- மிளகு
- மிளகு – அத்தியாயம் இரண்டு (1596)
- மிளகு – மிர்ஜான் கோட்டை
- மிளகு -அத்தியாயம் நான்கு
- மிளகு: அத்தியாயம் ஐந்து
- மிளகு – அத்தியாயம் 6
- மிளகு
- மிளகு: அத்தியாயம் எட்டு – 1999: லண்டன்
- மிளகு – அத்தியாயம் ஒன்பது – 1999 லண்டன்
- மிளகு – அத்தியாயம் பத்து – 1596 மிர்ஜான் கோட்டை
- மிளகு – அத்தியாயம் பதினொன்று
- மிளகு – அத்தியாயம் பனிரெண்டு
- மிளகு அத்தியாயம் பதின்மூன்று
- மிளகு அத்தியாயம் பதினான்கு
- மிளகு: அத்தியாயம் பதினைந்து
- மிளகு -அத்தியாயம் பதினாறு
- மிளகு – அத்தியாயம் பதினேழு
- மிளகு அத்தியாயம் பதினெட்டு
- மிளகு அத்தியாயம் பத்தொன்பது
- மிளகு – அத்தியாயம் இருபது
- மிளகு அத்தியாயம் இருபத்தொன்று
- மிளகு அத்தியாயம் இருபத்திரண்டு
- மிளகு அத்தியாயம் இருபத்திமூன்று
- மிளகு – அத்தியாயம் இருபத்துநான்கு
- மிளகு அத்தியாயம் இருபத்தைந்து
- மிளகு அத்தியாயம் இருபத்தாறு
- மிளகு – அத்தியாயம் இருபத்தேழு
- மிளகு – அத்தியாயம் இருபத்தெட்டு
- மிளகு அத்தியாயம் இருபத்தொன்பது
- மிளகு அத்தியாயம் முப்பது
- மிளகு அத்தியாயம் முப்பத்தொன்று
- மிளகு அத்தியாயம் முப்பத்திரண்டு
- மிளகு அத்தியாயம் முப்பத்திமூன்று
- மிளகு அத்தியாயம் முப்பத்தி நான்கு
- மிளகு அத்தியாயம் முப்பத்தைந்து
- மிளகு அத்தியாயம் முப்பத்தாறு
- மிளகு அத்தியாயம் முப்பத்தேழு
- மிளகு அத்தியாயம் முப்பத்தெட்டு
- மிளகு அத்தியாயம் முப்பத்தொன்பது
- மிளகு அத்தியாயம் நாற்பது
- மிளகு அத்தியாயம் நாற்பத்தொன்று
- மிளகு-அத்தியாயம் நாற்பத்திரண்டு
- மிளகு அத்தியாயம் நாற்பத்திமூன்று
- மிளகு அத்தியாயம் நாற்பத்திநான்கு
- மிளகு அத்தியாயம் நாற்பத்தைந்து
- மிளகு அத்தியாயம் நாற்பத்தாறு
- மிளகு – அத்தியாயம் நாற்பத்தேழு
- மிளகு அத்தியாயம் நாற்பத்தெட்டு
- மிளகு அத்தியாயம் நாற்பத்தொன்பது
- மிளகு அத்தியாயம் ஐம்பது
- மிளகு அத்தியாயம் ஐம்பத்தொன்று
- மிளகு – அத்தியாயம் ஐம்பத்திரெண்டு
- மிளகு-அத்தியாயம் ஐம்பத்திமூன்று
- மிளகு -அத்தியாயம் ஐம்பத்திநான்கு
ஹொன்னாவர் நகரின் பகல் நேரம் பொறுக்க முடியாத சூட்டோடு மெல்ல நீங்கிப் போய்க்கொண்டிருந்தது. வெய்யில் நேரத்தில், இந்துஸ்தானத்தோர் போல் மேல் குப்பாயத்தை, உள்சட்டையைத் துறந்து மாரில் சந்தனம் பூசிக்கொண்டு தெருவோடு போக முடிந்தால் எவ்வளவு நன்றாக, சுகமாக இருக்கும் என்று பெத்ரோ நினைத்துப் பார்த்தார். திருவனந்தபுரத்தை அடுத்த கிராமப் பகுதியில் பெண்களும் அப்படிப் போவார்களாம். மனைவி மரியா சொல்லியிருக்கிறாள். வெய்யிலால் இல்லை. சில ஜாதிப் பெண்கள் மார் மறைத்தல் குற்றம் என்றாள் மரியா அபராதம் விதிக்கப்படுவார்களாம்.
