதல் பிலிப்பு போர்த்துகீஸ் அரசரும் இரண்டாம் பிலிப்பு ஸ்பானிஷ் அரசருமான பேரரசருக்குப் போய்ச் சேர்ந்து அவர் இன்னும் ஐந்து கடியாரங்கள் கொடுத்தனுப்பி இருக்கிறாரா”

”அந்த மகிழ்ச்சியான செய்தியையும் விரைவில் எதிர்பார்க்கலாம் யுவர் மெஜஸ்டி. இது அதை விட பெரிய மகிழ்ச்சிக்கான செய்தி”.

”என்னவாக்கும் அது?”

ஆர்வத்தைக் காட்டிக் கொள்ளாமல் சிரத்தையில்லாத தொனியில் கேட்டபடி வாசலில் வந்து கொண்டிருப்பவர்கள் மேல் பார்வை நிறுத்திக் கேட்டாள் சென்னா.

பெத்ரோ எழுந்து நின்று கையில் வைத்திருந்த கடிதத்தை அரசியாரிடம் தர எடுத்தபோது அது நீங்களே வைத்திருங்கள் என்று நளினமாகச் சைகை செய்தாள் சென்னா. புரிந்ததாக வணங்கி மறுமுறை அமர்ந்தார் பெத்ரோ.

வாசலில் பிரதானியும் உப பிரதானியும் வந்து கொண்டிருந்தார்கள். அவர்கள் நேரே வரமுடியாது முன்மண்டபத்தில் தடுத்து நிறுத்தப்பட்டிருப்பார்கள். அங்கே ஆசனங்கள் இழுபடும் ஓசை கேட்டது. உட்கார்கிறார்கள் அவர்கள்.

யுவர் மெஜஸ்டி. திருமனசு இரு தினங்களுக்கு முன்புதான் லிஸ்பன் விஜயம் செய்து வர விருப்பம் தெரிவித்த நற்செய்தியை எங்கள் மாமன்னருக்கு அனுப்பச் சொன்னது. அதை அனுப்புவதற்குள், தன்னிச்சையாக அவரிடமிருந்து நேற்று வந்து சேர்ந்த லிகிதம் இது. போர்த்துகீசிய அரசப் பிரதிநிதிகளில் சிலருக்கு மாமன்னர் சார்பில் இந்த நாட்டு அரசர் அரசியாருக்கு ஐரோப்பா வந்து போக அழைப்பு விடுக்கும் அதிகாரத்தை கொடுத்திருக்கிறார். அந்த நல்லூழ் வாய்க்கப்பட்டவர்களில் நானும் உண்டு.”

அவர் கண்கள் கிறங்கச் சொல்ல மிக்க மகிழ்ச்சி என்றாள் சென்னா. ”உங்களுக்கு கூடுதல் அதிகாரங்கள் உங்கள் அரசரால் வழங்கப் பட்டதற்கு பாராட்டுகள்”.

”யுவர் மெஜஸ்டி, நான் இந்தக் கடிதத்தை வாங்கியதும் செய்த முதல் காரியம் உங்களுக்கு அழைப்பு விடுக்க அரச லிகிதம் எழுதுவது தான். எழுதத் தொடங்கியதும்தான் நினைவு வந்தது, எப்போது வர விருப்பம் தங்களுக்கு, யாரெல்லாம் கூட வருகிறார்கள் ஆகிய விவரங்கள் கேட்காமல் லிகிதம் எழுத அமர்ந்தது என் தவறுதான். அவற்றைக் கேட்டுக்கொண்டு ஹொன்னாவர் திரும்பி முழுக் கடிதத்தை எழுதி அரச முத்திரை சார்த்தித் தங்கள் திருப்பாதத்தில் சமர்ப்பிக்க வேண்டும்”.

பெத்ரோ, நிறையக் காரியம் நீண்டு போக, அவற்றைச் செய்து முடிக்க ஆர்வம் மிகுந்தவராகக் காட்டிக்கொண்டார்.

எப்போது வர விருப்பம்? சென்னா வாய்விட்டு ஒரு முறை சொல்லிப் பார்த்தாள்.

“அது அத்தனை அவசியமா? அது தெரிந்து தான் அழைப்பு விடுப்பீர்களா?”

அவள் விளையாட்டுத் தொனியில் கேட்க பெத்ரோ அரண்டுதான் போனார்.

