மிளகு – மிர்ஜான் கோட்டை

பிற்பகலில் கோமாளி வந்தான். பிறந்த நாள் கொண்டாட்டத்தின் பகுதியாக, விருந்துக்கு அப்புறம் கோமாளி ஆட்டமும் பாட்டும் தொடங்கின. 

ஷெனாய், தெற்கத்திய ஊதுவாத்தியமான நாகசுவரம், மகுடி போல முகத்துக்கு நேரே பிடித்து  வாசிக்கும் நீளமான குழல், தெற்கே எங்கும் வாசிக்கும் சிறு குழல், வீணை, சிதார் என்று வாத்திய இசையும், ஸ்வர்மண்டல் பக்க வாத்தியமாகக் குரல் இசையும் அடுத்து அடுத்து வழங்க, பிரபலமான இசைக் கலைஞர்கள் காத்துக் கொண்டிருந்தார்கள். 

பெரிய விருந்துக்கு அப்புறம் இசை நிகழ்ச்சிகள் தொடங்கலாம் என்றால் விருந்து நீண்டு போக,  விதவிதமான உணவு வந்து கொண்டே இருந்தது.  

உண்ட மயக்கத்தில் எல்லோரும் உறங்கிப் போவது இயற்கை என்றாலும் மகாராணியார் முகத்துக்கு நேரே கொட்டாவி விட்டுக் கண்கள் செருக அரைத் தூக்கத்தில் மிதப்பது பெரும் அவமரியாதை அன்றோ.

தவிர்க்கத்தான் விருந்துக்கு அடுத்து அதிக நேரம் கடத்தாமல் கோமாளி வந்தான். ஆரம்பிக்கும்போதே அவன் நேமிநாதனிடம் மிகுந்த பணிவுடன் கேட்டுக் கொண்டது இந்தத் தோதில் இருந்தது –

“கொஞ்சம் வார்த்தை அப்படி இப்படிப் போகலாமா? சபை நாகரிகம் கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேணுமென்றால் சொல்லுங்க ஐயா”.

சென்னபைரதேவி சிரித்து ஆகட்டும் என்று கைகாட்ட, தெம்போடு தொடங்கினான் கோமாளி. 

“சபை நாகரிகம் என்றால் மலையாள பிரதேசத்து சாக்கியார் கூத்து நினைவு வருது. மேடை ஏறி நகைச்சுவையோடு மகாபாரதக் கதை சொல்லிட்டிருக்கார் மாதவ சாக்கியார். திருவனந்தபுரம் மகாராஜா பாதிக் கதையிலே அவைக்குள்ளே வரார். சாக்கியார் கதையில் ஒரு காட்டுப் போத்து, என்றால் காட்டெருமை, தெருவிலே வந்துட்டிருக்கு. சாக்கியார் சொன்னாராம் – 

”காட்டுப் போத்து தடதடன்னு ஓடிவந்தா எப்படி இருக்கும் தெரியுமா? இப்போ யாரோ பாதிக்கதையிலே உள்ளே வந்தாரே அப்படித்தான். 

”ஆக, மகாராஜாவை பகடி செய்யக்கூட அங்கே  பயமில்லையாம், கேளுங்க

”நாம் அவ்வளவு உரிமை எடுத்து எல்லோரையும் கேலி பண்ண மாட்டோம். இது யார் மனதையும் புண்படுத்த இல்லை. எல்லா நடப்பிலும் நகைச்சுவையைக் கண்டு அதை எந்தச் சார்பும் இல்லாமல் கொண்டாடுவோம் வாருங்கள்”.

நான்கு கோமாளிகள், அதில் ஒருவன் பெண்ணாக வேடமிட்டவன். ஆட்டம் நிகழிடத்தைச் சுற்றிச் சுற்றி வந்தார்கள். முதல் கோமாளி பாடினான் –

”வெள்ளைக்கார பூமியிலே 

நல்ல பல வாசனைகள் 

வந்த கதை தெரியுமா?

வாந்தி வரும் சொல்லவா?

எடுத்துச் சொல்லவா”?