இன்னும் இரண்டு வாரம் போனால் மழைக்காலம் வந்து விடும். மழை வந்தாலும் அடித்துப் பெய்து அது அவ்வப்போது ஓயும்போது வெப்பம் கூடுமே தவிரக் குறைவதில்லை. மழை அழிச்சாட்டியமாகத் தொடர்ந்து ஒரு வாரம் ராப்பகலாக அடித்துப் பெய்தால் தான் நிலம் குளிர்ந்து ஈசல்கள் பறக்கத் தொடங்கும். அந்தப் பொழுதுகள் மிளகுப் பயிர் வளரத் தேவையான வெப்பமும், நீர்வளமும் கொடுப்பவை என்று பெத்ரோ அறிந்திருந்தார்.
இரண்டு வாரம் முன் மிளகு திரளும் நேரம் வந்து சேர்ந்ததாக கடைத்தெருவில் பேச்சு எழுந்தபோது மிகச் சரியான நாளில் நிகழ்ந்து விட்டது என்று வயதான வணிகர்கள் சொன்னார்கள்.
ஒரு நாள் பின்னாடி நிகழக் கூடாது. ஒரு நாள் முன்னாலும் நிகழ்ந்து விடக் கூடாது. புது விளைச்சலின் குணத்தையும் விலைபோகும் பணமதிப்பையும் ஒரு கைப்பிடி மிளகை முகர்ந்து பார்த்தே நிச்சயிக்கக் கூடியவர்கள் அவர்கள்.
கோழிக்கோட்டில் மழை ஹொன்னாவரை விட, ஜெருஸோப்பாவை விட அதிகமாகப் பொழியும். வெப்பமும், ஈரமும், வெள்ளப் பெருக்கும் இங்கே இருப்பதை விட இன்னும் மூன்று மடங்காவது இருக்கும். கறுப்பு குறுமிளகு மலபார் இனமாக அங்கே விளைவது தான் உலகிலேயே உச்ச பட்ச விலைக்கு விற்கப்படுவது.
பெத்ரோவின் மாமனார் குடும்பத்தில் ஒரு பகுதி, போர்ச்சுகல் தலைநகரம் லிஸ்பனுக்கு வாசனை திரவியங்களை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்வதில் நூறு வருடத்துக்கு முன்பிருந்தே ஈடுபட்டவர்கள். வாஸ்கோ ட காமாவுக்கு ’ஐரோப்பாவில் இருந்து கடல் வழியாக ஆப்பிரிக்கக் கண்டத்தைச் சுற்றி நன்னம்பிக்கை முனை தொட்டு மேற்கில் திரும்ப இந்தியா வரும்’ என்று கண்டறிய கப்பல் பயணம் மேற்கொள்ள பண உதவி செய்த அரசர்கள், பிரபுக்கள், பெரும் வணிகர்களில் அவர்களும் உண்டு.
பெத்ரோவின் மாமனார் காப்ரியல் ஃப்ரான்சிஸ்கோ வேறு யார் பெயரிலோ கோழிக்கோட்டில் நிலம் வாங்கினார். நிலத்தில் தென்னை, கமுகு, பலா இவற்றோடு ஊடுபயிராக மிளகு சாகுபடி செய்யக் கூலிக்கு ஆளமர்த்தினார். கொஞ்சம் போல தொழிற்கூலி கொடுத்துவிட்டு சாகுபடி செய்து வந்த மிளகை எல்லாம் விற்க எடுத்துக்கொண்டார்.
சென்னபைரதேவி மகாராணி இந்தக் குற்றம் ஒன்றைத்தான் கண்டு பிடித்திருக்கிறாள். ஃப்ரான்சிஸ்கோ இளம் வயதிலேயே லிஸ்பனில் இருந்து இங்கே வந்தது, மறைவாக இப்படி வாசனைப் பொருள் விவசாயத்தில் ஈடுபட்டு, நல்ல விலைக்கு மிளகு விற்றுக் காசு பார்க்கத்தான்.
அவருடைய நூதன லாந்தர், கடிகாரம் விற்பனைக் கடையும் போர்த்துக்கீசிய வெள்ளிப் பாத்திரங்கள் விற்கும் கடையும் இந்த மறைவான மிளகு வர்த்தகத்துக்குத் திரை போடத்தான்.

அந்த கடியாரக் கடையில் தான் ஐந்து வருடம் முன்பு பயிற்சி பெறும் ராஜப் பிரதிநிதியாக இந்துஸ்தானத்தில் கோழிக்கோடுக்கு வந்து சேர்ந்தபோது மரியாவை முதலில் சந்தித்தார் பெத்ரோ. காப்ரியல் ஃப்ரான்சிஸ்கோவின் ஒரே மகள் மரியா.
பெத்ரோ, இடுப்பு கடியாரம் ஓடவில்லை என்று ஒக்கிட எடுத்துப் போனபோது, அரசப் பிரதிநிதியாக இன்னும் சில மாதங்களில் பதவி ஏற்கப் போகிறவர் அவர் என்று தெரிந்த ஃப்ரான்சிஸ்கோ, ஒரேயடியாக உபசாரமும் மரியாதையும் செய்தார் அப்போது.
