மிளகு அத்தியாயம் இருபத்தொன்று 

1960/1599நாக்பூர்/ஜெருஸோப்பா

பரமேஸ்வரன் நாக்பூரில் விமானத்தில் இருந்து இறங்கியிருக்கக் கூடாது.

பத்து நிமிடம் தபால் வாங்க, கொடுக்க என்று பாசஞ்சர் ரயில் மாதிரி நாக்பூரில் நின்று வருவது இந்த விமான சேவையின் தினசரிப் பழக்கமாக இருக்கலாம். அப்படி இறங்கி, மீண்டும் டேக் ஆஃப் ஆகும்போது யாராவது குறைகிறார்களா என்று பார்க்க வேண்டாமோ?

ரயில் என்றால் கூட்டம் அதிகமாக, நெரிசலும் மிக அதிகமாக இருக்கக் கூடும். விமானத்தில், மிஞ்சிப் போனால் ஐம்பது பேர் பயணம் வந்தாலே அதிகம். இவர்களில், பாதி வழியில் காணாமல் போனவர்கள் யார் என்று ஒரு நிமிடம் தலை எண்ணிப் பார்த்துவிட்டு, விமானத்தை மறுபடியும் பறக்க வைத்திருக்கலாம்.

என்ன கஷ்டமோ, பரமனை நாக்பூரில் விட்டுவிட்டு அவர் வந்த டில்லி – பம்பாய் பிளேன் பறந்து விட்டது.

கிரிக்கெட் விளையாட பிட்ச் தயார்ப்படுத்திய மாதிரி இருக்கும் இடம். அந்த துண்டு நிலத்திலும் விமானம் இறங்கி குதிரை வண்டி பிடித்து வீட்டுக்குப் போக நாக்பூர்காரர்கள் வரிக் காசு கொடுத்து விமான தாவளம் ஏற்படுத்தி வைத்திருக்கிறார்கள்.

பரமன் என்ற பரமேஸ்வரனைக் கீழே இறங்க அனுமதிக்காமல் விமானக் கதவைத் திறந்து வைத்து, ”நாக்பூர் இறங்கறவங்க எல்லாரும் இறங்குங்க.. மத்தவங்க சீட்டிலேயே இருங்க… பம்பாய் பம்பாய் பம்பாய்…” என்று அழைக்காத குறையாக காத்திருந்த பத்து நிமிஷத்தில் ஒரு சிகரெட் புகைத்து விட்டு மறுபடி ஏறலாம் என்று பரமன் இறங்கி வந்தது தப்பாகப் போச்சு.

சொல்லி வைத்தாற்போல் அவரை மட்டும் அத்துவானக் காட்டில் விட்டுவிட்டு ’போனவன் போனாண்டி’ என்று விமானம் போயே போய் விட்டது.

பரமனுக்கு தாகம் எடுத்தது. பசி வேறே. விமானத்தில் கொடுத்த ரொட்டித் துண்டுகளும், சின்ன பாட்டில் ஜாமும், பொங்கலுக்கும் உப்புமாவுக்கும் இடைப்பட்ட ஏதோ இந்தி ஆகாரமும் பரமனின் கைப்பையில் இருப்பதால் பசி விஷயம் அவ்வளவு பெரிய உடனடிப் பிரச்சனை ஆகாது. என்றாலும் தாகத்துக்குத் தண்ணீர்? இந்தத் தாங்கு கட்டைகள் வேறே, எங்கே போனாலும் எடுத்துப் போக வேண்டியிருக்கிறது. அவை இல்லாமல் இருந்தால் நன்றாக இருக்கும்.

’இல்லாமல் இருந்தால், பரமு என்ற பரமேஸ்வரா, நீ வெய்யில் படிந்து உஷ்ணமேற்றிய மண் தரையில் புழு போல் ஊர்ந்து கொண்டிருப்பாய். கட்டைகளை வையாதே. அவை இல்லாமல் நீ இல்லை’.

வாஸ்தவம் தான். மனச்சாட்சி இடித்துக் காட்டியது சரிதான். பரமு தன் தாங்குகட்டைகளைக் கடவுள் போல பூஜிக்கிறவர். தாங்குகட்டைகள் எப்போதும் கூடவே உண்டு. தெய்வம்? கூப்பிட்டாலும் கூப்பிடாவிட்டாலும் வர வேண்டாமா?