”சொல்லுங்க சொல்லுங்க அட சொல்லுங்க” என்று மற்ற மூன்று பேரும் சொல்லி, குட்டிக்கரணம் தொடர்ந்து அடித்து எழுந்து நின்றார்கள்.

”ரோமாபுரியில் பண்டு பண்டொரு காலத்தில் நடந்தது இது. பொய்யில்லை. முழுக்க உண்மை”.

”புராதன ரோம் நகரத்தில் துணிகளை வெளிரென்று சலவை செய்து தர நிறுவனங்கள் இருந்தன. அதற்கான வாயு வேண்டுமே? அந்தக் காலத்தில் ஏது?  ஆகவே அந்தக் குறிப்பிட்ட வாயு நிறைந்த சிறுநீரை  இந்தக் காரியத்துக்காக உபயோகப்படுத்தினார்கள். சலவைக்கடை வாசலில் பெரியதாகப் பள்ளம் தோண்டி, ’இங்கே சிறுநீர் கழிக்கவும்’ என்று அறிவிப்புப் பலகை வைத்து, நகர மக்களை வேண்டி விரும்பி அழைத்தார்கள்”.

இரண்டு கோமாளிகள் மூன்றாமவனிடமும், பெண் வேடம் போட்ட நான்காவது கோமாளியிடமும் கேட்கிறார்கள்

“ஐயா, வாங்க வாங்க, மூத்திரம் பெய்து எங்களை கௌரவப்படுத்துங்க. அக்கா மூத்திரம் போகலியா?”

எல்லாரும் சிரிக்கிறார்கள். அந்தப் ’பெண்’ கன்னத்தில் அடித்து விட்டுப் போக இன்னும் அதிகமான சிரிப்பு எழுகிறது. கோமாளிகள் குட்டிக்கரணம் போட்டு, சலாம் நவாப் எனக் கூவி ஒருவரை ஒருவர் பிருஷ்டத்தில் வலிக்காமல் பெரிய ஒலி எழுப்பி மூங்கில் பிளாச்சுகளால் அடித்துக் கொள்கிறார்கள்.

முதல் கோமாளி சிரிப்பை அங்கீகரித்து அடக்கி விட்டுப் பேசுகிறான் –

”ரோமானியர்கள் பற்றி இன்னொரு  தகவல் – அவர்கள் சலவை செய்யப் பயன்படுத்தியது போக மீந்த மேற்படி திரவத்தை வாய் கொப்பளிக்கவும் உபயோகித்தார்கள். துர்நாற்றம் இல்லாமல் இருக்கவே இந்த ஏற்பாடு. ரோமாபுரியிலேயே  கிடைத்தது தவிர, ஸ்பெயின் பிரதேசத்திலிருந்து வரவழைத்த சரக்குக்கும் ஏக கிராக்கியாம். அதி சக்தி வாய்ந்த கிருமிநாசினி இந்த வெளிநாட்டுப் பொருள் என்று பரவலான நம்பிக்கை”.

‘ரோமானியப் பேரரசின் இறக்குமதி அனுமதி பெற்ற கடை. இவ்விடம் மொத்தமாகவும் சில்லறையாகவும் ஸ்பெயினிலிருந்து வந்த நயம் ..” 

சிரிப்பு அடங்க இரண்டு நிமிடமாகிறது. அதற்குள் கோமாளிகள் எல்லோரும் தரையில் கையூன்றி சக்கரம் போல் சுழன்று போகிறார்கள். கை ஊன்றி முன்னால் விழுந்து எழுகிறார்கள்.

“போர்ச்சுகல் தான் இப்போது ஸ்பெயின்காரர்களை வேண்டி விரும்பி சதா பருகி மகிழ ஸ்பானிஷ் சிறுநீர் கேட்டு நிற்கிறார்கள் என்றால் ரோமானியருமா அப்படி ஒரு காலத்தில் செய்தார்கள்!”

மிகப்பெரிய நகைப்பில் விருந்து மண்டபமே குலுங்கியது. 

