மிளகு – அத்தியாயம் பத்து – 1596 மிர்ஜான் கோட்டை

1596 மிர்ஜான் கோட்டை

திருவாளர் பெத்ரோவின் இரட்டைக் குதிரை வண்டி மிர்ஜான் துறைமுக நகர் கடந்து, கோட்டைக்குள் நுழைந்து கொண்டிருந்தபோது காலை ஒன்பது மணி என்று அதிர்வேட்டு போட்ட சத்தம் காதில் விழ தன் கால்சராய் கடியாரத்தை எடுத்து மணி பார்த்தார். ஒன்பது அடிக்க இன்னும் பத்து நிமிடம் இருந்தது. 

என்றால் என்ன? கோட்டையில் அதிர்வேட்டு போட்டு முரசறைந்து தெரியப்படுத்தும் சத்தம் உத்தியோகபூர்வமானது. மற்றவர்கள் யாராக இருந்தாலும் அதன்படி தான் செயல்பட வேண்டும். பெத்ரோ இன்று சென்னபைரதேவி மகாராணியை அலுவல் நிமித்தம் சந்திக்க வேண்டியது காலை ஒன்பது மணிக்கு. எட்டு மணி ஐம்பது நிமிடம் என்று சரியான நேரம் இருந்தாலும் தாமதமாக வந்திருக்கிறார் பெத்ரோ என்பது சூழ்நிலை நிஜம்.

அவசரமாக சாரட்டை விட்டு இறங்கிப் பட்டுத் துணியால் அழகாகப் பொதிந்து கட்டிய பெட்டியை ஜாக்கிரதையாகக் கையில் சுமந்தபடி அவர் ஓட்டமும் நடையுமாக முன் மண்டபத்துக்குள் நுழைந்தார். இன்றைக்கு சந்திக்க வேண்டிய மற்றவர்கள் அங்கே திரளாகக் காத்திருப்பார்கள்.

 கூட்டத்தில் இருப்பவர்களின் அந்தஸ்து விவரம் கருதி யார் முன்னால் போக, பின்னால் யார் அடுத்துப் போகவேண்டும் என்பதெல்லாம் தீர்மானித்து கோட்டை உத்தியோகஸ்தர் உள்ளே அழைத்துப் போவார். எப்படியும் அரை மணி நேரத்தில் இருந்து பகல் ஒரு மணி வரை காத்திருக்க வேண்டி வரும். 

சீக்கிரம் மகாராணி திருமுன்பு காட்சி கிடைத்து சகல மரியாதையோடும் உரையாடி பதினொரு மணிக்கு வீடு திரும்பினால் கஸாண்ட்ரா அப்புறம் அவள் சமைத்த கோழி மாமிசம். 

இரண்டுக்கும் நடுவிலே குளிக்க வேண்டியிருந்தால் அதற்கு ஒரு அரைமணி நேரம். எல்லா சுகமும் விதித்தபடி கிட்டி பிற்பகல் சுகமாக உறக்கம். 

பெத்ரோவின் நாற்பது வயது உடம்பு நேரம் காலம் இடம் எதுவும் லட்சியம் செய்யாமல் எதிர்பார்க்கத் தொடங்கி விட்டது.

இதென்ன, முன் மண்டபத்தில் யாரும் காத்திருக்கக் காணோமே. 

பெத்ரோவுக்கு உடனடியாக உறைத்தது. இன்று யாரோ முக்கியமான சமண தீர்த்தங்கரரின் நினைவு தினம் ஆச்சே. மிக முக்கியமான சந்திப்புகள் மட்டும் வைத்துக்கொண்டு மற்றவற்றை அடுத்த தினங்களுக்கு ஒத்திப் போட்டுவிடுவாள் சென்னபைரதேவி மகாராணி என்று. 

இந்தச் சந்திப்பு நீண்டு போகும் முக்கியமான நேர்காணலாக இருக்கக் கூடும் என்று நினைக்கும்போதே தான் இதற்காக தயாராக வந்திருக்கிறோமா என்று பெத்ரோவுக்குத் தோன்றியது. 

