மிளகு: அத்தியாயம் ஐந்து

1596 ஹொன்னாவர்

ஹொன்னாவர் நகரில் ஷராவதி ஆற்றுப் பாலத்தைக் கடந்து பெரியதாக மறுபடி கட்டப்பட்டு வரும் புனித சால்வதோர் தேவாலயத்துக்கு ஏகும் சாலை.

புராதன மாளிகைகளும், வியாபார நிறுவனங்களும் அணிவகுத்து நிற்கும் கருங்கல் பாவிய அகலமான வீதிகளில் மிக விரிவானது அந்த ரதவீதி. அங்கே போர்த்துகீஸ் அரசப் பிரதிநிதி இம்மேனுவல் ராபர்ட்டோ பெத்ரோ Immanuel Roberto Pedro வசிக்கும் விசாலமான மாளிகை. வழக்கமான போர்த்துகீஸ் காலை உணவான சீராக வெண்ணெய் தடவி அனலில் சுட்ட டொர்ரடா (toast), மசித்த காய்கறியும், பன்றி மாமிசமும் இடையில் வைத்த ரொட்டித் துண்டுகள், ஆரஞ்சு பழக்கூழும் தேனும் நிறைத்த பாபோ செகோஸ் (bun), பால் அதிகம் சேர்த்த காப்பி என்று பசியாறிப் பயணத்துக்குச் சித்தமானார் பெத்ரோ.

வீட்டு வாசலுக்கு வந்து காத்திருந்த வெள்ளை நிறக் குதிரை பூட்டிய சாரட் வண்டியையும், சேணத்தைப் பற்றியபடி நிற்கும் கடைக்கீழ் உத்தியோகஸ்தனையும் மாறி மாறிப் பார்த்தார்.

“பெஹன்.. “

நாடு விட்டு நாடு வந்ததும் போர்த்துகீஸ் அரசு சார்பில் கற்றுத் தரப்படும் கெட்ட வார்த்தைகள் நினைவில் இருக்க, அவற்றில் நாலைந்தை வேலைக்காரன் மேல் பிரயோகித்தார். இவற்றை வேலைக்காரர்கள், துப்புரவுக்காரர்கள், பிச்சைக்காரர்கள் தவிர யார் மேலும் பிரயோகிக்கக் கூடாது என்றும் சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள். கீழான பணி செய்கிறவர்கள் அந்த வார்த்தைகளைக் கேட்டு நடுநடுங்கி துரைக்குத் தெண்டனிட்டு வணங்கி அடுத்த உத்தரவுக்காக நாயாகக் காத்திருப்பார்கள் என்றும் சொல்லித் தந்திருக்கிறார்கள்.

ஆனால் இங்கே உடனே குழிக்குள் போகவேண்டிய இந்தத் திருடர்கள் பெத்ரோ துரை திட்டத்திட்ட வயிற்றைப் பிடித்துக்கொண்டு சிரிக்கிறார்கள். அவர் வரிசையாக வார்த்தை உதிர்க்க, தரையில் விழுந்து புரண்டு சிரிப்பை அடக்க முடியாமல் அடுத்த வார்த்தையை கொஞ்சம்போல் சொல்லி பெத்ரோ முழுப்பிக்கக் காத்திருக்கிறார்கள்.

இவர்களைத் திட்டுவதும் ஒன்றுதான். எருமை மாட்டின் மேல் மழை பெய்வதும் அதேபடிதான். லவலேசமாவது உறைத்தால் தானே.

நேற்று ராத்திரி உறங்கப் போகும்போது பெத்ரோ துரை இந்தப் பயல்களிடம் திரும்பத் திரும்பச் சொன்னார்.

“காலையில் மிர்ஜான் போக இருக்கேன். சாரட் வண்டி வேணாம். கருப்புக் குதிரையை சவாரிக்காக சித்தம் செய்து, உடம்பு துடைத்து, சேணம் கழுவி, அழுக்கில்லாமல், பளபளவென்று பூட்டி, வீட்டு வாசலில் கொண்டு வந்து நிறுத்த வேண்டிய நேரம் காலை விடிந்து ஐந்து நாழிகை. என் கடியாரத்தில் காலை ஏழு மணி. புரிந்ததா?”.