’நீ யாராக இருந்தால் எனக்கென்ன, கடியாரம் ஒக்கிட கொடுக்க வந்திருக்கிறாய். சரி செய்தால் காசு தருவாய். அப்புறம் உனக்கும் எங்களுக்கும் எந்தத் தொடர்பும் இருக்கப் போவதில்லை’ என்று அப்போது அலட்சிய பாவம் காட்டியவள் மரியா.
அடுத்த ஆறு மாதத்தில் அவள் பெத்ரோவின் ஆகிருதியிலும், தன்மையான குரலிலும், நடத்தையிலும் மனதைப் பறிகொடுத்தாள். அவளுடைய அதிகாரமான அழகில் ஈர்க்கப் பட்டார் பெத்ரோ. வயது வித்தியாசம் மூன்று வருடங்கள் இருந்ததை அவர்கள் லட்சியம் செய்யவில்லை.
பெத்ரோவை விட மரியா மூன்று வயது மூத்தவள். மாதாகோவில் மதகுரு கல்யாணத்துக்கு முன் ஞாயிற்றுக்கிழமை பிரார்த்தனை முடிந்து திருமண நிச்சய ஓலை வாசிக்கும்போது இந்த வயது வித்தியாசத்தைச் சொல்லி யாருக்காவது ஆட்சேபணை இருக்கிறதா என்று கேட்க, மரியா எழுந்து நிற்காமல், இருந்தபடியே சொன்னாள் –
”அச்சோவ், இது என் கல்யாணம். பெத்ரோவோட கல்யாணம். இதுலே யாருக்கு என்ன ஆட்சேபணை இருக்க முடியும்? இருந்தா எழுந்திருக்கச் சொல்லுங்க. இப்பவே ரெண்டு கன்னத்திலும் அறைய கை துருதுருக்குது”.
அப்புறம் ஒருத்தன், ஒருத்தி எழுந்திருக்கவில்லையே. பெத்ரோவுக்கு இப்போதும் மரியாவின் அலாதி துணிச்சலைப் பற்றி ஆச்சரியம் அடங்கவில்லை.
மரியா பிள்ளைப்பேற்றுக்காக கோழிக்கோடு போய் நான்கு மாதமாகிறது. போகும்போதே அவரை நாடி பிடித்த மாதிரி சரியாகக் கணித்து மிரட்டி விட்டுப் போயிருக்கிறாள் –
“ஓலா சின்ஹோர் பெத்ரோ! நான் இல்லாத நேரத்தில் வேலைக்காரப் பெண்பிள்ளை, குசினிக்காரி, அடுத்த, எதிர் வீட்டுப் பெண் என்று சந்தோஷமாக ஜோடி சேர்த்துக் கொள்ள வேண்டாம். திரும்பி வந்ததும் தெரியாமல் போகாது அதொண்ணும். அப்போது உம் உறுப்பு உம்மிடம் இருக்காது. வெட்டிப் போட்டுவிடுவேன். ஜாக்கிரதை”.
ஹொன்னாவர் கடைத்தெருவில் சாரட் போகும்போது தீடீரென்று தன் இடுப்புக்குக் கீழ் அவசரமாகத் தொட்டுக் கொண்டார் பெத்ரோ. அவருக்குப் பின்னால் சாரட்டில் பாதுகாப்பாக நின்று வந்த ஊழியன் குழம்பிப் போய் ”துரை, கடியாரம் உங்கள் குப்பாயத்தில் இருக்கிறது” என்று கூவினான்.
நல்ல வேளை மரியாவின் மிரட்டல் அவனுக்குத் தெரியாது. தெரிந்திருக்காது. ராட்சசி சொல்வதோடு நிற்க மாட்டாள். பல்லி களைந்த வால் போல் துடிக்கும் பெத்ரோவின் குறியை துணியில் சுற்றிக் கையில் தூக்கிப் பிடித்தபடி ஹொன்னாவர் கடைத்தெருவில் அவள் நடந்து போவதாகக் கற்பனை செய்ய இன்னொரு தடவை வியர்த்தது பெத்ரோவுக்கு. முழுக்க நனைந்தே போனார்.
வீட்டு வாசலில் கஸாண்ட்ராவும், தோட்டக் காரனும், எடுபிடிகள் இருவரும் காத்திருப்பதைப் பார்த்தபோதுதான் வாசல் கதவைக் காலையில் பூட்டி விட்டு சாரட் ஏறியது நினைவு வந்தது.
சாதாரணமாக தன் தனி அறையைப் பூட்டி வைத்துவிட்டு மற்றபடி வீட்டை கஸாண்ட்ரா அல்லது அவள் இல்லாதபோது மூத்த வேலைக்காரர் ஒருத்தரின் நிர்வாகத்தில் விட்டுத்தான் போவது வழக்கம்.