கவுடின்ஹோ என்ற போர்ச்சுகல் தேசத்தின் முதிய கௌரவப் பணியாளர் இருக்க அவரை விட்டுவிட்டு போர்ச்சுகல் அரசரின் விசேஷ பிரதிநிதி ஆன பெத்ரோவை வாவா என்று தாம்பூலம் வைத்து இந்தியர்கள் அழைக்கிறார்கள் என்றால் ஏதோ பெரிய விஷயம் தான். 

கோழிக்கறியும் கஸாண்ட்ராவும் காத்திருக்கட்டும். நல்லபடி இந்த சந்திப்பு முடிந்து அதையெல்லாம் பார்த்துக் கொள்ளலாம். 

பிரதானியுமான துபாஷி நஞ்சுண்டய்யா சந்தனம் மணக்க வந்து முன் மண்டபத்தைக் கடந்து போகிற போக்கில் பெத்ரோவைப் பார்த்துப் புன்சிரித்துப் போனார். அவர் புன்சிரிப்போடு இருந்தால் விஷயம் சந்தோஷகரமானதாகத்தான் இருக்கக் கூடும். 

மொழிபெயர்ப்பாளரான துபாஷிக்கு முன்கூட்டியே அடிப்படை நிலை ஆவணங்களும், நடவடிக்கைக் குறிப்புகளும் பகிரப்படும் என்பதை கேட்டறிந்திருக்கிறார் பெத்ரோ. 

வணிகம், முக்கியமாக மிளகு, ஏல வணிகம் பற்றிய பேச்சு வார்த்தைகளின்போது இது இன்னும் அதிகம். போர்த்துகீஸில் பேசப்படுவதை கொங்கணியிலும் கன்னடத்திலும், இம்மொழிகளில் பேசப்படுவதை போர்த்துகீஸ் மொழியிலும் சீராக மொழிபெயர்த்துச் சொல்லி, சிறப்பான பேச்சு வார்த்தைக்கு வழி செய்பவர் அவர்தான்.

உள்ளே இருந்து கோட்டை மூத்த அதிகாரி வந்து பெத்ரோ முன் குனிந்து வணங்கி ஷேமலாபம் கேட்டார். அவர் பெத்ரோவின் மாளிகை இருக்கும் ரதவீதிக்கு அடுத்த தெருவில் தான் வசிக்கிறார். க்ஷேமலாபம் அடிக்கடி பார்க்கும்போது பரிமாறிக் கொள்வது அவர்களுக்குள் நடப்பு  என்றாலும் மரியாதை நிமித்தம் கோட்டை உத்தியோகஸ்தராக இன்னொரு தடவை அவர் கேட்டு, இவரும் சொல்லியானது.

”அரண்மனை கடியாரத்தை அரசியின் பிறந்த நாளுக்காக நல்ல நேரம் காட்ட ஜோசியர் யோசனைப்படி பத்து நிமிஷங்கள் முன்னாலாக்கித் திருப்பி வைத்தோம். பஞ்சாங்கப்படி கணிக்கப்படும் நேரமும், ஐரோப்பிய கணிப்பு நேரமும் ஒரே படி இருக்க ஒரு முயற்சியாக சூர்யோதம் இரண்டு நாளாக ஐரோப்பிய நேரப்படி ஆறு மணி முப்பது நிமிடம். கவனித்திருப்பீர்களே? உங்கள் கால்சராய் கடியாரத்தைத் திருத்தி வைத்துக் கொண்டீர்களோ?” என்று கேட்டார் நஞ்சுண்டைய்யா பிரதானி.

இல்லை என்றார் பெத்ரோ. போர்ச்சுகல் அரசருக்குச் சொல்லாமல் காலம், இடம் எதுவும் மாற்றமாட்டார் அவர்.  ஐரோப்பிய முறைப்படியும் இந்தியப் பஞ்சாங்க முறைப்படியும்  வித்தியாசம் இருந்து நேர் செய்வதாக இருந்தாலும்  அரசப் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டு இங்கே பணி நிமித்தம் வந்திருக்கும்போது அவராக எதுவும் செய்ய முடியாது.. 