 “போர்த்துகீசியர்களும் நூற்றுக்கணக்கான வருடம் இப்படியான எஸ்பானிய பானம் பண்ணும் பாரம்பரியம் உள்ளவர்களா?” பார்வையாளர்களில் யாரோ கேட்க, கோமாளி சிரிக்கிறான்.

”அவர்கள் ஸ்பெயின் நாட்டுக்கு கைப்பொம்மை ஆகி எத்தனையோ வருஷம் ஆச்சுதே. ஸ்பெயின் அரசர் பிலிப்பு தான் போர்த்துகல்லுக்கு அரசர். ஸ்பெயின் போர்த்துகல்லை முழுக்க அடக்கியாள்கிறது. மூத்திரம் போகக் கூட ஸ்பெயின் நாட்டிடம் அனுமதி கேட்பார்கள் போர்த்துகீசியர்கள்”. 

”அனுமதி கிட்டவில்லை என்றால்?” 

’உள்ளங்கையில் பெய்து பருகிக் கொள்வார்கள்.”

போர்த்துகீசியர்களால் பாதிக்கப்பட்ட ஊர் வணிகப் பிரமுகர்களில் சிலர் சிரிக்க, மற்றவர்கள் சற்றுத் தாமதித்து வாங்கிச் சிரித்தார்கள்.

”மிளகு மகாராணி தேசத்திலே இருந்து மிளகு வாங்கி வாங்கி கஜானா காலி ஆகி இவங்க ஒரு வழி கண்டுபிடிச்சாங்க”.

”என்ன ஓய் ஓய் என்ன அது சொல்லும்”

”இந்த நாட்டு மிளகு விவசாயி என்ன பண்றான்னு பின்னாலே போய் பார்த்தாங்க”. 

”பார்த்தா”?

”அவன் விதை மிளகை பசுஞ்சாணத்துலே வச்சு உலர்த்தறானா”?

”பின்னே இல்லையா? அது விதைமிளகுப் பெட்டகம் ஆச்சே. சாணகத்துக்கு உள்ளே பத்திரமாக இருந்து, சரியான நேரத்திலே முளைவிட்டுடும்”.

”அதேதான். நாட்டுக்குள்ளே போகிற நிலப்பரப்பில் அந்த விதைமிளகுப் பெட்டகங்களை விட்டெறிஞ்சு தூவினா என்ன ஆகுது”?

”விழுந்த இடத்திலே மிளகுக்கொடி வந்து மரம் தேடி சாய்ந்திருக்கு”

”அப்புறம்?”

”அப்புறம் கொப்புறம். கதையா சொல்றேன்?”.

“முளை விட்ட மிளகுக் கொடியை  ஒரு நிலத்திலிருந்து அப்படியே இன்னொரு மண்ணுலே எடுத்து நட்டும் பயிர் பண்ணுவாங்க தானே”

“ஆமான்னேன். புதுசா ஒரு கொடி வந்தா நூறு அடுத்து வரும். அப்புறம்”. 

”அப்புறம் அதிகம் மிளகு விளையுதே” என்று பெண் வேடமிட்ட கோமாளி நாணிக் கோணிச் சொல்கிறான்.

”அதேதாண்டி என் அழகுப் பொண்ணே, என்னைக் கட்டிக்கயேன்”.

”எனக்கு ஸ்பெயின்கார மாப்பிள்ளை கிடைக்கப் போகுதே”.

”போர்ச்சுகல் மாப்பிள்ளை வேணாமா”?

”அவங்க எல்லாம் மாட்டுச் சாணத்தைத் தேடி அலைந்துகிட்டிருக்காங்க. கொங்கணி விவசாயி சாணியிலே விதைப் பெட்டகம் செஞ்சு அதிகம் மிளகு விளைவிக்கறதை தப்பா புரிஞ்சுகிட்டு வெறும் சாணி உருண்டை பிடிச்சுக்கிட்டு அலையறாங்க போர்ச்சுகீசுக்காரங்க எல்லாம்”. 

”சாணியிலேயா சூட்சுமம்”?

சாணியிலேயா மிளகு விளையுது?

