மிளகு

(அத்தியாயம் ஒன்று)

1596

மிளகு ராணி விடிய வெகுநேரம் இருக்கும்போதே எழுந்துவிட்டாள்.

மிளகு ராணி. ஒரு தடவை நிலைக் கண்ணாடியில் நோக்கிச் சொல்லிப் பார்த்துக் கொண்டாள் அவள். முகம் பார்க்கும் கண்ணாடி பெல்ஜிய நாட்டில் செய்து அனுப்பியது. அடுத்து இருப்பது இங்கே மலையாள பூமியில் உலோகத்தைப் பளபளப்பாக்கிச் செய்த ஆரன்முளை உலோகக் கண்ணாடி. இரண்டிலும், வயதானாலும் உற்சாகமான ஒரு மூதாட்டி சிரிக்கிறாள். உத்தரகன்னடப் பெருநிலத்தில் ஜெருஸப்பா நகரப் பிரதேசம் ஆளும் சளுவ வம்ச மகாராணி சென்னபைரதேவி. மிளகு ராணி.

சென்னபைரதேவிக்கு தங்களுக்குள் பிரியத்தோடு மிளகு ராணி பட்டம் அளித்து அழகு பார்க்கிறவர்கள் பரங்கியர்கள். இங்கே மிளகும் லவங்கமும் ஏலமும் வாங்க வந்து கொண்டிருக்கும் மேற்குத் திசைப் போர்த்துகீசியர்கள். சென்னா இல்லாமல் அவர்களுடைய மாபெரும் வணிகம் ஒரே நாளில் ஓய்ந்து போய் நின்று விடும்.

மிளகு ராணி. உடம்பில் உயிர் இருக்கும் வரை ஏதோ கௌரவமாகவும், பகடியான பட்டப்பெயராகவும் தரப்பட்டும் அடையாளம் இந்தப் பெயர். மூச்சு நிற்கும்வரை நிலைக்கும். உயிர் விடைபெற்றுப் போனால் உடலின் பெயரும் அது என்று திணை மாறி விடும்.

இதென்ன விடிந்ததுமே வேதாந்த விசாரம். தலை குலுக்கி அந்தச் சிந்தனையை உதிர்த்தாள் சென்னபைரதேவி.

மிர்ஜான் கோட்டையின் கொத்தளங்களில் இருந்து நடுராத்திரிக்கு அப்புறம் பத்து நாழிகை கழிந்தது என்று அறிவிக்கும் முரசு சத்தம் கேட்க ஆரம்பித்திருந்தது. கோல்கொண்டா கோட்டையில் நேரத்தை அறிவிக்க பீரங்கி முழங்குவார்கள். உடைந்து சிதறிப்போன பாரசீக வம்சமான பாமனி சுல்தான்களின் பழக்கம் அது. பீரங்கியோ, முரசோ, இந்த பஞ்ச பஞ்ச உஷத் காலமான காலை நான்கு மணிக்கு மிர்ஜான் நகரில் யாரும் அதை லட்சியம் செய்யப் போவதில்லை. அவரவர்கள் வீட்டில் துணையை அணைத்தபடி, அருமைக் குழந்தைகளை ஆரத் தழுவி துயில் கொண்டிருப்பார்கள். குறைந்த பட்சம் தலையணையாவது அருகே இருக்கும். இந்தப் பொழுதில் உறக்கமும், மிச்சம் இணை விழைதலும், பாசமும் ஓங்கியாடும் மனங்கள் எத்தனை. உறக்கம் பிடிக்காத உடல்கள் எத்தனை. சென்னாவுக்குத் தெரியும். சாதாரண மனுஷியாக அவள் நிறைய ஏங்கியிருக்கிறாள். அனுபவிக்கக் காத்திருந்திருக்கிறாள். விழைந்தது கிடைக்கப் பெற்றிருக்கிறாள். அந்த இன்பத்தைத் துறந்து தொடர்ந்து பயணப்பட்டிருக்கிறாள்.

