மிளகு – அத்தியாயம் பனிரெண்டு

1999  அம்பலப்புழை

 எல்லோரும் வந்தாச்சா? 

பேண்ட், சட்டை தரித்த பலரோடு வேறுபட்டு முண்டாசு கட்டி, இடுப்பு வேட்டிக்குள் முழுக்கைச் சட்டையை நுழைத்து, கழுத்தில் கறுப்பு லேஞ்சியும் சுற்றி, அல்பாகா கோட்டோடு நின்ற யாரோ கேட்டார்கள். அவரிடமிருந்து மெல்லிய மிளகு நெடி அடித்தது. அங்கே இருந்த எல்லோர் மூச்சிலும், பேச்சிலும் மிளகு நெடிதான். அத்தனை பேரும் மிளகு சாகுபடி மற்றும் மொத்த வியாபாரம் செய்யும் பிரமுகர்கள். 

திலீப் ராவ்ஜி காரை நிறுத்தி விட்டு ஹாலுக்குள் வர நேரமாகி விட்டது. அந்தப் பெரிய மண்டபத்தின் வாசல் இடுங்கி இருந்தது. இரண்டு பக்கத்திலும் ஆக்கிரமிப்பாக நடைபாதைக் கடைகள் பரப்பி இருந்தன. கார் உள்ளே நுழையவே சிரமமாக இருந்ததால் பொறுமையாக ஆக்கிரமிப்பாளர்கள் வழிவிடக் காத்திருந்து மண்டபத்துக்குள் புகுந்து வர வேண்டியிருந்தது. வந்தாகி விட்டது.

”கடையிலே தான் மிளகு வாடைன்னா, இங்கேயும் வடையிலே மிளகுப்பொடியை அள்ளிப் போட்டு மொறுமொறுன்னு சுட்டு வச்சிருக்கான்”.

பாராட்டா ஏச்சா என்று தீர்மானிக்க முடியாத கருத்தைச் சொல்லியபடி பப்பு உன்னித்தன் வரவேற்றார். 

”ஐயருக்கு மிளகும் பெருங்காயமும் இருந்தா பொண்டாட்டி கூட பக்கத்துலே வேணாம்” என்று மலியக்கல் கொச்சு கொச்சு நாராயண குறூப் வேட்டியைத் திருத்திக்கொண்டு கிண்டல் செய்தார்.

”என்ன செய்ய சாரே. நாயர்க்கு இஞ்சி பட்சம்,  அச்சிக்கு கொஞ்சு பட்சம். பட்டருக்கு இஞ்சி மிளகு கொடுத்தாலும் கொஞ்ச அச்சி கிடைக்க மாட்டாளே”.

எல்லோரும் சிரிக்கச் சொல்லியபடி, திலீப் ராவ்ஜி கெத்தாக நடந்து உள்ளே போனார். இந்தப் பழஞ்சொல்லை இனி கொஞ்ச நாள் உபயோகிக்கக் கூடாது என்று திட்டம் செய்தபடி அவர் வேட்டி திருத்திக் கட்ட ஒரு நிமிடம் நின்றார். பக்கத்தில் உன்னித்தன் அதே காரியத்துக்காக நின்றது கண்ணில் பட்டது.

அங்கே நின்றும், நாற்காலிகளில் அமர்ந்தும் இருந்த ஒவ்வொருத்தரிடமும் போய் சிறு காகிதத் தட்டுகளில் வைத்த மிளகு வடைகளையும் காரபூந்தியையும் விநியோகித்துக் கொண்டு இருந்த பையன் திலீப் ராவ்ஜியிடமும் அவற்றை நீட்டினான். ஒரு சிறுமியும் வடைத் தட்டோடு   நின்றாள். 

திலீப் ராவ்ஜிக்கு மிளகு வடையும் காரபூந்தியும் சாப்பிட ஆசைதான். என்றாலும் வடையில் முழித்துக் கொண்டிருந்த வெங்காயத் துண்டு, வேண்டாம் என்று சொல்ல வைத்தது.

”வேணாம்பா. இன்னிக்கு வெங்காயம் சேர்க்கக் கூடாது. விரத திவசம்”. 

தமிழ்லேயும் அதுதான் வார்த்தை. ஏதோ பெரிய அற்புதத்தைக் கண்டுபிடித்த மாதிரி இன்னொரு தடவை விரத திவசம் என்றார் திலீப் ராவ்ஜி.

என்ன விசேஷம் என்று உன்னித்தன் வடையைக் கடித்துக்கொண்டே பார்த்தார். அவருக்குத் தமிழ் தெரியாதாகையால் திலீப் ராவ்ஜி சொன்னதில் பாதி அர்த்தமாகாமலேயே தலைக்கு மேலே போய்விட்டது.

”அகல்யா வந்துட்டு போனா. அவளுக்குப் பிடித்தாலும் எனக்கு இன்னிக்கு அவள் நினைவிலே வெங்காயமும் வெளியிலே ஆகாரமும் வேணாம்”.   சொல்லியபடி நாற்காலியில் உட்கார்ந்தார் திலீப் ராவ்ஜி.

