மிளகு: அத்தியாயம் எட்டு – 1999: லண்டன்

நாராயண பிஷாரடி வைத்தியர் ஒரு கனவு கண்டார். பேராசிரியர் பிஷாரடி. பிஷாரடி வைத்தியர். எல்லாம் அவர் பெயர் தான். அவர் கண்டது தூசு அடர்ந்த சிறிய ஊரின் வீதிகளில் சைக்கிள் ஓட்டிப் போகும் கனவு. 

சைக்கிளை அதி வேகமாகப் பின் தொடர்ந்து கனைத்தபடி ஒரு செந்நாயோ, கடுவன் பூனையோ, புள்ளிகளும் வரிகளும் கலந்த மேல் தோல் உடைய வேறெதுவோ துரத்தியபடி ஓடி வருகிறது. 

கோவிலில் செண்டை வாசிக்கும் மாரார், பக்கத்தில் காற்றில் மிதந்தபடி எடக்கா வாசித்து வருகிறார். வாசித்தபடியே அந்த வினோதப் பிராணியை ஷூம் ஷூம் என்று ஒலியெழுப்பி விரட்ட முயற்சி செய்கிறார். 

அந்தப் பிராணியோ அதெல்லாம் கேட்க மாட்டேன் என்று பிஷாரடி வைத்தியரின் சைக்கிளைப் பின்னும் மூர்க்கமாக விரட்டி வருகிறது. அதன் ஒரே நோக்கம் வைத்தியரை சைக்கிளில் இருந்து இழுத்துப் போட்டுக் குத்திக் கிழிப்பதாகத் தோன்றுகிறது. அல்லது அவரை இழுத்துத் தரையில் கிடத்தி முகத்தில் சிறுநீர் கழிக்க உத்தேசித்திருக்கலாம் அது. 

“வைத்தியரே, ஓட வேணாம். வெறிநாய் துரத்துது. நீங்களும் பறங்க. முடிஞ்ச அளவு உயரத்துலே பறந்து போங்க” என்று அவ்வப்போது பிஷாரடி வைத்தியருக்கு ஆலோசனை நல்கிக் கொண்டே எடக்கா வாசிக்கிறார் மாரார். 

மான் மார்க் குடை பிடித்தபடி எதிர்ப்படுகிற யாரோ குடையை விரித்து உயர்த்திப் பிடிக்கும்போது பிஷாரடி வைத்தியர் பறக்க ஆரம்பிக்கிறார். வைத்தியருக்குப் பின்னால் இருந்து மாரார் இரைகிறார் – ”வைத்தியரே, கொஞ்சம் விலகி இருங்க. அவசரமா வந்துட்டிருக்கேன்”. 

அவர் எடக்க வாத்தியத்தோடு முன்னால் பறக்க, பிஷாரடி வைத்தியரின் சைக்கிள் நெட்டுக்குத்தலாக ஆற்றுப் பாலத்துக்குக் கீழே விழுகிறது.  கனவு அங்கே முடிந்தது.

விழித்தபோது ஜன்னலுக்கு வெளியே தாழப் பறந்து இரண்டு சின்னஞ்சிறு விமானங்கள் வைத்தியர் இருக்கும் பெருநகர்ப் பகுதியைச் சுற்றி ரோந்து வந்து கொண்டிருந்ததைக் கவனித்தார். வீட்டுக்குள் விமானம் புகுந்த மாதிரி விமான இஞ்சின் சத்தம் மிகுதியாகக் கேட்டது. லண்டன் மாநகர் துயிலுணர்ந்த, வெளிச்சம் மிகுந்த கோடைகாலக் காலை நேரம் ஐந்து  மணி. 

காப்பி சூடு படுத்தும்போது தன் கனவைப் பற்றி யோசித்தார் வைத்தியர். கனவில் மட்டுமில்லை, வினோதமான சூழல்களில் இருந்து புகுந்து புறப்படுகிறவராகத்தான் பிஷாரடி வைத்தியர் எத்தனையோ தடவை நிஜத்திலும் இருந்திருக்கிறார். மனைவி மரித்த இருபது வருடமாக இப்படித்தான் நடக்கிறது, கனவு ஏற்படுகிறது. அவர் மனைவி ஸ்ரீதேவி வாரஸ்யர் கனவிலெல்லாம் வருவதில்லை. எப்போதாவது பிஷாரடி வைத்தியர் நினைத்துக் கொள்வார்.

உடுப்பிக்கு மிக அருகே மால்பே-யில் அவருடைய குலதெய்வக் கோவிலில் நிரந்தர ஸ்ரீகோவில் காரியம் நோக்கும் கௌரவப் பணியை மேற்கொள்ள அவரை மேற்படி கோவில் நிர்வாகிகள் அழைத்தபோது ஒரு தடவை பயணம் போக மட்டும் கட்டணம் கட்டி ஒற்றை டிக்கெட் எடுத்து அனுப்பியிருந்தார்கள். 