சென்னபைரதேவி நாற்பத்து நான்கு வருஷங்களாக அரசாங்கம் நடத்தி வந்தாலும், ஆட்சியிலும் வாழ்க்கையிலும் சகல வெற்றியும் பெற்ற ஒரு அரசியாக இருந்தாலும், ஒரு கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்று விருப்பம் ஏனோ தோன்றியதில்லை. பெண்ணாகப் பிறந்தவள் பதினாறு வயதில் மண மண்டபத்தில் அக்னி வளர்த்துக் கைப்பிடிக்கக் காத்திருப்பவனோடு புது வாழ்க்கை தொடங்குவது எங்கும் வழக்கமாக இருக்க, சென்னா பதினாறு வயதில் அரசாள ஆரம்பித்து விட்டாள்.

அரசாளுதல் என்றால் பெரிய சாம்ராஜ்யத்தை நிர்வகிப்பது இல்லை. சிறு சிறு பிரதேசங்களாக தனித்தனி நாடுகள். ஒவ்வொன்றுக்கும் பரம்பரை பரம்பரையாக ஒரு நிர்வாகக் குடும்பம். அத்தனை குறுநில நாடுகளும் விஜயநகர சாம்ராஜ்யத்துக்குக் கீழ்ப்பட்டிருந்து கப்பம் கட்டிப் பேரரசு அளிக்கும் பாதுகாப்பைப் பெற்று அரசாள்கின்றன. விஜயநகரம் தென்னிந்தியாவில் சக்தி வாய்ந்த பேரரசாக இருந்து சீரும் சிறப்புமெல்லாம் இழந்து பெயருக்குப் பேரரசாக இருக்கும் நாட்கள் இவை. விஜயநகரத்துக்குக் கீழ்ப்படிதலுள்ள சென்னபைரதேவி தேவி ஜெரஸோப்பா அரசி. அரசன் இல்லாத நாடு அது.

கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்று ஏனோ தோன்றியதில்லையா?

பெல்ஜியம் கண்ணாடிக்குள் இருந்து பதினெட்டு வயசு சென்னா ஆரன்முளை உலோகக் கண்ணாடிக்குள் இருபத்தெட்டு வயசு சென்னாவை நோக்க, இரண்டு பேரும் கள்ளத்தனமாகச் சிரிக்கிறார்கள்.

சிரிக்காதேடி.

அறுபதை எட்டிய சென்னா ஆடிகளைப் பார்ப்பதைத் தவிர்த்து முகத்தைச் சுவரை நோக்கித் திருப்பிக் கொள்கிறாள்.

அவள் சீராக நடக்கும் இந்த நீண்ட வாழ்க்கையில் காமம் கொண்டாடுவதைத் தவிர்க்கவில்லை. வைராக்கியத்தோடு பின்னர் அதுவும் கடந்து வந்தாள் அவள். ஆயிற்று, அறுபது வயது எட்டிப் பார்க்கிறது. மனதில் நினைவுகளின் சிதறலாக ஒட்டிக் கொண்டிருந்த இச்சை எல்லாம் பொடிப்பொடியாக உதிர்ந்து மனம் நிர்மலமாகிக் கொண்டிருக்கிறது. கசடு ஏதும் இனிப் புக வாய்ப்பு குறைவு. புகுந்தாலும் ஒட்டாது. உதிர்ந்து விடும்.

எடி, அது போகுது இப்போ வேணாம். நாம் இன்னிக்கு பூரா பழைய நினைவு எதையும் அதிலே இத்தணூண்டு சோகம் இருந்தாலும் மனதிலே கொண்டுவரப் போறதில்லே. சரிதானே.

இரண்டு கண்ணாடி சென்னாவும் கட்டிலில் அமர்ந்திருந்த அறுபது வயதுக்காரி சென்னாவின் உற்ற தோழிகள். அவர்கள் சொன்னால் அவள் கேட்பாள். அவள் சொன்னால் அவர்கள் கேட்பதும் எப்போதாவது உண்டுதான், இன்னொன்று, அவர்கள் பதினெட்டிலும் இருபத்தெட்டிலும் எப்போதும் இருப்பார்கள். வயது அதிகரிக்காது அதற்கு ஒரு நாளும் கூடுதலாக.

