மிளகு – அத்தியாயம் 88

சின்னச் சங்கரன் சத்தம் போட்டுப் பாடிக் கொண்டிருந்தார் – 

ப்ரம்மம் ஒகடெ, ப்ரம்மம் ஒகடெ. 

தெலுங்குப் பாட்டு. அன்னமாச்சார்யாவின் கீர்த்தனை. பௌளி ராகத்தில் அமைந்தது. 

சங்கரனுக்கு தெலுங்கு தெரியாது. பௌளி மட்டும் இல்லை. எந்த ராகத்திலும் பாடத் தெரியாது. இந்தப் பாட்டும் முதல் வரியைத் தவிரப் பாடத் தெரியாது. 

பாட்டை நிறுத்தி அப்பா அப்பா என்று கிரீச்சிடுகின்றார். மறுபடி பாடுகிறார்.

ப்ரம்மம் ஒகடெ, பரப்ரம்மம் ஒகடெ என்று திருப்பித் திருப்பி அவர் பாடிக் கொண்டிருந்ததற்கு அவர் காரணம் இல்லை. அப்பா அப்பா என்று அழைப்பதற்கும் தான். 

மறுபடி மறுபடி அவருக்கு வரும் கனவுக்கு அடுத்து மனம் இதைக் காட்சி விரிக்கின்றது. கூடவே ஒரே வாடை தட்டுப்படுகிறது. மூக்கைக் குத்தும் மிளகு வாடை அது.

அவருடைய மனதுக்குள் அல்லது புத்திக்குள், நீலச்சட்டை போட்டுக்கொண்டு, பொத்தான் இல்லாத, வயசானவர்கள் தலைவழியாகப் போட்டுக்கொள்ளும் சட்டை மாட்டிக் கொண்டு,யாரோ, ஒரு பத்து வயது அல்லது அதற்கும் கீழே வயதுள்ள பையன் அவரைப் பார்த்து சினேகிதமாகச் சிரிக்கிறான். அழுகிறான். அப்பா அப்பா என்று திரும்பத் திரும்பத் திரும்ப அழைக்கிறான். சங்கரன் அவனோடு பேச முற்படும்போது கனவு முடிந்து போகிறது. 

அவனுக்குக் கட்டுப்பட்டு சங்கரனும் அதே குரலிலும் தொனியிலும் அப்பா அப்பா என்று கூவுகிறார். 

அவனோ சின்னச் சங்கரனோ எவ்வளவு  அழைத்தாலும் யாரும் வருவதில்லை. யாரை எதிர்பார்த்துக் காத்திருக்க வேண்டும் என்று சங்கரனுக்குத் தெரியாது. படபடப்பும் மன அழுத்தமும் அதிகரிக்கும் பொழுது அது.

அது கூடப் பொறுத்துக் கொள்ளலாம் கனவு வந்து போனதும் சங்கரனால். எதையும் சாப்பிட, குடிக்க முடியாமல் எல்லா ஆகாரமும், பானமும் மிளகு வாசனை, மிளகு வாடை மட்டும் அடிப்பதாக அவர் நாசிக்குத் தெரிய வந்தது தான் நரக வாதனை.

அம்பலப்புழைக்கும் அங்கிருந்து மங்களூருக்கும் போய் வந்தபோது அந்தக் கனவு வரவில்லை. ஒன்றிரண்டு நாள் எல்லா வாடையும் சந்தோஷகரமாக நாசியில் பட்டது. 

இங்கே டில்லிக்குத் திரும்பி வந்ததும்,   விநோதமான நீலச்சட்டைப் பையன் வரும் கனவும் வந்தேன் வந்தேன் என்று திரும்ப வந்து சேர, சங்கரன் என்ன செய்யலாம் என்று செய்வதறியாது அலோபதி மருத்துவரைச் சென்றடைந்தார். 