தெய்வத்தை மறந்திருந்த மாசேதுங் எழுதிய சிவப்புப் புத்தகத்தை மராட்டியில் மொழிபெயர்த்து வெறும் நூறு ரூபாய் வாங்கிய பரிதாபமான காலத்தில் அவருக்கு தெய்வம் அருள் புரிய வரவில்லை. ஏழரைக் கோடி பிரதிகள் எல்லா மொழிகளிலும் சேர்த்து பிரசுரமானதாம் அந்தப் புத்தகம்.

சிவப்புப் புத்தகத்தை உடைப்பில் போடு. எங்கே வந்து சேர்ந்திருக்கிறேன், எப்படி ஊர் திரும்புவது என்று தெரியவில்லை. பெண்டாட்டி ஷாலினியும், மகன் திலீப்பும் வீட்டுப் பெரியவரான பரமேஸ்வரன் என்ற பரமன் இல்லாமல் எப்படி இருப்பார்கள்? ஊரெல்லாம் தேடுவார்கள். அழுவார்கள்.

ஒரு வினாடி கண் கலங்கி சுபாவமானார் பரமன். திலீப் அம்மா ஷாலினியையும் தன்னைத் தானேயும் சீராக கவனித்துக் கொள்வான். இத்தனை நாள் கூடவே இருந்து பரமன் என்ன செய்தார் குடும்பத்துக்கு? அவருக்கே நினைத்துப் பார்க்க கஷ்டமாக இருந்தது. மறந்தார் அதை.

கொஞ்ச தூரத்தில் பளீரென்று ஒளிவீசியபடி நான்கு பக்கங்களிலும் கதவுகளோடு ஒரு சச்சதுர வடிவக் கண்ணாடிக் கட்டிடம் நின்று கொண்டிருப்பதைக் கண்டார் பரமு. இவ்வளவு நேரம் அந்தக் கட்டிடம் ஏன் கண்ணுக்குப் புலப்படவில்லை என்று அவருக்குப் புரியவில்லை.

அங்கே தான் நாக்பூர் விமான நிலையம் இருக்கக் கூடும். தில்லி பம்பாய் விமானம் சின்னதாகையால் ஓரமாக கையகல நிலத்தில் இறங்கி ஏறச் சொல்லி நிர்பந்திருப்பார்கள். டெர்மினல் இதோ வரவேற்கிறது.

சதுர்முக வஸதி. சம்ஸ்கிருதத்திலும் தெலுங்கு அல்லது கன்னட மொழியிலும் அந்தக் கட்டிடத்தின் மேல் நான்கு திசையிலும் பொறித்திருந்ததைக் கண்டார் பரமேஸ்வரன்.

சதுர்முகம் என்றால் நான்கு முகம் கொண்டது. பிரம்மா போலவா? இல்லை, நான்கு கதவுகளும் வழிகளும் இருப்பதால் சதுர்முகம் போல. வஸதி என்றால்? வசதியான வசிப்பிடம் என்பது போலவா? மனம் மறுத்தது. புத்தியும் சேர்ந்து மறுத்தது. வஸதி என்றால் கோவிலாக இருக்கக் கூடும். ஹிந்து கோவில் இல்லை. சமணக் கோவில்.

கண்ணில் முன்னால் பட்ட வாசல் பக்கம் போய் கதவைத் தள்ளித் திறந்து உள்ளே போக நின்றார் பரமன். அப்போதுதான் கவனித்தார். அந்தக் கட்டிடமே ஏதோ அச்சில் சுழல்கிறது போல மெல்லச் சுற்றிக் கொண்டிருந்தது.

இந்தக் காட்டில் கட்டிடம் கட்டிப் புழங்க விடுகிறவர்களுக்குக்கூட நவீனமும் புராதனமும் கலந்த கட்டிடக் கலையிலும், நடு அச்சில் சுழலும் மண்டபங்களிலும் ஈடுபாடு இருந்திருக்கிறது என்பது அவருக்கு ஆச்சரியமாகத் தோன்றியது.

கைப்பையைத் தோளில் மாட்டிக் கொண்டு, தாங்கு கட்டைகளைக் கையிடுக்கில் உறுதியாக ஊன்றி நின்று கதவு அடுத்துத் தான் இருக்கும் இடத்தைக் கடக்கக் காத்திருந்தார் பரமன். வாழ்க்கையே இப்படி விளையாட்டும் விநோதமுமாக ஆகியிருந்தால் எல்லாவற்றையும் மறந்து விட்டு சுழலும் கட்டிடத்தோடு ஓடிக் கொண்டிருக்க ஆசை. தாங்கு கட்டைகள்?