அமர்ந்ததும் கடவுள் வாழ்த்து என்று நிகழ்ச்சி நிரல் சொல்லி மறுபடி நிற்க எழுப்பி விடப்பட்டார். அவர் இருக்கையில் அமர்ந்து மூச்சு வாங்க ஒரு ஐந்து நிமிடமாவது கொடுத்து விட்டு  கடவுளை வாழ்த்த எழுப்பியிருக்கலாம். 

கேட்ட மாத்திரத்தில் தமிழா, மலையாளமா என்று கண்டுபிடிக்க முடியாதபடி கேதார ராகத்தில் ஒரு பாடலைச் சிறுமிகள் பாடினார்கள். கேதாரம், கூட்டங்களில் கடவுள் வாழ்த்து பாடுவதற்காகவே மகான்களால் உருவாக்கப்பட்டது என்பதில் திலீப் ராவ்ஜிக்கு ஒரு சந்தேகமும் இல்லை. 

சுழல் சுழலாக கடவுள் வாழ்த்து நீண்டு கொண்டே போனது. யாரோ அந்தச் சிறுமிகளை நிறுத்தச் சொல்லிக் கண்காட்ட அது சரிப்படாது போனது.  மைக் பக்கம் போய், போதும் என்று மைக்கை அகற்றுகிற மாதிரி மேடை ஓரத்துக்குக் கொண்டு போய் நிறுத்தினார்கள். அந்தப் பெண்கள் இன்னும் ஓயவில்லை என்று கண்டு, மெல்ல முடிக்கட்டும் என்று விலகிப் போனார்கள். 

அடுத்து மிளகு உற்பத்தியாளர் சங்கத் தலைவர்களுக்கு மாலை மரியாதை செய்தல். மொத்தம் நூற்றிருபது அங்கத்தினர்கள் உள்ள சங்கம் அது. அதில் பல பேருக்கு ஏதாவது ஒரு பதவி அளிக்கப் பட்டிருக்கிறது. மீதி இருக்கப்பட்டவர்களில் சிலர் கொடுக்கப்பட்ட பதவி வேண்டாம் என்று நிராகரித்து விட்டார்கள். 

ஏலம் உற்பத்தி, லவங்க உற்பத்தி, ஜாதிக்காய் உற்பத்தி. கிராம்பு உற்பத்தி என்று நிறைய சங்கங்களில் நிறைய பதவிகளை அவர்கள் வகிப்பதால் இன்னொன்று இப்போது வேண்டாம் என்று தீர்மானித்திருந்தார்கள். 

ஒரு பெரிய பிரப்பங்கூடை நிறைய  மாலைகளை சங்கத் தலைமைக்குச் சூட்டக் கொண்டு வந்திருந்தார்கள்.

மாலை சூட்டுவதை, பொன்னாடை போர்த்துவதை ஃபோட்டோ எடுக்க இரண்டு பேரை வரவழைத்திருந்தார்கள். ஒருத்தர் ஸ்டில் ஃபோட்டோ, மற்றவர் வீடியோ.  சரியாகப் படம் பிடிக்க முடியாமல் போகும்போது அவர்கள் மறுபடி மாலை சூட்டுவது, மறுபடி பொன்னாடை போர்த்துவது என்று செய்யச் சொல்லிக் கட்டாயப்படுத்திக் கொண்டிருந்தார்கள்.  

வரிசையாகப் பெயர் கூப்பிட, இருபது பேர் வரை வேகமாக மாலை சூட்டப்பட்டது. அடுத்து சாவித்திரி அந்தர்ஜனம் மாலைக்கு வந்தபோது ஆண் கையால் அதை வாங்கிக் கொள்ள முடியாது என்று மறுத்துவிட்டார். 

பின்னர், மிளகுவடை கொண்டு வந்த காண்டீன் சிறுமிக்கு சிறு  கட்டணம் கொடுத்து அந்தப் பணிக்கு அழைக்கப்பட்டு சரியாக அதை நிறைவேற்றினாள். படம் பிடிக்க சாவித்திரி அந்தர்ஜனம் தான் ஐந்து தடவை சரியாகச் செய்யாமல் அப்புறம் ஒரு வழியாக பொன்னாடை போர்த்தப்பட்டு அமர்ந்தாள்.

திலீப் ராவ்ஜிக்கு மாலை சூட்ட ஆண்கள் யாரும் இல்லாமல் போனது போல் அந்தப் சிறுபெண் மிளகு வடை வாடையடிக்கும் கையால் சூட்டிப் போனாள். காமிராக்காரர்கள் அப்போது காணப்படவில்லை. 

அந்தச் சடங்கு முடிந்து பேச்சுகள் பின்னால் வைத்துக் கொள்ளலாம் என்று சொல்லி பிரச்சனைகள் பற்றிய விவாதம் தொடங்கியது.

 “மிளகு சாகுபடி செய்யறதுக்குப் பதிலா பத்து நெருப்புக்கோழி வாங்கி மேய்க்கலாம். கூட்டிக் கழிச்சு பார்த்தால், கையில் தங்கறது ஒத்தை ரூபா”

உன்னித்தன் கொஞ்சம் அதிகமாகவே பிரச்சனையை ஊதிப் பெருக்கித் தொடங்கி வைத்தார். 

