மிளகு – அத்தியாயம் எண்பத்திரண்டு

1606 மிர்ஜான் கோட்டை

அகநாசினி நதிநீர் நிரம்பிய குளத்தைப் பார்த்தபடி இருந்தது விருந்தினர் அறை. போர்த்துகீஸ் இளவரசர், கோழிக்கோட்டு சாமுத்ரி மகாராஜா, மதுரை  மன்னர், நிர்மல முனிவர், உள்ளால் மகாராணி அப்பக்கா என்று கெருஸொப்பாவின் அதிமுக்கிய விருந்தாளிகள் வந்து வெவ்வேறு கால கட்டத்தில் தங்கியிருந்த அழகான, பெரிய அறை அது.

சித்திரம் : அருண்

 முழுக்கவோ வரிசையாகப் பாதி கவிழ்த்தோ ஜன்னல் கண்ணாடிகள் வெனீஷியன் ப்ளைண்ட் அடுக்காக ஒவ்வொரு ஜன்னலும் வடிவெடுத்திருப்பது இந்த அறையிலும், அரசியின் படுக்கை அறையிலும் மட்டும்தான். 

இருபத்துநாலு மணிநேரமும் ஜன்னலுக்கு வெளியே ரோந்து போய்க்கொண்டிருக்கும் வீரர்கள் கண்ணை, தலையை இப்பக்கம் அப்பக்கம் அசைப்பது கூட இல்லை.  ஜன்னலை, ஜன்னலுக்குள்ளே வெளிச்சக் கோடாகத் தெரியும் உள்ளறையை, வெளி இருளும், உள் ஒளியும் ஒன்றை ஒன்று விழுங்கப் பார்க்கும் விளையாட்டைப் பார்த்தபடி நடை பழகினாலும் கவனம் சிதறாது இருக்கிறவர்கள் அவர்கள். 

இப்போதும் அறைக்கு வெளியே அவர்கள் ரோந்து போய்க் கொண்டிருக்கிறார்கள். உள்ளே தங்கியிருப்பவருக்குப் பாதுகாவலாக இல்லை. கைதிக்கு வெறுங்காவலாக. 

 சென்னபைராதேவி மிளகுராணி அரசப் பதவி பறிக்கப்பட்டு, நண்பரான கெலடி மாநில அரசர் வெங்கடப்ப நாயக்கரால் கைதாக்கப்பட்டு மிளகுராணி நிர்மாணித்த மிர்ஜான் கோட்டையில் சிறை வைக்கப்பட்ட இரவு இது. 

தன் வீட்டிலேயே விருந்தினராக  சென்னபைராதேவி மகாராணி உட்காரவைக்கப் பட்டிருக்கிறாள். 

இன்று பகல் இங்கே அழைத்து வரப்பட்டாள். அதற்கு அப்புறம் நகரவே இல்லை. நேரே நிமிர்ந்து அமர்ந்து சுவரை வெறித்துக்கொண்டு   அப்படியே அமர்ந்திருக்கிறாள். 

அவளை  இந்த அறைக்கு அனுப்ப சிரமமாக இருக்கும் என்று எதிர்பார்த்து கெலடி வெங்கடப்ப நாயக்கரும், பில்கி அதிபர் திம்மராஜுவும் ஒரு சிறு படையைக் கோட்டையில் அரச மாளிகைக்கு வெளியே நிறுத்தியிருந்தார்கள் இன்று பிற்பகலில். ஆனால் அதற்குத் தேவையே ஏற்படவில்லை.

 இந்த அறைக்குள் கழிவறை, நாற்காலியில் அமர்தல் போல் இருந்து கழிவு நீக்கும் சௌகரியத்தோடு அமைத்தது நன்றாகப் போய்விட்டது. சென்னா   குத்தவைக்கும் சிரமம் இல்லாமல் போனது. கழிவறை பயன்படுத்தி விட்டு நாற்காலிக்கு வந்தாள் சென்னா. இன்றைய தினம் அவள் மனக்கண்ணில் ஓடிக் கொண்டிருந்தது. 