இண்டர்நெட்டும், சகலமும் தெரிந்த அதிபுத்திசாலி மொபைல் தொலைபேசிகளும் உலகை புறங்கைக்கு அடுத்து நெருக்கமாகக் கொண்டு வரும் காலத்தில், உடுப்பி பக்கத்து கோவில் நிர்வாகிகள் இண்லெண்ட் லெட்டரில் சமாசாரம் எழுதி அவருக்கு அனுப்பியதோடு பழுப்பு உறை ஒன்றில் இரண்டாம் வகுப்பு ரயில் டிக்கெட்டையும் அனுப்பி வைத்திருந்தார்கள்.  

வைத்தியர் அந்த டிக்கெட் செல்லுபடி ஆகாமல் கைச்செலவில் தான் புறப்பட்டுப் போனார். ரயில் விபத்துக்குள்ளாகி அப்பயணம் பாதியில் முடிந்தது. பாலத்தில் இருந்து தொங்கிக்கொண்டு இருந்த ரயில் பெட்டியில் இருந்து ஊர்ந்து இறங்கி ஓடிப் போகும் போது   நதியின் வெள்ளப் பெருக்கை ஒரு வினாடி நின்று கண்டார் அவர். 

அடுத்த மாதம் திரும்ப போகும்போது ஏனோ அந்த உத்தியோகம் பிடிக்கவில்லை அவருக்கு. கோல் விளக்கு, மத்தளம், துந்துபி, இலைத் தாளம், துளசி பயிரிட்ட தோட்டம் என்று தினசரி கணக்கெடுத்து மேற்பார்வை பார்க்கும் வேலை ஒரு மணி நேரம் தான் பிடிக்கும் தினசரி. 

அதைத் தவிர பிரமுகர்கள் உடுப்பி பிரதேசத்துக்கு வரும்போது அவர்களுக்கு சகல கோவில்களிலும் தரிசன சௌகரியம் செய்து கொடுப்பதோடு ஆகாராதிகள் விஷயத்திலும் ஏற்பாடு செய்ய வேண்டும். 

அப்போது ஓய்வு பெறாத பேராசிரியராக இருந்ததால், அதுவும் இங்கிலாந்தில் கல்லூரி ஆசிரியராக நீண்ட காலம் இருந்ததால், ஓராண்டு பணியிடை நீண்ட விடுப்பு எடுத்து கோவில் காரியம் பண்ண அவருக்குப் பிடித்திருந்தது. 

ஆனாலும் அந்த வேலையில் ஈர்ப்பு நிலைக்கவில்லை. கோல் விளக்கை தினமும் எண்ணிச் சரி பார்க்கலாம். தோலானும் துருத்தியும் சாப்பிட இட்டலியும் சட்டினியும் கிடைத்ததா என்று பொறுப்பெடுத்து கவனித்துக் கொள்வது அனாவசியமான காரியமாக வைத்தியருக்குப் பட்டது. 

கோவில் நிர்வாகிகளிடம் அதைச் சுட்டிக் காட்டியபோது இட்டலி இல்லாவிட்டால் தோசை உண்டாக்கிப் போடலாமே என்று புத்திசாலித்தனத்தை உறுதி செய்து கொண்டார்கள். போனபடிக்கே வைத்தியர் திரும்பி வந்த நாள் அது.

கோவில் முற்றத்தில் தினசரி மயில்கள் ஆடுவதை அவர் மிகவும் விரும்பினார். எனினும்  அவற்றின் அகவுதலை அவரால் சகித்துக் கொள்ள முடியவில்லை. மயில்கள் இன்னும் வந்து சேராத லண்டன் மாநகரம் இது. 

மனதில் மயில்கள் மௌனமாக ஆட அவர் படுக்கையில் எழுந்து உட்கார்ந்தபோது இன்று ஞாயிற்றுக்கிழமை என்பது நினைவு வர சின்னதாக ஒரு சந்தோஷம் எட்டிப் பார்த்தது. 

லண்டன் கல்லூரியில் வகுப்பெடுக்கப் போக வேண்டியதில்லை புரபசர் நாராயண பிஷாரடி அவர்கள். உலகம் சகித்துக்கொள்ளும் அளவில் தான் இருக்கிறது. காப்பியும், நேற்று வாங்கிய ரொட்டியைச் சுடவைத்து சேமியா உப்புமாவும் உண்டாக்கி காலை உணவை ஒருவழியாக ஏற்படுத்திக் கொள்ளலாம். நினைத்தபடி எழுந்து நிற்க வாசலில் அழைப்பு மணி ஒலித்தது.  

”குட் மார்னிங் சார். டீ குடிச்சீங்களா? இன்னிக்கு என்ன பரிபாடி?”

கல்பா.

பிஷாரடியின் வால்தம்ஸ்டோவ் புறநகர் அபார்ட்மெண்டில் தங்கியிருக்கும், இந்தியாவிலிருந்து வந்த இளம்பெண். அவருடைய அம்பலப்புழை நண்பர் திலீப் ராவ்ஜியின் மகள். மலையாளமும் இங்க்லீஷும் தமிழும் பேசும் அழகான குழந்தைச் சாயல் பெண்.   உற்சாகமான குரல் அவளது. கற்பகம் என்ற அவளுடைய பாட்டியின் பெயரை அவளுக்கு வைத்து கல்பா என்று அதைச் சுருக்கியானதாம்.  

