மிளகு அத்தியாயம் அறுபத்தொன்பது

மிர்ஜான் கோட்டை  1606

சித்திரம் : அருண்

போஜனசாலையில் அவர்கள் குழுமியிருந்தார்கள். 

முன்னூறு பேர் இருந்து ஆகாரம் பண்ணும் அந்தப் பெரிய மண்டபத்தில் இவர்கள் முப்பது பேர் மட்டும் ஒருவருக்கும் மற்றவருக்கும் இடையே இரண்டடி இடைவெளி விட்டு அமர்ந்திருந்தார்கள். பேச்சும் சிரிப்பும் கலகலப்புமாக   இவர்கள் யாரோ வரக் காத்திருந்தார்கள். 

கோட்டை மடைப்பள்ளி ஊழியர்கள் இருவர் பெரிய குவளைகளில் மாம்பழச் சாறை  ஒவ்வொரு விருந்தாளி முன்னும் வைத்துப் போக, இரண்டு பக்க வரிசையிலும் கோடியில் இருந்த குவளைகளுக்கு முன் யாரும் இல்லை. 

போஜனசாலை கதவுகள் திறக்க காசிரை என்ற கஸாண்ட்ரா ஒரு பக்கமும், மிங்கு என்ற செண்பகலட்சுமி இன்னொரு பக்கமும் தாங்கி நடத்தி வர சென்னபைரதேவி மிளகு ராணி மெல்ல அடியெடுத்து வைத்து இருகை கூப்பி வணங்கியபடி மண்டபத்துக்குள் பிரவேசித்தாள்.

 அங்கே இருந்த முப்பது பேரும் ஒருசேர எழுந்து மகாராணியை வணங்கினார்கள். அத்தனையும் பெண்கள். பதினான்கு வயதில் இருந்து அறுபது வரையான பெண்கள். மிளகு மகாராணி சென்னபைரதேவியின் அழைப்பின் பேரில் இன்று மிர்ஜான் கோட்டையில் மகாராணியோடு சேர்ந்திருந்து காலை உணவு உண்டுபோக அழைக்கப்பட்டவர்கள். ஜெருஸோப்பா, ஹொன்னாவர், கோகர்ணம் பிரதேசங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு வந்திருப்பவர்கள்.

“அரசியலில் பங்கு பெறத்தான் நம் பெண்களுக்கு அனுமதி இல்லை. புரிந்து கொள்ளவாவது செய்யட்டுமே? அவர்களுக்கு தற்போதைய அரசியல் நிகழ்வுகள் பற்றிச் சரியான பார்வையைக் கொடுத்தால் அவர்கள் வீடு போய் அவர்களின் கணவன், தந்தை, மாமன், சகோதரன் என்று சகலரிடமும் நன்மை விதைத்து வருவார்கள்.” சென்னபைரதேவி சொன்னபோது  பிரதானிகள் அனைரும் வியப்போடு பார்த்தார்கள். உடனே  நடக்கட்டுமென்றாள் ராணி.

இத்தனை பேரை மிர்ஜான் கோட்டைக்குள் அனுமதித்தால் அரசியாரின் பாதுகாப்புக்கு குந்தகம் ஏற்படுத்தாதா அது என்று அடுத்த கேள்வி. என் பாதுகாப்பு தானே, நான் கவனித்துக் கொள்கிறேன் என்றாள் பிடிவாதமாக.

 மகாராணியவர்களின் யோசனைப்படி ஜனத்தொகை பட்டியலில் இருந்து தேர்ந்தெடுத்து, அழைப்பு அனுப்பி, வரப் போக வாகனம் ஏற்பாடு செய்து, விருந்தை ஏற்பாடு செய்து அனைத்தையும் ஒருங்கிணைத்தவர்கள் தோழிகளான மிங்குவும், காசிரை என்ற கஸாண்ட்ராவும். 

காசிரை மகாராணியை வணங்கி, ”அம்மா, நீங்க தீன்மேசை, நாற்காலி போட்டு  இருக்கலாமே. உடல்நலம் அனுமதிக்குமா சம்மணம் கொட்டி உட்கார்ந்திருப்பதை” என்று கேட்டாள். 