அவர் நிதானமாகப் பேசி நிறுத்தி விசாரிக்க, இந்தக் களவாணிகள் புரிந்தது புரிந்தது என்று நூறு முறை சொல்லி வாயையும் பிருஷ்டத்தையும் பொத்தியபடி போனார்கள். இப்போது பார்த்தால் வெள்ளைக் குதிரை சாரட் வந்து நிற்கிறது. என்ன திட்டினாலும் சொல்கிறபடி நடப்பதில்லை யாரும்.

”கருப்புக் குதிரைக்கு என்ன ஆச்சுடா ஆயுசுக்கும் குளிக்காத வேசி மகனே?”

பெத்ரோ கண்ணால் எரிப்பது போல் பார்த்துக்கொண்டே விசாரிக்க அவன் இதை எதிர்பார்த்து இருந்தது போல் கூட்டமாகக் கைகாட்ட ஓ என்று சிரித்து வழிந்தார்கள். பெத்ரோ துரைக்கும் சிரிப்பு வந்துவிட்டது. களவாணிகள் சிரித்தே காரியத்தை சாதித்துக் கொள்கிறார்கள்.

”கருப்புக் குதிரை படுத்து உறங்கிக் கொண்டிருக்கு எஜமானே” இன்னொருத்தன் நாலாக மடிந்து நின்று இளித்தபடி சொன்னான்.

“குதிரை எப்படிப் படுத்து உறங்கும்? அது நின்று கொண்டே நித்திரை போகும் உயிரினமாச்சே?” நியாயமான சந்தேகத்தைக் கிளப்பினார் பெத்ரோ.

“அது வெள்ளைக் குதிரையோடு கலவி செய்தபோது படுத்தது. அப்படியே உறங்கி விட்டது போல” இதற்கு சிரிப்பு அதிகமாகக் கிடைத்ததை பெத்ரோ கவனிக்க மறக்கவில்லை.

”ஆனால் குதிரை நின்று கொண்டே..”

அவர் வார்த்தையை முடிக்க விடாமல் அவர்கள் பூர்த்தி செய்தார்கள். சரி, குதிரையும் படுத்துக் குதிரையேறட்டும். ஆனால் வெள்ளை, கறுப்பு ரெண்டு குதிரையும் ஆணாச்சே.

அந்தக் கழுவேறிகள் இதைத்தான் எதிர்பார்த்திருந்தார்கள். ஒற்றை வார்த்தையைக் கூட்டமாகச் சொல்லி தாவித்தாவிக் குதித்தார்கள். ஒருத்தன் மற்றொருத்தனைக் கட்டிக்கொண்டு கண்ணில் நீர் வழியச் சிரித்தார்கள். பாதிப் புணர்ச்சியில் வாசல் கதவு தட்டப்பட, பெண்டாட்டி விலக்கிய நாயகன் போல் அடக்க முடியாமல் தரையில் மல்லாக்க விழுந்து புரண்டார்கள். இவர்களை குதிரைகளைக் கொண்டுதான் அடக்க முடியும்.

பெத்ரோ சாரட்டில் ஏறினார். சவுக்கு சகிதம் ஓட்டுகிறவன் தலை வணங்கிப் போகலாமா என்று மரியாதையோடு விசாரித்தான்.

“போய்த் தொலை” என்று நகைத்தபடி பெத்ரோ தலையாட்ட வண்டி நகர்ந்தது.

”போம் தியா சின்ஹோர்” bom Dia senhor

தெருக்கோடியில் பெண்குரல். காலை வணக்கம் சொல்வது யார்?

ஜன்னல் வழியே எக்கிப் பார்த்தார் பெத்ரோ.

