மிளகு

அத்தியாயம் ஏழு

1999   அம்பலப்புழை

திலீப்  ராவ்ஜி தன் காலை நடைப் பயிற்சியிலிருந்து திரும்பி வந்தபோது வீட்டு முகப்பில் போட்டிருந்த தோட்டத்தில் ஒரு பசுமாடு மேய்ந்து கொண்டிருப்பதைப் பார்த்தார். 

தோட்டத்தை கிட்டத்தட்ட தின்று தீர்த்திருந்தது அந்த மாடு. பசு மட்டுமில்லை. கூடவே ஒரு கிழட்டுக் காளையும் மேய்ந்து கொண்டிருந்தது. மாஞ்செடி பதியம் போட்டது, மூலிகை வளர்த்த புதர்வெளிகள், மல்லிகைக் கொடி என்று எல்லாவற்றையும் இந்தக் கால்நடைகள் வேட்டையாடிக் கொண்டிருந்தன.

சாப்பிட்டு முடித்து, இரண்டு மாடுகளும் வயிற்றுப் பசி தீர்ந்து, உடல் பசி முன் எழ, திலீப் ராவ்ஜியின் தோட்டத்தில் மன்மதக் கேளிக்கை நடத்த முற்பட்டன.

 வாக்கிங்க் ஸ்டிக்கை ஆயுதம் போல் சுழற்றிக்கொண்டு  வீட்டுக் காம்பவுண்டுக்குள் வேகமாக நுழைந்தார் திலீப் ராவ்ஜி. உள்ளே, அவர் மனைவி அகல்யாம்மா, கொம்பு முளைத்த காதலர்களுக்கு முன், பக்தியும் மரியாதையுமாக நின்று கொண்டிருந்ததைக் கண்டார். பெரியவர்களின் காலில் விழுந்து, ஆசிர்வாதம் பெறும் கணத்துக்காக அவள் காத்துக் கொண்டிருப்பதாக திலீப் ராவ்ஜிக்குப் பட்டது. 

“அகிலா, உனக்கென்ன ப்ராந்தா? அது ரெண்டும் வேறே லோகத்துலே சஞ்சரிச்சுண்டிருக்கு. நீ என்னடான்னா பயபக்தியா கை கூப்பிண்டு முன்னாலே நிக்கறே. முட்டிடுத்துன்னா?”

“அது ஏன் முட்டும்?”

”நீ சுகப்படறபோது அது வந்து உன்னைப் பார்த்தா சும்மா இருப்பியா?” 

ராவ்ஜி உதட்டைக் கடித்துக் கொண்டு விஷமமாகச் சிரித்தார். அகிலா பாய்ந்து வந்து அவர் கையிலிருந்த வாக்கிங் ஸ்டிக்கைப் பிடுங்கி அவர் முதுகில் ஒரு போடு போட்டாள்.

”கிழவரே, உமக்கு வெக்கம் மானம் எதுவும் கிடையாது. அறுபத்தைஞ்சு வயசிலே சிருங்காரம் கேட்கறது. வேறே யாரையும் சேர்த்துண்டு, என்னை விட்டுடுங்கோ”

 ”விட்டுடுங்கோன்னு சொல்லிட்டு வீட்டுக்குள்ளே போறியே? யாரை விட, யாரைப் பிடிக்க?”

ராவ்ஜி இன்று முழுக்க விளையாட்டுப் பிள்ளையாகத் தன்னை உணர்ந்து உற்சாகம் கொப்பளிக்க நின்றார்.

“இருங்கோ, ஒரு தீபாராதனை செஞ்சுடறேன் ரெண்டுக்கும். நம்மாத்துக்கு வந்த தேவதையும், தேவ புருஷனும், இந்த ரெண்டு தேவ ஜன்மங்கள்”.

”நிஜமாகவே நீ ஸ்க்ரூ கழண்டு போயிட்டே போ. ரிடையர் ஆனதும் பென்ஷன் மட்டும் வரலே. கெக்கெபிக்கெ நம்பிக்கை எல்லாம் வந்து சேர்ந்தாச்சு”.

 காளை, சரிதான் போடா என்று அமர்க்களமாக ராவ்ஜியைப் பார்த்தபடி நடந்து போக, பசு பின்னாலேயே மீதிச் செடிகொடிகளை மேய்ந்தபடி நடந்தது.

“வாக்கிங் போயிட்டு வரேன்னு போனது ஆறு மணிக்கு. திரும்ப வந்திருக்கறது வெய்யில் உரைக்கற எட்டு மணிக்கு. ராவ்ஜி, நீர் வாக்கிங் போனீரா, வடசேரிக்காவிலே தொடுப்பு எவளையாவது பார்க்கப் போனீரா?” 

அகல்யா சிரிப்பை ஜாக்கிரதையாக மறைத்து அவரை முறைத்தாலும் அப்படியே இருக்க முடியவில்லை.

“ஒருநாள் இல்லேன்னா ஒருநாள் பாரும். நான் உம்ம பின்னாலேயே வந்து கையும் களவுமா உம்மைப் பிடிக்கத்தான் போறேன். அப்புறம் கற்பூரம், தட்டுலே ஏத்த மாட்டேன். இழுத்து வச்சு அறுத்து ஏத்தி வச்சுடுவேனாக்கும்”.

அகல்யா சொல்லி முடிக்கும்முன் நெருங்கி வந்த திலீப் ராவ்ஜியைச் சேர்த்து அணைத்துக் கொண்டாள். 

“அகில், இந்த வயசுலே நான் நிஜமாவே கட்டில் போட்டு சர்க்கஸ் பண்ண முடியும்னு நினைக்கறியா? ஏதோ காலம்பற மலச்சிக்கல் இல்லாமல் கலகலன்னு வெளிக்குப் போனா சுபதினம், மதியச் சாப்பாட்டுக்கு பசி எடுத்தா நல்ல நாள், ஜலதோஷம் பிடிக்கலேன்னா அதிர்ஷ்ட தினம் அப்படி தள்ளிண்டிருக்கேன். சுகம் கொண்டாடறது எல்லாம்  சும்மா பேச மட்டும் தான். அத்ரயே உள்ளு”. 

“நீரா, நான் தூங்கினதுக்கு அப்புறம் பக்கத்துலே படுத்து இந்த வயசிலும் சேட்டை பண்றது வேறே யாரும் இல்லையே. துள்ளிக் குதிக்கற யுவன் நீர். எங்கே, பிடியும் பார்க்கலாம்”

அகல்யா வீட்டுக்குள் பூஞ்சிட்டாக ஓடினாள். திலீப் ராவ்ஜி அவள் பின்னால் ஓடிக் கதவில் மோதிக்கொண்டு ஸ்தம்பித்து நின்றார்.

கதவு பூட்டியிருந்தது.  

திலீப் ராவ்ஜியின் கண்கள் நனைந்தன. அகல்யா அங்கே இல்லை. பசுவும் இல்லை. காளையும் இல்லை. தனி வீடும் இல்லை. இரண்டு படுக்கை அறை, சமையல்கட்டு, முன்னறை என்று அடுக்குமாடிக் குடியிருப்பு வீடு. பூட்டிய கதவு நிஜம். அகல்யா பெயரில் வாங்கிய இந்தக் குடியிருப்பு நிஜம். அவள் மட்டும் நிஜமில்லை.

உடற்பயிற்சியாக நடந்து வந்த களைப்பும் படபடப்பும் சற்றே தீர, மூச்சு வாங்கியபடி நின்றார் திலீப் ராவ்ஜி.  

 அகல்யா ரத்தப் புற்றுநோய் கண்டு, திரும்பி வராமல் போய்ச் சேர்ந்து இன்றைய திதியோடு ஐந்து வருடமாகி விட்டது. என்றாலும் மனமும் உடலும் அதை ஏற்றுக்கொள்ள மறுக்கின்றன. வலிய வந்து மேலே ஏறிப் படர்ந்து நினைவை ஆட்கொண்ட தனிமை உள்மனதுக்குள் புகுந்து நிதர்சனமானதாக உறைய இன்னும் நாள் செல்லலாம்.   