இன்றைக்குப் புறப்படும்போது கஸாண்ட்ரா வந்திருக்கவில்லை. வேலைக்காரர்களும் மிர்ஜான் கோட்டைக்குப் போக குதிரை வண்டி தயார் செய்வதில் ஏற்பட்ட களேபரத்தில் அங்கேயும் இங்கேயும் ஓடிக் கொண்டிருந்தார்கள். என்னமோ தோன்ற, காலையில் வீட்டுக் கதவைப் பூட்டிக் கொண்டு கிளம்பிவிட்டார் பெத்ரோ.
“பூட்டிட்டு போயிட்டீங்களே எஜமான்” என்றான் தோட்டக்காரன் அபத்தமாகச் சிரித்தபடி. “உன்னை உள்ளே வச்சுப் பூட்டாமே போனாரே, சந்தோஷப்படு” என்றாள் கஸாண்ட்ரா.
சும்மா இருக்கமாட்டீங்களா என்று கோபமில்லாமல் சத்தம் போட்டபடி பெத்ரோ சாரட்டில் இருந்து இறங்கிப் பையில் சாவியைத் தேடினார். அதைத் தான் காணோம். அடடா, குப்பாயத்தில் இருக்குமோ என்று இறுக்கமான அந்த மேற்சட்டையின் மடிப்புகள் எல்லாவற்றுக்குள்ளும் தேடினார் அவர்.
”கிடைத்ததா எஜமான்?”
கஸாண்ட்ரா பொறுமை இல்லாமல் கேட்டாள்.
”சாத்தானே, வச்சுக்கிட்டா இல்லேங்கறேன். நீயே பார்” என்று ஆரம்பித்தவர் பாதியில் நிறுத்தினார். எதுக்கு வம்பு. மரியா துரத்தினால் ஓட முடியாது.
நாற்பது வயது உடம்பு இது. இதைக் கொண்டு போர்ச்சுகல் அரசருக்கு நிறைய சேவை சாதிக்க வேண்டியிருக்கிறது. மரியாவுக்கும். அவள் இல்லாத பொழுதில் இந்த கஸாண்ட்ராவுக்கும் கூடத்தான்.
”நான் சாத்தானா, இரும், ஈயென்று இளித்துக்கொண்டு வருவீரே அப்போது என்ன செய்ய வைக்கிறேன் பாரும்” என்று பெத்ரோ காதில் முணுமுணுத்து விட்டு கஸாண்ட்ரா சுவாதீனமாக சாரட்டுக்குள் நுழைந்து, பெத்ரோ பிரபுவின் பின்னால் பார்க்க, ஆசனத்தில் ஓரமாக அப்பிக் கொண்டிருந்த சாவிக்கொத்து கண்ணில் பட்டது.
அவருடைய இடுப்புக்குக் குறுக்கே கை நீட்டி வளைத்து அணைப்பது போல் ஒரு வினாடி கை காட்டி அந்தச் சாவிக்கொத்தை எடுத்தாள் அவள். “எஜமான் உங்க சாவி இந்தாங்க”. அவள் சொல்லி முடித்தவுடன் அங்கே கூடிவிட்ட சிறு கூட்டம் இன்னும் ஒரு தடவை ஆர்பரித்துச் சிரித்தது.
”இடியாடஸ்! என்ன கண்டீர்களடா சிரிக்க?”
பெத்ரோ கையை மல்யுத்த வீரன் போல் விரித்துக் காட்டிப் பார்வையால் சுட்டபடி தனக்கு சுபாவமாக வந்த போர்த்துகீஸில் கேட்டார். சிரிப்புக் குப்பன்கள் சிரித்து மாளவில்லை. அப்புறம் ஓரளவு கைவந்த கொங்கணியிலும் அதைக் கேட்க இன்னொரு சிரிப்புக்கு அது வழிகோலியது.
”இன்றைக்கு ஊரே சிரிக்க வழி பண்ணிட்டார் எஜமான்” என்று கோச்வண்டி ஓட்டுகிறவன் சொல்லியபடி கூளம் எடுக்கப் போக பெத்ரோ வீட்டு வாசலில் கும்பல் கலைந்தது.
கஸாண்ட்ரா ஓடிப் போய் வாசல் கதவைத் திறந்து வைக்க கனகம்பீரமாக பெத்ரோ துரை தன் மாளிகைக்குள் நுழைந்தார். தோட்டக்காரனும் எடுபிடிகளும் தோட்டத்துக்குப் போக அவரைப் பின் தொடர்ந்து வந்த கஸாண்ட்ரா அவர் ஒதுங்கி வழிவிடாததால் அவர் மேல் மோதியபடி குசினிக்குள் நுழைந்தாள். நல்ல வேளை, அவள் பின்னால் யாருமில்லை.