“பின்னே என்ன, மிளகு ராஜ்ஜியமாக இருந்த உத்தர கன்னடத்திலே பத்து டன் மிளகு விளைஞ்சா அபூர்வம். பூச்சி அரிச்சு அதிலே பெரும்பாலும் உதிர்ந்து போகுது. நம்ம கேரள பெப்பர், தலைச்சேரி வகையும் மலபார் வகையும் முக்கியமா நல்லா போகணும்னு போன வருஷம் நினைச்சது என்ன ஆச்சு? எல்லா கொடியும் ஆறு வருஷம் பூத்து காய்ச்சு கனியாகி ஆயிரம் டன் விளைச்சல் எதிர்பார்த்தால், மழை இல்லாமல் போய் அதுலே பாதி கூட வரல்லே” என்றார் பீமாராவ்.  

தட்சிணா சார் மேடையேறினார். 

நூறு ஏக்கர் மிளகும் ஏலமும் கிராம்பும் ஒரே நிலத்திலே சாகுபடி செய்யற பெரிய விவசாயப் பிரமுகர். 

“மிளகுக் கொடி எல்லாம் வயசாகி நிக்குது  கோழிக்கோடு தொடங்கி மலபார் வரை பதிமூன்று வயசான கொடி அவை எல்லாம். பூக்கத் தயாராக ஆறு வருஷம், பூத்தது அடுத்த ஆறு வருஷம்னு பந்த்ரெண்டு வருஷம் போயாச்சு. இன்னும் ஒரு வருஷம் அந்த மிளகு சாகுபடி ஆகும். அப்புறம் சாகுபடிக்கு புதுக்கொடிகளை பதியன் பண்ணி வச்சிருக்காங்களான்னு கேட்டால், கார்பரேட் தோட்டங்களிலே மட்டும் செஞ்சிருக்காங்க அதுவும் ரொம்ப பந்தோபஸ்தோடு கூட. இனி குறைஞ்சது அடுத்த ஏழு வருஷம் மிளகு வித்துக் காசு பார்க்கறதை மறந்துடலாம்”. 

வேட்டியை கிட்டத்தட்ட அவிழ்த்துக் கட்டியபடியே தட்சிணா மேடையை விட்டு இறங்கினார்.

”மிளகுலே காசு இல்லேன்னு நீங்க சொல்றது முழுக்க உண்மைன்னே வச்சுக்கலாம். அடுத்த ஆறு வருஷம் கொடியே இல்லாம போக விட்டுடுவாங்களா? இது நம்ம கையாலே நம்ம கண்ணைக் குத்திக்கறது மாதிரி இல்லையா? கவர்மெண்ட்  உதவித் தொகை கொடுத்து ஊக்க நடவடிக்கைகளை இனியும் காலம் தாழ்த்தாமல் எடுக்கணும். இல்லையா? மிளகு விவசாயத்தை மறந்துடலாம். மறந்துடலாமா?” 

பீமாராவ் உணர்ச்சி பொங்கக் கேட்டார். 

திலீப் ராவ்ஜி பேச வேண்டிய முறை வந்தபோது பேசித்தான் ஆகவேண்டுமா என்று நினைத்தார் அவர். 

”ஆமா, நீங்களும் ஹோட்டல் தொழிலை விட்டு இப்போது மிளகு, ஏலம், கிராம்பு, ஜாதிக்காய் விவசாயமும் வியாபாரமும் செய்யத் தொடங்கி இருக்கீங்க. புதுசா வந்திருக்கறதாலே எங்களுக்கு புலப்படாத குற்றம், குறை எல்லாம் உடனே தெரியும். சொல்லுங்க”. தட்சிணா சொன்னார். 

திலீப் சொல்ல ஆரம்பித்தார்.  

”இப்போ மிளகு வர்த்தகத்திலே இந்தியா முதல்லே இல்லே. கிட்டத்தட்ட ஆறு வருஷமா இந்தோனேஷியா தான் அந்த இடத்தைப் பிடிச்சிருக்கு. இத்தனைக்கும் அவங்க விளைவிக்கிற மிளகு நம்மோடதை விட தரம் கம்மியானது தான். ஆனா கவர்ச்சிகரமான சந்தைப் படுத்தறதாலே அவங்க நமக்கு ரொம்ப முன்னாடி இருக்காங்க. அதுவும் டாலர் மதிப்பு ஏறப்போறதைக் கணக்கு போட்டு டாலர் வாங்கி மிளகு கொடுத்தாங்க. நல்ல லாபம். கூடவே, மிளகு வாங்கினா, பாதி விலைக்கு ஏலக்காய்னு சலுகை விலை, மிளகு தொடர்ந்து வருஷம் பூரா கிடைக்க ஏற்பாடு இப்படி முன்னாலே இருக்காங்க. சீனாவிலே குளிர்காலம் இந்த வருஷம் சீக்கிரம் வந்ததாலே அங்கே செலவு பண்ண இருநூறு டன் மிளகு உடனே தேவைப்பட்டது. இந்தியா கிட்டே தான் முதல்லே வாங்கறதுக்கு வந்தாங்க. இல்லைன்னு நாம கையை விரிக்க, அழகாக மிளகு அதிக விளைச்சல் கண்டு பத்திரமாக சேமித்து வைத்திருந்த இந்தோனேஷியா உடனே டெலிவரி கொடுத்து பணத்தை அள்ளினது. ஐநூறு கோடி ரூபா அதுவும் அமெரிக்க டாலர் வாங்கி மிளகு கொடுத்த சாமர்த்தியம். எங்கேயோ இருக்காங்க அவங்க. நாம் இன்னும் அரசாங்க கிராண்ட் எதிர்பார்த்துக்கிட்டு எதுவும் பெரிசா செய்யறது இல்லேன்னு படுறது. தப்பா சொல்றேன்னா மன்னிக்கவும்”. 