”கல்பா, டீ கெட்டில் சமையலறையில் இருக்கு. தண்ணி ஊத்தி அதை சூடு படுத்தறியா ப்ளீஸ்? அருமையான ஏர்ல் க்ரே டீத்தூள் பெட்டி வாங்கி வந்திருக்கேன். ஸ்டார் ட்ரெக் டிவி சீரியல்லே காப்டன் பிக்கார்ட் மாதிரி கெத்தா நாளை ஆரம்பிக்கலாம். நம்ம மலையாள ஸ்டைல்லே டெமூரா பஞ்சசாரயும் இருக்கு. நாடன் சர்க்கர ருசியே தனிதான்.” 

பிஷாரடி வைத்தியருக்குப் பிடித்தமான டெலிவிஷன் சீரியல் ஸ்டார் ட்ரெக். கேப்டன் பிக்கார்ட் ஆக நடிக்கும் சர் பாட்ரிக் ஸ்டூவர்ட் அவருடைய அபிமான நடிகர்.  ரசிகர் கடிதம் கூட பாட்ரிக்குக்கு எழுதினார். 

கல்லூரி பேராசிரியர் மனம் பூரித்து உணர்ச்சி வசப்பட்டு ரசிகர் கடிதம் எழுதுவது சரியில்லை என்று தோன்ற அதைக் கிழித்துப் போட்டுவிட்டார் அவர்.   

கட்டாயம் அதை மறுபடி எழுதி அனுப்புவார். சர் பேட்ரிக் தீர்க்காயுசும் செயலுமாக ஷேக்ஸ்பியர் எழுதிய சானட் கவிதைகளைச் சொல்லிக் கொண்டிருக்கட்டும்.  

”ஸ்டார் ட்ரெக் பார்ப்பியா கல்பா?” பிஷாரடி கேட்டார் முகத்தில் மலர்ச்சி மாறாமல் டீ கெட்டிலோடு கிச்சன் போகும் இருபது வயதுக் காரியை.

“இல்லே ப்ரபசர் சார். ப்ரெண்ட்ஸ் மட்டும் அப்பப்போ பார்ப்பேன்.”  

“ஆனத் தலயோளம் வெண்ணெய் தராமடா

ஆனந்த ஸ்ரீகிருஷ்ணா வா முறுக்கு”

அவள் பாடியபடியே கெட்டிலைச் சுட வைத்தாள். 

“இந்தப் பாட்டு உனக்கு எப்படித் தெரியும் கல்பா? பழைய   ஜீவித நௌகா மலையாளப் படத்திலே வர்ற பாட்டாச்சே. இது வந்தபோது நீ என்ன,  உங்கப்பா கூட சின்னப் பையனா இருந்திருப்பார்” அவர் சிரித்தபடி சொன்னார்.

“டிவியிலே பார்த்தேன் ப்ரபசர் சார். ஜீவித நௌகா வந்தபோது நீங்க பிறந்திருந்தீங்களா?”

“எனக்கு அப்போ அஞ்சு வயசு. அம்பலப்புழை தியேட்டர்லே படம் பார்க்க அம்மாவோட போனேன். ஒரு படம் தான் அம்மா கூட்டிப் போனாங்க. இதுதான் அது. பாட்டும் மசாலா கடலை சாப்பிட்டதும் நினைவு இருக்கு” பிஷாரடி சொன்னார். காலையிலேயே லேசாகிப் பறந்தது மனசு. 

 ”குளிச்சு, புதுசா துவைத்த உடுப்போட உங்க கோவிலுக்குப் போக வந்திருக்கேன் ப்ரபசர் சார். நீங்க வர்றீங்களா?”

பிஷாரடி லண்டன் புறநகர் பகுதியில் ஒரு சிறிய கிருஷ்ணன் அம்பலத்தைக் கவனித்துக் கொள்கிறார். கல்லூரியில் எமிரிட்டஸ் கௌரவப் பேராசிரியராகப் பணியாற்றுவதோடு, கோவில் வழிபாட்டு நடத்துதலும் அவருடைய தினசரி செயல்பாடு.

”இன்னும் அரை மணி நேரமாகும். பரவாயில்லையா?” பிஷாரடி வினவினார். 

“ஓ கிருஷ்ணன் சரின்னு சொன்னா எனக்கும் சரி தான்” என்றாள் கல்பா. 

“செத்தி மந்தாரம் துளசி பிச்சகப்பூ   மாலகள்  சார்த்தி” என்று அவள் அடுத்த பழைய கானத்தைப் பாடிக் கொண்டிருந்ததைக் கேட்டபடி குளிக்கக் கிளம்பினார் பிஷாரடி.