எனினும் நஞ்சுண்டையா துபாஷி பஞ்சாங்கம், ஜோசியம் இப்படியான விஷயங்களிலும் நல்ல புலமை மிக்கவர். அவர் சொல்வது ராணியம்மா சொல்வது போன்றதாகும்.

”அனுமதி கேட்டு எங்கள் பேரரசருக்குக் கடிதம் எழுதியிருக்கிறேன் நஞ்சுண்டய்யா அவர்களே. வந்ததும் என் கடியாரத்தில்  நேரத்தை மாற்றிவிடுவேன்”.  

பெத்ரோ நம்பிக்கை துளிர்க்க, வரவழைத்துக்கொண்ட உற்சாகத்தோடு சொன்னார்.

”ராணியம்மா சற்றே சுகவீனம் அடைந்திருக்கிறார். அரண்மனை வைத்தியர் தகுந்த மருந்து குளிகைள் உண்ணவும் பருகவும் தந்து குணமடையச் செய்திருக்கிறார். இன்று முழுவதும் ஓய்வு தேவை என்றார் வைத்தியர். எனினும் உங்களுக்கு சந்திக்க ஏற்கனவே ஒப்புதல் தந்துவிட்டதால் இந்த சந்திப்பை சுருக்கமானதாக நிகழ்த்தி தகவல் பெற, வழங்க மகாராணியார் விருப்பம் தெரிவிக்கிறார்”.

”அப்படியே ஆகட்டும். என் நன்றி மகாராணி அவர்களுக்கு”.

வாருங்கள், உள்ளே போகலாம் என்று அழைத்துப் போனார் பிரதானி நஞ்சுண்டையா. சந்தனத்திலேயே சதா மூழ்கி இருப்பாரோ என்று பெத்ரோவின் நாசி கேட்டது. இந்தியர்களுக்கு சந்தனத்தில் அப்படி என்ன பெருவிருப்பம் என்று அவருக்குப் புரியவில்லை தான். 

ஐரோப்பியனுக்கு மிளகில் விளக்க முடியாத ஒரு வசீகரம் இருக்கும்போது இந்தியனுக்குச் சந்தனம் பிடிக்கக்கூடாதா என்ன?

அழகான ஜரிகை, பல நிறப் பட்டுத்துணி, தந்தப் பலகை கொண்டு இழைத்து, தைத்து, பளபளப்பாக்கி பன்னீரும் சந்தனம் ஊறிய நன்னீரும் கொண்டு அவ்வப்போது சுத்தமாகத் துடைத்து வைத்திருந்த அரச ஆசனத்தில் சென்னபைர தேவி அமர்ந்திருந்தார். 

போர்த்துகீஸ் தேசப் பிரதிநிதி முழங்காலில் மண்டியிட்டிருந்து, தேவாலயத்தில் வணங்குவது போல் வணங்கினார். அது இந்திய வழக்கம் இல்லை. எனினும் அவர் வணங்கியது மகாராணிக்குப் பிடித்திருந்ததாக சென்னபைரதேவியின் முகக் குறிப்பு சொன்னது. 

பெத்ரோ வணங்கி எழுவதற்குள் மகாராணி தன் வலது கையை பெத்ரோவின் முகத்தை நோக்கி  நீட்டினாள். இது இதுவரை நடைமுறைப் படுத்தப்படாத அசல்  ஐரோப்பிய மரியாதை செலுத்துதலின் இறுதிக் கட்டம் என்பதை சென்னபைரதேவி அறிந்திருந்ததோடு இன்றைக்கு முதல் முறையாகப் பரீட்சித்துப் பார்க்கத் திருவுள்ளம் கொண்டதாகத் தெரிய வர பெத்ரோவுக்கு அளவு கடந்த மகிழ்ச்சி.

அரசியின் கையை மெதுவாகப் பற்றி மரியாதையோடு முத்தமிட்டு தலை வணங்கவே, அவள் கையைப் பின்னால் எடுத்துக் கொள்ளும் முன் ஒரு பெண் ஊழியத்தி ரோசாப்பூ அத்தர் நனைத்த வெண்மையான பட்டுத் துண்டும் வெளிர்நீல பருத்தித்  துணிச் சவுக்கமும் கொண்டு கையை சுத்தப்படுத்தியது பெத்ரோவுக்கு சற்றே எரிச்சலை ஏற்படுத்தியது. 