”நானே சமணத்தி தான். சமணத்தைத் தனியாகக் கொட்டணுமா? என்ன காசிரை?”. மகாராணி காசிரையை நோக்கிப் புன்சிரித்துச் சொன்னாள்.

 அவளையும்  மிங்குவையும் மகாராணியையும் தவிர மற்றவர்களுக்கு காசிரை எப்படி அரண்மனை விருந்தில் இப்படி அரசியாரின் சிறப்பு கவனிப்போடும் சகஜமான பிரியத்தோடும் புழங்கி வருகிறாள் என்று தெரியவில்லைதான். தெரிந்து என்ன ஆகவேண்டியிருக்கிறது யாருக்கும்? 

ராணி அவர்களிடம் சொன்னாள் –

”தரையில் அமர்ந்து வெகுநாள் ஆகிவிட்டது. தரையில் படுத்து உறங்கியும் வருடங்கள் பலவுமானது. கோட்டை மண்ணிலும், ஆற்றங்கரை மணலிலும், கல் பாளத்திலும், நிற்கவும், கிடக்கவும், நடக்கவும் நம்மை பூமி ஈர்க்கும். பூமித்தாயம்மாள் அன்னையின் வாஞ்சையோடு இழுத்துப் பிடித்து அணைத்துக் கொள்ளும் விசையாக புவி ஈர்ப்பு விசையை  எப்போதும் நம்மேல் பிரயோகிப்பாள். நாம்தான் அதைப் புரிந்து கொள்வதில்லை”. 

மிங்கு மேல் மகாராணியின் பார்வை விழுந்தது.

”அடி மிங்கூ, நீ இன்னும் உட்காரவில்லை என்றால் என் தலையணையையும், உட்காரும் மனைப் பலகையையும் ஓடிப் போய் எடுத்து வாடி. ஓடு பெண்ணே”. 

மிங்கூ மெய்யாலுமே ஓட, அத்தனை பெண்களும் சிரித்துக் கரம்கொட்டினார்கள். அவள் திரும்பி வரும்போது அந்த இடம் வழக்கமான பெண்கள் கூட்டமாக,  ஒரே நேரத்தில் பல பேச்சுகள் சேர்ந்து ஒலிக்க, சிரிப்பு தொடர்ந்து முழங்க ஜீவனோடு இயங்க ஆரம்பித்தது. 

ராணியம்மாள் உட்கார மனையைப் போட்டுச் சுவரோடு தலையணையை சார்த்தி வைத்த மிங்குவிடம் ஜோசியர் பெண்டாட்டி விசாலம் கேட்டாள் – ”ராணியம்மா கிட்டே பேசணும்னு ரொம்ப ஆசை மிங்கு. பேசலாமா?” 

”அதுக்குத்தானே கூப்பிட்டனுப்பி இருக்கு?” என்றாள் மிங்கு  ராணியம்மாளையும் விசாலத்தையும் மாறி மாறிப் பார்த்தபடி.  

”மகாராணியம்மா, உங்களை எப்படி தகுந்த மரியாதையோடு அழைக்கணும்னு தெரியலே. தெரிஞ்சுக்க யாரும் என்னை கல்யாணம் ஆகி இந்த இருபது வருஷத்துலே வெளியே எங்கேயும் அனுப்பலே”. 

”ஒண்ணும் கஷ்டமில்லே. சென்னாமாமின்னு கூப்பிடு” என்றாள் சென்னபைரதேவி சிரித்தபடி. 

அது ரொம்ப போக்டாத்தனமா இருக்கும் ராணிமாமி. எல்லாரும் கேட்கற கேள்வியா எதுவும் நான் கேட்கப் போறதில்லே. நான் கேட்க நினைச்சது இதுதான். நீங்க எங்க எல்லார் மாதிரியும் கல்யாணம் ஆகி குழந்தை குட்டின்னு ஆகி, ராணியாகவும் இருந்தால் இப்போ ராஜாங்கம் நடத்தற மாதிரி தான் செய்வீங்களா இல்லே அது வேறு விதமா இருக்குமா? 

ஒரு வினாடி அமைதி. 