சீவேலிக்குப் பத்து நிமிடம் முன்னால் கோவிலுக்கு ரெண்டு பேரும் போய்ச் சேர்ந்திருந்தார்கள். அந்தக் கோவில் சுத்தமானதாக, அழகானதாக இருந்தது. தரையை ஈரத் துணியால் அடிக்கடி சுத்தமாக மெழுகி வைத்திருந்தது. 

பிஷாரடி தன் கோவில் பணியாளர்களுக்குச் சொன்னபடி அது அடிக்கடி நடக்கிறது என்பது கல்பாவுக்குப் பட்டது.  அரை மணிக்கு ஒரு தடவையாக இருக்கலாம் தரை மெழுகுவது. 

நல்ல துளசி வாசனை கமழும் கிருமிநாசினி பயன்படுத்தியிருப்பார்களோ! கோவில் வாசனை மனதில் நாள் முழுக்கத் தங்கி இருக்க அது வழி செய்யுமோ.   

“தரை துடைக்கும் பணியாளர்கள் யார் தெரியுமா?”

கல்பாவிடம் ஆங்கிலத்தில் கேட்டார் பேராசிரியர். “பல இந்திய மாநிலங்களில் இருந்து வந்த ஊழியர்கள். அப்படித்தானே?”

”பல இந்திய மாநிலங்களிலிருந்து வந்தவர்கள், சரிதான். ஆனால் யாரும் ஊழியர் இல்லை இங்கே. டாக்டர்களாகவும், கம்ப்யூட்டர் கம்பெனி சீனியர் எக்சிக்யூட்டிவ்களாகவும் இருப்பவர்கள், பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள், ஹோட்டல் நடத்துகிறவர்கள், இன்னும் பல தொழில், பெரிய அங்காடி நடத்துகிறவர்கள் இப்படி ஒவ்வொருத்தரும். ஒரு வார-இறுதி சேவையாக இங்கே தரை துடைக்கிறார்கள்” அவர் சிரித்தபடி சொல்ல கல்பா சிரத்தையோடு பார்த்தாள். 

ஞாயிற்றுக்கிழமை வெண்பொங்கல் பிரசாதம் கோவில் சமையலறையில் பெரிய பாத்திரங்களில் தயாராகிக் கொண்டிருந்தது. பக்கத்தில் சிறு மின்சார அடுப்புகளில் பொங்கலில் கலக்க மிளகை வறுத்துக் கொண்டிருந்தார்கள்.

“எனக்கு மிளகு அலர்ஜி” என்றாள் கல்பா. ”அவசரத்துலே பொங்கல்லே இருக்கற ஒத்தை மிளகை கடிச்சா அடுத்த பத்து நிமிஷம் வாய்க்குள்ளே அரிக்க ஆரம்பிச்சுடும்” என்றாள் கண்ணை உருட்டி.

“அப்போ மிளகை விட்டுட்டு மத்ததை கழிக்க வேண்டியது தானே” பிஷாரடி பெரிய தீர்வு கண்டுபிடித்த மாதிரி நிறைவாகச் சிரித்துத் தொடர்ந்தார்-

”வெண்பொங்கல் பண்ணற, மிளகு வறுக்கற இந்த சமையல் கலைஞர்களும் நீதிபதி, வக்கீல், கடைக்காரர் இப்படி பல தொழிலதிபர், அதிகாரிகள்”.

கல்பாவுக்கு ஆச்சரியம் தீர்ந்திருந்தது. அதற்கேற்றாற்போல் பிஷாரடி பேராசிரியரும் கோவில் அலுவலகத்தில் போய் அம்பல மேல்சாந்தி உடுத்தும் பஞ்சகச்ச வேஷ்டியும், மிஞ்சிய தலைமுடியை சின்னதாக முன்குடுமி கட்டியும், நெற்றியில் சந்தனம் பூசியும், அசல் கிருஷ்ணன் கோவில் பூசாரியாகி இருந்தார்.

பிரார்த்தனை மண்டபத்தில் ஓர் ஓரமாக முக்காலி போட்டு வைத்திருந்த பழைய தொலைபேசி ஒலித்தது. இந்த மண்டபத்துக்கு வரும் யாரும் கையில் மொபைல் தொலைபேசியோடு வர முடியாது. வாசலிலேயே அவற்றை வாங்கி வைத்து, வழிபாடு முடிந்து திரும்பும்போது திருப்பிக் கொடுக்கப்படும்.

எனினும் அவசியமான செய்தி யாருக்காவது தெரிவிக்க வேண்டுமானால் கோவிலின் பொதுத் தொலைபேசி எண்ணுக்குப் பேசினால் போதும். அழைப்பின் முக்கியத்துவம், அவசரம் இவற்றை நோக்கி உள்ளே வந்தவருக்குத் தொலைபேசி தரப்படும். சுருக்கமாகப்  பேசலாம்.