அவருடைய வாயும், முத்தமும், இங்கே இருக்கும் ஒவ்வொருத்தரையும் விட அதிக சுத்தமானது என்பதில் நம்பிக்கை உண்டு அவருக்கு. மரியாதை செலுத்தும் ஐரோப்பிய சடங்கை, இந்திய முறையில் தீட்டு பார்த்து, துணியால் சுத்தப்படுத்தித் துடைப்பதாக மாற்றுவது, விரைவில் இந்தப் பிரதேசம் எங்கும் புது மோஸ்தராகப் பரவலாக கடைப்பிடிக்கப் படலாம். 

மகாராணியின் கரங்களைச் சுத்தப்படுத்திக் கொள்ளக்கூடாது என்று வாதம் புரிய பத்து காரணங்கள் இருக்கலாம். ஆனால் சுத்தப்படுத்திக் கொண்டே ஆகவேண்டும் என்று மகாராணி நிபந்தனை வைக்க நிச்சயம் ஒரே ஒரு காரணம் போதும் – 

பெத்ரோவும் மற்ற எல்லா ஐரோப்பியர்கள் போல் காலைக்கடன் முடித்து இலை, தழை, வைக்கோல், இப்போது   பரவி  வரும் துடைக்கும் காகிதம் இதிலெல்லாம் இஷ்டம்போல துடைத்துப் போட்டுவிட்டு வருகிறவர். தினசரி குளிக்க யோசிக்கிறவர். நாள் கணக்காக தண்ணீர் காணாத பிருஷ்டங்கள் அவருடையவையும். மகாராணி கொலு இருக்கும்போது திருமுன்னர் இப்படியான அசுத்தங்களோடு ஒருத்தரை எவ்வளவு பெரிய மனுஷராக இருந்தாலும் அனுமதிப்பது ஆசாரஹீனம் ஆகும். 

யோசித்தபடி நின்ற பெத்ரோவை அமரச் சொல்லிக் கைகாட்டினாள் சென்னபைரதேவி மகாராணி. எதிரே அருகிலும் இல்லாமல், தூரத்திலுமில்லாமல் அவருக்கான இருக்கை வைக்கப் பட்டிருந்தது.

“மகாராணி அவர்களின் அறுபதாம் பிறந்த நாள் கொண்டாட்டம் மிக சிறப்பாக இருந்தது. அந்த விருந்து, என்ன சுவை, என்ன சுவை.. அது இன்னும் நாவில் உண்டு.”

பெத்ரோ நிஜமாகவே லயித்துச் சொன்னார். சென்னா தேவியின் முகம் மலர்ந்தது. கை இரண்டையும் கூப்பி எல்லாம் இறைவன் செயல் என்றாள். பிரதானி மொழிபெயர்க்கவில்லை அதை. அவரும் வணங்கினார்.

”பிறந்தநாள் சாப்பாடு விஷயத்தில் நான் ஒரு விஷமம் செய்தேன்”. 

கண்கள் மின்ன பெத்ரோ சின்னப் பையன் போல் குறும்பு மிளிரச் சொன்னபோது  மகாராணிக்கு வியப்பும் உதட்டில் மாறாத புன்சிரிப்பும். அதென்ன குறும்பு?

”அந்த வாழையிலைக் குடுவையில் வைத்த உணவு. என் வீட்டுப் பணியாளர்களுக்குத் தெரு முனையில் கொடுத்தபோது அதிகமாக ஒரு குடுவை கேட்டு வாங்கிவரச் சொல்லியிருந்தேன். எனக்கு ஒன்றல்ல இரண்டு கிடைத்தது.  ராத்திரி இரண்டையும் சற்றே சூடுபடுத்திச் சாப்பிட்டேன். அடடா ஓ அடடா. அதுவும் அற்புதமான சுவைதான் மகாராணி. தினசரி உங்கள் பிறந்தநாள் வரக்கூடாதா என்று ஏக்கமாக இருக்கிறது”. 