ஒன்றிரண்டு பேர் இதுக்குக் கைதட்டக்கூட செய்தார்கள். 

“மெய்டன் ஸ்பீச் திலீப் ராவ்ஜி சாரோடது. எல்லாவரும் கையடிக்கணும்” என்று கூட்டத் தலைவர் சொல்லும்போது திலீப் ராவ்ஜிக்கு சிரிப்பு அடக்க முடியாமல் போகத் தலையைக் குனிந்து கொண்டார். என்ன ஆச்சு என்று பக்கத்தில் இருந்த உன்னித்தன் கேட்க, திலீப் சுருக்கமாக “தமிழ்” என்றார்.

அடுத்த ஒரு மணி நேரத்தில் மிளகு பற்றி, சாகுபடி, விற்பனை, சந்தை உருவாக்குவது பற்றி பேச்சு வளர அவ்வப்போது யாராரோ வெளிநடப்பு செய்தார்கள். வேட்டியை இறுகக் கட்டியபடி அவர்கள் வெளியே போய் ஒரு சாயா குடிப்பார்கள் என்று திலீப் ராவ்ஜி நினைத்தார். அதேபடி பத்து நிமிஷம் கழித்து அவர்கள் மறுபடி பூடகமான சிரிப்போடு உள்நடப்பு செய்தார்கள்.

 அவர்கள் திரும்பியதும் விவாதத்தை நிறுத்தி தலைமை உரையை மலியக்கல் கொச்சு தோம என்ற அம்பலப்புழை வர்த்தகர் நிகழ்த்தினார். செம்மீனும் அரிசியும் கொப்பரையும் விற்கும் தான் மிளகு வணிகத்தில் முழுக்க ஈடுபட்டு இருக்கும் இந்தப் பிரமுகர்கள் கூட்டத்தில் பேசத் தனக்குத் தகுதி இருக்கிறதா என்று பலதடவை மனதுக்குள் கேட்டுப் பார்த்து ஒரு பார்வையாளனாக, சக மலையாளியாகப் பேசிவிட்டு அமர உத்தேசம் என்று சொன்னார் மலியக்கல் கொச்சு தோமா.

அவர் கொய்ங் கொய்ங் என்று மூக்கால் முனகி கொப்பரை வர்த்தகத்தையும், மிளகு வர்த்தகத்தையும் எதற்காகவோ ஒப்பிட ஆரம்பிக்க திலீப் ராவ்ஜிக்கு சட்டென்று பகலில் வீட்டுக்கு வந்த வயசானவர் நினைவுக்கு வந்தார். 

அப்பா பரமேஸ்வரன் என்றாரே உண்மையாக இருக்குமா? அப்பா இருந்திருந்தால் இப்போது நூற்றுப்பத்து வயதாகி இருக்குமே. அந்த வயதில் இப்படி இன்னும் செயலாக யாராவது ஜீவித்திருக்க முடியுமா? 

அவருக்கு பசி என்று வந்தபோது அகல்யா திவசச் சாப்பாடு அதுவும் சகலமும் பரிமாறி வைத்த அறுசுவை உணவு முழுக்க ஒரு துளி வீணாகாமல் சாப்பிட்டாரே, யுகத்தின் இறுதிச் சாப்பாடு போல் அத்தனையும் அள்ளி அள்ளி விழுங்க அவருக்கு அப்படி என்ன பசி? 

யோசித்தபடி எழுந்தார் திலீப்.

வீட்டு வாசலில் கார் நிறுத்தி   அபார்ட்மெண்ட் கதவைத் திறக்க முன்னால் நடந்தபோது  படியில் உட்கார்ந்திருந்த அந்தப் பரமேஸ்வரன் பார்வையில் பட்டார். பக்கத்தில் அவருடைய தாங்குகோல்கள் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தன. 

அவரிடம் வாசல் கதவைப் பூட்டிவிட்டுப் போனதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ஒரு மனம் சொன்னது. அவர் யார்? எதற்காக அவருக்கு சாப்பாடு போட வேண்டும்? ஆகாரம் கொடுத்தது என்னமோ சரிதான். அதற்கு அப்புறம் போகச் சொல்லி அனுப்பியிருக்க வேண்டியதுதானே?  திலீப் சாய்வு நாற்காலியில் இருந்தபடி சற்றே கண்ணயர அவர் வெளியே நடந்ததைக் கவனித்திருக்கலாம். இல்லாவிட்டாலும் வெளியே போக வீட்டைப் பூட்டும் முன் அவர் என்ன ஆனார் என்று பார்த்திருக்கலாம். என்ன இருந்தாலும் அவரை   வாசல் படியில் காத்திருக்க வைத்தது மனதுக்கு வருத்தமாகத்தான் இருந்தது.