யாருக்கோ பொதுத் தொலைபேசி அழைப்பு மணி ஒலித்தது. வெளியே தோட்டத்தில் செடிகொடிகளுக்குத் தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்த தோட்டக்கார உழைப்புக் காணிக்கையாளர் வேகமாக வந்து ரிசீவரை எடுத்தார். கிருஷ்ண பரமாத்மாவின் புகழைச் சொல்லி வணக்கம் சொல்ல அவரிடம் பேராசிரியர் பிஷார்டியோடு பேச முடியுமா என்று வெளியிலிருந்து கூப்பிடுகிறவர் இரைஞ்சினார்.

பிஷாரடி தொலைபேசியை வாங்கிப் பேசியதுமே அது கல்பாவுக்கு வந்த அழைப்பு என்று புரிந்து கொண்டார். அவருடைய முகத்தில் ஒரு புன்னகை. 

இந்த இளைஞர்களும் இளம் பெண்களும் எவ்வளவு விரைவாக நட்பு வட்டத்தில் பட்டு விடுகிறார்கள். கல்பா வந்து இரண்டு நாள் தான் ஆனது. என்றாலும் அதற்குள் இங்கே லண்டனில் பழைய நட்புகளை புதுப்பித்துக் கொண்டும் புது நட்பை உருவாக்கியும் சுறுசுறுப்பாக அவள் செயல் பட்டிருக்கிறாள் எனத் தெரிந்தது.

”கல்பா இது உனக்கான அழைப்பு” அவருடைய குரலை விட அதிகமான சத்தத்தோடு வந்துட்டேன் வந்துட்டேன் என்று கல்பா ஓடி வந்தாள்.  

 அடுத்த ஐந்து நிமிடம் அந்த மண்டபத்தில் கலகல என்ற சிரிப்புச் சத்தம் தான் இடைவிடாது ஒலித்துக் கொண்டிருந்தது. கல்பா பேசினாள் என்பதை விடத் தொலைபேசியில் சிரித்துக் கொண்டிருந்தாள் என்பதே சரியானது என்று பிஷாரடிக்குத் தோன்றியது.

இந்தக் கால இளைய சமூகம் பேச்சை வெகுவாகக் குறைத்து விட்டிருக்கிறது என்று அவர் நினைத்தார். உடனுக்குடன் எங்கே இருந்தும் யாரோடும் பேச சாதனங்கள் வந்து விட்ட பிறகு பேச்சு குறைந்து விட்டிருப்பது புதிர் தான். 

ஐந்து பத்து நிமிடம்  சிரித்தே பேச வேண்டியதைப் பேசி, கேட்க வேண்டியதைக் கேட்டு விடுவார்கள் இவர்கள். வயதான நம்பூதிரிகள் வாயில் தாம்பூலம் மென்றபடி ஹ ஹூ ந்கோ ஹர் இப்படி ஒலியெழுப்பி பேச்சுத் தொடர்வது போல இது. 

பிஷாரடியின் கொள்ளுப் பாட்டனார் கூட இப்படித்தான் சதா தாம்பூலம் வாயில் அடைத்தபடி பேசியதாக அவருடைய அம்மா சொல்லியிருக்கிறாள். இந்தப் பேச்சோடு தான் கோவில் கொடிமரத்தைச் சுற்றிப் பறந்த ஆலப்பாடு ஸ்வதேசியான வயசர் ஒருத்தரை இறக்கி வீட்டுக்குக் கொண்டுபோய் விட்டிருக்கிறார் அவர் என்று தெரிந்தது.

 ஏன் உலகம் முழுதும் சிரித்து, சொல்ல வேண்டியதையும் கேட்க வேண்டியதையும் கடத்தக் கூடாது? வார்த்தைகளும் சொற்றொடர்களுமாக மொழி என்பது இல்லாமல் போகும் என்று யாருக்காவது கவலை இருந்தால், புத்தகங்களும் எழுத்தும் எப்போதும் இருக்க வழி செய்து விடலாம். பேச்சுக்கு சிரிப்பு, எழுத்துக்குப் புத்தகங்கள். உலகத்தில் கடமுட என்று பேச்சு சத்தம் ஆகக் குறைந்து போகும்.  தன் நினைப்பு போன வழி பிஷாரடிக்குப் பிடித்தது.

“ப்ரபசர் சார், என் நண்பன் இங்கே எங்கேயோ கருப்புக் குதிரை வீதியில் இருந்து பேசறான். என்னை வரச் சொல்றான். வழி கேட்டேன். அது எதுக்கு உனக்கு? எதிர்லே யார் வந்தாலும், ஒரு அணைப்பு, கன்னத்தில் ஒரு முத்தம்னு கொடுத்து கேளு, சொல்லுவாங்க, கொண்டு வந்தே விட்டுவாங்கன்னு சொல்றான். What is your choice? A hug or a kiss?” என்று கேட்டபடி அவள் ஓங்கிச் சிரித்தாள். 

அவசரமாக விலகினார் ப்ரபசர் பிஷாரடி. இந்தப் பெண் பாட்டுக்கு பிரார்த்தனை நேரத்தில் வந்து சேர்ந்து கொண்டிருக்கும் கூட்டம் காண தன்னை ஒரு முப்பாட்டனாக இறுகி அணைத்து கன்னத்தில் கிழவர்களை முத்தமிடும் பாசத்தோடு உதடு பதித்து விடுவாள் என்று தோன்றியதை உடனடியாகத் தவிர்க்கப் பார்த்தார்.