டாக்டர் வெகுவாக ஆச்சரியப்பட்டார். இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் ஒரே ஓரொற்றை வாடையை மனதில் கற்பனை செய்துகொண்டு, மூக்கைத் துணியால் கட்டி ஆகாரம் கழிக்க அமர்ந்து ஒரு மனுஷர். அதுவும் ஓய்வு பெற்ற அமைச்சரகக் காரியதரிசி வாயிலும் மூக்கிலும் மறைத்த துணியோடு     இருந்தார் என்றால் அவருக்கு ஆச்சரியம் சொல்லி மாளவில்லை. 

சித்திரம் : அருண்

ஒரு சின்ன ப்ரொசீஜர், என்றால், அறுவை சிகிச்சை செய்து நாசியில் ஒரு எலும்பைச் சரிப்படுத்தினால், சாக்கடை முதல் பூக்கடை வரை எல்லா வாடையும் மூக்கை முட்டிக்கொண்டு வரிசையாக வந்து நிற்குமே.  

இந்த யோசனையை ரெண்டாவது அபிப்ராயமாக இன்னொரு மருத்துவரிடம் பெறுவதற்காக சங்கரன் போய்ச் சந்தித்தபோது மனோதத்துவ நிபுணரான – என்றாலும் அலோபதி டாக்டரும் கூட- மருத்துவர் நிதானமாக வெற்றிலை பாக்குத் தாம்பூலம் தரித்துக்கொண்டு  சொன்னார் – 

உங்க மூக்கை பழக்கப்படுத்தணும். நினைச்ச நேரத்திலே நினைச்ச வாடை இருக்கறதா அது மூளைக்குச் சொல்லணும். அவ்வளவு தான். இதுக்காக மூக்கையே கழற்றி ஆப்பரேஷன் பண்ணிட்டு தலைகீழா ஒட்டிண்டிருக்கணுமா? உங்க இஷ்டம். நான் சொல்றதை சொல்லிட்டேன். 

என்ன ஆனது அதற்கு அப்புறம் என்றால், அலோபதி வேண்டாம், ஆபரேஷன் வேண்டவே வேண்டாம் என்று முடிவு செய்து திரும்ப சங்கரன் வாயைக் கட்டி, நாசியைக் கட்டி அவ்வப்போது கொஞ்சம்போல் சாப்பிட்டு வர, எடை மிக மிகக் குறைந்து போனது. வேறொரு மூக்கு, தொண்டை, காது ஸ்பெஷலிஸ்ட் அலோபதி டாக்டரைப் போய்ப் பார்த்தார். ரதி போன்று பேரழகியான சினிமா நடிகைக்கு மூக்கைச் சற்றே நீட்டி வைத்துப் பிரபஞ்சப் பேரழகி ஆக்கியவராம் அவர்.

It is a muted version of congenital anosmia. I recommend a curative surgical procedure.

டாக்டர் அந்த குறைபாட்டையே தான் தான் உலகத்திலேயே முதலாகக் கண்டுபிடித்துப் பெயரும் இட்டது போன்ற பெருமையோடு வந்து போனார். 

சங்கரன் அத்தோடு நிறுத்தாமல் யாரோ ஆலோசனை சொல்ல, மூன்றாவதாக இன்னொரு டாக்டரை, அவர் ஆர்ய வைத்தியர், அணுகி அவருடைய கருத்தைப் பகிர்ந்து கொள்ளப் பணம் கொடுத்துக் காத்திருக்க மூளையில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டி வரும் என்றார் அந்த ஆர்யக்கூத்தர், என்றால், ஆர்ய வைத்தியர். 

செய்தால் எப்போதும் நல்ல வாடை எல்லாம் சுவாசிக்கலாம் என்றும் ஷரகரின் சத்ரசிகித்சைக் கோட்பாடுகள்படிச் சில ஆயிரம் வருடப் பழையகால முறையில் அந்த அறுவை சிகிச்சையை நடத்திக் கொடுக்க இருக்கும் ஆர்ய வைத்தியர்கள் ருத்ரப்ரயாகையில் ஒன்றிரண்டு பேர் தான் உண்டு என்றும் அவர்களைத் தேடிக் கண்டுபிடித்து அழைத்து வர அலோபதி சிகிச்சைச் செலவைவிட அதிகம் பிடிக்கும் என்றும் தெரிவித்திருந்தார். 