அவர் தன்னைப் பற்றி,  திரும்பத் திரும்ப தான் பாண்டுப் சால் குடித்தனவாசி பரமேஸ்வர ஐயர், சகா பரமேஸ்வரன், ஹிந்து பத்திரிகையில் பாலஸ்தீனிய பிரச்சனை குறித்து லெட்டர்ஸ் டு தி எடிட்டர் எழுதும் பரமன், மொழிபெயர்ப்பாளர் பரம், திலீப்பின் அப்பா, ஷாலினி மோரேயின் கணவர், கற்பகம்-நீலகண்டன் தம்பதியின் மகன் என்று எல்லா விதமாகவும் ஆசுவாசமும் நம்பிக்கையும் அளிக்கும் பிம்பங்களைக் கட்டமைக்க முயன்றாலும் திலீப்புக்கு நம்பிக்கை வரமாட்டேன் என்கிறது. அப்பா திரும்பி வர சாத்தியமே இல்லை, அவர் இருந்தால் நூற்றுப் பத்து வருடம் ஆகியிருப்பார்  என்பது திரும்பத் திரும்ப அடிப்படை அறிவில் முன்னால் துருத்திக்கொண்டு நிற்கிறது. 

”திலீப் வெளியிலே போய்ட்டு எனக்காக அவசரமா ஓடி வந்தியோ?” 

பரமேஸ்வரன்  மரியாதையோடு எழுந்து நின்று தணிந்த குரலில் விசாரித்தார். திலீப் ராவ்ஜி ஒன்றும் பதில் சொல்லாமல் வாசல் கதவைத் திறந்தார். 

இன்று ராத்திரி இங்கே இருக்கட்டும் இவர். கண்டிப்பாகச் சொல்லி விட வேண்டியதுதான் அவருக்கு இங்கே இடம் இல்லை என்று. காலையில் எழுந்து கலவரப்படுத்தாமல் போகத்தான் அவருக்கு விதித்திருக்கிறது. மற்றபடி நூற்றுப்பத்து வயது அப்பாவாக அவரைக் கற்பனை செய்யக்கூட திலீப் ராவ்ஜியால் முடியவில்லை. ஒரு கால் முழங்காலுக்குக் கீழ் இல்லாமல் போன, தாங்குகோல்கள் ஊன்றிய வயோதிகர்தான் அப்பாவும். ஆனால் அது நாற்பது வருடம் முன்பு 1960-இல். அப்போதே எழுபது வயது.

“சார்” திலீப் அவர் உள்ளே நுழைந்து உட்கார இடம் தேடிய பொழுது அழைத்தார்.  

“சாரா நான் சாரா?” 

அவர் அழுகிற குரலில் கேட்டார். திலீப்புக்குத் தெரிந்த அப்பா பரமேஸ்வரன் வெட்டியாக மார்க்சிஸம் பேசினாலும், உருக்கமாக ’டான் நதி அமைதியாக நடக்கிறது’ நாவல் கதையைச் சொன்னாலும், ஷேக்ஸ்பியரின் கிங் லியரில் லியர் அரசன் தனித்திருந்து புலம்பும் காட்சியைத் தனி நடிப்பாக நடித்துக் காட்டினாலும் குரலில் கம்பீரமும் கார்வையும் உண்டாகி இருக்கும். இந்த வயசன் குரல் தணிந்து யாசித்து கெஞ்சி அஞ்சி நடுங்கி ஒலிக்கிறதே. எப்படி அப்பா பரமேஸ்வரனாக முடியும்? 

ஆனால், கால் வெட்டப்பட்ட நிலையில் தாங்குகோல் ஊன்றி தடுமாறி நடக்கிறாரே. இனி எதையும் கேட்க வாய் திறக்கும் முன், முடவரான அவரை நிற்க வைத்துப் பேசுவது மகா பாபமாகப் பட, அவரை எதிரில் இருந்த சோபாவில் உட்காரச் சொல்லி கை காட்டினான்.

பரவாயில்லே என்றபடி தாங்குகோல்களை செல்லமாக அருகே இழுத்து அவற்றில் கையூன்றிச் சிரித்தார் அவர்.

“சொல்லுப்பா, ஜனனி எப்படி இருக்கா? எங்கண்ணா கிருஷ்ணன் நீலகண்டனும் என் பொண்டாட்டி ஷாலினி மோரேயும் எங்கம்மா கற்பகம் நீலகண்டனும் எப்படி இருக்காங்கன்னு கேட்க மாட்டேன். நான் இப்படி நூற்றுப் பத்து வயசிலே இன்னும் அல்லாடிண்டு இருக்கற மாதிரி அவா யாரும் கஷ்டப்படாம மத்த எல்லோரையும் போல போய்ச் சேர்ந்திருப்பா”.

பதில் வராமல் போகவே தலையை ஆட்டிக் கொண்டு ஒரு நிமிடம் இருந்துவிட்டு தாங்குகோல்களை சத்தம் எழுப்பாமல் தரையில் கிடத்தி, “நீ எப்படி இருக்கே? உன் ஆத்துக்காரி எப்படி இருக்கா? எத்தனை பசங்க? என்ன பண்றாங்க? உலகத்திலேயே அப்பா பிள்ளை இப்படி அந்நியர்கள் மாதிரி ஷேமலாபம் விசாரிக்கறது வேறெங்கேயும் நடந்ததா தெரியலே. நடக்கவும் போறதில்லே” என்றார் வந்தவர்.