வேறு விதம்னா, அரண்மனை சமையல்கட்டுலே வாழைக்காய் புளிங்கறி பண்ணிக்கிட்டு சபைக்கு கரண்டியோட ஓடி வந்து, ’மிளகு விக்கற விலையை படிக்கு காலே அரைக்கால் வராகன் கூட்டி உத்தரவு போடறேன். போர்த்துகல்லே இருந்து வரவேண்டிய நிலுவை தொகையை இது பாதிக்குமா? கொஞ்சம் இருங்க. கடுகு தாளிச்சு கொட்டினது கரிஞ்சு  வருது. வாடையடிக்கறதே தெரியலியா? புளிங்கறி பண்ணி முடிச்சுட்டு வந்துடறேன். சமத்தா இந்த விஷயத்தை சர்ச்சை பண்ணுங்க’ன்னு மறுபடி சமையலறைக்கு ஓடி. இப்படி நிர்வாகமும் சமையலும் மாறிமாறிச் செய்வேனோ என்னமோ.   

சென்னா அதைச் சொன்ன விதத்தை எல்லோரும் ரசித்தார்கள். சமையல் அறைக்குள் நுழைந்திருக்காவிட்டாலும் மிளகு ராணிக்குச் சமையலும் கைகண்ட விஷயம் தான் என்பதை அவள் பதில்   உணர்த்தியது.

மிளகு ராணி குசினி ராணியாகவும் இருக்கணுமா? 

ஹொன்னாவர் கருமானின் மனைவி துடுக்கும் நட்பும் சிரிப்புமாகக் கேட்க, சென்னபைரதேவி மகாராணி சிரித்துவிட்டாள். எல்லோரையும் பார்த்து சொன்னாள் – 

கல்யாணம் செஞ்சுட்டிருந்தா இப்ப இருக்கற சூழ்நிலை நிச்சயமாக மாறி இருக்க வாய்ப்பு இருக்கு. ஒரு கல்யாணமாகாத பெண் உலகத்தைப் பார்க்கறதுக்கும் கல்யாணமான பெண் பார்க்கறதுக்கும் வித்தியாசம் இருக்கும். கல்யாணமாகி குழந்தை குட்டி பெற்று அதுகளையும் கட்டியவனையும் பராமரித்துக்கொண்டு, அதோடு ராஜாங்க காரியங்களையும் கவனிக்கறது கஷ்டம் தான். ஒண்ணு வேணும்னா செய்திருப்பேன். சமையல்கட்டை பெரிசாக்கி சமைச்சுக்கிட்டே அரசியல் பேசி நிர்வாகம் பண்ணியிருப்பேன். சமையலும் பண்ணியிருப்பேன். அப்புறம் ஒண்ணு. எனக்கு சரியாக சமைக்க தெரியாது. ஆனால் கற்றுக்கொண்டிருப்பேன். நான் பதவிக்கு வந்தபோது வயது பதினாறு.   கொங்கணி மட்டும் பேச எழுதத் தெரியும்.  கன்னடம் எழுதத் தெரியாது. போர்த்துகீஸ் தெரியாது. மடில்டா சொல்லிக் கொடுத்தாள். அவள் என் அப்போதைய தாதி. எனக்கு உற்ற சிநேகிதி. அந்த சிநேகம் தான் காசிரையை இங்கே வரவழைச்சிருக்கு. காசிரையோட அம்மா   தான் மடில்டா.  என் தாதி.

காசிரை அடக்கமாகச் சிரித்தாள்.

ஜெருஸோப்பா சங்கு வளையல் வியாபாரி மகள் விலாசினி சொன்னாள் – குசினி அரசாங்கம் நல்லா இருக்கும். பிரதானி கத்தரிக்காய் அரிஞ்சு கொடுப்பார். தளபதி கொத்துமல்லி ஆய்ந்து ரசத்துலே போடுவார். உப பிரதானி புளிங்கறியிலே உப்பு போட்டிருக்கான்னு ஒரு துளி வாயில் போட்டுப் பார்த்து தீர்ப்பு சொல்லிட்டே, பசதி கட்ட ஆன செலவு இத்தனை இன்னிக்கு மிளகு வித்த காசிலே செலவழிச்சதுன்னு கணக்கு சொல்வார். 

