மிளகு – அத்தியாயம் இரண்டு (1596)

 சென்னபைரதேவி கோட்டைக் காரியாலயத்தில் நுழைந்தபோது அதிவீர் தளவாயும், சந்திரப்பிரபு பிரதானி மற்றும்  உப பிரதானிகள் எட்டு பேரும், இரண்டு சுபேதார்களும் அங்கே ஏற்கனவே வந்து காத்திருந்தார்கள். எல்லோரும் சென்னாவின் அரசவையின் மரியாதைக்குரிய உறுப்பினர்கள். ஐம்பது கல் தொலைவிலிருக்கும் ஜெருஸோப்பா நகரின்   பிரமுகர்களும் ஹொன்னாவர் மற்றும் மிர்ஜான் நகரப் பிரமுகர்களும் ஒருவர் விடாமல் வந்து பின் வரிசை ஆசனங்களில் அமர்ந்து சென்னபைரதேவி வருவதற்குக் காத்திருந்தார்கள். அரண்மனை முற்றம் கடந்து நீண்ட ஒழுங்கைக்குத் திறக்கும் கதவின் மணி ஒலிக்காக அவர்கள்  எதிர்பார்த்திருந்தார்கள். கணீர் என்று மெல்லிய சத்தம் எழுப்பி முன் மண்டபத் தரை தொடங்கும் வெளியில்  அதிர்வுகள் ஏற்பட, சுவரின் சிறு பகுதி கதவு திறக்க, சுரங்கப்பாதையில் நடந்து வந்த சென்னா மண்டபத்துக்குள் வந்தாள்.

”ஜய விஜயீ பவ”.  

ஜய விஜயீ பவ

விடா லோங்க அ ரயின்ஹ தா பிமெந்தா

விடா லோங்க அ ரயின்ஹ தா பிமெந்தா

 “மிளகுப் பேரரசி நீடு வாழ்க”  

மிளகுப் பேரரசி நீடு வாழ்க. 

பிரதானி   உரக்கச் சொல்ல, அவை முழுக்க எழுந்து நின்று ஒரே குரலில் மீண்டும் ஒலி எழுப்பியது. முன் மண்டபத்தில் இருந்து இரண்டு வரிசையாக மகளிர் ரோஜா இதழ்களைப் பொழிந்தபடி வர, அவர்களுக்கு முன்னால் மங்கல வாத்தியம் வாசித்தும் தோளில் கட்டித் தொங்கவிட்ட முரசுகளை அறைந்தபடி நகர்கிறவர்களும், சங்கு முழங்கும் கலைஞரும், நாட்டியமாடி வரும் நடனப் பெண்டிருமாக அலை அலையாக வந்து அரசியின் காலடியில் வணங்கி மரியாதை செய்து பதில் மரியாதையாக இளவரசர் நேமிநாதரும் ரஞ்சனாதேவியும்  வெள்ளிப் பாத்திரங்களில் வைத்து வழங்கிய காசும், பூவும், சிலருக்குக் அவற்றோடு கூட பொன்னுமாக பெற்று அவைக்கு முதுகு காட்டாமல் நடந்து போனார்கள். நேமிநாதனுக்கும் ரஞ்சனாவுக்கும் வழங்கி வழங்கிக் கை ஓயவில்லை.

போர்த்துகீசிய மன்னர் ஒன்றாம் பிலிப்பு சார்பில் ஹொன்னாவரில் அரசப் பிரதிநிதியாக இருக்கும் இம்மானுவல் பெத்ரோ பிரபு வந்து வாழ்த்துச் சொன்னார்.

“பெலிஸ் அனிவர்சாரியோ யுவர் மெஜஸ்டி” என்று போர்த்துகீசிய மொழியில் தொடங்கி, இங்கிலீஷில் அழைத்து மரியாதையாகச் சொல்லப்பட்டது அது.

விஜயநகரப் பேரரசின் சார்பில் சாம்ராஜ்ய பிரதிநிதி ஹனுமந்த ராயர் மனம் குளிர வாழ்த்தினார். 

