மிளகு அத்தியாயம் எழுபத்து நான்கு

1606 கெலடி

சித்திரம் : அருண்

பில்கி குறுநில மன்னர் திம்மராஜு பயணம் போவதை அவ்வளவாக விரும்பாதவர். கையிலே ஆயிரம் வேலை வந்து உக்கார்ந்திருக்கு கால்லே சக்கரத்தை மாட்டிக்கிட்டு ஊர் சுற்றக் கிளம்பிட்டா எப்போ முடிக்கறது?

 அவரானால் இப்போது இந்த கார்த்திகை மாதம் பிறந்ததும் சுறுசுறுப்பாக எல்லா திசையிலும்  பயணம் போய்க் கொண்டிருக்கிறார். ஒற்றை சாரட் போதவில்லை. குதிரைகள் களைப்படைந்து விடுவதால் இரண்டு நாட்களுக்கு மேல் அவற்றை மாற்றி வேறு ஜதைகளைப் பூட்ட வேண்டியுள்ளது. 

சாலைகள் விஜயநகர பராமரிப்பும், சிறு மாநில பராமரிப்பும் சரிவர நடத்த வேண்டிய பணமின்றி குண்டும் குழியுமாக வண்டியின் அச்சைக் கடகடக்க வைத்தோ, இன்னும் மோசம், அச்சு முறிய வைப்பதால் சாரட்டையும் மூன்று நாளுக்கு ஒருதடவை மாற்ற வேண்டியிருக்கிறது. 

இந்தத் தொல்லைக்குத்தான் உச்சிப் பிள்ளையாராக எங்கேயும் போகாமல் இருக்கப்பட்ட இடத்தில் செய்யவேண்டிய வேலையைப் பார்த்திருப்பார் அவர். ஆனால் இப்போது கிளம்பித்தான் ஆக வேண்டிய சூழ்நிலை. 

எல்லாம் வைத்தியர் காரணமாகத்தான்.  ஜெருஸுப்பா மாநில அரசு வைத்தியர் பைத்தியநாத் ஜெருஸுப்பா அருகே அமைந்த உள்ளால் பிரதேசத்தின் மகாராணி அப்பக்கா, பட்கல் அரசர், பில்கி மாநில அரசர் திம்மராஜு, பர்கூர் ராஜா, அங்கோலா ராஜமாதா, பைந்தூர் முக்ய பிரதானி இப்படி ராஜ வம்ச   அரசியல் பிரபலங்களுக்கு எல்லாம் ஆஸ்தான வைத்தியர்.  உத்தர கன்னட பிரதேசத்தின் மருத்துவர்களில் அதிமுக்கியமானவராகக் குறிப்பிடப்படுகிறவர் அவர்.

‘மற்றவர்கள் இரண்டு வாரத்தில் குணப்படுத்தினால் பைத்யநாத வைத்தியர் வெறும் பதினாலு நாளில் குணப்படுத்துவார்’ என்று கேலடி அரசர் வெங்கடப்ப நாயக்கர் கூட அரசவை கூட்டத்தில் கண்சிமிட்டியபடி குறிப்பிட்டதாக செய்தி. 

வைத்தியர் சுய ப்ரக்ஞையோடு எப்போதும் வைத்தியம் செய்யும்போது யாருக்கும் எதுவும் தாறுமாறாகப் போகாது. ஆருயிர் மனைவி மிங்கு இறந்தபிறகு வைத்தியர் துயரத்தைத் தாங்க முடியாமல் சதா குமைகிறார். 

அவருடை திடமான மன-நினைவு அமைப்பு ஒரு பக்கத்தில் அந்த இழப்பை சுமந்து பழகிக் கொள்ள அவரைத் தயார்ப்படுத்தியது. இன்னொரு பக்கம், ராணி சென்னபைரதேவி மேல் அடங்காத கோபம் வளர்த்துக் கொண்டிருந்தது. 

அடுத்த பக்கம் இப்படி- சென்னபைரதேவி மகாராணி இல்லாவிட்டால் நான் ஏது எனக்குக் கிடைத்த பேர் ஏது, மிங்கு இறந்ததற்கு மறைமுகமாகக் கூட மிளகு ராணி காரணம் இல்லை, இப்போது ரத்த அழுத்தமும், ஒற்றைத் தலைவலியும், குடல் புண்ணுமாக அநாதையாக ஒவ்வொரு நாளும் கல்லறையை நோக்கி ஓர் அடி எடுத்து வைத்துக் கொண்டிருக்கிறாள் பாவம். 

