மிளகு – அத்தியாயம் 6

1596 மிர்ஜான் கோட்டை

அரண்மனை வைத்தியர் பைத்தியநாத் ஒரு போத்தல் நிறைய அடைத்த, முகர்ந்து பார்க்கும் உப்போடு மகாராணி சென்னபைரதேவியின் திருமுன்பு மரியாதை விலகாமல் நின்று கொண்டிருந்தார். அவர் கையைத் தள்ளி எழுந்திருக்கப் பார்த்தாள் சென்னா. அவரா, விடாக்கண்டனாக அழிச்சாட்டியமாக அங்கேயே நின்றார்.

”என்னை முதல்லே ஆனைக் காலாலே மிதிக்க வச்சுக் கொன்னுட்டு சர்பத் குடிக்க திருமனசு வைக்கணும் மகாராணி. இப்பவே கொன்னுடுங்கோ”

வைத்தியரின் விநோதமான கோரிக்கையைப் புன்சிரிப்போடு கேட்டுக் கொண்டிருந்தாள் சென்னபைரதேவி. அவர் மேல் தப்பில்லை. சென்னாவின் நாக்கு தான் சின்னக் குழந்தை போல் உணவு ருசியில் மயங்கி விட்டது.

குளிரப்படுத்திய குடிநீர் கிடைத்ததா? ஆமாம். அதில் போத்தல் நிறைய எடுத்த முகலாய ஷெர்பத் கலந்தாச்சா? ஆச்சே. சேமியா நாடாக்களை உடைத்துப் போட்டு, வெல்லம் சீய்த்து நெய்யில் வறுத்த அரை, காலாக பாதாம் பருப்பும், பிஸ்தாவும், பெரிய பேரிச்சம் பழத் துணுக்குகளும் கலந்தானதா? ஓ ஆனதே. இந்தக் கலவையைக் களிமண் பானைக்குள் பானையாக நான்கு அடுக்கு வைத்து, சர்க்கரையிட்டுக் காய்ச்சிக் குளிர்ந்த பசுவின் பால் ஊற்றிச் சுற்றிலும் மலைத் தொடரிலிருந்து மரத்தூள் குடுக்கையில் எடுத்து வந்த பனிக்கட்டியை அணைத்தபடி வைத்தானதா? ஆனது. நான்கு மணி நேரம் பொறுத்தானதா? ஐந்து மணி நேரம் காத்திருந்தானது. பெட்டிக்குள் என்ன கண்டீர் மகாராணி? இனிப்புச் சுவை கொண்ட, கேசரி நிறம் அடர்ந்த, பாலும், பருப்பும், ஷெர்பத்தும் கலந்த அபூர்வமான சுவை உணவு. வைத்தியன் வருவதற்குள் தின்று தீர்க்க வேண்டும். வயிறு வலித்தாலும் சரிதான்.

பிறந்த நாளுக்கு சென்னா தனக்கே தனக்கான கொண்டாட்டமாக வைத்துக் கொண்டது இந்த இனிப்புப் பனிக்கட்டிதான். ஒன்று மட்டும் தின்ன நினைத்திருந்தது வேறு யாரும் கவனிக்காததால் எட்டு பனிச் சுவைக் கட்டி ஆனது. நடு ராத்திரி தொடங்கி அடிவயிறு சுண்டி இழுத்து வலிக்கத் தொடங்கியது நிமிடத்துக்கு நிமிடம் கூடிக்கொண்டுதான் போனதே தவிர குறையவில்லை.

அம்மா, இன்னும் வலி இருக்கா? வைத்தியர் கேட்க இல்லை என்றாள் தலையசைப்பில் சென்னபைரதேவி.