பெத்ரோ சொல்லி முடிப்பதற்குள் சென்னபைரதேவி கலகலவென்று சிரித்தாள். அறுபது வயதிலும் அவள் சிரிப்பு வனப்போடு ஒலித்ததை பெத்ரோ கவனிக்கத் தவறவில்லை. அறுபதிலும் அழகிதான் அவள்.

அடடா நான் சாப்பிடாமல் போய் விட்டேனே என்று அவள் அங்கலாய்த்தபடி நஞ்சுண்டையாவைக் கேட்டாள் – நீங்கள் உண்டீர்களா?

நானும் தவறவிட்டு விட்டேன் என்று குரலில் ஏமாற்றம் தெரியக் கூறினார் அவர். மறுபடி சிரித்தாள் மகாராணி. “போகிறது அடுத்த பிறந்த நாளுக்கு போர்ச்சுகல் அரசப் பிரதிநிதி நமக்கு அதேபோல் விருந்து அளிப்பார்” என்றார் மகாராணி அடுத்து. 

”அவருடைய அரசரின் பிறந்தநாள் அல்லது அவருடைய பிறந்த நாளாக இருக்கும் அந்த நல்ல நாள்”.

உடனே மறுபடி எழுந்து குனிந்து வணங்கினார் பெத்ரோ. இன்றைக்கு அவர் முக்கியமான வர்த்தக உடன்படிக்கை ஒன்றை அல்லது சிலவற்றை அரசியின் கையொப்பத்தோடு பெறப் போகிறார். அல்லது அதற்கான முதல்  காரியங்கள் நடந்தேற வைக்கப் போகிறார்.

“கோழிக்கோட்டில் என்ன ஆச்சு?” 

முக பாவத்தை சிரிப்பு இல்லாமல் துடைத்து அரசாங்க முகம் காட்டினாள் மகாராணி திடீரென்று. பெத்ரோ அதை எதிர்பார்க்கவில்லை.  

கோழிக்கோட்டில் நடந்தது கவலையளிக்கும் செயல்தான். அதற்காகத் தன்னைத் தனியே கூப்பிட்டுக் கண்டிப்பான தொனியில் ஏதும் சொல்வாள் மகாராணி என்று எதிர்பார்த்திருந்த பெத்ரோவுக்கு இந்தத் திடீர் விசாரணை எதிர்கொள்ளச் சிரமமான ஒன்று.

 கோழிக்கோட்டில் மலையாளக் குடியானவர்கள் பெயரில் போர்த்துகீசியர்கள்  மிளகு பயிரிட்டு, அவர்கள் சார்பில் சகல விவசாயப் பணிக்கும் செலவு செய்கிறார்களாம். விளைச்சலை   போர்த்துகீசியர்களுக்கும் விற்பதாகக் காட்டி அவர்களுக்கே முழுதும் அளித்துவிட்டு, அதற்கான சாகுபடிக் கூலி மட்டும் மலையாள விவசாயிகள் வாங்கிக் கொள்கிறார்களாம். இது  சில வருடமாக நடக்கிறது. 

போன வாரம் அது சம்பந்தமாக, மிளகு விவசாயத்தில் தொடர்புடைய இரண்டு போர்ச்சுகீசியர்களோடு அவர்கள் நியமித்த மலையாளி விவசாயிகள் விளைச்சலில் பங்கு, அதிக விவசாயக் கட்டணம் கேட்டுப் போராடிக் கொண்டிருந்தார்கள். அதில் ஒரு போர்த்துகீசியர் பெத்ரோவின் மாமனார். இன்னொருவர் அவருடைய தம்பி. இரண்டு பேரும் பல வருடமாக காசு கொடுத்து மிளகு விவசாயம் செய்வித்து, விளைச்சலைப் பெறும்  வேலையைச் செய்து வருகிறார்கள். போர்த்துகீஸ் நாடாளுமன்றம் அதை வெகுவாகக் கண்டித்திருப்பதோடு, போர்த்துகல் அரசரும் அபராதம் விதித்திருக்கிறார். அதெல்லாம் ஒரு வாரம் முன்னால் நிகழ்ந்தது. அதற்குள் சென்னபைரதேவிக்குத் தெரிந்து விட்டதா?