வைத்தியர் நேமிநாதனுக்கு ஆதரவுக் குரல் கொடுத்தது முதல் நிலை குலைந்து போயிருக்கிறாள். எல்லாவற்றுக்கும் யார் காரணம்? இதை வைத்தியரின் உள்மனது அடிக்கடி சிந்திக்கிறது. 

உள் மனதின் இன்னொரு பக்கம்  வைத்தியனுக்கும் வாத்தியானுக்கும் ஆட்டக்காரனுக்கும் மல்லனுக்கும், சித்திரக்காரனுக்கும் பாட்டுக்காரிக்கும் அரசியல் வேணுமா என்று விரிவாக அலசிக் கொண்டிருக்கிறது. 

இப்படி ஏகப்பட்ட பக்கத்தில் வைத்தியரின் மனம் மாறி மாறி சஞ்சரிப்பதால் அவருடைய சுயபிரக்ஞை அவ்வப்போது தவறிக் கொண்டிருக்கிறது. 

விளைவு போனவாரம் பில்கி அரசர் திம்மராஜுவுக்கு ஏற்பட்டது. வயிறு உப்புசம் பாரித்து திம்மென்று ஊதிப் போனது திம்மராஜு காருவுக்கு. 

பைத்யநாத் வைத்யுதுனி பிலவு. 

அழைத்து வந்தார்கள். வந்த சாயந்திரம் மகாராஜா உடலை சீராக பரிசோதித்து நாடி பார்த்து நாசியில் மூச்சு வந்து திரும்பும் நிலை எல்லாம் மனதிலாக்கினார் வைத்தியர். மேல் வயிற்றில் புரட்ட தைலம், சாப்பாட்டுக்கு முன் ஒரு மடக்கு குடிக்க வேண்டிய கஷாயம், சாப்பாட்டுக்கு அப்புறம் விழுங்க வேண்டிய குளிகை என்று கிரமமாகத் தயாரித்தார். 

இதெல்லாம் வைத்தியர்கள் கையோடு கொண்டு வந்து தேவைக்கு ஏற்றது போல் விநியோகிக்கும் சராசரி மருந்துகள். ஆனால் ராஜாவுக்கு மதுமேகம் அதிகமாகி அந்த நீரிழிவால் ரத்தத்தில் சர்க்கரைச் சத்து அளவுக்கு மீற, அவருக்காக மருந்துகளில் மூலப்பொருள் சேர்மான விகிதங்களை மாற்றினார் வைத்தியர். 

அதுவும் சரிதான். ஆனால் அப்புறம்? மருந்து உண்டாக்கும்போது அவரே கொண்டுவந்த சிறு குமுட்டி அடுப்பில் விறகுக் கரி கொளுத்தி எதையோ காய்ச்சும்போது ரெண்டு தடவை மிங்கு அடி மிங்கு என்று மனசின் ஆழத்திலிருந்து குரல் எடுத்து அழைத்ததை பக்கத்தில் இருந்தவர்கள் எல்லாரும் அரண்மனை சமையல்கட்டில் கேட்டார்கள். 

பரபரவென்று அடுப்பை வெறித்துக்கொண்டு பைத்யநாத வைத்தியர் அடுத்து பில்கி மகாராஜாவுக்குத் தயாரித்துக் கொடுத்த களிம்பை உடம்பில் பூசினால் பிசுபிசுவென்று ஒட்டிக்கொள்கிறது. கஷாயத்தை முழுங்கினால் குமட்டிக்கொண்டு வருகிறது. குளிகை வாயில் போட்டால் கரையாமல் அப்படியே கசந்து வழிகிறது. 

வேறொன்றுமில்லை. தடவ வேண்டியதைக் குடிக்கவும் குடிக்க வேண்டியதைத் தடவவும் குளிகையை அடுப்பில் வறுத்தும் ஏதோ செய்துகொண்டு மிங்கு நினைப்பில் மனம் தடுமாறிப் போன வைத்தியரைப் பார்த்து பில்கி அரசர் திம்மராஜுவுக்கே துயரமாகிப் போனது. 

ஆனால் துயரம் வயிற்று உப்புசத்தை சரிபண்ணிப் போடாதே. 