”அய்யே சாணிப் பசங்க”

”நாளைக்கே சாணிக்குள்ளே விதை மிளகு வைக்கணும்னு புரிஞ்சுக்கிட்டாலும் வேறே ஒண்ணு இருக்கு அவங்களுக்குப் புரிய வைக்க”.

”என்ன அது என்ன அது?” 

பெண் வேடமிட்ட கோமாளியை முத்தமிட மற்றவரில் ஒருவன் துரத்தத் தப்பி ஓடியபடி பாடுகிறான் அந்தப் பெண் கோமாளி.

”நம்ம பூமி 

நல்ல மிளகுப் பயிர் 

ஒரு வாழ்க்கை. 

ஒரு மூச்சுக் காற்று.” 

தொடர்ந்து பேசுகிறான் – “தெற்கே கோழிக்கோட்டிலிருந்து இங்கே ஹொன்னாவர், ஜெருஸோப்பா, பட்கல் வரை அழகழகான மலையாளப் பெண்ணுங்களும், கன்னடக் கிளிகளும், கொங்கணி தேவதைகளும் பார்த்து வளர்த்து, பார்த்து பறிச்சு, பார்த்து பதனிட்டு, பார்த்து விற்க அனுப்பற செல்வம்”

”ஆகா அந்தப் பெண்கள் எல்லாருக்கும் நன்றி சொல்லணும்”

”அப்புறமும் நன்றி சொல்ல இன்னொருத்தி இருக்காளே”

”யார் அது? மிளகு ராணிகிட்டே கேட்கலாமா? ஒருக்கால் அவங்க தானா?”

”அவங்க மாதிரி வாரி வழங்கறவங்க. யார் தெரியுமா?”

”யார் அது சொல்லேன்”

”மழையம்மா”

”மிளகு பூவந்ததும் மழையம்மா சரியான தினத்துலே வந்து அதைத் தொட்டுத் தழுவி வடிஞ்சு போகிறா. அடுத்த ரெண்டு வாரம் மழையம்மா நாள் பூரா மிளகுக் கொடியை இதமா நனைத்து விலகிப் போறா”.

”சாணியை போர்ச்சுகல்லுக்கு எடுத்துப் போகலாம். விதை மிளகை எடுத்துப் போகலாம். இந்த இதமான மழையை எப்படி எடுத்துப் போவாங்க?”

”மிளகுராணி தேச மிளகு வேறெங்கும் விளையாது. வேறெங்கும் செழிக்காது. விதை மட்டும் போதாது. மழையும் பெய்து பெய்து நின்று பெய்து மலைநாட்டு மண்ணில் வடியணும்.  புரிஞ்சுதா என் சிங்காரிப் பெண்ணே”.

”பிரிஞ்சுது பிரிஞ்சுது என்னை கட்டிக்கறியாடா”? பெண் வேடக் கோமாளி சொல்கிறான்.

”கட்டிக்கலாம் தான். அப்போ என் அழகுப் பொண்டாட்டி என்னடி பண்ணுவா?”

”அவ வேணும்னா என் புருஷனை கட்டிக்கட்டும்”.

ஓவென்று உயர்ந்த குரலில் பாடி, தாளம் தட்டி கோமாளிகள் சுற்றி வந்து கரணம் போட்டு எழுந்து நிற்கிறார்கள். பார்வையாளர்கள் கை தட்டி உற்சாகப் படுத்துகிறார்கள்.

 ”மிளகை எடுத்துப் போக முடியாதவங்க அடுத்து சொன்னாங்க” – 

“மிளகு விளையற கொங்கணப் பிரதேசத்தில் கொங்கணி மொழி பேசினால் நாக்கைத் துண்டிப்போம்”

”அய்யோடா”

’அறிவிச்சு   நாக்கைப் பிடுங்க  காசில்லாம கத்தி வாங்க அலைஞ்சவங்க இல்லே இவங்க’

”நாக்கிலேயா தாய்மொழி இருக்கு?” 

”இதயத்துலே இருக்கப்பட்டதாச்சே”. 

”இவங்களுக்கு இதயம் ஏது?” 