”ஒரு குழந்தையைத் தாய் ஆசிர்வதித்து வாழ்த்துவது போல், விஜயநகரப் பேரரசின் சார்பில் வாழ்த்துகிறேன். நாடும் நீயும் எல்லாச் செல்வமும் குறைவின்றிப் பெற்று சாம்ராஜ்யத்தின் பாதுகாப்பில் என்றும் பத்திரமாக இருந்து எந்த இடரும் இன்றி நீடூழி வாழ்ந்து நல்லாட்சி தந்திடம்மா. அரியாகவும் அருகனாகவும் விளங்கி எங்கும் நிறை பரப்பிரம்மமான  தெய்வத்தின் பேரருளும், விஜயநகரப் பேரரசர் வெங்கடபதி தேவராயரவர்களின் வழிகாட்டுதலும் பிரியமும் என்றும் உனக்கு உண்டு”.

வயதான பிரமுகரான அந்த விஜயநகரப் பிரதிநிதியின் பாதம் பணிந்து எழுந்து அவரது வாழ்த்துகளை ஏற்றுக் கொண்டாள் சென்னபைரதேவி.

கர்கல், முல்கி, முத்பித்ரி, சூரா என்று விஜயநகரப் பேரரசால் பாதுகாக்கப்படும் இதர குறுநில  அரசர்களோ, அவர்களின் பிரதிநிதிகளோ கலந்து கொண்டு வாழ்த்திச் சிறப்பித்தார்கள். கேலடி அரசர் வெங்கடப்ப நாயக்கர் கைப்பட கன்னடத்தில் பிறந்தநாள் வாழ்த்துக் கவிதை எழுதி எடுத்துக்கொண்டு வந்து வாழ்த்தி விட்டு, விருந்துக்கு நிற்காமல் அவசரமாகத் திரும்பப்  போனார். ஒரு பெரிய கோப்பை பாயசமும்,   வடைகளும் அவருக்கு அன்போடு அளிக்கச் செய்து சென்னபைரதேவி வழியனுப்பினாள். வெண்ணூர் அரசர் மனைவியரோடு வந்திருந்தார். பன்கடி அரசர் சென்னாவின் உயிர்த்தோழி  உள்ளால் மகாராணி    அப்பக்காவின் கணவர். ஆனாலும் உதிர்ந்து போன உறவு அது. பன்கடி அரசர் வருவார் என்பதால் அவரை சந்திக்க விருப்பம் இல்லாத   அப்பக்கா இரண்டு நாள் முன்பே மிர்ஜான் கோட்டைக்கு வந்து சென்னாவை வாழ்த்திப் போய்விட்டாள். ஆனால் பன்குடி அரசர் வீர நரசிம்மர் இதுவரை வரவில்லை.

“மிளகுப் பேரரசி நீடு வாழ்க” 

 பரிசுப் பொதிகளோடு பிரமுகர்கள்   ஒவ்வொருவராக எதிரில் வந்து குனிந்து வணங்கி வாழ்த்துச் சொல்லிப் போக நேரம் ஊர்ந்தது. 

 “நேமி, இதுவே இன்றைக்கு முழுக்கப் போகும் போல் இருக்கே. மற்ற ராஜாங்கக் காரியத்தை  எப்போது கவனிக்க நேரம் கிடைக்கும்?” நேமிநாதனை அருகே அழைத்து ரகசியமாகக் கேட்டாள் சென்னபைரதேவி.

“அம்மா, அந்தக் கவலையே வேண்டாம். உங்கள் அறுபதாவது பிறந்தநாளன்று அதைக் கொண்டாடுவது தவிர வேறே எந்தச் செய்கையும் இல்லாமல் இருக்கத் திட்டமிட்டுள்ளது. இன்று மட்டும் ஓய்வெடுங்கள். ராஜாங்கக் காரியங்கள் இன்று ஒரு நாள் தாமதமானால் ஒன்றும் ஆகப் போவதில்லை. இன்று மட்டும் எல்லோரும் சந்தோஷமாக அவரவர் வீட்டு விசேஷமாகக் கொண்டாட அனுமதி தாருங்கள்” அவன் அன்பும் மரியாதையுமாகச் சொன்னான்.