கஸாண்ட்ரா நின்று கொண்டிருந்தாள். பெத்ரோவின் வீட்டை நிர்வகிக்கிறவள் அவள். ஐம்பது சதவிகிதம் போர்த்துகல்லும் மீதி தட்சிண, உத்தர கன்னடப் பிரதேசமும் கலந்து உருவாக்கிய அழகி. முப்பதுகளின் நடுவிலான வயதானால் என்ன? அழகி அழகி தான். அதுவும் பெத்ரோ கண்ணுக்குப் பேரழகி. செப்பு நிறத்தில் வனப்பாக உயிர்த்த சிலை. வெகு அருகில் வந்து பார்த்தாலே ஒழிய முகத்தில் சிறு சுருக்கங்கள் பார்வையில் படாது. பக்கத்தில் வந்தால் வேறெவ்வளவோ இருக்க, முகச் சுருக்கத்தைப் பார்த்து நேரத்தை வீணடிப்பது புத்திசாலித்தனம் இல்லையே.

பெத்ரோவின் மனைவி மீன் வாங்கப் போகும்போது ஐந்து பத்து நிமிஷம் அவசரமாக பெத்ரோவுடன் அண்மையைப் பகிர்ந்து கொள்வாள் கஸாண்ட்ரா. குறைந்தது ஒரு முத்தமாவது தேறும். பத்து குருஸடோ அதற்கான கூலியாக வாங்கவும் மறப்பதில்லை. அணைப்பு இலவசம். பெத்ரோவின் மனைவி அடுத்த, இரண்டாவது பிள்ளை பெற மலபாரில் கோழிக்கோடு நகரில் தாய் வீட்டுக்குப் போயிருக்கிறாள். கஸாண்ட்ராவுக்கு இடுப்பு முறிய வேலைப்பளு.

வண்டியை நிறுத்தச் சொல்லாமலேயே நின்றது அது. திரிசமன் செய்த விஷமப் பார்வை பார்த்தபடி சாரட் வண்டியோடு குதிரையை இழுத்துப் பிடித்து தெருவோரம் நிறுத்தியிருந்தான் வண்டியோட்டி வந்தவன்.

“பெண்ணே, அவசர வேலையாக கோட்டைக்குப் போய்க் கொண்டிருக்கிறேன். நீ வழிமறிக்கிறாயே இப்படி. நான் போய்ச் சேர்ந்த மாதிரிதான்” பொய்யாக அலுத்துக் கொண்டார் பெத்ரோ.

“மீ பெர்தோயி சின்ஹொர்” me perdoe senhor என்று உடனடி மன்னிப்புக் கோரிக்கை தெரிவித்தாள் அவள். கல்லையும் உருக்கும் குரல் அது.

“என்னை ஊர்க் கோடியில் மாமிசம் விற்கும் அங்காடியில் விட்டுவிட்டுப் போனால் என்ன குறைந்து போவீர்கள் எஜமானே?” கஸாண்ட்ரா அவருடைய முகவாயைத் தொட்டு அசைத்துக் கேட்டாள். அவளைப் புழுதி படிந்த தெருவில் இருந்து உயர்த்தி இழுத்து மடியில் உட்கார்த்தி முத்தமழை பொழிய வேண்டும் என்று அடங்காத காமம் உயிர்க்க பெத்ரோ சாரட் ஓட்டுகிறவனை தீயாகப் பார்த்து விழித்தார். அவனா, அடுத்த பத்து நிமிஷம் நல்ல பொழுதுபோக்கு என்று எதிர்பார்க்கிற தோதில் கண்கொட்டாமல் காத்திருக்க, எதிர்த் திசையில் இருந்து புத்தம்புது சாரட் வந்து கொண்டிருப்பதை முதலில் பார்த்தவள் கஸாண்ட்ரா தான்.

”பெரிய துரை வந்துட்டிருக்கார்” என்றபடி உடையைத் திருத்தித் தலைமுடி கலையாமல் கையால் ஒதுக்கி, உதட்டில் ஒட்டி வைத்த சிரிப்போடு அவள் நிற்க, பெத்ரோ சாரட்டில் இருந்து குதித்து இறங்கி வீதியோரம் நின்றார்.