அறுபதாம் வயதின் உடல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளாக தலை சுற்றலும், நாவில் கசப்புப் படுதலும், சதா தொல்லை கொடுக்கும் மலச்சிக்கலும் அதன் காரணமாக வயிற்றில் வாயு பூரித்து வீர்த்திருப்பதும் மகாராணி என்று பார்த்து அனுமதி வாங்கி நுழையாமல் சென்னாவைத் துன்பப்படுத்த அந்த மெல்லிய தேகத்தில் ரகசியமாக நுழைந்திருக்கின்றன. சென்னாவுக்கு அவற்றைப் பற்றித் தெரியாவிட்டாலும் பொறுத்துக் கொண்டு வாழப் பழகிக் கொண்டிருக்கிறாள். மாதவிலக்கு ஒரு இருபது வருடத்துக்கு முன்பு வரை மனமும் உடம்பும் சார்ந்த கடுமையாக பிரச்சனையாகத் துன்பம், பெருந்துன்பம் கொடுத்ததை விடவா இந்த உடல் உபாதைகள் தேகத்தை ஓய்த்துப் போடும்? போகிற இடத்தில் எல்லாம் இடுப்பில் சிவப்புத் துணியை சேலைக்கு உள்ளே கட்டிக்கொண்டு போய் ஒரு நாளைக்கு எத்தனை தடவை மாற்ற வேண்டி இருக்கும் அப்போதெலாம். பெள்ளி என்ற உயிர்த்தோழி போன்ற அந்தரங்கமான தாதி மட்டும் இல்லாமல் இருந்தால் சென்னா மீண்டு வந்திருக்காத பெருந்துன்பமாக தேகம் கொண்ட சிரமம் வடிவெடுத்திருக்கக் கூடும். வீட்டில் தமிழ் பேசும் அந்த மாண்டியா பெண்ணின் சரியான தமிழ்ப் பெயர் பெள்ளி இல்லையாம். வள்ளியாம். சாட்சாத் ஸ்ரீகார்த்திகேயரின் தேவியார் பெயர். என்ன ஆனாள் வள்ளி? சீரங்கத்துக்கு அவள் கணவன் ராம அரையனோடு போனது பழைய நினைவு. அங்கே காலமானாள் என்று செய்தி.

இன்னும் எத்தனை காலம் இந்தத் துன்பத்தோடு அலைந்து திரிய வேண்டும்? மனதில் வணங்கிக் கேட்டாள் சென்னா. ஆதிநாதரில் தொடங்கி, மஹாவீரர் வரையான இருபத்து நான்கு சமணத் தீர்த்தங்கரர்கள் வரிசையை மனதில் உருப்போடத் தொடங்கினாள் கட்டிலின் ஓரத்தில் கண்மூடி அமர்ந்தபடி. ஒவ்வொரு தீர்த்தங்கராக மனதில் அழைத்து அவர்களின் திவ்ய ரூபத்தை அகக்கண் குளிரப் பார்த்து மனதால் வணங்கி இருக்க, எண்ணத்திலும் நினைவிலும் ஒரு தெளிவும் உற்சாகமும் மேலெழுந்தது.

ஓம் நமோ அரிஹண்டானம்
ஓம் நமோ சித்தானம்
ஓம் நமோ யரியானம்
ஓம் நமோ உவாஜ்ஜயானம்

பரபரவென்று சமண மத வழிபாட்டு வாசகங்களில் தலையான நவ்கார் மஹாமந்திரத்தை வாய்விட்டுச் சொல்லி கோட்டையின் வெளிச் சுவருக்குச் செல்லும் குறுகிய பாதையில் நடக்கத் தொடங்கினாள்.