”இதென்ன, நீயாக ஏதாவது ஏற்பாடு பண்ணுவது. செய்து முடித்து அனுமதி கேட்பது. புது வழக்கமாக இருக்கிறதே” சிரித்தபடி கேட்டாள். 

“நல்லா கேளுங்கள் அம்மா. நான் சொன்னதைக் கேட்கவே இல்லை இவர்” என்றாள் ரஞ்சனா. “ஆமாம், இவள் ஒரு வாரம் கொண்டாட வேண்டும் என்று அடம் பிடித்தாள். நான் தான் ஒரு நாள் என்று திட்டம் வகுத்தேன்” என்றான் நேமிநாதன். “ஏதேது விட்டால் வருஷம் முழுக்க பிறந்த தினம் கொண்டாடுவீர்கள் போலிருக்கிறதே” என்று கொஞ்சம் சலிப்பு எட்டிப் பார்க்கும் குரலில் சொன்னாள் சென்னபைரதேவி.  சந்திரப்பிரபு பிரதானி முதலானவர்களும் பிரமுகர்களும் எழுந்து வணங்கினார்கள். இந்தச் சந்திப்பு இதோடு நிறைவடைந்தது என்று அவர்களுக்குப் புரிந்தது. 

நேமிநாதன் எழுந்து வணங்கி, “அனைத்து பெரியோர்களுக்கும் ஓர் அன்பு வேண்டுகோள். மகாராணியின் பிறந்த நன்னாள் விருந்து ஏற்பாடாகி இருக்கிறது. இருந்து சுவைத்து உண்டு எங்களை வாழ்த்திப் போக வேண்டுகிறோம்” என்று நேமிநாதன்   பக்கத்தில் நின்ற ரஞ்சனாவை நெருங்க இழுத்து நிறுத்தி இருவருமாக சபையை வணங்கிச் சொன்னான். சென்னபைரதேவியும் தலையசைத்துத் தன் அழைப்பை வெளியிட்டாள்.

பிரதானியும் மற்றவர்களும் அரண்மனை போஜனசாலை வெளி மண்டபத்துக்குப் போகும் பாதையில் நடக்க, சென்னபைரதேவி நேமிநாதனிடம் சற்றே படபடப்பாகச் சொன்னது இது – 

“பிரமுகர்களுக்கு வயிறு நிரம்பினால் போதுமா நேமி?  பொது ஜனத்துக்கு நான் தலைமை வகிக்கவில்லையா? இந்த விருந்துக்குப் பதில் நாட்டு மக்கள் அதுவும் செல்வம் படைத்தவர்கள் அல்லாத சாமானியர்கள் அத்தனை பேருக்கும் இந்த விருந்தை ஏற்பாடு செய்திருந்தாயானால் நான் மகிழ்ந்திருப்பேன். அவர்களை மறந்து போகலாமா?”

”அம்மா, நான் அதை மறப்பேனா? தலைநகர் ஜெருஸோப்பா தெருக்களிலும், ஹொன்னாவர் வீதிகளிலும், கோகர்ணா தெருக்களிலும் மிர்ஜான் கோட்டைக்குச் சுற்றிலும் உள்ள நெல் வயல்களைக் கடந்து நிறைந்துள்ள கிராமங்களிலும், மிர்ஜான் நகரிலும், இந்த மிர்ஜான் கோட்டைக்கு உள்ளே பலவிதமான பணிகளில் ஈடுபட்டிருக்கும் அனைவருக்கும் இன்று இதோ பாருங்கள் இது போன்ற இலைப்பொதியை ஆளுக்கொன்றாக அளிக்கிறோம். குழந்தைகளுக்குச் சற்றே சிறிய பொதியும் பெரியவர்களுக்குப் பெரிதுமாக அளிக்கப்படும் இதெல்லாம்” என்றபடி சிறு பேழை போல் மடித்து ஈர்க்கு குத்திய பச்சை வாழை இலைப்பெட்டியில் ஏதோ பொதிந்து வைத்து சென்னபைரதேவியிடம் காட்டினான். 