வைத்தியர் பைத்தியநாத் பெயர் மட்டும் வங்காளி. கொங்கணிக் குடும்பம். வந்த ஒரு மணி நேரத்துக்குள் எதையோ சுட வைத்து வேறெதையோ அள்ளிப் போட்டு, மற்ற ஒன்றைக் கை மறைவாகக் கிள்ளிப் போட்டு, அஸ்கா சர்க்கரை கேட்டு வாங்கி இனிப்பு கிண்டுவது போல் நெய்யில் குழைத்து கலந்து சின்னஞ்சிறு அடுப்பில் அவர் கொதிக்கக் கொதிக்கக் காய்ச்சி மகாராணிக்குக் குடிக்கக் கொடுத்த பானத்தை அதன் வாசனைக்காகவே யாரும் வேண்டாம் என்று சொல்லாமல் பிரியத்தோடு ஒரு சொட்டு மிச்சமில்லாமல் குடித்துவிட்டு போவார்கள். சென்னாவுக்கு, இரண்டு மடக்கு குடித்த அப்புறம் அது வேண்டியிருக்கவில்லை.

“அம்மா இது வேணாம் என்றால் நல்ல கசப்பாக, ஜாதிக்காய்ப் பொடி போட்டுக் கலக்கித் தரேன். பானம் செய்விக்க உத்தரவாகணும்”

“உன் தலையிலே உத்தரவாக. ஒண்ணு பாகல் காய் கசப்பு. இல்லையோ அஸ்கா சீனி இனிப்பு. ரெண்டுக்கு நடுவிலே உனக்கு மருத்து பண்ணவே தெரியாதா?” உண்மையில் கோபமில்லை. விளையாட்டுக் கோபம் தான்.

“நீங்க என்னை முதல்லே ஆனைக் கால்லே இடற வச்சுக் கொன்னுடுங்கோ. அல்லது குதிரையாலே கட்டி இழுக்கப்பட்டு கை கால் தனித்தனியாகப் போக வச்சுடுங்கோ. அதுவும் இல்லேன்னா பீரங்கி உள்ளே வச்சு வெடிச்சு வெளியே தள்ளிப் பொடிப்பொடியாப் போக வைக்கலாம். அது எல்லாமோ ஒன்று ரெண்டோ நடந்த அப்புறம் பனிக்கூழோ கட்டியோ விருப்பம் போல சாப்பிடுங்கோ. வயித்து வலி வரலாமா வரலாமான்னு வாசல்லே நிக்கும். வாவான்னு வெத்தலை பாக்கு வச்சு வரவேற்பு, கூடிக் குலாவல் எல்லாம் நடக்கட்டும். நான் இல்லே. ஆனைக் கால்லே, பீரங்கி உள்ளே நான் போய்க்கறேன். பால் மட்டும் ஊத்திப் படைக்கச் சொல்லிடுங்கோ”

சென்னா அடக்க மாட்டாமல் சிரித்தாள். ”ஏண்டா வைத்தியா, நீ உங்க அப்பா வைத்தியரோடு சின்னப் பையனா மருந்து மூட்டையைத் தோளிலே தூக்கிக்கிட்டு வந்ததை இன்னிக்குத் தான் பார்த்த மாதிரி இருக்கு. நீயானா வளர்ந்து என் கிட்டேயே அழிச்சாட்டியம் பண்ணிண்டு நிக்கறே. சரி என் நல்லதுக்குத்தான் பண்ணறே. இத்தனை முஸ்தீபா அதுக்கு? ஒரு வேளைக்கு நாலு பனிக்கூழ்கட்டி தின்னா குத்தமா? ஊர்லே படிச்சவங்க யார்கிட்டேயாவது கேட்டுப் பாரு. இங்கே கூட்டிட்டு வந்து என் முன்னாலே கேட்பேன்னாலும் சரிதான்”. படபடவென்று பொய்க் கோபத்தில் பேசினாள்.

“சரி அம்மா, யாராவது ஒண்ணுன்னு சொல்லி எட்டு கட்டி பனிக்கூழை வாரி வாரிச் சாப்பிட்டு உடம்பு ஒண்ணும் ஆகலேன்னு இருப்பாங்களா? அதுக்கு எனக்கு புரியற மாதிரி நியாயம் ஏதாவது சொல்லுங்கம்மா”.

பக்கத்தில் வைத்திருந்த ஓலை விசிறியை வைத்தியன் மேல் தூக்கிப் போட்டாள் சென்னா. ’இன்றைக்கு மீதி பனிக்கூழ் இருந்தால் இந்தப் பயல் போனதும் அதை ஒரு வழி பார்க்க வேண்டியதுதான். இவன் மருந்து கொடுக்கும் போது கொஞ்சம் தாராளமாக இன்னொரு தினத்துக்கு வருவது போல் வாங்கிக் கொள்ளலாம். பட்கல் போறேன், மால்பே போறேன், மங்கலா புரம் போறேன்னு பிரயாணத்துக்கான மருந்துன்னு கேட்டு வாங்கிடணும்’.