வேறே சிறந்த வைத்தியரைத் தேடி நாலு திசையிலும் அலைந்து கொண்டிருக்கிறார் பில்கி அரசர் திம்மராஜு. அவர் பார்க்கப் போன வைத்தியர்கள் எல்லாம் தெரிந்த ஆனால் அனுபவம் போதாதவர்களாகவோ, அரைகுறை வைத்திய அனுபவசாலிகளாகவோ அமைந்து போகிறார்கள். அனுபவமும் அறிவும் மிகுந்தவர் என்றால் கைராசி துளியும் இல்லாதவராக இருக்கிறார்கள்.

உடுப்பியில் ஐரோப்பிய மருத்துவர் புதுசாக வந்து இறங்கியிருக்கிறார். பெயர் விளங்காத மருந்து ஏதேதோ கொடுத்து ஜலதோஷத்திலிருந்து,    லிங்கம் சிதைக்கும் பொம்பளை சீக்கு வரை குணமாக்கி விடுகிறார் என்று கேள்வி. 

அவர் கூட்டமாக வியாதிஸ்தர்கள் வந்தாலும் எல்லோருக்கும் மருத்துவ சிகிச்சை தருவதில்லையாம். வருகிறவரின் நிதி நிலைமை, உடம்பு ஸ்திதி, உத்தியோக ஸ்திதி என்று பார்த்துத் தேர்ந்தெடுத்து சிகிச்சை அளிக்கிறாராம். 

திம்மராஜு வயிற்று உப்புசத்தோடு அவரிடம் போனால் பார்க்க மாட்டேன் என்று சொல்லிவிட்டால் பில்கி அரசருக்கும் பில்கி தேசத்துக்குமே பெரிய அவமானம் ஆகிவிடும். 

இன்னொன்று வயிற்றில் வாயுவோடு அரண்மனையில் உட்கார்ந்து அபானவாயு விட்டுக்கொண்டு நாட்டு மருந்து தின்பது வேறு. ஐரோப்பிய மருத்துவர் முன்னால் பர்ர்ர் என்று ஸ்வரம் பாடிக்கொண்டு உட்கார்ந்திருப்பது வேறு மாதிரி. 

அதனால் ஐரோப்பிய மருத்துவரை இப்போதைக்கு தவிர்த்து விட்டார் திம்மராஜு. கேலடியில் ஒரு இஸ்லாமிய மவுல்வி யுனானி மருத்துவம் சிறப்பாகப் பார்ப்பதாகக் கேட்டார் அவர். என்ன, எல்லோரும் இடமிருந்து வலம் எழுதினால், இவர் வலமிருந்து இடம் எழுதுகிறாராம். அவருக்கு அவரே சிகிச்சை கொடுத்துக்கொண்டால் அந்த சுகவீனம் சீக்கிரம் குணமாகிவிடலாம். 

உப்புசத்துக்கு எப்படி எழுதினால் என்ன, மருந்து கொடுத்தால் சரியாக வேணும். அவ்வளவுதான். 

ஆக பில்கி மகாராஜா திம்மராஜுவின் வயிறு பிரஸ்தாபிக்க முழு உடலும் மனதும் ஆமோதிக்க, கேலடிக்கு பயணம் மேற்கொண்டார் அவர். 

இவ்வளவு தூரம் வந்துவிட்டு பிரியமான மாமனார் வெங்கடப்ப நாயக்கரைப் பார்க்காமல் நல்லாயிருக்குமா?  வருடக் கணக்கான மாப்பிள்ளை மாமனார் உறவு அது. 

அதான் ஒழுக்கமா வந்து சேர்ந்திட்டேன் மாமா.  திம்மராஜு கூறினார்.

முழுக்க கேட்டு பர்ர்ர் என்று முழங்கிச் சிரித்தார் வெங்கடப்பர். 

மாப்ளே குசு விஷயமாவா  பில்கியிலே இருந்து லொண்டா லொண்டான்னு  கேலடி வருவீர்? சொல்றீர். நம்பிட்டேன் என்றார் ஆர்ப்பாட்டமாக கேலடி ராஜா திம்மராஜு முதுகில் தட்டியபடி. 

குனிந்து அவர் காதில் கேட்டார் – எவ்வளவு பேரை அனுப்ப உத்தேசம்? 

திம்மராஜு உரக்கச் சிரித்தார். மாமனாரே உமக்கு காது அங்கே இங்கே எங்கேயும் இருக்குது. அதுவும் இருநூறு கல் தொலைவிலே நான் பிலகியிலே இருந்து எனக்கு நானே முணுமுணுத்துக்கிட்டா இங்கே கேலடியிலே மாமனார் காதுலே   வந்து உக்கார்ந்துடுச்சு போங்க என்றார் வெங்கடப்ப நாயக்கர் கையைப் பிடித்தபடி. 