”பெண்ணே இப்படி ஒரு ஆணை சல்யம் செய்யலாமா?” என்று கேட்டபடி அவளை பின்னால் கிள்ளி நோவிக்க கஸாண்ட்ரா ஒரு அவசர முத்தத்தோடு அதை முடித்துக் கொண்டு கோழி மாமிசத்தில் பிரட்ட முந்தைய நாள் அரைத்து வைத்திருந்த மிளகு விழுதை எடுத்தாள்.
”நல்ல வாடை இல்லையா?”
குசினிக்குள் எட்டிப் பார்த்த பெத்ரோ துரை விசாரித்தார்.
”நல்ல வாடைதான். ஆனால் கோழிக்கு இந்தக் காரம் போதாது. வெங்காயமும், வற்றல் மிளகாயும் சேர்த்து அரைத்த விழுது பூசி எண்ணெயில் பொறிக்க வேண்டிய மரியாதைக்குத் தகுந்தது கோழி மாமிசம்”.
கஸாண்ட்ரா மாமிசத்தில் மசாலா சேர்த்துப் புரட்டியபடியே சொன்னாள். எதிராளியைக் கீழே வீழ்த்தி, தோளை இறுக்கிப் பிடித்துப் பிசையும் மல்லன் போல், கோழி மாமிசத்தைக் கால்களுக்கு இடையே போட்டுக் கொண்டு, இரண்டு புஜங்களிலும் தோள் தசைகள் இறுகித் திரண்டு வர, கைகளை அடுத்து வழிந்த மாணப்பெரும் கொங்கைகள் கச்சுத் துணியைக் கிழிக்கப் பிதுங்கியவையாக வளமான மேல்பரப்புக் காட்சி கொடுத்துத் துள்ளி அசைய, மாமிசம் பாகம் பண்ணினாள் கஸாண்ட்ரா.
”நீ சொன்னபடியே செய்துவிடேன்” என்றபடி வாசலுக்கு நடந்தார் பிரபு.
“அப்போ மிளகு அரைத்து வைத்த விழுது?”
கஸாண்ட்ரா அழகாக சந்தேகம் கேட்டாள்.
வாசலில் இரண்டு பக்கமும் பார்த்துவிட்டு அவசரமாக உள்ளே வந்து கஸாண்ட்ராவிடம் ஏதோ ரகசியமாகச் சொல்ல அவள் சீயென்று முகம் வலித்துச் சிரித்தாள்.
இன்றைய நாள் இப்படியே போகட்டும் என்று பெத்ரோ வாசலுக்கும் நடைக்கும் இடையே சற்றே நடந்தார்.
”அப்படியே சருவப் பானையில் வென்னீர் போட்டு வை. நான் உடம்பு கழுவிக்கொள்ள வேண்டும்” என்று உத்தரவு பிறப்பித்தபடி தெருவில் இறங்கினார்.
சட்டென்று இப்படி தெருவில் நடந்து, எல்லோரும் எல்லா இயக்கமும் எப்படி நடக்கிறது, என்று தெரிந்து வைத்துக் கொள்ள அவருக்கு நிறையவே ஆர்வம் உண்டு.
தெருவின் ஓரத்தில் குத்த வைத்து உட்கார்ந்து முட்டைகளை பிரம்புக் கூடைகளில் வைத்து விற்கிற கிருஷ்ணப்பா அவர் கண்ணில் முதலில் பட்டான். பெத்ரோவின் மாளிகைக்கு நேர் எதிரே தெரு ஓரமாக உட்கார்ந்திருந்தவன் தலைக்கு மேலே ஒரு பிரப்பங்குடை நிழல் பரப்பிக் கொண்டிருந்ததைக் கண்டார்.
பிரப்பங்குடை மேல் இருந்து தண்ணீர் வடிந்தபடி இருக்க, கிருஷ்ணப்பா கீழிலிருந்து கையில் செப்புக் கிண்டியோடு வெளியே வந்து கையளவு நீரை குடைமேல் விசிறி அடிக்க, சுகமான வாசனை குளிர்ச்சி பகர்த்தி வந்து நின்றது.
”ஓ கிருஷ்ணப்பா அதென்ன அபின் கலந்த தண்ணீரா? முட்டை விற்க அபின் எதற்கு?”
பெத்ரோ கேட்க, இல்லை பிரபோ என்று அவசரமாக மறுத்தான் கிருஷ்ணப்பா.
”இது வெட்டிவேர் கலந்த தண்ணீர். ஒரு பலா இலை மடக்கு நிறைய ஏலமும் கலந்து தெளித்தேன். வெய்யிலுக்கும், வியர்வைக் கசகசப்பு குறைக்கவும் இதைவிட வேறே விமோசனம் இல்லை பிரபு”.
முகத்திலிருந்து வியர்வை ஆறாகப் பெருகி வடிந்தாலும் மலர்ச்சியோடு சொன்னான் கிருஷ்ணப்பா.