”நான் அடுத்த வாரம் மங்களாபுரம் போறதா உத்தேசம்”.

அவள் அடி எடுத்து ஆரம்பிக்க, அந்த அதிபுத்திசாலி வைத்தியர் உடனே வணங்கிச் சொன்னது இது –

”அடுத்த வாரம் முழுக்க வேறே காரியம் ஏதும் இருந்தா அதை மாற்றி வச்சுட்டு நான் முதல் சேவகனாக வந்துடறேன் மகாராணியம்மா. அதை விட வேறென்ன எனக்கு பெரிய வேலை?”

சரியாப் போச்சு. வேலியில் போகிற ஓணானை தானாக மேலே எடுத்து விட்டுக்கிட்ட மாதிரின்னு தமிழ்ப் பிரதேசத்திலே சொல்வாங்களே அந்தக் கதையாப் போச்சே.

புன்சிரிப்போடு சென்னா மருத்துவரை விலக்கினாள்.

“நான் போகிறபோது உன்னைக் கூப்பிடறேன். இப்போ அடுத்து என்ன உனக்கு இங்கே காரியம்?”

”இங்கே இல்லே மகாராணி. அப்பக்கா மகாராணி வரச் சொல்லி இருக்காங்க. அவங்க கட்டளைப்படி உள்ளால் நகரத்துக்கு இப்போ புறப்பட்டால் விடிகாலை போய்ச் சேர்ந்துடலாம். உத்தரவு மகாராணி.”

”அப்பக்காளுக்கு உடம்பு என்ன அவஸ்தையிலே இருக்கு?” சென்னபைரதேவி கேட்டு விட்டு நாக்கைக் கடித்துக் கொண்டாள். என்னதான் அப்பக்கா அவளுடைய உயிர்ச் சிநேகிதி என்றாலும், அந்தரங்கமான தகவலை எதுக்குத் தெரிஞ்சுக்க வேணும்?

அப்படியே வேணுமென்றாலும் அவளிடமே நேரில் கேட்டுத் தெரிந்து கொள்ளலாமே அன்றி வைத்தியரிடம் கேட்பது அநாகரீகம் இல்லையா?

”எதுவோ இருக்கட்டும், சீக்கிரம் குணமாக பகவான் மகாவீரரை பிரார்த்திக்கறேன்”. சென்னா உள்ளே போகத் தயாரானாள்.

ஒரே வயசு, ஒரே மாதிரி பின்னணி. ஒரே மதம், சமணம். பக்கத்து பக்கத்து சிறு நிலப் பரப்புகளை ஆட்சி செய்யும் உரிமை. நல்ல பெயர். இரண்டு பேருக்குமே இதெல்லாம் வாய்த்திருக்கிறது.

சென்னபைரதேவி மிளகு ராணி. அப்பக்காவுக்கு அபய ராணி என்று பெயர். அ-பய-ராணி பயமென்பதையே அறியாதவள். நாடு பிடிக்க வந்த போர்ச்சுகீஸ் ஃபரங்கிகளை ஒன்றல்ல, பத்து முறை தோற்கடித்துத் திரும்பி ஓட வைத்தவள் அப்பக்கா.

சென்னபைரதேவி ஊர் தோறும் சமணத் தீர்த்தங்கரர் கோவில் அமைப்பது என்று செயல்படுகிறவள். கோகர்ணம் மஹாகணபதி பகவான் மேலும் அளவற்ற பிரியம் கொண்டவள் காணாபத்யம் கொண்டாடும் சென்னா.

அப்பக்கா திகம்பர சாமியார்களை அவ்வப்போது தன் அரண்மனைக்கும் தலைநகருக்கும் வரவழைத்து வழிபடுகிறவள்.