“நீங்க பரமேஸ்வர ஐயரா இருந்தா, டெல்லிக்கு போறேன்னு போய் எல்லாரையும் விட்டுட்டு ஓடினேளே நாற்பது வருஷம் முந்தி. உங்க பிள்ளை, ஒய்ப், அம்மான்னு எங்களை ஒரு நிமிஷமாவது நினைச்சு பார்த்தேளா?”  திலீப் ராவ்ஜி அவரைக் கண்ணில் உற்று நோக்கிக் கேட்டார். வந்தவர் தலை குனிந்து மௌனமாக உட்கார்ந்திருந்தார்.

“என் ஆத்துக்காரி ஷேமலாபம் விசாரிச்சேளே? அவள், என் பொண்டாட்டி அகல்யா அஞ்சு வருஷம் முன்னாடி சகல சௌபாக்கியத்தோடயும் போய்ச் சேர்ந்துட்டா. ரத்தப் புற்றுநோய். அவளோட திவசச் சாப்பாட்டைத்தான் நீங்க மதியம் சாப்பிட்டேள்” என்றார் திலீப் ராவ்ஜி சலனமில்லாமல்.

”அடடா அடடா” என்று தாங்குகோல்கள் துணை இன்றி எழுந்து திலீப் ராவ்ஜியை நோக்கி தத்தித் தத்தி வர முயற்சி செய்ய ரத்தினக் கம்பளம் விரித்த சோபாக்களுக்கு இடையே இருந்த இடத்தில் விழுந்தார். கம்பளம் இருந்ததால் அடி படவில்லை என்றாலும் நிலை குலைந்து கிடந்தார் அவர்.   

திலீப் ராவ்ஜி விரைவாக எழுந்து அவரைக் கைத்தாங்கலாகத் தன் சோபாவிலேயே அருகே அமர்த்திக் கொண்டார். அப்பா என்று தயங்கித் தயங்கி அழைத்தார். 

வந்தவர் அவரை இறுக அணைத்தபடி தலையில் முத்தமிட்டார். எழுபது வயது முதியவரை நூற்றுப் பத்து வயது கிட்டத்தட்ட ஆன வங்கிழவர் குழந்தை போல ஏக்கத்தோடு பெயர் விளிக்க திலீப் ராவ்ஜியும் கண் கலங்கினார். 

“நீங்க இங்கேயே இப்போதைக்கு இருந்துக்கலாம். அனந்தன் கிட்டே சொல்லிடணும். என் பிள்ளை”

“என் பேரன் என்ன பண்றான்? நீ என்ன பண்றே?” வயோதிகர் குரலில் எதிர்பாராத சந்தோஷம் ஏறி ஒலிக்கக் கேட்டார். 

”அவன் உங்களை மாதிரி கீழை மார்க்சீயன். ஆனால் ரொம்ப யதார்த்தவாதி. ப்ராக்டிகல் பெர்சன். பெரிய துணிக்கடை வச்சிருக்கான். மலையாள டிவியிலும் ஒரு சேனல் இன்னும் நாலு காம்ரேடுகளோடு சேர்ந்து நடத்தறான். என் மகள் கல்பா. உங்கம்மா நினைவிலே கற்பகம்னு பெயர் வச்சு கல்பான்னு கூப்பிடறோம். ஸ்காட்லாந்திலே பேராசிரியராக வேலையில் சேர்ந்திருக்கா”,

“நீ என்ன பண்றே? பெரியம்மாவுக்கு டைப் அடிச்சுக் கொண்டு போய்க் கொடுப்பியே? அதெல்லாம் இல்லேதானே. எல்லாரும் போயிருப்பா, என்னை மாதிரி கடல் ஆமை கணக்கா, ஏதோ ஜீவிக்கிறேன்னு பூமிக்கு பாரமா விழுந்து கிடக்க மாட்டா. பாம்பே எலக்ட்ரிக் ரயில்லே கால் போனபோதே நான் போயிருக்கணும். பரமன் எஜ்மான் நான் இருக்கேன் உனக்கு நான் இருக்கேன் உனக்குன்னு கிறுக்கச்சி, உங்கம்மா அந்த லாவணிக்காரி போக விடமாட்டேனுட்டா. அப்ஸரா ஆளின்னு அவ ஆடினா அப்சரஸ்ஸே வந்த மாதிரி இருக்கும்.. கிறுக்குப் பிடிச்சுடுத்து பாவம்.. சாரிடா திலீப் உன்னைப் பத்தி கேட்டுட்டு நானே புலம்பிண்டு இருக்கேன்” திலீப் ராவ்ஜியின் தலையைக் குழந்தையை வருடுவது போல் தடவிக் கொடுத்தார் வந்தவர்.

மும்பை பாண்டுப் சர்வ மங்கள் சால் வீடுகளின் நெருங்கிய தொகுதியில் ஆரம்பித்து சற்று முன் மிளகு உற்பத்தியாளர் சங்கக் கூட்டத்தில் பங்கெடுத்து விட்டு வந்தது வரை திலீப் ராவ்ஜி அப்பாவிடம் எல்லாம் சொன்னார். 