”நீ கோழிமுட்டை மட்டும் விற்றே எத்தனை நாள் கஷ்டப்படப் போகிறாய்? வான்கோழி வைத்துப் பராமரித்து அதன் முட்டைகளையும் விற்கலாமே? இந்தியர்கள் வாங்குகிறார்களோ என்னமோ, ஹொன்னாவரில் இருக்கப்பட்ட போர்த்துகீசியர்கள் ஒருத்தர் விடாமல், நீ என்ன விலை சொன்னாலும் கொடுத்து வாங்கிப் போய் சமைத்து உண்பார்களே”.
வழக்கமாகத் தரும் யோசனைதான். புதிதாகச் சொல்லும் உற்சாகத்தோடு பெத்ரோ சொல்ல, கும்பிட்டு நன்றி சொன்னான் கிருஷ்ணப்பா.
”அந்தப் பறவையை வளர்ப்பது பற்றி ஒன்றும் இல்லை பிரபோ. வாய்க்குக் கீழே சவ்வு தொங்கிக் கொண்டு அலைகிற அவற்றைப் பார்க்கத்தான் குமட்டலாக இருக்கிறது. அந்த முட்டைகளின் வாடை வேறே ஒரு மாதிரி”.
அவன் வழக்கமான பதில் சொன்னான்.
”அதெல்லாம் பணத்தின் வாடை. பிடிக்காமல் எப்படி காசு சேரும்?” என்றார் பெத்ரோ. கிருஷ்ணப்பா வெகுளியாகச் சிரித்தான்.
”நான் அடுத்த முறை லிஸ்பனில் இருந்து திரும்பும்போது உனக்காக ஒரு பத்து வான்கோழிகளைக் கொண்டு வருகிறேன். பத்து வான்கோழி ஏற்றினால், இங்கே வந்து சேரும்போது அதில் இரண்டு மிஞ்சினால் அதிசயம் தான். அந்தக் கோழிகள் நீ சொன்னபடி வசீகரமாக, மயில் போல இருப்பதோடு, நறுமணம் வீசும் முட்டை பொறிக்கும். நல்ல நிறமாகவும் இருக்கும். மயில் போல் இறகு விரித்து ஆடும். சரிதானா?” பெத்ரோ நடந்தார்.
”பிரபோ, ஆடாத இருபது கோழி கொண்டு வர முடியுமா?”
கிருஷ்ணப்பாவின் உற்சாகமான குரல் அவருக்குப் பின் கேட்டதை ரசித்தபடி போனார் அவர்.
பிடவை –புடவை-விற்கும் சந்திரய்யா கடை வாசலில் நின்று சந்திராரே என்று கொஞ்சம் குரல் உயர்த்தி அழைத்தார் பெத்ரோ.
பளிச்சென்று கண்ணில் படும் பட்டுப் பிடவைகளும் தமிழ்ப் பிரதேசத்தில் தறி நிறுத்தி நெய்து அனுப்பிய நூல் பிடவைகளும் அழகாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த கடை அது.
முறுக்கி நிறுத்திய சில பிடவைகள் கடைக்குள் நீளமான இரும்புக் கம்பி பொருத்திய மரக் கட்டைகளிலிருந்து தொங்கவிட்ட பூமாலைகள் போல் ஆடிக் கொண்டிருந்தன.
வெப்பக் காற்று மட்டும் இல்லாமல் இருந்தால் அந்தக் கடையே சொக்க வைக்கும் வர்ணக் களேபரமும், சாயம் தோய்த்த புதுத்துணி வாசனையுமாக வேறு உலகத்தைச் சித்தரித்திருக்கும்.
“சந்திரய்யா! எங்கே போனீர்? ஒய் சந்திரய்ய-ரே”.
கடைக்குப் பின்னால் தரையில் சம்மணம் கொட்டி இருந்து அவசர அவசரமாக கம்பங்களி உருண்டையை வாயில் இட்டுச் சாப்பிட்டுக் கொண்டிருந்த சந்திரய்யா எழுந்து எச்சில் கையோடு ஓடி வரத் தயாராக, “ஒண்ணும் அவசரம் இல்லே, சாப்பிட்டு வா. நான் சும்மா வேடிக்கை பார்க்கத் தான் வந்தேன்” என்றபடி பிடவை அடுக்கிய அலமாரிகளைப் பார்வையிட்டார் பெத்ரோ.
ஒரே ஒரு அலமாரியில் மயில்கண்ணும் பட்டையாக நீலமும் பச்சையும் சரிகையும் கரையாகக் கொண்ட வேஷ்டிகளும் மேல் துண்டுகளும் அடைத்திருக்க, மீதி நான்கு அலமாரி முழுக்க விதவிதமான பிடவைகள், கச்சுகள்.
சந்திரய்யா மெல்லச் சாப்பிட்டு வரட்டும். பெத்ரோ ஒரு அலமாரிக்குள் கை நீட்டி அங்கே வைத்திருந்த பட்டுக் கச்சைகளில், மேலே இருந்ததை எடுத்துப் பிரித்தார்.