அடுத்து நீலக் கதவு பக்கத்தில் வர, திறந்து உள்ளே நடந்து, பழுப்பு பூசித் திறந்த கதவு வழியே வெளியேறி, நிசப்தமான வெளியில் தலை குப்புற விழுந்தார் பரமன். எழுந்த போது கட்டைகளைக் காணோம். மண்டபத்தையும் காணோம். காட்சி தெளிந்து கண்ணுக்கெட்டிய தூரம் வரை பசுமை அப்பியிருந்த நிலம் கண்ணைக் கொள்ளை கொண்டது.

பரமன் கவனித்தார். தாங்குகட்டைகள் இல்லாமல் அவர் கால்கள் சுபாவமாக இருப்பதுபோல் முழுமையாக இருந்தன. தோளில் மாட்டிய பை அப்படியே தான் இருந்தது. எங்கே வந்திருக்கிறார் அவர்? தில்லி பம்பாய் விமானம் எங்கே போனது?

ஹோ என்று சத்தமிட்டார் பரமன். யாரும் ஏற்று வாங்கிப் பதில் சொல்லவில்லை. தலைக்கு மேல் சத்தம். தலை தூக்கிப் பார்த்தார். பெரிய கழுகு ஒன்று தோளில் அவர் மாட்டியிருக்கும் பையைக் குறிபார்த்துச் சுற்றிச் சுற்றி வந்து நேரே இறங்குகிறதுபோல் பாவனை செய்தது.

அந்தப் பையில் அதற்கான பொருள் என்று என்ன இருக்கிறது? கருப்பு நிறத்தில் ஒரு பேண்ட், இரண்டு அரைக்கை சட்டைகள், கடலை உருண்டை பாக்கெட் ஒன்று, பர்ஸில் நூற்று இருபத்தைந்து ரூபாய் பணம், விக்ஸ் இன்ஹேலர், ஃப்ளைட்டில் கொடுத்த நான்கு துண்டு ரொட்டி, ஜாம் சின்ன ஜாடியில், இந்தி உப்புமா, அவ்வளவுதான் நினைவு வருகிறது.

கடலை உருண்டையோ ரொட்டியோ கழுகு சாப்பிடுகிற உணவு இல்லை. பேண்ட் சட்டை அதற்கெதுக்கு? வாச்சி வாச்சியாகப் பல் இருக்கும் பெரிய சைஸ் சீப்பு ஒன்று மாடுங்காவில் ஸ்டேஷன் பக்கத்தில் வாங்கியது கூட உள்ளே வைத்திருக்கும் நினைவு.

பரமேஸ்வரனுக்குத்தான் படியாத தலைமுடி, பெப்பரப்பே என்று சிலும்பி நிற்கிற அதை தலையில் படிய வைத்து வாரி ஒதுக்கி நிறுத்த அந்தப் பிரம்மாண்டமான சீப்பை வாங்கி இதுவரை ஒரு தடவை கூட பயன்படுத்தியதில்லை.

அதோடு பெட்டியில் வைத்திருந்து பரிசோதனையின்போது கீழே போட்ட ரேசர், ஷேவிங் பிரஷ், ஷேவிங் சோப், டூத்பேஸ்ட், டூத் ப்ரஷ் எல்லாம் ஒரு பாலிதீன் பேப்பர் பையில் வைத்து இருக்கிறது. பெட்டி விமானத்தோடு போய்விட்டது. அதில் முக்கியமாக ஒன்றும் இல்லை; பெட்டியில்லாமல் வாழ முடியும். பை வேணும்.

கால் தானே சரியாகி விட்ட சந்தோஷம் பரமனை ஓடச் சொன்னது. ஓடினார். நெல்லோ வேறேதோ பயிரோ செழித்து வளர்ந்திருந்த நிலப்பரப்பில் வரப்புகளில் காலூன்றி அவர் மெல்ல ஓடினார் முதலில். அடுத்து வேகத்தை அதிகமாக்கினார். கால்கள் வேறு யாருடையதோ என்பது போல் ஓடின. நிற்கிற இடத்திலேயே குதித்தார். முழு பலமும் பரந்த பரப்பில் ஊன்றி நிற்க வகை செய்து கால்கள் உயர்ந்து மீண்டும் கீழே இறங்கின. கனவில்லை. நிஜம்

மூச்சு வாங்க ஏஏஏஏஏய் என்று யாரையோ கூப்பிட்டார். யாரும் எதிர்ப்பட்டால் கால் முளைத்த கதையைச் சொல்லலாம். பகிர்ந்து கொள்ள வேண்டிய ஒன்று.