மற்ற கோட்டைகளுக்கு எல்லாம் இல்லாத வடிவ நேர்த்தியும், ஆழமான வட்ட வடிவ அகழியும், மழைகாலத்தில் பச்சைப் பாசிப் போர்வை போர்த்திக் கிண்ணென்று புடைத்து எழுந்து நிற்கும் கொத்தளங்களும், கண்காணிப்புக் கோபுரங்களும், நான்கு திசையிலும் அமைந்த வாசல்களும், பிரம்மாண்டமான புல்வெளியில் இருந்து சடசடவென்று கீழே இறங்கி கோட்டையைச் சுற்றி நிலத்துக்கு அடியில் நெளியும் சுரங்கப் பாதையும், சீராக இடப்பட்ட குறும்பாதைகளும், கோட்டை அங்காடியும், தியான மண்டபங்களும், அழகான தோட்டமும், நீரூற்றுகளும் மிர்ஜான் கோட்டையை வேறுபடுத்திக் காட்டுவதை சென்னா மனமெல்லாம் பெருமையோடு சுவரை அணி செய்த நீண்ட தீவட்டி வரிசையை நோக்கியபடி நினைத்தாள். அவளுடைய நுணுக்கமான திட்டப்படி தான் கோட்டை எழுந்து வந்தது. ஒவ்வொரு மலைக் கல்லாக, மரத் துண்டாக அந்தப் பெரிய கல் கட்டிடம் வெற்று வெளியில் இருப்பு உரைத்து ஓங்கி உயர்ந்து எழுந்தபோது முதலில் ஏற்பட்ட பெருமை அது. இப்போதெல்லாம் அடிக்கடி சென்னாவின் மனம் உற்சாகம் கொள்ளும்போது மிர்ஜான் மிர்ஜான் என்று அது திரும்பத் திரும்பக் குரல் தருகிறது.

என்றாலும் மிர்ஜான் கோட்டையை உள்ளே வந்து பார்த்து ஆச்சரியப்பட்டு அவளுக்கு வாழ்த்து சொல்ல மிக மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே விருந்தாளிகளை அனுமதிக்கிறாள் அவள். பாதுகாப்பு நிறைந்த இடம். பாதுகாப்பை (ரகசிய வழி, கதவுகள் திறக்க மூட சிக்கலாக இயங்கும் தமிழ்ப் பிரதேசத்து பூட்டுகள் என்று) பல வகையாகவும் வடிவமைத்து விரிவாகக் கடைப்பிடிப்பதைத் தேவையில்லாதபடி சம்பந்தமில்லாதவர்கள் யாராவது கண்டு கொண்டு போய் வெளியே தகவல் கசிய வைத்தால் இவ்வளவு முயற்சி எடுத்துக் கட்டியதெல்லாம் ஊரறிந்த ரகசியமாகி விடும். வேறு ஒன்றும் வேண்டாம், கோட்டையைச் சுற்றி ஒன்றல்ல, இரண்டு சுவர்கள் வேறு எங்கும் இல்லாத அதிசயமென்று நோக்கிப் போகிறவர்கள் சொல்லப்படத் தேவையில்லாதவர்களுக்குத் தகவல் தந்து மிர்ஜான் கோட்டையின் முதல் நிலைப் பாதுகாப்பைக் காற்றில் பறக்க விடக்கூடும்.

அவர்கள் தொலைதூரத்தில், வேறு பிரதேசத்திலிருந்துதான் வந்தவர்களாக இருக்க வேண்டும் என்றில்லை. சென்னாவின் ராஜாங்கத் தலைநகரமான ஜெருஸோப்பாவில் இருந்து வந்தவர்களாகக்கூட இருக்கலாம். யாருக்கு எது எதற்காகத் தேவைப் படுகிறதோ அது அளிக்கப்படலாம் என்று முடிவெடுத்தால், அதில் ஒரு பகுதியை அவர்களுக்குச் சொன்னால் போதும் என்பதே சென்னாவின் கொள்கை. கோட்டையும் கொத்தளமும் அகழியும் வந்து பார்த்து ஓரமாக மூத்திரம் பெய்து அப்பமோ அதிரசமோ உண்டு புகையிலை அதக்கித் துப்பி சரம் சரமாகத் தகவல் அவலை மென்று போவதற்கான சமாசாரங்கள் இல்லை. அவற்றின் முக்கியத்துவம் சென்னாவுக்குத் தெரியும். நிரந்தரப் பகைவர்களான, கூடவே நிரந்தர நண்பர்களான போர்த்துகீசியர்களுக்குப் புலப்படும். அவர்களுக்கு மட்டுமில்லை, சென்னாவின் சாளுவக் குறுநில அரசு ஜெருஸோப்பா, அவள் அன்புத் தோழி அப்பக்கா சௌதாவின் துளுவச் சிறுகுடி அரசாளும் உள்ளால் இப்படி சின்னஞ்சிறு நாடுகளுக்குப் பாதுகாப்பு வளையம் அமைத்துத் தந்திருக்கும் விஜயநகர சாம்ராஜ்யமும் பிரமிக்கும் பாதுகாப்பு இது. விஜயநகர சாம்ராஜ்யம் சிதறுண்டு போன இந்தக் காலத்திலும் அந்த அமைப்பை நிலைகொள்ளச் செய்ய விஜயநகர அரசருக்கு பாதுகாப்பு வரியாகத் திறை செலுத்துவதை சென்னாவோ அப்பக்காவோ நிறுத்தவில்லை.