”நான் லண்டனில் சில பகுதிகளைத்தான் விவரமாக அறிந்திருக்கிறேன். இந்த Black Horse street-க்கு இதுவரை போனதில்லை. பக்கத்தில் இருக்கும் அடையாளச் சின்னங்கள் எதேனும் உண்டாமா?”. அவர் கேட்டார்.

”ஓ, கருப்புக் குதிரை ஏறிய வீரன் சிலைக்கு நேர் பின்னால், பாதாள ரயில் நிலையம் வந்து சேர்ந்து உடனே இடது பக்கம் பார்த்தால் சிலையும் வீதியும் கண்ணில் படாமல் போகாதாம்”.

வழிபட வந்த யாரோ உதவிக்கு வந்தார்கள். 

“ப்ரபசர் சார், அந்தத் தெரு பிளாக் ஹார்ஸ் ரோடு இல்லை. டார்க் ஹார்ஸ் ரோடு. இங்கே பக்கத்தில் பாதாள ரயிலோடும் பிக்கடலி பாதையில் இங்கிருந்து ஆறு டியூப் ஸ்டேஷன் தள்ளி வரும். பெரிய, பரபரப்பான டியூப் ஸ்டேஷன் அது. அதை நீங்கள் கவனிக்காமல் கடந்து போக முடியாது”. 

 “தேங்க்ஸ் சார், அதாவது நோ தேங்க்ஸ் ப்ரபசர்.  லண்டன்லே இருக்கற வரை உங்களுக்கு இப்படி அக்கம் பக்கத்திலே எது யார் இருப்பு, எப்படி எந்தத் தெருவுக்குப் போறதுன்னு சொல்லிக் கொடுக்கத்தான் வந்திருக்கேன். வரட்டா?”

கல்பா தோளில் பையை மாட்டிக்கொண்டு சிரித்தபடி இறங்க, “சிரிச்சுண்டே டார்க் ஹார்ஸ் ரோடுவரை போயிடு” என்றார் ப்ரொபசர் பிஷாரடி.

 அவள் மண்டபத்தைக் கடந்து போனதும் தான் பிஷாரடிக்கு நினைவு வந்தது நேற்று  கார்டியன் செய்தித்தாளில் படித்தது. இன்று பாதாள ரயில் சேவை இல்லை. டிரைவர்களும், தொழில் நுட்ப ஊழியர்களும் வேலை நிறுத்தம். 

இதை கல்பாவிடம் சொல்லி இருக்க வேண்டும். இந்தப் பகுதியில் டாக்சிகள் மிக அபூர்வமாகவே தட்டுப்படும் என்பதால், டார்க் ஹார்ஸ் வீதிக்கு இன்றைக்கு யாராவது காரில் இலவச சவாரி கொடுத்தாலேயன்றி போக முடியாது. 

தெரியாதவர்கள் காரில் லிஃப்ட் கொடுக்க முன்வந்தால், வேண்டாம் என்று மறுக்கவும் என்று பிபிசி தொலைக்காட்சியும், செய்தித்தாள்களும் சொல்லிய வண்ணம் இருக்கின்றன. போன வாரம், ஓசி லிஃப்ட் வாங்கி கார் ஏறிய கல்பா வயசுப் பெண், இரண்டு நாள் கழித்து, ஆளரவம் இல்லாத புராதன கட்டிடத்துக்குள் உயிரின்றிக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்தப் பகுதியில் தான் அது.

அவசரமாக கல்பாவைக் கூப்பிட, ப்ரபசர் மண்டபத்துக்கு வெளியே ஓட்டமும் நடையுமாக விரைந்தார். 

 ”கருணாகரா, சீவேலியை நீயும், மாராரும் நடந்துங்கோ. இதோ வந்துட்டேன்” அவர் எதிர்ப்பட்டவரிடம் சொன்னபடி விரைந்தார். 

“நாட்டில் போறீங்களாமே ப்ரபசர் சார்” யாரோ வழி மறைத்தார்கள். 

“ஆமாம் திரும்ப ஒரு மாசம் மேலேயும் ஆகலாம். எல்லா காரியமும் கீ கொடுத்த மாதிரி செய்ய ஒருபாடு பேரை பழக்கியாச்சு. நான் திரிச்சு வராட்ட கூட, விஷமிக்கான் ஒண்ணுமில்ல.”

சொல்லியபடியே கார் நிறுத்துமிடத்துக்கு விரைந்தார் பிஷாரடி.

காரை ஸ்டார்ட் செய்யும்போது, கல்பா முன்னால் போகிறாளா என்று பார்த்தார். அவள் போன தடமே தெரியவில்லை. 