எல்லா எதிர்பார்ப்புகளோடும் அகல்யாவின் அணைப்பில் பத்திரமாகச் சுருண்டு கிடப்பதாக பழைய நினைவும் கனவு மேலெழுந்த பகுதி பிரக்ஞை நிலையும்  விளையாட்டுக் காட்டுகின்ற நேரங்கள் வந்து கொண்டேயிருக்கின்றன.

திலீப் திலீப் ஐயரானது, அடுத்து திலீப் ராவ்ஜி ஆனது. மலையாள பூமியில் வர்த்தகம் விருத்தியாக்கி பெரிய ஹோட்டலின் பகுதி உரிமையாளராக ஆன இந்த இருபது வருடங்களின் மத்தியில் தான். 

கொச்சு தெரிசா, இங்கிலாந்தில் மேற்கு யார்க்‌ஷையர் பகுதி சிறு நகரம் கால்டர்டேலில் வைத்திருந்த மீன் பஜ்ஜி – வறுவல் கடையான Fish and Chips வியாபாரத்தை விற்று விட்டு, அம்பலப்புழையில் தன் கொள்ளுத் தாத்தாவுக்குத்   தந்தையான ஜான் கிட்டாவய்யர் பெயரில் சைவ உணவகம் ஆயிரத்துத் தொளாயிரத்து அறுபதுகளில் தொடங்கியதிலிருந்து அவளுக்கு ஏறுமுகம்தான்.

 ஜான் கிட்டாவய்யர் உணவகத்தை தன் நிர்வாகத்தால் வெற்றியடைய வைத்து, தெரிசாவால் லாபத்தில் பங்கு அளிக்கப்பட்ட திலீப்பும், மத்திய சர்க்கார் உத்தியோகத்தில் சம்பாதித்து மிச்சப்படுத்தி அவர் மனைவி அகல்யாவும்,   தெரிசா ஹோட்டலில் பங்குதாரர்களாகச் சேர்ந்தது எண்பதுகளில்.  

பகுதி உரிமையாளர் பட்டம் வெகுஜன வழக்கில் விரைவில் உரிமையாளர் ஆனது.

கொஞ்ச நாள் அவரை திலீபன் பரமேஸ்வர ஐயர் என்று அழைத்தார்கள். இத்தனை நீளமான பெயர் எதற்கு என்று நடுவில் சுருக்கி திலீப் பி ஐயர் என்று அழைத்துப் பார்த்தார்கள். அது ஏனோ ஒட்டவில்லை. பெயரில் பீ எதுக்கு?

ஓட்டல் முதலாளிகள் அதுவும் பெரும் தோதில் சைவ உணவகம் நடத்துகிற வெற்றி பெற்ற ஹோட்டல்காரர்கள் எல்லாரும் உடுப்பி பின்னணியிலிருந்து வரும் ராவ்ஜிக்கள் என்று எல்லோருக்கும் தெரியும். 

உடுப்பியிலிருந்து வராவிட்டால் என்ன, ஹோட்டல் நடத்துகிறார் இல்லையா, திலீபையும் ராவ்ஜி ஆக்கி விட்டார்கள் நண்பர்களும் விரோதிகளும். 

விரோதிகள் என்றால், தொழில் முறையில் ஆரோக்கியமான போட்டியில் ஈடுபடுகிறவர்கள்; நேரில் தனிமனுஷராகப் பழக பிரியமும் நேசமும் உள்ளவர்கள்; இப்படி எல்லோரையும் தட்டுப்பட வைத்தது திலீப் ராவ்ஜிக்கு பகவான் கொடுத்த கொடை. அவரும் எல்லோருக்கும் அன்பான நண்பர்தான்.

அவர்களோடு வாணிபம் பேசுவார். தொழில் அபிவிருத்தி பற்றிப் பேசுவார். ஹோட்டல் தொழிலில் ஈடுபடுகிறவர்கள் சந்திக்கும் பொதுவான பிரச்சனைகளையும் தரவேண்டிய தீர்வுகளையும் பற்றிப் பேசுவார். 

ராவ்ஜியாகப் பேசுவது எளிதாக இருக்கிறது அதற்கெல்லாம். திலீப்  ஐயர் மும்பை ஷவர ப்ளேட் கம்பெனி ஆபீசில் டைப்பிஸ்ட் பெயர் போல ஒலிக்கிறதாக அகல்யா சொல்லியிருந்தாள். அவளுக்குப் பிடிக்கவில்லை என்றில்லை. அவரை வெறும் திலீப்பாகக் காணவே அவளுக்கு இஷ்டம்.

வெறும் திலீப்போ, வெல்லம் போட்ட திலீப்போ, ஐயரோ, ராவ்ஜியோ, திலீப்புக்கு, அகல்யா காலமானதும், பேச்சுத் துணை அற்றுப் போனது முதல் துக்கம்.  அவருக்கு மராட்டி இலக்கியத்தையும் மலையாளக் கவிதையையும் மார்க்சீயத்தையும், ஷேக்ஸ்பியரையும் சர்ச்சை செய்யப் பேச்சுத் துணை வேண்டாம். 

அதெல்லாம் தெரியும் தான். ஆனால் அது சம்பந்தமான பேச்சு திலீப் ராவ்ஜியின் தந்தையார் பரமேஸ்வர ஐயர் காலத்திலேயே ஓய்ந்து போனது. தில்லி போய் வருகிறேன் என்று பம்பாயில் இருந்து புறப்பட்டுத் திரும்பும்போது திடீரென்று நாக்பூரில் காணாமல் போனவர் பரமேஸ்வரன்.

திலீப்புக்கு அரசியலோ இலக்கியமோ அத்துப்படி எல்லாம். ஸம்ஸாரிக்கான் மடுப்பு தோணுண்னு. பேசிக் களைத்துப் போயாச்சு. இனி எதுவும் பேச வேண்டாம். சிலப்பதிகாரத்தில் தாவரங்கள், மணிமேகலையில் சூப்பர்நேச்சுரல் கூறுகள் பற்றிப் பேசித் தீர்க்க அவரால் முடியாது. ஆனால் நேற்றைக்கும் இன்றைக்கும் தட்பவெப்ப நிலை எப்படி இருக்கிறது, இன்றைக்கு மழை பெய்யுமா, நாளை புயல் உருவாகிறதாமே என்று வானிலை பேசவோ, பழைய இந்தி மற்றும் பழைய மலையாள சினிமா, வந்து போகும் விழாக்கள் பற்றிச் சுக்கும் ஏலமும் தட்டிப் போட்ட தேநீர் குடித்தபடி உற்சாகமாகப் பேசவோ, சாமர்த்தியம் உள்ள அரட்டைக்கார திலீப் ஒருத்தர் இருந்தார். அகல்யா புறப்பட்டுப் போனதும், அவரும் காணாமல் போனார்.

அவர் வீட்டுச் சாப்பாடு சாப்பிட்டு வெகு நாளாகிறது. ஓட்டல் நடத்தினாலும் வீட்டில் ஒரு பொரியல், ஒரு துவையல், ஒரு ரசம், ஒரு கீரை மசியல், ஒரு பப்படம் என்று ஒரே ஒரு நாள் சாப்பிடக் கிடைத்தால், அம்பலப்புழை ஸ்ரீகிருஷ்ணனை வந்தித்து, நன்றியும், கடப்பாடும், சொல்லி வணங்குவார். 

பெரிய விருந்து, ஓணமும் பொங்கலும் விஷுவும், தீபாவளியும் எல்லாம் கொண்டாட, இலை நிறைய அதுவும் இதுவும் வந்து கொண்டிருக்க வேண்டாம். அகல்யா இருந்த வரை, அடிக்கடி அனுபவப்பட்டுக் கொண்டிருந்தது அது.