”மன்னிக்கவும் மகாராணி. நானே   உங்களை தரிசித்து இது பற்றிப் பேச நினைத்திருந்தேன். இன்று தரிசன வேளையில் முதலாவதாக அதைத்தான் பேச இருந்தேன். அதேபடி…”

”மகா தவறு. மகா தவறு. நீங்கள் இங்கே வணிகம் செய்ய வந்தவர்கள். சொத்து, சுகம், நிலம், தோட்டம் வாங்கி நாடு பிடிக்க வந்தவர்கள் இல்லை. விவசாயம் செய்ய உரிமை கிடையாது. போர்ச்சுகீசியர்கள், ஒலாந்துக்காரர்கள், இங்கிலீஷ்காரர்கள் யாருக்கும் குடியுரிமை கிடையாது என்று உங்களை  எங்கள் கடற்கரையில் கப்பல் இறங்கும்போதே காகிதம் கொடுத்துக் கையொப்பம் வாங்கித் தெரிவித்திருக்கிறோம். இப்படி போர்ச்சுகீசியர்கள், அதுவும் ராஜப் பிரதிநிதியான உங்கள் உறவினர்கள் செய்வது மகா தவறு. நீங்கள் இது தெரிந்ததும் சொல்லி இருக்கலாம்”.

சென்னாதேவி நிறுத்தி நிதானமாகப் பேச துபாஷி அதே ஏற்ற இறக்கத்தோடு போர்ச்சுகீஸ் மொழியில் அதை மாற்றிச் சொல்லிக் கொண்டிருந்தார்.  தலை குனிந்து நின்றபடி அதை அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தார் பெத்ரோ

”புகார்   அனுப்பியதற்கு உங்கள் அரசர் நடவடிக்கை என்ன எடுத்திருக்கிறார் என்று இன்னும் ஆறு வாரத்துக்குள் எனக்குத் தெரியவேண்டும். இதில் சம்பந்தப்பட்ட போர்த்துகீசியர்கள் நாடு திரும்ப வைக்கப்பட வேண்டும். உங்கள் மாமனார் உட்பட சகலமானவர்களும்.”

பெத்ரோவுக்கு அதிர்ச்சியாக இருந்தது. அவருடைய மாமனார் காப்ரியேல் ஃப்ரான்சிஸ்கோ தன் இருபதாம் வயதில் லிஸ்பனில் இருந்து  கோழிக்கோடு வந்தவர். இப்போது அறுபத்தைந்து வயதில் அவருக்கு  கோழிக்கோடு பழகிய அளவு லிஸ்பன் தெரியாது. அவருக்குக் குடியுரிமை இங்கேதான். சட்டென்று நினைவு வந்தது பெத்ரோவுக்கு.

”மாண்புமிகு மகாராணி அவர்களே, தெண்டனிட்டுத் தெரிவிக்கிறேன். என் மாமனாருக்கு மலையாள பூமி குடியுரிமை  கோழிக்கோடு சாமுரின் வழங்கியிருக்கிறார் என்பதால் அவரை திரும்ப அனுப்புவது அதுவும் இங்கே ஐம்பது வருடம் வசித்த பிறகு,  மலையாளம் சரளமாகப் பேசும் ஒரு இந்தியனாகவே வாழும் பொழுது, திருப்பி அனுப்பினால் அரசியல் சிக்கல் ஏதும் ஏற்படுமா தெரியவில்லை”.

அவர் சொல்லி முடிக்கும் வரை கவனமாகக் கேட்டுக் கொண்டிருந்தாள் சென்னபைரதேவி. 

“ஓ அவருக்கு குடியுரிமை உண்டா? போகட்டும். இந்த முறை நான் இங்கே மன்னிக்கிறேன். உங்கள் அரசர் மன்னிப்பதும் இல்லாமல் போவதும் அவர் இஷ்டம். ஆனால் மறுபடி அவர் பேரில் புகார் வந்தால் எங்கள் நாட்டு தண்டனையாக விதிக்கப்பட்டவை நிறைவேற்றப்படும்”.