அவர் தப்புதான் என்று மனம் சொன்னது. ஊருக்கு, நாட்டுக்கே புதுசாக வரும் இளம் பெண். அனுப்பி வைத்தவர்கள் பிஷாரடி பார்த்துக் கொள்வார் என்ற திடமான நம்பிக்கையோடு இருக்கப்பட்டவர்கள். 

கல்பா எங்கேயாவது யாரையாவது பார்க்கப் போகணும் என்று சகாயம் கேட்டால், அதுவும் பணிமுடக்கு தினமான  இந்த ஞாயிற்றுக்கிழமை இரைஞ்சினால், அவளை காரில் அழைத்துப்போய் விட்டுவிட்டு வருவது அல்லவா ப்ரபசரின் சகாயமாக இருக்க வேண்டியது? அதல்லாதே, வழியைச் மாத்திரம் சொன்னால் போதுமா? தன்னையே சினந்து கொண்டார் பிஷாரடி. கார் விரைந்தது.

ஐந்து நிமிடத்தில், தெரு ஓரமாக கடப்பதற்காக, வரிக்குதிரை கோடுகளை அடுத்து கல்பா நின்று கொண்டிருந்ததைக் கண்டார் பிஷாரடி.

“காடியிலே ஏறும்மா, கொண்டு போய் விட்டுடறேன். இன்னிக்கு டியூப் ரயில்வே ஸ்டிரைக்னு சொல்ல மறந்துட்டேன். க்‌ஷமிக்கணும்”.

”பரவாயில்லை சார். காலநிலை நல்லாத்தான் இருக்கு. வியர்வையே இல்லாத காலை நேரம். அப்படியே நடந்துட்டாலும் பத்து அணைப்பு பத்து முத்தம்னு ஒரு மணி, ஒண்ணரை மணியிலே போய்ச் சேர்ந்திருப்பேன்”.

காரில் முன் சீட்டில் உட்கார்ந்தபடி சிரித்தாள் கல்பா.

” ’கணிகாணும் நேரம் கமல நேத்ரன்றெ’ பாட்டு அறியுமோ குட்டி? பொரயத்து லீலா என்ற தரவாட்டு பெயர் கொண்ட பி.லீலா சேச்சி பாடியது”. 

பிஷாரடி சொல்லி முடிப்பதற்குள் பாடினாள்

 ”ப்ரபசர் சார், பசிக்குது”

கல்பா குழந்தை போல் முறையிட்டாள். பிஷாரடிக்கும் அப்போதுதான் காலைச் சாப்பாடாக ரொட்டியும், போரிட்ஜும் செய்து வைத்தாலும் சாப்பிடாமலேயே வந்தது நினைவு வந்தது.

”லண்டன்லே உடுப்பி காப்பி ஓட்டல் இருக்குமா? சீரியஸாத்தான் கேக்கறேன்” கல்பா ஆர்வத்தோடு கேட்டாள். 

“ஈஸ்ட் ஹாமில் ஒண்ணு இருக்கு. ஆனால் இத்தனை காலையிலே திறந்திருக்குமான்னு தெரியலே” ப்ரபசர் சொன்னார்.

“ஏன் அப்படி? ஞாயிற்றுக்கிழமை கூட்டம் அங்கேயும் இருக்குமே” கல்பா கேட்டபோது, இருக்கலாம் என்று அவருக்குத் தோன்றியது. 

“இதுக்காக ஈஸ்ட் ஹாம் போகணுமா?” 

பிஷாரடி நைட்ஸ்பிரிட்ஜிலிருந்து திரும்பி காரை மெதுவாக ஓட்டியபடி கிளஸ்டர் வீதியின்   இரண்டு பக்கமும் பார்த்தபடி வந்தார். 

“தா அவிடெ  ஒரு சாயா கட உண்டு” 

பச்சை மலையாளத்துக்கு, அவர் சந்தோஷமான நேரம் என்பதால், இங்கிலீஷில் இருந்து மாறியதாக, கல்பா ஊகித்தாள்.

ப்ளாட்பாரத்தை ஒட்டி ஒடுக்கமான கடை. வாசலில் சாக்பீஸால் எழுதிய பலகை. காரனேஷன் காஃபி ஹவுஸ். அடுத்த பலகை நாலு வரி எழுதி இருந்ததை கண்ணாடி இல்லாமல் பிஷாரடியால் படிக்க முடியவில்லை. 

கல்பா இரைந்து படித்தாள் – ”இன்று பத்தாம் ஆண்டுவிழா. காபி ஆர்டர் செய்தால் டோநட் ஒன்று இலவசமாகத் தரப்படும்”

”சாப்பிட்டுப் போகலாம் சார், வாங்க”. 

கல்பா காரை நிறுத்தப் போவது போல் சைகை காட்ட, தெரு ஓரமாக நிறுத்தினார் பிஷாரடி. காரனேஷன் சாயா காபி கடையில் நாலைந்து பேர் டோநட்டைப் பிய்த்து காபியில் நனைத்துத் தின்று கொண்டிருந்தார்கள். 