திலீப் ராவ்ஜிக்கு அண்டை அயலில் சிநேகிதர்கள், தூரத்து, பக்கத்து சொந்தக்காரர்கள், ஏன், பழக்கமானவர்கள் என்று பலர் உண்டு. இவர்கள் மதியச் சாப்பாட்டுக்கு உட்காரும் நேரம் அவருக்குத் துல்லியமாகத் தெரியும். 

அதற்கு ஒரு மணி நேரம் முன்பே நலம் விசாரிக்கிற தோரணையில் ராவ்ஜி எப்போதாவது அவர்களின் வீடுகளுக்கு அழைக்காமலேயே போவதுண்டு. 

அதிலும், விடிந்ததும் சோற்றில் விழிக்கிற, காலை ஏழு மணிக்கு சாதம், சாம்பார், ரசம் என்று விஸ்தாரமாக உண்டு விட்டு ஓடும் ஆபீஸ்காரர்களைத் தவிர்த்து விடுவார். மதியம் சிற்றுண்டி சாப்பிட்டு காலையில் சம்பிரதாயமான சாப்பாடு சாப்பிடும் அவர்களை மனுஷர்களாகவே அவர் மதிப்பதில்லை. மீதி இருப்பவர்கள் எல்லோரும் அவருடைய அன்புக்குப் பாத்திரமானவர்கள். சகல சௌபாக்கியமும் கூடிவரப் பெற்றவர்கள். 

எனினும் இவர்களில் ஒருத்தர் கூட சாப்பிடறீங்களா என்று அவரைக் கேட்டதில்லை. இவ்வளவு பெரிய மனுஷனை, ’எங்க வீட்டில் வற்றல் குழம்பு சாதம், சுட்ட அப்பளம் சாப்பிட வாங்க’ன்னு கூப்பிடச் சங்கடம் தான். 

அழைத்தால், ‘பேஷா வரேன், அந்த அப்பளத்திலே, உளுந்து அப்பளம் தானே, சுட்டதுக்கு அப்புறம் கொஞ்சம் நல்லெண்ணெய் தடவி வை’ என்று குஷியாக வந்து விடுவார் திலீப் ராவ்ஜி. இதுவரை யாரும் அழைக்கவில்லை. போகட்டும். எல்லோரும் எல்லா சௌகரியங்களும் பெற்று விளங்கட்டும்.

 திலீப் ராவ்ஜி அழைக்காமல் விருந்தாடப் போகும்போது மறக்காமல் ஒரு சீப்பு வாழைப்பழமோ, இருப்பதிலேயே பெரிய பாக்கெட் வெண்ணெய் பிஸ்கோத்தோ, கடலை உருண்டைகளோ வாங்கிப் போவார். போகிற வீட்டுக் குழந்தைகளுக்குப் பிடித்த சமாசாரம் இவை இரண்டும். 

குழந்தைகளுக்கு, வந்திருக்கும் தாத்தாவைப் பிடித்துப் போனால், பெரியவர்கள் போனால் போகிறது என்று அவரைக் குழந்தைக்கு சமமாக மதித்துச் சாப்பிடக் கூப்பிடலாம். குழந்தைகள் வீட்டுப் பெரியவர்களை நச்சரித்து, ஒன்றிரண்டு முறை அப்படி அழைக்கப்பட்டிருக்கிறார் அவர்.  

அவருக்குப் பணம் செலவழிப்பது ஒரு பொருட்டே இல்லை. வீட்டுச் சாப்பாடு. அதற்காக பத்து கிலோமீட்டர் கூட அவருடைய    காரில் போவார்.

தானாக விருந்தாடப் போகும் வேளைகளில் அவர் கடைப்பிடிக்கும் இன்னொரு ஒழுங்குமுறையும் உண்டு. சாப்பாடு எவ்வளவு மோசமாக இருந்தாலும் குடும்பத் தலைவருக்கும், வீட்டம்மைக்கும் சரஞ்சரமாகப் பாராட்டுகளை எடுத்து விடுவது முக்கியம் என்பதை அவர் அறிவார். 

இந்தப் பாராட்டுகள் பொய்யாக ஒலிக்காமல் இருக்க அவர் கடைப்பிடித்த யுக்தி, அவர் எப்போதோ உண்டு, நினைவில் இன்னும் இருக்கும் உணவை நினைவு கூர்வதாக அந்தப் பாராட்டை அமைத்துக்கொள்வதாகும். 

நினைவில் நிற்கும் அந்த உணவு, அகல்யா ஒரு ஞாயிற்றுக்கிழமை சமைத்ததாகவோ, கற்பகம் பாட்டி கண்ணை இடுக்கிக்கொண்டு பம்பாய் பலமாடிக் குடியிருப்பு பாண்டுப் சாலில் ஸ்டவ்வோடு மல்லுக்கட்டி கிண்டிக் கிளறி இறக்கியதாகவோ, திலீப்பின் அம்மா ஷாலினிதாய், மேத்தி பரட்டாவும் ஆம்பா ஊறுகாயும் அவருக்கு உண்ணக்கொடுத்த அபூர்வமான தினமாகவோ நினைவில் உடனடியாக அழைக்கப்படும். அப்புறம்  செயற்கைத் தன்மை இல்லாமல், அந்த நினைவு நெஞ்சாற பகிரப்படும். 

“அகல்யா கடையற கீரை மசியல் நினைவுக்கு வந்துதும்மா. நன்னா இரு. நன்னா இரு. எங்கம்மா சமையல்கட்டுக்கு வந்திருந்தாளா என்ன? கத்தரிக்காய் ரசவாங்கி எவ்வளவு ருஜியா இருந்தது தெரியுமா? எங்கம்மா பண்ணினா இதே போலதான் இருக்கும். ஜீத்தே ரஹோ பிட்டியா. ஷாலினி மோரே கேட்டிருக்கேளா, எங்கம்மா தான். அவ பண்ணின மேத்தி ரொட்டியும் பரட்டாவும் கிட்டத்தட்ட இப்படித்தான் இருக்கும். சொல்லப் போனா நீ பண்ணினது ஷாலினிதாய் சமைச்சதை விட   லவலேசம் இன்னும் பிரமாதம்”. 

இப்படி அவர் பாராட்டுகளை அள்ளித்தரக் கண் கலங்கிய பெண்கள் அவரை விரைவில் அடுத்த எளிய விருந்துக்கு அழைக்கத் தீர்மானிப்பது வழக்கம். ஆனால் என்னமோ அதை அப்புறம் மறந்து விடுவார்கள்.  

திலீப் ராவ்ஜிக்கு, கூட்டம் கூட்டமாக வைதிக காரியங்களுக்காகச் சஞ்சரிக்கும் புரோகிதர்கள் ஏனோ அவர் அலைவரிசைக்கு ஒத்து வந்ததில்லை. 

அவர்கள் ஒரு காலத்தில்  வெய்யிலோ மழையோ, தொலைவிலிருக்கும் இடங்களுக்குக் கூட கால்தேய நடந்து போய் வந்தார்கள். அப்புறம் மாங்குமாங்கென்று சைக்கிள் மிதித்து வைதீக காரியங்களை நிர்வகித்து நடத்தித்தரப் போய்க் கொண்டிருந்தார்கள். சைக்கிள், மோட்டார் பைக்கோ ஸ்கூட்டரோ ஆக நாள் அதிகம் பிடிக்கவில்லை. அவர்களில் சிலர் புத்தம்புதுக் கார்களை நேர்த்தியாக ஓட்டியபடி வைதீகம் செய்துதரப் போவதை திலீப் ராவ்ஜி சுவாரசியத்தோடு பார்க்கிறார். 