காலையில் வழக்கம் போல் குளி கழிந்து பூஜை முடித்து வெகுநேரம் விஷ்ணு சகஸ்ரநாமமும் சமண மந்திரமும் நிதானமாகச் சொல்லி, வெளி மண்டபத்துக்கு நடக்கும்போது  அவளுக்கு முன்னும் பின்னும் காவல்படை வீரர்கள் பாதுகாப்புக்காக இடைவெளி விட்டு நடந்து கொண்டிருந்தார்கள்.

ரஞ்சனாதேவி சாப்பிட்டார்களா என்று பக்கத்தில் வந்து கொண்டிருந்த புதுத் தாதி ருக்மணியை விசாரித்தாள் மிளகுராணி. அவங்க வீட்டுக்கு வெளியே வரல்லே மகாராணி அம்மா என்று பயந்த குரலில் சொன்னாள் ருக்மணி. 

அவளுக்கு வேலை நிலைக்குமா, உயிர் உடலில் நிலைக்குமா என்று பயம்  என்பதை சரியாகக் கண்ட மிளகுராணி ருக்மணியின் தோளில் தட்டிச் சொன்னது – பயப்படாதே. எல்லாம் சரியாகி விடும். ரஞ்சனாதேவியைப் பார்க்கலாம். நட.

  ராணி சிறு குறுக்குப் பாதை வழியே இரண்டே நிமிடத்தில் இளவரசர் மாளிகைக்குப் போய்ச் சேர்ந்தாள். 

இன்னும் தண்ணீர் காயாத தரை குருதி வாடை புலர்த்திக் கொண்டிருந்தது. நேமிநாதனின் ரத்தம் நிணவாடையை மட்டும் மீதி வைத்துவிட்டுத் தண்ணீரோடு தண்ணீராகக் கலைந்து போயிருந்ததைக் காணத் துக்கம் மனதில் கவிந்து மிகுந்த சோர்வையும், படபடப்பையும் உண்டாக்கியிருந்தது. 

உள்ளே இருளில் விசும்பும் முனகல் ஒலி. ரஞ்சனா. மெல்ல அங்கே நடந்தாள் மிளகுராணி. 

அடுத்த ஐந்து நிமிடம் அந்த இரண்டு பெண்களும் மௌனமாகத் தலையாய சோகத்தைப் பங்கு போட்டுக் கொண்டிருந்தார்கள்.  

ஒற்றை ஜன்னலைத் திறந்து வைத்தாள் மகாராணி. தாதி ருக்மணியை அழைத்து ரஞ்சனாதேவிக்கு காலைப் பசியாற பலகாரம் அனுப்ப ஏற்பாடு செய்யச் சொல்லியபடி ரஞ்சனாவைத் தலையில் வருடிச் சொன்னாள் –

 ரஞ்சி இதையும் நாம் கடந்து போவோம்

சொல்லியபடி வெளியே நடந்தாள் மிளகுராணி. போஜனசாலை வாசலில் தலைமை மடையர் காத்திருந்தார்.

அம்மா, நீர்த் தோசை பண்ணியிருக்கிறோம். உண்டு பார்க்க வேணும். ஜீரணம் சுலபமாக இருக்கும் என்று தலைமை மடையர் கிருஷ்ண ராயர் பணிவோடு நின்று வார்த்தை சமர்ப்பித்தார். 

ராயரே, ஜீரணத்துக்கு எனக்கு யாதொரு பிரச்சனையும் இல்லை. கெருஸொப்பா, ஆட்சி, ஜனம், மிர்ஜான் கோட்டை எல்லாம் விழுங்கி என் மகனையும் விழுங்கி விட்டது. மிளகு ரசம் பகலுக்கு வைத்து இன்னும் விழுங்க என்ன எல்லாம் உண்டோ அதெல்லாம் விழுங்க உத்தேசம் என்று கலகலவென்று சிரித்தாள். 