அவர் சிகிச்சை செய்துகொள்ளணுமா வேண்டாமா என்று  தீர்மானமாகச் சொல்லாததால் சங்கரன் அவரிடம் மறுபடி கேட்க, முகம் சிவக்க அவர் சொன்னது – 

சொல்ல வேண்டியதெல்லாம் சொல்லியாகி விட்டது. சொல்ல வேண்டாதவை அப்படியே இருக்கட்டும். வேறேதும் எதிர்பார்த்தால் ருத்ரப்ரயாகையில் யோகிகள் உண்டு. நக்னரான அவர்கள் சொல்லக் கூடும் என்றார். 

சங்கரன் திரும்பிப் போகும்போது, அலோபதி வைத்தியர் உதவக்கூடும் என்றார். அலோபதி டாக்டர் அறுவை சிகிச்சைக்கு மறுபடி யோசனை சொன்னார். 

அப்படியாக அலோபதி அறுவை சிகிச்சை நடத்தி சங்கரனின் நாசியைச் சரிபண்ணலாம் என்ற முடிவுக்கு மறுபடி வந்தாகி விட்டது. இந்த மாதிரி அறுவைசிகிச்சை நடத்த புது டில்லி லாஜ்பத் நகர் பகுதியில் பிரபலமான மருத்துவ மனையில் கௌரவ சர்ஜனாக இருக்கும் சுக்தேவ் சாமிநாதன் பெயர் பெற்றவர் என்று தெரிய வந்தது. அவர் மகப்பேறு மருத்துவரும் கூட.

அதென்ன பெயர் சுக்தேவ் சாமிநாதன் என்று விசாரிக்கத் தெரிய வந்த மேலதிகத் தகவல் இது – கடந்து போன தலைமுறையில் அதாவது 1940களில் மதறாஸில் இருந்து உத்தியோகம் தேடி வந்து ஆஸ்பத்திரி கிளார்க் ஆக வேலை கிடைத்து, நாளடைவில் சர்வீஸ் கமிஷன் பரீட்சை எழுதி பாஸ் பண்ணி சவுத் ப்ளாக்கில் லோயர் டிவிஷன் கிளார்க் ஆன சாமிநாதன் பக்கத்து சீட் அமர்ஜீத் கவுரைக் காதலித்து சீக்கிய மதத்துக்கு மாறி அவளைக் கல்யாணம் செய்து கொண்டு பெற்ற பிள்ளை சுக்தேவ் டாக்டரானாராம். 

எது எப்படியோ இருக்கட்டும், சுக்தேவ் அரை மணி நேரத்தில் சங்கரனின் நாசியைச் சரி பண்ணுவதாகச் சொல்லி ஆபரேஷன் தியேட்டரில் சங்கரனுக்கு அனஸ்தீசியா மயக்க மருந்து கொடுத்துப் படுக்க வைத்திருந்தார்கள். அவ்வேளையில்  சர்ஜன் ஆபரேஷனுக்காக உள்ளே காலடி எடுத்து வைக்க, மின்சாரம் நின்று போனதாம். 

சகுனம் சரியில்லை என்று வசந்தி கருத, அன்றைக்கு முழுக்க மின்சாரம் வராத தினமாகப் போய், ஜெனரேட்டரும் வேலை செய்யாமல், அறுவை சிகிச்சையை வேறொரு நாளுக்கு மாற்றி வைக்கத் தீர்மானமானது. 

அது போன வாரம் நடந்த சம்பவம். அன்று அனஸ்தீசியா ரொம்பவே பிடித்துப் போனது சங்கரனுக்கு. மயக்கத்தில் இருந்தபோது நாள் முழுக்க ரோஜாச் செடிகள் இரண்டு பக்கமும் அணிவகுத்த தோட்டத்து வழியில் அவற்றின் நறுமணத்தைத் தீர்க்கமாக முகர்ந்தபடி நடந்து போய்க் கொண்டே இருக்கும் காட்சி மனதை அமைதியாக வைத்திருந்ததாகச் சொன்னார் அந்த மயக்கம் நீங்கியதும்.