அது மட்டுமில்லை. பேரம் ஏதும் பேச வாய்ப்புத் தராத கட்டண விகிதங்கள், அவர்கள் நிச்சயித்த, வேறு யாரும் மாற்ற முடியாத, நாள்-நட்சத்திரம்-நேரம் சார்ந்த நிகழ்ச்சி அட்டவணைகள், ஹோமம் வளர்க்கவும், நிகழ்ச்சியை அனுசரிக்க, தெய்வத்துக்கு நிவேதிக்க,   என்ன என்ன உணவு, எவ்வளவு  எனக் கண்டிப்பான வைதீக ஆக்ஞைகள் என்று அவர்கள் விதித்தபடி எல்லாம் நடந்தாலே ஆசுவாசம் கொள்கிறார்கள். அகல்யாவின் இறுதிச் சடங்குகள் நடந்த போது அதைக் கவனித்திருக்கிறார். 

அக்னி வளர்த்துச் செய்யப்படும் சடங்குகளில் புரோகிதர்கள் வைத்தது சட்டமானது எந்தக் காலத்திலோ என்பதை திலீப் ராவ்ஜி அறிவார். ஹோமங்களும், குழந்தை பிறந்த நட்சத்திர தினச் சடங்குகளும், அறுபதும் எழுபத்தைந்தும் வயதான பெரியவர்களுடைய நலம் வேண்டிக் கொண்டாடப்படும் சுப காரியங்களும் செய்து கொடுக்க இவ்வளவு என்று நிர்ணயித்த கட்டண விவரங்களை எல்லோரும் அறிந்திருக்கிறார்கள்.

 பெரும்பாலான சடங்குகள் விரிவான விருந்துகளில் முடிவடைகின்றன. அவற்றைப் பற்றித்தான் திலீப் ராவ்ஜியின் ஆதங்கம் மனதில் அழுத்த வேரூன்றி இருக்கிறது. புரோகிதர்கள் நிர்வகித்து நடத்தித் தரும் வருஷாப்திகம் என்ற நீத்தார் நினைவஞ்சலி, காது குத்துதல், பிரம்மோபதேசம் என்று எந்த சடங்கிலும் கிரஹஸ்தர்களால், என்றால் இல்லத்து மக்களால், ராவ்ஜி அழைக்கப்படுவதில்லை. அவர் முப்புரிநூல் அணியாததே அதற்கான பிரதம காரணமாக இருக்கலாம் என்பதை ராவ்ஜி அறிவார். 

ஒரு பூணூல் வாங்கிப் போட்டுக்கொள்ள அதிக நேரம் பிடிக்காது. எனினும் ஆகாரத்துக்காக அதை அணிய மாட்டார் திலீப் ராவ்ஜி. புரோகிதர்கள் கட்டாயப்படுத்தினாலும் அப்படித்தான்.

புரோகிதர்கள் இல்லாமல் அவர் எப்படி அகல்யாவுக்கு சாப்பாடு தர முடியும்? 

இறந்து போயிருந்தாலும் அவளுக்கும் பசி உண்டே? பஞ்சாங்கம் கணித்துக் கொடுத்த வருடாவருடம் வரும் நட்சத்திரம் சார்ந்த ஒரு நாளில் அகல்யா பசியோடு சரீரமின்றி பசித்து வந்து நிற்பாள். புரோகிதர்கள் மூலம் தான் அவள் உண்ணவும் தண்ணீர் பருகவும் வேண்டும். அகல்யா மட்டுமில்லை, திலீப் ராவ்ஜியின் அம்மா ஷாலினிதாய் அம்மாளும் அகல்யாவோடு கூடவே வந்து திவசச் சோற்றுக்காகக் காத்திருப்பாள். பசித்த பெண்மணிகள்.

திலீப் ராவ்ஜி நீரும் சோறும் தர வேண்டாம். அவருடைய மகன் அனந்தனுக்கு விதிக்கப்பட்ட கடமை அது. அதற்கு அவன் கிரகஸ்தனாக இருக்க வேண்டும். அல்லது சிறப்பு வைதீக அனுமதி கொடுக்க வேண்டும். அனந்தன் போன வருடம் புரோகிதருக்கு தர்ப்பையில் எள்ளும் நீரும் இரைத்துக் கைமாற்றி  ( ஸ்தூல பிரதிநிதி என்றோ  என்னவோ, தகுதிக்கு அருகதையுள்ளவனாக)  அனுமதி கொடுத்து நடத்தினான். அதற்கு முந்திய வருடம் செய்யவில்லை. இந்த வருடம், இன்றைக்கு? தெரியவில்லை.

 யார் கண்டது? திலீப்பின் கற்பகம் பாட்டியும் இவர்களோடு வந்து பசியாற நிற்கிறாளோ என்னமோ? ஏன், திலீப் ராவ்ஜியின் தகப்பனார், சகா பரமேஸ்வரன் அய்யர் திவசச் சாப்பாட்டுக்காக அலைகிறாரோ?

 திலீப் யோசித்துப் பார்த்தார். அவர் எப்படி வருவார்? இருக்கும் வரை இடதுசாரியாக இருந்தவர் ஆச்சே அப்பா?  திவசத்திலும் திதியிலும் நம்பிக்கை இல்லாதவர் எப்படி நாள் நட்சத்திரம் பார்த்துப் பசியாற வர முடியும்? 

ஒருவேளை அப்பா இன்னும் உயிரோடுதான் இருக்கிறாரோ. திலீப் ராவ்ஜிக்கு இந்த நினைப்பு கொஞ்சம் பயமுறுத்துவதாக இருந்தது. இருந்தால் என்ன, ஒரு நூற்றுப் பதினைந்து வயதாகி இருக்குமே.

அவர் ஒரு அவசரக் குளியல் போட்டார். ஹாலில்   அலமாரிக்குள் வைத்த ஸ்ரீகிருஷ்ணனின் சிறு பிரதிமை முன் கண் மூடி கை கூப்பி நின்று வணங்கினார். 

”அகல்யா ஆத்மான்னு இருந்தா அது சாந்தமா, சௌக்கியமா, அலைந்து திரியாமல் அமைதியாக இருக்க கிருபை செய்யூ கிருஷ்ணா. அச்சுதம் கேசவம் ராம நாராயணம் கிருஷ்ண தாமோதரம் வாசுதேவம் பஜே”.

அவர் உரக்கச் சொல்லி, ராகம் இழுத்துப் பாடி ஸ்ரீகிருஷ்ணனை வணங்கினார். 

”கிருஷ்ணா, இன்னிக்கு அகல்யா திதி. புரட்டாசி திரியோதசி அவள் போன நாள். அகல்யாவோட   சிரார்த்தத்தை நடத்த இதுவரை முன்கை எடுக்கலே. எடுத்து திவசம் பண்ணியிருந்தா இன்றைக்கு அவளுக்கு ஒரு குத்து சோறும் மேலே எள்ளும் தண்ணியும் இரைச்சுக் கிடைக்கும். இன்னும் ஒரு வருஷத்துக்கு அவளோட ஆகாரமும் பானமும் அதுதான்னு விதிச்சவன் நீதானேப்பா. அவ இந்த ரெண்டுக்காகவும், இல்லே, வேறே எதுக்காகவும் அலையாமல் நிறைவோடு இருக்க கிருபை செய்யப்பா. கூடவே ரெண்டு பேர், வயசான ஸ்திரிகள், எங்கம்மாவும் என் பாட்டியும். அவாளுக்கும் ஆகாரமும் ஜல பானமும் வருஷம் முழுக்கக் கிட்ட இன்னும் கொஞ்சம் கருணை செய்யூ கிருஷ்ணா”.

 பிரார்த்தனை முடித்து ப்ரிட்ஜிலிருந்து அரை லிட்டர் பால் அடைத்த போத்தலை எடுத்தார். இண்டேன் வாயு ஸ்டவ்வைப் பற்ற வைத்தார். பால் காயும்போதே முந்தாநாள் ஹோட்டலில் இருந்து கொடுத்து விட்டிருந்த வெல்லப் பாயசத்தை சூடு படுத்தினார். திலீப் ராவ்ஜி இருபது வருடம் பார்த்துப் பார்த்து வியாபாரத்தைப் பெருக்கி முதல் வரிசை உணவகமாக்கி இருந்த ஜான் கிட்டாவய்யர் பவன் தயாரிப்பு.  