அம்மா அப்படி நீங்கள் சொல்லக் கூடாது. உங்களைப் பார்த்து நாங்கள் நம்பிக்கையை மீதி வைத்திருக்கிறோம். எல்லாம் நல்லபடி முடியும் என்றார் தலைமை மடையர் ராயர். 

இரண்டு இட்டலிகளையும் ஒரு நீர்த்தோசையையும் பிய்த்துக் கொஞ்சம் தின்று, உண்டதாக பேர் பண்ணினாள். ராயரே, நீர்த்தோசை மிக அருமை என்று பாராட்டி விட்டுக் கோட்டையின் முன் மண்டபத்துக்கு நடந்தாள். 

பிரதானிகளும் உப பிரதானிகளும் தளவாய்களும்  சென்னபைராதேவி வருகைக்காக அங்கே காத்திருந்தார்கள். சடங்கு சம்பிரதாயத்துக்காகக் கூடிய சபை அது. எனினும் தோல்வியில் துவண்டவர்களாக யாரும் இல்லை என்பதை சென்னா ராணி கவனித்தாள். 

மனதளவில் இருந்தாலும் வெளியே காட்டாத பாங்கு அவளுக்கு ஆறுதலைக் கொடுத்தது. அரியணைக்கும் வேலைப்பாடு அமைந்த நாற்காலிக்கும் நடுவில் அமைந்த ஆசனத்தில்  சென்னபைராதேவி அமர்ந்தாள். 

ஜயவிஜயீபவ என்று முழக்கங்கள் எழுந்தன. வாசலில் முரசறைவதும், மங்கல வாத்தியம் இசைப்பதும் இல்லாத அமைதி. 

 சென்னபைராதேவி பிரதானிகளின் வரிசையில் தேடினாள். நஞ்சுண்டய்யா பிரதானி எங்கே? 

பிரதானி சந்த்ரப்ரபு எழுந்து மரியாதையாக வணங்கி, நஞ்சுண்டய்யா-வருக்கு ராத்திரி முதல் நெஞ்சுவலி அதிகமாகி கைகால்கள் சுண்டி இழுத்து படுத்த படுக்கையாக இருக்கிற தகவலைப் பகிர்ந்து கொண்டார். உடம்பு உஷ்ணமாகி ஜ்வரமும் பீடித்திருப்பதாகச் சொன்னார் சந்த்ரா. 

குதிரைகளில் இருந்து மனுஷர்களைப் பீடிக்கும் கண்ணுக்குத் தெரியாத கிருமிகளின் நோயுண்டாக்கும் செயல் இது என்று பின்வரிசை உப பிரதானி ஒருவர் சொன்னார். நஞ்சுண்டய்யா குதிரை ஏறி எங்கும் போகவில்லையே.  இன்னொரு உப பிரதானி சொல்ல, பிரதானிகள் மௌனமானார்கள். 

நடந்து முடிந்த சிறு யுத்தத்தில் தளவாய்களையும் ஒன்றிரண்டு சேனாதிபதிகளையும் தவிர பிரதானி, உப பிரதானி அளவில் யாரும் போரிடவோ, குதிரையேறி அரசுப் படைகளுக்கு ஆதரவும், துணிவும், ஊக்கமும் தரவோ வரவில்லை என்பதைத் தினசரி அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டது சென்னாவுக்கு நினைவு வந்தது. 

நஞ்சுண்டய்யா எழுபதைத் தொடும் முதியவர். அவர் குதிரையேறி விழுந்துவைப்பார். வேண்டாம். மற்றவர்கள்?

 அரசுப் படை தோற்றதற்கு அது காரணம் இல்லைதான். என்றாலும் இனி அதை எப்போது கேட்பது? 

என்ன பேசப் போகிறோம்? சென்னா அவையைச் சுற்றிலும் பார்வையை ஓடவிட்டுக் கேட்டாள். அமைதிதான் பதிலாக வந்தது.