சரி வந்தேன், பார்த்தேன், நான் புறப்படட்டா? மாமனாருக்கு ஏகத்துக்கு சோலி இருக்கும். நடுவிலே நான் ஒருத்தன் என்னத்துக்கு சும்மா தண்டத்துக்கு வாயு பிரிஞ்சுக்கிட்டு இங்கே சுத்திக்கிட்டு?

நீரா சும்மா இருப்பீர்? இங்கே இருந்தே நாலு திசையும் காரியம் நடத்த வைப்பீர். அதுலே ஒண்ணுதானே ஜெரஸுப்பா விஷயம்? நேமிநாதன் லிகிதம் அனுப்பியிருக்கானா? 

வராமலா மாமனாரே? நாளை மறுநாள் நல்ல நாள் அப்படீன்னு ஜோசியர்கள் ஒரே மாதிரி சொல்றதாலே அன்னிக்கு மிர்ஜான் கோட்டை முற்றுகையை ஆரம்பிக்கறானாம். ஆள் அம்புக்கு என்னடா செய்வேன்னு லிகிதம் அனுப்பிச்சா, லொங்கு லொங்குன்னு பதில் லிகிதத்தை தூக்கிட்டு ஒற்றன் எவனாவது வருவான் இல்லியா? இப்போ நேமியே ஓடி வந்துட்டான். 

அவர் சிரிப்பு நீண்டது. 

லிஸ்பன் பணக்காரங்க எல்லாம் ஒண்ணு சேர்ந்து வாஸ்கோ ட காமாவுக்கு நூறு வருஷம் முந்தி பண உதவி செஞ்சமாதிரி இவனுக்கு உதவறதா சொல்லியிருக்காங்களாம். 

அது சரிப்பா அங்கே இருந்து இவன் கேட்டதும் வந்து சேர்ந்துடுமா என்ன? ஒரு மாசமாவது ஆகுமே ஓலைக்கு பதிலெழுத. கேலடி வெங்கடப்பர் வெற்றிலைக்காக அடைப்பக்காரனிடம் கை நீட்டியபடி சொன்னார்.

அப்போ தான் அவனோட வைப்பு மிட்டாய்க்காரி திம்முனு இருப்பாளே அவ இவனுக்கு நிதி உதவி செஞ்சு.  ஓரமாக எச்சிலை துப்ப இடம் பார்த்தபடி சொன்னார் பில்கி திம்மராஜு. வெங்கடப்பர் யாரங்கே என்று குரல்விட, வெற்றிலைத் தட்டும், படிக்கமும், சீவல், புகையிலையுமாக அடைப்பக்காரன் ஒருத்தன் உள்ளே இருந்து ஓடி வந்தான். இவன் மேலே துப்பு மாப்ளே என்றார் வெங்கடப்பர். வேண்டாம் மாம முழுங்கிட்டேன் என்றார் பில்கி திம்மராஜு. உப்புசம் ஏன் வராதுன்னேன். சளியை துப்பாம எப்பவும் முழுங்கக் கூடாது ஞாபகம் வச்சுக்குங்க என்று மருத்துவப் பாடம் எடுத்தார் வெங்கடப்பர்.

வேணாம் மாப்ளே அதை பேச ஆரம்பிச்சா எச்சி வடிய ஆரம்பிச்சுடும் எனக்கே. என்ன சித்தினி ஜாதி பொம்பளைடா பத்மினி கொஞ்சம் கலப்பு தோள் உருண்டு. வேணாம் மாப்ளே  என்றார் கேலடி அதிபதி.

அவ இவனுக்கு இப்போ நிதி உதவி செஞ்சு அப்புறமா லிஸ்பன் காரன் கிட்டே வாங்கிக்கறதா ஏற்பாடு இருக்கும்.  சொல்ல வந்ததைச் சொல்லி நிறுத்தினார் பில்கி அரசர்.

இருக்கும் இருக்கும், வாப்பா பசியாறிக்கிட்டே பேசலாம். குழிப்பணியாரம் போடச் சொல்லியிருந்தேன் போட்டு காரமா மிளகு அரைச்சுவிட்ட தேங்காய்த் துவையல் வைக்கச் சொல்லியிருக்கேன். 

அவர் விடாப்பிடியாக பில்கி அரசர் திம்மராஜுவைக் கையைப்பிடித்து இழுத்தபடி மண்டபத்தில் நுழைந்தார்.