சென்னா அந்தப் பெண்ணை சிரிப்பு விலகாமல் பார்த்துக் கேட்டாள் – நீ நம்பறியா, மிளகு விற்று வரும் பணம் முழுக்க கோவில் கட்ட, பசதி கட்ட செலவு செய்யறோம் அப்படின்னு? 

நிச்சயம் இல்லேம்மா. விசாலம் சொன்னாள். நீங்க அம்மா பராசக்தி. வரவை எல்லாம் வச்சு கோவில் கட்டி, ’பசியோடு குழந்தைகளைத் தூக்கிண்டு வந்து கும்பிட்டுப் போ. போகிற வழிக்குப் புண்ணியம்’னு சொல்ல மாட்டீங்க. நீங்கன்னு இல்லை, எந்த பெண்ணும் கல்யாணம் ஆனாலென்ன ஆகலேன்னா என்ன அப்படி முடிவெடுக்க மாட்டோம்.  

சென்னா சிரித்தபடி அவள் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்தாள். பின் மெல்லச் சொன்னாள் –

எல்லா கோவில், பசதி கட்டறதுக்கும் பாதி செலவுக்கு மேலே செல்வந்தர்கள் கொடுத்த கொடையில் இருந்து எடுத்துக்கொள்ளப் படுகிறது. 

அம்மா, வேறே மாதிரி இந்த கட்டடம் கட்டித்தர உதவி செய்யலாமா? கடலில் தினம் சென்று மீன்பிடித்து வரும் செம்படவர் கோரியின் மனைவி என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்ட காத்தி கேட்டாள். ஐம்பது வயது இருக்கலாம். மீன் காயவைத்து காயவைத்து நகக் கண்ணிலும், கைவிரல்களைச் சுற்றியும் மீன்கள் என்ற உயிரினங்கள் அவளோடு உடலாறக் கலந்திருக்கின்றன என்பதை சென்னா மகாராணி அறிவாள்.

 காத்தியம்மா, வேறே எப்படி உதவலாம்? காசிரை கேட்டாள். ஒரு வினாடி மௌனமாக இருந்து காத்தி சொன்னாள் – 

கோவில், பசதின்னு சொன்னா, பசு நினைவு வருது. களஞ்சியத்தில் நெல்லும்,  படைக்க உபயோகப்படுத்தற பாத்திரங்களும், சில கோவில்களிலே படிப்படியாக பால், நெய், பழக்கூழ், வெண்ணெய், மணம் வீசும் சந்தனம், இளநீர் தேங்காய், தேங்காய் துருவி வரும் தேங்காய்ப்பூ இப்படி சாமான்யர்களில் இருந்து பணம் படைத்தவர்கள் வரை நேர்ந்து கொண்டும், வழக்கமாகத் தருவதுமான காணிக்கைகள், இதெல்லாம் கோவில் என்றால் நினைவு வரும். பசதி என்றாலும் கிட்டத்தட்ட இதெல்லாம் நினைவு வரும். 

 நிச்சயமாக என்றாள் மிங்கூ. எல்லா வழிபாட்டு இடங்களிலும் இவற்றைக் காணிக்கை செலுத்த வழிமுறை உண்டே என்றாள் காசிரை. சென்னா அவர்கள் இரண்டு பேரையும் பொறுத்திரு என்று கை காட்டி, காத்தியைப் பார்த்தபடி இருந்தாள். 

என்னமோ சொல்ல ஆரம்பிச்சியே, அதை சொல்லு என்கிற முகபாவம். காத்தி கோவிலில் நிற்பதுபோல் எழுந்து கிழக்கு பார்த்து நின்று கைகுவித்துப் பாதிக்கண் மூடித் தோத்திரம் போல சொன்னாள் –

அத்தனை காணிக்கையையும் ஒரு துணுக்கு, ஒரு சொட்டு, ஒரு துளி வீணாகாமல் பயன்படுத்திக்கொண்டால் என்ன? 

என்றால்? புருவம் உயர்த்திப் பார்வையால் கேட்டாள் சென்னா. 