மணிக்கட்டில் கடியாரம் இருக்கிறதா என நோக்கினார். பிற்பகல் ஒரு மணி. எங்கே? அவருக்குக் குழப்பமாக இருந்தது. பச்சைத் தாவரப் போர்வை போர்த்திய நிலம் ஒரு திருப்பத்தில் பாதை ஒன்றைச் சேர்ந்தது. பெரிய சாலைதான். முழுக்க சன்னமான கப்பி அடித்து வார்த்த சாலை. தார் பூசிய, சிமெண்ட்டால் இட்ட தெரு இல்லை அது.

வீதியில் போகும் வாகனம் எதையும் கைகாட்டி நிறுத்தி வழிகேட்டால் என்ன. தூரத்தில் வேகமாக வந்து கொண்டிருந்த வாகனம் நிற்கும் என்று பட்டது. அது அருகில் வந்தபோது குதிரைகள் இரண்டு பூட்டிய சாரட் என்று புலப்பட்டது.

பரவாயில்லை, வேகமாக நகரும் ஏதோ ஒரு வண்டி. வலதுகை ஆள்காட்டி விரலை வானை நோக்கி உயர்த்திக் காட்டியபடி நின்றார் பரமன். தடக்கென்று குதிரைகள் வேகம் மட்டுப்படுத்தி அருகில் நின்று கால் அசைக்க, ஓட்டி வந்தவன் அவசரமாகக் கீழே குதித்தான். புராண நாடகத்தில் வாகனம் ஓட்டுகிறவனாக வரும் நடிகன் போல் ஒப்பனை செய்திருந்தான் அவன்.

“சகோதரா, நாக்பூர் விமான நிலையத்துக்கு எப்படிப் போகணும்?”

இதைத்தான் இந்தியில் பரமன் கேட்டார். திடுக்கிட்டது போல், வியப்படைந்தவனாக நின்று கேள்வியையே திரும்பச் சொன்னான். அது பழைய, சுத்த இந்துஸ்தானியாக இருந்தது.

சாரட்டின் ஜன்னல் ஒன்று திறக்க பருமனாக உள்ளே அமர்ந்திருந்தவன் வாயில் வெற்றிலை அரைபட, என்ன ஆச்சு என்று தலையை உயர்த்தி ஆட்டி, கேட்பதாக பாவனை செய்தான்.

“நாக்பூர் ஏர்போர்ட், மை டியர் ப்ரண்ட். குட் யூ ப்ளீஸ் டைரக்ட் மி?”

நல்ல உச்சரிப்பில் ஆங்கிலத்தில் வினவினார் பரமன். வந்தவன் முகம் ஆச்சரியத்தைச் சொல்ல சாரட்டில் இருந்து இறங்கினான். புராண, சரித்திர நாடகத்தில் பெரும் தனவந்தராக வேடம் போட்டு நடிக்கிற நடிகனாக அவன் தோன்றினான்.

இளம்பெண் ஒருத்தி வண்டிக்குள்ளிருந்து வந்து சாரட்டின் ஜன்னல் வழியே நோக்கினாள். அவள் பார்வையை பரமன் மறக்க முடியாது. வண்டிக்குள் இருந்து இறங்கி நிற்பவரிடம் ஏதோ சொல்லி பரமனையும் விழுங்கி விடுவது போல் பார்த்தாள் அவள். எழுபது வயதுக் கிழவனிடம் அப்படி என்ன பொலிவு கண்டாள்?

பெருவணிகன் பரமனை சாரட்டில் ஏறச் சொல்லிக் கை காட்டினான். அந்தப் பெண் புன்முறுவல் பூத்தது மிக்க அழகாக இருந்தது. கவர்ந்திழுக்கும் கண் மை தவிர வேறு ஒப்பனை இல்லாத அழகிய முகம் அது.

சாரட்டின் பக்கவாட்டுக் கதவில் பதித்திருந்த கண்ணாடியில் தன் முகம் பார்த்தபடி பரமன் கைப்பை சுமந்து சாரட்டில் ஏற, கண்ணாடியில் தெரிந்தது பரமனில்லை. இளைஞன். 1920களில் பரமன் கதர்ச் சட்டையும் மூக்குக் கண்ணாடியுமாக அச்சு அசல் அப்படித்தான் இருந்தார். இருபதுகளுக்கு மறுபடி போனதுபோல் அவருக்குத் தோன்றியது.