அவசர அழைப்பு என்றாலும் பசியாற கேலடி அதிபர் பரிமாறி உபசரித்த உணவு சுவையும் புதியதும் சூடு பறக்கச் சமைத்து இறக்கியதுமாக இருந்தது. இட்டலியும் கறிக்குழம்பும் ஒன்றை ஒன்று சுவையில் விஞ்சி இருக்க, திம்மராஜு மெதுவாக மென்றபடி மாமனாருக்கு எழுதின லிகிதத்திலே வேறே ஏதாவது சொல்லியிருக்கானா பிள்ளையாண்டான் என்று கேட்டார்.

 உம்ம மனசுக்குள்ளே குறளி தடதடன்னு ஓடிட்டு இருக்கும் மாப்பிள்ளே என்றார் வெங்கடப்ப நாயக்கர். அதைத்தான் நினைச்சுக்கிட்டிருக்கேன். 

எதைப் பற்றின்னு தெரிஞ்சுக்கலாமா மாமனாரே? 

ஆவலோடு ஓரக்கண்ணால் வெங்கடப்பரை நோக்கியபடி கறிக் குழம்பை தோசையில் புரட்டி வாயில் இட்டுக்கொண்டார் திம்மராஜு.  

அது ஒண்ணும் பெரிசா இல்லே, எவ்வளவு பேர் குறைந்த பட்சம் வேணும், என்ன மாதிரி ஆட்கள் இதை அவன் சார்பிலே என்னையே தேர்ந்தெடுக்கச் சொல்லியிருக்கான். இதென்ன சந்தையிலே போய் பிஞ்சு வெண்டிக்காய் வாங்கற சமாசாரமா? அதுவும் அடுத்த வீட்டுக்காரனுக்கு வாங்கித் தர்றணும்

பில்கி திம்மராஜு புன்முறுவல் பூத்தார். 

உண்டு முடித்து எழுந்த போது இன்னும் செய்ய வேண்டிய வழிமுறை பற்றிப் பேசவே இல்லையே என்று திம்மராஜுவுக்கு மனதில் பட, அவர் வெங்கடப்ப நாயக்கருக்கு முன்னால் போஜன சாலை முகப்பிற்கு நடந்து அமர்ந்தார். 

போயிடாதீங்க மாப்பிள்ளை, இனிப்பு கொஞ்சம் மெல்ல எடுத்துவரச் சொன்னேன்.

கேலடி பேரரசர் வெங்கடப்ப நாயக்கர் கடைவாயில் வடிந்த எச்சிலை அவசரமாகத் துடைத்தபடி, ஒக்க மோதிசூரு லட்டு தீஸுகுரா என்று யாருக்கோ கட்டளையிட்டார். பில்கி அரசர் திம்மராஜு மனதுக்குள் ஆவலை மடித்து வைத்தார்.

இனிப்பு எப்பவும் கடைசியிலே தான் சாப்பிடுவான் வெள்ளைக்காரன். அப்போ தான் அளவுக்கு மேலே தின்னாம அளவா தின்னலாம். பாரு ரெண்டு பேருக்கும் மதுமேகம் இருக்கு. ஒரு லட்டு தான் எடுத்து வரச் சொன்னேன்.

வெள்ளித் தட்டில் கொஞ்சம் பெரிய மோதிசூர்லட்டு உருண்டை ஒன்று முத்து முத்தாக பூந்தி புத்தம் புதியதாக உருட்டிப் பிடித்து சுடச்சுட வந்தது. 

அதுவும் சரிதான் மாமனாரே. ஆளுக்கு பாதி உதிர்த்து தின்னலாம்.

பாதியா? சொன்னா கேளுங்க மாப்ளே. ஏற்கனவே உப்புசம் கண்ட வயிறு. சரிக்கணும். கட்டுப்பாடா கால்வாசி எடுத்துக்கும். நான் மீதியை வச்சுக்கறேன். நாளைக்கே வேறே எதாவது மொகலாய் ஹல்வா கிடைச்சா அப்போ நானே வந்து பாதியை உமக்கு ஊட்டி விடச் சொல்றேன். மிட்டாய்க்காரி மாட்டேன்னு சொல்வாளா என்ன?

அப்ப கால்வாசிதானா மாமனாரே. உங்க பங்கு லட்டுலே பதிச்சிருக்கிற நாலு முந்திரிப்பருப்பை அதோடு சேர்த்து எனக்கு சாப்பிட கொடுங்களேன். மாமனார் பெயர் சொல்லி சாப்பிடுவேனில்லே.