அரசியல், இலக்கியம், சங்கீதம் என்று இந்த நாற்பது வருடத்தில் ஏற்பட்ட மாற்றம், புதுமை எல்லாம் நடு ராத்திரி கடந்து பேசிக் கொண்டிருந்தார்கள் அப்பாவும் மகனும்.

நேரு மறைவுக்கு அப்புறம் லால்பகதூர் சாஸ்திரி அரசாங்கம், அடுத்து காங்கிரஸ் பிளந்தது, இந்திரா காந்தி பிரதமரானது, கம்யூனிஸ்ட் கட்சி உடைந்தாலும் வலுப்பெற்று கேரளத்திலும் வங்காளத்திலும் ஆட்சி செய்ய வந்தது, சோவியத் ஒன்றியம் சிதறுண்டது, சைனாவில் மாசேதுங் மறைவுக்குப் பிறகு அரசாங்க சர்வாதிகாரம் கலைந்து போய் அரசாங்க முதலாளித்துவம் ஏற்பட்டது என்று வாய் ஓயாமல் திலீப் ராவ்ஜி பேட்டை, உள்ளூர், மாநில, நாட்டு, உலக அரசியல் நிகழ்ச்சிகளை பரமனிடம் விவரித்தார். இந்திராவின் வரவு, அவர் முன்கை எடுத்து செயல்பட, பங்களாதேஷ் என்ற தேசப் பிறப்பு, இந்திரா ராஜ மானியம் ஒழித்தது, பதினான்கு வங்கிகளை முதலிலும் அடுத்து ஆறு வங்கிகளையும் தேசிய மயமாக்கியது,  பொருளாதாரம் நிமிர நரசிம்ம ராவ் என்ற   பொருளாதார நிபுணரான பிரதம மந்திரியும் அவருடைய அரசாங்கமும் திட்டமிட்டுச் செயலாற்றியது மற்றும் அவர்கள் இந்தியப் பொருளாதாரத்தை ஏறுமுகமாக எடுத்துச் சென்ற சாதனை என்று அரசியல் வெளியில் நிகழ்ந்தவை பற்றி அடுத்து விவரித்தார் திலீப்.  எமர்ஜென்சி கொண்டு வந்த இந்திராவின் அரசியல் வீழ்ச்சியையும், அவரது மறுவரவையும், தன் காவலர்கள் கையால் அவர் அடைந்த மரணத்தையும் பற்றிச் சொன்னார். இளைஞர் சமுதாயத்தைப் பிரதிநிதிப்படுத்திய ராஜிவ் காந்தி பிரதமராக இந்தியாவின் அறிவியல் வாயிலைத் திறந்து வைத்த தகவல் புரட்சி பற்றி விவரித்தார்.

தமிழில் வானம்பாடி, கசடதபற, எழுத்து என்று இயக்கங்களும், ந.பிச்சமூர்த்தி, ஞானக்கூத்தன், வைதீஸ்வரன், பிரமிள்  என்று ஆளுமைகளும் தமிழ்க் கவிதைப் போக்கை மடை மாற்றியது குறித்தும் அடுத்து விவரமாக எடுத்தோதினார் திலீப் ராவ்ஜி. தமிழ்ச் சிறுகதை, நாவல், குறுநாவல் பற்றிப் பேசவும் சிறந்த எழுத்தாளர்கள், சிறந்த படைப்புகள் என்று பட்டியல் தயாரிக்கவும், நிராகரித்து வேறு பட்டியலிடவும் அதையும் தள்ளிக் களைந்து மற்றுமொரு பட்டியலிடவும், சளைக்காமல் இதை திருப்பித் திருப்பிச் செய்யவும் நிறைய வாய்ப்பும், பலருக்கு நிறைய நேரமும் இருப்பதாகச் சொன்னார் திலீப் ராவ்ஜி. 

நடுவில் பசி எடுக்க, ரொட்டித் துண்டுகளில் ரெப்ரிட்ஜிரேட்டரில் இருந்து எடுத்த வெண்ணையைத் தடவி டோஸ்டரில் வைத்துச் சுட்டு ஆரஞ்சு மர்மலேட் பூசிய டோஸ்டும், மைக்ரோ அவனில் தயாரித்த இன்ஸ்டண்ட் காப்பியும் ராத்திரி உணவாக இருவரும் பேச்சுக்கு இடையே உண்ணவும் பருகவும் செய்தார்கள்.

மரபு இசையை காருகுறிச்சி, அரியக்குடி, செம்பை, செம்மங்குடி, முசிரி, எம்.எஸ், பட்டம்மாள், மகாராஜபுரம் சந்தானம், தண்டபாணி தேசிகர் போன்ற மூத்த வித்வான்கள் வளப்படுத்தி விடை பெற்றது, மாண்டலின் ஸ்ரீனிவாசும், பாம்பே ஜெயஸ்ரீயும், நித்யஸ்ரீயும், சௌம்யாவும் அருணா சாயிராமும் புத்தலையாகத் தோன்றி வந்தது, சஞ்சய் சுப்பிரமணியனும், டி எம் கிருஷ்ணாவும் அரும்பி இருப்பது,  மரபு இசையையும் விளிம்புநிலை மக்களின் இசை வெளிப்பாடுகளையும் இணைக்கும் முயற்சிகள் பற்றியும் அடுத்துப் பேச்சு தடம் மாற்றி நகர்ந்தது.  