“ஐயையோ, அப்படி எல்லாம் ஒன்றுமில்லை. எப்போதென்று தெரிந்தால் பயணத்தை மிகச் சிறப்பாகத் திட்டமிடலாம் என்று பார்த்தேன். மேலும் அரசியார் லிஸ்பன் போகும்போது பேரரசர் பிலிப்பு மிளகு மகாராணியைச் சந்திக்கும் வாய்ப்பைத் தவறிப்போக விடக்கூடாதே. அவர் ஸ்பெயினுக்கும் அரசர் என்பதால் அடிக்கடி பயணத்தில் இருப்பார். நீங்கள் வரும்போது எந்தப் பயணமும் எங்கும் போகாது உங்களோடு வர்த்தகமும் மற்றதும் பேசிக் கருத்துப் பரிமாறிக்கொள்ள அவர் அங்கே இருக்க வேண்டும் அல்லவா? மேலும் லிஸ்பனில் மழைக்காலம், வெய்யில், பனிக்காலம் இவை மாறி வர, தாங்கள் வரும்போது என்ன மாதிரி தட்பவெட்பம் இருக்கும் என்று அவதானித்து காலநிலை சிறப்பாக இருக்கும் நாட்களில் வெளியே போக ஒரு பயண அட்டவணை ஏற்படுத்தி விடுகிறேன். அடுத்த மாதம் பிப்ரவரியில் தேசமே மிதமான குளிரும், பூப்பூத்த மரங்களும், பச்சைச் செடிகொடிகளுமாக சொர்க்கம் போல் காட்சியளிக்கும். நீங்கள் முதல் வாரம் ஜனவரியில் புறப்பட்டால் பிப்ரவரி முதல் வாரத்தில் லிஸ்பனை அடையலாம். அப்படியே எடுத்துக் கொள்ளட்டுமா?”

ஆர்வம் மிகுந்த குரலில் பெத்ரோ பிரபு வினவினார்.

“இருங்கள் சின்ஹோர் இம்மானுவல் பெத்ரோ. இந்தப் பயணம் உடனே முடிவெடுத்து அடுத்த நாள் நாலு துணிமணியை மடித்து சஞ்சியில் வைத்துக்கொண்டு கிளம்பி விடுகிற சமாசாரம் இல்லையே. நான் இல்லாதபோது இங்கே காரியங்கள் நான் இல்லாதது குறையாகத் தெரியாமல் நடந்தேறத் திட்டமிட வேண்டும். பயணம் போனால், எவ்வளவு சீக்கிரம் திரும்புகிறேனோ அவ்வளவு விரைவில் மிர்ஜான் திரும்ப வேண்டும். யாரெல்லாம் என்னோடு வருகிறார்கள். இது நல்ல கேள்வி. கல்யாண கோஷ்டி மாதிரி முப்பது, நாற்பது பேரோடு லிஸ்பன் புறப்பட நானும் விரும்ப மாட்டேன். உங்கள் அரசரும் அவர்தம் குடும்பமும் கூட இவ்வளவு பெரிய குழுவைச் சந்திக்க விருப்பப்பட மாட்டார்கள். ஆமாம், பயணம் என்றால் கப்பல் சீட்டு, லிஸ்பனில் தங்க, உணவு உண்ண, சுற்றிப் பார்க்க, இதெல்லாம் இலவசமாக எல்லோருக்கும் கிடைக்குமா என்ன? அந்தக் கணக்கு தெரிய வேண்டாமா பயணம் என்று புறப்படும் முன்னால்? ஒரு பேச்சுக்காக பத்து பேர் கொண்ட பயணக் குழு என்று வைத்துக் கொள்வோமா?”

பெத்ரோ சிரித்தபடி இருகை கூப்பி இந்தியனாக வணங்கினார்.

”பேகம் சாய்பா, அந்தக் கவலை தங்களுக்கு வேண்டாம். மிளகு ராணி அவர்களே, தாங்கள் எங்களுடைய பெருமதிப்புக்குரிய விருந்தினர். செலவு கணக்கு தங்களுக்கானது அல்ல. அதைத் திட்டமிடுவோம் உண்மைதான். ஆனால் எந்தச் செலவும் குறையேதும் வராதபடி திட்டமிடப்படும். அதற்குத்தான் அழைப்பு முழுமைப்படுத்தப்பட வேண்டுமென்று கோரிக்கை விடுப்பது, யுவர் மெஜஸ்டி”.

”அதென்ன மிளகு ராணி, யுவர் மெஜஸ்டி, பேகம் சாய்பா ஒரேயடியாக சிரசைக் குளிர வைக்கிறீர்களே? திரும்ப ஜலதோஷம் பிடித்தால் எங்கள் வைத்தியனைத்தான் கூப்பிட வேண்டும். கசப்பு கஷாயம் திப்பிலி, சுக்கு, பனஞ்சீனி என்று தட்டிப்போட்டு காய்ச்சிக் கொடுப்பதை பிடிக்கவில்லை என்று தள்ளவும் முடியாது, பிடிக்கிறதென்று ஒரு குவளைக்கு மேல் அந்தக் கருப்பு திரவத்தைப் பருகவும் முடியாது. வைத்தியன் அத்தியாவசியமான ஒருவர்”

சென்னபைரதேவி மகாராணி பெத்ரோவைப் பார்த்தாள். அவர் ஒரு வினாடி யோசித்தார்.