சரி எடுத்துக்கோ. நீ கேட்டு மாட்டேன்னு சொல்லியிருக்கேனா எப்பவாவது? லட்டு பங்கு போடப்பட்டது. ஜெருஸுப்பாவின் எதிர்காலம் தீர்மானிக்கப்பட்டது.

வெத்தலை போட்டு சுதி ஏத்திக்கிட்டு போகலாம் என்று நாயக்கர் யாரையோ வெற்றிலைச் செல்லத்தைக் கொண்டுவரச் சொன்னார். 

நீர் வெத்தலெ போடுவீரா? திம்மராஜுவை ஒரு உபசாரத்துக்குக் கேட்டார். 

இல்லே மாமனாரே, நீங்க எடுத்துக்குங்க.

திம்மராஜுவின் எதிரே அமர்ந்து தாம்பூலம் தரிக்கலானார் வெங்கடப்பநாயக்கர். 

சரி, மாமனாரே. எல்லாம் சரிதான். இப்போ இதிலே இடிக்குற பெரிய சமாசாரம் சென்னபைரதேவியம்மா இன்னும் சக்தியா அரசாட்சி செஞ்சுக்கிட்டிருக்காங்க. வயசைச் சொல்லி, அதாவது அறுபத்தைந்து வயசிலே பதவி இறங்கணும்னு காரணம் சொன்னா. 

திம்மராஜு பாதி வாக்கியத்தில் நிறுத்தினார். 

நல்லாத்தான் சொல்றே போ. எனக்கு அறுபத்தொன்பது வயசு ஆகிடுத்தேன்னு கேட்கறியா? 

அது நான் சொல்லலே மாமனாரே. நீங்க இன்னும் நூறு வருஷம் கேலடி மகா அதிபதியாக இப்போது போல் எப்போதும் துருவ நட்சத்திரமா ஒளிவீசிக்கிட்டிருக்கணும் என்று இருகை உயர்த்தி வணங்கினார் திம்மராஜு. 

நீ ஒண்ணுப்பா இன்னும் நூறு வருஷம் இருந்தா கடல் ஆமை மாதிரி மெதுவா அசைஞ்சுதான் போய்க்கிட்டிருக்கணும். மக்கள் ரெண்டு பேரும் சேர்ந்து பதவி கையில் வாங்கற நாளுக்கு காத்துக்கிட்டிருக்கேன். 

அவர் சொல்லும்போது வெங்கடப்பாவுக்கும் மிளகு ராணிக்கும் என்ன வித்தியாசம், வெங்கடப்பா மகன்களுக்கும் நேமிநாதனுக்கும் என்ன வித்தியாசம் என்று திம்மராஜு நினைத்துப் பார்த்தார். 

அது வேறே இதுவேறே திம்மா. திம்மராஜு மனதில் ஓடுவதை சரியாக நாடி பிடித்தவராக பேச ஆரம்பித்தார் வெங்கடப்பா. 

அது என்ன வித்தியாசம்னா அங்கே பொம்பளை தேசம் இங்கே ஆம்பளை ராஜ்ஜியம். உனக்குத் தெரியாததில்லே. ஆம்பளை ராஜ்ஜியத்திலே இப்படி வந்து போய் பேசி பேசி இன்னும் கொஞ்சம் பேசி வெளியேறி முற்றுகையிட்டு மறுபடி பேச வகை இருக்கான்னு பார்த்துக்கிட்டு நின்னு மெல்ல சத்தமில்லாத யுத்தம் வராது. அடுத்த நாட்டுக்கு கைமாற நூறு பேர் வேணும். கொடுங்க. காசு தர்றேன் ரெண்டு வாரத்திலே வெளிநாட்டில் இருந்து படை வரும். எப்படியும் வந்துவிடும். வந்ததும் உங்க ஆள்படைகளை திருப்பி அனுப்பிடறேன். இப்படி எந்த போரும் நடந்ததில்லே. ஒரு சின்ன நிலப்பரப்புக்கு உரிமை போராட்டம்னாலும் ஆயிரம் ஊரை, கிராமத்தை, வயல்வெளியை அடக்கிய பூமிக்கு உரிமை கேட்கறதாக இருந்தாலும் சிரத்தையும் வேகமும், செய் அல்லது செத்து மடின்னு ஆவேசமுமாக சிப்பாய் எல்லாரும் ஒண்ணு சேர்ந்து ஒற்றைப் படையாக யுத்தம் செய்யணும். 