சுமாரான ஒரு பெஞ்சில் உட்கார்ந்து முன்னால் மேஜையில் காபியும் டோநட்டும் வரக் காத்திருந்தார்கள் கல்பாவும் பிஷாரடியும். பஞ்ச கச்சமும் முன் குடுமியும் நெற்றியில் சந்தனமுமாக பிஷாரடியை ஒரு வினாடி நின்று பார்த்துப் போனவர்கள் ஒன்றிரண்டு பேர் மட்டும் உண்டு.

திடீரென்று சத்தமாக ஒரு குரல் கேட்டது. மன்றாடும் பலகீனமான சத்தம் அது. “எனக்கு டோநட் தரலே”

முகத்தில் மூன்று நாள் தாடியோடு நடுத்தர வயசுக்காரன் ஒருத்தன் காப்பி ஹவுஸில் பரிமாறும் பெண்ணிடம் புகார் செய்து கொண்டிருந்தான்.

“அரை மணி நேரமா இங்கே இருக்கீங்க. வந்ததுமே டோநட்டை உங்களுக்குக் கொடுத்து நீங்களும் சாப்பிட்டாச்சு. இப்போ காப்பியும் ஆச்சு. எழுந்து நடையக் கட்டுங்க”

“எனக்கு டோநட் கொடுக்கலே” சின்னப் பையன் மாதிரி அந்த மனுஷர் அடம் பிடித்தார்.  இன்னொரு நிமிடத்தில் டோநட் தராவிட்டால் தரையில் விழுந்து புரண்டு அழுவார் என்று கல்பாவுக்குத் தோன்ற பிஷாரடி சார் காதில் சொன்னாள் –

”நாம் வேணும்னா இன்னொண்ணு கொடுக்கச் சொல்லிட்டு காசு தரலாமா?” 

”இல்லே கல்பா. அவன் தெருமுனையிலே பிச்சை எடுக்கற கிழக்கு ஐரோப்பிய அகதி. பிச்சையாக ரொட்டி, டோநட் கொடுத்தா வாங்க அவனோட சுய கௌரவம் இடம் தராது. சில ஐரோப்பிய பிச்சைக்காரங்க நம்ம மாதிரி இந்தியங்க கிட்டே வாங்க மாட்டாங்க. இந்தியாவே பிச்சைக்கார நாடாம்”.

”ஆமா, டெஸ்கோ சூப்பர் மார்க்கெட் வாசல்லே ஒரு போலண்ட் காரன் பிச்சை எடுத்திட்டிருந்தான். என் நண்பன் ஒருத்தன் அவன் கோப்பையிலே ஐம்பது பென்ஸ் போட்டானாம். அவனைத் திரும்பக் கூப்பிட்டு ஒரு பவுண்ட் கொடுத்தான் that stupid Pole.”

“இப்ப நான் என்ன செய்ய?” கல்பா கேட்டாள்

”பேசாமா சாப்பிட்டு எழுந்து போகறதுதான்”.

கல்பா கொஞ்சம் குரல் உயர்த்தி அந்த கிழக்கு ஐரோப்பா-காரனைக் கூப்பிட்டாள்.

“வாங்க, டோநட் நல்லா இருக்கு. எங்களோடு பங்கு போட்டுக்குங்களேன். ”

அவன் முகம் மலர நன்றி சொல்லி பக்கத்து இருக்கையில் வந்து அமர்ந்தான்.. உடல் வாடையோடு இருப்பான் என்று கல்பா எதிர்பார்த்தபடி இல்லாதவன். 

”இந்தோனேஷியா தெரியுமா?” அவன் கல்பாவைக் கேட்டான். காப்பி குடித்தபடி, தெரியும் என்றாள் அவள்.

”அங்கே நூறு பேராக சேர்ந்து நூறு ஏக்கர் தோட்டம் வாங்கி மிளகு சாகுபடி செய்து ”.  

செய்து? கல்பா கேட்டாள்.

”டோநட் தரலேன்னு இங்கே சண்டை போட்டுட்டிருக்கேன், எல்லாம் போய்”. 

மிளகு விவசாயம் பெரு நஷ்டத்தைக் கொடுத்தது என்றான் இலவசமாக வந்த டோநட் கடித்தபடி. 

நூறு பேரும் டோநட் கடிக்கிறார்களா என்று விசாரித்தாள் கல்பா. 

”விசாரித்துச் சொல்கிறேன். இன்னொரு டோநட்டும் காப்பியும் கிடைக்குமா?” என்று தயக்கமின்றிக் கேட்டான் அவன்.

“நிச்சயம் கிடைக்காது. அவசரமான வேலை நிமித்தம்  போகிறோம்” என்று எழுந்தார் பிஷாரடி.

“வைரம் வாங்கறதும், மிளகு விவசாயமும், அமைஞ்சு போனால் அதிர்ஷ்டம் கொட்டும். இல்லேன்னா, துடைச்சு வச்சுடும்”, அவன் வெளியே போனான்.

Series Navigation<< மிளகுமிளகு – அத்தியாயம் ஒன்பது – 1999 லண்டன் >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.