“இதென்ன, வாழை இலையை வளைத்து நெளித்து  ஈர்க்குச்சி செருகி, வாழைநார் கட்டிச் செய்த மாதிரி இருக்கே. தொன்னைக்குப் பிறந்த பிள்ளையா இது” என்று சிரித்துக் கொண்டே அந்தப் பொதியைத் திரும்பத் திரும்ப தூக்கிப் பார்த்தாள் சென்னா. நேமிநாதனும் ரஞ்சனாவும் சிரித்தனர்.

”உள்ளே என்ன இருக்கு ரஞ்சி?” ரஞ்சிதா முகம் மலர நின்றாள். அரசியார் ரஞ்சி என்று செல்லமாக அழைத்தால் மனம் முழுக்க நிரம்பிய சந்தோஷத்தில் இருக்கிறார் என்று அவளுக்குப் பொருள் கொள்ளத் தெரியும்.

“கமகமவென்று நெய் வாடை வரவில்லையா அம்மா, மொகலாய் பிரியாணி தான்.”

”ஏது முகலாயர்களைப் போரிட்டு அழிக்க முடியாது என்பதால் அவர்களுடைய பிரியாணியைத் தின்றே அழிக்கத் திட்டமா?” சிரித்தாள்.

“ஆமாம் அம்மா, மொகலாய பிரியாணியும் அவர்களுடைய அவர்களுடைய”

ரஞ்சிதா விஷமச் சிரிப்போடு தடுமாறிப் பேசி நிற்கும் கணவனைக் கண்காட்டினாள். ஏதோ மறைக்கிறார்கள், சட்டென்று நினைவு வந்தது.

“மொகலாய பிரியாணி சுவையும், அவர்களுடைய பெண்களின் அழகும் நேர்த்தியான விஷயங்கள் ஆச்சே” என்றாள் பட்டென்று சென்னபைரதேவி.

“அப்பாடா, தர்ம சங்கடத்தில் இருந்து தப்ப வைத்தீர்கள் அம்மா இவரை. நன்றி” என்றாள் ரஞ்சனா.

“அது சரி, பிரியாணி வாசனை புரிகிறது. கூடவே வேறு ஏதோ நல்ல வாசனையும் தட்டுப் படுகிறதே” பொதியைச் சுட்டிக்காட்டிக் கேட்டாள் சென்னா.

 ”ஆம் அம்மா, பிரியாணியோடு கூடவே ஒரு சிறு தொன்னையில் நெய் விட்டுப் பிசைந்த மிளகுச்சோறு இருக்கிறது. மிளகு மகாராணியின் பிறந்த தினம் மிளகில்லாமலா? கூடவே இரண்டு பருப்பு வடைகளும் தனியாகப் பொதிந்த லட்டு உருண்டையும், சிறு அல்வாத் துண்டும் வைத்திருக்கிறது. குழந்தைகளுக்கு இனிப்புச் சர்க்கரை தெக்கத்தி முட்டாயும் ஆளுக்கொரு கொத்து காய்ந்த இலையில் பொட்டலம் கட்டி உள்ளே இட்டிருக்கிறது. இந்தப் பொதி போல் கிட்டத்தட்ட  இருபதாயிரம் விருந்துணவுப் பொதிகள் காலையிலிருந்து மேற்கு வீதி முழுக்க  பந்தல் போட்டு தெருவில் வரிசையாக அடுப்பு பற்றவைத்து ஏற்றிக் கிண்டிக் கிளறி இறக்கப்பட்டு சூடும் சுவையுமாகப் புதிதாகப் பறித்த வாழை இலைப் பெட்டிகளில் பொதியப்படுகின்றன. இனிப்புகளுக்காக ஹொன்னாவர் மித்தாய் அங்காடியில் அல்வாத் துண்டுகளாக  வாங்கியது போக பூந்தி பிடித்து உருட்டிப் போட்டு குஞ்சாலாடு செய்ய  இன்னொரு பிரிவு இங்கே சுறுசுறுப்பாக இயங்குகிறது”.