”அது இருக்கப்பட்ட இடத்துலே ஆசனம்தான் இருக்கும்”

அவர்கள் ஒருவரை ஒருவர் பிருஷ்டத்தில் மூங்கில் பிளாச்சால் அடித்துக்கொண்டு சிரிக்க, கூட்டம் சேர்ந்து சிரிக்கிறது.

சென்னபைரதேவி கைகாட்டி நிறுத்தினாள். ”நகைச்சுவை அரசியல் கலந்தபோது உக்கிரமான வெடியாகி இருக்கிறது. இது இன்னும் தொடர வேண்டாம்” என்று கட்டளை இட்டாள். 

”இசை நிகழ்ச்சிகள் தொடங்கட்டும்”.

நேமநாதனிடம் கொஞ்சம் கோபம் கலந்த குரலில் சென்னா சொன்னது இப்படி இருந்தது – ”நம்மோடு மரியாதையாக பழகுகிறவர்களை நையாண்டி செய்யக்கூடாது”. 

நையப் புடைக்கலாமா? அவள் மனதுக்குள் இருந்து இருபத்தைந்து வயது சென்னா நமுட்டுச் சிரிப்போடு கேட்டாள். 

அதற்கு தைரியம் இருக்கிறது. ஆனால் அதை விட சாமர்த்தியமான வழியும் தான் உண்டு. பொறுமை கடைப்பிடி சின்னப் பெண்ணே.

அந்த சென்னா மறைந்து போக, இனிய புல்லாங்குழல் ஒலி மண்டபத்தை நிறைத்தது. சங்கீதத்தில் மூழ்கிக் கண் மூடி இருந்தாள் சென்னா.  

(தொடரும்)

ஒலி வடிவில் கேட்க / To Listen to the novel in Audio form:

Solvanam:Writer Deepa Sridharan's "Kurukkutheruvum Kurunthadikaranum" short story/சொல்வனம்: எழுத்தாளர் தீபா ஸ்ரீதரனின் சிறுகதை "குறுக்குத்தெருவும் குறுந்தாடிக்காரனும்" Solvanam – Tamil Arts and Literature: சொல்வனம்.காம்

Solvanam:Writer Deepa Sridharan's "Kurukkutheruvum Kurunthadikaranum" short story/சொல்வனம்: எழுத்தாளர் தீபா ஸ்ரீதரனின் சிறுகதை "குறுக்குத்தெருவும் குறுந்தாடிக்காரனும்"   To read: / முழுவதும் வாசிக்க   https://solvanam.com/2022/06/26/குறுக்குத்தெருவும்-குறு/ ஒலி வடிவம் : சரஸ்வதி தியாகராஜன்/Voice o: Saraswathi Thiagarajan — Send in a voice message: https://anchor.fm/solvanam/message
  1. Solvanam:Writer Deepa Sridharan's "Kurukkutheruvum Kurunthadikaranum" short story/சொல்வனம்: எழுத்தாளர் தீபா ஸ்ரீதரனின் சிறுகதை "குறுக்குத்தெருவும் குறுந்தாடிக்காரனும்"
  2. Solvanam:Writer EraMurugan's "Vandi"/சொல்வனம்: எழுத்தாளர் இரா முருகனின் சிறுகதை "வண்டி/"
  3. சொல்வனம்:எழுத்தாளர் ஆதித்ய ஸ்ரீநிவாஸின் சிறுகதை "அப்பால்"/Solvanam: Adithya Srinivas's story "Appal"
  4. Solvanam: Era Murugan's Novel "Milagu" – 24/சொல்வனம்:எழுத்தாளர் இரா முருகனின் நாவல் “மிளகு”- 24 Writer Era Murugan's Historical serial Novel "Milagu" -Chapter 24
  5. Solvanam:Writer EraMurugan's short story"Sutram"/சொல்வனம்:எழுத்தாளர் இரா முருகனின் சிறுகதை "சுற்றம்/"
Series Navigation<< மிளகு – அத்தியாயம் இரண்டு (1596)மிளகு -அத்தியாயம் நான்கு >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.