பற்ற வைக்காத அடுப்புக் குமிழ் மேல் எறும்பு வராமல் வைத்திருந்த ரொட்டித் துண்டுகளைப் பொதி அவிழ்த்து மைக்ரோ அவனில் முப்பது விநாடி சூடு படுத்தினார். அவருடைய காலை உணவு தயாராகி விட்டிருக்கும்.

ஏனோ இன்றைக்கு அது அப்படியாகவில்லை. மைக்ரோ அவனின் சுழலும் வட்ட மேடை ஒரு செகண்ட் சுழன்று கரகரவென்று சத்தம் ஒலித்து நின்றது. மின்சாரம் போயிருந்தது. இனி எப்போது அது திரும்ப வருமோ தெரியவில்லை திலீப் ராவ்ஜிக்கு. இன்னும் அரை மணி நேரத்தில் வரலாம். அல்லது சாயந்திரம் ஆகலாம்.  யாரையாவது எலக்ட்ரிசிட்டி ஆபீசுக்கு காசு கொடுத்து அனுப்பி வைத்தால் சீக்கிரம் திரும்பக் கூடும். யாரை அனுப்ப?

இதற்காக மூஞ்சியை மூணு முழம் தூக்கி வைத்துக் கொண்டு டைனிங் டேபிள் முன்னால் உட்கார முடியுமா? சலோ. ப்ரட் காயேங்கே ஹம். பத்து செகண்டில் இத்துனூண்டு டோஸ்ட் ஆகியுள்ளது. போதும். பால் அடுப்பில் வைத்தது ரொம்ப சுட்டிருந்தது. விட்டிருந்தால் பொங்கி அடுப்பில் ததும்பி விழுந்திருக்கும். 

பாயசம் இன்றைக்கு குளிரக் குளிரக் குடிக்கச் சொல்கிறான் பகவான் ஸ்ரீகிருஷ்ணன். அட்ஜஸ்ட் பண்ணிக்கோடா திலீபா. சரிடா கண்ணா. திலீப் ராவ்ஜி கைகூப்பினார்.

 ஒரு வினாடி அவருக்குத் தன்னிரக்கம் கனமாக மனதில் கவிந்தது. ஊர் முழுக்க சுற்றி யாசித்துக் கிடைக்கிறதைப் புசிக்கும் பரதேசி போல,  எதுவோ செய்து  எதையோ சாப்பிட   இருக்கும் நிலைமை அவருக்கு ஏன் வரணும்? 

 ”ஸ்வாமின், நான் சொல்றதுக்கு முந்தி  ஆகாரம் பண்ணக் கூடாது”

 வாசலில் இருந்து யாரோ உரக்கச் சிரிக்கும் சத்தம். பின்னால் திரும்பி வாய் நிறைய அடைத்த பழைய  பிரட்டோடு பார்த்தார். புளிப்புக் காடியில் ஊற வைத்த கோமணம் மாதிரி அந்த ரொட்டி வாடை அடித்தது. 

யார் வந்திருக்கிறார்கள்? அதுவும் திலீப் சாப்பிட ஆரம்பித்த வினாடியில் உள்ளே புகுந்து சாப்பிடாதே என்று கையைப் பிடித்து இழுக்க? ஸ்ரீகிருஷ்ணனா? அவன் ஏன் அப்பார்ட்மெண்டுக்கு வருகிறான்?

 திலீப் ராவ்ஜியை டைனிங் டேபிள் காலோடு சேர்த்துக் கட்டி பலவந்தமாக அவருக்கு எதையாவது தின்னக் கொடுக்க யாராவது கிளம்பி வந்திருக்கிறார்களா? அது புதுப் புளி கரைத்து பருப்பு வேகவைத்துக் கலந்த சாம்பாரும் பொன்னி அரிசி வேகவைத்து குழைய வடித்ததுமான கலவை சாதமா?  சாப்பிட்டால்தான் ஆச்சு என்று வற்புறுத்தி சாப்பிட வைக்க வந்திருக்கிறார்களா?

இல்லை, அப்படி யாரும் இல்லை. புரோகிதர்களின் சிறு ஊர்வலம் அது. சமையல்காரர்களும், எடுபிடிகளும் தளவாடங்களோடு அவர்களோடு கூடவே வந்து கொண்டிருந்ததை திலீப் ராவ்ஜி கவனித்தார்.  

“ஓய் ராவ்ஜி, நாமெல்லாரும் இப்போ உங்க ஆத்துக்காரி திதியை சிறப்பாக நடத்தி மறக்க முடியாத ஸ்ரார்த்த   ஆகாரம் பண்ணி முடிச்சு அவா அவா சௌகரியம் போல இருக்கலாம். மூஞ்சியை தூக்கி வச்சுக்காம வாரும் ஓய்”.

 சீனியர் புரோகிதர் ஈஸ்வர கனபாடிகள் திலீப் ராவ்ஜியிடம் கணீரென்ற குரலில் சொல்லி விட்டு பின்னால் பார்க்க, இரண்டு எடுபிடிகள் வீட்டை கரகரவென்று பெருக்கிக் கழுவித் துடைத்து அரை மணி நேரத்தில் ரெடி பண்ணி விட்டார்கள்.

சமையல்காரர்கள் சமையல் அறைக்குள் நுழைந்து, கொண்டுவந்த காய்கறி நறுக்கவும், தேங்காய் துருவவும், சாதம் வடிக்க அரிசி களைந்தும் கிரமமாகச் செய்யத் தொடங்கினார்கள்.  

ஜூனியர் புரோகிதர்கள் தரையில் அமர்ந்திருக்கும் கனபாடிகளைச் சுற்றி உட்கார்ந்து தர்ப்பைப் புல்லை எடுத்தெடுத்து பவித்ரம் என்று அதில் மோதிரம் போல விரல் நுழைத்திருக்க முடிச்சு  போட்டு வைக்கத் தொடங்கினார்கள். 

இந்தக் காரியமெல்லாம் வெகு சீராக நடந்து கொண்டிருக்க, ராவ்ஜி தன் மூக்குக் கண்ணாடியை வீடு முழுக்கத் தேடிக் கொண்டிருந்தார். கிடைத்தது கண்ணாடி. நாலு நாள் மலையாள மனோரமாவும், மாத்ருபூமியும், வந்து விழுந்து எடுத்துப் பிரித்துப் படிக்காமல் அப்படியே அடுக்கி வைத்திருந்த நாற்காலியில் பத்திரிகைகளுக்கு இடையே.

கண்ணாடியை எடுத்துத் துடைத்துப் போட்டுக் கொண்டபோது வாசலில் கார் வந்து நிற்பதைக் கண்டார் ராவ்ஜி. 

ஆச்சரியத்தில் ஆச்சரியமாக அவருடைய மகன் அனந்தகிருஷ்ணன் என்ற அனந்தன் காரில் இருந்து இறங்கி வந்து கொண்டிருந்தான்.  முழு மார்க்சிஸ்ட் ஆன அவன் ஜரிகை வேஷ்டி கட்டி மேலே பட்டுத் துண்டு போர்த்தி இருந்தான்.

  அனந்தன் தன் தகப்பனாரிடம் ஈடுபாட்டோடு சொன்னது என்னவென்றால், அவன், காலமான தன் தாயாருக்கான நினைவு தினத்தை மதச் சடங்குகளோடு நடத்தி வைக்கப் போகிறானாம். கல்யாணம் ஆகாவிட்டாலும் திவசம் கொடுக்க பித்ருக்களின் அனுமதி இப்போது கிடைத்திருப்பதாக சாஸ்திரங்கள் பலவற்றையும் படித்து சாஸ்திரிகள் சொல்லியிருக்கிறார்களாம். 