போன மாதம் விளைந்த மிளகு நீர்ச் சத்து கூடியதால் தரம் சற்றே குறைந்து, லிஸ்பனில் இருந்து விலை குறைப்பை எதிர்பார்க்கிறதை சந்த்ரப்ரபு பிரதானி சொல்ல ஆரம்பித்தார். ஏதாவது பேச வேண்டும் என்ற நினைப்பு தெரிந்தது அவர் குரல் நடுங்கப் பேசியதில்.

 வெளி மண்டபத்தில் ஓவென்று பெரும் சத்தம். 

கெலடி மாநிலப் படைத் தலைமைத் தளபதிகளும், சேனாதிபதிகளும் மிடுக்காக நடந்து வர, நடுவே கம்பீரமாக நரை மீசையை நீவிக்கொண்டு கெலடி அரசர் வெங்கடப்ப நாயக்கர் வந்து கொண்டிருந்தார். 

அத்தனை பேரும் உள்ளே நுழைந்தபின் வாசல் கதவுகள் உள்ளிருந்து தாளிடப்பட்டன. கெலடிப் படைகள் கோட்டைக்குள் அரச மாளிகை வாசலில் அணிவகுந்து நின்றதை உள்ளே இருந்து பார்க்க முடிந்தது. அவர்கள் சத்தத்தையும் கேட்க முடிந்தது. 

மிளகுராணிக்கு வணக்கம் என்று சொல்லி வெங்கடப்ப நாயக்கர் சென்னாபைரதேவிக்கு முன் குனிந்து வணங்கினார். 

மிளகு ராணி வாழ்க என்ற குரல்  நீல வண்ணத்தில் தலைப்பாகை அணிந்திருந்த சைன்ய உடை உடுத்தியிருந்த இளைஞரிடமிருந்து வந்தது.

 வகுளாபரணன்.  

 சென்னபைராதேவி அமர்ந்தபடி கெலடி அரசருக்கு வணக்கம் சொன்னாள். நாயக்கர் சென்னா அருகே இன்னொரு நாற்காலியை தரதரவென்று இழுத்துப் போட்டு அமர்ந்து கால் மேல் கால் போட்டு தோரணையோடு சுற்றிலும் நோக்கினார். 

வகுளாபரணனைத் தன் அருகே,  சென்னபைராதேவி ஆசனத்துக்குக் கிட்டத்தட்ட சமமாக உட்காரச் சொன்னார். வகுளன் விதிர்விதிர்த்து எழுந்து நிற்கவும் வணங்கவும் எடுத்த முயற்சிகளை  சென்னபைராதேவி ஓர் இகழ்ச்சிச் சிரிப்போடு புறக்கணித்து தலையைத் திருப்பிக்கொண்டாள். 

நான் பேசும்போது யார் குறுக்கிட்டாலும் கைது செய்து சிறையில் அடைக்கும்படி விஜயநகர உத்தரவை முதலில் சொல்கிறேன். 

மிரட்டும் தணிந்த குரலில் அறிவித்து விட்டு வெங்கடப்ப நாயக்கர் பேசத் தொடங்கினார்.

இந்த அரசவை, அதாவது மாஜி அரசவையில் நான் சில அறிவிப்புகளை செய்ய வேண்டியுள்ளது. கெருஸொப்பா மாநிலத்தின் தொடர்ந்த பொருளாதார, சமூக, கலாச்சார முன்னேற்றத்தை உத்தேசித்து விஜயநகரப்  பேரரசின் ஆலோசனைப்படி எடுக்கப்பட்ட முடிவுகளை உத்தர கன்னடப் பிரதேசத்தின் அக்கறையுள்ள பூமிவாசியும் கெலடி மாநில அரசனுமான நான் அறிவிக்கிறேன். 

மிளகுராணி  சென்னபைராதேவி இப்போது முதல் கெருஸொப்பாவின் அரசி பதவியிலிருந்து விலக்கப்பட்டிருக்கிறார். ஐம்பத்துநான்கு வருடம் ஒரே அரசர் நடத்தும் அரசாட்சி என்பது உலகிலேயே எந்த தேசத்திலும் நடக்காத ஒரு அதிசயம். அதுவும் ஒரு பெண் ஐம்பத்து நான்கு வருடம் சாதனையாக ஆட்சி செய்து, உலகமே திரும்பிப் பார்த்து மிளகுராணி என்று கொண்டாடப்படுவது நம் எல்லோருக்கும்  பெருமை தருவதாகும். 