அந்தப் பெண்ணை எங்கோ பார்த்தது போல் இருந்தது நினைவு வந்தது. பரமனின் தகப்பனார் நீலகண்டன் தன் இளைய சகோதரரான மகாலிங்க அய்யர் ஒரு ரெட்டிய கன்யகை மேல் மையல் பூண்ட கதையை அரசல் புரசலாக சொல்லியிருக்கிறார். அந்த கருத்து மெலிந்த இளம் பெண்ணான ரெட்டிய கன்னியகையை அடர்த்தியான மார்பகங்களோடு இப்படித்தான் கற்பனை செய்திருந்தார் பரமன்,

நீங்கள் என்ன மொழி பேசுகிறீர்கள் என்று அடுத்துக் கேட்டார் பரமன். இது கொங்கணி என்றார் பெருந்தனிகர். அவரை அச்சு அசலாக வர்ணச் சித்திரமாக மராட்டி குழந்தைகள் பத்திரிகையில் பார்த்திருக்கிறார் பரமன்.

தமிழ் தெரியுமா? அடுத்த கேள்விக்கு அரவம் தெரியாது என்றாள் அவள் குறுநகையோடு தெலுங்கில்.

”எந்த ஊர் போகிறோம்?” அவர் தமிழில் கேட்டார். ஜெருஸோப்பா என்றாள் அந்தப் பெண்.

இந்தப் பெயரை இப்போது தான் முதலில் கேட்கிறார் அவர். எந்த மாநிலத்தில் இருக்கும் ஊர் அது என்று பரமன் கேட்க, அந்தப்பெண் தமிழும் புரியாதுபோல் அழகாக விழித்துப் பார்த்தாள் பரமனை. பஞ்சாப் அல்லது வங்காளப் பிரதேசத்து ஊராக இருக்கலாம் என்று தோன்றியது அவருக்கு.

தில்லிக்கும் பம்பாய்க்கும் இடையே என்னதான் விமானப் பயணம் என்றாலும் கிழக்கில் உள்ள வங்காளம் ஏன் வர வேண்டும்? பஞ்சாபுக்கு பரமன் போயிருக்கிறார். இந்தப் பெயரில் ஒரு ஊர் அங்கே இருப்பதாக நினைவு இல்லை.

ஜெருஸோப்பா என்பது லத்தீன் மொழிப் பெயராகக் காதில் விழுந்தது. ஒரு வேளை பாகிஸ்தானில் பஞ்சாப் பிரதேசத்தில் இருக்கும் ஊரா? இந்திய விமானம் ஏன் பாகிஸ்தானுக்குள் புகுந்து புறப்பட வேண்டும்?

”நீங்கள் என்ன செய்கிறீர்கள்?” என்று இங்கிலீஷில் கேட்டு அதற்கு பதில் வராததால் தமிழிலும் கேட்டார் பரமன்.

”ஜெருஸோப்பாவில் அரிசி, கோதுமை இதர தானியங்கள் முழுக் கொள்முதலும், சில்லரையாகப் படியால் அளந்து அளித்தும் வியாபாரம் செய்து வருகிறேன்” என்றார் பெருவணிகர். அந்தப் பெண் அவருடைய அண்ணன் மகளாம். போர்த்துகல் தலைநகர் லிஸ்பன்னில் இருந்து வந்தவளாம். மிர்ஜான் கோட்டைக்குப் போகிறார்களாம். அது எங்கே இருக்கிறது என்று கேட்க நினைத்து வேண்டாம் என்று வைத்தார் பரமன்.

”ஜெருஸோப்பா வந்ததும் தொலைவில் இருக்கும் ஊர்களுக்குப் போக வண்டிகள் கிடைக்கும். நீங்கள் குறிப்பிட்ட ஊர் எங்கே இருக்குமென்று எங்களுக்குத் தெரியவில்லை தான். அந்த வண்டிக்காரர்களுக்கு கண்டிப்பாகத் தெரிந்திருக்கும். வண்டியடி என்று கேளுங்கள். வண்டிகள் நிற்கும் இடத்துக்கு வழி சொல்வார்கள் யாரும்”.