“அத்தியாவசியமாக யாரெல்லாம் வரக்கூடும் என்பதை ஊகித்துப் பார்க்கலாமே. நான் குத்துமதிப்பாகப் பார்த்தால் இளையவர் நேமிநாதன், அவர் மனைவியவர்கள், வைத்தியர்”.

பெத்ரோ அடுக்கிக் கொண்டு போக போதும் என்று கைகாட்டினாள் சென்னா.

”இந்தப் பட்டியலை நான் முடிவு செய்ய வேண்டும். நீங்கள் இல்லை”.

சாந்தமான அந்த முகத்தில் ஒரு வினாடி சினம் தெரிய, பெத்ரோ பதறிப் போனார். ஏதோ செய்ய உட்கார்ந்து வேறெதோ வந்து முடிகிற மாதிரி ஆகி விடப் போகிறதே என்ற படபடப்பு அது.

”யார் மகாராணி கூட வந்தாலும் சந்தோஷமே. யாரும் வராவிட்டால்? அதுவும் மகிழ்ச்சிக்குரியதே. முன்கூட்டி அறிந்தால் பயணத்துக்கான திட்டமிடுதல் சிறப்பாக இருக்கக் கூடும். அந்த ஆர்வம் மிகுந்து வர என்னவோ உளறி விட்டேன். மறுபடி மன்னிக்கக் கோருகிறேன். மன்னிக்கக் கோருகிறேன். புத்தி பேதலித்துப் போகிறது. என் பகல் உணவில் மிளகு சேர்க்கவில்லை. அதுதான் காரணம்”

அவர் சொல்ல, சென்னா நகைத்தாள். “நீர் மகா புத்திசாலி” என்று பெத்ரோவிடம் கண்கள் குறுகுறுத்துச் சொல்ல பெத்ரோ முகம் மலர்ந்தது. மிளகு ராணிக்காக எதுவும் செய்வார் அவர் என்ற உறுதி தெரிந்த முகம் அது.

அவர் தன் இருக்கையில் இருந்து எழுந்து தேவாலயத்தில் பிரார்த்தனை நேரம் போல மண்டியிட்டு வணங்கி எழ, சென்னா மனசு கேட்கவில்லை.

“திரு பெத்ரோ, மன்னிக்கவும், என் சொற்கள் உங்களைக் காயப்படுத்தினால் வருந்துகிறேன். போர்த்துகீசு நாடும் அந்தப் பெரு நாட்டின் அரசருடைய பிரதிநிதியான தாங்களும் எப்போதும் எங்கள் மதிப்புக்குரியவர்கள். பயணத் திட்டத்தை விரைவில் உங்களுக்கு அறிவிக்கிறேன். தயவு செய்து அதை யாருக்கும் வெளியிட வேண்டாம் என்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்”.

”நிச்சயமாக மகாராணி”

விடை பெற்று எழுந்திருக்கப் போனாள் சென்னபைரதேவி. பெத்ரோ தன் அருகில் வைத்திருந்த துணிப் பொதியை எடுத்து திறந்து அதன் உள்ளிருந்து எடுத்தது ஒரு பழம். பழ வாசனை மண்டபம் முழுக்க அடித்தது.

”மகாராணி உங்களுக்கு விருப்பமானது என்பது தெரியும். கொய்யாப் பழம். மிக இனிப்பும் வாசனையுமாக என் வீட்டுத் தோட்டத்தில் விளைந்தது. உங்களிடம் சொல்லி விட்டு அரண்மனை குசினியில் கொடுத்து விட்டுப் போகிறேன். உண்டு பார்த்து எப்படி என்று சொல்லத் திருவுள்ளம் நாடினேன்”.

”அடடா, வைத்தியனை அருகில் நெருங்க விடாமல் விரட்டலாம் என்று பார்த்தால் நடக்காது போலிருக்கிறதே. இந்த அற்புதமான கனிகளை எப்போது உண்டாலும் வைத்தியனிடம் வயிற்று வலிக்காக மருந்து வாங்க வேண்டி வருகிறதே. நீங்களும் ஒன்று மட்டும் இனி கொடுங்கள் போதும்”.

சென்னா போலியான சிடுசிடுப்போடு சொல்ல, ”என்னது மகாராணிக்கு ஒரே ஒரு கனி கொடுத்து அவமானப் படுத்தவா? நிச்சயம் மாட்டேன் அம்மா” என்று தலை வணங்கி நிமிர்ந்து குறும்புச் சிரிப்போடு சொன்னார் பெத்ரோ.

அரசிக்கு முதுகு காட்டாது வெளியே போனார் அவர். அடுத்த மழை ஆரம்பித்திருந்தது.

***

Series Navigation<< மிளகு -அத்தியாயம் பதினாறு மிளகு அத்தியாயம் பதினெட்டு >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.