ஒரு நாளைக்கு பத்து படி பால் அபிசேகத்துக்கு வந்தால் அதில் ஒன்று அல்லது இரண்டு படியை அபிஷேகத்துக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். அதாவது ஒவ்வொரு பக்தரிடமிருந்து அபிசேகத்துக்கான பால் வாங்கும்போது அதில் பத்தில் ஒரு பங்கை வைத்து அபிஷேகம் செய்து மீதியைச் சேர்த்து வைக்கலாம். வைத்து? தினசரி என் மாதிரி ஏழைப் பெண்கள், கைக்குழந்தை உள்ள ஏழைப் பெண்கள் தினம் கோவிலுக்கோ பசதிக்கோ வந்தால் கிரமமாக ஆளுக்கு இரண்டு குவளையோ மேலுமோ சேர்ந்த பாலை பிரசாதமாக வழங்கலாம். அப்புறம் ஒண்ணு.

சுவாரசியமாகக் கேட்டுக் கொண்டிருந்தாள் சென்னா.

வெறும் பாலை மட்டும் இல்லை. அரிசி மாவு, ராகி, கம்பு, பாசிப்பயறு, முந்திரி, வாதுமை, ஏலக்காய் இப்படி காணிக்கை வர்றதை சேர்த்து அரைச்சு சத்துமா ஆக்கி பால் விட்டுக் கரைச்சுத் தரலாம். காணிக்கையை பிரசாதமாக்கறது பாலுக்கு மட்டுமில்லை, தேன், பஞ்சாமிருதம், இளநீர், வாழைப்பழம், மாம்பழம் என்று சாப்பிடக்கூடியதான, தினசரி வந்து சேரும் எல்லா காணிக்கைக்கும் தான். கூடுதலாக வந்து சேரும் காணிக்கை எல்லாம் இப்போது எப்படி பிரயோஜனப்படுகிறதோ எனக்கு தெரியலீங்க. என்ன பண்ணலாம்னு யோசனை, கோரிக்கை அது மட்டும் என்னுது. 

சென்னா காத்தியை அருகில் அழைத்து அணைத்துக் கொண்டாள். 

நிச்சயம் காத்தி, இதை செய்யலாம் தான் என்றபடி காசிரையையும் மிங்குவையும் பார்க்க, அவர்கள் ஓலைச் சுவடியில் எழுத்தாணி வைத்து அவசரமாகக் குத்தி எழுதிக் கொண்டிருந்தார்கள். 

அடுத்து யார்? காசிரை கேட்க, மகாராணி கையமர்த்தி முதலில் பலகாரம் அப்புறம் ஆட்ட பாட்டம் அதற்கு அப்புறம் கலந்துரையாடல்.  பகல் பனிரெண்டு மணி வரை இதற்கான நேரம் ஒதுக்கியிருக்கிறேன் என்று பெரும் கரகோஷத்துக்கு இடையே கூறினாள்.

அடுத்த  மணி நேரம் அந்தப் பெண்கள் மனதுக்குப் பிடித்த மாதிரி என்ன பலகாரம் வேண்டும், எவ்வளவு வேண்டும் என்று, சங்கோஜம் இல்லாமல் கேட்டு வாங்கி, அவசரப்படுத்தி விழுங்க வைக்க யாரும் இல்லாமல் நிதானமாகச் சாப்பிட்டார்கள்.  

வீட்டில் குழந்தைகளை விட்டு வந்தவர்கள் தித்திப்புப் பலகாரங்களான லட்டுருண்டை, பாதுஷா ஆகியவற்றை குழந்தைகளுக்குக் கொண்டுபோய்க் கொடுக்க இலைக்கு வெளியே எடுத்து வைத்துக் கொண்டதைப் பார்த்து சென்னாதேவி, வீட்டுக்கு எடுத்துப்போக தனியாக  பலகாரங்கள் தரப்படும். இதெல்லாம் இங்கேயே நீங்கள் சாப்பிட என்று அவர்களிடம் தெரிவித்தாள். 

யாரும் எதையும் வீணாக்காமல் தேவையானதைக் கேட்டு வாங்கி சந்தோஷமாக உண்டு அந்த விருந்து நடந்தது.  