மீனும் கோழியும் வாடை அடிக்கிற தெரு அது. ஓரமாக ஒரு வயோதிகன் சிறுநீர் கழித்துக் கொண்டிருந்தான். நகரப் பன்றிகளில் கனமான ஒன்று துள்ளிக் குதித்து ஓடிக் கொண்டிருந்தது. ஓடாத சாக்கடை ஒன்று அடுத்து கந்தம் கிளப்பியபடி நிலைத்திருக்க, தெரு ஓய்வில் கிடந்தது. நான்கு குதிரை பூட்டிய பளபளப்பான டிராலியில் வெற்றிலையும், ஜாதிக்காயும், பாக்கும் மென்றபடி எதிர்த் திசையில் கடந்து போகும் நவரத்தின வியாபாரியான பெரும் வர்த்தகர் ஒருவர் யாரையும் எதையும் லட்சியம் செய்யாமல் நேரே பார்த்தபடி அமர்த்தலாகப் போய்க்கொண்டிருந்தார்.

பெரிய துரை லூகாஸ் கவுடின்ஹோ Lucas Coutinho கவர்னர் எனும் அரசப் பிரதிநிதி பதவியிலிருந்து ஓய்வு பெற்று இரண்டாண்டு முடிந்து விட்டது. என்றாலும் இந்த தேசத்தை விட்டுப் போக அவருக்கு விருப்பமில்லை. தம் நாமமின்றி வேறு யார் பெயரிலோ ஏலக்காய், ஜாதிக்காய் வர்த்தகம் மறைவாகச் செய்வதாக லிஸ்பனில் வதந்தி. இங்கே எல்லோருக்கும் தெரிந்தது அது. ஏகமாகக் கெஞ்சி வேண்ட, போர்த்துகல் அரசம் முதலாம் பிலிப்பும் அவரை கவுரவ ஆலோசகர் என்று ஓர் அதிகாரமுமில்லாத பதவி ஏற்படுத்தி நியமித்திருக்கிறார். யாருக்கும் தேவைப்படாத யோசனைகளை யாரென்று இல்லாமல் எல்லோரிடத்திலும் சொன்ன மணியமாக இருக்கிறார் கவுடின்ஹோ பிரபு.

”பெருந்தகைக்கு காலை வணக்கம்” என்று பெத்ரோ கவுடின்ஹோவின் சாரட் நின்றதும் ஜன்னல் வழியே பார்த்து வணங்கிச் சொன்னார். கை நடுக்கத்தோடு நெற்றியில் கரம் வைத்து சல்யூட் செய்திட்ட மாஜி கவர்னர் அதை ஏற்றுக் கொண்டதாகத் தலையசைத்தார். அவரும் கீழே இறங்கினார்.

“என்ன பெத்ரோ. நடுத் தெருவில் வண்டியை நிறுத்தி சுவாரசியமான பேச்சா? நடக்கட்டும். நடக்கட்டும். இந்தப் பெண்ணை எங்கோ பார்த்திருக்கிறேனே?” என்றபடி கஸாண்ட்ராவைப் பார்க்க அவள் சிந்திய புன்னகையில் அவர் ஆகக் குழைந்து போனார்.

“உனக்கு லிஸ்பனில் தானே வீடு, சின்னப் பொண்ணு? பிரதான பாதசாரி வீதி ரூஆ அகஸ்டியாவிலிருந்து கமர்ஷியா தெருவுக்குத் திரும்பும் பாதையில், அல்லது அதற்கடுத்த முடுக்குத் தெருவில் நீ துள்ளிக் குதித்து ஓடி வருவதைப் பார்த்திருப்பேனோ” என்று போர்த்துகீஸ் மொழியில் சந்தேகம் விசாரித்தார்.