ஒவ்வொருத்தனும் பேருக்கு கத்தி எடுத்து ரெண்டு பேரை சமாளித்து ஓடி வர்றவனா இப்போதைக்கு நேமிநாதன் கேட்டதாலே கொடுக்கலாம். 

நல்லா சொல்லறே. நான் நினைச்சேன் நீ சொல்லிட்டே. 

இன்னொரு வெற்றிலையை காம்பு கிள்ளி மடித்து குல்கந்து தடவி வாயில் போட்டுவிட அடைப்பக்காரன் ஓடி வந்து ஓரமாக நின்றதை சுவாரசியமாகப் பார்த்துக் கொண்டே மாமனாரே வாயை இன்னும் திறக்கணும். அவன் விரலை கடிச்சுடப் போறீங்க என்றார் திம்மராஜு. 

வெத்திலை மடிச்சுத்தர ரெண்டு பொண்ணுங்க உண்டு இன்னிக்கு ரெண்டு பேரும் வரல்லேன்னு இவனை அனுப்பிட்டாங்க. ஏண்டா எலும்பா நீ இது தவிர என்ன பண்ணிட்டிருக்கே அரண்மனையிலே என்று அந்த எடுபிடியைக் கேட்டார் வெங்கடப்ப நாயக்கர். 

மீன் கழுவறது, கோழி இறைச்சிக்கு கார மிளகு விழுது புரட்டறது, குல்கந்து செய்து பீங்கான் பாத்திரத்திலே நிறைச்சு வைக்கறது எஜமானே என்றான். 

அது என்னடா கோழி சமைச்சு குல்கந்து கிண்டி ? 

அவன் அசட்டுச் சிரிப்போடு இன்னொரு வெற்றிலையை எடுத்தான். 

வேணாம்டா காலையிலே ரொம்ப சுதி ஏத்த வச்சுடுவே போல இருக்கே. சரி ஒண்ணே ஒண்ணு கொடுத்துட்டு ஓடிப் போ என்றார் 

அவன் நீட்டிய தட்டிலிருந்து குச்சி எடுத்துப் பல் குத்தியபடி சொன்னார் வெங்கடப்ப நாயக்கர் – ஜெரஸோப்பாவிலிருந்து நாங்க மிளகும் குடைமிளகாய், வெல்லமும் வாங்கறோம். யுத்தம் வந்தா அது முடியாது. அப்பக்கா கிட்டே வாங்கிக்க வேண்டியதுதான்

  உரத்த சிந்தனையாகச் சொன்னார் அவர். 

வெல்லம் நான் தரேன் மாமனாரே.  சல்லிசா கூடுதல் இனிப்பா பெரிய மண்டை மண்டையா தர்றேன். 

அது நல்லா இருக்காது மாப்ளே. அட நான் சொல்ல வந்தது உங்க பிரதேசத்து ஏற்றுமதிக்காக காய்ச்சி வச்சிருக்கறதிலே கை வைக்கறதா ஆயிடும். அப்புறமா பார்த்துக்கலாம் எல்லாத்தையும் ஒரே அடுப்பிலே ஏத்தி கிண்ட வேண்டாம். என்ன நான் சொல்றது என்றது கேலடி. சரிதான் என்று ஒத்துக்கொண்டது பில்கி.

அப்பக்கா மண்டை வெல்லத்தோடு அச்சு வெல்லமும் செய்ய ஆலோசனை கொடுத்திருக்காம். உள்ளல்லே பாதி பேர் வெல்லம் காய்ச்சி அச்சுலே வார்க்கற வேலைதானாம். 

இதை திம்மராஜுவிடம் புதுத் தகவலாகச் சொன்னார் வெங்கடப்பர். 

நாம் ரெண்டு பேரும் இப்படி ஜெர்ஸூப்பா விவகாரத்திலே தலையிட்டா அப்பக்காவுக்கும், அடுத்தடுத்து இருக்கப்பட்ட ராஜதானிகளுக்கும் அவங்க மேலேயும் நாம் படையெடுத்து வந்துடுவோம்னு நம்பிக்கைக்குறைவு வந்துடும் இல்லையா என்று நியாயமான கேள்வியைக் கேட்டார் திம்மராஜு. 