சென்னாவுக்கு திகம்பரர்களை ஏனோ பிடிப்பதில்லை. பல வடிவங்களில் இருக்கப்பட்ட அழுக்கு சாமியார்கள் என்று அப்பக்காவிடம் ஒருமுறை சொல்ல இரண்டு சிநேகிதிகளும் ரகசியமான நகைச்சுவையைப் பங்கு போட்டுக் கொண்ட கிராமத் தோழிகள் போல் அடக்கிச் சிரித்தார்கள்.

அப்பக்காவுக்கு பெண் திகம்பரிகளையும் ரொம்பப் பிடிக்கும். துறவு வாழ்க்கையில் தேகத்தில் அடையாக அப்பிய சீலைப் பேனும் பூச்சியும் சாப்பிட உடம்பைத் தியாகம் செய்யும் பிரிவினர் அவர்கள். தலையில் அடர்ந்திருக்கும் கூந்தலை ஒவ்வொரு இழையாகப் பிடித்து இழுத்துப் பிடுங்கி முண்டிதமாக்கிக் கொண்டு துறவறம் புகுகிறவர்கள் அந்தப் பெண் துறவிகள்.

அப்பக்காவின் துணிச்சல் சென்னா அடிக்கடி நினைத்து பிரமித்துப் போவது. தன் கணவன் வீர நரசிம்மன் போர்த்துகீசியர்களுக்கு ஆதரவாக நடக்க வேண்டும் என்று வற்புறுத்தியபோது அவனையே தூக்கி எறிந்து விட்டாள் அப்பக்கா.

கோழிக்கோடு ஆளும் சாமுத்ரி என்ற ஸாமுரின் ஏற்படுத்திய மாப்ளா கடற்படையின் ஒத்துழைப்போடு மால்பேயிலிருந்து புறப்பட்டுப் போய் மங்கலாபுரம் கோட்டையை முற்றுகையிட்டு போர்த்துகீசியரை தோற்கடித்து ஓட ஓட விரட்டிய முதல் பெண் அவள் தான். குஞ்ஞாலி என்று சாமுத்ரியால் பட்டம் நல்கிச் சிறப்பிக்கப்படும் இஸ்லாமிய மரக்காயர் (மரக்கல ஆயர்) கடல்படைத் தலைவர் நல்ல சிநேகிதர் சென்னாவுக்கும் அப்பக்காவுக்கும்.

இந்த சிரிப்பும் கும்மாளமும் ஆன அப்பக்கா இல்லை அந்த ரௌத்ரம் பூண்ட அப்பக்கா.

”போர்த்துகீசியர்கள் திரும்ப வாலாட்டி வரிப்பணம் கேட்க வந்தால் சொல்லு. அந்த இன்னொரு அப்பக்காவை உடனே காட்டி அவன்களை ஒண்ணுமில்லாம ஆக்கிடறேன்”.

அப்பக்கா சென்னாவுக்கு அதிகார ஆதரவு தெரிவிப்பது அவ்வப்போது நடப்பது. சென்னா மேல் அவ்வளவு பிரியம் அவளுக்கு. சென்னாவுக்கும் அப்பக்கா என்றால் உயிர்.

அப்பக்காவிடம் இல்லாத ஒன்று சென்னபைரதேவியிடம் உண்டு. சென்னாவின் ஆட்சிக்கு உட்பட்ட பிரதேசத்தில் தான் உலகத்திலேயே மிகுந்த சுவையும் நறுமணமும் கொண்ட மிளகு விளைகிறது. அதை வாங்க ஐரோப்பா எவ்வளவும் செலவு செய்யும்.

மிளகுக்காக ரோம சாம்ராஜ்யத்தையே தருவதற்குத் தயங்காத பதினேழு நூற்றாண்டு முந்திய ரோமானியச் சக்கரவர்த்திகள் தொடங்கி இந்த வெள்ளைக்கார ஆண்டு வரை நீண்டு செல்லும் மிளகுப் பித்தம் இது.

மிளகில் வெள்ளைக்காரர்கள் என்ன முக்கியமான குணத்தைக் கண்டு பிடித்துப் பாராட்டுகிறார்கள் என்று சென்னாவுக்கு புலப்படவில்லை இதுவரை.