இந்தத் துணி அதிசீக்கிரம் மெத்தென்று, சூடாக, நாள் முழுக்க கவ்விப் பிடித்திருக்கும் உறுதுணையொன்றை, அதாவது இரண்டைப் பெறப் போகிறது என்று நினைத்துப் பார்க்க துணி என்றும் பார்க்காது அதன் மேல் பொறாமை எழுந்தது.
போன வருடம் தீபாவளிக்காக வேலைக்காரர்களுக்கு பிடவைகளும் வேட்டி அங்கவஸ்திரங்களும் பெத்ரோ வாங்கும்போது எப்படியோ கூடுதலாக ஒரு கச்சும் வந்துவிட்டது. அதை எடுத்து வைத்துக் கொண்டு மரியாவிடம் அன்போடு அன்றைய ராத்திரி அதை அணியச் சொன்னார் பெத்ரோ. கச்சை அணிவதை விட அவிழ்ப்பது தான் கிளர்ச்சியூட்டக் கூடியது என்று அந்த நிமிடம் அவருக்குத் தோன்றியது.
” ஓலா, உமக்கு என்ன கிறுக்கா பிடித்தது, சின்ஹோர் பெத்ரோ?. லிஸ்பனிலும் கிராமப் புற போர்ச்சுகல்லிலும் என் போன்ற பேரிளம் பெண்கள் உடுத்துவது போல் நீளப் பாவாடையும் மேற்சட்டையும் உடுத்தி நான் பாட்டுக்கு அங்குமிங்கும் போய் வந்து கொண்டிருக்கிறேன். கச்சு உடுத்தணுமாமே. அதை உடுத்தி பின்னால் இறுகிக் கட்டுவதற்கு யாரைத் தேட? உம்மைக் கட்டச் சொன்னால் இன்று பூரா அதை செய்து கொண்டிருப்பதாக சாக்கு சொல்லி வேறேதாவது பண்ணிக் கொண்டிருப்பீர். சரி நானே கட்டிக் கொண்டு கடைத்தெரு போனால் எதிர்பார்க்காத நேரத்தில் இந்தக் கச்சு கழன்று விழுந்து உலகுக்கெல்லாம், உள்ளே இருக்கப்பட்டது இவ்வளவு தான் என்று பட்டவர்த்தனமாக எடுத்துக் காட்டும். தேவையா எனக்கு இது? தேவையா உமக்கு அதில் வரக்கூடிய துக்கமும் நாணக்கேடும்?”.
கஸாண்ட்ராவை கச்சு உடுக்கச் சொன்னாலென்ன? அவள் கோழி சமைக்கட்டும், அப்புறம் உடுக்க, எடுக்கச் சொல்லலாம்.
பெத்ரோ திரும்பி நடப்பதற்குள் சகல மசாலாவும் வெங்காயமும் மணக்க சந்திரய்யா வேஷ்டியில் கையை ஒற்றிக்கொண்டு வெளியே வந்தார்.
”மன்னிக்கணும், காலையில் வெறும் வயிற்றோடு கடை திறக்க வந்து விட்டேன். இப்போது பசியெடுத்து வீட்டிலிருந்து சோறும் மீனும் வரவழைத்துச் சாப்பிட்டேன்” என்றார் மன்னிப்புக் கேட்கும் குரலில்.
என்ன மீன் சாப்பிட்டீர்கள் என்று விசாரித்தார் பெத்ரோ. அந்த மீன் வாடை கொஞ்சம் வித்தியாசமாக இருந்ததைக் கவனித்தார் அவர்.
”இதுவா, இன்னும் கூட அடுக்குப் பாத்திரத்தில் உண்டே” என்று உள்ளே போய் எடுத்து வந்து காட்டினார்.
“இது இன்னொரு மீன் வகை. செம்மீன். மலையாள பூமியான கொச்சியில் இருந்து, சரியாகச் சொன்னால், குட்டநாடு கடல் பிரதேசத்து வாய்க்கால் விளைச்சல். ராட்டு என்று தமிழர்கள் சொல்வது. அனுப்பி வைக்கட்டுமா?” என்று அன்போடு கேட்டார் சந்திரையா.
”உங்கள் பிடவைக்கடையில் போர்ச்சுகீசியரும் வந்து நின்று வாங்கணும் விற்பனை அதிகமாகணும் என்று எனக்கு ஆசை. ஏன் வழி பண்ணக் கூடாது?”
பெத்ரோ கேட்டார். எப்படி என்று புரியாமல் சந்திரய்யா அவர் முன் நின்றார், வாங்க யாரும் வராத கோடைப் பகல் நேரத்தில் எப்படி விற்பனை கூடும்?