சென்னபைரதேவிக்கு நேமிநாதனை வியக்காமல் இருக்க முடியவில்லை. தெற்கு வீதியும், கிழக்கு வீதியும் அவள் தினசரி அலுவல் காரணமாக அல்லது கோட்டைக்கு வெளியே அத்தியாவசியமாகச் சந்திக்கச் செல்லும்போது கடந்து போகும் வீதிகள். அங்கே ஒரு நெருப்புப் பொறி பறந்தால் கூட சென்னாவின் கூர்மையான பார்வைக்கு அது தப்பியிருக்க முடியாது. விருந்தெல்லாம் வேண்டாம் என்று சொல்லியிருப்பாள். ஆனால் மேற்குவீதி உள்ளொடுங்கி உள்ளதால் பார்வைக்குத் தப்பிவிடும் என்று கணக்குப் போட்டிருக்கிறான் நேமிநாதன். மகனே ஆனாலும் பாதுகாப்பு வளையத்தில் ஒரு சிறு தொய்வு அங்கே இருப்பதை  அவனறியாமலேயே    உணர்த்தி விட்டான். இனி மேற்குத் தெருவும் சுற்றித்தான் சென்னா பயணம் போவாள்.

அவள் முன் மண்டபத்துக்கு நடந்தபோது தயங்கி நேமிநாதன் ஒரு அடி பின்னால் வந்து கொண்டிருந்தான். கூடவே ரஞ்சனாதேவி.  வரிசையாக அணிவகுத்து அங்கே நின்ற சிப்பாய்கள் “மிளகுப் பேரரசி நீடு வாழ்க” என்று மேற்கத்திய பாணியில் போர்த்துகீசியரையும் ஆங்கிலேயர்களையும் போல பாதுகைகள் சப்திக்க கால் தரையில் அறைந்து நின்று விரைப்பான இங்கிலீஷ் சலாம் அடித்தார்கள்.

“சல்யூட் அடிக்கும் வீரனுக்கு பதில் மரியாதையாக இருகை கூப்பி வணங்கலாமா?” ரஞ்சிதா நேமிநாதனிடம் கேட்டது சென்னாவின் பாம்புச் செவியிலும் விழுந்தது. “நானும் சல்யூட் அடிக்கப் போகிறேன். மேற்கில் ஆண் பெண் பேதமில்லாமல் வணங்கும் முறை அதுதானாம்” என்றபடி அவர்களோடு முன் மண்டபத்தில் நுழைந்தாள் சென்னபைரதேவி.

மண்டப வெளியில் மிர்ஜான் கோட்டைக்கு  வெளியே பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் மிர்ஜான் துறைமுக நகரில் வாசனை திரவியக் கடைகள் வைத்திருக்கும் வணிகர்கள் மாணப் பெரிய மலர் மாலையும்,  வெள்ளித் தகட்டால் செய்து கண்ணாடிப் பேழைக்குள் பொருத்திய ராம பட்டாபிஷேக சிற்பமுமாக நின்றார்கள்.

“மிளகுப் பேரரசி நீடு வாழ்க. யக்‌ஷ தேவன் அருளுண்டாகட்டும்”

போஜன சாலை என்ற விருந்து மண்டபம் நிரம்பி வழிந்தது. தலைவாழை இலைகள், கூட்டிப் பெருக்கி பன்னீர் கொண்டு மெழுகிய பளிங்குத் தரையில் வரிசையாகப் பாய் விரித்து இடப்பட்டன. முதலில் எலுமிச்சையும் இஞ்சியும் கலந்த ஊறுகாயும் உப்பும் பரிமாறப்பட்டது. அவரைக்காயும், புது அறிமுகமான உருளைக் கிழங்கும் கலந்த பொரியல் அடுத்துப் பரிமாறப்பட்டது.   குழைய வேகவைத்த பருப்பும் தொடர்ந்தது.