கலந்துரையாடலைத் தொடரலாம் என்று காசிரையும், மிங்குவும் மகாராணியிடம் சொல்ல, எல்லோரும் என்ன சொல்றாங்களோ அப்படி செய்யலாம் என்றாள் அவள்.

அந்தப் பெண்கள் அனைவருக்கும் ராணியோடு சந்தித்துப் பேசுவதோடு, பிக்கல் பிடுங்கல் இல்லாமல் விருப்பப்படி உண்டு, பேசி, ஆடி இருக்க சந்தர்ப்பம் இது என்பதும் சந்தோஷமான விஷயம். அவர்கள் எல்லோரும் அடுத்து ஆட ஆசைப்பட்டார்கள். கலந்துரையாடல் அப்புறம் தொடரலாம் என்று முடிவானது. பேச வேண்டியதை எல்லாம் பேசியாச்சே என்றாள் ஒருத்தி.

கூட்டமாக ஆடப் பிரியப்பட்டார்கள். கேரள பூமியில் சுற்றி நின்று ஆடியபடி நகரும் கைகொட்டிக்களியாக ’கொட்டும் ஞான் கேட்டில்லா’ என்று மலையாளியான ஒரு பெண் பதம் பாட, சுவடு வைத்து ஆடினார்கள். சென்னா ஒரு நிமிடம் எழுந்து நின்று கைதட்டி, ஆடாமல் நின்று களித்தாள்.

ஆட்டத்தின் சுவடுவைப்பு வேகம் அதிகமாகிக் கொண்டே போனது. ஆடாமல் ஓரமாக நின்றவர்களையும் ஆடத் தூண்டுவதாக, கூச்சத்தோடு ஒரு காலடி எடுத்து, கடலில் கால் வைத்து இறங்கி அலை கண்டு திரும்ப காலடி பின்னால் வைப்பதுபோல் ஆட ஆர்வம் ஆனால் பயம் என்று திரும்புகிறவர்களையும் மறுபடி ஆடப் போகச் சொல்வதாக, வேகமான அதிர்வுகளோடும் எளிய அபிநயங்களோடும் ஆட்டமும் பாடலும் நகர்ந்து கொண்டிருந்தன. 

கைகொட்டி எழும் தாளங்களோடு ஆடி அலைந்து, நேரே அசைந்து, வலம்போய் திரும்பி, இடம் வந்து பின்வாங்கி, நின்று, அசைந்து, குதித்து, கால் பரப்பி, பாதம் ஒடுக்கி, கைகள் மேலோங்கித் தட்டி, கீழே இறங்கி, தாமரை மலர்வதுபோல் மெல்ல அதிர்ந்து மீண்டும் எழ, கொங்கைகள் குதித்துக் கும்மாளமிட்டு அதிர, ஒரு ராட்சச இயக்கமாகக் கூட்டுச் சேர்ந்து எல்லோரும் பாடி எல்லோரும் ஆடினார்கள். 

விருந்துக்கு வந்த, வெளிர்நீலக் கரை பிடவை அணிந்த மெலிந்த நடுவயது ஸ்திரி ஆடியபடியே கண் மூடி அனுபவித்து சென்னா மகாராணி மேல் மோதுகிறவள் போல் ஆட்ட வேகத்தில் நகர, மிங்கு அவளை மெல்ல இடது புறம் அசைந்தாடியபடியே அகற்ற, காசிரை அவளை நேரே மற்ற ஆட்டக்காரிகளோடு சேர்த்துவிட்டு ஆடினாள். சிவந்த அதரங்ககள் சற்றே பிரிந்து பூடகமாகப் புன்சிரிக்க, அவள் காசிரையைப் பார்த்த பார்வையை அகற்றினாள். ஒரு வினாடி நேரத்தில் அது நிகழ்ந்தது. 

வெளிர்நீலக் கரை பிடவை உடுத்த மெலிந்த நடுவயது ஸ்திரி தன் கச்சில் கைவிட்டு   முலைகளுக்கு மத்தியிலிருந்து ஒரு குறுவாளை எடுத்து மின்னல் போல் சென்னாராணியை நோக்கி பாய்ந்து வந்தாள். 