”உலகம் முழுக்க ஆண்மை விருத்திக்கு நீ விளைவித்துத் தரும் மிளகு முக்கியக் காரணமாக இருக்கு. ஒரு வருடம் மிளகுச் சாகுபடியை நிறுத்திப் பாரு. அடுத்த வருஷம் உலகம் முழுக்க குழந்தை பிறப்பு கணிசமாகக் குறைந்திருக்கும்”.

அப்பக்கா ராணி சொல்லிச் சிரித்தாள் சென்னா ராணியிடம்.

”உலகையே எழுப்புகிற புண்ணியவதி ஆச்சேடீ நீ” என்று சென்னாவை இழுத்து அணைத்து சொல்வாள் அவள். எல்லா மிளகுக்கும் கூடுதலாக ஆசை விருத்தி செய்யும் குணம் அந்த அணைப்புக்கு உண்டு.

விலக்கினாலும் மனம் அதில் நீண்டு சஞ்சரித்திருக்க தன்னையறியாமல் அந்தக் கிளர்ச்சியில் லயித்தது பத்து வருடம் முன்பு கூடத்தான்.

சென்னா அந்த நினைவுகளில் வெகுநாள் அமிழ்ந்து திரும்பிக் கொண்டிருந்தாள். இந்த அறுபது வயதில் மனம் எந்த இச்சையையும் விரும்புவதில்லை. தூண்டுவதும் இல்லை.

உறங்கிக் கிடந்து, உசுப்பி விட்டு எழுந்து, உக்கிரமடைந்து, உடம்பையும் மனசையும் முழுக்க ஆக்கிரமித்துக் கொண்டு செலுத்தி, உச்சம் தொட விரட்டி, விரட்டி, மேலே மேலே என்று போக வைத்து, தொட்டதும் சமனப்பட்டு, கொஞ்சம் கொஞ்சமாக இன்றி, உடன் முழுவதும் வடிந்து, பின் ஆழ்ந்த உறக்கம் என்பது வாழ்க்கைத் துணை உள்ளவர்களுக்கு விதிக்கப்பட்டது. உறக்க நிலைதான் மகத்தானதெனத் தோன்ற, எல்லா இச்சையும் சேர்ந்து கானல் நீர் மாயம் காட்டியது நின்று, துயிலில் மனம் லயித்து, இருள் பள்ளத்தாக்கின் கீழே, இன்னும் கீழே காலமும் வெளியும் கடந்து போகும்.

போர்த்துகீசீயர்களும், உலாந்துக்காரர்களும், என்றால் டச்சுக்காரர்களும், அவர்களுக்கு பல நூறு வருஷம் முன்பாக ரோமானியர்களும், கிரேக்க சாம்ராஜ்ய அதிபதிகளும், அவர்களுக்கும் முன்னே எகிப்தும், சுமேரியாவுமாக அடுத்தடுத்து வந்த பெரும் நாகரீகங்களும், மிளகுக்காக எதையும் கொடுக்கத் தயாரானவர்களாக இருந்தது தற்செயலானது இல்லை.

மகாராணி சென்னபைரதேவியின் நினைவுகள் மிளகைச் சுற்றிச் சுழன்றுகொண்டிருந்தன.

அவள் படுக்கை அறை வாசலில் ஏதோ மெல்லிய ஒலி எழுந்ததை கூர்மையாகக் காது கொடுத்துக் கேட்டாள். யாரது?

வாசலுக்கு நடந்துபோய் ஜாக்கிரதையாக அரைத் தாழ்ப்பாள் போட்டுக் கதவைக் கொஞ்சம்போல் திறந்து வைத்துக் கொண்டு யாரது என்றாள்.

யாரும் இல்லை. என்றாலும் முன் மண்டபத்தில் போய் உட்கார்ந்தாள். எலி ஒன்று குறுக்கே ஓடி திரைகளைத் தாண்டி வெளியே சாடியது.

உறக்கம் வராத இரவு அது. விடிகாலையில் படுக்கை அறைக்குப் போய் உறங்க இரண்டு மணி நேரம் முழு ஓய்வு. அவள் வெளியே வந்தபோது முகம் தெளிவாக இருந்தது.

(தொடரும்)

Series Navigation<< மிளகு: அத்தியாயம் ஐந்துமிளகு >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.