நுணுக்கமாக அலசி ஆராய்ந்தபின் கடல் கடந்து இத்தனை தூரம் மிளகு வாங்கவும், அசந்தால் தொடையில் கயிறு திரித்து நாடு பிடிக்கவும் வந்து போக அசாத்திய சாமர்த்தியம் போர்த்துகீசியர்களுக்கு உண்டு. பகைவனின் திறமையையும் போற்றுவாள் சென்னா. சென்னா போர்த்துகீஸ் மகாராணியாக இருந்து, போர்த்துகீஸ் அரசப் பிரதிநிதி இமானுவெல் பெத்ரோ சாளுவ வம்சத்தில் பிறந்தவராக இருந்தாலும் கூட அவரைக் கொண்டாடி இருப்பாள் கவுன் அணிந்த போர்த்துகீஸ் சென்னா.

கவுன் அணிந்த தன் உடம்பைக் கற்பனை செய்ய முடியவில்லை அவளால். அதுவும் அறுபது வயதில். உடம்பு வழங்கினால் அறுபதிலும் கல்யாணம் கூடச் செய்து கொள்ளலாம். சென்னாவுக்கு மணாளனாக யார் வருவார்கள்? தன்னை அறியாமல் பலமாகச் சிரித்து உடனே நிறுத்திக் கொண்டாள். அறுபது வயதில் வேறென்ன வருமோ, நினைப்பு அடிக்கடி சிதறிப் போகிறது. தறிகெட்டோடும் நினைவுகளை இழுத்துப் பிடித்து நிறுத்த நிறைய மெனக்கெட வேண்டியுள்ளது.

இந்தத் திருப்பத்தில் இரண்டு பிரம்மாண்டமான வெளிச்சுவர்களும் ஒன்றை ஒன்று பிரியாமல் வளைந்து திரும்பி நீண்டு போக பளிங்கு போன்ற தண்ணீர் நிரம்பிய தடாகம் நடுவே அழகு மிகுந்து தென்படும். தினம் தண்ணீரை வடித்து விட்டு அகநாசினி நதியின் நீரை நிரப்ப ஒரு பத்து பேராவது குழுவாகப் பணி செய்து கொண்டிருக்கிறார்கள். இந்தத் தண்ணீர் எப்போதும் பூவும் வெட்டிவேரும் மணக்க, இனித்திருக்க, நாவல் மரத்தின் உலர்ந்த கிளைகள் அங்கங்கே நீரில் ஊறிக் கிடக்கின்றன. ஏலக்காய்ப் பொடி கூட கலந்து நல்ல வாடை இன்னும் அதிகமாக அடிக்கச் செய்ய சென்னா தயார்தான். ஆனால் கோவில் தீர்த்தம் போல் சாமி வாசனை வந்தால் தடாகத்தில் யாரும் இறங்க மாட்டார்கள். கன்னத்தில் படபடவென்று பக்தியோடு கரத்தால் போட்டுக்கொண்டு விலகி ஓடி விடுவார்கள்.