அதுக்குத்தான் மாப்ளே நம்மாளுங்களை முன்னாடி போய் உக்கிரமா சண்டை வலிக்காம, படைக்குப் பிந்து, பந்திக்கு முந்துன்னு சொல்றமாதிரி பின்னாலே இருந்து ஆள் கணக்கை அதிகரிச்சுக் காட்டலாம்னு யோசனை என்றார் நாயக்கர். 

எத்தனை பேர், என்ன தொகை, எத்தனை நாள் என்று சுருக்கமாகக் கேட்டார் வெங்கடப்ப நாயக்கர். 

இப்போதைக்கு பத்து பேர். 

நாயக்கர் சிரித்தார். பத்து பேரா? கபடி விளையாட குழு அனுப்பறியா? கபடி கபடி கபடின்னு பாடி மூச்சடக்கி தொட்டுட்டுத் திரும்பற விளையாட்டா என்ன இது? பெரிய யுத்தமா இருக்காது. வெத்துவேட்டு கலவரமாகவும் இருக்காது. ஆனாலும் ஆள் சேதம், காயம் எல்லாம் உண்டு. பத்து போதாது. ஆளுக்கு இருநூறு பேர் தயார் பண்ணி அனுப்பலாம். 

அப்படியா மாமா, நீங்க சொன்னா சரிதான் என்று அடக்கி வாசித்தார் திம்மராஜு. 

இதுலே ஒண்ணு பாரு, நீயும் இதுக்கு முந்தி யுத்தம் பார்த்தது இல்லே. நேமியும் தான். நான் ஒருத்தன் தான் நாற்பது வருஷம் முந்தி தலைக்கோட்டை யுத்தத்திலே விஜயநகரப் படையிலே ஒரு தளவாயாகப் போனவன். விஜயநகர பேரரசர் ராம ராயர் தலையை பீஜப்பூர் சுல்தான் அறுத்தபோது ஓரமா நின்னு பார்த்து நடுங்கினவன். அப்போ எனக்கு இருபத்தைந்து வயசு.

நாமளும் இப்போ போக வேண்டி வருமா மாமனாரே? 

கொஞ்சம் படபடப்பாக திம்மராஜு கேட்டதை ரசித்தபடி வெங்கடப்ப நாயக்கர் கூறினார் – போகணும்னு வந்தா போகலாம். இப்போதைக்கு ஆள்படை அனுப்பறது. நீ இருநூறு நான் ஒரு இருநூறு பேர். இவங்க கையிலே  வாள், சூரிக்கத்தி, அரிவாள் இதெல்லாம் அந்த புள்ளையாண்டன் தான் தரணும்.  துப்பாக்கியைத் தூக்கு, பீரங்கியிலே வெடிமருந்து அடைச்சுவை இப்படி வேலை ஏவமுடியாது இவன்களை. வயல்லே விவசாய வேலை பார்க்கறவங்க நாம் அனுப்பப் போறவங்க. துப்பாக்கி, பீரங்கி எல்லாம் அவன் கதையிலே கூட வராது.

தினத்துக்கு ரெண்டு வராகன், சோறு கறி என்று சேர்த்துக் கொண்டார் பில்கி. 

கறி எப்படிடா போடுவான். சமணனாச்சே என்றார் வெங்கடப்பா. சுத்த சைவ ஆகாரம் தான் தருவான். 

அவன் சைவமா இருக்கலாம், யுத்தம் ரத்தம் கொட்டற முழு அசைவ சமாசாரம் ஆச்சே மாமனாரே என்றார் திம்மராஜு. 

நாளைக்கு வேணும்கறானே பயபுள்ளே. அனுப்பி வைக்கவா என்று வெங்கடப்ப நாயக்கரை விசாரித்தபடி எழுந்து நின்றார் திம்மராஜு. 

அவன் கேட்டதும் கொடுத்து அனுப்ப இதென்ன வெல்ல மண்டை வியாபாரமா, திங்கள்கிழமை அனுப்பி வைச்சுக்கலாம். சரியா இருக்கும் என்றபடி விடை கொடுத்தார் வெங்கடப்பர். 

எது சரியாக இருக்கும் என்று திம்மராஜூவும் கேட்கவில்லை, வெங்கடப்ப நாயக்கரும் சொல்லவில்லை.

மிளகு: இரா முருகன் - நாவல்

மிளகு அத்தியாயம் எழுபத்திமூன்று மிளகு அத்தியாயம் எழுபத்தைந்து

Discover more from சொல்வனம் | இதழ் 366 | 10 மே 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.