வெல்லப் பாயசமும் மலையாளப் பிரதேசத்து பாலாடை பிரதமனும் இனிக்க இனிக்க இலையில் வந்து சேர்ந்தன. 

வெள்ளரிக்காய்ப் பச்சடியும் கோசுமரியும் அடுத்து இலையேறின. தேங்காய் அரைத்து விட்டுப் பரங்கிக் காய், முருங்கைக்காய்த் துண்டங்கள் சேர்ந்த அவியல் பின்னர் வந்தது. தேங்காய் கலந்து உதிர்த்த புட்டும். வாழைக்காயை அவித்து உதிர்த்த கறியும்,  சித்ரான்னமாக எலுமிச்சைச் சாதமும், தேங்காய்ச் சாதமும், புளியஞ்சாதமும் பரிமாறப்பட்டன. அடுத்து இரண்டிரண்டு பருப்பு வடைகள் இலைதோறும் இடப்பட்டன.

 பலா மூஸும் கத்தரிக்காய்த் துண்டங்களும் சேர்த்துக் கொதிக்க வைத்த புளிக்குழம்பு வருவதற்கு ஒரு நிமிடம் முன் பொலபொலவென்று அவித்த அரிசிச் சோறு போதும் என்று கைகாட்டும் வரை சுடச்சுட இலை தோறும் வட்டிக்கப்பட்டது. புத்துருக்கு நெய் அந்த சோற்றின் மேல் தாராளமாகப் பெய்யப்பட்டது. ஹரி என்று ஒரு குரல் ஓங்கி ஒலிக்க அங்கே ஹரி என்று பல குரல்கள் உயர்ந்து எழுந்தன. சமபந்தி போஜனம் தொடங்கியது. 

பிராமண அதிதிகள் பரசேஷணம் சடங்கை நிறைவேற்ற உணவை வழிபட மந்திரம் சொல்லி, சாதம், பருப்பு, நெய் கலந்து எடுத்த சிறு கவளம் சோற்றை எச்சில் படாமல் உயர்த்தி வாயில் போட்டுக் கொண்டனர். 

எல்லோரும் சோற்றில் புளிக்காய்ச்சலைப் பிசைந்து உண்ண ஆரம்பித்தபோது இலை தோறும் தேங்காய் எண்ணெயில் பொறித்த இரண்டு கை அகலமுள்ள உளுந்து அப்பளங்கள் அவை வைத்திருந்த பிரப்பங் கூடைகள் தரையில் இழுக்கப்பட்டு விரசாக நகர ஓடி ஓடிப் பரிமாறப்பட்டன.     

அடுத்து மறுபடி சோறு பரிமாறி மிளகுச் சாறு என்ற கமகமவென்று மிளகு பொடித்துப் போட்டுச் செய்த பருப்பு ரசம் பரிமாறப்பட்டது. ஏதோ ஒரு வரிசையில் இருந்த இளைஞர்கள் மிளகுச் சாற்றைக் கண்டதும், மிளகு மகாராணி ஜெய விஜயீ பவ என்று முழங்க, அடுத்த அலைகளாக மற்ற வரிசைகளிலிருந்தும் உற்சாகமான குரல்கள் உயர்ந்தன. 

மிளகுச் சாற்றில் பிணைந்த சோறு உண்டபின், அடுத்து இனிப்பு வந்தது. இலைக்கு ஒரு பெரிய ஜாங்கிரி இடது பக்க இலைக் கீழ் ஓரமாக வைத்துப் போகப்பட்டது. மூன்றாவது இனிப்புப் பாயசமாக சர்க்கரை கலந்து சுண்டக் காய்ச்சிச் செய்த பால் பாயசம் கரண்டி கரண்டியாக நிறைக்கப்பட்டு எல்லோருக்கும் இலையோரமாகத் தொன்னைகளில் பரிமாறப்பட்டது. 