 தெரிசாவுக்கும் அவருக்கும் முப்பது வயது குறைவாக, அவர்கள் கைகோர்த்து, அந்தத் தோட்டத்தில் மல்லிகைக் கொடிகளின் பின்னே அணைத்து இதழ் சேர்த்து, குறுமணல் காது மடல்களில் ஒட்டக் காதல் புரிந்த அனுபவம் ரசமாக இருந்தாலும், சங்கரனின் குறி விரைத்திருந்ததாக வசந்தி சங்கரனிடம் ரகசியமாகச் சொன்னதோடு சரியான கேள்வியும் கேட்டாள் –

 பாவாடைப் பாப்பாத்தியோடு க்லோரொஃபார்ம் க்ரீடையா கனவெல்லாம்?  

ஒண்ணுமில்லே, ப்ளேன்லே போற கனவு. அதுலே முட்டிண்டு வந்தாலும் ஒண்ணுக்கு போகாம அடக்கிண்ட மாதிரி இருந்தது.

 மனசறிந்து பொய் சொன்னார் சங்கரன். அப்புறம் அன்பு மனைவியை எல்லா பிரியத்தோடும் கௌரவத்தோடும் நடத்தும் மோஸ்தரில் சொன்னது இது –

 உன் கண்ணுக்கு எல்லாம் பட்டுடறது. படாம இருந்தா நான் செக்ரட்டரியாக ரிடையர் ஆகியிருக்க முடியாது. சங்கரனுக்கு தீர்க்கமான முன்நோக்கு உண்டுன்னு ரெண்டு மத்திய அமைச்சர்கள் சொன்னாளே அந்த முன்நோக்கு எப்படி கிடைச்சது? என் வசந்தி கற்றுக் கொடுத்த யோகாசனத்தால் வந்த ஒண்ணாச்சே. 

வசந்தி கையைப் பிடித்துக் கொண்டு நாத்தழதழக்கச் சொன்னார் சங்கரன். 

முன்னோக்குன்னா என்ன வசந்தி கேட்டாள். 

தூரதிருஷ்டி ஃபோர்ஸைட். Foresight. 

அது உங்களுக்கு இருக்காமா? 

இல்லையா பின்னே? 

யார் சொன்னா உண்டுன்னு? 

ஒண்ணுக்கு ரெண்டா செண்ட்ரல் மினிஸ்டர்ஸ்.

 அங்கேயும் ஒண்ணுக்கா? வசந்தி அப்பாவியாக முகத்தை வைத்துக்கொண்டு கேட்டாள். 

வாயிலும் மூக்கிலும் சேர்த்துக் கட்டிய மெல்லிய துணி சர்ஜிகல் மாஸ்க் surgical mask அவிழ்ந்து தரையில் விழ, சங்கரன் ஓவென்று சிரித்தார். 

சங்கரன் கேட்டதெல்லாம் தினசரி ஒரு வேளையாவது அவருக்கு ஏதாவது ஒரு விதத்தில் உடம்பில் மயக்க மருந்து ஏற்றிவிட வேண்டும். அப்புறம் சங்கரனுக்கு எந்தக் கஷ்டமும் இருக்காது. யாருக்கும் எந்தக் கஷ்டமும் இருக்காது. 

ஆனால் என்ன செய்ய? சர்ஜன் அதெல்லாம் தர முடியாது என்று சொல்லிவிட்டார். ஆனால் லேசான மயக்கம் தரும் மாத்திரைகள் இரண்டு அட்டை கொடுத்து தினம் ஒண்ணு முழுங்குங்கோ. அதுக்கு மேலே கூடாது. ஹிண்டுலே ஆபிசுவரி வந்துடும் என்று எச்சரித்து விட்டுப் போனார். 

வாசலில் வசந்தி அவரைத் துரத்தி வந்து தாழ்ந்த குரலில் சொன்னாள் – என்ன டாக்டர் அவர் தான் கேட்கறார்னா நீங்க தூக்க மாத்திரை கொடுத்துட்டேளே. 