”நிச்சயம் அப்படி எதுவும் நடக்காமல் பார்த்துக் கொள்கிறேன் யுவர் மெஜஸ்டி”. 

பெத்ரோ சொல்லத் தலையாட்டிக் கேட்ட அரசி முகம் மறுபடி மலர, பெத்ரோ கொண்டு வந்த சிறு பேழையைக் கொடுத்தார். அதன் உள்ளே இருந்த சிறு ஜெனிவா கடியாரத்தை ஆசையோடு பார்த்தாள் மகாராணி. 

”இந்தக் கடியாரத்தில் எப்படி நேரம் பார்க்கிறது என்று என் மகன் நேமிநாதனிடம் கேட்டுத் தெரிந்து கொண்டு இதைப் பயன்படுத்துவேன்”.

ராணியம்மா சொல்ல, பெத்ரோ ஆச்சரியத்தை முகத்தில் காட்டாமல் இருந்தார். இந்தச் சிறிய காரியத்தைக் கூட மகனிடம் கற்றுத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற அளவு அவன் மேல் சார்ந்திருக்கிறாள்.  இந்த முக்கியமான, போர்த்துகல் ராஜ பிரதிநிதியிடம் புகார் சொல்லும் நேரத்தில் அவன் இல்லாமல் எப்படி இந்தச் சந்திப்பு நடக்கிறது என்ற ஆச்சரியம்தான்.

”மகாராணியார் அனுமதி கொடுத்தால் ஒரே நிமிடத்தில் இந்த கடியாரத்தில் எப்படி நேரம் பார்ப்பது என்று தெரிவிக்கிறேன். உங்கள் மற்றும் இளவரசர் நேரம் இதற்காகச் செலவிடாமல் மற்றப் பணிகளுக்கு செலவழிக்கலாம்”.

பெத்ரோ சொல்ல, அதுவும் சரிதான், எங்கே சொல்லுங்கள் என்றபடி அருகே நின்ற ஊழியர்களைப் பார்க்க, அவர்கள் குறிப்புணர்ந்து அரசியாரின் வேலைப்பாடமைந்த நாற்காலியைச் சற்றே பெத்ரோ பக்கம் நகர்த்தினார்கள்.

சின்ன முள், பெரிய முள், வினாடி முள், மணி நேரத்துக்கான அரேபிய எண்கள், மணி பார்ப்பது என்ற இரண்டே நிமிடத்தில் கற்றுக்கொண்டாள் அரசி. சங்கிலிக் கடியாரத்தை முள் முன்னே பின்னே போக வைத்து நேரம் என்ன என்று சொல்ல இன்னும் இரண்டு நிமிடம் பயிற்சியும் ஆனது.

மகாராணியிடம் கிராம்பும் ஏலமும் பச்சைக் கற்பூரமும் கலந்த வாசனையும் அதை மீறி மெல்லிய வெங்காய வாசனையும் அடித்தது கவனிக்க பெத்ரோவுக்கு ஆசுவாசமாக இருந்தது. மிளகை கொடுத்துவிட்டு சபோலா, என்றால் வெங்காயம், மற்றும் மிளகாயை இங்கே கொண்டு வர எல்லோரும் ஆர்வம் காட்டுகிறதாக அவருக்குத் தோன்றுவது சரிதான் என்று இப்போது புலப்பட்டது. மிர்ஜான் கோட்டைக்குள்ளும் அரச உணவில் கலந்து வெங்காயம் பயன்படுத்தப் படுகிறது. 

மிளகாயும் ஊரில் நிறையப் பயனாகிறது. வீடுகளில் மிளகாய் கடித்துச் சோறு உண்கிறவர்களின் சந்தோஷமான உரைப்பு அனுபவித்தலை அவர் சாரட்டில் சவாரி செய்யும்போது கவனித்திருக்கிறார். 