”சின்ஹோர் மன்னிக்கணும். நான்.. என் பிறப்பு வளர்ப்பு எல்லாம் இங்கே ஹொன்னாவரில் தான். அப்பா போர்த்துகல்லில் போர்டோ நகரிலிருந்து வந்தவர். லிஸ்பனில் என் ஜாடையில் யாரையாவது சின்ஹோர் பார்த்திருக்கக் கூடும்”.

”என் வீட்டை நிர்வகிக்கிறாள் கஸாண்ட்ரா” பெத்ரோ தடபுடலாக அவளை கவுடின்ஹோவுக்கு அறிமுகப் படுத்தினார்.

“உம் மனைவி கோழிக்கோடு போயிருப்பதால் இந்தக் கன்யகை உமக்கு வேண்டிய உதவி செய்கிறாள் என்று ஊகிக்கிறேன். மகிழ்ச்சியை ஆழமாகவும் விரிவாகவும் பரப்பி சந்தோஷமாக இரு பெண்ணே” என்று பூடகமான சிரிப்போடு சொன்னார் மாஜி கவர்னர் துரை.

கஸாண்ட்ரா வணங்கி அப்பால் போக, கவர்னர் பெத்ரோ துரையவர்களை ஷேம லாபம் விசாரித்து தற்போது சாரட் வண்டி பூட்டித் தெருவில் இறங்கிய விசேஷம் கேட்டார்.

“மிர்ஜான் கோட்டைக்குத் தினசரி போய் வருகிறீரா பெத்ரோ? மிளகாலேயே உம் அரைக்குக் கீழ் காப்பு இட்டு வாயிலும் ஒரு உருண்டை தின்னக் கொடுத்து, உரைக்க உரைக்க சொர்க்கம் என்று சத்தியம் பண்ணி நரகத்துக்குக் கொண்டுபோய் விடுவார்கள் மிளகு ராணியும் கூட்டமும். ஜாக்கிரதை”

பெத்ரோவுக்கு மாஜி கவர்னரின் பேச்சு ரசிக்கவில்லை. கிட்டத்தட்ட எழுபது வருடத்துக்கு அப்புறம் டச்சுக்காரர்களை ஓரம் கட்டி, போர்ச்சுகல் வாசனை திரவிய உலகச் சந்தையில் முதல் இடம் பிடிக்க, காலம் கனிந்து வருகிறது. வாயை வைத்துக்கொண்டு சும்மா இருக்காமல் இந்தத் தடியர் அதையும் இல்லாது ஆக்கி விடுவார் போல. காலே அரைக்கால் பகுதி நிஜம், மீதி இட்டுக் கட்டியது என்று இவருக்குக் கலந்து புகட்டினாலே ஒழிய வழியை மறைக்காமல் நகர மாட்டார். எல்லோருக்கும் தேவையோ இல்லையோ ஏதாவது தகவல் வேண்டியிருக்கிறது. பழைய கவர்னருக்கு இன்னும் அதிகம்.

“கவுடின்ஹோ பெருமகனே, இந்த மாதம் மிளகுத் தோட்டங்கள் பூக்கத் தொடங்கும். நல்ல மழையும் வெய்யிலும் வருடம் முழுக்க இருந்த காரணத்தால் நிறைந்த மகசூலை எதிர்பார்க்கிறதாகத் தெரிகிறது. விளைய விளைய விலை ஏறுவது மிளகும் ஏலமும் தான் என்று தங்களுக்குத் தெரியாதா என்ன? “ பெத்ரோ நைச்சியமாக வினவினார் மாஜி கவர்னரை.

“ஓ நல்ல சேதிதான். மிளகு விளைச்சல் பற்றி குடியானவர்களிடமும் நில உடைமையாளர்களிடமும் நேரில் விசாரிக்கப் போய்க் கொண்டிருக்கிறீர்கள், அப்படித் தானே?”

“இல்லை பிரபோ, டச்சுக்காரர்கள் மிளகு அரசியை சந்திப்பதற்குள் மரியாதை நிமித்தம் நான் முதலில் சந்தித்து அனுமதி பெற்றுத் தங்களையும் தங்களுக்கு நேரம் இருக்கும்போது கூட்டிப் போகத் திட்டம். ராஜதரிசனம். அடிக்கடி கிடைக்க வாய்த்தால் சகல நன்மையும் பெருகி வருமன்றோ”.