தமிழ் சினிமாவில் ஏற்பட்ட மாறுதல், புது அம்சங்கள் பற்றி, முக்கியமாக பாரதிராஜா, பாலு மகேந்திரா, பாலச்சந்தர், மணிரத்னம் போன்றவர்களின் ஆக்கங்கள், இளையராஜாவின் இசை வரவு, கமல்ஹாசன், ரஜினிகாந்த் என்ற இரண்டு பெரும் வெண்திரை வரவுகள், ஏசுதாஸும் மலையாள திரை இசையும், மலையாள சினிமாவின் மம்முட்டி, மோகன்லால் என்ற தனித்துவம் கொண்ட  புதிய முகங்கள், மலையாளத் திரைப்படம் மலையாள இலக்கியத்தை அடிப்படையாகக் கொண்டு செயல்படுவது, இந்தி சினிமாவில் அமிதாப் பச்சன் என்ற மனிதரின் மகத்தான வளர்ச்சி, ஷோலய் என்ற பிரம்மாண்டமான வணிகத் திரைப்படம், சத்யஜித்ரேயின் அபு முத்திரைப் படங்களைத் தொடர்ந்து வெளியான செலுலாய்ட் கவிதைகள் எனப் பாராட்டப்படும் வங்காளப் படங்கள் என்று சினிமா பற்றி அடுத்துப் பேசினார் திலீப். ரிச்சர்ட் ஆட்டன்பரோவின் காந்தி திரைப்படம் பற்றிக் குறிப்பிட்டார். காந்தியாக நடித்து ஆஸ்கார் விருது வாங்கிய பென் கிங்க்ஸ்லி மகாத்மா காந்தியை விட அசலான காந்தியாகத் திரையில் வாழ்ந்து கோடிக் கணக்கானவர்களைக் கவர்ந்தது பற்றித் தெரிவித்தார்.

 பூபேன் கக்கர், கீவ் பட்டேல், அர்ப்பணா கவுர், கோபுலு, கொண்டைய ராஜு, ஜெயராஜ், மரியோ மிராண்டா, ஆர் கே லக்‌ஷ்மண், ஈ பி உன்னி இப்படி இந்திய ஓவியம் மரபுத் தொடர்ச்சியோடு மேலை நாட்டு ஓவியப் போக்குகளோடு சேர்ந்து நடப்பது குறித்துப் பேசினார்.

 நாடக மேடையில் மராத்தி சகாராம் பைண்டர் போன்ற விஜய் டெண்டுல்கர் நாடகங்கள். கன்னடத்தில் கிரிஷ் கர்னாடின் ஹயவதனா, நாகமண்டலா போன்ற நாடகங்கள், தமிழில் கூத்துப்பட்டறை நாடகங்கள் பற்றிச் சொன்னார். மலையாள நாடகங்களில் ஒரு தேக்கம் வந்தது என்றார் திலீப்.

பரமன் பேச எதுவும் இல்லை என்பது போல திலீப் சொல்வதை எல்லாம் ஒரு சொல் சிந்தாமல் கேட்டபடி இருந்தார். அவர் இத்தனை வருட காலம் எங்கே போயிருந்தார் என்றும் எப்படி வயதாவதைக் கட்டி நிறுத்தினார் என்றும் தெரிந்து கொள்ள திலீப் ராவ்ஜிக்கு ஆசைதான். கேட்க தயக்கமாக இருந்தது. அவர் சொல்லியிருந்தாலும் அதில் எவ்வளவு நம்பியிருக்கப் போகிறார் திலீப். 

பூடகமானதைப் பூடகமாகவே இருக்க விட்டு வாழ்க்கை முன்னால் போகட்டும் என்று முடிவு எடுத்து முன்னே போக சுலபமானதாகத் தெரிந்தது.

விடியப் போகிறது என்று ஹாலில் நான்கு மணி அடித்த சுவர்க் கடியாரம் நேரம் சொல்ல அவர்கள் உறங்கப் போனார்கள். அதற்கு முன் தான் உடுத்தாமல் வைத்திருந்த இரண்டு புது வெள்ளைப் பைஜாமாக்களையும், இரண்டு முரட்டு கதர் குர்த்தாக்களையும் பரமனுக்குத் தந்தார் திலீப். சற்றே தொளதொளவென்று இருந்த அந்தத் துணிகளை உடுத்திக் கொள்ளும் முன், அந்த அதிகாலை நேரத்தில் பல் துலக்கி கீஸரின் வென்னீர் சுட வைத்துக் குளித்து வந்தார் பரமன்.  அவருடைய பழைய உடைகளை பிளாஸ்டிக் உறையில் வைத்து மூடி வாசலில் துப்புரவுப் பணியாளர்கள் எடுத்துப் போக வழி செய்தார் திலீப். இருவரும் உறங்கப் போக அம்பலப்புழை இயங்க ஆரம்பித்திருந்தது.

***

Series Navigation<< மிளகு – அத்தியாயம் பதினொன்றுமிளகு அத்தியாயம் பதின்மூன்று >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.