ராவ்ஜி மகிழ்ச்சியும் சற்றே சந்தேகமுமாக தன் மகனைப் பார்க்க, ”எனக்கு நம்பிக்கை இருக்கோ என்னமோ. அம்மாவுக்கு இருந்ததே. இன்று அவள் ஆசைப்படி எல்லாம் நடக்கும்” முணுமுணுத்தபடி புரோகிதர் அருகே தரையில் சம்மணமிட்டு அமர்ந்தான் அவன்.  

வெகு பக்கத்து ஊரான ஆலப்புழையில் அவனுடைய இன்னும் கூடப் பெரிய ஃப்ளாட்டில் இதை வைத்துக் கொள்ளலாம் என்று தான் முதலில் நினைத்திருந்தானாம். அம்மா புழங்கிய வீடு, அடைத்த அலமாரிகளிலும், பால்கனித் தொட்டிச் செடிகளிலும் இன்னும் அவளுடைய சுவாசக் காற்று தங்கி இருக்கக் கூடும் என்பதாலும், அப்பா திலீப் ராவ்ஜியும் அம்மா அகல்யாவும் குடித்தனம் நடத்திய இடம் என்பதாலும் இந்த அம்பலப்புழை அபார்ட்மெண்டில்  வைத்துக் கொண்டிருக்கிறானாம். 

திலீப் ராவ்ஜி சகலமானதுக்கும் திருப்தி தெரிவித்தார்.

அனந்தன் சார்பில் ஹோமம் வளர்க்கப் பட்டது. அகல்யாவையும், ஷாலினிதாயையும், கற்பகம் பாட்டியையும் சற்றே இறங்கி வரச்சொல்லி வேண்டினார்கள். 

அனந்தகிருஷ்ணன் என்ற முப்பது வயதுச் சிறுவன் எள்ளும் தண்ணீரும் ஸ்தூல பிரதிநிதி மூலம் இரைத்துத் தந்த பலிச்சோற்றை உண்டு, எள் மிதக்கும் நீரைப் பருகித்  திருப்தியடைந்து எல்லோரையும் ஆசிர்வாதம் செய்து திரும்பிச் செல்ல அவர்களுக்குக் கோரிக்கை விடுக்கப்பட்டது.

  பிரதிநிதியோடு, இந்தப் பிரார்த்தனைக்கான மந்திரங்களை புரோகிதர் சொல்லச் சொல்ல சிரத்தையோடு காதில் வாங்கிக் கூடிய மட்டும் திரும்பச் சொன்னான் அனந்தன். ராவ்ஜி சடங்குகள் நிறைவடையக் காத்துக் கொண்டிருந்தார். அப்புறம் தான் சாப்பாடு வரும். 

ராவ்ஜி அனந்தனுக்கு அருகே உட்கார்ந்து அவன் மந்திரங்களைச் சரியான உச்சரிப்பில் சொல்ல வெகுவாக முயற்சி எடுப்பதைக் கவனித்துக் கொண்டிருந்தார். “ப்ராசீனாவீதம்.. பூணூலை வலத்திலே இருந்து இடது பக்கமா போட்டுக்குங்கோ” என்று புரோகிதர் சொன்னதையும் ஒரு முறை திருப்பிச் சொன்னான்.

அனந்தன் கல்யாணம் கழிக்கவில்லை. திருமணம் ஆகியிருந்தால் இந்தச் சடங்கின் போது அவன் தோளில் தர்ப்பைப் புல்லால் தொட்டபடி அவன் மனைவி நின்று கொண்டிருக்க வேண்டும் என்று விதிக்கப் பட்டுள்ளது. அப்போது சிறப்பு வைதீக அனுமதி எதுவும் வாங்கத் தேவையிருந்திருக்காது.

இன்றைக்கு அனந்தன் நல்ல மன நிலையில் இருப்பதை ராவ்ஜி கவனித்தார். அகல்யாவுக்கே எல்லாப் புகழும். இந்தச் சடங்கு எதிலும் நம்பிக்கை இல்லாத மகனை அழைத்து வந்து காரியங்கள் நடத்தி ஸ்ரார்த்த சமையலும்   சாஸ்திரப்படி  உண்டாக்கி நல்ல முறையில் நடக்க வைத்திருக்கிறாள். 

இந்த நல்லிணக்கத்தைச் சாக்காக வைத்து அவனிடம் திலீப் ராவ்ஜி அகல்யா சார்பிலும் தன் சார்பிலும் பேசி அவனைக் கல்யாணம் செய்து கொள்ள வைக்க வேண்டும். முப்பது வயது முடிந்தாலும் இருபத்தைந்துக்கு மேல் ஒருநாள் கூட அவன் வயதாகி இருப்பான் என்று யாரும் கணிக்க முடியாதபடி துள்ளும் நடையும், சதா உற்சாகமும், அலாதி உழைக்கும் சக்தியுமாக சிரித்த முகத்தோடு காணப்படுகிறவன் அனந்தன். 

மாயகோவ்ஸ்கியும், செகாவும், கார்க்கியும், அவனுக்கு வெகு இஷ்டமான சோவியத் இயற்பியலாளர் ஏ.ஐ.கிட்டய்கொரட்ஸ்கியும், அறிவியல் எழுத்தாளர் யா.பெரல்மானும் சார்ட் போட்டு வைத்துக்கொண்டு தினசரி   யௌவனத்தை ஆவிரூபமாக அளிக்கிறார்களோ என்னமோ தெரியவில்லை.

திலீப் பார்த்துக் கொண்டிருக்கும்போதே சதா நமஹ என்று ஒற்றை வார்த்தையை உதிர்த்துக் கொண்டிருக்கும் சின்ன வயதுப் புதுமுகமான புரோகிதப் பிள்ளையாண்டானிடம் மூத்தவர் காதில் ஏதோ சொன்னார்.

தலைமை புரோகிதரின் குரல் உச்சத்தை அடைந்திருந்தது. கைகளை அவசரமாக அசைத்து  இளையவனை அவசரம் என்று மூக்கை உறிஞ்சியபடி பார்த்தார் அவர். அவன் குழம்பி சந்தேகம் கேட்டான். 

ஏதோ முணுமுணுத்தபடி  ஹோமம் செய்ய நெய் வார்த்த பாத்திரத்தில் இருந்து பலா இலையை வெளியே போட்டு விட்டு மீதி நெய்யை முழுக்க ஹோமத் தீயில் பொழிந்தார் அவர். வீடு முழுக்க ஒளியும் நெய் வாசனையும் பரத்திக்கொண்டு அந்த நெய் கனன்று எரிந்து தீர்ந்தது.

 “திருதிருன்னு முழிக்காம எழுந்திரு. சமையல்கட்டுலே மடியா சமைச்சு வச்சிருப்பா. வாங்கிண்டு வா” என்று ஜூனியரைப் பார்த்து முழங்கினார். ரோடு போடும் உருளை வண்டியின் பெரிய சக்கரத்தில் நைய நசுக்கப்பட்டது போல் முகபாவம் ஏதும் இன்றி உள்ளே போனார் ஜூனியர்.

 அவர் திரும்பி வரும்போது இரண்டு சமையல்காரர்கள் திவசத்துக்காகச் சமைத்தெடுத்த பதார்த்தங்களைச் செப்புப் பாத்திரங்களில் வைத்து எடுத்து வந்தார்கள்.

திலீப ராவ்ஜி வயிற்றில் உக்ரமான பசி அலையடித்துக் கொண்டிருந்தது. ஆகாரத்தின் வாசனை வாயில் எச்சிலை ஊற வைக்க அதைக் கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டார் ராவ்ஜி. அகல்யாவால் தானே இன்றைக்கு அவர் வயிறார உண்ணத் திவசச் சாப்பாடு சாப்பிடக் கிடைக்கப் போகிறது. அகல்யா இருந்தாலும் இறந்தாலும் ராவ்ஜிக்கு அதை வருடம் ஒரு தடவையாவது தர ஏதாவது வழி செய்து விடுவாள் என்று நினைக்க அவர் கண்ணில் நீர் திரண்டது. 