மாஜி அரசப் பிரதிநிதி ஒரு வினாடி ஏதும் பேசாமல் நின்றார்.

“சென்னபைரதேவி என்னை மதிக்காமல் நடந்து கொண்டது பற்றி பெத்ரோவே, உமக்குத் தெரியாதா அல்லது மறந்து போனீரோ?”

தெருவில் அடுத்து மூன்று குதிரை பூட்டிய ட்ரோய்க்கா ஒன்று பாதையை விட்டு விலகிச் சற்றே ஓரமாக வர, அதன் மேல் மோதாமல் ஒதுங்கி நின்றபடி கேட்டார் மாஜி கவர்னர்.

“பிரபு, மன்னிக்க வேண்டும். பல ஆயிரம் ரியல் (Portuguese Reals) மதிப்புக்கு மிளகும், ஏலமும், லவங்கமும், ஜாதிக்காயும், ஏன் பாக்கு கூட பெருமதிப்புக்குக் கைமாறப் போகிறது. நாம் பழைய அவமரியாதையை இன்னும் பெரிதாக எடுத்துக் கொண்டு இதெல்லாம் வேண்டாம் என்று ஒதுங்கி நிற்கப் போகிறோமா?”

பெத்ரோ மாஜி கவர்னரை உற்றுநோக்கிச் சொன்னார். காலைச் சூரியன் அவருடைய முகத்தில் படிந்திருந்த சுருக்கங்களைக் கோடு பரத்திக் காட்டியது. நெற்றியில் துளிர்த்த வியர்வையை கோட்டு பாக்கெட்டில் இருந்து எடுத்த லேஞ்சியால் துடைத்தபடி அவசரமாகப் பேசினார். இதை முடித்து அடுத்ததான அரண்மனை ஆலோசனைக்குப் போக வேண்டிய அவசரம் அது.

ராஜதரிசனம். கவுடின்ஹோவுக்கு அது வேண்டாம் என்றால் போகட்டும். பெத்ரோவுக்கு வேண்டி இருக்கிறது. இந்தப் பருவத்தில் விலை மலிவாக எவ்வளவு வாங்க முடியுமோ அவ்வளவு கொள்முதல் செய்து, லிஸ்பனில் போய்ச் சேர்ந்து, அரசரிடம் ஒப்படைத்து நல்ல பெயர் வாங்க வேண்டும்.

அடுத்த கவர்னராக பெத்ரோவையே அரசர் அறிவிக்கும் வாய்ப்பு இருக்கிறது. எல்லாம் மிளகில் இருக்கிறது. ஜாதிக்காயும் பாக்கும் கூட வேண்டுமென்று போர்த்துகீஸ் அரசியார் ஆர்வம் மிகுந்து கேட்டிருந்தார்.

பிரதேசம் முழுமைக்குமான கவர்னர் ஆக வாசனைத் திரவியம் போதும். பெத்ரோவுக்கு அந்த அளவில் ஏமாற்றமில்லாமல் நிறையக் கிடைக்கும் பூமி இது.

”நான் மரியாதையோடு பரிசளித்த பெல்ஜியம் கண்ணாடியை வேண்டாம் என்று ஒதுக்கி வைத்தவள் இல்லையா உம் சிநேகிதி மிளகு அரசி?”

மாஜி கவர்னர் சாக்கடை ஓரம் நின்றபடி கேட்டார். உம் என்ன எழவெடுத்த உம்? சாக்கடையில் தூக்கிப் போட்டு மிதிக்கத் தோன்றியது பெத்ரோவுக்கு. வேண்டாம். உடுப்பு அழுக்காகிப் போகும். பாதரட்சையில் சேறு படியும். போய்த் தொலை சகதிப் பன்றியே. போ.