வெய்யிலோ மழையோ மிர்ஜான் கோட்டைக்குள் தான் சென்னா எப்போதும் இருக்கிறாள். வயதாக வயதாக, மிர்ஜான் கோட்டையை விட்டு எங்கே வெளியே போனாலும், ராத்தூங்க வீடு திரும்ப வேண்டும் என்று பசுவைப் பிரிந்த கன்று போல் மனம் பதைபதைக்க ஆரம்பித்து விடுகிறது.

சென்னாவுக்குப் பாதுகாப்பு தீர்த்தங்கரர்கள் ஆசிர்வதித்த மிர்ஜான் கோட்டைதான். இன்னும் எத்தனை நாள், வருடம் சுவாசித்து நடமாட வேண்டும் என்று விதித்திருந்தாலும், அத்தனையும் இந்த இடத்தை விட்டு வேறெங்கும் இல்லை. இல்லாமல் போன பின்னும் அவள் இங்கே தான் சுற்றிச் சுற்றி வரப் போகிறாள்.

போவதைப் பற்றி இப்போது என்ன என்று கையசைத்து இல்லாத எதையோ விலக்க, சென்னாவின் பாதத்தில் , யாரோ கரம் வைத்து வணங்கியதாக அந்த அரையிருட்டில் தெரிந்தது. எழுந்திரு, யார் அது? எழுந்திரு.

அவள் பதட்டமும் பரபரப்புமாக எழுப்பி நிறுத்தியவள் ரஞ்சனாதேவிதான். வளர்ப்பு மகன் நேமிநாதனுடைய மனைவி. அழகான, கருக்கடையான பதினெட்டு வயதுப் பெண் அவள்.

ரஞ்சனாவின் தலைமுடி அந்த அதிகாலை நேரத்தில் சகல வாசனாதிரவியங்களும் மணக்க இதமான ஈரம் நனைத்திருந்தது. தெற்கு கன்னட பூமிப் பெண்களுக்கே உரிய நீண்ட கூந்தலும் அழகான பல்வரிசையும் மெல்லப் பரவும் அதிகாலை வெளிச்சத்தில் புலப்பட்டன.

“ஜன்ம நட்சத்திர வாழ்த்துகள் அம்மா. இன்னும் நூறு வருடம் இன்று போல் இனி என்றும் இருந்து எங்களுக்கு வழிகாட்டி, தலைமை வகித்து வாருங்கள் அம்மா.”

ஓ இன்றைக்கு அறுபது வயது வந்து சேர்வதைப் பற்றி எல்லோரும் அறிவார்கள் என்பதை எப்படி மறந்து போனேன் என்று சென்னா ஒரு வினாடி ஆச்சரியப்பட்டாள். சமாளித்துக் கொண்டு ரஞ்சனாவை இதமாக அணைத்தபடி அவள் தலையில் முத்தமிட்டாள் தாயன்போடு.

”பிறந்த நாள் வாழ்த்துகளை ஏற்றுக் கொள்கிறேன்.” என்றாள் குறும்புச் சிரிப்போடு.

“உங்களுக்கு அறுபது வயதிலும் சிரிக்கும்போது கன்னத்தில் குழி விழுவது அத்தனை அழகு” என்று உற்சாகமாக சென்னாவின் கன்னத்தைத் தட்டி, மகாராணியைத் தொட்டு உரிமை கொண்டாடும் தன் அறியாமைக்காக வெட்கப்பட்டு ரஞ்சனா மன்னிக்க வேணும் என்று பதட்டத்தோடு சொல்லி மீண்டும் ஒருமுறை காலில் விழ முனைந்தாள்.

புத்தி பேதலித்ததா என்ன ரஞ்சனா? ஏற்கனவே அதிகாலைக்கு முன்னால் எழுந்து கோட்டை வாவியில் குளிர்ந்து நிற்கும் நீராடி கோகர்ணம் போய் மஹாபலேஷ்வர் கோவிலில் தொழுது வந்திருக்கிறாய். இது போதாமல் இந்தக் கிழவி முன்னால் எத்தனை தடவை விழுந்து எழ உத்தேசம்? சென்னா கேட்டபடி நடந்தாள்.