லிஸ்பனில் இருந்து கொஞ்சம் போல ஐரோப்பாவில் நெய்த துணி வரவழைத்து கிறிஸ்துமஸுக்கு இங்கே கடை பரத்தினால், அதற்கு அனுமதி எல்லாம் தேவைப்படாது என்று பெத்ரோ கவனித்திருந்தார்.
தீபாவளி கிறிஸ்துமஸுக்கு ஒரு மாதம் போல் முன்னால் வருவது நல்லதுதான். அந்த நேரத்தில் கௌன்களும், பூப்போட்ட மேல்சட்டைகளும் தைக்க உள்ளூர் தையற்காரர்களுக்கு பயிற்சி தரலாம். மாதிரி உடுப்புகளைக் காட்டினால் சுறுசுறுப்பாக இங்கே இருக்கப்பட்ட தையல்காரர்கள் தையல் சூட்சுமத்தை எல்லாம் பிடித்துக் கொண்டு விடுவார்கள்.
”இந்த ஏற்பாடெல்லாம் செய்த பிறகு, போர்த்துகீசிய துரைகள், துரைசானிகள் வந்து கடையில் விலைபேசித் துணி வாங்கித் தைக்கப்போட தனி நேரம் ஒதுக்கலாம். ராத்திரி எட்டு முதல் பத்து வரை அல்லது பகல் மூன்று முதல் ஐந்து வரை இப்படி. மேற்கத்திய உடுதுணி வாங்க வந்தவர்கள் ஒரு மாறுதலுக்காக பிடவை வாங்கிப் போய் தங்களுக்கு பிரியமானவர்களுக்கு உடுத்தச் சொல்லி அழகு பார்க்கலாம். பிடவை வாங்க வந்த உள்ளூர்க்காரர்கள் பாவாடையும் மேற்சட்டையும் தைத்து வாங்கி உள்ளூர் அழகுக்கு அழகு சேர்த்து ரசிக்கலாம். இரண்டு விதமாகவும் உமக்கு லாபம் தானே? வரவழைக்க ஏற்பாடு செய்யட்டா?” பெத்ரோ கேட்டார்.
”ஓ மேஸ்த்ரீ தியோஸ் பெத்ரோ” – ஓ எஜமானே, பெத்ரோ கடவுளே -, உங்கள் ஸ்நானத்துக்கான வென்னீர் காய்ந்து ஆவியாகிக் கொண்டிருக்குது. திருமனசு பண்ணி குளித்து சாப்பிடணுமே”.
கஸாண்ட்ரா சத்தம் போட்டுக் கூப்பிட அவசரமாக பெத்ரோ துரை தெருவைக் கடந்து வீட்டுக்கு விரைந்தார். இந்தப் பெண் இப்படி சத்தம் போட்டு, சொந்தப் பெண்டாட்டி போல அதிகாரம் பண்ணாமல், பண்ணினாலும் வெளியே தெரியப்படுத்தாமல் இருக்கலாம் என்று அவர் மனசு சொன்னது. அழகான பெண்கள் என்ன செய்தாலும் சரி என்று இன்னொரு மனசு சொன்னது.
அவர் தெருவில் வேகமாக வந்து, தன் மாளிகை அருகே திரும்பி நின்ற குதிரை வண்டியில் இடித்துக் கொள்ளாமல் தெருவைக் கடந்தபோது வீட்டுக்கு அடுத்து மிட்டாய் அங்காடியில் பார்வை படர்கிறது. கடையிலிருந்து ஏதோ வாங்கிக்கொண்டு இறங்கும் யாரையோ வழியனுப்பிச் சிரித்தபடி கடையில் சுற்றி வரும் மிக அழகான பேரிளம்பெண்ணை வேறே எங்கேயோ பார்த்த நினைவு. சரிபாதி இந்துஸ்தான வனப்பும், மிகுதி போர்த்துகல் ஒய்யாரமுமாகக் குழைத்து வந்தெழுந்த போதையூட்டும் அழகு அது. தூரத்திலிருந்தே கவரும், அதிர்ந்து அலைபரப்பும் வனப்பு. யார் இவள்?
கஸாண்ட்ராவைக் கேட்கலாமா? சிரித்து மாளாமல் தன் தோழிகளிடம் சொல்லி விடுவாள், கைகால் மூக்கு வால் எல்லாம் தைத்து வைத்துச் சேர்த்து. நினைவு வந்து விட்டது. இவள் மரியாவின் தோழி. லிஸ்பன்காரியும் கூட. இருபது வருடம் முன் ஊமத்தைச்சாறு யுத்தத்தில் ஆகச்சிறு வயதில் புருஷனை இழந்தவள் என்று கேட்ட நினைவு.
ஓலா பெத்ரோ! அவர் தன் இடுப்புக்குக்கீழ் ஒரு வினாடி பார்த்துக்கொண்டு மாளிகையில் நுழைந்தார்.
***