“பிரபு மன்னிக்க வேண்டும். நீங்கள் இந்தப் பிரதேசத்துக்கு போர்த்துகீசிய அரசின் சற்று முந்திய பிரதிநிதி. நான் போர்த்துகீசு அரசரின் தனிப் பிரதிநிதி. இரண்டு பேரும் ஒத்துழைத்தால் இங்கே அடுத்த பத்தாண்டுகளுக்கு போர்த்துகல் அரசின் செல்வாக்கை அசைக்க முடியாது. அற்பமான பெல்ஜியம் கண்ணாடி குறுக்கிட்டு நொறுக்காத ஒத்துழைப்பாக இருக்கட்டும் அது, துரையவர்களே”.

வேலியில் போகிற ஓணான் இந்த கவுடின்ஹோ என்று பெத்ரோவுக்குத் தோன்றியது. சீக்கிரம் இறக்கி விடவேண்டும். நிஜமில்லாத மரியாதை என்றாலும் வாய் வார்த்தை வசியம் செய்யும். எனவே ’துரையவர்களே’ பின்பாரமாக வந்தது.

பெத்ரோ பேசியபடி இருக்க கவுடின்ஹோ துரையின் வண்டி நகர்ந்திருந்தது.

‘கால விரயம், வார்த்தை விரயம். இவன் சொல்கிறானே என்று இவனுக்குக் கொட்டை தாங்கிக்கொண்டிருந்தால், வருடக் கடைசியில் லிஸ்பன் போனதும் அரசருக்கு என்ன பதில் சொல்வது? புரிந்து கொள்ளாத மனுஷன்’.

இன்றைக்கு இவர் முகத்தில் விழித்திருக்க வேண்டுமா? முக்கியமான வேலை என்று கிளம்பும்போது குறுக்கே வந்து நிற்கிறான் கழுத்தறுப்பான். அந்தக் கண்ணாடியைக் குளியலறைச் சுவரில் மாட்டி மகாராணி உபயோகிக்கிறாள் என்று வளர்ப்பு மகன் நேமிநாதன் சொன்னானே. இவனிடம் அதைச் சொல்லியிருக்கலாமோ. போகட்டும், அதை வைத்து கவுடின்ஹோ என்ன பிடுங்கப் போகிறான்? போய்ப் பார்க்கவா போகிறான் அந்தப் பெண்பிள்ளை கக்கூசுக்கு?

கஸாண்ட்ரா கோழி வாங்கி வந்து சமைத்து வைக்கட்டும். நல்ல பிராந்தியும் வீட்டில் உண்டு. அரசியை சந்தித்து வந்து பிராந்தியும் கஸாண்ட்ராவும் கோழியுமாகப் பொழுது போகட்டும்.

சாரட் ஹொன்னாவர் நகரின் வெளியே வந்து பெருவழியில் சீரான வேகத்தோடு நகர்ந்து கொண்டிருந்தது. வாகன ஓட்டியின் பார்வையில் இருந்து அகல, நடுவே இருக்கும் துணித் திரையை இழுத்து மூடினார் பெத்ரோ.

இன்னும் அரை மணி நேரம் வெளிச்சம் கசியாத இருட்டில் வண்டி தாலாட்டு பாட அவர் நித்திரை போவார். விருத்திகெட்ட மாஜி கவர்னர் எதிர்ப்பட்டிருக்காமல் இருந்திருந்தால் கஸாண்ட்ராவும் பக்கத்திலேயே இருந்திருக்கக் கூடும். சாரட்டில் அவளோடு சரசம் செய்வது எவ்வளவு அற்புதமாக இருந்திருக்கும்.

கோழிக்கோட்டில் இருந்து பெத்ரோவின் மனைவி கண்ணை உருட்டி மிரட்ட, அந்த எண்ணத்தைக் கைவிட்டார் தற்காலிகமாக. அதையும் இதையும் யோசித்தபடி உறங்கிப் போனார் பெத்ரோ துரை.

(வளரும்)

Series Navigation<< மிளகு -அத்தியாயம் நான்குமிளகு – அத்தியாயம் 6 >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.