மகாராணி, நீங்கள் எப்போதும் இருபது வயதில் தான் நிற்கிறீர்கள். நாங்கள் தான் வயதாகி வயதாகி ஓரமாக ஒதுங்கி நின்று மூச்சு வாங்குவோம்

ரஞ்சனா சொல்லியபடி இருகை குவித்து நிற்க, சென்னா அவளை எல்லா நலமும் பெற்றுச் சிறக்க வாழ்த்தும் ஆசியும் அருளினாள். மகளோ, மகனோ, இந்த ஆண்டு உனக்கு நல்லபடி குழந்தை பிறந்து வம்சம் வளர்க்கவும் ஆசிகள். சென்னா கனிவாகச் சொன்னாள். கண்ணில் கண்ணீர் எட்டிப் பார்க்க ரஞ்சனா வணங்கி விடைபெற்று நடந்தாள்.

பிறந்த நாளுக்காக அதுவும் அறுபதாம் பிறந்த நாளுக்காக பிரதானிகளும் ரஞ்சனாவின் கணவன் நேமிநாதனும் நிகழ்ச்சிகள் அமைத்திருப்பார்கள். மாட்டார்கள். இது அறுபதாவது வருடம் தொடக்கம் தானே. அறுபது முடியும் போதல்லவா பெரிய கொண்டாட்டங்கள் இருக்கும்? சென்னாவின் மனம் நினைத்துப் பார்த்துக் கொண்டிருந்தபோதே துந்துபி முழக்கம் போல் கோட்டைச் சுவர் கண்காணிப்புக் கோபுரங்களில் வீரர்கள் முரசும் கொம்பு வாத்தியங்களும் முழங்கி மெல்ல உற்சாகத்தோடு அசைந்து ஆட, சுவரை ஒட்டி வானம் பார்த்து வளத்து திரும்பியிருந்த நீளமான இரும்பு பீரங்கிகள் வலது வசத்திலும் இடது பக்கத்திலும் தொடர்ந்து பெரும் சத்தத்தோடு முழங்கின. வெடி மருந்து வாடை பச்சைத் தாவரங்களின் வாசனையோடு சேர்ந்து காற்றில் எழுந்தது.

கர்கலாவில் சென்னா வம்சத்தினர் நிர்மாணித்த மிகப் பெரிய நான்கு வாசல் பிரார்த்தனை மண்டபத்துக்கு போக வேண்டும் என்று மனதில் திரும்ப வந்தது. கர்கலா தொலைவில் இருப்பதால் இப்போதைக்கு பத்து கல் தூரத்தில் கோகர்ணம் மகாபலேஷ்வரரின் பெரிய கோவிலுக்காவது போய்த் தரிசித்து வர வேண்டும். ரஞ்சனா போய் வந்திருக்கிறாள் சென்னா சார்பில். சென்னா தினசரி போகலாம் தான். போக முடியாமல் ஏதேதோ பரங்கிகளோடு சந்திப்பு, விற்பனை உரிமை தருவது பற்றி விவாதம், போர்த்துகீசியர்கள் நாடு பிடிக்க வந்ததற்காக அலட்டிக் கொள்ளாமல் அவர்களையும் சாதுரியத்தால் வென்று சின்னதாக இருந்தாலும் தன் அரச பூமியை வேறு யாரும் கைப்பற்றாமல் ஜாக்கிரதையாக இருத்தல், நண்பர்களோடு கண்டிப்பும் அல்லாதவர்களோடு அன்பு பூசிய கண்டிப்பும் என்று சில சமயம் ராஜதந்திரத்தைப் பிரயோகிக்க அவசியமான கணங்களில் மூழ்குதல் என்று நேரம் போக கோவில் நாளைக்குப் போகணும் பட்டியலில் ஒரு மாதமாகச் சேர்ந்து விட்டது. இன்றைக்கு அப்படி இல்லை.

சீக்கிரம் வா என்று கோவில் மணிகள் சென்னாவிடம் சொல்லத் தொடங்கின.

(தொடரும்)

ஒலி வடிவில் கேட்க / To Listen to the novel in Audio form:

Series Navigationமிளகு – அத்தியாயம் இரண்டு (1596) >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.