என்றாலும் முதுமையும் நீண்ட அரசாட்சியின் களைப்பும் அவரை வெகுவாகப் பாதித்திருக்கின்றதைப் பார்க்க முடிகிறது. கடந்த ஒரே ஆண்டில் கெருஸொப்பாவின் நிதி நிலை சீரழிந்து எது முக்கியம் எது இல்லை என்று தீர்மானிக்காமல் பொருளாதாரம் தறிகெட்டு ஓடி நாசமடைந்திருக்கிறது. 

மகாராணியின் வளர்ப்புப் புத்திரர் நேமிநாதர் இதைச் சுட்டிக் காட்டி ராணியால் வெளியேற்றப்பட்டார். அவரும் எங்களோடு இந்த தினம் இங்கே வந்து அரசராக முடிசூட்டப் பட்டிருக்க வேண்டும். 

கூடாநட்பு அதுவும் ஒரு கௌரவமான கணிகையோடு வைத்து அரச நிதியைத் தங்கப் பாளமாக மாற்றி வெளியே கொண்டு போவதில் உத்வேகத்தோடு செயல்பட்டு, தட்டிக் கேட்ட எங்களை மூர்க்கமாகத் தாக்க முனைந்து, உயிரும் இழந்தது துரதிருஷ்டமானது. 

அது நிற்க. சென்னபைராதேவியின் இந்த ஆட்சி தொடர வேண்டாம் என்பது விஜயநகரப் பேரரசின் விருப்பமும் ஆகும். 

 சென்னபைராதேவி மகாராணி இனி என் மற்றும் பில்கி அரசர் திம்மராஜு கவனத்தில் ஓய்வெடுப்பார். எங்கே என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை. 

கெருஸொப்பா நாடு ஒரு பெரும் பகுதியாகவும் ஒரு சிறு பகுதியாகவும் நிர்வாகச் சீரமைப்பு நிமித்தம் பிரிக்கப்படும். 

நானும் பில்கி அரசர் திம்மராஜுவும் அந்த சீரமைப்பை எடுத்துக்கொண்டு நிறைவேற்ற சோமேஷ்வர் கோணேஸ்வர் மகாவீரர் என எல்லா தெய்வமும் அருளட்டும். உங்கள் வாழ்த்துகளும் சேரட்டும். 

இடைக்கால நிர்வாகியாக இங்கே பணியாற்ற, புது அரசாங்கத்தின் பிரதிநிதியாக செயல்பட, வகுளாபரணர் நியமிக்கப்படுகிறார். 

இங்கே கூடி இருக்கும் பிரதானி, உபபிரதானி, தளவாய் ஆகிய யாருக்கும் உயிர்ப் பயம் இருக்க வேண்டாம். மிகப் பெரும் குற்றம் புரிந்திருப்பதாகத் தெரிந்தாலே அன்றி நீங்கள் இப்போது இருக்கும் வீடு நிலம் அனுபவித்து இருக்கலாம். பதவி தொடர்வது பற்றி அப்படி உத்தரவாதம் தர முடியாது. 

வயது காரணம் ஓய்வு பெற்று சென்னா மகாராணியோடு வயதானவர் கூட்டம் நடத்தி காலம் போக்க சில மூத்த பிரதானிகளை செயல்படுத்த இருக்கிறோம். அவர்கள் இப்போது இங்கே இல்லாவிட்டால் சந்திக்கும்போது அவர்களிடம் சொல்லுங்கள். 

இந்த இடத்தில்  சென்னபைராதேவி குரல் கீச்சிடச் சத்தம் போடத் தொடங்கினாள்.  