கவலையே படவேணாம். நான் கொடுத்தது வெறும் லிவ்-52 தான். அட்டையிலே வச்சு வந்தது. காலம்பற சங்கரன் சார் பிரச்சனை இல்லாமல் டாய்லெட்டுலே போய் உட்காரலாம் என்றபடி வசந்தியின் நல்மதிப்பில் நான்கைந்து படி மேலே ஏறி நின்று அந்தாண்டை நடந்து போனார்.

 வசந்திக்குக்கூட சங்கரனுக்கு நாசி ஆபரேஷன் செய்யக் காத்திருக்கிற நாட்களாக எல்லா நாளும் இருந்தால் நன்றாக இருக்குமே என்று தோன்றியது. 

சங்கரனுக்கு தூக்க மாத்திரையோ லிவ் 52ஓ கிடைக்க நிம்மதியாக உறங்குவார். பாவாடைப் பாப்பாத்தி அவரோடு கலப்பாளோ என்னமோ, விரைத்துக் கிடந்தாலும் படுக்கையை நனைக்க மாட்டார் சங்கரன். சாப்பாடு கட்டு எதுவும் மூக்கிலோ வாயிலோ இல்லாமல் கொஞ்சம் போல் உள்ளே போகும். ஆனால் இன்றைக்கு ஆபரேஷனுக்கு நாள் குறித்துவிட்டார்கள். 

காலை ஏழு மணிக்கே கரண்ட் நிற்பதற்கு முன் அறுவை சிகிச்சையை நடத்தினார்கள். சங்கரனின் மகள் பகவதி, அவருடைய மனைவி வசந்தி, அப்புறம் மைத்துனர் என்று மருத்துவமனை வருகையாளர் இருக்கைகளை நிறைத்துவிட்டிருந்தார்கள். சாரதா தெரிசா முன்னால் வந்து உட்கார்ந்திருந்தாள். ராத்திரி தூங்கவே இல்லேடி என்று வசந்தியிடம் சொன்னாள் அவள். இப்போ கொஞ்சம் கண்மூடித் தூங்கப் பாரேண்டி என்றாள் வசந்தி. வாடி போடி உறவு சக்களத்திகளுக்குப் பிடித்திருந்தது. 

மூக்கை அப்படியே சூர்ப்பனகைக்கு லட்சுமணன் அறுத்த மாதிரி அறுத்துடுவா. உள்ளே அழுக்கு, கல்லு இருந்தா எடுத்து க்ளீன் பண்ணி தச்சுப் போட்டுடுவா என்று தலைமை சர்ஜனாக சங்கரனின் மைத்துனர் பஞ்சாபகேசன் என்ற பஞ்சு அவுன்ஸ் கிளாஸில் அறிவு வழங்கிக் கொண்டிருந்தார் சகலருக்கும். 

ஒரு மணி நேரத்தில் ஆப்பரேஷன் முடிந்தாலும் அனஸ்தீசியா இன்னும் சக்தியாகச் செயல்பட்டதால் சங்கரன் நிம்மதியாக மயக்கத்தில் ஆழ்ந்திருந்தார். 

அவர் எழுந்தபோது ராத்திரி பனிரெண்டு மணி.  

வசந்தி என்று சாதாரணமாகக் கூப்பிடும் தொனியில் அழைத்தபடி எழுந்தார். 

வசந்தி, இது என்ன ஆஸ்பத்திரி என்று குரலில் படபடப்பு, பயம், வலி எதுவும் தட்டுப்படாமல் அவர் நடுராத்திரியில் சகஜமாகப் பேசியபோதே ஆபரேஷன் சக்சஸ் என்று வசந்திக்குப் புரிந்தது. 

இன்னொண்ணு தெரியுமா, ஒரு கனவு கண்டேன். கனவில் அப்பா அப்பா என்று அழைத்தபடி சுழலும் ஒரு கட்டிடத்தின் முன் நின்ற பையன் அப்பா வந்தாச்சு என்று சந்தோஷமாகக் கூவியபடி ஒரு முதியவரை அணைத்துக் கொள்கிறான். அவர் அச்சு அசலாக தெரிசாவின் ஓட்டல் பார்ட்னர் திலீப் ராவ்ஜி அப்பா பரமேஸ்வர அய்யர் போலவே இருந்தார். 