அந்தப் பெண்ணுக்கும் அவளுடைய சிற்றப்பருக்கும் நன்றி சொல்லி சாரட்டை விட்டு இறங்கினார் பரமன். சகல நறுமணங்களையும் தன் மேல் கவிந்து போவதாக நினைத்துப் பார்த்த பரமனுக்கு இந்த வயதில் இதெல்லாம் தேவையா என்று மறுபடி தோன்றியது. இரண்டாவது கிளர் ஒளி இளமை ஏன் கொடுக்கப்பட்டிருக்கிறது? யார் கொடுத்தார்கள்?

ஜெருஸப்பா என்ற நகரின் சிறப்பாக பரமன் கண்ணுக்குப் பட்டது ஒருத்தர் விடாமல் ஆண்கள் பூவேலைப்பாடு செய்த நீளக் குல்லாயும் மூலக் கச்சம் பாய்ச்சிக் கட்டிய வேட்டியும், ஜிப்பாவுமில்லாமல் முகலாய மேல்சட்டையான குப்பாயமும் இல்லாமல் ரெண்டுங்கெட்டதாக மேலுடுப்போடும் வளைய வந்துகொண்டிருந்தார்கள். வயதானவர்கள் கணுக்காலுக்கு வரும் அங்கி அணிந்திருந்தார்கள்.

கடைகள் எதிலும் பலகை நாட்டியோ, முகப்பில் பலகை தொங்க விட்டோ என்ன விற்கும் கடை என்று தகவல் பொறிக்கப் பட்டிருக்கவில்லை. நாற்காலிகளே இல்லாத கடைகள் அவை எல்லாம். விற்கிறவர்களும் வாங்குகிறவர்களும் நீளமாகக் கூரைப்பாய் விரித்து மேலே துணி போர்த்தி அமர்ந்திருந்தார்கள்.

இவர்கள் எல்லோரும் பெரிய நாடகம் ஒன்றை நடத்தப் போகிறவர்களாகவும் அதற்காக விடிந்தது முதலே ஒப்பனை புனைந்து வந்திருக்கிறார்கள் என்றும் தோன்றியது.

கடைவீதியில் நெரிசல் இல்லாவிட்டாலும், அலைந்து கொண்டிருப்பவர்கள் கணிசமாகத் தெரிந்தார்கள்.

தோளில் மாட்டிய விமான அடையாள அட்டை காதில் கோர்த்து வைத்த கைப்பையோடு பரமன் நடக்க, காலில் சாதாரண கான்வாஸ் ஷூக்களை யார் அணிவித்தது என்று புரியாமல் குழம்பினார் அவர். கால்கள் மின்சார ரயில் விபத்தில் போகும்வரை அவர் அணிந்த ஷூக்கள் இல்லையோ அவை?

இந்த உடுப்பும், காலணியும் அவரைக் கடைத்தெரு மக்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டினாலும், காரியமாக அதை யாரும் கவனிக்கவில்லை.

வண்டியடிக்கு எப்படிப் போகணும் என்று தமிழில் கேட்டதும் அங்கே நின்று கூக்குரலாகப் பேசிக்கொண்டிருந்த நான்கைந்து வண்டிக்காரர்கள் சுமாரான தமிழில் எந்த ஊருக்குப் போகணும் என்று விசாரித்தார்கள். அந்தத் தமிழ் நிறையவே இப்போது பேசும் தமிழை விட வித்தியாசமாக இருந்தது. கவனித்துக் கேட்டால் புரிந்தது.

நாக்பூர் போகணும் என்று சொன்னதும் அவர்கள் நடுவே அமைதி நிலவியது.

”அங்கே என்ன விஷயம்? கிச்சிலிப் பழங்கள் வாங்கி வரணுமா?”

வயதான ஒரு வாடகை வண்டி ஓட்டி பாக்கு மென்று காவியாகிப் போன பற்கள் ஏயென்று சிரித்திருக்க விசாரித்தான்.

பக்கத்தில் இன்னும் இரண்டு பேர் ’நாகபுரி வரல்லியோ நாகபுரி. கிச்சிலி வாங்க போய்ட்டு வருவோம் நாகபுரி’ என்று கூவ தலையில் கூடை நிறைய ஆரஞ்சுப் பழங்களைச் சுமந்து கொண்டு வந்த தொழிலாளிகள் இரண்டு பேர் பக்கத்தில் மாம்பழக் கூடையோடு வந்த கட்டான பெண்ணைக் காட்டி துளு மொழியில் ஏதோ சொல்லிக் கடந்து போனார்கள்.