துரோகிகளா, நம்பிக்கை துரோகிகளா, சகோதரன் சகோதரி, அம்மா என்றெல்லாம் உருகி உருகி என் மேல் பொய்யான அன்பை பூசிய திருடர்களே, உங்களுக்கு தொழுநோயும் பெண்சீக்கும் பீடிக்கட்டும். உங்கள் உடலைப் புழுத்துப் போக வைக்கட்டும், நாவு அழுகட்டும். சென்னபைராதேவி  கூச்சலிட்டாள். 

ஒரு வினாடி அமைதியாக இருந்தாள். அப்புறம் கேவல் மிகுந்த குரலில் சொன்னாள்-

வீட்டுக்கு ஒருவர் நாட்டைப் பாதுகாக்க வாளெடுத்து வாருங்கள் என்று ஜரொஸொப்பா வாசிகளிடம் மன்றாடினேன். வாள் என்ன, துரும்பு கூட எடுத்து வராத, வெறும்கையும் வீசி வராத மரியாதைக்கு உரிய ஜெருஸொப்பா வாசிகளே,  உங்கள் ஊர்  இயற்கையோடு ஒன்றாகட்டும்.

 வெறும் கையால் அட்சதை போடுவதுபோல் செய்தபடி இருந்தாள் சென்னா.

வகுளன் தயாராக வைத்திருந்த ஒரு வர்ணத் துணியை எடுத்து சென்னாவின் வாயைச் சுற்றிக்கட்டுவதை அவையே நம்ப முடியாமல் பார்த்துக் கொண்டிருந்தது. 

மகாராணிக்கு சித்த சுவாதீனம் இருக்கிறதா என்று இன்னும் அரைமணி நேரத்தில் பைத்யநாத் வைத்தியர் சோதித்துச் சொல்வார். இப்போது இந்த அவை கலைகிறது 

சொல்லியபடி வெங்கடப்ப நாயக்கர் எழுந்து நிற்க வாயில் கட்டிய துணியோடு  சென்னபைராதேவியை நெருங்கிய நாலு மெய்க்காவலர்கள் மரியாதையோடு வணங்கி நின்றார்கள். 

விருந்தாளி அறைக்கு அழைத்துப் போங்கள் என்றார் கெலடி வெங்கடப்ப நாயக்கர். 

அவரும் வகுளனும் நிற்கக் கடந்துபோகும் போது சென்னா வகுளனைப் பார்த்து நீயுமா வகுளா நன்றாக இரு நன்றாக இரு என்று அவன் தலையில் கைவைத்து ஆசிர்வதித்து நடந்தாள்.  

நடத்திப் போய்  சென்னபைராதேவி அறையில் அமர்ந்ததும் கெலடி அரசர் வெங்கடப்ப நாயக்கர் மெல்லிய குரலில் சொன்னார் –

 சென்னா, நேமிநாதன் போனாலும் உமக்கு இன்னும் உயிர் அபாயம் இருக்கு. போர்த்துகீசிய கார்டெல் இவ்வளவு நேமிநாதன் மூலம் செலவழித்தும் கெருஸொப்பாவும் குறைந்த விலையில் மிளகும் அவர்கள் கையை விட்டு நழுவிப் போவதால் ஆத்திரத்தில் இருக்காங்க. அவங்க கிட்டே இருந்து உம்மை பாதுகாக்க இந்த அறைக்கு வெளியே ரோந்து போனபடி என் அரசாங்கப் படை இருக்கும். பசிக்கு அன்னமும் பலகாரமும் நீரும் உமக்குத் தர தாதி கூடவே இருக்கலாம். நாளை மிர்ஜானில் இருந்து பாதுகாப்பு கருதி உம்மை வேறு ஒரு இடத்திற்கு அழைத்துச் செல்வேன். 

நாயக்கர் நகர்ந்தார்.

மிளகு: இரா முருகன் - நாவல்

மிளகு அத்தியாயம் எண்பத்தொன்று  மிளகு – அத்தியாயம் – எண்பத்திமூன்று

Discover more from சொல்வனம் | இதழ் 365 | 26 ஏப். 2026

Subscribe to get the latest posts sent to your email.

One Reply to “மிளகு – அத்தியாயம் எண்பத்திரண்டு”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.