சோறோடு கூட ஒரு சிட்டிகை உப்பும் ரெண்டு பச்சை மிளகாயும் இருந்தால் சோறு கடகடன்னு தொண்டைக்குள்ளே இறங்காதா என்று இந்தியக் கிராமங்களில் எளிய விவசாயிகள் மிளகாயைத் தத்தெடுத்து இருக்கிறார்கள் என்பது பெத்ரோவுக்குச் சந்தோஷமளிக்கும் தகவல். அவர்கள் யாரும் மிளகைப் பயன்படுத்துகிறவர்கள் இல்லை.

”காலை உணவு உண்டீர்களா, பெத்ரோ அவர்களே” ராணி கேட்டாள். உண்டேனம்மா. பணிவாகச் சொன்னார் பெத்ரோ. 

“இன்றைக்கு நானும் போர்த்துகீஸ் பாணி உணவு தான் உண்டேன்.  சுட்ட ரொட்டித் துண்டுகள், வெங்காயம் கலந்த மிளகு விரவிய கம்பங்களி.”

அது மிளகாக இருக்காது என்று பெத்ரோவுக்குத் தெரியும். ஒன்று பச்சை மிளகாயாக இருக்கும் அல்லது வற்றல் மிளகாயாக இருக்கக் கூடும். வற்றல் மிளகாய்க்காக செடியிலேயே மிளகாய்களைக் காயவிடுகிறார்கள். பறித்தவற்றைத்    தெருவெங்கும் பரப்பி வைத்து சூரிய வெப்பத்தில் சுக்காக உலர்த்துகிறார்கள்.  இப்படிக் கிடைக்கும் சிவந்த வற்றல் மிளகாய்களை உடனுக்குடன் பயன்படுத்துவது மலையாள பூமியில் தீவிரமாகி விட்டது என்று பெத்ரோ அறிவார். 

’எல்லாம் நல்லதுக்குத்தான். உங்களுக்கு மிளகு வேண்டாம். எங்களுக்குத் தாருங்கள். எங்களிடம் கொட்டிக் கிடக்கிறது வெங்காயம் மிளகாயும். இந்தாருங்கள், எடுத்துக் கொண்டு சந்தோஷமாகச் சாப்பிடுங்கள். இரண்டையும் ஒரே நிறையில் முடிந்தால் மதிப்புப் போட்டு பண்டமாற்று வர்த்தகத்தில் ஈடுபடக் கண் காட்டுங்கள்’.

இதை எல்லாம் மகாராணியிடம் மரியாதை விலகாமல் சொல்ல ஆசை பெத்ரோவுக்கு. இல்லை, இதை போர்த்துகல் அரசர் மிளகு ராணியிடம் சொல்ல வேண்டும்.

மகாராணி குரல் சன்னமாக ஆனால் அழுத்தமாக ஒலித்து மௌனத்தைக் கீறிக் களைந்தது.

“பெத்ரோ அவர்களே,   போர்த்துகல் சுற்றுப்பயணமாகப் போக, தலைநகர் லிஸ்பனில் உங்கள் அரசரைச் சந்தித்து வாசனை திரவியங்களுக்கு விரிவான  வர்த்தக உடன்படிக்கை ஏற்படுத்தி   வர விரும்புகிறேன்.”

“எங்கள் பாக்கியம் அது” பெத்ரோ எழுந்து நின்று மூன்று முறை வணங்கி தன் சந்தோஷத்தை வெளிப்படுத்தினார். இது நடக்கிற நிகழ்வா, கனவா? பெத்ரோவுக்குப் பிடிகிட்டவில்லை. உறுதி செய்வதாக மறுபடி குரல் ஒலித்தது.

”உங்கள் அரசரிடமிருந்து எனக்கு வரச்சொல்லி அழைப்பு தேவைப்படும்.  ஏற்பாடு செய்யுங்கள்”

ராணி எழுந்து கம்பீரமாக நடந்து போக பெத்ரோ பார்த்தபடி நின்றார்.

***

Series Navigation<< மிளகு – அத்தியாயம் ஒன்பது – 1999 லண்டன்மிளகு – அத்தியாயம் பதினொன்று >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.