சென்னா தரையில் அமர்ந்திருந்தவள் இந்தப் பெண் தன்னை நோக்கிக் கொலைப்படுத்தும் நோக்கத்தோடு பாய்ந்து வருவதைக் கண்டாலும், மூப்பு காரணம் எழுந்து நிற்க, ஓரமாக ஒதுங்க, அவளிடமிருந்தும் அவள் குறுவாளில் இருந்தும் உடனே தப்பி பாதுகாப்பான தூரத்துக்கு விலக முடியாமல் போனது. 

குறுவாள் பெண் அதற்குள் சென்னா தலையில் குறுவாளால் ஓங்கிக் குத்திப் பிளப்பவளாக பாய்ந்தாள். ராணி பக்கம் ஆடிக் கொண்டிருந்த மிங்கு சட்டென்று சென்னா மகாராணியின் தலையைத் தன் இடுப்போடு சேர்த்துப் பிடித்துப் பின்னால் தள்ளி குறுவாள்காரிக்கு முன் தடுப்பாக,  ராணிக்கு முதுகு காட்டி நின்றாள். 

துளைத்து ராணியின் தலையைக் கிழிக்க வந்த குறுவாள் மிங்குவின் வயிற்றில் பாய்ந்து அங்கேயே அமர்ந்திருக்க, அந்தப் பெண் வெளியே கொத்தளத்துக்கு வேகமாக ஓடி அதன் விதானத்தில் இருந்து குதித்தாள். அவள் சுவாசித்த கடைசி வினாடி அது. 

ஆட்டத்தை நிறுத்த உடனே கால் மாற்றி நிலைகுலைந்த பெண்கள் ஓவென்று பெருங்குரலில் சேர்ந்து கத்தினார்கள். ஓவென அழுதார்கள். எல்லோரும் சிதறி எல்லா வாசல்களையும் நோக்கி ஓடினார்கள்.  

மிங்குவின் வயிற்றில் இருந்து குருதி கொட்டத் தொடங்கியது. காயத்தை அடைப்பதுபோல் குறுவாள் அங்கேயே குத்தி இருந்ததை  அகற்ற எல்லோருக்கும் பயம். எடுத்தால் ரத்தப் போக்கு அதிகப்படலாம் என்ற பீதி. மிங்கு மயக்கமடைந்திருந்தாள் அதற்குள்.

வாளோடு வந்த அந்தப் பெண்ணின் கைப்பையை யாரோ எடுத்து காசிரையிடம் கொடுக்க, உள்ளே இருந்து ஒரு லட்டுருண்டை கீழே விழுந்து ஓடியது. ஏதோ மருந்து சீசா வெளியே உருண்டது மூக்கில் குத்தும் வாடையோடு. 

யாரோ சொன்னார்கள் அவள் கோகர்ணத்தில் துணிகளைத் தைத்துக் கொடுத்து வாழ்க்கை நடத்துகிறவள் என்று.  போன மாதம் சாக்கடைத் தண்ணீர் குடிதண்ணீர்லே கலந்து ரோகம் பிடித்து அவளுடைய கணவன் இறந்து போனான் என்று தெரியவந்தது. அவன் சமையல் தொழில் எடுபிடியாக இருந்தான் என்றும் ரோகம் காரணமாக இரண்டு மாதமாக வேலைக்கு யாரும் அழைப்பதில்லை என்றும் தெரிந்தது.   

மிங்குவை என் அறைக்கு எடுத்துப் போங்க. எனக்கு ஒண்ணுமில்லே. அவளைக் கவனியுங்க. வைத்தியரை கூட்டி வாங்க. அவ கீழ் இடுப்பிலே துணியை நனைச்சு இறுகக் கட்டுங்க. மிங்கு உனக்கு ஒண்ணும் ஆகாது. நான் இருக்கேன். பயப்படாம இரு. காசிரை அவளுக்கு விசிறி எடுத்து விசிறு. 

மகாராணி குரல் கோட்டைக்குள் மோதி எதிரொலித்துக் கொண்டிருந்தது. 

 (தொடரும்)

Series Navigation<< மிளகு அத்தியாயம் அறுபத்தெட்டுமிளகு அத்தியாயம் எழுபது >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.