ஹோமம் வளர்த்திருந்த குண்டத்தில் அக்னி தீவிரம் குறைந்து கொண்டே வர, அதை உயிர்ப்பில் வைத்திருக்க சிறு சமித்துகளை குண்டத்தில் இடும் மற்ற புரோகிதர்கள் நிறுத்தாமல் சாம கானம் பொழிந்தபடி இருந்தனர்.  திலீப் ராவ்ஜிக்கு சாமகானம் எப்படி ஒலிக்கும் என்று மட்டும் தெரியும்.

சமையலறையிலிருந்து வந்திருந்த பெரிய பாத்திரத்தை சற்றே நிமிர்த்தி மூச்சு இழுத்து வாடை பிடித்த சீனியர் புரோகிதர் முகபாவம் மாறியது. ஏதோ தவறு நடந்திருக்கிறது என்று சொன்னது அது. 

”இது சாஸ்த்ரோக்தமா செய்யற சம்ப்ரதாயம். நாம இஷ்டப்பட்டதாலே பித்ருக்கள் எல்லாரும் இங்கே வந்து அக்னியிலே தர்ற ஹவிஸையும் புதுசா வடிச்ச சாதத்தையும் எள்ளையும் தண்ணியையும் மற்ற பட்சணங்களையும் ஏத்துண்டு எல்லோரையும் ஆசிர்வதிக்கப் பெரிய மனசு பண்ணியிருக்கா. அவாளுக்கு இதையா கொடுக்கப் போறோம்? சொல்லுங்கோ. இதென்ன ஆசார ஹீனம்?” அவர் முழங்கினார்.

 ஆசார ஹீனம். ஆசாரக் குறைவு. அனந்த கிருஷ்ணனிடம் சண்டை பிடிக்கிற மாதிரிப் பேச ஆரம்பித்து முறையிடுகிறவராக முடித்து இரண்டு கையும் கூப்பி நின்றார் சீனியர் புரோகிதர் கனபாடிகள். சந்நதம் வந்தவர் போல் அவர் உடல் நடுங்கிக் கொண்டிருந்ததை ராவ்ஜி கவனித்தார். 

அவர் மனதில் ஒரு மூலையில், தட்சிணையைக் கூட்ட இதெல்லாம் நடந்தேறுகிறதா என்று சின்னதாக ஒரு சம்சயம். 

கனபாடிகள் பாதியில் நிறுத்திய மந்திரத்தின் மௌனமான இறுக்கத்தில் நடுங்கி சக புரோகிதர்கள் பார்த்துக் கொண்டிருக்க, அக்னி பம்மிப் பம்மி குண்டத்தில் தணிந்து அணைந்து கொண்டிருந்தது. கனபாடிகளையே சலனமின்றிப் பார்த்தபடி இருந்தான் அனந்தன்.

 “நீங்க ஏற்பாடு பண்ணி இங்கே அனுப்பியிருக்கற சமையல்காரா இதுக்கு முன்னே திவசத்துக்கு சமைச்சிருக்காளா?” அதிகாரத்தைக் குரல் மூலம் நிலைநிறுத்தும் அவசரமான முயற்சி அது. 

அனந்தன் மிளகும் ஏலமும் கிராம்பும் விற்றுப் பெரிய லாபமும் இடதுசாரி   பிரமுகராக, பிரபலமும் கூடி வரும் இளைய நட்சத்திரமாக இருக்கலாம். கனபாடிகள் கனபாடிகள் தானே. இந்த மாதிரி சூழ்நிலைகளில் அவர் தானே பெரியவர்? அவர் ஆசார ஹீனம் என்று சொன்னால் ஆசாரக் குறை தான் அது. அப்பீலுக்கு எந்த கோர்ட்டுக்கும் போகமுடியாது.

இந்த நினைப்போடு நெஞ்சு நிமிர்ந்து நின்றார் கனபாடிகள்.

“ஏன் ஸ்வாமிகளே, என்ன விஷயம்னு இப்படி சத்தம் போடணும்? நீங்க கடைத்தேத்த மந்திரம் எல்லாம் கிரமமா சொல்லப் படிச்சிருக்கீர்னா இவாளும் பிழையில்லாம சமைக்கக் கத்துண்டவா தான். இப்போ என்ன செய்யணும்கிறீர்?” அவன் நிதானமாகக் கேட்டான். உனக்காச்சு எனக்காச்சு ஒரு வழி பண்ணிடுவோம் வா என்ற தொனி அதில் தென்பட, கனபாடிகள் சற்றுப் பின்வாங்கினார். 

கைக்கெட்டிய தூரத்திலிருந்து திவசச் சாப்பாடு வாய்க்கு எட்டாமல் போகப் போகிறதென்று கவலையும் ஏமாற்றமும் பெரிதாக முகத்தில் எழுதியதை, சட்டை இல்லாத மேலுடம்பை மூடும் உத்தரீயத்தால் அழுத்தித் துடைத்தபடி,  திலீப் ராவ்ஜி அனந்தனையே பார்த்தபடி இருந்தார். அது போதாதென்று பட, எழுந்து கனபாடிகள் பக்கத்தில் போய் நின்றார். 

அவர் காலடியில் கனபாடிகள் தரையில் உட்கார்ந்து மேலே நோக்கியது சற்று ஆசுவாசமாகத் தெரிந்தது திலீப் ராவ்ஜிக்கு.

“நீங்க வைதீகர்கள் நாங்களோ லௌகீகர்கள். ஆசாரமும் ஆசார ஹீனமும் நீங்க என்னன்னு விளக்கமா சொன்னா, ஹீனமானதை நிவர்த்திக்கறது பெரிய விஷயமே இல்லைங்காணும். உங்களுக்கு எங்க ஆதரவு வேணும். எங்களுக்கு உங்க வழிகாட்டறது வேணும். விரோதம் எதுக்கு? சொல்லுங்கோ என்ன சமாசாரம்?”

வீட்டுப் பெரியவராகக் கண்ணாடியைத் துடைத்துப் போட்டுக்கொண்டபடி திலீப் ராவ்ஜி சொன்னது அனந்தனை மட்டுமில்லை மற்ற புரோகிதர்களையும் ஆகர்ஷித்ததாகத் தெரிந்தது அவருக்கு. பின்னே, அவர் வீட்டுக்குள் வந்து உட்கார்ந்து அரையும் காலுமாக வார்த்தை சொல்லி ரௌத்ர பாவம் காட்டினால் சும்மா இருக்கவா இத்தனை காலம் பழகியிருக்கிறார் ராவ்ஜி?

கனபாடிகள், சமைத்துக் கொண்டு வந்த பாத்திரங்களைக் கூர்ந்து பார்த்தார்.  பெரிய உளுந்து வடைகளும், அதிரசமும், வாழைக்காய்க் கறியும் அந்தப் பாத்திரங்களில் நிறைந்திருந்தன. எல்லாவற்றையும் எடுத்துக் குப்பையில் எறிந்துவிட்டு வேறேதையோ பாகம் பண்ணச் சொல்லப் போகிறாரோ இந்தக் கனபாடிகள்? 

அப்படி இருந்தால் திலீப் ராவ்ஜி சும்மா இருக்கப் போவதில்லை. பாத்திரம் பாத்திரமாகப் பிடுங்கி வைத்துக்கொள்ளப் போகிறார் அவர். அகல்யா அவருக்குப் பக்கபலமாக இருப்பாள். 

ஜூனியர் கத்துக்குட்டி புரோகிதரிடம் கனபாடிகள் ஏதோ சொல்லி சமையலறைக்கு அனுப்பியதில் தான் இந்த சச்சரவு ஆரம்பமானது என்பதை நினைத்துப் பார்த்தார் ராவ்ஜி. என்ன விஷயம் என்று தன் பார்வையை அவர் மேல் எறிந்தார். எனக்குத் தெரியாது என்று அவசரமாகத் தலையாட்டிய கத்துக்குட்டி யாரும் சொல்லாமலேயே நமஹ சொன்னார்.  