“ஆரஞ்சுப் பழங்களை விட மாம்பழங்கள் பெரிசு என்கிறான்”

பாக்குவாய்க்காரன் பார்வை நிறுத்திச் சொல்ல அந்தப் பெண் தூ என்று காரி உமிழ்ந்து கடந்து போனாள். போகும்போது பரமனை பார்வையால் அளவெடுத்துத்தான் போனாள். எந்த நாட்டிலும் எந்த ஊரிலும் எந்தக் காலத்திலும் இதெல்லாம் ஒரே மாதிரி தானோ. என்றாலும், கிழவர்களை மோகிக்கும் ஊரா இது?

வரிசையாக புழுதியைக் கிளப்பிக்கொண்டு படை மாதிரி இருபது முப்பது வண்டிகள் குதிரைகள் சீராக ஓடிவரக் கடந்து போனதைக் கவனித்தார் பரமன்.

கனைக்கும் குதிரை ஒன்று பாதையோரம் ஒதுங்கி கால் உயர்த்தியதையும். அவசரமாக இறங்கிய வண்டியோட்டி வண்டித் தரைக்குக் கீழே துணிப் பொதியில் கட்டி வைத்திருந்த கொள்ளோ வேறேது தீவனமோ நேசமும் அன்புமாக அந்தப் பிராணிகளுக்கு ஈய, அவை தலையசைத்து குடிக்கத் தண்ணீர் வேண்டுமென்று உணர்த்தின.

வண்டியோட்டி ஓஓஓ என்று கூச்சலிட எல்லாக் குதிரை சாரட் வண்டிகளும் நின்றன. மரத்தொட்டிகளில் நீர் நிறைத்து அவை அனைத்தும் குடிக்க அருகில் வைக்கப்பட்டன.

“தண்ணீர் வேணுமா?”

தமிழில் பரமனைக் கேட்டவள் மாம்பழம் சுமந்து போனவள். ஆம் என்று சொன்ன பரமன் அவள் கையில் இருந்து குவளையை வாங்கக் கைநீட்ட அவள் தாங்குகட்டைகளை அவரிடம் நீட்டினாள்.

விழித்து பரமன் எழுந்து உட்கார்ந்தபோது கண்ணில் பட்டவை தாங்குகோல்கள்.

அந்தக் கனவு நான்கு மாதம் கழித்து திரும்ப வந்திருக்கிறது.

ஜெருஸோப்பா.

யாரோ அங்கிருந்து, ஏதோ ஓர் காலத்தில் இருந்து கூப்பிடுகிறார்கள். கூப்பிட்டபடிதான் இருக்கிறார்கள்.

இதெல்லாம் என்ன என்று யாரிடமாவது கேட்கலாமா? யாரைக் கேட்க?

கேட்டால் பரமன் மனமும் புத்தியும் அவர் சுவாதீனத்தில் இருக்கின்றனவா என்ற வீண் சந்தேகமெழும்.

கிச்சிலிப் பழங்களை அவருக்கு எப்படித் தெரியும்? அவற்றை ஆரஞ்சு என்று சொல்வது தவறானது எனினும் எங்கோ சொல்லிக் கேட்டது தான். ஆரஞ்சு மாதிரி, எலுமிச்சை மாதிரி இனிப்பும் புளிப்புமாகச் சாறு மிகுந்த சாத்துக்குடியாக இருக்குமோ. தெரியவில்லை. இந்தப் பெயர், கிச்சிலி எங்கே இருந்து மனதில் ஏறியது?

அவர் தாங்குகட்டைகளை ஊன்றியபடி டாய்லெட் போய்விட்டு வந்தபோது முன்னறையில் திலீப் ராவ்ஜி காப்பி ஒரு சிறு குவளையில் நிறைத்துப் பிடித்தபடி மலையாள மனோரமா பத்திரிகை படித்துக் கொண்டிருந்தார்.

பரமன் உட்கார்ந்ததும் அவரிடம் ஒரு தெர்மோஸ் ப்ளாஸ்கை நீட்டினார் திலீப்.

“உங்களுக்கும் சேர்த்து காப்பி உண்டாக்கிட்டேன். நான் ஸ்ட்ராங்காத்தான் இன்ஸ்டண்ட் காபியோ புதுப் பொடி தாராளமாப் போட்டோ உண்டாக்கறது. உங்களுக்கு இது ரொம்ப ஸ்ட்ராங்கோ?” திலீப் காபி பருகியபடி கேட்டார்.