விரும்பி இன்னும் கொஞ்சம் இடச்சொல்லிக் கேட்டவர்களுக்கு இன்னொரு முறை அப்பளமும் அவியலும் பொரியலும் ஊறுகாயும். பாயசமும் பரிமாறப்பட்டன. அடுத்து விருந்தின் இறுதிப் பகுதியாக குளிர்ந்த அரிசிச் சாதத்தில் கெட்டித் தயிர் கலந்து, திராட்சை, கொடிமுந்திரி, இஞ்சித் துண்டுச் சீவல், பேரிச்சம்பழ விள்ளல்கள் கலந்து பிசைந்த தயிர்சாதம் பரிமாறப்பட்டு, மறுபடி ஊறுகாயாக புளிக்காடியில் ஊறிய மிளகும் இஞ்சியும் தொட்டுக் கொள்ள வந்து சேர்ந்தது. விருந்து நிறைவடைந்ததை இலையில் மெல்ல வந்து அமர்ந்த மலை வாழைப்பழம் கூறியது.

உண்டு திருப்தியாகி கைகழுவி வந்தவர்கள் சத்தமாக ஏப்பமிட்டுக்கொண்டு வெற்றிலை பாக்கு சுண்ணாம்பு பெற்று இதுபோல் விருந்து பூலோகத்திலேயே கிடையாது என்று சிலாகித்து அரசியை மறுபடி வாழ்த்தி மண்டபச் சுவர்களை ஒட்டிய கல்படிகளில் அமர்ந்து சிரமபரிகாரம் செய்து கொண்டார்கள். ரோஜா இதழ்களை சர்க்கரைப் பாகில் நறுமணம் கலந்து வறுத்து ஊறவைத்த முகலாய குல்கந்து எல்லோருக்கும் வெற்றிலையில் வைத்துக் கிட்டியது.

சென்னாவுக்குச் சட்டென்று கோகர்ணம் மகாபலேஷ்வரர் கோவிலுக்கு   வருவதாக பிரார்த்தனை நேரத்தில் சொன்னது நினைவு வந்தது. வணிகர்களுக்கு நன்றி சொல்லி அவர்கள் கொண்டு வந்த மாலையைப் பூத்தாற்போல் பிடித்தபடி நேமிநாதனைத் தேடினாள் சென்னா. ஓரமாக நின்று கொண்டிருந்தான் அவன்.

நேமிநாதனிடம் கோவில் என்று மட்டும் சொல்ல அவன் புரிந்து கொண்டு ஒரே நிமிடத்தில் மகாராணியின் சாரட் வண்டியை சகல அலங்காரங்களோடும் சௌகரியங்களோடும் அழைத்து வரச் செய்து நிறுத்தினான். பூச்சரங்களும் பாசிமணி மாலைகளும், வாழைமரம் கட்டிய அழகும், தோரணங்களின் வர்ண ஜாலமுமாக அரச ஊர்தி வந்து நின்றது.

 “நீங்கள் இளைப்பாறுங்கள். நான் அருகே கோகர்ணத்தில் மஹாபலேஷ்வரர் கோவிலுக்குப் போய்த் தரிசித்துவிட்டு வருகிறேன்” என்றபடி சாரட்டில் ஏறி அமர்ந்தாள் சென்னபைரதேவி.

“மேற்கு வீதி வழியாகப் போகலாம்” 

சாரட்டின் முன் பகுதியில் ஆயுதம் ஏந்தி நிற்கும் சிப்பாய்கள் இருவரும் சாரதியிடம் சத்தம் தாழ்த்திச் சொல்ல, அவன் வியப்பு ஒரு வினாடி முகத்தில் காட்டி இது தினசரி நடப்பாச்சே என்பது போல் சகஜ பாவத்தோடு முகத்தை வைத்துக் கொண்டு குதிரைகளை ஓடத் தூண்டி சாரட்டை நகர்த்தினான். தூண்டுதலுக்கு அவசியமே இல்லாமல் அந்த அரபுப்  புரவிகள் வேகம் எடுத்துப் பறந்தன.

ஒலி வடிவில் கேட்க / To Listen to the novel in Audio form:

Series Navigation<< மிளகுமிளகு – மிர்ஜான் கோட்டை >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.