“வைதீகாள், லௌகீகாள் சம்வாதம் இருக்கட்டும். நாம ஒருத்தருக்கொருத்தர் அனுசரணையா இருந்தா ஒரு பிரச்சனையும் வராது. திவசச் சமையல்லே அவசியம் என்ன கூட்டணும்? சொல்லுங்கோ, என்ன கூட்டணும்? மிளகு. இங்கே அது கூட்டின தடமே தெரியலே. அதுக்கு மேலே ஆசார ஹீனமா பட்டமிளகாய் வத்தலை போட்டு சமைச்சிருக்காள். மஹா திரிசமன், மஹா பாபமோன்னா அது”.  கனபாடிகள் அங்கவஸ்த்ரத்தால் முகம் துடைத்தபடி சொன்னார்.

கனபாடிகள் விஷயத்துக்கு வர பத்து நிமிஷம் இப்படிப் பிடித்தது.  திலீப் ராவ்ஜி சொல்ல முடியாத ஆசுவாசத்தோடு தன் மகன் அனந்தனை நோக்கினார். பிரச்சனை என்ன என்று தெரிந்து விட்டது. அதை தீர்க்க அவர் இனி முற்படுவார்.

 ”கனபாடிகளே கொஞ்சம் இரும். நான் கிச்சன்லே போய் என்ன நடந்ததுன்னு பார்க்கறேன். ஏசியைப் போடுடா அனந்தா. பாவம் வேர்த்து வடியறார் மாமா” என்றபடி நடந்தார் ராவ்ஜி.

 இன்னும் ஐந்து நிமிடத்தில் திரும்பி வந்து பிரச்சனை முடிந்ததாகத் தீர்வைச் சொல்லி சுபம் போட வேண்டும். திவசத்தில் எதுக்கு சுபம். நன்றி. ஏதோ ஒண்ணு. என்ன செய்யலாம்? 

ராவ்ஜியின் மூளை அலாதி சுறுசுறுப்பில் யோசித்தது. மாதவையா சிறுகதையில் சாஸ்தா ப்ரீதிக்கு சாப்பிடப் போனவர் தன் மேல் சாமி வந்ததாக ஆடி அடங்கி வந்திருந்தவர்களுக்கு ஆகாரமும் தட்சிணையும் பாலடை பிரதமனும் கிடைக்க வழி செய்த மாதிரி அகல்யாவை ஆவியாக தன்மேல் வருவிக்கலாமா? வருவாளா அகல்யா?

சமையல்கட்டுக்குள் நுழைந்தபோது மூன்று சமையல்காரர்களும் திருதிருவென்று விழித்தபடி நின்றதைக் கண்டார்.

”மிளகாய் போட்டீங்களா எதுலேயாவது?”

அவர் கேட்க அவசரமாக இல்லை என்று மறுத்தாலும் குரலில் தப்பு செய்த போதம் தெரிந்தது.

அந்த வாழைக்காய் பொரியலை எடு. ஹோட்டல்காரராக கேட்டார். காய் வரும்போதே வற்றல் மிளகாய் மிடுக்கோடு வந்தது. கையில் அதை வாங்கும்போது ஒரு வினாடி நிலநடுக்கம் வந்ததுபோல் திலீப் ராவ்ஜி காலடியில் பூமி அதிர்ந்து ஆடியது. சமையல்காரர்கள் சுவரையும் கதவையும் அவசரமாகப் பிடித்துக்கொண்டு விழாமல் நின்றார்கள்.

யாரோ சின்னப் பெண்ணோ பையனோ ‘அப்பா அப்பா’ என்று எங்கேயோ யாரையோ தேசலாக அழைப்பது ரேடியோவில் முள் நகர்த்திப் போகாத ஏதோ தூரத்து ஸ்டேஷன் ஒலிபரப்பு மாதிரி கேட்டது. ஏசியிலிருந்து வந்த சத்தமா என அபத்தமாக யோசித்துக் கைவிட்டார் திலீப் ராவ்ஜி.

ராவ்ஜி பாத்திரத்தோடு பொரியலைச் சற்றே முகர்ந்து பார்த்தார். அது கமகமவென்று மிளகு அரைத்துக் கலந்த தீர்க்கமான வாடை  வீசியது.

“நான் என்ன சொல்ல வரேன்னா” கனபாடிகள் குரல் பதுங்கி ஒலித்ததை அவர் கேட்டபடி ஹாலுக்கு வந்தார். “எனக்கு ஜலதோஷம். மிளகை அடையாளம் காணாம வத்த மிளகாயா வாடை பிடிச்சிருக்கலாம். ஆசாரஹீனம் வரக்கூடாதுன்னு தான் மெனக்கெடறேன். தப்பா ஏதாவது சொல்லியிருந்தா அது ஆர்வக் கோளாறாலே வந்ததா இருக்கும். ஷமிக்கணும் பெரியவா, சின்னவா எல்லோரும்”.

அவர் எழுந்து நின்று தொடர்ந்து கும்பிடு போட்டபடி இருந்தார்.

அந்தத் திவசச் சாப்பாடு சுவையும் மிளகு வாசனையுமாக சிறப்பாக அமைந்து போனது.

சாப்பிட்டு, தட்சணையாகப் பெற்ற பணம், வேஷ்டி, துண்டு, பாத்திரங்களைப் பத்திரமாக எடுத்துக்கொண்டு கனபாடிகளும் கோஷ்டியினரும், கை நிறைய காசு வாங்கிய சமையல்காரர்களும் திரும்பிப் போக பத்து நிமிஷம் உட்கார்ந்த படியே கண்மூடி ஓய்வெடுத்த பின் அனந்தனும் கிளம்பினான்.

“இன்னும் ஒருத்தர் வயிறு நிறையச் சாப்பிடலாம். சாப்பாடு மிஞ்சி இருக்கு” என்றபடி திலீப் ராவ்ஜியைப் பார்த்தான் அவன். 

“நீ போய்க்கோ. இன்னும் பத்து நிமிஷத்துலே யாராவது வந்து நின்னுடுவா. எடுத்து போட்டுடறேன்”

அவன் ”சரிப்பா, கதவை ஜாக்கிரதையா அடச்சு வச்சுக்குங்கோ’ என்றபடி கிளம்பும் போது பொள்ளாச்சி மளிகை ஸ்டோர்   பையன் சைக்கிளில் வந்து இறங்கினான்.

”என்னப்பா, மளிகை சாமானுக்கு  பணம் பேங்க் கணக்குலே போட்டாச்சே”

”அது இல்லே சார், சிட்டைப்படி கொடுக்க வேண்டிய பொருள்லே ஒண்ணு கொடுக்க விட்டுப் போச்சு. முதலாளி ஏசினார். சார் வீட்டுலே படையல். ஓடிப்போய் கொடுத்துட்டு வான்னார். இந்தாங்க சார்”.

அவன் ஒரு பெரிய பாலிதீன் பாக்கெட் மிளகை திலீப் ராவ்ஜியிடம் கொடுத்து விட்டுப் போனான்.

கதவை வெறுமனே சாத்திவிட்டு திலீப் ராவ்ஜி உள்ளே வர வாசலில் இருந்து   கையகலம் கதவு திறந்து குரல் ஒன்று ஒலித்தது.

”இப்போ என்ன, கடுகு தர விட்டுட்டியா”?

திலீப் ராவ்ஜி   கேட்டுக்கொண்டே பின்னால் திரும்பினார்.

குரல் தயங்கித் தயங்கி மறுபடி ஒலித்தது.

”நான் பரமேஸ்வரன் வந்திருக்கேன். பசிக்கறது”

’எந்தப் பரமேஸ்வரன்”? திலீப் ராவ்ஜி கேட்டார்.

”உங்க அப்பாடா, திலீப்”.  

(வளரும்)

Series Navigation<< மிளகு – அத்தியாயம் 6மிளகு: அத்தியாயம் எட்டு – 1999: லண்டன் >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.