“ஒரு கஷ்டமும் இல்லே. காபியே குடிக்காமல் எத்தனை வருஷம்! ஆமா உனக்கு ஜெருஸப்பா தெரியுமா?”

“கன்னட லிங்காயத் புருஷாள் பேர் மாதிரி இருக்கு. நிஜலிங்கப்பா மாதிரி. ஜெருஸப்பா என்ன காண்டெக்ஸ்ட்லே வருது?” திலீப் எழுந்தபடி சொன்னார்.

“இல்லே எழுந்திருந்ததிலே இருந்து அந்தப் பெயர் மனசுலே வந்துண்டு இருக்கு” என்றார் பரமன்.

“லைப்ரேரியிலே பார்த்துட்டு வந்து சொல்றேன். அவசரம் ஒண்ணும் இல்லியே?”

“ஒரு அவசரமும் இல்லே. வெட்டியாத்தான் நான் பொழுது போக்கிண்டு இருக்கேன். அதிலே இது வேறே. கனாத்திறம் உரைத்தல்” என்றார் பரமன்.

“இது சிலப்பதிகாரத்திலே ஒரு சாப்டர் தலைப்பு இல்லையோ? கனாத்திறம் உரைத்த காதை.” திலீப் ஆச்சர்யம் தெரிவித்தார்.

ஆம் என்று மகிழ்ச்சியாகத் தலையாட்டினார் பரமன்.

“பரவாயில்லை, இதெல்லாம் எப்போதோ படித்தது இன்னும் நினைவு இருக்கு”. திலீப் ராவ்ஜிக்குத் தன் நினைவு சக்தியைப் பற்றி நியாயமான பெருமை ஏற்பட்டது.

“நாம் ரெண்டு பேரும் அப்பா பிள்ளையாக இல்லே, சகலமானதிலும் ஆர்வம் கொண்ட ரெண்டு சக மனுஷர்களாக நிறையப் பேசிட்டோம். பேச இன்னும் இருக்கு. அதெல்லாம் முடியறபோது நான் என் கனவுகள் பற்றிச் சொல்றேன். அது நிஜத்துக்கு வாசல் கதவு திறக்கும்னு தோன்றுது. முக்கியமா இந்த ஜெர்ஸோப்பா.”

திலீப் ராவ்ஜி சரிதான் என்று தலையசைத்து காலிக் கோப்பையோடு சமையலறைப் பக்கம் நடந்தார். அவரிடம் கிச்சிலிப் பழங்கள் பற்றிக் கேட்டிருக்கலாம்.

போகட்டும். இன்னும் பேசவும் கேட்கவும் காலம் இருக்கும் என்று தோன்றுகிறது. திலீப் ராவ்ஜி, அவன் மகன் அனந்தன். அவனுடைய ஜோடி வாசு எல்லோருக்கும் காலம் அவரவர்கள் கணக்கில் நிறைய வரவு வைக்கட்டும்.

வாசுவுக்குப் பிள்ளைப்பேறு இருக்காதே. அடுத்த தலைமுறை எப்படித் தலையெடுக்கும்? பரமனுக்கு ஏற்கனவே கொடுத்ததே கொடை மாதிரி. இனியும் வருடங்கள் தேவையில்லை. இது சுயநலம் இல்லையா? தெரியாது என்றார் பரமன் தனக்குள்.

திலீப் குரல் கேட்டது. பின்னால் திரும்பப் பார்த்தார் பரமன்.

“நாளைக்கு சூரத்துலே இருந்து மிளகு அனுப்பிடுவோம். விலை ரொம்ப கம்மியா ஆனதாலே யாரும் இந்த சீசன்லே அனுப்ப அக்கறை காட்டலே.”

கையில் எடுத்துப் போகும் தொலைபேசி நீடிப்பில் உரக்கப் பேசியபடி திலீப் பாத்ரூமிலிருந்து வந்தார்.

“எந்த வியாபரத்திலும் இவ்வளவு சீக்கிரம் போதும்னு தோணினதில்லே. மிளகு சீரகம் விக்கறதுக்கு சொளகு முறம் விக்கப் போகலாம்”.

அந்த சொல்லை எங்கோ கேட்டிருக்கிறார் பரமன்.

(தொடரும்)

Series Navigation<< மிளகு – அத்தியாயம் இருபதுமிளகு அத்தியாயம் இருபத்திரண்டு >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.