அதை ஒரு சாதாரண செய்தியாக வாங்கிக் கொண்டாள் வசந்தி. தன் கனவில் பரமன் என்ற பரமேச்வரன் திரும்பக் காணாமல் போனதாகவும், அவர் போனதுமே   கனவிலேயே மிளகுவாடை போய்விட்டதாகவும் சொன்னார். 

ராத்திரி பனிரெண்டு மணிக்கு காப்பி கேட்டார் சங்கரன். 

வாய்க்கட்டு, மூக்குக்கட்டு எதுவும் இல்லாமல் இன்ஸ்டெண்ட் காப்பி சாப்பிட்டு ரொம்ப சிக்கரி வாடை அடிக்கறது ஆனாலும் ஒண்ணும் இல்லாதததுக்கு எவ்வளவோ தேவலை என்று இன்னொரு கோப்பை காப்பி கேட்டு வாங்கிக் குடித்தார். 

பழுப்பு சக்கரை போட்டியா, வாசனை தூக்கறதே என்று தன் உடம்பை ஜெயித்த மகத்தான தினத்தைக் கொண்டாடினார். 

கழிப்பறை போய் வந்து கக்கூஸ் நாறிப் பிடுங்கறது ஆஸ்பத்ரியிலேயே இப்படின்னா வெளியிலே எப்படி இருக்கும் என்று வியந்தார்.

 டெட்டாலே இல்லாம அஸ்தமிச்சுப் போயிடுத்தா என்று நடுராத்திரி ஆசுபத்திரி ரிசப்ஷன் டெஸ்குக்கு தொலைபேசி ரிடைய்ட் அண்டர்செக்ரட்டரியாக சத்தம் போட்டு ஆவன செய்தார்.

 அவருடைய படுக்கையில் எறும்புகள் ஊர்ந்ததால் ஆபரேஷன் தியேட்டர் இன் சார்ஜை அந்த ராத்திரியில் கூப்பிட்டு குளூகோஸ் சிந்தினால் துடைக்க வேண்டாமா என்று கடமையை எடுத்துச் சொல்லி உடனே கட்டிலையே மாற்ற வைத்தார். 

உடம்பு சரியானதை அவர் கொண்டாடிய விதம் அப்படி. 

ஷாம்பேனும், தெரிசாவின் முலைகளும் அருகில் இருந்தால் இந்தக் கொண்டாட்டம் இன்னும் சிறப்பாக இருக்கும் என்று நினைத்தார். 

சாரதா தெரிசா வரல்லியா என்று வசந்தியிடம் கேட்டார். அவள் காதில் விழாதுபோல் நடந்தாள். 

இப்பத்தான் வீட்டுக்கு போனா. காரை எடுத்துப் போயிருக்கா. வந்துடுவா. என்ன வேணும்? மைத்துனர் பஞ்சு அவருடைய ஆர்வத்தைத் தீர்த்து வைத்தார். என்ன வேணும்னு சொன்னால் கிடைக்குமா? மனதுக்குள் சத்தம் போட்டார் சங்கரன். இதமாகக் குளிர்ந்தும் சற்றே வெப்பமாகவும் சாரதா தெரிசாவின் இரு பெரும் கொங்கைகள் என் கைக்குள் அடங்காமல் திமிற வேண்டும் மைத்துனா.  

ஆபரேஷன் வெற்றி பெற்றதாலோ, கனவில் வரும் பையன் அப்பா அப்பா என்று கூப்பிடாமல் திரும்பிப் போனதாலோ நோக்காடு என்றென்றைக்குமாகத் தீர்ந்தது என்று அவருக்குத் தெரிந்தது.

 அப்பா அப்பா. 

சங்கரன் பின்னால் இருந்து குரல். மறுபடியுமா?

அப்பா, you are all right now on. 

கொச்சு பகவதி அவர் கையைக் குலுக்கினாள்.

மிளகு: இரா முருகன் - நாவல்

மிளகு – அத்தியாயம் 87 மிளகு – அத்தியாயம் 89 – பின்கதை

Discover more from சொல்வனம் | இதழ் 367 | 24 மே 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.